“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;

திகையாதே, நான் உன் தேவன்;

நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்;

என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்."

                                                                                             ஏசாயா 41:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

                ஒருமுறை ஒரு ஊழியத்தின் போது பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப் பட்ட சகோதரிக்கு இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிவித்து ஜெபித்தோம். ஒவ்வொரு முறை அப்பகுதி ஊழியத்திற்குச் செல்லும்போதும் அவர்களைச் சந்தித்து ஆறுதலான வார்த்தைகளைக் கூறி ஜெபித்து வருவோம். அவர்கள் அதிகமாக நோய்வாய்ப்பட்ட போது மருத்துவ சிகிச்சைக்குச் சென்றார்கள். இவர்களின் வியாதியின் தன்மையைக் கட்டுப்படுத்துவதற்காக மண்டையைத் திறந்து மூளைப்பகுதியில் ஒரு மைக்ரோ சிப்பைப் பொருத்தி, ஒயர்களை இணைத்து உடலின் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இதைக் குறித்து நினைத்தாலே அந்த சகோதரிக்கு அதிக பயம். அத்துடன் நான் பிழைக்க மாட்டேன் என்ற நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள். அறுவைச் சிகிச்சைக்குச் செல்லும் முன்பு "என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்" ஏசாயா 41:10 என்ற அம்மாதத்தின் வாக்குத்தத்த வசனம் அச்சகோதரிக்குக் கொடுக்கப்பட்டது. டாக்டர்கள் அச்சகோதரியின் மண்டை ஓட்டைத் திறந்த போது, மூளைப்பகுதியில் நீர் அதிகம் நிறைந்திருந்தது. சிகிச்சையின்போது அவர்களுடைய இருதயத்துடிப்பு (pulse) குறைந்து கொண்டே வந்தது. 12 டாக்டர்களும், இவர்கள் பிழைக்க மாட்டார்கள், மரித்து விடுவார்கள் என்று பேசிக்கொண்ட வார்த்தைகள் சகோதரியின் காதில் விழுந்தது. அங்கும் இங்கும் அவசர அவசரமாய் சென்று டாக்டர்கள் செயல்பட்டபோது, அதிகமாய் பயந்தார்கள். அவர்களைச் சுற்றி நடந்துக் கொண்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும் பார்த்தார்கள். ஆனால் ஒரு வார்த்தையும் பேச இயலவில்லை . “கர்த்தாவே என்னைக் கைவிட்டு விடாதேயும், எனக்கு உதவிச்செய்யும், என்னைக் காப்பாற்றும்” என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தரிடம் மன்றாடினார்கள். அவ்வேளையில் ஒருவர் அவர்களின் கரத்தைப் பிடித்தார், உடனே சரீரத்தில் ஒரு மாறுதலும் உள்ளத்திலே ஆறுதலும், சமாதானமும் ஏற்பட்டது. கரத்தைப் பிடித்தது ஒரு டாக்டராக இருக்கலாம் என்று கண்ணைத் திறந்து தேடிய போது, யாரும் அருகில் இல்லை. கர்த்தரே அருகில் வந்து கரத்தைப் பிடித்தார் என்று உணர்ந்து கர்த்தரைத் துதித்தார்கள்.

                இதை வாசிக்கும் அருமையான தேவப்பிள்ளையே, உன் போராட்டமான நேரத்தில் கலங்காதே. உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் என்றவர் இன்றும் ஜீவிக்கிறார். உன்னைக் கைவிடாது காப்பார் .சூழ்நிலையைப்  பார்த்து சோர்ந்து போகாதே, வாக்கு மாறாத தேவன் தம் வல்லமையினாலே உன்னை என்றும் காப்பார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .                                                                                                                         

 சகோ . c. எபனேசர் பால்