பயம் நீங்கின நல்வாழ்வு வாழ ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபநேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே. என் உள்ளத்தில் ஒருவிதமான பயம் தோன்றி இரவிலும் நான் தூங்கமுடியாதபடி கலங்குகிறேன் . கர்த்தாவே. எனக்கு இரங்கும். என் மனதின் போராட்டங்கள் மாறட்டும். நான் சோர்வடைந்து முன்போல உம்மைத் துதியாமலும், உம் சமுகத்தை நோக்கி ஜெபியாதபடியினாலும் கலங்குகிறேன். நான் வேதத்தை நேசிக்றேன், ஆனால் தியானிக்க முடியவில்லை. பலவிதமான குழப்பங்கள் தோன்றி சிந்தைகள் சிதறடிக்கப்படுகிற காரியங்கள் பெருகிக் கொண்டே இருக்கிறது. பழைய வாழ்க்கையின் பாவங்களும் என் உள்ளத்தில் தோன்றி என்னைக் குற்றப்படுத்துகிறது. எப்பொழுது விடியும் என்று காத்திருக்கிறேன். கர்த்தாவே, என் பயம் நீங்கி முன்போல உம்மைத் துதிக்க, ஸ்தோத்தரிக்க உதவிசெய்யும். சில சமயங்களிலே பிள்ளைகளின் படிப்பு, சுகம் இவைகளைக் குறித்துப் பயம் என்னை ஆளுகை செய்கிறது. அவர்களின் எதிர்காலம் எப்படியாகுமோ என்ற பயம் உள்ளத்தில் பெருகி விடுகிறது. என் பிள்ளைகள் உம்மால் போதிக்கப்பட்டு வந்தும் எனக்குள் தோன்றுகிற பயத்தினால் அவர்களிடம் நான் கோபப்படுகிறேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். பூரண விடுதலை தாரும். என் ஜென்ம சுபாவம் நீங்க உதவிசெய்யும் பயப்படாதே. நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே. நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் என்று சொன்னவரே. உம்முடைய வார்த்தையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு பயமில்லாத சமாதானமான, சந்தோஷமான வாழ்வை எனக்குத் தாரும். இன்று நான் பயம் நீங்கி தைரியமாய் வாழ எனக்கு உதவிசெய்யும். என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தும். நான் சோர்வடையாத உள்ளத்தோடு, திட நம்பிக்கையோடு என் காரியங்களை எல்லாம் இனி செய்ய எனக்கு உதவிபுரியும். அனுதினமும் உமது அன்பிலே நிறைந்து பயத்தை மேற்கொண்டு வாழ எனக்கு உதவிசெய்யும். இயேசு கிறிஸ்து என் ஜெபத்தைக் கேட்டபடியினால் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். உமது கிருபை என்னைச் சூழ்ந்து கொள்ளட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.