"...அவரை (இயேசுவை) மரண ஆக்கினைக்குட்படுத்தி,
                                                                                             சிலுவையில்
அறைந்தார்கள்."
                                                                                                                                                     லூாக்கா 24:20

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார், மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற சத்தியத்தை வேதத்தின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. இதனை உலகமனைத்தும் உயிர்த்தெழுந்த திருநாளாக ஈஸ்டர் என்று கொண்டாடுகிறோம். சர்வவல்லவராக, சர்வ அதிகாரமுடையவராக, தேவனுடைய குமாரனாக இவ்வுலகிற்கு இயேசு கிறிஸ்து வந்தார். அவரை தேவக்குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாத வர்களும், அவரின் அற்புத அடையாளங்களைக் கண்டு பொறாமை கொண்டவர்களும், அவருக்குள் தேவன் அருளிய அதிகாரங்களை நம்பாதவர்களும், நம்மை இரட்சிக்க வந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தார்கள்.

நம்முடைய வாழ்க்கையிலே பலவித நன்மையான காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார். நித்தியமான நீதியின் காரியங்களை அவர் நமக்குச் சிலுவையிலே செய்து முடித்திருக்கிறார். சிலுவையின் மரணம் பாடும், வேதனையும், நிறைந்தது. அன்று குற்றவாளிகளைக் கொல்வதற்கு இந்தச் சிலுவை மரணம் நியமிக்கப்பட்டிருந்தது. இவ்வித மரண ஆக்கினையை இயேசு கிறிஸ்து சகித்து, நமக்குப் பிசாசின் மீதும், மரணத்தின் மீதும் ஜெயம் கொள்வதற்கு வழியை உண்டுபண்ணி யிருக்கிறார். தம்முடைய ஒரே பேரான குமாரனாலே நாம் பிழைத்திருக்கும் படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதால், தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. உலகத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்க்க அல்ல, உலகத்தாரை மீட்பதற்கு இயேசு கிறிஸ்து இவ்வுலகில் உலக இரட்சகராக அனுப்பப்பட்டார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து தேவ சித்தத்தின்படி சிலுவைபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். சிலுவையில் அறையப்படும் முன்பாக கெத்செமனே என்னும் தோட்டத்தில் பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று பிதாவை நோக்கி வேண்டின காரியத்தினால் தேவ சித்தத்தின்படி, அனுதினமும் அவருக்குள் அவரைக் கொண்டு நம் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கற்று அறிந்து கொள்ள முடிகிறது. அவர் சிலுவையில் பாடுகளோடு தொங்கிக் கொண்டிருந்த போது எல்லா நிந்தைகளையும், தூஷணங்களையும் சகித்தார். ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் பல ஆயிரம் துாதர்கள் வந்து அவரை விடுவித்திருக்கக்கூடும். ஆனால் இயேசு கிறிஸ்துவோ, பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று அவர்களின் மன்னிப்பிற்காக ஜெபித்ததைப் பார்க்கிறோம். நன்மை செய்கிறவராய்ச் சுற்றித் திரிந்த இயேசு கிறிஸ்து, ஜெபிக்க வேண்டிய முகாந்தரத்தைப் போதித்த இயேசு கிறிஸ்து, அதைத் தன் வாழ்க்கையில் பாடுகளின் மத்தியில், நிறைவேற்றினதைப் பார்க்க முடிகிறது. தாம் சொன்ன உபதேசங்களைச் சிலுவை மரத்திலே நாம் கற்று அறிந்து கொள்ள வேண்டும் என்று செய்து முடித்தார். தன் ஜீவனையும் பிதாவின் கையில் ஒப்புக் கொடுத்தது நமக்கு ஒரு மாதிரியாக அமைந்துள்ளது. அவர் சிலுவையிலே நமக்காக என்னென்ன செய்து முடித்துள்ளார் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமாயிருக்கிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையிலே எவைகளையெல்லாம் சுமந்து தீர்த்தார்?

1) நம் பாவங்களைச் சிலுவையிலே சுமந்து தீர்த்தார்

''நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்..." 1 பேதுரு 2:24

பாவமானது நமக்கும், தேவனுக்கும் பிரிவினையை உண்டாக்குகிறது. ஆதி மனிதன் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்து மீறினபடியால், தேவ சாயலை இழந்து, தேவனுடைய மகிமையை இழந்தான். தேவனோடு சஞ்சரித்தவன், தேவ சமுகத்தை விட்டு துரத்தப்பட்டான். பாவமானது நமக்கும் தேவனுக்கும் பிரிவினையை உண்டாக்கி பலவிதமான பாடுகளுக்கு, போராட்டங்களுக்கு, வேதனை களுக்கு நம்மை உட்படுத்துகிறது. பாவத்தின் சம்பளம் ஆத்துமாவில் மரணமாயிருக்கிறது. பாவத்தினால் தேவனுடைய உறவை இழந்து, தீங்கை அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை தோன்றியது. தேவ சாயலை இழந்து, மரணமும், வேதனையும் நிறைந்து, பாவத்துக்கும், சாபத்துக்கும் ஆளான நம்மை, தேவன் நம்மீது வைத்த அன்பினால், குமாரனாகிய இயேசுவை, பாவத்தை நிவர்த்தியாக்கும் கிருபாதார பலியாக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். மத்தேயு 1:21 ல் “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்..." என்று பார்க்கிறோம்.

பாவமானது நம்மை நித்திய நரக ஆக்கினைக்குள்ளாகக் கொண்டு சென்று விடும். இவ்விதமாய் மனிதன் செய்த எல்லாப் பாவங்களையும் மன்னித்து, நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்காக இயேசு கிறிஸ்து தேவ சித்தத்தின்படி நம்முடைய பாவங்களையெல்லாம் ஈனச் சிலுவையிலே சுமந்துத் தீர்த்தார். அவர் சிலுவையில் நமக்காக சிந்திய இரத்தம், நம் பாவங்களைக் கழுவி நமக்குள் துாய வாழ்வை உருவாக்குகிறதாய் இருக்கிறது. பாவச் சேற்றில் உழன்று கொண்டிருக்கிற சகோதரனே/சகோதரியே, உன் பாவங்களின் நிமித்தம் சமாதானத்தை இழந்து சந்தோஷத்தை இழந்து இரவிலும் துாங்க முடியாது தவித்துக் கொண்டிருக்கிற உன் வாழ்க்கையைத் துாய்மைப்படுத்தி, அவரோடு ஒப்புரவாக்கிக் கொள்ள அவர் விரும்பி, சிலுவையில் பாடுபட்டார். இன்று நம் பாவங்களை உண்மையாய் அறிக்கை செய்வோமானால், நம்மை அர்ப்பணிப்போமானால், நம் பாவங்களை எல்லாம் மன்னித்து நமக்குப் புதிய வாழ்வைத் தருகிற இயேசு கிறிஸ்து உண்மையுள்ளவராய் இருக்கிறார். பாவத்தினாலே கொடூரமான வியாதிகள் நமக்குள் தோன்றி விடுகிறது. மனிதன் சிந்தையினாலே, உணர்வினாலே, செய்கையினாலே, வார்த்தையினாலே, பார்ப்பதினாலே, கேட்பதினாலே பாவத்தைச் செய்கிறவனாய் இருக்கிறான். பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை உடையவராக இயேசு கிறிஸ்து இன்று இருக்கிறார்.

ஒரு திமிர்வாதக்காரனை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள். திமிர்வாத வியாதி சரீரத்தை அதிகமாகப் பாதிக்கின்ற ஒரு வேதனையான நோய். இயேசு கிறிஸ்து அந்த மகனுடைய பாவங்களை மன்னித்தார். அதனால் அவன் சுகம் பெற்று, படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து சென்றான். இன்று அநேகருடைய வாழ்க்கையிலே பாவம் ஆண்டுகொண்டிருப்பதால் திமிர்வாதக்காரனைப் போல, மற்றவர்களின் உதவியைத் தேடுகின்ற நிர்ப்பந்த நிலை ஏற்படுகிறது. ஆனால் பாவத்தை இயேசு கிறிஸ்து மன்னிக்கும்போது பாவத்தினால் வந்த அத்தனை வேதனைகளும் பாடுகளும் நீங்கி விடும். ஆகவே தான் ரோமர் 4:7,8லே 'எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்' என்றும் 'எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்' என்றும் தாவீது சொன்ன வார்த்தைகளைக் குறிப்பிட்டு இருப்பதைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து பாவத்தை மன்னிக்கும்போது, பாவம் நீங்கிய நல்வாழ்வும், இரட்சிப்பின் சந்தோஷமும், நிலைவரமான ஆவியும் நம்மை ஆண்டு நடத்துவதைப் பார்க்க முடியும். இந்த உலகத்தினுடைய ஆசாபாசங்கள் நம்மை மேற்கொள்ளாது வாழக்கூடிய வாழ்வைப் பெற்றிடுவோம். அத்துடன் பாவத்தைச் செய்யாதபடி திடமனதை நாம் பெற்றிடுவோம். பாவங்கள் மன்னிக்கப்பட்ட புது வாழ்வு நமக்குள் வரும்போது மகிழ்ச்சியும், மேன்மையும் உண்டாகி விடும். இந்தப் புதிதான பெரிதான வாழ்வை நமக்குள் உருவாக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவை சுமந்தார், சிலுவையில் அறையப்பட்டார். இப்பொழுது இருக்கிற பொல்லாத இப்பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி, நம் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காக, தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுத்தார்

2) சிலுவையிலே சாபங்களைச் சுமந்தார்.

"மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழதியிருக்கிற படி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." கலாத்தியர் 3:13

இன்று சாபமானது மனிதனின் வாழ்க்கையை மிகுந்த சஞ்சலத்தினாலும், கசப்பினாலும் நிறைத்து விடுகிறது. ஆதிமனிதன் ஆதாம் பாவம் செய்த போது. பூமியானது சபிக்கப்பட்டது. முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும் என்ற நிலை உருவானது. அத்துடன் நெற்றி வேர்வை சிந்தும்படியாக அவனது பாடுகள் பெருகி, உழைத்துச் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது. இவ்விதமாக பூமியில் சாபம், மனிதனுடைய கையின் பிரயாசத்தில் சாபம், பிள்ளைபெறும் போது வேதனைகள் பெருகும் என்கிற சாபம் பூமியில் தோன்றிது. சாபமானது இவ்வுளவு என்று அளவிடமுடியாத ஒரு காரியம். சில சாபங்கள் சஞ்சலத்தைப் பெருகச் செய்வதோடு, ஏன் இந்த வாழ்க்கை என்ற கசப்பையும் கொண்டு வந்து விடுகிறது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கும் போது வரும் சாபங்கள், எங்கள் மீதும், எங்கள் சந்ததியின் மீதும் வருவதாக என்று ஜனங்கள் ஏற்றுக்கொண்டபடியால், இன்றும் யூதர்களின் நாடாகிய இஸ்ரவேலில் பாடுகளும், பிரச்சனைகளும், யுத்தங்களும் இருப்பதைப் பார்க்கிறோம்.

ஏன் சாபம் வருகிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

சீரிய தேசத்து படைத் தலைவனாகிய நாகமான், குஷ்டரோகியா யிருந்தான். நல்ல வீரனாய் இருந்தபோது அவனது சரீரத்தில் குஷ்டரோகம் வந்தது. அடிமையாய் வந்த சிறுமி, தேவ ஊழியராகிய எலிசாவிடம் போனால் அவ்வியாதி நீங்கும் என்று கூறின வார்த்தையினாலே எலிசாவைச் சந்திக்கச் சென்றான். எலிசா அவனைப் பார்க்காதபடியே யோர்தான் நதியில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு என்று கர்த்தருடைய ஆலோசனையை நாகமானுக்குக் கொடுத்தான். நாகமானின் உள்ளத்தின் எண்ணங்கள் வித்தியாசமாக இருந்தது. தன்னைத் தொட்டு சுகமாக்குவார் என்று எண்ணியிருந்த நாகமானுக்கு அந்த ஆலோசனை அதிர்ச்சியாக இருந்தாலும், உடன் வந்த அவன் ஊழியக்காரரின் வற்புறுத்துதலுக்கு இணங்கி, யோர்தானில் ஏழுமுறை ஸ்நானம் பண்ணினான். அவ்வாறு அவன் செய்தபோது, அவன் சரீரத்தில் இருந்த குஷ்டரோகம் நீங்கி, சிறுபிள்ளையினுடைய சரீரம்போல் மாறினது. ஆகவே நாகமான் தேவ ஊழியர் எலிசாவைப் பார்த்து காணிக்கை கொடுக்கும்படி வந்தான். எலிசாவோ காணிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைக் கண்ட எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி, நாகமான் சென்ற பின், நாகமானிடத்தில் சென்று, எலிசாவின் பெயரிலே பொய்யைக் கூறி, மாற்று உடைமைகளையும், ஒரு தாலந்து வெள்ளியையும் கேட்டான். நாகமான் இரண்டு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்று வஸ்திரங்களையும் கொடுத்து, அவைகளைச் சுமந்து செல்ல இரண்டு வேலைக்காரரையும் அனுப்பினான். இந்தக் கேயாசி வெள்ளியையும், வஸ்திரங்களையும் அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து விட்டு, அந்த மனுஷரை அனுப்பி விட்டான். பின்பு தன் எஜமானுக்கு முன்பாக வந்து நின்றபோது, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான். அவனது உண்மையற்ற செயலினால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்ற சாபத்தைப் பெற்றான். உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டு விலகிப்போனான். உண்மையற்ற வேலைக்காரனாய் இருந்தபடியால், கேயாசியின் வாழ்விலும் அவன் சந்ததியிலும் குஷ்டரோகம் வந்தது.

இன்று நம்முடைய வாழ்க்கை தேவ சமுகத்திலே உண்மை யுள்ளதாய் இருக்க வேண்டும். தானியேல் உண்மையுள்ளவனாய் இருந்த படியினால் சிங்கங்களின் கெபியில் போட்டாலும், சிங்கங்கள் அவனைச் சேதப்படுத்தாதபடி கர்த்தர் அவனைக் காத்துக்கொண்டார். நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்போது, கர்த்தர் நம்மை மேன்மைப் படுத்துவார். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தான். அதனால் கர்த்தர் அவனை மேன்மைப்படுத்தினார். இன்று நாமும்கூட உண்மையாய் இருந்து சாபங்களுக்கு விலக்கிக் காக்கப் படுவோமாக.

இன்னும் வேதத்தை ஆராயும்போது ஆகான் என்பவனை யோசுவா 7ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். ...ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.' என்று யோசுவா 7:20,21ல் ஆகான் கூறுவதைப் பார்க்கிறோம். யோசுவா ஆட்களை அனுப்பி, அவைகளை எடுத்துவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள். இஸ்ரவேலரெல்லாரும் ஆகானையும் அவன் குடும்பத்தாரையும் கல்லெறிந்து, அக்கினியால் சுட்டெரித்து, கற்களினால் மூடினார்கள்.

சாபத்தீடான பொருள்களை இச்சித்து எடுத்தபடியால் சாபமாக அவனும் அவன் குடும்பத்தாரும் கல்லெறிந்து, அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டார்கள். இச்சைக்கு இடம் கொடுப்பதால் சாபங்கள் தோன்றுகிறது. இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையிலே நமக்காக சாபமாகி, நம் வாழ்வின் எல்லா சாபங்களுக்கும் நம்மை விலக்கிக் காத்திருக்கிறார். இன்று நாம் சிலுவையின் மேன்மையை உணர்ந்து நம்மைத் தாழ்த்துவோம். அவருக்கென்று வாழ நம்மை அர்ப்பணித்து, சகல சாபங்களுக்கும் விலக்கிக் காக்கப்படுவோமாக.

3. சிலுவையிலே துக்கங்களைச் சுமந்தார்

"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்..."ஏசாயா 53:4

இன்று நம்முடைய வாழ்க்கையிலே பல காரணங்களால் துக்கமும் துயரமும் வருகிறது. அதினால் துன்பத்தையும், சமாதானக்கேட்டையும் பெருகச் செய்து, என்ன செய்வது என்று நம்மைத் தடுமாறச் செய்கிறது. துக்கம் அதிகரிப்பதினால் இரவு துாங்க முடியாதபடி தவிக்கிற மக்கள் ஏராளம். இவ்வாறாக துக்கம் மனிதனின் வாழ்க்கையை வேதனைப்படுத்தி பல பாடுகளைப் பெருகச் செய்கிறது. 1 நாளா. 4:9ல் யாபேஸ் தன் தாய் தன்னைத் துக்கத்தோடே பெற்றாள் என்று பிறப்பிலிருந்தே துக்கப்படுகிறதைப் பார்க்கிறோம். ‘...தீங்கு என்னைத் துக்கப்படுத்தாத படிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்' என்று 1நாளா.4:10ல் யாபேஸ் கேட்டதைப் பார்க்கிறோம். சரீரத்தில் உண்டான வேதனையான நோய்களினால் நாள் முழுவதும் துக்கத்துடன் வாழ்கிற மக்கள் உண்டு. ஈசாக்கு மரித்த தன் தாய்க்காக துக்கப்பட்டான் என்று பார்க்கிறோம். சில இடங்களில் நான் பேசாதவன்போல் இருந்தாலும் என் துக்கம் அதிகரித்தது. என்னுடைய பெலத்தினாலோ, என்னுடைய அனுபவத்தினாலோ பல காரியங்களைச் செய்தாலும், அதன் முடிவோ என்னைத் துக்கப்படுத்தியது என்று பலர் கலங்குவதைப் பார்க்கிறோம். 'உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்' என்று பார்க்கிறோம். அதினிமித்தமாக கையிட்டுச் செய்கிற காரியத்தின் பலனைச் சேர்க்கும்போது அது துக்கமாயிருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் துக்கம் மனிதனில் பெருகும்போது, ஆவியின் முறிவை உண்டாக்குகிறது. ஆவியின் முறிவினாலே மிகுந்த போராட்டமான மனநிலையை அடையச் செய்கிறது. இந்த ஆவியின் முறிவினாலே எப்பொழுதும் எந்தக் காரியத்தையும் நலமாய்ச் செய்ய முடியாதபடி தடுமாறுகிற வேதனையின் வாழ்வை உருவாக்குகிறது. இது தோல்வியைப் பெருகச் செய்து, இன்னும் அதிகமான துக்கத்தைப் பெருகச் செய்து விடுகிறது.

தாவீது சங்கீதம் 31:9ல் 'துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று' என்று தன் வேதனையின் நிலையைக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இவ்விதமாய் நம் வாழ்க்கையிலே நஷ்டம், தோல்வி வரும்போது துக்கம் பெருகி, கசந்த வாழ்க்கையை உண்டாக்கி, ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணுகிற எண்ணத்தைப் பெருகச் செய்கிறது. சிலருடைய குடும்ப வாழ்க்கையிலே கணவரின் செயலினாலே துக்கம் பெருகி விடுகிறது. அது குடும்பப் பிரிவினையை உண்டாக்கி விடுகிறது. இன்னும் சிலருடைய வாழ்க்கையிலே துக்கத்தின் மிகுதியினால் தற்கொலை செய்து விடுகிறார்கள். இதைப் போல பிள்ளைகளின் வாழ்விலும் எதிர்பார்த்த ஆசிர்வாதங்கள் வராதபடியினால் மிகுதியான துக்கமும் துயரமும் அடைகிறோம்.

'அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை. அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்' என்ற எரே. 31:12, 13ன் படி நம்முடைய தேவன் நமக்கு நன்மையான காரியங்களை அருளிச் செய்து நம் துக்கத்தை யெல்லாம் சந்தோஷமாக மாற்றுவேன் என்று வாக்கருளியுள்ளார். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்' என்று யோவான் 16:20ல் இயேசு கிறிஸ்து கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து இவ்வுலகில் முழுமையான, உண்மையான மாற்றத்தை உருவாக்கி, நமக்குள் மகிழ்ச்சியைப் பெருகச் செய்ய வல்லவராக இருக்கிறார். இருண்டு போன வாழ்வை ஒளிமயமாக மாற்றுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம் வாழ்விலுள்ள எல்லாத் துக்கத்தையும் சந்தோஷமாக மாற்றுவார். இந்த மாறுதலை நாம் பெற்றுக்கொள்ள, அவர் சிலுவையில் நமக்காக பாடுபட்டு, துக்கத்தையெல்லாம் சுமந்து தீர்த்து விட்டார்.

அருமையான சகோதரனே, சகோதரியே, பலவிதமான காரணங்களினால் வாழ்க்கை கசந்து மிகுந்த துக்கத்தோடு போராட்டமான ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் இன்று கல்வாரியில் உனக்காக தன் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்து, உன் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி விடுவார். அந்தக் கல்வாரியின் அன்பை உணர்ந்து அவரிடம் வருவதற்கு இன்றைக்கு தீர்மானம் செய். ஒடுக்கப்பட்டு வேதனையுடன் இருந்த உன் வாழ்வு சந்தோஷமாக மாறிவிடும்.

4. சிலுவையிலே நோய்களைச் சுமந்தார்

"அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்..." மத்தேயு 8:17

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முழுமையான சுகவாழ்வைத் தருவதற்காக தன் ஜீவனையே நமக்காக சிலுவையிலே ஈந்தார். யாத்திராகமம் 15:26ல் 'நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்' என்று சொன்னவர் இன்றும் ஜீவிக்கிறார். நாமோ அவர் சத்தத்துக்குச் செவிகொடாதபடி நாம் விரும்பின வண்ணமாய் நம் காரியங்களைச் செய்கிறபடியால், இன்று நமக்குள் பலவிதமான வியாதிகள் உண்டாகி நம்மைச் சஞ்சலப் படுத்துகிறது. இன்று உலகளவில் ஆராய்ந்து பார்க்கும் போது, நோயானது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எவ்வளவோ மருத்துவ மனைகளும், மருந்துகடைகளும் இருந்த போதும், ஆஸ்பத்திரிகளிலே வியாதியஸ்தர்கள் கூடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

உதவியற்ற முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷனை இயேசு கிறிஸ்து சந்தித்தார். அவனுடைய நோயைக் குணமாக்கி அவனுக்குள் சுகவாழ்வைத்தர அவனோடு பேசினார். அவனிலே, துாதன் குளத்தைக் கலக்கியபின்பு, முதலாவது அந்தக் குளத்திலே தான் இறங்க வேண்டும், சொஸ்தமடைய வேண்டும் என்ற நம்பிக்கையும் ஆசையும் உடையவனாயிருந்தான். அவ்வாறு முதலாவது இறக்கி விடுவதற்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லையே என்று அவன் தன் குறைவை நிறைவாய்ப் பேசினதைப் பார்க்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து அவனைக் கண்டு வார்த்தையினால் அவன் நோயைக் குணமாக்கி, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று கூறினார். அவன் உடனே சுகம் அடைந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தான்.

இன்று பாவத்தினால், பிசாசினால், சாபத்தினால், இயற்கை சூழ்நிலை மாறுவதினால், இன்னும் தேவ மகிமைக்காகவும் வியாதிகள் வருகிறது. கர்த்தர் ஒருவரைச் சிட்சிக்கும்போது அவருக்குள் இவ்விதமான வியாதிகள் வருவதைப் பார்க்கிறோம். கர்த்தர் எவனிடத்தில் அதிகமாக அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். பலருடைய வாழ்க்கையிலே பிசாசினால் வருகிற வியாதிகளை அறிந்து கொள்ள முடியாதபடி அதிலே பாடுபடுகிறார்கள். 18 ஆண்டுகளாக கூனியாய் இருந்த சகோதரி, சற்றும் நிமிரமுடியாதபடி வேதனையோடு வாழ்ந்தாள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ அவளை அழைத்து, பெலவீனப்படுத்துகிற ஆவியின் கட்டுகளை அவிழ்த்தார். உடனே அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப் படுத்தினாள். வயதாகும்போது இயற்கையினால் வியாதிகள் நமக்குள் வருவதைப் பார்க்க முடிகிறது. ஈசாக்கு வயதாகும்போது கண் பார்வை இழந்து வேதனையோடு வாழ்ந்தான்.

இன்னும் சிலருடைய வாழ்க்கையிலே சாபத்தினால் வியாதிகள் வருகிறது. தேவ ஊழியராகிய மோசேயைக் குற்றப்படுத்திப் பேசின மிரியாமின் வாழ்வில் சாபமாக குஷ்டரோகம் வந்தது. இன்னும் தேவனுடைய மகிமைக்காக சில வியாதிகளும் வருவதுண்டு. சீஷர்கள் இயேசுவிடம் வந்த பிறவிக்குருடனைப் பார்த்து, இவன் ஏன் குருடனாய்ப் பிறந்தான்? இவன் செய்த பாவமா ? இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா ? என்று கேட்டபோது, இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப்பிறந்தான் என்று 'இயேசு கூறுவதை யோவான் 9:1-3ல் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவோ பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், தேவனுடைய வார்த்தையினாலும், பிசாசின் பிடியிலிருந்து விடுதலை தந்து, வியாதியுள்ளவர்களைக் குணமாக்கி நன்மை செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்தார். தேவ திட்டத்தின்படி தன்னுடைய ஜனங்களின் நோய்கள் தீரவும், சுகம் உண்டாகவும், தம்மைத்தாமே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார். நம்மை அதிகமாக நேசித்த தேவன், குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக சகல நோய்களையும் நீக்கி, சுகவாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்று நமக்காக ஜீவபலியானார். அவருடைய தழும்புகளினால் நாம் இன்று குணமடைகிறோம்.

இயேசு கிறிஸ்து சிலுவையிலே அறையப்பட்டபோது, நம் பாவங்களைச் சுமந்தார், சாபங்களைச் சுமந்தார், துக்கங்களைச் சுமந்தார். நோய்களையும் சுமந்தார். இவ்விதமாய் நம்மை நேசித்து நமக்காக சிலுவையில் நம் பாடுகளையெல்லாம் சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்துவை நம்புவோம், அவர் வழி நடக்க நம்மை முற்றிலும் அர்ப்பணிப்போம். அதினால் என்றும் நமக்குள் சமாதானம், மகிழ்ச்சி, மேன்மை நிறைந்து விடும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                            கிறிஸ்துவின் பணியில்,

                                                                                            சகோ. C. எபனேசர் பால்.