"...நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”    ஏசாயா 43:12   

    

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

         கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன்.                                    

          நம்முடைய தேவன் வருங்காரியங்களை முன்னறிவித்து, நம்மை அழிவுக்கு விலக்கிக் காத்து, இரட்சித்து ஆசீர்வதிக்கிறார். இப்படிச் செய்ய அந்நிய தேவன் இல்லை என்று கூறினதுடன் நானே தேவன் என்பதற்கு சாட்சிகளாய் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். நம்மை தம்முடைய நீதியின் கரத்தினால் நடத்த வல்லவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய நாமத்திற்கு சாட்சியாக இருக்கும்படி விரும்புகிறார்.

                ஒருமுறை ஒரு குடும்பத்தாரில் உள்ள மகனின் திருமணத்திற்காக ஜெபிக்கச் சொன்னார்கள். அவர்களுக்கு கொண்டு வருகிற மகளைக் குறித்து ஆவியானவர் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கூறி ஜெபித்தேன். அந்த வீட்டாருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அத்துடன் நடைபெறவுள்ள போராட்டத்தையும் தெரிவித்தேன். எந்த வேளையில் இந்தத் திருமணம் ஒழுங்காகிறதோ, அச்சமயம் வீட்டில் தீ விபத்து ஏற்படும், ஆகவே ஒவ்வொருவரும் உபவாசத்துடன் ஜெபியுங்கள் என்று பெண்ணின் பெற்றோருக்கு ஆலோசனைக் கூறினேன். இந்த விதமாய் அறிவிக்கப்பட்ட காரியம், திருமணம் ஒழுங்கான நாளில் ஏற்பட்டது. ஆனால் அக்குடும்பத்தார் ஜெபித்தபடியால் அந்த விபத்தினால் எந்த ஒரு சேதமும் நேரிடாதபடி கர்த்தர் காத்து சாட்சியாக வைத்தார்.

           சிலுவையில் நமக்காக பாடுபட்டு மரித்த இயேசு கிறிஸ்துவை தேவன் உயிரோடு எழுப்பினர். அப்.2:32ல் ''இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாய் இருக்கிறோம்" என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். மேலும் 'ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள், அவரைத் தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார் , அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்' என்று கூறியிருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும் 1யோவான் 1:1ல் ''ஆதிமுதல் இருந்ததும் , நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம் ''என்று குறிப்பிட்டு சாட்சிகளாயிருப்பதைப்  பார்க்க முடிகிறது. வெளி 22.20ல் ''இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்" என்றும் கூறிருப்பதை நாம் அறிந்து, இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்த வேண்டியது, மிக அவசியமாய் இருக்கிறது. மேலும் வெளி.16:15ல் ''இதோ, திருடனைப்போல் வருகிறேன்''  என்று கூறியிருப்பதால் அவருடைய வருகையோ, நமது மரணமோ எது நடந்தாலும், நாம் எதற்கும் நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று இந்தப் பகுதிகள் நம்மை எச்சரிக்கிறது.

                தானியேல் புஸ்தகத்தில் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால் உங்களுக்கு சமாதானம் பெருகக்கடவது என்று கூறி விட்டு ''உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாகக் கண்டது'' என்று 4:2ஆம் வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  இன்று நம் வாழ்வில் கர்த்தர் செய்யும் ஒவ்வொரு நன்மையான காரியத்தைச் சாட்சியிடுவது நல்லது. அது தேவனை மகிமைப்படுத்துகிற செயலாகவும் உள்ளது. இவ்விதமாக நாம்  சாட்சி கூறும் போது மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவின்  அன்பையும், வல்லமையையும், ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு வழியாக அமையும். 

I. சாட்சியின் வாழ்வினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்.

1.சேதமின்றி காக்கப்படுவோம்.

   ''சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதப்படிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்;  ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்''. தானியேல் 6:22

      இன்று நம்முடைய வாழ்வில் நாம் காக்கப்பட வேண்டுமானால் நம் சாட்சியின் வாழ்வினைக் காத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தேசத்திற்கு அடிமையாகக் கொண்டு வரப்பட்ட தானியேல், சாட்சியின் வாழ்வைக் காத்துக் கொண்டு  இச்சையடக்கமாயிருந்தான்.  ராஜாவின் ஆகாரத்தினால் தன் சரீரத்தைத் தீட்டுப்பட இடம் கொடுக்கவில்லை.  ராஜாவுக்கு நஷ்டம் வரக்கூடாது என்று மூன்று பிரதானிகள் ஏற்படுத்தப்பட்டார்கள். அவர்களுள் தானியேல் ஒருவனாய் இருந்தான்.  ராஜா அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த நினைத்தான். இதனை அறிந்த மற்ற பிரதானிகள் தானியேல் மீது குற்றஞ்சாட்டி, அவனை அகற்றிவிட வேண்டும் என்று, குற்றம் காண முயற்சித்தார்கள். தானியேல் உண்மையுள்ளவனாய்  இருந்தபடியால் அவன்மேல் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை.

           குற்றப்படுத்தும் செயலானது பிசாசின் செயலாய் இருக்கிறது. ஆதி 3:4,5ல் நீங்கள் பழத்தை சாப்பிட்டால் சாவதில்லை என்றும், நீங்கள் தேவர்களைப் போல் இருப்பிர்கள் என்றும் தேவனறிவார். அதினால் உங்களை இந்த நன்மை தீமை அறியும் பழத்தை சாப்பிடக்கூடாது என்று கூறியிருக்கிறார் என்ற பொய்யான குற்றசாட்டை சர்ப்பம் சொல்வதைப் பார்க்க முடிகிறது. அத்துடன் அவன் தேவ சமூகத்திலே நமது சகோதரர்மீது ஓயாது குற்றஞ்சாட்டினான் என்று வெளி 12:10ல் பார்க்கிறோம். இதினால் நம் கண்ணில் உள்ள உத்திரத்தை உணராது ,மற்றவன் கண்களில் துரும்பைப் பார்த்துக் குறை சொல்லுகிற பண்பைப் பார்க்கிறோம். கணவன் மனைவியை, மனைவி கணவனை, பிள்ளைகள் பெற்றோரை, பெற்றோர் பிள்ளைகளைக் குற்றப்படுத்துகிற செயலை அதிகமாகப் பார்க்கிறோம். வேலை ஸ்தலங்களில் மேலாக உள்ள அதிகாரிகளிடம் உடன் வேலை செய்பவர்களைக் குற்றப்படுத்துகிற செயலைப் பார்க்க முடிகிறது. இதைப் போல சகோதர ,சகோதரிகள் ஒருவரையொருவர் குற்றப்படுத்திச் சமாதானத்தை இழந்து போகிறதைப் பார்க்கிறோம்.

         நீங்கள் மற்றவர்களைக் குற்றப்படுத்திருங்கள்  என்று இயேசு கிறிஸ்து மத் 7:1ல் திட்டமாய் தெளிவாய்க் கூறியுள்ளார். விபச்சாரத்தில் கையும் களவுமாய் பிடித்த ஸ்திரீயை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வந்த நிகழ்ச்சியை யோவான் 8:4ல் பார்க்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்துவோ குற்றப்படுத்தினவர்களை குற்றப்படுத்தினார். இதை நன்கு அறிந்து செயல்படுவோம்.

      தானியேலைத் தந்திரமாய் கர்த்தரை தேடுகிற, வேண்டுகிற காரியத்தில் குற்றப்படுத்திச் சிங்கத்தின் கெபியிலே போட்டார்கள்.ஆனால் அவன் சாட்சியுள்ளவனாய் இருந்தப்படியினால் சிங்கங்கள் ஒன்றும்  சேதப்படுத்தவில்லை. அதினால் தானியேலைக் குற்றப்படுத்தினவர்களையும்,  அவர்கள் குடும்பத்தாரையும் கொண்டுவரச் செய்து சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். அவர்கள் சிங்கக்  கெபியின் அடியில் சேருமுன்னே சிங்கங்கள்  அவர்கள் மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கிப் போட்டது ..

         அருமையான சகோதரனே ,சகோதரியே தன் வேலை ஸ்தலத்தில் உண்மையும், கர்த்தருக்குள் குற்றமில்லாத ஒரு சாட்சியுள்ள வாழ்வும் வாழ்ந்த தானியேலை, சிங்கத்தின் வாய்க்கும், சதி மோசம் செய்கிற உடன்பணி செய்வோரின் குற்றஞ்சாட்டுக்கும் காத்த தேவன் சாட்சியுடன் வாழும் ஒவ்வொருவரையும் காத்து நடத்துவார்.

2.இயேசுவின் உயிர்த்தெழுதலை சாட்சி பகிர்ந்தவர்கள் கிருபை பெற்றார்கள்.

''கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.''அப்போஸ்தலர் 4:33

        இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நாம் சாட்சிப்  பகிரவேண்டும். இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார் என்று சரித்திர ரீதியாக நாம் அறிந்திருக்கிறோம்.சில சம்பவங்களை கி.மு என்றும் அதாவது கிறிஸ்துவுக்கு முன் என்றும், சில நிகழ்ச்சிகளை கி.பி, அதாவது கிறிஸ்துவுக்குப் பின் என்றும் நாம் வருஷங்களை அழைக்கிறதினால், இயேசு கிறிஸ்து இந்த பூமியில் தோன்றினார் என்றும், வாழ்ந்தார் என்றும் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அத்துடன் இன்று நான் ஜீவிப்பதே அவரின் அன்பின் செயலாக இருப்பதால் நான் அவரை சாட்சியிடுகிறேன். ஆகவே இன்றும் இரண்டு பேரோ மூன்று பேரோ கூடுகிற வேளையில் அவர்கள் நடுவில் இருப்பேன் என்ற அன்பின் இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும்என்றும்  மாறாதவராக இருக்கிறார். அவர் எனக்குப் பாராட்டின தயவினால் நான் இன்று ஜீவிக்கிறேன். இந்த அனுபவத்தினால், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று சாட்சியிட்டு, அவரைப் பிரஸ்தாபிக்கிறோம். யார் யாரெல்லாம் உயிர்த்தெழுந்த வல்லமையை உணர்ந்து அறிந்து , புரிந்து சாட்சியிடுகிறார்களோ அவர்கள்மீது பூரண கிருபை பெருகிக் கொண்டே இருக்கிறது.

            கிருபை என்பது தேவன் தகுதியற்ற நமக்கு பாராட்டுகிற இரக்கமாக இருக்கிறது. இந்தக் கிருபையினால் தான் நம்மை சகலவிதமான பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் விலக்கிக் காத்து சுகமாய் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தக் கிருபையானது நமக்கு மிகவும் வேண்டும்.நம் வாழ்வில், கர்த்தரின் கிருபையால் நிர்மூலமாகத்திருக்கிறோம்,  அழியாதிருக்கிறோம்.

              ஒருமுறை ஒரு சகோதரர் தன் மனைவியுடன் ஆலய ஆராதனை முடிந்து  தன் வீடு திரும்பினார்.அவரின் வீடு சில மைல்கள் தொலைவில் இருந்தது. ஒரு புறம் பயங்கரமான பள்ளம், மறுபுறம் சாலையும் கடைகளும் உள்ள ஒரு இடம். பனி நிறைந்த நேரத்தில் அவரின் கார் கட்டுப்பாடின்றி பள்ளத்தை நோக்கிச் சென்றது. காரை ஒட்டிச் சென்ற சகோதரரால் காரை சற்றும் நிறுத்த முடியவில்லை .500,600 அடி உள்ள பெரிய பள்ளம். கார் உருண்டு உருண்டு சென்று பள்ளத்தில் நின்றது. பின்னர் தீப்பிடிக்க ஆரம்பித்தது. சாலையில் இருந்து அநேகர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். fire service  மக்கள் உதவிச் செய்ய இறங்கினார்கள். காரும் தீப்பற்றி எரிந்து தானாகவே அணைந்து விட்டது. ஆனால் பயணம் செய்த அந்தச் சகோதரரும் அவர் மனைவியும் எந்தக் காயமும்  இன்றி காரை  விட்டு இறங்கி நின்றார்களாம். கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபடும் குடும்பத்தாரை தப்பவே முடியாத விபத்தில், கர்த்தரின் கிருபை சேதமின்றி கண்ணின்மணிப்போல் காத்தது. அன்று மாத்திரம் அல்ல இன்றும் நம் வாழ்வில் உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உறுதியாய்ச் சாட்சியிடும்போது, கிருபை உண்டாகும். கிருபையின்மேல் கிருபை பெற்று நாம் அவரை அறிக்கை செய்வோம்.

3. இயேசு கிறிஸ்துவின் செயலைச் சாட்சியாக சொன்னதினால் அவரைச் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்கள்.

 ''இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய்,தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி,அவனை அனுப்பிவிட்டார்.அந்தப்படி அவன் போய்,  இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.''

 ''இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டார்கள்.''

                                             லூக்கா 8:39,40

          இயேசுகிறிஸ்து கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டிற்கு வந்தபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவன் வஸ்திரம் தரியாதவனாக அவருக்கு எதிராக வந்தான். அவன் வீட்டில் தங்காதவன். பிரேதக் கல்லறைகளில் தங்கினவனாக இருந்தவன். இவ்விதமான மனிதன் இயேசுவைக் கண்டபோது, கூக்குரலிட்டு அவருக்கு முன்பாக விழுந்து இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன?  என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன் என்று மிகுந்த சத்தமாய்க் கூறினான். அந்த அசுத்த ஆவி அவனைவிட்டுப் போகும்படியாக இயேசு கட்டளையிட்டபடியினாலே அவ்விதமாய் கூறினான். அவனை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சங்கலிகளினால் கட்டுண்டு காவல் பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டு பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். அநேக ஆயிரம் பிசாசுகள் பிடித்திருந்தபடியால் லேகியோன் என்ற பேர் கொண்ட பிசாசு பிடித்த அவன் இயேசு கிறிஸ்துவிடம், அங்கு மேய்ந்துக் கொண்டிருந்த பன்றிக் கூட்டத்திற்குள் செல்ல உத்தரவு கேட்டான். இயேசு கிறிஸ்துவும் அவைகளுக்குப் போ என்று கட்டளையிட்டபடியால், அந்த அசுத்த ஆவிகள், பன்றிகளுக்குள் நுழைந்தது. அத்துடன் கடலுக்குள் பாய்ந்தன ,பன்றிகள் மாண்டுபோயின. பிசாசுகள் நீங்கின மனிதன் புத்தி தெளிந்தவனானான். அத்துடன் வஸ்திரம் தரித்து இயேசு கிறிஸ்துவின் பாதத்தருகே அமர்ந்திருந்தான்.

              ஒரு மனிதனுக்குள் இருக்கும் பிசாசுகள் நீங்கும் போது,தெளிந்த புத்தியுடையவனாய் மாறிவிடுகிறான். அதிகப் பாடுகள் நிறைந்த உலக வாழ்வில், வஸ்திரம் உடுத்தி நல்ல பங்காகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அமரும்  பாக்கியமுடையவனாக மாறிவிடுகிறான். அவனுடைய வாழ்வு முற்றும் மாறி விடுகிறது. அவனது உள்ளம் இயேசுவுடன் இருக்க விரும்புகிறது. அவனில் கர்த்தர் செய்த மகத்துவமான செயலை அவன் சாட்சியாகக் கூறினப்படியால், இயேசு கிறிஸ்து திரும்பி வந்தபோது அவரைச் சந்தோசமாய் ஏற்றுக்கொண்டார்கள்.

4.இயேசு கிறிஸ்து சொன்ன காரியத்தைச் சாட்சியாய்ச் சொல்லி அந்த ஊராரை இயேசுவிடம் கொண்டு வந்தாள்.

 ''அப்பொழுது அந்த ஸ்திரி , தன் குடத்தை வைத்துவிட்டு,ஊருக்குள்ளே  போய்,ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.'' யோவான் 4:28,29,30

            கர்த்தராகிய இயேசுகிறிஸ்து , பிரயாணத்தினால் களைப்படைந்திருந்தபடியால், அங்கிருந்த யாக்கோபுடைய கிணற்றருகே உட்கார்ந்தார். அச்சமயத்தில், சமாரியா நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்திரி, அந்தக் கிணற்றில் தண்ணீர் மொள்ள வந்தாள். இவ்விதமான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கங்கள் இன்று நடைபெறும் Mass Evangelism-க்கு ஒப்பானது. அதே சமயத்தில் Personal Evangelism-ம் செய்தார். அத்துடன் அன்று யூதர்கள், சமாரியர் நடுவில் பல பாரம்பரிய பழக்கங்கள் இருந்தன என்று நாம் அறிய முடிகிறது. அந்நாட்களில் ஜனங்களுக்குள் ஏற்றத் தாழ்வு இருந்ததை உணர்ந்து கொள்ள முடிகிறது. இதைப்போல  புறஜாதியார் (கொர்நேலியு வீட்டில் ) அன்று பேதுரு பேசின போதே பரிசுத்த ஆவியைப் பெற்றக் காரியத்தைக் குறித்து யூதர்கள் பிரமித்தார்கள் என்று அப்.10:46ல் பார்க்கிறோம் .இவ்விதமான பாரம்பரிய பழக்கத்தில் சிக்கி இருக்கிற மக்கள் அதிகம். ஆனால் எவ்வாறு நாம் கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும் என்றும் , ஒருமித்து வாசம் பண்ணவேண்டும் என்றும் இப்பகுதியின் மூலம் புரிந்துக்கொள்ள முடிகிறது .அந்த சமாரிய ஸ்திரியின் பாவத்தை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தி, இந்த சமாரிய ஸ்திரீயை ஒரு மிஷினெரியாக மாற்றின செயல் மேன்மையுள்ளதாக இருக்கிறது . நம் வாழ்வின் சிறையிருப்பைத் திருப்ப விரும்பும்போது பாவங்களை வெளிப்படுத்துகிறார். இதனை ஓசியா 7:1ல் பார்க்கிறோம். ஒரு சாட்சியாக மாற்றப்பட்ட அந்த ஸ்திரீ, அந்த ஊர் ஜனங்களை இயேசு கிறித்துவிடம் வரச் செய்தாள். அவர்களும் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தார்கள்.

               இவ்விதமாக சாட்சியின் மூலம் சேதமின்றி காக்கப்படவும், பூரண கிருபை பெறவும், கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் அவரை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ளவும், சாட்சியின் மூலம் ஊரே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவும் வழிச் செய்கிறது.

II.இன்று யார் சாட்சிகளாவார்கள்?

1.விடுதலைப் பெற்றவர்கள்

  ''பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார்.அந்தப்படி அவன் போய்,இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.'' லூக்கா 8:38,39

      இயேசு கிறிஸ்து அநேகருடைய வாழ்க்கையில் உள்ள பிசாசுகளின் போராட்டத்தில் இருந்து விடுவிக்கிறவராக இருக்கிறார். 'குமாரன்  உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் 'என்று யோவா 8:36ல் பார்க்கிறோம். நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். அவரின் விடுதலையினால் நாம் நம் சுகவாழ்வை பெறுகிறோம். இந்த விடுதலையின் வாழ்வைத் தருவதற்கு அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.

       ஒருமுறை இலங்கை தேசத்தில் இருந்து வந்த குடும்பத்தார் பிரச்சனைகளில் கலங்கி ஜெபிக்க வந்தார்கள். என் சகோதரன், எப்படி கதவை அடைத்து வைத்திருந்தாலும், இரவில் கதவை உடைத்தாவது வெளியே சென்று விடுகிறான் .காலையில் மிகுந்த இரத்த காயத்துடன் வருகிறான் என்று அவர்களின் கஷ்டத்தைக் கூறினார்கள். இவனை மூன்று தினங்கள் என் வீட்டிலேயே வைத்து ஜெபிக்கிறேன் என்று அக்குடும்பத்தினரை  அனுப்பி விட்டேன். அவன் மாத்திரம் என்னுடன் இருந்தான்.2-வது நாள் ஜெபித்துக்கொண்டிருந்த போது அவனது வாழ்வில் உள்ள பிரச்சனையைக் குறித்து வெளிப்படுத்தி அவனை விடுவித்தார். இரவிலே அவனே அவன் சரீரத்தைக் காயப்படுத்தி, அவன் இரத்தத்தை அவனையே அந்த ஆவி குடிக்கச் செய்வதைக் கண்டு, அது வெளியேற ஜெபிக்கச் செய்தார். அன்றே அது அவனை விட்டு நீங்கியது. அதினால் அவன் தெளிந்த புத்தியடைந்தான். அந்தக் குடும்பத்தார் மூலம் இலங்கை தேசத்திலே ஊழியம் செய்ய கர்த்தர் வாசலைத் திறந்தார். அந்த மகனின் சாட்சியானது அநேகர் இயேசுவிடம் வருவதற்கு உதவியாக இருந்தது. நாங்களும் அங்குச்  சென்று இன்று வரை ஊழியம் செய்ய முடிகிறது. விடுதலையானது அநேகரை நீதிக்குட்படுத்துவதற்கு காரணமாகிறது.

           நம்முடைய வாழ்வில் உள்ள பயத்திலிருந்தும், நோயிலிருந்தும், சாபத்திலிருந்தும், சூனியத்தின் துர் செயலில் இருந்தும் நம்மைப் பூரணமான விடுதலையினால் சாட்சியாக்குகிறார்.

2. அவருடன் இருந்தவர்கள் /இருக்கிறவர்கள் சாட்சிகளாயிருக்கிறார்கள்.

  ''நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.'' யோவான் 15:27.

                இப்படி கிறிஸ்துவுடன் இருந்தவர்கள் சாட்சிகளாயிருந்தார்கள். அநேகக் காரியங்களை நமக்கு வேதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்கள். ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும் ,எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும் ,எங்கள் கைகளினால் தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று 1யோவான் 1:1ல் பார்க்கிறோம். அன்று  இயேசு கிறிஸ்துவுடன் இருந்த சீஷர்கள் சாட்சிகளாக மாறினார்கள்.

                சீமோன் பேதுரு படிப்பறியாதவனாக இருந்தபோதும் அவனுடைய பேச்சில் உண்டான தைரியத்தினால் அவர்கள் இயேசு கிறிஸ்துவுடன் இருந்தவர்கள் என்று அங்கிருந்தவர்கள் அறிய முடிந்தது. ஆம், நாம் இயேசு கிறிஸ்துவுடன் நெருங்கி ஜீவிக்கும் போது அவரின் பண்புகளும் தன்மைகளும், அவரின் மிகுந்த அன்பும் நமக்குள் பெருகிவிடும்.அவருடன் இருந்த சீஷர்கள், அவரால் செய்யப்பட்ட ஒவ்வொரு அற்புதத்தையும் தங்கள் கண்களினால் கண்டார்கள், ஆச்சரியப்பட்டார்கள், ஆகவே இயேசு கிறிஸ்து அவர்கள் என் சாட்சிகள் என்றார்.

           ஒருமுறை ஒரு ஊழியக்காரரின் சாட்சியைக் கேட்டேன். அது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது . அவர் நன்கு இசைக் கருவியை இசைக்கும் சகோதரர். தான் எப்படியாவது சினிமா உலகத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடும், திட்டத்தோடும், பல விதங்களில் சிறப்படைய முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் ஊழியம் செய்ய வந்த ஊழியக்காரரிடம் ஜெபிக்க அநேக மனிதர்கள் வந்தார்களாம். அவ்விதமாக வந்தவர்களில் ஒரு கை முழுமையாக இல்லாத மனிதர் ஒருவர் வந்தாராம் .அப்படி வந்தபொழுது அந்த ஊழியக்காரர் ஜெபித்த போது , அந்த கையில்லாத மனிதரின் கை வளர்ந்ததை, என் கண்கள் கண்டபடியால் உடனே நான் இயேசுவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன் என்றார். ஒரு தேவ ஊழியருடன் இருந்த மனிதர், அவர் மூலம் மாற்றம் அடைந்தார். அற்புதத்தைச் செய்த சாட்சியினால் இயேசு கிறிஸ்துவுக்கு தன் தாலந்துகளுடன் உழைக்க ஒப்புக்கொடுத்தார். இயேசு கிறிஸ்துவுடன் இருந்தவர்கள் அவர் மூலமாய் செய்யப்பட்ட அற்புதங்களைக் கண்டதுடன் சாட்சிகளானார்கள்.

3. கர்த்தரை இடைவிடாமல் ஆராதித்தவர்களை தம் வல்லமையின் பிரசன்னதினால் காத்ததைக் கண்ட ராஜா சாட்சியானான்.

''அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக்,மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.' 'தானியேல் 3:28

         ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பத்துமுழ உயரமும், ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து ,பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். பின்பு ராஜா தேசத்தின் அதிகாரிகளையும் சகல மேன்மையான மக்களையும், அதின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான். இவ்வாறு நிறுத்தப்பட்ட பொற்சிலையைப் பணிந்து கொள்ள வேண்டும், இல்லையேல் அக்கினிச்சூளையின் நடுவில் போடப்படுவான் என்று அறிவித்திருந்தான்.         அந்நாட்களில் அடிமைகளாய்க் கொண்டு வரப்பட்ட யூத வாலிபர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அந்த தேசத்தில் விசாரிப்புக்காரர்களாய் இருந்தார்கள். இவர்கள் ராஜா நிறுத்தின பொற்சிலையை வணங்காதபடியால், இது தான் சமயம் என்று அங்கிருந்த கல்தேயரில் சிலர் பொற்சிலையை வணங்கவில்லை என்று குற்றப்படுத்தினார்கள். இதைக்கேட்ட ராஜா அந்த மூன்று வாலிபர்களையும் அழைத்து, இப்பொழுது இசைக்கருவிகள் வாசிக்கப்படும், அப்பொழுது நான் நிறுத்தின சிலைக்கு முன் தாழ விழுந்து பணிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறினான். அத்துடன் இல்லையென்றால் நீங்கள் எரிகிற அக்கினிச்சூளையிலே போடப்படுவீர்கள் என்று எச்சரித்தான். ஆனால் மூன்று வாலிபர்களும் ஒருமனதுடன் நாங்கள் இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் எங்களை உமது கைக்குத் தப்புவிக்க வல்லவராக இருக்கிறார் என்று கூறினதுடன் அவர்கள் நம்பிக்கையில் உறுதியைத் தெரிவித்தார்கள். எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவர், அப்படி தப்புவியாமல் போனாலும், நீர் நிறுத்தின சிலைக்கு முன்பாக தாழவிழ முடியாது என்பதைத் தெரிவித்தார்கள். கடுங்கோபங்கொண்ட ராஜா,அக்கினிச்சூளையை 7மடங்காக சூடாக்கி, அந்த மூன்று வாலிபர்களையும், அக்கினிச்சூளையில் போடப்பட்டார்கள். மூன்று வாலிபர்களை அக்கினிச்சூளையில் போட்டவர்கள் அக்கினியால் கொல்லப்பட்டார்கள்.

                அக்கினியில் போடப்பட்ட மூன்று வாலிபர்கள் மத்தியில் தேவ சாயலான ஒருவர் நடுவில் வந்தார். அவர்கள் அக்கினியின் மத்தியில் உலாவினார்கள். ராஜாவும் மந்திரிமார்களும் அதைக் கண்டு ஆச்சரியப் பட்டதுடன்,  ராஜா சூளை அருகே வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை அக்கினியின் நடுவில் இருந்து வெளியே வரச்சொன்னான். அவர்கள் வெளியே வந்த போது, அவர்களுடைய தலைமயிர்  கருகவில்லை. அவர்களுடைய சால்வைகள் சேதப்படவில்லை. அக்கினியின் மணம் அவர்கள்மேல் வீசவில்லை. இந்த ஆச்சரியமான காரியத்தைக் கண்ட ராஜா, இந்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவிக்கக்கூடாது என்று தீர்மானித்ததுடன், இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க வேறொரு தேவன் இல்லை என்றான்.

                மூன்று வாலிபர்களின் நம்பிக்கையானது ,கர்த்தரின் மகத்துவமான வல்லமையின் செயலை வெளிப்படுத்தி பெரிய சாட்சியாக அமைந்தது

4.கர்த்தரின் ஆவியின் நிறைவினால் சாட்சியாகிறோம்.

   ''பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.'' அப்போஸ்தலர்1:8

                இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் தம்முடைய சீஷர்களை தனக்குப்பின் ஊழியத்தைச்  செய்ய உற்சாகப்படுத்தினார். அதன் மூலம் விசுவாசமுடையவர்களாய், உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தைரியமாய் மக்களுக்கு அறிவித்தார்கள். அத்துடன் எருசலேமில் காத்திருங்கள், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எனக்குச் சாட்சியாக இருப்பீர்கள் என்று கூறினார். அவ்வாறே காத்திருந்து பரிசுத்த ஆவியைப் பெற்று, எதிர்ப்புகளுக்கு மத்தியில் உலகம் எங்கும் அறிவித்தார்கள்.  இன்று நாமும் பரிசுத்த ஆவியினால் பெலப்படும்போது, தைரியமாய் எங்கும் இயேசுவுக்கு சாட்சியாக இருப்போம்.

                இன்றே நம்மைக் ர்த்தர் விடுதலையினாலும், அவருடன் இருப்பதினாலும், நம் பாவத்தை வெளிப்படுத்தி அவரை வந்து பாருங்கள் என்று சொல்ல நம்மை மாற்றி, தம் ஆவியினால் நிறைத்து சாட்சியாக என்றும் வாழவைப்பார்.

      கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.                                                                                 

                                                                                                                                                                                                                      கிறிஸ்துவின்பணியில்,

                                                                                                                                                                                                                        சகோ.C.எபினேசர்  பால்