"...என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்."       

                                                                                                                                                                                                                     லூாக்கா 22:20

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

இன்று வாழ்வில் பலவிதமான பிரச்சனையால் அதைரியம் அடைந்து, அநேகர் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். சிலர் சமாதானம் இழந்து கவலையுடன் வாழ்கின்றார்கள். சிலர் பாவத்தில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும் விடுதலை இல்லையே என்று உள்ளம் உடைந்து மிகுந்த துயரம் அடைந்து வாழ்வே கசப்படைந்துள்ளது என்று புலம்புகிறார்கள். சிலர் என் கண்ணீருக்கு முடிவே கிடையாதா? ஏன் இந்த வாழ்வு எனக்கு என்று அங்கலாய்த்து சுகம், பெலன், துாக்கம் இழந்து வேதனையடைகிறார்கள். கடவுள் என்று ஒருவர் உண்டா? நம்மை ஏன் இப்படி ஆட்டிப்படைக்க வேண்டும்? என்று நம்மை உண்டாக்கி, அளவற்ற அன்பினால் காத்து தாங்கி வரும் கர்த்தாதி கர்த்தரைத் தூஷிக்கிறோம், குறை கூறுகிறோம்.

அருமை நண்பா, உன் வாழ்வில் உள்ள வேதனை உன்னை வாட்டுகிறதல்லவா? இதற்கு பரிகாரம் தேடியும் முடிவில்லாது துயரம் மிகுந்து வேதனை அடைந்துள்ளேன் என்று ஏங்கித் தவிக்கும் சகோதரனே, சகோதரியே நமது வாழ்வில் காணப்பட்ட இந்த முறிந்த நிலையை, இடிந்த நிலையை மாற்றவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார்.

தேவன் இவ்வுலக மக்களை செம்மையாகவே சிருஷ்டித்து, அவர்களுடன் ஓர் உடன்படிக்கையைச் செய்தார். ஆனால் ஆதி மனிதன் முதற்கொண்டு இன்று வரை கர்த்தருடன் உள்ள இவ்வுடன்படிக்கையை முறித்து, அவர் வார்த்தையை அசட்டை செய்தபடியாலே இந்த வேதனை' நிலைமை ஏற்பட்டுள்ளது.

உடன்படிக்கை என்றால் நம்மிடம் இல்லாததை சில குறிப்பிட்ட நிபந்தனையின் பேரில் அடைவதாகும். இது இரு திறத்தாருக்கிடையே நடைபெறுகிற காரியம் ஆகும். உதாரணமாக ஒருவர் பணம் வைத்திருக்கிறார், மற்றொருவர் வயல் வைத்திருக்கிறார். வயல் வைத்திருப்பவருக்குப் பணம் தேவை, பணம் உள்ளவருக்கு வயல் தேவை. ஆகவே ஒரு உடன்பாட்டுக்கு வருகிறார்கள். நான் இவ்வளவு பணம் தந்து விடுகிறேன், இந்த வயலை எனக்குத் தாருங்கள் என்று பணம் உள்ளவரும், நான் வயலைத் தருகிறேன், தாங்கள் இவ்வளவு பணம் தாருங்கள் என்று வயலை உடையவரும் சொல்ல, இரு திறத்தாரும் ஓர் உடன்படிக்கைக்கு வந்து தங்களுக்குத் தேவையானதை அடைகிறார்கள்.

இதைப்போலவே தேவனுக்கும் நமக்கும் ஓர் உடன்படிக்கை இருந்தது. நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் வாழ வேண்டும். உண்டாக்கின தேவனைத் துதிக்க வேண்டும், ஆராதிக்க வேண்டும் என்றும், இதன் காரணமாய் சுகத்தையும், சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் மனிதன் பெற ஒரு உடன்படிக்கையை தேவன் செய்திருந்தார். ஆனால் மனிதனோ தேவனுடன் இருந்த உடன்படிக்கையை முறித்தான். இதன் காரணமாய் சுகம், பெலன், சமாதானம், சந்தோஷம், செழிப்பு, வெற்றி, ஆசீர்வாதம் போன்ற நன்மைகளை இழந்து போனான்.

இவ்வாறு முறிந்து போன உறவுகளை, உடன்படிக்கையை புதுப்பிக்கவே இவ்வுலகிற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வந்தார். இவ்வுடன்படிக்கையை இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தால் நிறைவேற்றி உள்ளார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி ஏற்படுத்திய இப்புதிய உடன்படிக்கையால் நாம் இன்று அநேக ஆசீர்வாதம் பெற்றுள்ளோம்.

 

இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி செய்த உடன்படிக்கையால் வரும் ஆசீர்வாதங்கள்?

 

1) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவத்தைப் போக்கும்

 

"...இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." 1 யோவான் 1:7

இன்று மனிதன் பலவிதமான பாவங்களை வயது, சூழ்நிலை, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதமாக செய்து வேதனையடைகிறான். பாவம் செய்கிற ஆத்துமா சாகும். பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும் என்று சத்திய வேதம் எச்சரித்தும், நாம் அறிந்தும் அறியாமலும், மறைவாயும், வெளியரங்கமாயும் பாவத்தைச் செய்து விடுகிறோம். பாவம் நம்மைக் காரிருளில் கொண்டு சென்று நம்மை மீளமுடியாத நித்திய அழிவுக்குள் கொண்டு சென்று விடும். சிறிய பாவம் என்று ஆரம்பித்து விடமுடியாத வேதனையான சூழ்நிலையில் இன்று உள்ளனர்.

பொய், களவு, இச்சை, காமவிகாரம், குடி, சூதாட்டம், களியாட்டு, பொறாமை, பெருமை, எரிச்சல், கோபம், இரண்டகம் பண்ணுதல், நம்பினவரைக் கைவிடுதல், துரோகம், மற்றவருக்குத் தீங்கு செய்யும் சிந்தை, செயல் போன்ற பாவங்கள் இன்று நம்மில் மிகுந்து காணப்படுகிறது.

ஒருநாளில் ஒரு அறையில் தங்கி எனது காரியங்களைச் செய்து கொண்டிருந்தேன். அந்த அறையின் மேற்பகுதியில் ஒரு சிலந்தி வலையும் இருந்தது. திடீரென்று ஒரு முரட்டுவண்டு அந்த வலைக்குள் சிக்கியது. அந்த வண்டு தன்னுடைய பெலத்தினால் முண்டியடித்து வெளியேற முயற்சித்தது. ஆனால் மீள முடியவில்லை. துார இருந்த சிலந்திப்பூச்சி அதன் அருகே பாய்ந்து வந்தது. மீண்டும் மீண்டும் தன் வாயிலிருந்து சுரந்த அந்த மெல்லிய இழையினால் அந்த வண்டினைக் கட்டினது. அந்த வண்டோ யாரும் எனக்கு இல்லை என்று சொல்லுவது போல் ரிங்காரம் இட்டது. சில நிமிடத்தில் சிலந்தி தன் வாயினை அவ்வண்டின் மிருதுவான பகுதியில் வைத்து அதன் இரத்தம், உள்ளான தசைகளை உறிஞ்சிக் குடித்துவிட்டு தன்னுடைய பழைய இடத்திற்குச் சென்று விட்டது. நான் பரிதாபப்பட்டு அந்த வண்டினைத் தட்டினேன், கீழே விழுந்தது. ஆனால் அதன் கூடு மட்டுமே இருந்தது. அதற்குள்ளான சகல சத்துவத்தையும், தசை, இரத்தத்தையும், சிலந்தி குடித்திருக்கிறதையும் அறிந்தேன்.

இந்த நிலையில் மனிதரது செய்கையையும் வாழ்க்கையையும் சிந்தித்தேன். தேவனால் செம்மையாகப் படைக்கப்பட்டவன் மனிதன். தேவனோடு சுதந்தரமாக, சந்தோஷமாக, செழிப்பாக தேவனை மகிமைப்படுத்தி சமாதானமாய், ஆனந்தமாய் வாழ வேண்டிய மனிதனின் வாழ்க்கை அந்த வண்டைப் போல பாவ கண்ணியில் சிக்கி பிசாசினால் கட்டப்பட்டு எல்லா ஆசீர்வாதங்களையும் இழந்து அவதியுறுகிறதை உணர்ந்தேன். சிறிய பாவம் போல தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கட்டிக் காரிருளில் இருக்க வைத்து விடுகிறது.

நாம் பாவம் இல்லை என்றால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம். இப்படியாக பாவம் செய்த நம்மை மீட்டு, சுத்தப்படுத்தவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, சிலுவை மரத்தில் பாடுபட்டு, இரத்தம் சிந்தி, ஜீவ பலியானார். நம் பாவங்களைப் போக்கவே கிருபாதார பலியானார். இவர் இரத்தத்தால் இன்றும் நாம் கழுவப்பட நம்மை அர்ப்பணிப்போமானால் நம் பாவத்தை நீக்கி, அதின் காரணமாய் வந்த சாபம், கருமம், தீட்டு அகற்றப்பட்டு ஆசீர்வாத வாழ்வு அடைவோம். எந்தப் பாவியையும் புறம்பே தள்ளேன் என்ற இயேசு இன்றே உன் பாவத்தை தம்முடைய விலைமதிப்பில்லாத இரத்தத்தினால் நீக்கி ஆசீர்வதிப்பார்.

2. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமக்கு தைரியம் கொடுக்கிறது “...அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிற படியினாலும்" எபிரெயர் 10:20

இன்று பலவிதமான பிரச்சனைகள் நம்மைச் சூழும் சமயம் நமக்குத் தைரியமாய் வாழ முடியாது போய் விடுகிறது. எனக்கு ஒரு நண்பர் இருந்தார். இவரின் தொழில் அதிகமாய் நஷ்டப்படத் தொடங்கியது. கடன் தொல்லை அதிகமானபடியால் தனது இளம் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, நாண்டு கொண்டு மரித்துப் போனார். இன்று அக்குடும்பம் வேதனையோடு இருக்கிறது.

ஒருமுறை ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர் தனக்கு எதிராக பள்ளி நிர்வாகக்குழு இருக்கிறதே என்று பயந்தார். ஒரு நாள் ஒரு அறையில் விஷமருந்து அருந்தி தன்னை மாய்த்துக் கொண்டார்.

மனிதனுக்குத் தைரியம் இல்லை என்றால் பலவிதமான கஷ்டங்கள் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ஒருமுறை நான் வேலை பார்த்த பள்ளியில் விளையாட்டு வகுப்பு எடுக்க ஒரு ஆசிரியை பயிற்சி மாணவி வந்தாள். விளையாட்டு வகுப்பு எப்படி எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு எல்லாம் நன்றாய் செய்திருந்தாள். மாணவர்களைப் பார்த்தவுடன் அந்த மகளின் தைரியம் மறைந்து, பயம் ஏற்பட்டது. வார்த்தைகள் வெளி வரவில்லை. அந்த மகளில் இருந்த தாலந்துகள் வெளிப்பட முடியாது போய் விட்டது.

நான் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும் முன் பல விளையாட்டுக் குழுவிற்கு செயலர், பொருளாளர் போன்ற பதவி வகித்திருந்தேன். விளையாட்டு போட்டி முடிவில் நன்றியுரை அல்லது ஏதாவது காரியத்தைப் பேசச் சொன்னால் பயப்படுவேன், வேண்டாம் என்று தட்டிக் கழித்து விடுவேன். என்று இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கைக்கு உட்பட்டேனோ அன்று முதல் எனக்கு ஓர் புதிய தைரியம் ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் நின்று பேசுவதற்குத் தைரியம் அடைந்தேன். இது பழக்க வழக்கம் என்றல்ல, கர்த்தரின் புதிய உடன்படிக்கையின் இரத்தத்தினால் வந்த ஆசீர்வாதம் ஆகும்.

அன்பு சகோதரனே, சகோதரியே உனது வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றம், நஷ்டம், பாடுகள், துரோகம், இழப்பு ஆகியவற்றால் கலங்கி ஏன் இந்த வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறாயா? உன் எதிர்காலத்தைக் குறித்து கலங்கி பயத்தோடு இருக்கிறாயா? பயப்படாதே, நான் உன் தேவன் என்றவர் தம்முடைய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தினால் உன்னைத் தைரியப்படுத்தி எல்லா எதிர்ப்புகளையும் மேற்கொள்ள ஒரு நவமான, புதிதான இருதயத்தை இன்றே கொடுத்து உன்னை ஆசீர்வதிப்பார்.

3) இயேசுவின் இரத்தத்தினால் சமாதானம்

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தனாலே சமாதானத்தை உண்டாக்கி...” கொலோசெயர் 1:20

சமாதான பிரபுவாக இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து, தாம் சிலுவையில் சிந்தின உடன்படிக்கையின் இரத்தத்தினால் சமாதானத்தை ஏற்படுத்தி உள்ளார். இன்று வாழ்வில் சமாதானம் இழந்து வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உனது வாழ்வில் சமாதானம் தரவே இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிலுவையில் சிந்தினார்.

அநேகர் எனக்குப் பணம், வேலை, நல்ல கணவர், நல்ல மனைவி, நல்ல படிப்பு, வீடு தோட்டம் போன்றவைகள் இருந்தால் சமாதானம் வந்து விடும் என்று சொல்லவும், இதனை அடைய செயல்புரிகிறதையும் நாம் அறிவோம். இவர்களின் முடிவு வேதனையாய் இருப்பதை நாம் பார்ப்பதே கிடையாது. ஒரு செல்வந்தர் இல்லத்தில் ஜெபிக்க அழைப்பு பெற்றேன். எதற்கு ஜெபிக்க வேண்டும் என்ற சமயம், சமாதானம் என் வாழ்வில் இல்லை என்று சிறு பிள்ளையைப் போல் அழ ஆரம்பித்தார்.

இன்று சமாதானத்திற்காக ஏங்கும் கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் உண்டு. இன்று சமாதானத்திற்காக ஏங்கும் குடும்பங்கள், சபைகள், சங்கங்கள் உண்டு. தனிப்பட்ட வாழ்வில் சமாதானத்திற்காக போராடுகிற உனது வாழ்விலும் இயேசு கிறிஸ்து தாம் சிலுவையில் சிந்திய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தினால் உன்னை நிரப்ப வல்லவராக இருக்கிறார்.

எனது வாழ்வில் இவ்வுடன்படிக்கைக்குட்படும் முன் என்னிலும், என் குடும்பத்திலும் சமாதானம் இழந்து தவித்தோம். வேலை, பிள்ளைகள், வீடு இருந்தன. ஆனால் இவைகள் எங்களுக்குச் சமாதானம் தரவில்லை. ஒருநாளில் அடியான் இயேசுவை ஏற்றேன். எனது வாழ்வில் என்றும் காணா சமாதானத்தைப் பெற்றேன். இந்த எல்லையில்லா சமாதானத்தை, சந்தோஷத்தை உனக்கும், நமக்கும் தரவே இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தினார். அவரை ஏற்று அவரின் இரத்தத்திற்குப் பங்கு உள்ளவர்களாய் மாறும் சமயம் நமக்குச் சமாதானம் பூரணமாய் கிடைக்கும்.

4) இயேசுவின் இரத்தம் ஜெயம் தரும்

"மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்." வெளிப்படுத்தல் 12:11

இன்று பலவித சத்துருவின் போராட்டம் உண்டு. சத்திய வேதம் எபேசியர் 6:12 ல் இப்பிரபஞ்சத்தின் அந்தகாரலோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் என்று சொல்லப்பட்டுள்ளதை நாம் மறக்கக்கூடாது. எப்படி கர்த்தருடைய ஆவி அல்லது பரிசுத்த ஆவி நம்மை கர்த்தத்துவம் அல்லது பரிசுத்தத்திற்குள் வழி நடத்துகிறதோ அதைப் போல தீய ஆவிகள் நம்மை அசுத்தத்திற்கு வழிநடத்தி, நமது வெற்றியான வாழ்வை வேதனையாக்குகிறது.

பலவிதமான ஆவிகளை நாம் வேதத்தில் பார்க்கிறோம். பொய்யின் ஆவி, எரிச்சலின் ஆவி, வேசியின் ஆவி, பொல்லாத ஆவி, கனநித்திரை ஆவி, பெலவீனப்படுத்தும் ஆவி, ஊமையும் செவிடுமான ஆவிகள் போன்றவைகள். அது தன் அசுத்தங்களை, துர்க்கிரியைகளை நம்மில் பதியவைத்து, நம்மை நாசப்படுத்தி, நமது வெற்றியைப் பறித்து விடுகிறது.

உதாரணமாக ஒரு மாணவனுக்குக் கனநித்திரை இருக்கும் என்றால் அவன் படிப்புக்காக ஆயத்தம் ஆகும் சமயம் தூக்கம் வந்துவிடும். புஸ்தகத்தைத் திறந்தவுடன் நாளை அப்புறம் படிக்கலாம் என்று தூக்கத்தை ஏற்படுத்தி படிக்க விடாது தடுத்து தோல்வியடையச் செய்கிறது.

இயேசு கிறிஸ்து ஆலயத்திற்குச் சென்று போதித்த சமயம் 18 ஆண்டுகள் கூனியாக இருந்த மகளைக் கட்டியிருந்த பெலவீனத்தின் ஆவியைக் கடிந்து விரட்டிய சமயம், நிமிர்ந்து தேவனைத் துதித்தாள் என்று பார்க்கிறோம். நான் ஆலயம் செல்கிறேன், காணிக்கை தருகிறேன், வேதம் வாசிக்கிறேன் என்று சொல்லி இவ்விதமான ஆவிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் சகோதரனே, சகோதரியே இயேசுவின் இரத்தம் உன்னில் பூசப்படவில்லை என்றால் தீய ஆவிகள் உனது வெற்றி வாழ்வை சூறையாடி விடும் என்பதை மறந்து விடாதே.

பாரம்பரிய பழக்கமோ, வாழ்வோ அல்ல இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட வாழ்வில் தான் இயேசுவின் இரத்தத்தால் சத்துருவின் தந்திரங்களின் மீது ஜெயம் கொள்ள முடியும்.

சென்னையில் ஒரு முறை ஓர் வீட்டுக்கு ஜெபிக்க அழைக்கப்பட்டேன். காரணம் இவ்வீட்டில் திடீர் திடீர் என்று தீப்பிடித்து எரிந்து விடுகிறதாம். என்று அவர்கள் வாழ்வும், வீடும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டதோ அன்று தான் அந்த சத்துருவின் தந்திரத்தின் மீது வெற்றி கொள்ள முடிந்தது.

ஒருமுறை ஒரு ஊழியர் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். வீதியிலே சென்ற குடுகுடுப்பைக் காரனுக்கு இயேசுவை அறிவிக்க ஆசைப்பட்டு அழைத்தார். நான் பணம் தருகிறேன் என்று பேச ஆரம்பித்தார். இயேசு என்று சொன்ன மாத்திரம் கோபம் அடைந்து வெளியேறினான். சிறிது நேரத்தில் அவனால் அனுப்பப்பட்ட ஒரு தீய ஆவி கதவைத்தட்டி ஊழியரின் ஜெபத்தைக் கெடுத்தது. ஊழியர் கிருபை பெற்றவர். தீய ஆவியைப் பார்த்து உள்ளே வா என்றாராம். அங்கு வர இயலாது என்று கதறியதாம். ஏன் என்று ஊழியர் வினவ, உன் இருதயத்தில் இயேசுவின் இரத்தம் பூசப்பட்டுள்ளது என்று ஒரு தீங்கும் செய்ய இயலாது திரும்பி ஒடி விட்டதாம்.

 

ஆம் அருமை சகோதரனே உனது வியாபாரம், வேலை, உயர்வில் உள்ள போட்டி, பொறாமைகளின் காரணமாய் சத்துருக்கள் உன்னைத் தீய வழியில் மேற்கொள்ளாமல், பாதுகாப்பையும், அக்காரியங்கள் மீது ஜெயத்தையும் தருவது இயேசுவின் இரத்தம் ஆகும்.

உனது வாழ்வில் தோல்வியை மாற்றி நீ செய்யும் தொழிலை,வியாபாரத்தை, முயற்சியை வெற்றியாக முடியச் செய்ய வல்லமையுள்ள இந்த இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, வெற்றியைப் பெற்றுக் கொள்.

5. இயேசுவின் இரத்தம் செத்தமனச்சாட்சியைச் சுத்திகரிக்கும்

“நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! " எபிரெயர் 9:14

இன்று மனிதன் பாவத்தைச் செய்யும்போது அவனுக்குள் உள்ள மனச்சாட்சியானது நீ செய்வது தவறு என்று உணர்த்தும், உரைக்கும். இந்த மனச்சாட்சியின் சத்தத்தை மீறி தொடர்ந்து பாவத்தைச் செய்யும் போது, மனச்சாட்சி செத்துப்போய்விடும். மனச்சாட்சி செத்துப் போவதால் இது தவறானது, இது தீதானது என்று நிதானிக்க முடியாமல் தன் தவறுகளை, குறைகளை, குற்றங்களைச் செய்து வருகிறான். இன்று அநேகர் நண்பர்களினிமித்தம் ஆரம்பித்த குடிப்பழக்கம், புகைப்பழக்கம், அவர்களது வாழ்க்கையிலே அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அது இல்லாமல் வசிக்க முடியாத நிலை உருவாகிறது.

ஒருமுறை ஒரு அமெரிக்க நாட்டவரின் சாட்சியைக் கேட்டேன். தாய் தகப்பனை அறியாதவர். பாவ பழக்கத்திலே வாழ்ந்து வந்தார். பணத் தேவைகள் அதிகரித்த சூழ்நிலையில் ஒருவர் வந்து நான் இவ்வளவு டாலர் தருகிறேன், ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்று கேட்ட போது, அவரது பணத்தேவையின் நிமித்தம் உங்களுக்கு நாளை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். மனச்சாட்சி தவறு என்று உணர்த்தியது. தேவை என்பது அவரை ஒருபுறம் நெருக்கியது. கடைசியில் இந்த ஒரு கொலை மாத்திரம் செய்து பணப்பிரச்சனையைச் சமாளித்து விடலாம் என்று சரி என்று அடுத்த தினம் கூறினார். ஆனால் அவர் ஒருவரை மாத்திரம் கொலை செய்யவில்லை. அவரது மனச்சாட்சி மழுங்கிப்போனதால், பணத்திற்காக பல கொலைகள் செய்தார். ஒருநாள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரது அன்பை உணர்ந்து வாழ ஆரம்பித்தார். அந்த இயேசு கிறிஸ்துவின் அன்பின் செயலினால் சிந்தப்பட்ட இரத்தத்தைத் தியானித்த போது, அவரது மனச்சாட்சியானது உயிர்ப்பிக்கப்பட்டது. அதினால் அவரது வாழ்க்கையில் மிகவும் கலங்கி, கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற உணர்வைப் பெற்று சிறைச்சாலையில் இருந்து வெளிவந்த பிறகு, சீன தேசத்திலே ஊழியம் செய்ய வந்தேன் என்றார். ஆகவே இயேசு கிறிஸ்துவின் இரத்தம் செத்த மனச்சாட்சியை உயிர்ப்பிக்கிறது.

 

6) இயேசுவின் இரத்தம் நம் கண்ணீரைத் துடைக்கும்

“...இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள் என்று கேட்டான்.

“...இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.’

"சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து...தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.." வெளிப்படுத்தல் 7:13, 14, 17

ஆம் நமது வாழ்வில் நாம் அனுபவித்துக் கொண்டுள்ள பாடுகளை நமக்காக சிலுவையில் சுமந்து தீர்த்த இயேசு நம் கண்ணீரைத் துடைக்க வல்லவராக இருக்கிறார். இன்று பலவிதமான பிரச்சனையினால் கண்ணீர் சிந்துகிற அருமை சகோதரனே, சகோதரியே உன் கண்ணீரும், கவலையும் நீங்க கல்வாரி இரத்தத்தால் கழுவப்பட உன்னை ஒப்புக்கொடு.

கணவனின்/மனைவியின் போக்கால், பிள்ளையின் வேறுபாடான செய்கையால், பிள்ளையின் தடையான காரியத்தால், உனது வாழ்வில் மலர வேண்டிய காரியத்தால் இந்த நிலையில் தடையின் காரணமாக ஆதரவு அற்று அனாதையைப் போல் ஏங்கி, உனது படுக்கையைக் கண்ணீரால் நனைத்துக் கொண்டுள்ள சகோதரனே, சகோதரியே இயேசுவின் இரத்தம் உன் கண்ணீர் நிறைந்த வாழ்வை மாற்றி மகிழ்ச்சி உள்ளதாய் மாற்றும். வியாதியின் வேதனையினால் துக்கத்தின் மேல் துக்கம் அடைந்து கண்ணீர் சிந்துகிற சகோதரனே, சகோதரியே கலங்காதே. உன் கவலை, கண்ணீரை நீக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தினார்.

 

ஒரு நாளில் எனது வாழ்க்கை முடியப் போகிறது என்று கதறி கண்ணீர் சிந்தினேன். என்ன செய்வேன்?  யார் எனக்குப் பூரண சுகம் தருவார் என்று கதறிய போது சிலுவையில் எனக்காய் பாடுபட்ட இயேசுவின் இரத்தம் சொட்டுவதைக் கண்டேன். என் பாவத்தை அறிக்கை செய்தேன், அற்புத சுகம் அடைந்தேன். என் கண்ணீர் களிப்பாக மாறியது.

அன்பு சகோதரனே, சகோதரியே உனது வாழ்வில் தைரியம் இழந்து, சமாதானம் இழந்து தோல்வியுடன் பாவத்தில் வேதனை அடைந்து கண்ணீர் சிந்துகிறாயா? உன் வேதனை நீக்கவே கல்வாரியில் சிலுவை மரத்தில் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தினார். இந்தப் புதிய உடன்படிக்கையின் இரத்தத்தால் உன் வாழ்வு சுத்திகரிக்கப்பட மேன்மை அடைய கல்வாரி நாதரிடம் வருவாயா?

                                                                                                                  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                                             கிறிஸ்துவின் பணியில்,

                                                                                                                                                                                                                                                             சகோ. C. எபனேசர் பால்.