மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும்,

நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும்,

எதற்குக்  கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஓப்புக்கொடுக்கிறீர்களோ,

அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று  அறியீர்களா ? 

                                                                                  ரோமர் 6:16

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

                கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன் .

                இந்த உலக வாழ்க்கையிலே பலவிதமான அடிமைத்தனத்தில் வாழ்கின்ற மக்கள் பெருகி இருக்கிறார்கள். இந்த அடிமைத்தனம் ஏன்? எப்படி வந்தது? எதினால் ஏற்பட்டது என்றுச் சொல்லிப்  பலவிதமான கேள்விகளை  கேட்டுக்  கொண்டிருக்கிற மக்களாய் இருக்கின்றோம். ஆனால் சத்திய வேதத்தில் அடிமையாயிருப்பதன் காரணங்களும், அந்த அடிமைத்தனத்திலிருந்து  விடுதலையாவதற்குரிய  வழிகளும் தெளிவாய்ச்  சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இன்றைக்கு இந்தக் காரியத்தைக் குறித்து தியானிப்போம்.

1. எதற்கெல்லாம் அடிமை?

1. பாவத்திற்கு அடிமை .

"... பாவம்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்...                                                                                                                             யோவான் 8:34

                பலவிதமான பாவங்களைப் பார்க்க முடிகிறது. சில பாவங்கள் வேதனைக்குரியதாய் இருக்கிறது . சில பாவங்களினால் சிலர் ஏன் இந்த வாழ்க்கை என்று தங்களையே மாய்த்துக் கொள்ளுகிற மக்களாய் இருக்கிறார்கள் . ஆனால் இன்றைக்கு தேவன் விரும்புகிற காரியம், பாவத்தை மேற்கொண்டு வாழ்கிற ஒரு நிலைதான் . பாவத்திற்கு அடிமைகளாய் வாழ்கிற நிலைகளை சர்வ சாதாரணமாக எங்கும் பார்க்க முடிகிறது . ஏனென்றால் பாவமானது மனிதனுடைய வாழ்க்கையிலே ஒரு பங்காக மாறிவிட்டது. குடித்து, வெறித்து, வாழ்கிற மக்களை தினமும் பல பட்டணங்களிலே பார்க்க முடிகிறது. காரணம் என்ன? அவர்களுடைய வாழ்க்கையிலே தெய்வ பயம் இல்லை. இயேசு கிறிஸ்துவைக் குறித்த அறிவு கிடையாது. தேவனுடைய வார்த்தைகளைக் குறித்து ஒரு எண்ணமும், சிந்தையும் இல்லாதபடி பாவத்தைச் செய்கிற மக்களாய் இருக்கிறார்கள். பாவத்தை உணர்ந்துக்கொள்ள முடியாதபடி அவர்களுடைய வாழ்க்கையானது பாடுகள் நிறைந்ததாய் இருக்கிறது."தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." 2கொரி .4:4 -ன் படி உலகத்தின் அதிபதியான பிசாசானவன் தேவனுடைய மகிமையான சுவிசேஷம் அவர்களுடைய கண்களிலே தெரியக் கூடாது, அவர்களுடைய உள்ளங்களிலே பதிந்து விடக்கூடாது என்று மனக் கண்களை குருடாக்கினான் என்று பார்க்கிறோம். இவ்விதமாய் மனிதனுடைய வாழ்க்கையானது அடிமைத்தனத்திற்கு ஆளாகிறதைப்  பார்க்கிறோம் .

                எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய வாழ்க்கையிலே முதலாவது புகைப் பிடிக்க கற்றுக் கொண்டான் . கொஞ்சக் காலத்திலே கஞ்சா அடிக்கக் கூடிய பழக்கம் வந்தது. நலமாய் இருக்கிற சரீரத்தை உடைய அவன், எந்தக் கட்டிடமானாலும், எந்த உயரமான இடமானாலும் தைரியமாய் ஏறக்கூடியவன். ஆனால் இந்தக் கஞ்சா அடிக்கும் பழக்கத்திற்கு ஆளானபோது, குறுகிய காலத்திலே அவன் மரித்துப் போனான் . அவனுடைய வாழ்க்கையானது பாடுகளோடு முடிந்து விட்டது .

                பாவமானது மரணத்தை விளைவிக்கக் கூடியது. இந்தப் பாவமானது மனிதருக்குள் வருவதற்கு காரணமே அவனுக்குள் உண்டாகிற இச்சைகள். ஆசைகளைத் தந்திரமாக தூண்டி விடுவது பிசாசினுடைய செயல் என்றுச் சொல்லலாம். வேதத்திலே நாம் பார்க்கும்போது ஆதியாகமம் 3-ல் அங்கே சர்ப்பமாகிய தந்திரமான மிருக ஜீவன் ஏவாளோடு பேசுகிற ஒரு சம்பாஷணையைப் பார்க்கிறோம். அதிலே முதலாவது காரியமாக அந்தப் பெண்ணை மிகவும் விசாரிப்பது போல இருப்பதைப் பார்க்கிறோம் . தேவ சாயலாய் உண்டாக்கப்பட்ட அந்த மகள், தனித்துக் காணப்பட்டாள். அதோடு எந்த மரத்திற்கு அருகில் செல்லக்கூடாதோ அதனருகில் தன் காரியங்களைச் செய்ய ஆரம்பித்தப் பொழுதுதான் சர்ப்பமானது அவளோடு பேசுகிறதை பார்க்கிறோம். அந்த சர்ப்பமானது தோட்டத்திலே எந்த விருட்ச்சங்களையெல்லாம் புசிக்கலாம் , எதைப் புசிக்கக்கூடாது என்று தேவன் உங்களுக்குச் சொல்லி இருக்கிறாரா? என்று ஒரு கேள்வியைக் கேட்கிறது. இன்றைக்கு அநேக ஆண்கள் கூட இந்தப் பாவமான எண்ணத்தோடு சில பெண்களோடு பேசுவதப் பார்க்கிறோம். அந்தச் சம்பாஷணையிலே ஒரு கரிசனை இருப்பதுபோல, ஒரு கருத்து  இருப்பதுபோல , தேவன் சொன்னாரா என்று கேட்டவுடனே அந்தப் பெண்ணானவள் தன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டாள் . எந்த விதமான சூதும் வாதும் இல்லாதபடி பிசாசின் தந்திரத்திற்கு ஆளாகிற ஒரு நிலையைப் பார்க்கிறோம். அவளுடைய வாழ்க்கையிலே அது சத்துருவின் காரியம் என்று அறிந்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமை . அதோடு மாத்திரமல்ல அந்தச் சர்ப்பமானது அந்தக் கனியைப் புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாவதில்லை என்று பிசாசானவன் ஒரு நேர்மாறான ஒரு காரியத்தை ஏவாளுக்குச் சொல்லுகிறது. அவளுடைய மனம் அந்தப் பழத்தைப் பறித்து புசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் சிந்தையையும் கொண்டது .

                ஏவாள் அந்தப் பழத்தைப் பார்க்கிறாள், அந்தப் பழமானது புசிப்புக்கு நல்லது என்று தானாகவே தீர்மானம் செய்கிறாள். புசியாத அந்தப் பழத்தை அவள் தன் உள்ளத்திலே நினைத்தது மாத்திரமல்ல, அது பார்வைக்கு இன்பம் என்றுச் சொல்லி வர்ணிக்க ஆரம்பித்தாள் . பார்வைக்கு இன்பமான ஒரு மகள் / மகன் என்றுச் சொல்லி விரும்புகிற அவர்களை திருமணம் முடித்துக் கொள்கிற மக்களின் நிலைகளைப் பார்க்க முடிகிறது .

                அண்மையிலே  ஒரு குடும்பத்தாருடைய வாழ்க்கையிலே திருமணம் முடிந்து மூன்று மாத காலத்திற்குள்ளாய் பிரிந்து விட்டார்கள். படித்த மக்கள்தான், அழகான தோற்றத்தை உடையவர்கள் . ஆனால் அவர்களுடைய உள்ளத்திலோ பாவமானது பெருகி இருந்தது. தன்னலமானது பெருகி இருந்தது. தவறான காரியங்கள் நிறைந்திருந்த படியினாலே பிரிந்து போக வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் வந்தது .

                கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே சர்ப்பத்தின் ரூபத்திலே, தந்திரமான விதத்திலே வருகிற பிசாசானவன் மனிதருடைய மனக்கண்களைக் குருடாக்கி தேவனுடைய மகிமையான சுவிசேஷம் அவர்களுக்குள்ளாய் பிரகாசிக்க முடியாதபடி அவர்களுடைய வாழ்க்கையை இருளடைய வைப்பதோடு, எந்த காரியத்தைச் செய்யக் கூடாது என்று கர்த்தர் சொன்னாரோ, அந்த காரியத்தைச் செய்வதற்குத் தூண்டுகிற நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். ஏவாளும் கூட தூண்டப்பட்ட மனதோடு அந்தப் பழத்தைப் பார்த்தாள். அதோடு மாத்திரமல்ல தான் சாப்பிட்டதோடு மாத்திரமல்ல தன் கணவனான ஆதாமுக்கும் கொடுப்பதைப் பார்க்கிறோம். அதினிமித்தமாய் மனிதன் தேவமகிமையை இழந்துப் போனான்.

                கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை வாசிக்கிற அருமையான சகோதரனே / சகோதரியே, உன்னுடைய வாழ்க்கையிலே பிசாசு பலவிதமான பாவங்களைச் செய்வதற்கு, பாவச் சிந்தைகளை சிந்திப்பதற்கு தூண்ட ஆவலோடு சுற்றித் திரிகிறவனாய் இருக்கிறான் .

                இந்தத் தந்திரமான வார்த்தைகளுக்கு அவள் கீழ்ப்படிந்து அதற்கு இடங்கொடுத்து பழத்தை பறித்து , புசித்து கணவனுக்கும் கொடுத்தபடியினாலே தேவனோடு உள்ள உறவை அவர்கள் இழந்துப் போனார்கள் . அவர்களுடைய வாழ்க்கையானது இருளடைந்ததைப் பார்க்கிறோம். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் தேவனுடைய சாயலில் இருந்த அவர்கள், தேவ சாயலை இழந்து, இருளடைந்ததோடு மாத்திரமல்ல, நிர்வாணிகள் என்றுச் சொல்லுகிற நிலைகளையும் பார்க்கிறோம் .

                இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே தேவசாயலை இழக்கச் செய்வது, பிசாசானவனுடைய பிரதான நோக்கமாய் இருக்கிறது. அவனுடைய திட்டத்தின்படியே, பாவத்திற்கு அடிமையாக வேண்டும். பாவத்தை நாம் செய்ய வேண்டும் . ஆகவேதான் தேவனுடைய பிள்ளைகளாய் இராதபடி, நாம் இருளின் பிள்ளைகளாய், தேவனுடைய மகிமையற்றவர்களாய் ஜீவிக்க வேண்டும் என்று அவன் தந்திரமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் . வேதத்திலே பாவங்களைச் செய்த மக்களைப் பார்க்கும்போது , அவர்களுடைய வாழ்க்கையிலே இச்சை அதிகமாய் இருந்ததைப் பார்க்கிறோம் . யோசுவா 7:1 - ல் "ஆகான்" என்றுச் சொல்லப்பட்ட ஒரு மனிதனைக் குறித்துப் பார்க்கிறோம் . இவனுடைய வாழ்க்கையிலே சாபத்தீடான எரிகோவின் பொருட்களான பாபிலோனுடைய சால்வை, பொன்பாளம், வெள்ளிக்காசுகளைத் தந்திரமாய் எடுத்து ஒளித்து வைத்த நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். அதினிமித்தமாய் அழிவு ஏற்படுகிறது .அவனும் , அவன் பிள்ளைகளும், அவனுடைய குடும்பமும் , எல்லா மிருக ஜீவன்களும் அங்கு அழிக்கப்படுவதைப் பார்க்கிறோம் .

                ஆகானுடைய வாழ்க்கையிலே இச்சையானது அழிவையும் அவனுடைய குடும்பத்தாருடைய அழிவையும் கொண்டு வந்ததைப் பார்க்கிறோம் . பாவமானது அடிப்படையில் இருந்தாலும் , இச்சையானது மிகுதியாய் இருப்பதைப் பார்க்கிறோம் . "அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு , சிக்குண்டு , சோதிக்கப்படுகிறான் . பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து , பாவத்தைப் பிறப்பிக்கும் , பாவம் பூரணமாகும் போது  , மரணத்தைப் பிறப்பிக்கும்.” யாக்கோபு 1:14,15 - ன் படி பாவமானது எப்படி வருகிறது? பாவத்தினுடைய நிலைகள் எப்படி நமக்குள் பெருகுகிறது என்றும் இச்சையானது மனிதனுடைய வாழ்க்கையிலே மரணத்தை விளைவிக்கக் கூடியதாய் மாறுகிறதென்றும் பார்க்கிறோம். பாவ வலைகளுக்குள் சிக்கித் தவிக்கிற மக்கள் ஏராளம் உண்டு . ஆகவே தான் ரோமர் 7:23-ல் என்னுடைய சரீரத்திலே வேறொரு பிரமாணம் இருப்பதைக் காண்கிறேன். அது எனக்குள் செயல்படுகிறது என்று பவுல் அழகாக கூறுகிறார் . ரோமர் 7:24-ல் "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? என்று கேட்பத்தைப் பார்க்கிறோம் . "எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல் , நான் வெறுக்கிறதையே செய்கிறேன்." என்று ரோமர் 7:15 - ல் பார்க்க முடிகிறது.

                இன்றைக்கு இவ்விதமாய் பாவத்தைச் செய்வதினாலே வாழ்க்கையின் மேன்மையை இழந்து வேதனை அடைகிற மக்களாய் இருகிறார்கள் . குடிப்பழக்கம் என்ற பாவத்திற்கு அடிமையாகி , அதிலே சிக்கித் தவிக்கிற மக்களுண்டு. அதை விட வேண்டும் என்று முயற்சித்தாலும் விட முடியாத ஒரு வேதனையான நிலைமை .

2. கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

"கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை." நீதிமொழிகள் 22 : 7

                இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே கடன் கொடுத்தவனைப் பார்க்கும்போது பயம் உண்டாகிறது . அவனைக் கண்டு விலகி ஓடுகிறவர்கள் உண்டு .ஏன் இந்த நிலைமை? அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்கிற நிலைமை . பிசாசானவன் மனிதர்களை பலவிதமான முறைகளிலே கடன் காரனாக மாற்றி இருப்பதைப் பார்க்கிறோம். செல்வந்தருக் கெல்லாம் credit cards என்ற முறையிலே அவர்களை கடன்காரனாக மாற்றுகிறான். நடுத்தர மக்களுக்கு இன்னொரு விதத்திலே செய்கிறான் . Instalment என்ற தலைப்பின் கீழாகப் பொருட்களை வாங்குவதற்கு மாதா மாதம் பணத்தை செலுத்தும்படியாக கடனை வாங்குகிற மக்களும் உண்டு.

                ஏழைகள் வட்டிக்காக கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாதபடி தவிப்பதைப் பார்க்கிறோம். இப்படி தேவனுடைய வார்த்தைக்கு மாறாக, கடன் வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உண்டாக்குகிறான். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்றைக்கு அநேகர் அதிகமான வருமானம் வந்தால் வாழ்க்கையிலே நலமாய் இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். செல்வத்திலே சிறந்திருக்க முடியும், வாழ்க்கையிலே எல்லாவிதமான நன்மைகளையும் பெற்று விட முடியும் என்று எண்ணுகிற மகளாய் மாறிவிடுகிறார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ, நம்மை ஆசீர்வதிக்கும் போது நம்முடைய வாழ்க்கையிலே கொஞ்சமான பணமிருந்தாலும் அது நமக்கு நிறைவாய் போதுமானதாய் மாறி விடும். இயேசு கிறிஸ்து தம்முடைய பிரசங்கத்தை எல்லாம் முடித்தப் பிறகு அங்குள்ள மக்களைப் பார்த்து, இவர்களுக்கு ஆகாரம் கொடுக்க வேண்டும் என்று சீஷர்களிடம் சொன்னார்.

                இயேசு கிறிஸ்து அங்கிருந்த சிறுவனிடம் இருந்த 5 அப்பத்தையும், 2 மீன்களையும் ஆசீர்வதித்தார். சீஷர்கள் இவைகள் இத்தனை ஜனத்திற்கு எம்மாத்திரம் என்ற எண்ணத்தோடு இருந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ அந்த அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி, சீஷர்களுக்குக்  கொடுத்தார். சீஷர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள். அப்படியே மீனையும் ஆசீர்வதித்துக் கொடுத்தார். அவர்கள் திருப்தி அடைந்தப் பிறகு அவர் தன் சீஷர்களை நோக்கி ஒன்றும் சேதமாகாதபடி மீதியான துணிக்கைகளை சேர்த்து வையுங்கள் என்றார். அந்தப்படியே மீதமானவைகளை 12 கூடைகளிலே நிரப்பினார்கள் என்று யோவான் 6:9 - 13-ல் பார்க்க முடிகிறது. 5 அப்பத்தையும்  2 மீனையும் ஆசீர்வதித்தப் பொழுது அது ஐயாயிரம் பேருக்கு போதுமானதாக மாறியது. வாழ்க்கையிலே அதிகமான பொருள் இருக்க வேண்டும். அதிகமான செல்வம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய வாழ்க்கை ஆசீர்வாதமாய் இருக்கும் என்று எண்ணுகிறோம். ஆனால் அப்படி அல்ல, இயேசு கிறிஸ்து கொஞ்சத்தையும் ஆசீர்வதித்ததினாலே அது போதுமானதாய் மாறியது  என்று நம்முடைய உள்ளத்தில் நினைவுகூர வேண்டும் .

                "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய் , நீயோ கடன் வாங்குவதில்லை ” என்றுச் சொல்லி பாகமம் 15:6-ல் பார்க்கமுடிகிறது. கர்த்தர் நம்முடைய கையின் பிரயாசங்களை ஆசீர்வதிக்க வேண்டும். ஈசாக்கை 100 மடங்கு ஆசீர்வதித்த தேவன், இன்றைக்கும் ஜீவிக்கிறவராய் இருக்கிறார். இரட்டிப்பான நன்மையைத் தருவேன் என்றுச் சொன்னவர் இன்றும் மாறாதவராய் இருக்கிறார். அவரால் நாம் ஆசீர்வதிக்கப்படும்போது 12 மாதங்களுக்கும் போக மீதி வைக்கத் தக்கதான கிருபையை அருளி ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். கடன் வாங்குகிற ஒரு காரியம், கவனமில்லாதபடி, ஞானமில்லாதபடி, சகல பொருட்களையும் இச்சித்து வாங்குகிற ஒரு நிகழ்ச்சி. இச்சையினாலே வாங்கும் பொருட்களினால் கடன் தொல்லை மிகுதியாய் இருக்கிறது. எனவே இதைத் தியானிக்கிற அருமையான சகோதரனே /சகோதரியே, நீயோ கடன் வாங்குவதில்லை என்றுச் சொன்ன தேவன், கடன் வாங்காது, கடன் கொடுத்தவனுக்கு அடிமையாகாதபடி இன்று முதல் நம்மைக் காத்துக் கொள்ள, கிருபை புரிவாராக.

3. உலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமை.

"அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாகியிருந்தோம்." கலா. 4:3

                கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து உன் தகப்பனுடைய வீட்டை விட்டு , அவனுடைய தேசத்தை விட்டு நான் காண்பிக்கிற தேசத்திற்கு வா  என்று அழைத்தார். காரணம் என்ன? அங்குள்ள பாரம்பரிய பழக்கங்கள், காரியங்கள் நிமித்தமாக செய்யக் கூடிய சகலவிதமான தேவனுக்குப் பிரியமில்லாத அருவருப்பான காரியங்களை விட்டு விலக வேண்டும். பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேவன் சொன்னதைப் பார்க்கிறோம். ஆகவே பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு நம்மை அர்ப்பணிக்கும் பொழுது  தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். பலருடைய வழிபாடுகளைப் பார்க்கும்போது, அவர்கள் செய்கிற காரியங்கள் எதற்கு, ஏன் என்று புரிந்துக் கொள்ள முடியாத நிலையிலே நடந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாளிலே நாம் எப்படி தேவனைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அவரைப் பின்பற்றாமல், உலகத்தின் வழிபாடுகளைப் பின்பற்றும்போது, இதன் நிமித்தமாய் கேடானவைகளும் வேதனையானவைகளும் பெருகிவிடும். ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே இந்தப் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்குக் கீழ்ப்படிந்து தேவனுக்குப் பிரியமில்லாத மக்களாய் மாறிவிடாதப்படி கவனமாய் இருப்போம்.

4. மரண பயத்திற்கு அடிமை.

"ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்." எபிரேயர் 2 :15

                நம்மை மரண பயத்திலிருந்து விடுவிக்கும்படியாய் சிலுவையிலே தம்முடைய இரத்தத்தையெல்லாம் சிந்தினார். இன்றைக்கு விடுதலையில்லாதபடி வாழ்க்கையிலே கலங்கி வாழ்கிற மக்கள் ஏராளம் உண்டு. ஆனால் கர்த்தரோ நம் எல்லாருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து, நமக்கு ஒரு பெரிதான விடுதலையைத் தந்திருக்கிறார். அந்த விடுதலையானது அவருடைய இரத்தத்தினாலே உண்டானது.

                ஒருமுறை ஒரு அருமையான சகோதரனுடைய தலையின் பகுதியிலே காயம் உண்டானது. காதின் வழியாய் இரத்தம் வந்தது. எந்தவிதமான மருத்துவ சிகிச்சைக்கும் நான் செல்ல மாட்டேன் என்ற எண்ணத்தோடு இருந்த அந்த சகோதரன், நிர்ப்பந்தத்தின் நிமித்தமாக அந்த நாளிலே சிகிச்சைக்கு செல்லவேண்டியதிருந்தது . ஆனால் அவருக்கு o.p - யிலே out patient ஆக Government மருத்துவர் நடத்தினார். ஆகவே அவர் வழக்கு தொடரமுடியாத நிலை உண்டானது. ஆனாலும் கர்த்தர் அதைக் காட்டிலும் அற்புதமான சுகத்தைக் கொடுத்தார். ஏனென்றால் அந்த சகோதரனுடைய குடும்பத்திலே எங்குக் காயப்பட்டாலும், எந்தச் சேதம் வந்தாலும் மருத்துவர் அல்ல , பரம மருத்துவரான இயேசு கிறிஸ்து என்னைக் குணமாக்க வல்லவர் என்று, விசுவாசத்தோடு இருந்தபடியினாலே அந்த மேன்மையான நிகழ்ச்சி நடைப்பெற்றது.

                இன்றைக்கு பலவிதமான தவறான காரியங்களைப் பின்பற்றுகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். நாமோ தேவனுடைய பிள்ளைகளாய் இருந்து, இந்த வழிபாடுகளுக்கு பாரம்பரிய பழக்கத்திற்கு இடம் கொடாதபடி காத்துக் கொள்ள வேண்டும். பாரம்பரிய பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்கள் வாழ்க்கையில் அறியாது தவறுகளை, பிழைகளைச் செய்கிறார்கள். இவ்விதமான காரியங்களைச் செய்கிறதினாலே வருகிற எல்லாவிதமான பயத்திற்கும், போராட்டத்திற்கும் விலக்கி, காக்கப்படுவதற்கு எப்பொழுதும் கர்த்தருடைய அன்பிலே நெருங்கி இருக்க வேண்டும். மரண பயமானது, மனிதனுடைய வாழ்க்கையிலே வேதனையைக் கொண்டு வரக்கூடியது. மரண பயமானது அவனுடைய எல்லா விதமான கவனத்தையும் கெடுக்கக் கூடியது. மரணபயமானது இரவிலே தூங்க முடியாதபடி அவனுக்குள் போராட்டமாய் மாறுகிறது. சிலருடைய வாழ்க்கையிலே மரண பயம் பலவிதமான யூகங்களும், தவறான எண்ணங்களும் தோன்றி இரவிலே சத்தமிடுகிறதைக் காணமுடிகிறது. ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே இந்த மரணப்பயத்திலிருந்து மீட்பதற்காக இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனைக் கொடுத்தார்.

5. பிசாசுக்கு அடிமை.

“அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்."                  லூக்கா 8 : 27

                பிசாசானவன் நம்மை அடிமைப்படுத்தி தன்னுடைய தந்திரமான செயல்களை நம் மூலமாய் நிறைவேற்றி இந்த உலகத்திற்கு அநேக கேடுகளை விளைவிக்க வேண்டும். அநேக கஷ்டங்களைக் கொண்டு வர வேண்டும். அநேகவிதமான போராட்டங்களினால் ஜீவனைப் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவதைப் பார்க்கிறோம். பிசாசானவன் வருவதற்கு காரணம் நாம் தேவனுடைய வசனங்களை மீறுவது. தேவனுடைய சமுகத்திலே நாம் சொன்ன காரியங்களை நிறைவேற்றாதபடி தடுமாறுகிற ஒரு நிலைமை. ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே பிசாசானவன் நம்மைச் சிறைப்படுத்தாதப்படி நம்முடைய வாழ்க்கை காக்கப்பட வேண்டுமானால், நாம் தூய்மையுடையவர்களாய் மாற வேண்டும். இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கக்கூடியதாய் இருக்கிறது.  வேதத்தை நாம் ஆராயும்போது, 38 ஆண்டுகள் வேதனையோடு இருந்து சுகமடைந்த அந்த மனிதனைப் பார்த்துச் சொன்ன காரியம் இனி பாவம் செய்யாதே, அதோடு மாத்திரமல்ல வேதனையான பெலவீனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவனை மறுபடியும் ஆலயத்தில் கண்டபொழுது, இனி அதிகக் கேடானது நடைபெறாதபடி இருப்பதற்கு, இனி பாவம் செய்யாதே என்ற மேலான ஆலோசனையைக் கொடுத்தார்.

                இன்றைக்கு நாம் பாவத்தைச் செய்யாது வாழ வேண்டும். நாம் தேவனுக்கு விரோதமாய் பாவங்களைச் செய்யாதபடி காத்துக்கொள்ள வேண்டும். தேவன் விரும்புகிற காரியங்களை அதிகமாய்ச் செய்வதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, அந்தக் காரியங்கள் நம்மை விட்டுவிலகி சென்று விடுகிறது . நம்முடைய வாழ்க்கையிலே பலவிதமான காரியங்களிலே, சூழ்நிலைகளிலே இப்படியாய் அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ இந்த உலகத்தில் வந்ததினுடைய நோக்கம் விழுந்துபோன, அடிமையாக்கப்பட்ட நிலைமையிலிருந்து நம்மை விடுவிக்க வேண்டும் என்பதே . அவருடைய வல்லமையான செயலினாலே நம்மை பிசாசின் பிடியில் இருந்து விடுவித்து, நம்மை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். வேதத்திலே "...குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." என்று யோவான் 8:36 - ல் பார்க்கிறோம். ஆகவே மனிதனுடைய வாழ்க்கையிலே விடுதலை வருவதற்கு அவன் செய்ய வேண்டிய காரியங்கள் உண்டு. அவனைப் பெலத்தால் இடைக்கட்டுகிற தேவன் உண்டு. பிசாசானவன் பலவிதமான ஆசை இச்சைகளைத் தூண்டி பாவத்தைச் செய்ய தூண்டுவான். அவனுடைய வலையிலே இழுத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் போராடுகிறவனாய் இருக்கிறான். ஆனால் நம்முடைய தேவனோ நம்மை நேசித்து நம்மை ஆசீர்வதிக்கும்படியாக நமக்கு முன்பாக நலமானதையும் தீயதையும் வைத்திருக்கிறார் . நம்முடைய மனசாட்சியிலே நாம் சூடுண்டவர்களாய் நம் பாவ வாழ்க்கையிலிருந்து பரிசுத்த வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.

II. அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பெற என்ன செய்ய வேண்டும்?

1. தேவனை அறிகிற அறிவினால் விடுதலை.

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்." யோவான் 8:32

                "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாகும் ; உம்முடைய வசனமே சத்தியம்". யோவான் 17:17 - ன் படி சத்தியம் என்றால் தேவனுடைய வசனங்கள். ஆகவே தேவனுடைய வசனங்களினால் வருகிற அந்த ஜீவ ஊற்றானது சமாதானத்தைத் தருவதோடு , சந்தோஷத்தோடு வேதனை நீங்கி சுகவாழ்வு பெருகச் செய்கிறது. அடிமைத்தனத்தினாலே பலவிதமான பிரச்சனைகள், வேதனைகள் உண்டு. அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கிறவர் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து என்று மறந்து விடவே கூடாது . அவருடைய வல்லமையான செயலினாலே நாம் விடுவிக்கப்பட்டவர்களாய் மாறவேண்டுமானால், முதலாவது நாம் கர்த்தருடைய வார்த்தையை நம்புகிறவர்களாய் மாறவேண்டும்.

2. கர்த்தரை நம்புவதால் விடுதலை.

"...நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.” சங்கீதம் 22:4

                நம்முடைய நம்பிக்கையின் மூலமாய் நமக்குள் விடுதலையின் வாழ்க்கை உண்டாகிறது . நம்முடைய தேவன் நம்மை விடுவிக்கிறவர் . ஆகவேதான் எபி:11-ம் அதிகாரத்தில் நம்பிக்கையின் அடையாளங்களைப் பார்க்க முடிகிறது. அந்த விசுவாசத்தின் அடையாளத்தைப் பார்க்க முடிகிறது. தேவன் நம்மை விடுவிக்கிறவர் என்று நம்புவதினாலே நமக்குள்ளாய் அற்புதமான காரியங்கள் நடைபெறுகிறது.

3. உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை.

"...தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்."
                                                                                                                        சகரியா 9:11

                உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலை செய்கிற தேவன் இன்றும் இருக்கிறார். அவரை நாம் நம்பும்போது விசுவாசிக்கும்போது, அவர் எனக்காக சிலுவையில் அடிக்கப்பட்டார் என்று விசுவாசித்து வாழும்போது, அவர் விடுதலைத் தருகிற தேவனாய் இருக்கிறார்.

4. உபதேச சட்டங்களுக்கு கீழ்ப்படியும்போது.

"முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்." ரோமர் 6:17,18.

                உபதேச சட்டம் என்று சொல்லுகிற தேவனுடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியும்போது, வாழ்க்கையிலே விடுதலை உண்டாகிறது .

5. மனந்திரும்பி அவருடைய சமுகத்தை நோக்கும்போது விடுவிக்கிறார்.

"... அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்." நெகேமியா 9 : 28.

                நம்முடைய வாழ்க்கையிலே மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் சமுகத்தை நாடுகிற போது நம்மை விடுவிக்கிறவராய் இருக்கிறார். என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன் என்று சங்கீதம் 91:14-ல் பார்க்கிறோம். இன்றைக்கு நாம் அவரிடத்தில் வாஞ்சையாயிருப்போம். அவரால் விடுதலைப் பெற்றவர்களாய் மாறுவோம்.

                                                கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                கிறிஸ்து இயேசுவின் பணியில் ,                                                                                                                                                                                                              சகோ. சி. எபனேசர் பால்