"கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி,
                                                     மடங்கடிக்கப்பட்ட
யாவரையும் துாக்கிவிடுகிறார்."
                                                                                                                                           சங்கீதம் 145:14

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவின்  இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

இன்று மனிதன் பலவிதமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும், நினையாத விதத்தில் விழுந்து வேதனை அடைகிறான். சில வருடங்களுக்கு முன் என் இனத்தார் ஒருவர் துணிகளைத் துவைத்துக் கொண்டு இருந்தார். ஏதோ காரணத்தால் அந்த இடத்தை விட்டு எழுந்து நடந்து வந்தபோது, நினையாதபடி வழுக்கி விழுந்தார்கள். அவர்களின் பந்து கிண்ண மூட்டில் உடைவு ஏற்பட்டது. பலநாள் பாடுகளையும், வேதனையையும் அடைந்தார்கள். ஆம் சகோதரனே, சகோதரியே இன்று நம் ஆவிக்குரிய வாழ்வில், குடும்ப வாழ்வில், பொருளாதார வாழ்வில், சுகவாழ்வில் சிறந்து விளங்குகிற நாம் நினையாத வீழ்ச்சியை அடைகிறோம். இப்படி நாம் விழும் போது, நாம் விழுந்து நொறுங்கிவிடாது, அழிந்து விடாது நம்மைத் தாங்கக்கூடியவர் நமக்கு இருக்கிறார். இந்த அன்பின் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து விழுகிற யாவரையும் தாங்குகிறவராக இன்னும் கரிசனைக் கொண்டவராக செயல் புரிகிறார். இந்த அன்பின் தேவன் யாவரையும் தாங்கும் செயல் உடையவராக இன்றும், என்றும் இருக்கிறார்.

இந்த அன்பின் செயலை நாம் தாயின் கருவில் உற்பத்தியான நேரம் முதல் செய்து கொண்டிருக்கிறார் என்று ஏசாயா 46:3ல் பார்க்கிறோம். நாம் எந்த நாளிலே தாயின் வயிற்றிலே உருவாக்கப் படுவோம் என்று தமது புஸ்தகத்தில் எழுதி வைத்திருக்கும் அன்பின் தேவன் அந்த நாள் முதற்கொண்டே தாங்குகிறவராகவும், நம் முதிர்வயது வரைக்கும் அதைச் செய்கிறவராகவும் இருக்கிறார் என்று ஏசாயா 46:4 ல் வாக்கு கொடுத்து இருப்பதை நாம் அறிவோம். இப்படி என்றும், எந்நேரமும் நம்மைத் தாங்கக் கூடிய உன்னத தேவன் நமக்கு இருந்தும் ஏன் விழுகிறோம்."

'நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்' என்று நீதி. 24: 16ல் பார்க்கிறோம். ஆமோஸ் 9:12ல் 'அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வ நாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்' என்று பார்க்கிறோம். அப்படியானால் ஏன் விழுகிறோம், யார் தாங்கப்படுவார்கள் என்பதை நாம் தியானிப்போம்.

யார், ஏன் விழுகிறார்கள்?

1.அக்கிரமக்காரர் விழுவார்கள்"

அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்."
                                             சங்கீதம் 36:12

இந்த வேதப்பகுதியில் அக்கிரமம் செய்கிற மக்கள் விழுவார்கள் என்றும், அத்துடன் என்றும் எழுந்திருக்க முடியாது தள்ளப்பட்டு போவதையும் திட்டமாய் காண்கிறோம். அக்கிரமம் செய்கிற மக்கள் அக்கிரமக்காரர். இந்த அக்கிரமக்காரர் எங்கு இருக்கிறார்களோ, அங்கு கலகத்தை உண்டு பண்ணுவார்கள். சமாதானத்தைக் கெடுத்து, தங்களின் தீய அக்கிரமச் செயலினால் மற்றவர்களின் சமாதானத்தை, சந்தோஷத்தை, அமைதியான சூழ்நிலையைக் கெடுத்து விடுவார்கள். இவர்களின் அக்கிரம செயல்களினால் பலர் வாழ்வில் பாடுகள் உண்டாகும். இந்த அக்கிரமத்தைத் தங்களின் செயலாகக் கொண்டு இருக்கிறவர்கள் மற்றவர்களுக்கு மறைவாக தீங்கு செய்வதற்குத் துணிந்தவர்கள். சங்.64ல் அக்கிரமக்காரர்களின் துணிகரச் செயலைப் பார்க்க முடிகிறது.மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனை பண்ணி, அவைகளைக் காண்பவர் யார் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சிக்கிறார்கள்.

ஒரு இடத்தில் அதிகாலையில் அநேகர் அந்த இடத்திற்கு வருவார்கள். அந்த இடத்தில் யாருக்குத் தீங்கான காரியம் செய்ய வேண்டுமோ, அவர்களுடைய பெயரை எழுதி அந்த இடத்தில் உள்ள மனிதரிடம் கொடுப்பார்கள். அந்த மனிதன் சில தீய வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு தீங்கு வரும்படியாக சொல்லுவான். இதினால் தீங்கான காரியங்கள் அவர்களில் நடைபெறுகிறது. இதினால் ஆதாயம் கிடைப்பதால் இதனைத் தொழிலாக செய்கிறார்கள்.

ஒருமுறை வெளிநாடு ஒன்றில் ஊழியங்களைச் செய்து கொண்டு இருந்தோம். பாடல்களைப் பாடிய பின்பு என்னோடே கூடவந்த சகோதரர் அன்று செய்தி தர எழுந்து நின்றார். திடீரென ஒரு மனிதன் கூட்டத்தின் நடுவில் வந்து விழுந்தார், உருண்டார். அந்த மனிதனைப் பார்த்தவுடன், அக்கூட்டத்திற்கு வந்தவர்கள் வெளியே ஓட ஆரம்பித்தனர். ஏன் ஓடுகிறீர்கள், அமர்ந்திருங்கள் என்று சொன்னபோது இவர் பொல்லாதவர், இந்த இடத்தில் சூனியம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டு வாழ்பவர் என்றார்கள். 'உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருப்பவர் பெரியவர்.' என்று ஆறுதல்படுத்தி கூட்டத்தை நடத்தினோம். அந்தச் சகோதரன் அன்று தன் தீய அக்கிரமச் செயலை விட்டு மனந்திரும்பினான்.

நம் தேவன் அக்கிரமக்காரர்களின் செயலைக் காண்கிறவராக இருக்கிறார். அவர்கள் மேல் அம்புகள் எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள். அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்' இவ்விதமாக தங்களின் அக்கிரமச் செயல்களினால் அநேகர் விழுகிறார்கள்.

2.ஆலோசனையில்லாதபடியால் ஜனங்கள் விழுகிறார்கள் "ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்." நீதிமொழிகள் 11:14

இன்று அனுதின வாழ்வில் சிறிய பெரிய காரியங்களில் ஆலோசனைத் தேவையாக இருக்கிறது. இன்று இருவரும் வேலை செய்கிற குடும்பத்தில், மனைவியானவள் அன்பாக கணவரிடம் என்ன ஆகாரம் வேண்டும் என்று ஆலோசனைக் கேட்பதைப் பார்க்கிறோம். சில வீடுகளில் மனைவி கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ இந்த உடை நன்றாக இருக்கிறதா? என்ற ஆலோசனையைக் கேட்கிறோம். இன்று திருமண காரியங்களில், வீடு வாங்கும் காரியங்களில் மிகுதியாக ஆலோசனைகளை நாடி நிற்கிறோம். பிள்ளைகளின் படிப்பு, மற்ற முக்கியமான காரியங்களில் ஆலோசனையைப் பெற காத்திருக்கிறோம். தவறான ஆலோசனைகள் பலவிதமான இழப்பையும், வேதனையையும் உண்டாக்குகிறது. நம்முடைய கர்த்தர் அனுதினமும் நமக்கு ஆலோசனை தருகிறவராக இருக்கிறார். சங்.32:8ல்' உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்'என்று சொல்லியிருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு 'ஆலோசனைக் கர்த்தர்' என்ற நாமம் கொடுக்கப்பட்டிருப்பதை ஏசாயா 9:6ல் பார்க்கிறோம். இந்த அன்பு தேவனின் ஆலோசனை யில்லாத இடத்தில் ஜனங்கள், ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் அடைந்து தவிக்கிறதை நாம் இன்று காண முடிகிறது.

ஒரு முறை ஓய்வு பெற்ற ஒருவர் ஜெபிக்க வந்தார். மிகுந்த துக்கத்துடன் காணப்பட்டார். தன் வாழ்வின் பிரச்சனைக்காக வேண்டுதல் செய்ய வேண்டும் என்றார். என்ன பிரச்சனை என்று கேட்டேன். நான் ஒரு அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெற்றவன், எனக்கு மனைவியும், மூன்று பெண்பிள்ளைகளும் இருக்கிறார்கள். என் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காகவும், எங்கள் குடும்ப செலவிற்காகவும், நான் ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தை ஒரு பைனான்ஸ் கம்பெனியில் முதலீடு செய்தேன். மற்ற வங்கிகளைக் காட்டிலும் அதிக வட்டி பணம் தருவார்கள் என்ற மனிதரின் ஆலோசனையின்படிச் செய்தேன். ஆனால் இந்த பைனான்ஸ் கம்பெனி திடீரென மூடப்பட்டு விட்டது. என்னைப் போல சிலர் இந்த பைனான்ஸ் கம்பெனியுடன் பேசியும் ஒன்றும் பயனில்லை என்று கண்ணீர் சிந்தினார். சாப்பாட்டுக்கு வழியில்லை. என் பென்ஷன் பணம் போதுமானது அல்ல என்று சிறு பிள்ளையைப்போல் அழுதார். அநேகர் சொன்ன ஆலோசனையைக் கேட்டேன். இன்று எனக்குப் பெரிய இழப்பு வந்துவிட்டது என்றார்.

இன்று இதனைப் போல் சரியான ஆலோசனையின்றி கலங்கி கண்ணீருடன் வாழ்கிறார்கள். ஏன் இவ்விதமான நிலை என்றால் கர்த்தரின் ஆலோசனையைப் பெறாமல் போகிறதே. இன்றே கர்த்தரின் ஆலோசனையைப் பெற நம்மை அர்ப்பணிப்போம். ஆசீர்வாதம் அடைவோமாக.

3. சுயம், பெருமையினால் விழுந்து போகிறோம்

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்."

"அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்."சங்கீதம் 20: 7, 8

இரதங்கள், குதிரைகள் என்று கூறும் போது இரதங்கள் செல்வச் சிறப்பையும், குதிரைகள் தன் சுய பெலத்தை, ஞானத்தை குறிக்கிறதாயும் இருக்கிறது. 'இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது' என்று சங். 33:17ல் பார்க்கிறோம். 'சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப் போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளா யிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!' என்று ஏசாயா 31:1ல் காண முடிகிறது. இவைகளுக்கு விரோதமாகக் கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து போவார்கள் என்று ஏசாயா 31:3ல் பார்க்கிறோம். இன்று அநேகர் என்னுடைய செல்வச்சிறப்புகள், உடைமைகள், என் திறமை, என் பெலன் என்று நம்பி பெருமைப் பாராட்டி தோல்வியும், துக்கமும் அடைந்து விழுந்து போகிறார்கள்.

உலக ஒருநாள் கிரிகெட் போட்டியில் ஒரு நாட்டைச் சார்ந்த குழுவின் காப்டன் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார். அந்த நாட்டின் குழு நன்றாக விளையாடக் கூடியதுதான். ஆனால் பெருமையான சொல்லினால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். இன்று அநேகர் இதனை அறியாது நான். நாங்கள் என்ற வண்ணமாக காரியங்களைச் செய்தும், சொல்லியும் தோல்வியும், வீழ்ச்சியும் அடைகிறார்கள். ஆகவே இன்று பெருமையுடையவர்கள் விழுந்து போகிறார்கள்.

4. கர்த்தரின் பிள்ளைகளுக்கு விரோதமாய்ப் பேசும் போது விழுவார்கள்

"... அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்." 1 சாமுவேல் 17:49

கோலியாத் என்ற பெலிஸ்தன் ஆறு முழ உயரமும், பெலசாலியுமாக இருந்தவன். அவனது ஈட்டி, அவனது கவசம் மிகுதியான எடையுள்ளதாக இருந்தது. இந்த பெலிஸ்தன், யுத்தத்திற்கு அணிவகுத்து நின்ற இஸரவேல் சேனையைத் தனது வார்த்தைகளினால் கலங்கடித்தவன். தன்னுடன் யுத்தம் பண்ண ஒருவனை அனுப்பும்படி ஒவ்வொரு நாளும் சவால் விட்டுக்கொண்டு இருந்தவன். இஸ்ரவேலின் சேனைகளை நிந்தித்தேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான். இவனோடே தாவீது யுத்தம் பண்ணச் சென்றான். கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது, ஜீவனுள்ள தேவனுடைய சேனையை நிந்தித்தானே என்ற வேதனையுடன் அவனுடன் யுத்தம் செய்ய ஆயத்தமானான். தன் சகோதரர்கள் கோபங்கொண்டு கேள்விகளைக் கேட்டப்போதும் தயங்காது, இந்தப் பெலிஸ்தனுடன் யுத்தம் செய்யச் சென்றான். பெலிஸ்தன் அவன் தோற்றத்தைக் கண்ட மாத்திரத்தில் அற்பமாக எண்ணினான். தன் தேவர்களை மனதில் கொண்டு, அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீதைச் சபித்தான். ஆனால் தாவீதின் கவணில் இருந்து வீசப்பட்ட ஒரே கூழாங்கல் அவனை வீழ்த்தியது. தாவீது கீழே விழுந்த கோலியாத்தின் பட்டயத்தைக் கொண்டே அவன் தலையை வெட்டினான்.

அன்பு சகோதரனே, சகோதரியே கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவ ஊழியர்களுக்கும், கர்த்தரின் பிள்ளைகளுக்கும் விரோதமாக எழும்பும் போது விழுந்து போவோம். மனுஷருடைய நீதிக்கும் தேவனுடைய நீதிக்கும் வித்தியாசமுண்டு. அநேக நேரங்களில் இதனை அறியாது தேவப்பிள்ளைகளும், தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை எதிர்க்கும் போது விழுந்து போவார்கள்.

ஒருமுறை ஒருவர் கர்த்தரின் ஊழியருக்கு விரோதமாக குற்றப்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். எழுதி அதனை தபாலில் சேர்த்துவிட்டு வரும் வழியிலேயே இறந்து போனார். கர்த்தர் தமது ஊழியர்களுடன் உடன்படிக்கை செய்து இருக்கிறார். 'உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன் என்று ஆபிரகாமுடன் உடன்படிக்கைச் செய்த கர்த்தாதி கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். நாம் இந்தக் காரியத்தில் மிகவும் கவனமாய் இருந்து செயல்பட வேண்டும்.

தேவப்பிள்ளைகளில் குறைவுகள், தேவ ஊழியர்களிடம் தவறு காணும் போது ஜெபியுங்கள். அதைத்தான் வேதம் போதிக்கிறது. இதற்கு மாறாகச் செயல்படும் போது நம்மில் மாத்திரம் அல்ல, நம் சந்ததிக்கும் கேடுகளைச் சேர்த்து வைக்கிற மக்களாக மாறிவிடுகிறோம். நாம் ஆசீர்வாதத்திற்கு அழைக்கப்பட்டு இருப்பதால், மற்றவர்களை நாம் இன்று முதல் ஆசீர்வதிப்போம். மோசே தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர். இதை அறிந்தும் மிரியாம் மோசேயைக் குற்றப்படுத்தி பேசினதால் கர்த்தருடைய கோபத்திற்கு ஆளாகி, மிரியாம் குஷ்டரோகியானாள் என்பதனை எண்ணாகமம் 12:5-10ல் பார்க்கிறோம். ஆகவே தேவப்பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பும்போது விழுந்து போவோம்.

5. ஆதி அன்பை விட்டு விடுவதினால் விழுந்து போகிறோம்

"..நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

''ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக..."
                                                                                                        வெளிப்படுத்தல் 2: 4, 5

இன்று அநேகர் ஆதி அன்பை விட்டு விடுகிறபடியால் விழுகிறதைப் பார்க்கிறோம். மனம் உடைந்து கலங்கி தவித்த நேரத்தில் நாம் கர்த்தரிடம் வருகிறோம். 'நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்' என்ற யோபு 9:15ன்படி கர்த்தரின் சமுகத்தில் கெஞ்சி இரக்கம் பெறுவோம். அற்புதமான சுகம், விடுதலை, சமாதானம் பெற்றபின் கொஞ்ச கொஞ்சமாக உலகத்தை நேசித்து பின்மாற்றம் அடைகிற மக்கள் ஏராளம் உண்டு. ஆதியிலே வேதமும் கையுமாய் இருந்தவர்கள், உலகச் செய்தித்தாளுடன், வீணான கதை புஸ்தகங்களைப் படித்து தங்கள் நேரத்தை செலவிடுகிற மக்களாக மாறிவிடுகிறார்கள். ஆலயத்திற்கு முன்பு ஒழுங்காக, முன்னதாக வந்தவர்கள், தாமதமாயும், சிற்சில நாட்களில் ஆராதனைக்கே வராமல் தங்கள் வாழ்வில் பின்மாற்றம் அடைகிறார்கள். இவ்விதமாய் ஆதியில் இருந்த அன்பை விட்டு விடுவதால் விழுந்து போகிறார்கள். இதினால் என்றுமே பிரகாசிக்க முடியாத இருள் நிறைந்த வாழ்வு தோன்றி விடுகிறது.

இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே, உன்வாழ்க்கையில் விழுந்து போய் இருக்கிறாயா ? எதினால் நீ விழுந்து போனாய் என்று ஆராய்ந்து இன்றே உன்னைச் சீர்ப்படுத்து. கர்த்தர் உன்னை விழுந்து போன நிலையிலிருந்து துாக்கி விடுவார்.

யாரைக் கர்த்தர் தாங்குவார்?

1. விழித்துக் கொண்டவர்களைத் தாங்குவார்

"...விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்" சங்கீதம் 3:5

இன்று விழிப்புடன் வாழ வேண்டும் என்று பல காரணங்களைக் கொண்டு வேதம் ஆலோசனைத் தருகிறது. 'தூங்குகிற நீ விழித்து. மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்' என்று எபே.5:14ல் பிரகாசிப்பதற்கு விழித்து இருக்கச் சொல்வதைப் பார்க்கிறோம். நாம் சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபிக்க வேண்டும் என்று மத். 26:41ல் சொல்லப்பட்டிருக்கிறது. '...விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' என்று 1 பேதுரு 5:8ல் பார்க்கிறோம். விழித்துக் கொள்ளும் போது, நாம் எந்த விதத்திலும் விழுந்து நொறுங்கி விடாது, கர்த்தர் நம்மைத் தாங்குகிறார். நாம் ஆவியில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அதைப் போல் சரீரத்திலும் விழிப்புடன் நம் காரியங்களைச் செய்ய வேண்டும். அப்பொழுது கர்த்தர் நம்மைத் தாங்கி நடத்துவார்.

2. கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை நடத்தும் போது கர்த்தர் தாங்குவார்

"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்."

"அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்." சங்கீதம் 37:23, 24

கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்கிறவர்களைக் கர்த்தர் தாங்குவார். இன்று நாம் கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும். உலக மக்களுக்குப் பிரியமான வாழ்க்கை வாழும் போது சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ளுகிறோம். தாவீது சங். 143:10ல் உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் என்று கேட்பதைப் பார்க்கிறோம். 'ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.' என்று நீதி. 16:7ல் கூறப்பட்டு இருக்கிறது. தானியேலைக் கர்த்தர் 'பிரியமானவனே' என்றார். இவ்விதமாய் பிரியமாய் நடக்கும் போது, கர்த்தர் நம்மைத் தாங்கி எல்லா இக்கட்டுக்கும் விலக்கிக் காப்பார். இன்று அநேக நேரத்தில் சிலருடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய சோதனையில் விழுந்து போகும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. ஆனால் நாம் கர்த்தருக்குப் பிரியமாய் நடக்கும் போது, கர்த்தர் விழுதலுக்கு ஒப்புக் கொடாது, நம்மைத் தாங்கி மீண்டும் அவர் வழியில் நடக்கச் செய்வார்.

 

ஒருமுறை ஒரு சகோதரர் ஒரு பாவக்காரியத்தினிமித்தம் சபையிலே இருந்த பதவியை இழந்து, எல்லா மேன்மையையும் இழந்து போனார். அவர் தன் பாவத்தைக் குறித்து மனஸ்தாபப்பட்டார். 'துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம்' என்று எசேக்கியேல் 18:23ல் சொன்ன வார்த்தையின்படி செய்தார். அவரைக் கர்த்தர் மீண்டும் அதே பதவியில் ஸ்திரப்படுத்தினார். இன்று நம் வார்த்தைகள், உணர்வுகள், செயல்கள், சிந்தனைகள் கர்த்தருக்குப் பிரியமாக இருக்கும் போது கர்த்தர் நம்மைத் தாங்கி நடத்துவார்.

3. நான் விழுகிறேனே என்று கர்த்தரிடம் சொல்லும் போது கிருபையினால் நம்மைத் தாங்குகிறார்

''என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. " சங்கீதம் 94:18

கர்த்தர் தமது அளவற்ற கிருபையினால் நம்மைத் தாங்கி நடத்துகிறார். எப்பொழுது என்றால் நாம் அவர் சமுகத்தில் நம் நிலைகளைச் சொல்லி ஜெபிக்கும்போது. ஆகவேதான் ஜெபவாழ்க்கை அதிக அவசியமாக இருக்கிறது. ஜெப வாழ்க்கைப் பெருக பெருக, கர்த்தரின் கரம் நம்மைத் தாங்குகிறது. 'ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன் என்ற வார்த்தையின்படி சோதனை நேரத்தில், விழுந்து போகும் சூழ்நிலையை நாம் பார்க்கும்போதோ, உணரும் போதோ ஜெபிக்க வேண்டும். ஜெபமானது கர்த்தரின் வல்லக் கரத்தினால் நம்மைத் தாங்கக்கூடிய ஆற்றலும் வலிமையும் உடையது.'

ஒருமுறை கூட்டம் முடிந்து மோட்டார் சைக்கிளில் பஸ் ஸ்டாப் சென்றேன். ஒரு திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் சரிந்து விழுந்தது. இயேசுவே என்று கத்தினேன். கர்த்தரின் கிருபை என்னைத் தயவாய் தாங்கிற்று. கீழே விழாதபடி நான் மோட்டார் சைக்கிளை விட்டுக் குதித்து, எந்தச் சேதமும் ஏற்படாதபடி கர்த்தர் என்னைக் காத்தார். ஆம், என் கால் சறுக்குகிறது என்று கர்த்தரிடம் சொல்லும்போது, கர்த்தரின் கிருபை நம்மைத் தாங்கும்.

4.கர்த்தர் நம்முடன் இருக்கும் போது தாங்குவார்

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன் ; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ஏசாயா 41:10

இன்று கர்த்தரை நம்முடன் வைத்துக் கொள்ள, நாம் இடம் கொடுத்தால் அவரின் வல்லமையான வலது கரம் நம்மைத் தாங்கும். மத். 28:20ல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தின் முடிவுபரியந்தம் நம்முடன் இருப்பேன் என்று வாக்குக் கொடுத்து இருக்கிறார். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்டு நம்

இருதயக் கதவுகளைத் திறப்போமானால், கர்த்தர் நம்முடன் தங்கி தாபரிப்பதுடன் நாம் விழும்போது நம்மைத் தாங்குவார்.

இன்று விழித்து, கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, ஜெப வீரர்களாய் மாறும்போது கர்த்தர் நம்மைத் தாங்குவார். அவரை நம்முடன் வைத்துக் கொண்டால், என்றும் கீழே விழாது தாங்கி ஏந்தி நடத்துவார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                              கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                                          சகோ. C. எபனேசர் பால்