அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். நீர் என் ஜெபத்தைக் கேட்டு அநேக காரியங்களை இதுவரை செய்திருக்கிறீர். அதற்காக உமக்குத் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். நான் ஏறெடுத்த ஜெபத்தின் மூலமாக என்னில் மாத்திரமல்ல. என் குடும்பத்தாரிலும் செய்த நன்மைக்காக, சுகத்திற்காக உமக்கு நன்றிகளை ஏறெடுக்கிறேன். இப்போதும் கர்த்தாவே, என்னில் தோன்றியிருக்கிற இந்தக் காலின் வேதனையை நீக்கும்படி கெஞ்சுகிறேன். ஏதோ ஒரு வலி என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் இப்போதோ அது அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நேரத்தில் இதனை எண்ணும்போது ஏதோ கொடூரமான பெலவீனம் எனக்குள் தோன்றி விட்டதே என்ற எண்ணமும், பயமும் வருகிறது. என் காலை நானே பார்க்கும்போது, அது அதிகமாய் வீங்கி இருக்கிறது என்ற எண்ணமும் சிந்தையும் வந்து விடுகிறது. என்னைத் தாயின் கருவிலே உருவாக்கி இம்மட்டும் காத்து நடத்தி வருகிற தேவனே. எனக்கு இரங்கும். எனக்கு சுகம் தாரும். காலின் வேதனையினால் பாடுபட்டு மரித்த மக்களின் காரியங்கள் எனக்குள் தோன்றி பயத்தைப் பெருகச் செய்கிறது. என் கால்களை மான்களின் கால்களைப் போலாக்கி. உயர் ஸ்தலங்களில் நிற்கச் செய்கிற தேவனே, எனக்கு இரங்கும். என் பெலவீனங்களை ஏற்று என் நோய்களைச் சுமந்தவரே. எனக்கு இரங்கும். கர்த்தாவே, உம்முடைய ஆணி பாய்ந்த கரத்தினால் என்னைத் தொடும் கர்த்தாவே. என் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள எல்லாக் குறைவும் நீங்க எனக்கு உதவி செய்யும். உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன் என்று சொன்னவரே, எனக்கு இரங்கும். நீர் ஒருவரே என் வேதனைகளை நீக்கி எனக்குள் பூரண சுகத்தைத் தர முடியும் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். நான் சாட்சி கூற என்னைப் பெலப்படுத்தும், ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமென்.