அன்பின் தேவனே, உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம். இந்த நாள் வரை நான் செய்த எல்லாக் காரியங்களையும் ஆசீர்வதித்தீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்த ஆண்டிலும் என் காரியங்களை வாய்க்கச்செய்வீர் என நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்திரிக்கிறேன். கர்த்தாவே, நான் அநேக காரியங்களை இந்த ஆண்டிலே செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அவைகள் தடைபடாதபடி நடைபெற வேண்டுகிறேன். கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களின் காரியங்களை வாய்க்கச் செய்வேன் என்று சொன்னவரே, உம்மைத் தேடுகிற அடியானின் காரியங்களை வாய்க்கச் செய்வீராக. கர்த்தாவே, என் காரியங்கள் ஜெயமாய் மாற என்னைத் தாழ்த்தி உம்மை வேண்டுகிறேன். என் கடையின் காரியங்களை ஆசீர்வதியும். அதைச் செய்வதற்கு வேண்டிய பொருளை, பணத்தை அதிகமாக கொடுப்பீராக. கர்த்தாவே, என் தொழிலிலே உள்ள தடைகளை நீக்கி, சகலமும் சீராக நடைபெற உதவி செய்யும் கர்த்தாவே. என் காரியங்கள் நடைபெறக் கூடாது என்று தடை செய்கிற சத்துருவின் தந்திரங்களை நீக்கிப்போடும் கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவே, வேதத்தை நேசிக்கிற, வேதத்தை தியானிக்கிறவர்களின் காரியங்களை வாய்க்கச் செய்வேன் என்று சொன்னவரே, என் காரியத்தை இன்றே வாய்க்கச் செய்யும். என் உள்ளத்தில் நீர் அறிவித்த காரியத்தை நலமாய் செய்து முடிக்க பெலன், சுகம் தாரும். அதற்கு வேண்டிய பொருளையும், பணத்தையும் தாரும். என் உள்ளத்தில் உமது பொறுமையும், சாந்த குணமும் நிறைவாய் பெருகட்டும். நான் வாங்க/விற்க நினைத்த காரியங்களை வாய்க்கச் செய்யும் கர்த்தாவே. இன்னும் என் ஊழியத்தின் பாதையிலே நான் செய்யத் திட்டமிடுகிற அனைத்து காரியங்களையும் வாய்க்கச் செய்யும். நான் சோர்வடையாது எல்லாவற்றையும் உமது திட்டத்தின்படி செய்து முடிக்க பெலன் தாரும். நீர் அவ்விதமாய் எனக்கு உதவி செய்வீர் என்று நம்பி ஸ்தோத்திரங்களையும், துதிகளையும் செலுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆமென்.