கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனியநாமத்தில் வாழ்த்துகிறேன்.
ஒவ்வொரு ஆண்டு ஆரம்பத்திலும், மாதத்தின் முதல் தேதியிலும் எனக்கு இந்த வாக்குத்தத்தைத் தந்தார் என்று கர்த்தருக்குள் காத்திருந்து பெற்ற வேத வாக்கியங்களைப் பிரசித்தப்படுத்தி,அதிலிருந்து செய்தியைத் தருகிறோம். அந்த வசனத்தை அச்சிட்டு நம்முடன் ஐக்கியப்பட்ட அனைவருக்கும் தந்து மகிழ்கிறோம். இந்த வாக்குத் தத்தமான வார்த்தைகளை ஆண்டின் ஆரம்பத்திலும், ஒவ்வொரு மாத துவக்கத்திலும் மட்டும் அல்ல, அனுதினமும் வேத வார்த்தைகளைத் தந்து நம்மைத் தேற்றுகிறார், திடப்படுத்துகிறார். மகிழ்ச்சியைப் பெருகச் செய்கிறார். இந்த வேத வார்த்தைகள் அந்தந்த நாளின் வழி நடத்துதலுக்கு ஏற்றதாக அமைகிறது. சில சமயம், அது எச்சரிப்பாக, சில சமயம் ஆறுதலாக, சில சமயம் ஆலோசனையாக இவ்விதமாக பலவழிகளில் கர்த்தருக்குள் நம்மை நிறைவுள்ளவர்களாய் மாற்றுகிறது.
ஒரு குடும்பத்தலைவர் தன் குடும்பத்தின் பிள்ளைகளைப் பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு வாங்கியிருக்கிறேன், வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றவுடன், அத்தனை பிள்ளைகளும் நான் முந்தி சென்று எனக்குப் பிடித்த பிரியமான பரிசை எடுத்துக் கொள்வேன் என்று முந்தியடித்துப் பரிசு வைத்துள்ள தகப்பனாரை நோக்கி ஒடி வருவார்கள். இன்று நம்முடைய பரம தகப்பன் எனக்கென்று இந்த மாதத்தில் என்ன வைத்திருக்கிறார் என்று அறியும்போது, மெய்யாகவே நிறைவாய் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.
கர்த்தர் தரும் காரியங்கள் அநேகமுண்டு. அதில் சிலவற்றை ஆராய்வோம்
I.வசனம் தருகிறார்
"ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின்
கூட்டம் மிகுதி." சங்கீதம் 68:11
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருளும் வார்த்தைகள் மிகுதியானது,மேன்மையானது. 'ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. ' என்று யோவான் 6:63ல் பார்க்கிறோம். இந்த ஆவியும், ஜீவனும் உள்ள வார்த்தைகள் நம் இன்னல்களில், கஷ்டங்களில், கண்ணீரின் நேரங்களில் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேற்றி, சூழ்நிலையின் பிரச்சனையை மாற்றி தேவ சமாதானத்தை அடையச் செய்து விடும்.
1. வார்த்தைகள் உயிர்ப்பிக்கும்
"அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." சங்கீதம் 119:50
நான் நோய்வாய்ப்பட்டு, என் வாழ்க்கை என்ன ஆகும் என்று கலங்கிய நேரத்தில் இந்த ஜீவ வார்த்தைகள் என்னை அதிகமாக மாற்றியது. அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்திருந்த என்னை உயிர்ப்பித்தது. 1983ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் நான் நினையாத எதிர்பாராதபடி எனக்கு இருதயபெலவீனம் வந்தது. கிறிஸ்மஸ் பண்டிகையின் முன் பகுதியாக பள்ளி விடுதியில் நடைபெற்ற இரவு விருந்திலே சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினேன். இரவில் என்னால் தூங்க முடியவில்லை. மருத்துவ நண்பர் ஒருவரை ஆலோசனைக்காக கூப்பிட்டேன். என்ன சாப்பிட்டாய் என்று கேட்டார். பிரியாணி சாப்பிட்டேன் என்றேன். அவர் இரண்டு டைஜீன் மாத்திரையைச் சாப்பிட்டு படுத்து விடு என்றார். அப்படி சாப்பிட்டும், துாங்கமுடியாத நிலையில் அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஐ.சி. யூனிட்டில் இருந்த எனக்கு மிகுந்த கவலையும் வருத்தமும் ஏற்பட்டது.
ஏற்கெனவே என் சொப்பனத்தில் ஒரு ஆவி என் மனக்கண்முன் வந்து என்னை இங்கிருந்து விரட்டி விட்டாயே, எங்கே போவது என்று கேட்டது. எங்கேயாவது போய் தொலை என்று கூறிவிட்டு படுத்தேன். என் உடல் சற்று நடுங்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, துாக்க மாத்திரை கொடுக்கப்பட்டு துாங்கிய நேரத்தில் மீண்டும் அதே உருவம் தோன்றியதால் இது என்ன என்று எனக்குக் கேள்வியாக மாறியது. அச்சமயத்தில் மணி என்ன என்று மனைவியிடம் கேட்ட போது, சரியாக இரவு 12 மணி என்றாள். இரவு 12 மணிக்குத்தானே இது வந்தது என்று சிந்திக்க ஆரம்பித்தேன். எனக்கு இருக்கும் பிரச்சனை வியாதியல்ல என்று என் மனைவியிடம் கூறினேன். அத்துடன் நான் மரித்தேனானால் என் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்று கலங்கினேன். 3 வயது, 7 வயது, 11 வயது சிறு பிள்ளைகளாயிருக் கிறார்களே, எப்படி என் மனைவி இவர்களை வளர்ப்பாள் என்று உடைந்து போன உள்ளத்துடன் தடுமாறினேன். இந்த உலகத்தில் நான் உயிருடன் வாழ்வதற்கு வழியே இல்லையா ? என்று நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோது, என் மனைவி என் அருகில் இருந்து வாசித்த வேதவாக்கியம் என்னைத் தொட்டது. சங். 91:10ம் வசனம் 'ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது' என்ற வார்த்தை என் காதில் விழுந்தவுடன், என் மனைவியைப் பார்த்து மீண்டும் அந்தப் பகுதியை வாசி என்றேன். அந்த வார்த்தைகள் நம்பிக்கை இழந்திருந்த என் வாழ்வில் புது நம்பிக்கையை உண்டாக்கியது. அதற்குக் கீழ்ப்படிந்தேன். அன்று முதல் எல்லாம் எனக்கு நீர்தான் என்று என்னையே கர்த்தருக்கு அர்ப்பணித்தேன். அத்துடன் போதகராக பணியாற்றின என் தகப்பனாரின் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தது. பட்டப்படிப்பு முடிந்தவுடன் வேதாகமக் கல்லுாரிக்குப் போய்படி என்றார்கள். நான் அதற்குத் தகுதியல்ல என்று கூறி மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் அந்தக் காரியம் என் நினைவுக்கு வந்தது. உடனே நான், கர்த்தாவே, எனக்கு உள்ள கடனை மூன்று ஆண்டுக்குள் தீர்த்துவிட்டு, என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியத்திற்கு வந்து விடுகிறேன் என்று என்னை முற்றிலும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தேன். எனக்குள் ஒரு மாற்றம் வந்தது. அந்த வார்த்தையின்படியே 1987ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதியுடன் பள்ளி வேலையிலிருந்து வெளியேறினேன். ஆவியும் ஜீவனும் நிறைந்த வார்த்தைகள் என்னை முற்றிலும் கர்த்தருக்காக வாழ மாற்றியது.
2. வெளிச்சமாயிருக்கிறது
''உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." சங்கீதம் 119:105
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்குப் பெரிய வெளிச்சமாக வந்தார் என்று ஏசாயா 9:2ல் பார்க்கிறோம். 'உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி' என்று யோவான் 1:9ல் காண முடிகிறது. வார்த்தையாக வெளிப்பட்ட இயேசு கிறிஸ்து நாம் நடந்து செல்லுகிற வழியிலே வெளிச்சமாய் இருக்கிறார். இன்று உலக மனிதர்களைப் போல, சகோதரனைப் பகைத்து இருளிலே நடக்கிறவர்க ளானால், பலவித பாடுகளையும், போராட்டங்களையும் சந்திக்க நேரிடும். ஆனால் வார்த்தையாக, வெளிச்சமாக வந்த இயேசு கிறிஸ்து நாம் செய்கிற எல்லாக் காரியங்களிலும் நமக்கு வெளிச்சம் தந்து, இடறி விழுந்து விடாதபடி நம்மைக் காத்துக் கொள்ளுகிறார்.
ஒருமுறை வேறுஒரு நாட்டில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டிருந்த சகோதரி ஜெபிக்க வந்தார்கள். என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார்கள். என் பிள்ளைகளும் ஒன்றன்பின் ஒன்றாக பிரிந்து போய் விட்டார்கள். நான் தனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று தன் போராட்டமான சூழ்நிலையைத் தெரிவித்தார்கள். அவர்களுக்காக நான் ஜெபித்த போது, கர்த்தர் கொடுத்த காட்சியின்படி, ஆலோசனை கூறினேன். உங்கள் வீட்டில் காலை எழுந்தவுடன் ஒரு உருவச் சிலைக்கு முன்பாக கண்ணை மூடி ஏதோ செய்கிறீர்கள், முதலாவது அந்த உருவச் சிலையைத் தூக்கி எறிந்து விடுங்கள் என்றேன். ஐயோ, அதனை 300 டாலர் கொடுத்து வாங்கினேன் என்றார்கள். ஆனாலும் அதன் நிறமாகிய ரோஸ் கலர் என்று கூறியிருந்தபடியால் அவர்களில் விசுவாசம் பெருகி, வீடு சென்றவுடன் அதனை அகற்றி விட்டார்கள். சில நாட்கள் கழித்து அதே பகுதியில் ஊழியம் செய்யச் சென்றபோது, அந்தச் சகோதரி மிகுந்த உற்சாகத்துடன் தன் கணவரும், இரண்டு ஆண் மக்களும் வந்து விட்டார்கள் என்று கூறினார்கள். அவர்களுக்குள் மிகுந்த சந்தோஷம் இருந்தது. நீங்கள் சொன்ன அந்த ரோஸ் கலர் உருவச்சிலையைத் தூக்கி எறிந்து விட்டேன். அத்துடன் அறியாமையின் செயலுக்காக நான் கர்த்தரிடம் பாவ அறிக்கை செய்கேன் தான அறிக்கை செய்த அடுத்த தினமே என் இடைய கேன் எந்தா தமிகள் மூத்த மகனும், பின்னர் என் கணவரும் வந்து சேர்ந்தார்கள். நாங்கள் ஒருமித்து வாசம் பண்ண நீங்கள் கூறிய கர்த்தரின் ஆலோசனைக்கு நன்றி என்று கூறினார்கள். வேத வசனம் அவர்கள் நடந்து சென்ற தனிமை, வெறுமை என்ற பாதையில் வெளிச்சம் தோல் பிரிவினையி காரியத்தை அகற்றியபடியால், சமாதானம் சந்தோஷம் ஏற்பட்டது.
வேதவசனம் நம் பாதையில் உள்ள குறை, குற்றங்களை, தவறுகளைச் சுட்டிக்காட்டி நல் வழிநடத்துகிறதாய் இருக்கிறது.
3. வசனத்தினால் குணமடைகிறோம், அழிவுக்கு விலக்கிக் காக்கப்படுகிறோம்
"அவர் தமதுவசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்." சங்கீதம் 107:20
அனுதின வாழ்வில் நாம் பலவிதமான செய்தியினாலும், நிகழ்ச்சியினாலும் சோர்ந்தும், கலங்கியும் விடுகிறோம். சில சொப்பனங்கள், தரிசனங்கள் தோன்றும்போது நாம் மிகவும் வேதனை யடைகிறோம், திகிலடைகிறோம். தானியேல் தான் கண்ட தரிசனத்தினால் 'சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்' என்று தானி. 8:27ல் பார்க்கிறோம். இன்று இவ்விதமான வியாதியிலிருந்து, கர்த்தர் தம்முடைய வசனத்தை அனுப்பி குணமாக்குகிறார். பயத்தினால் உண்டாகும் சகல கேடு பாடுகளுக்கும், வேதனைகளுக்கும் நம்மை விலக்கிக் காக்கிறார். இந்த ஆறுதலின் வார்த்தைகள், நம் குறைகளினால், கவலைகளினால் உண்டான உடைந்த உள்ளத்தைத் தேற்றுகிறதாக இருக்கிறது. நம்மைத் திடப்படுத்தி புது பெலனடையச் செய்கிறது. ஆகவே இந்த வார்த்தைகளினால் நாம் நம் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் சுகமும், பெலனுமடைந்து மகிழ்ச்சியுடன் நம் பணிகளை, காரியங்களைச் செய்ய முடிகிறது. என்ன செய்வது? இனி வழியே இல்லை, மரணம் தான் நல்ல முடிவு என்று பிசாசு கொண்டு வருகிற வீணான சிந்தையிலிருந்து விடுவித்து, நல் நம்பிக்கையூட்டி நன்கு வாழ வழி செய்கிறது. இன்று அநேகர் ஜீவனைத்தரக்கூடிய வசனம் இல்லாது, தங்கள் வாழ்க்கையைத் தவறான விதத்தில் முடித்துக் கொள்ளு கிறார்கள். சிலர் தவறான காரியங்களைச் செய்ய துணிகா மடைகிறார்கள். இந்தக் கர்த்தரின் வார்த்தை நம்மை அனுதினமும் தேற்றி, முற்றிலும் மகிழச் செய்கிறது.
ஒருமுறை ஒரு குடும்பத்தார் என்னிடம் வந்து, குழந்தை பிறந்து இறந்து விட்டது, இனி குழந்தை பெருவதற்குரிய சாத்தியம் உங்களுக்கு இல்லை. வேண்டுமானால், குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சோதித்த மருத்துவர் கூறிவிட்டார். என்ன செய்வது என்று கேட்டார்கள். கர்த்தர் உங்கள் சந்ததியை ஆசீர்வதிப்பார். இரண்டு விதமான பூக்கள், கொடியில் மலர்கிறதைப் பார்க்கிறேன். ஆகவே உங்களுக்கு இரண்டு கர்ப்பத்தின் கனிகள் உண்டு. காத்திருந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். கர்த்தர் அவர்களைக் குணமாக்கினார். புது பெலனடைந்தார்கள். இரண்டு பிள்ளைகள் பிறந்து மகிழ்ச்சியுடன் கர்த்தருக்காக ஊழியம் செய்கிறார்கள்
இந்த ஜீவ வார்த்தைகள் நம்மைக் குணமாக்கி, அழிவுக்கு விலக்கி, நாம் பெற வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள நம்மை முழுமையாக நடத்துகிறது.
4. நம்மை பரிசுத்தமாக்கும் வசனங்கள்
"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." யோவான் 17:17
இந்த வேத வசனங்கள், பலவிதங்களில் ஆசீர்வாதமாக இருப்பதுடன், நம்மை பரிசுத்தமாக்குகிறதாய் இருக்கிறது. அநேக நேரத்தில் இந்த வசனங்களைத் தியானிக்கக் கூட முடியாது போய் விடுகிறது. இந்த வசனத்தைக் கேட்கலாம் என்றால் சத்துருவாகிய பிசாசானவன் அதைத் தந்திரமாய் தடை செய்து விடுகிறான். இந்த வார்த்தைகள், பிசாசின் சோதனையை முறியடிக்கும் வல்லமையான, பட்டயமாக இருக்கிறது. அவனுடைய சோதனையில் விழுந்து நாம் பாவம் செய்யாதிருக்க, நமக்குள் கிரியைச் செய்கிறதாய் இருக்கிறது. சங்.119:11ல் 'நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்' என்று சொல்லி யிருப்பதைப் பார்க்கிறோம். ஆகவேதான் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளை நம் இருதயமாகிய சதையான பலகைகளில் தமது ஆவியானவரால் எழுதி வைக்கிறார். 'நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே' என்று 1பேதுரு 1:16ல் பார்க்கிறோம். 'நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது' என்று 1 தெச. 4:3ல் பார்க்கிறோம். இவ்விதமாக நம் வாழ்வில் பரிசுத்தத்தை எதிர்ப்பார்க்கிற அன்பின் பரிசுத்த தேவன், தமது சத்தியமாகிய வார்த்தையினால் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார். இந்த வல்லமையான வார்த்தைகள், நம் பாவங்களை உணர்ந்து, கர்த்தரிடம் ஒப்புரவாக நம்மை வழி நடத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை சுத்திகரிக்கிறது. அத்துடன் ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, (1பேதுரு 1:2) பரிசுத்தமடைந்து கர்த்தரின் ஆசீர்வாதத்தை, அன்பை, அவர் அருளும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள தகுதியடைகிறோம். தேவனுடைய வார்த்தை நம்மைச் சுத்திகரிக்கிறது.
II. ஞானத்தைத் தருகிறார்
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்." நீதிமொழிகள் 2:6
இன்று நம்முடைய வாழ்வில் அனுதின காரியங்களைச் செய்ய, வேலைகளைச் செய்ய ஞானமானது மிகுதியாக அவசியமாக இருக்கிறது. ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள் என நீதி. 3.13ல் பார்க்கிறோம். ஞானமானது நம்முடைய எல்லாக் காரியங்களிலும் வெற்றியைத் தந்து நம்மை மேன்மையாக்கும். இன்று ஞானத்தில் குறைவுடையவன் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாத வருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது.
1.ஞானம் நம்மை உயர்த்தும்
"...உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின் படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்..." ஆதியாகமம் 41:39,40
தன் சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு, செய்யாத குற்றத்திற்குச் சிறைச்சாலை தண்டனை அடைந்தவன். தேவன் அருளிய விசேஷித்த சொப்பனங்களை அறிந்து, அதின் அர்த்தத்தை அறிவிக்கும் கிருபை பெற்றவன். தன்னைப் பாவ சோதனைக்கு விலக்கிக் காத்துக்கொண்டவன். கர்த்தருக்கு மிகவும் பயந்தவன். துணிகரமான பாவங்களுக்குத் தன்னை ஒப்புக் கொடாதவன். இவ்விதமாக வாழ்ந்த யோசேப்பு உண்மையாயும், மற்றவர்கள் துக்கத்தைப் புரிந்து, அதைத் தன்னுடைய தாலந்து களினாலும், தேவ கிருபையினாலும், வரங்களாலும் நீக்குவதற்குத் தன்னை அற்பணித்தவன். பானபாத்திரக்காரனின் தலைவன், யோசேப்பிடம் தன் சொப்பனத்தைக் கூறினான். அதின் அர்த்தத்தைத் தெரிவித்தான். அத்துடன் உயர்ந்திருக்கும்போது, தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். பானபாத்திரக்காரன் கண்ட சொப்பனத்தின்படி பார்வோன் அவன் தலையை உயர்த்தினான். உதவிபெற்றவன் யோசேப்பை மறந்து போனான்.
அதினதின் காலத்தில் ஏற்றவைகளை நமக்குச் செய்கிற தேவன், தமது திட்டத்தை நிறைவேற்ற பார்வோனுக்குச் சொப்பனம் தந்தார். கலங்கின பார்வோனுக்கு, அதின் அர்த்தத்தைக் கூறினதுடன், அதற்குப் பார்வோன் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் கூறினான். தேசம் பஞ்சத்தில் அழிந்து போகாதபடிக்கு, முன்னுள்ள செழிப்பான காலத்தில் தானியத்தைச் சேர்த்து வைக்கும்படி சொன்ன காரியம், பார்வோனுக்கும் அவனது ஊழியக்காரர் பாரர்வைக்கும் நன்றாய்க் கண்டதால் ஏற்றுக்கொண்டார்கள். யோசேப்பு இவ்விதமாக வருங்காலத்து சொப்பனத்தைத் தெரிவித்த ஞானவானாக இருந்தபடியால், அவனை அவனுக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தி, அந்தக் காரியத்தைச் செய்ய அதிகாரியாக்கினான். கர்த்தரும் யோசேப்புக்கு 13 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த சொப்பனத்தின்படி, அவனை உயர்த்தினார். அவர் அருளிய ஞானத்தினால் மேன்மையும் மகிழ்ச்சியும் அடைந்தான்.
2. ஞானம் உன்னை சிறந்தவனாய் மாற்றும்
"சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்த தாயிருந்தது.''1 இராஜாக்கள் 4:30
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் இராஜாவானான். அவன் கர்த்தரிடம் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளின்படி நடந்தான். சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலியைச் செலுத்திய நாளின் இரவில்,சொப்பனத்தில் நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். என் தேவனாகிய கர்த்தாவே, என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்குவரவு அறியாத சிறு பிள்ளையாயிருக்கிறேன். ஆகவே இத்தனை திரளான ஜனங்களை நியாயம் விசாரிக்க அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும் என்று கேட்டான். கர்த்தருடைய சமுகத்தில் அவனுடைய விண்ணப்பம் உகந்ததாய் இருந்தபடியால், கர்த்தர் ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை அவனுக்குத் தந்தார். தேவன் அருளிய ஞானம் சாலொமோனுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.
3. ஞானம் உன்னைப் பிரகாசிக்கச் செய்யும்
"ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்கு முள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்." தானியேல் 12:3
நாம் ஞானவான்களாய் மாறும்போது, இந்த மேன்மையான உன்னத நிலையடைகிறவர்களாய் இருக்கிறோம். நமக்குள் நம் தேவன் ஞானத்தைச் சம்பூரணமாய்த் தந்து ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார். நாம் விசுவாசத்துடன் அவரிடம் கேட்கும்போது, நம்மை மேன்மைப்படுத்தும் இந்த ஞானத்தைக் குறைவில்லாமல் தருகிறார். நம் வாழ்வில் ஞானத்தைப் பெறுவதற்குத் தகுதியடைய வேண்டுமானால், முதலாவது கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் தேவை. சங். 111:10ல் 'கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்...' என்று பார்க்க முடிகிறது.
இன்னும் நாம் கர்த்தரின் வழியில் நடந்து, அவருடைய கல்வாரி அன்பினால் நிரப்பப்பட வேண்டும். அந்தக் கிறிஸ்துவின் அன்பு, அழிந்து கொண்டு இருக்கும் மக்கள் மீது கரிசனை கொண்டு, அவர்களுக்குக் கர்த்தரின் ஜீவ வார்த்தைகளைக் கொண்டு செல்ல முடியும். பவுல் 2 கொரி. 5:14ல் 'கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது...' என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். கர்த்தரின் வார்த்தைகள் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமா யிருக்கிறது . இந்த வார்த்தையினாலும், அவர் அருளும் வல்லமையினாலும், ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கென்று சொந்தமாக்குகிறோம். இந்த ஆத்தும ஆதாயம் செய்கிறவர்கள், வான மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல் என்றும் பிரகாசிப்பார்கள்.
III. கர்த்தர் நன்மைகளைத் தருகிறார்
"கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்." சங்கீதம் 85:12
இன்று நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடையவர்களுக்கு நன்மையான தைத் தருகிறார். ஒரு நின்னை குறைவுபடான நத வாழ்க்கையைக் கிறிஸ்து இயேசு நமக்குத் தந்து, என்றும் நம்மை நடத்துகிறவராக இருக்கிறார். அனுதின வாழ்வில் இந்த நன்மைகள் நமக்குத் தேவையாக இருக்கிறது.
1. பாதுகாவலை அருளும் நன்மை
"உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்."சங்கீதம் 31:19,20
இன்று பொறாமை நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பொறாமை போட்டியாக மாறி பலவிதமான, தவறான, தந்திரமான, மந்திரமான காரியத்தினால் தாங்கள் மிகுந்த செழிப்படையச் செயல்படுகிறார்கள். விற்பனைக் காரியங்களில் இது மிகுதியாகப் பெருகிப் பொறாமையினால் நன்றாக செயல்படுகிற வியாபாரம், தொழில் நஷ்டமடைய பல தீய மறைவான கண்ணிகளை வைக்கிறார்கள். "அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்' என்று சங். 64:5ல் பார்க்கிறோம். கர்த்தருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயு மிருக்கிறது. யார் யார் கர்த்தரை நம்புகிறார்களோ அவர்களின் வாழ்வில் பாதுகாவலின் நன்மையை அருளி ஒன்றும் சேதப்படாதபடி காக்கிறார். 'உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.' என்ற ஏசாயா 26:3ன் வாக்கு நிறைவேறும்.'
2. குறைவுபடாத வாழ்வைத் தரும் நன்மை
"சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது." சங்கீதம் 34:10
இன்று மனிதன் தான் தேடுகிற காரியத்தினால் குறைவுபடாது செழிப்பும், சிறப்புமடைய விரும்பி பிரயாசப்படுகிறான். அவனது வாழ்வில் தன் மாம்சமானதை புயபலமாக்கிக் கொண்டு, அவன் காரியங்களில் வெற்றி பெற பாடுபடுகிறான். ஆனால் நாம் கர்த்தரைத் தேடும்போது, எந்தவிதமான குறைவுமின்றி வாழ்வதற்கு கர்த்தர் கிருபை புரிவார். அவரைத் தேடுகிறவர்களைக் கைவிடாத தேவன் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார்.
கேன்சர் நோயினால் பாதிப்படைந்த ஒரு குடும்பத்திற்கு 9 ஆண்டுகளாயும் குழந்தையில்லை. மருத்துவர் சிகிச்சையின்போது, உங்கள் கர்ப்பப்பையை எடுத்துவிட வேண்டும் என்று கூறிவிட்டார். கலங்கினார்கள். ஆலோசனைக்காக வந்த போது, கர்த்தரை முழுமனதுடன், ஒருமனதுடன் தேடுங்கள். கர்த்தர் செய்யும் நன்மையைக் காண்பீர்கள் என்றேன். உண்மையாய்த் தேடினார்கள். அவர்களின் 36ம் ஆண்டில் ஒரு பெண்குழந்தையைக் கர்த்தர் கொடுத்தார். அத்துடன் சுகத்தையும் கொடுத்தார். தேடும்போது குறைவுபடாத வாழ்வைத் தருவார். இன்றே அவரை முழுமனதுடன் தேடி ஆசீர்வதிக்கப்படுவோமாக.
3. நன்மையை அருளி சந்தோஷப்படுத்துவார்
'....இந்த நன்மைகளுக்காக ஒடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்து போவதில்லை. அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங் கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்." எரேமியா 31:12,13
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருளும் நன்மையானது ஆவிக்குரியதாயும், இவ்வுலக செல்வத்தையும் உள்ளடக்கியதாகும். கோதுமை, திராட்சரசம், எண்ணெய் என்பது வார்த்தை,வரங்கள், அபிஷேகமாகும். ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பது இவ்வுலகத்தின் செல்வத்தைக் குறிப்பதாகும். அவரிடம் நாம் வரும்போது, இவ்விதமான காரியங்களை நிறைவாய்த் தந்து நம்முடைய துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிவிடுவார். அத்துடன் கடந்த கால வாழ்வில், குறைவுகளினால் உண்டாக காயங்களையும், கசப்புகளையும் நீக்கி நம்மைத் தேற்றுவார். அத்துடன் நமது எல்லாவித சஞ்சலத்தையும் நீக்கி சந்தோஷத்தால் நிறைத்து விடுவார்.
இவ்விதமான சகல நன்மைகளினாலும் நாம் நிறைந்து, நன்மை செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் குணமாக்கப்பட்டவர்களாகி ஆசீர்வதிக்கப்படுவோமாக.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில்,
சகோ. C. எபனேசர் பால்.