அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபநேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன்,  ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய பாவப் பழக்கத்தில் இருந்து  நான் விடுபட உமது சமூகத்தில் கெஞ்சி நிற்கிறேன். இந்தப்பாவம் எப்பொழுதும் என் உள்ளத்தில் இருந்து , நான் செய்வது தவறு என்று  உணர்த்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தப்பாவச் செய்கை என்னை ஆளுகைப்படுத்திருப்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாதிருக்கிறேன். .கர்த்தாவே , எனக்கு இரங்கும். என்னுடைய பாவங்களே உமக்கும் எனக்கும் பிரிவினையை உண்டாக்குகிறது. என் பாவங்கள் எப்பொழுதும் என்னைத் துக்கப்படுத்துகிறது. ஆனால் விடமுடியாது தவிக்கிறேன். அன்று பவுல் சொன்னதுபோல நிர்பந்தமான மனுஷன் , யார் என்னை விடுவிப்பார்கள் என்று ஏங்கி இருக்கிறேன். இந்தச் சிறிய பாவம் தானே என்று எண்ணினேன் , ஆனால் அது என்னைத் தொடர்ந்து வேதனைப்படுத்துகிறது. அத்துடன் இந்தப் பாவத்தினால் உம்மையும் , நீர் தந்த பரிசுத்த ஆவியையும் துக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். என் ஆத்துமாவிற்கு விரோதமாகப் போராடுகிற என் மாம்ச இச்சையும், கண்களின் இச்சையும் என்னை விட்டு நீங்கவில்லையே என்று கலங்குகிறேன். என்னைக் கட்டுப்படுத்த முடியாது , என் பார்வையினாலும், செவியினாலும்,  வாயினாலும் , கைகளினாலும் ,கால்களினாலும் பாவம் செய்து கொண்டே வாழ்கிற இந்தக் கட்டில் இருந்து என்றைக்கு விடுவிக்கப்படுவேன் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறேன். இதினால் என்னால் சரியாக ஜெபிக்க, துதிக்க முடியவில்லை. வேதப்புத்தகத்தை திறந்தவுடன் நன்றாக தூக்கம் தான்   வருகிறது. அப்படியே வேதத்தைத் திறந்து படித்தாலும் ஒன்றும் மனதில் பதியாமல் போய் விடுகிறது. மேலும் ஞாயிறு ஆராதனைக்குச் செல்ல மனதில்லாதிருக்கிறது. எதற்கோ நான் ஆலயம் போகிறேன், செய்தி ,துதி ஆராதனை ஏன் என்ற எண்ணத்துடன் கேட்கிறேன் .கர்த்தாவே, எனக்கு இரங்கும். என் கண்களின் இச்சையினால்  என்ன காணவேண்டுமோ அதற்கு மாறாக என் பார்வை செல்லுவதால்  வேதனையடைகிறேன். எனக்கு இரங்கும். இயேசுவே எனக்கு இரங்கி என் பாவ உணர்வையும் ,பாவச் சிந்தையையும் ,பாவ எண்ணங்களையும் என்னை விட்டு அகற்றிவிடும். நான் கிறிஸ்துவுக்குள் புது வாழ்வு வாழ விரும்புகிறேன். பழையவைகள் எல்லாம் ஒழிந்து போகவேண்டும் என்று அதிகமாக வாஞ்சிக்கிறேன். எனக்கு இரங்கும் இயேசுவே. என்னைப் பரிசுத்தமாகும் இயேசுவே .இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக் கொள்கிறேன். நல்ல பிதாவே ,ஆமென்.