செய்தி

"...இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகாமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்."

                                                                                                                                                 யோவான் 7:37

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே  உங்களை வாழ்த்துகிறேன்.

       மனிதன் தன்  வாழ்க்கையிலே பலவிதமான தாகத்தோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்.யார் அவனுடைய தாகத்தைத்
தீர்ப்பார் என்று அறியாதபடி பலவிதமான முயற்சியினாலே சோர்ந்து போனவனாக, சோதனைகளில் அகப்பட்டவனாக, சந்தோசத்தை
இழந்தவனாக,செல்வத்தை இழந்தவனாக,பாடுகள் நிறைந்தவனாய்  மாறுகிறான்.இயேசு கிறிஸ்து,வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே,
நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்று அழைத்தார். இன்னும் யாரெல்லாம் தாகத்தோடு இருக்கிறார்களோ
அவர்கள் எல்லாரையும் அவர் அழைக்கிறார்.ஆகவே தான்  யோவான் 7:37ல் ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து,
பணம் பண்ணக்கடவன் என்று அழைத்தார்.

1.சரீரத்தில் ஏற்படுகிற தாகம்

"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியால் தொய்ந்துபோகிறார்கள்;
அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்."   ஏசாயா 5:13

              சிறைப்பட்ட வாழ்க்கை இருப்பதால் நாவறண்டு தாகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பலவிதமான காரியங்களில்
சிறைப்பட்டிருக்கிற மக்கள் உண்டு. சத்தியத்தை அறியாதபடி,வேதத்தின் மகத்துவங்களை அறியாதபடி இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவை யார் என்று அறியாதபடியினாலே சிறைப்பட்ட வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.சிறைப்பட்ட வாழ்க்கை 
என்றாலே மனிதன் ஒன்றும் தானாக செய்ய இயலாத வேதனையான நிலமை. இதனால் கலங்கி இருக்கிற மக்கள் ஏராளம்  உண்டு.
அதினிமித்தமாய் அவர்களுடைய தாகங்கள் தீர்க்கப்படவில்லை.ஒரு அருமையான குடும்பத்தை நான் அறிவேன்.
இந்தக் குடும்பத்தார் ஒரு வியாபாரத்தைச் செய்து வந்தார்கள்.அந்த வியாபாரத்திற்குரிய பணம் போதுமானதாய் இருந்தது.
ஆனால்  அவர்கள் அதை அலட்சியமாய் நடத்தினபடியினால்,அவர்களுக்கு வேதனையான சூழ்நிலை  வந்தது.
பல கோடி ரூபாய்களுக்குக் கடன்காரர்களாய் மாறினார்கள்.இந்தக் கடனினிமித்தமாய்
அவர்கள் இருக்கிற அந்த ஊரிலே இருக்க முடியாதபடி வெளியேறவேண்டிய நிர்பந்த நிலை வந்தது.
அவர்களுடைய தாகமானது  பணத்தைப் பற்றியதாய்  மாறியது.அதனால் பலவிதமான துக்கங்களை,தோல்விகளை,
பலவிதமான போராட்டங்களை சந்தித்தார்கள். பலவிதமான காரியங்களுக்குச் சிறைப்பட்டு கலக்கத்தோடு வாழ்வதால்,
வாழ்க்கையில் பலவிதமான தாகம் வந்து தவிக்கிற மக்களாய் இருக்கிறோம். இந்த வார்த்தைகளை வாசிக்கிற, தியானிக்கிற
அருமையான தேவா ஜனமே, சகோதரனே, சகோதரியே,உன்னுடைய தாகம் எதனால் வந்தது என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

வேலையின் மிகுதியினால் தாகம்

" தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகத்தவனமாய் ஆலையாட்டவும் பண்ணுகிறார்கள்." யோபு 24:11

        அதற்கு காரணம்   என்னவெனில் யோபு 24:5ல் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரத்தைச் சேர்ப்பதற்காக
பணிசெய்து தாகத்தோடு திரிகிறார்கள் என்று பார்க்கிறோம்.இன்றைக்கு வேலையினிமித்தமாக பலருடைய வாழ்க்கையிலே
தாகம் பெருகிக்கொண்டே இருக்கிறது. இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே , உன்னுடைய வேலையின்
மிகுதியினாலே உள்ளத்தில் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறாயா? சரீரத்தில் உண்டான தாகமானது  உன்னைத் தாக்கிக் கொண்டிருக்கிறதா?
உன்னுடைய எண்ணங்களை, சிந்தைகளைத் தாக்கி ஓன்றுமே  செய்ய இயலாதபடி,ஒன்றுமே சரியாக சிந்திக்க முடியாதபடி,
உன் தாகத்தின் மிகுதியினாலே நீ தவித்துக்கொண்டிருப்பாயானால் இன்று உனக்கு விமோசனமான ஒரு வழி உண்டு. உன் தாகத்தைத் தீர்க்கிற 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கு ஜீவிக்கிறவராய் இருக்கிறார். அவருக்கு இடம் கொடுக்கும் போது, உன் தாகம் சரீரத்திலிருந்து நீங்கவும்,
உன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகவும், அவர் உன்னைச்  சீர்ப்படுத்தி சிறப்படையவும் செய்வார். வேலைப்பளுவினால் ஏற்படுகிற
தாகத்தினால்,மிகுதியான துக்கத்தோடு திரிகிற மக்கள் ஏராளம் உண்டு. வேலை செய்யாமலும் இருக்க முடியவில்லை.
வேலை செய்யவும் பெலனில்லை. நிர்பந்தமான மனுஷனாக கட்டாயம் வேலை செய்தால்தான் அவனுடைய குடும்பத்திற்கு ஆகாரம் கிடைக்கும்
என்று நெருக்கப்பட்டவர்களாய் வாழ்க்கையில் ஒடுங்கிக் கொண்டிருக்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறதைப் பார்க்கிறோம்.

சத்துருவோடு போராடினபடியினால் தாகம்

 " அவன் மிகவும் தாகமடைந்து ,கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக்
கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து , விருத்தசேதனம் இல்லாதவர்கள்
கையிலே விழவேண்டுமோ என்றான்." நியாயாதி 15:18

              சத்துரு என்றுச் சொன்னாலே நமக்கு எதிராய்ச் செயல்படுகிற பிசாசானவனைக் குறிக்கிறது. பிசாசினாலே பாதிக்கப்படுகிற
மக்கள் ஏராளம்  உண்டு. சத்துருவோடு நம்முடைய வாழ்க்கை போராட்டமாய் இருக்கும்போது, தாகம் மிகுதியாய் நமக்குப் பெருகிவிடுகிறது.
சிம்சோன் என்று சொல்லப்பட்ட மனிதன்  ஒரு கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு தனக்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்த
ஆயிரம் பேரைக் கொன்றுப்  போட்டான். அவன் ஒரு பெரிய யுத்தத்தைக் கர்த்தருடைய ஆவியின் பெலத்தினாலே நிறைவேற்றின போது,
அவனுக்குள்ளாய் தாகம் உண்டானது. இன்று நம்முடைய வாழ்க்கையிலும் அப்படித்தான். சரீரத்தில் உண்டான தாகத்தோடு
இருப்பாயானால் உன் வாழ்க்கையின் போராட்டத்தின் நிமித்தமாய் வேதனை வருகிறது. வேதனையின் நிமித்தமாய் கலங்கி இருக்கிற
அநேக மனிதர்கள், அநேக தேவப்பிள்ளைகள் கண்ணீரோடு இருப்பதைப்  பார்க்கிறோம்.

2. ஆவியிலே  உண்டாகிற தாகம்.

           மனிதருடைய வாழ்க்கையில் ஆவியிலே  தாகங்கள் உண்டாகும் போது அவனுடைய
உள்ளத்தில் எதையுமே செய்ய இயலாத நிலையில் இருக்கிறான்.

         "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்". மத்தேயு 5:6ல்  பார்க்கிறோம்.
நீதியின் மேல் உள்ள பசித்தகத்தினால் அநீதி நிறைந்த உலக வாழ்க்கையிலே மனிதன் நீதியைத் தேட வேண்டும்.
அநீதியான செய்கைகளை மனிதர்கள் ஏராளமாய்ச் செய்கிறார்கள். பலவிதமான காரியங்களில் அநீதியான செயல்கள்
விளைவிக்கப்பட்டது என்று எண்ணி தங்களையே மாய்த்துக் கொள்ளுகிற மக்களும் உண்டு. ஆவியில் உண்டாகிற தாகத்தினால்
பலருடைய வாழ்க்கை கசந்துபோய் இருக்கிறது. அவர்களால் ஒன்றும் செய்ய இயலாதபடி சோர்ந்து போனவர்களாய்,
உள்ளத்திலே கலங்கினவர்களாய்  மாறிவிடுகிறார்கள்.

         இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே,சகோதரியே, இன்றைக்குத்  தாகத்தைத் தீர்ந்த தேவன் நமக்கிருக்கிறார்.
உன்னுடைய வாழ்க்கையிலே நீதியைக் குறித்து ஒரு தாகம் இருக்குமானால்,உன் தாகத்தை அறிந்து, அந்தத் தாகத்தைத் தீர்க்கிறவராய்
  இயேசு கிறிஸ்து இருக்கிறார். தாக்கத்தைத் தீர்த்து நம்மை ஆசீர்வதிக்கிற  உன்னதமானவராகிய
இயேசு கிறிஸ்து இன்றைக்கு ஜீவிக்கிறவராய்  இருக்கிறார்.

         ஏசாயா 44:3ல்  " தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்;
உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்."
என்று பார்க்கிறோம்.
இந்தத் தாகத்தினுடைய ஒரு மேன்மையான  காரியம் என்னவென்றால், ஆவியினாலே  நிரப்பப்படுகிற ஆசீர்வாதத்தின் வாழ்க்கை.
பரிசுத்த ஆவியை நான் பெற வேண்டும், நிரப்பப்பட வேண்டும், பரிசுத்த ஆவியினால் வருகிற சகல நல்  ஆசீர்வாதங்களையும் அடையவேண்டும்
என்று ஆவியின் தாகத்தினால் நிறைந்திருக்கிற மக்கள் ஏராளம் உண்டு. ஆனால் தேவன் நம்முடைய தாகத்தைத் தீர்ப்பதற்கு உண்மையுள்ளவர்.
நம்முடைய தாகம் எந்த அளவிலே பெரிதாயிருக்கிறதென்று பார்த்து, அதற்கேற்ற வண்ணமாய் தாகத்தை தீர்க்கிற
அன்பின் ஆவியானவர் இருக்கிறார். நமக்குள்ளாய் இருக்கிற இந்த தாகமானது தீரும் போது  மகிழ்ச்சியும் மேன்மையும்
உண்டாகிவிடும். ஆவியின் தாகம் தீரும் போது அதிலே விடுதலையும் ஆவியில் ஒரு சந்தோஷமும் , ஆவியில் மேன்மையும்
அடையத்தக்கதான சிலாக்கியத்தை அடைகிறோம்.

3.ஆத்துமாவிலே உண்டாகிற தாகம்

"என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது ..." சங்கீதம் 42:2.

             தாகமானது ஆத்துமாவிலே  ஏற்படுகிறபடியினால் ஆத்துமனேசராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய தாகத்தை தீர்க்கிறார்.
தாகமானது  தீர்க்கப்படுவதற்கு வேறொரு வழியில்லை. ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்து ஒருவரே நம்முடைய தாகங்களைத் தீர்த்து
நமக்குள் ஆசீர்வாதங்களை, சமாதானத்தைத் தருகிற தேவனாயிருக்கிறார். ஆத்தும தாகமானது பலவிதங்களில் தீர்க்கப்படுவதற்கு முயற்சிக்கிறோம்.
ஆனால் இயேசு  கிறிஸ்துவே ஆத்தும தாகத்தைத்  தீர்கிறவர்.சங்கீதம் 63:1ல்  " தேவனே , நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத்   தேடுகிறேன் ;
வறண்டதும் விடாய்த்ததும்  தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது ,என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
"
இங்கு ஆத்துமாவின் தாகமானது  வறண்ட நிலத்தில் உள்ள தண்ணீரைப் போல பெருகியிருப்பதைப் பார்க்கிறோம். நம்முடைய தாகமானது மிகுதியாய்
நம்முடைய உள்ளத்தை , ஆத்துமாவை பாதிக்கிறதாய் இருக்கிறது. ஆத்துமா வெறுமையாயிருப்பது நல்லதல்ல என்று சொன்ன
தேவனுடைய வார்த்தையின்படி ஆத்துமாவானது தாகத்தினால் கலங்காதபடி அது தாகம் தீர்க்கப்பட்டதாய் இருக்க வேண்டும்.
இவ்விதமாய் தாகம் தீர்க்கப்படும் போது , நிச்சயமாக நம் வாழ்க்கையில் தெளிந்த புத்தியோடு சகலவற்றையும் செவ்வையாய் செய்வதற்கு,
தேவனுடைய பரிசுத்த பிரசன்னம், பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளாய் நிறைந்திருந்து  நம்மை வழி நடத்துவார்.

                   இன்னுமாய்  சங்கீதம் 143:6ல் "என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப் போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது ".
என்று பார்க்கிறோம். நம்முடைய கர்த்தரும் இரட்சகராகிய இயேசு  கிறிஸ்து நம்முடைய தாகத்தைத் தீர்க்கும் போது யோவான் 4:14ல் 
"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும்  தாகமுண்டாகாது ; நான் அவனுக்குக்  கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே
நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார் ." என்று பார்க்கிறோம் . இப்படியாக நம்முடைய தாகத்தைத்  தீர்த்து நம்முடைய வாழ்நாள் முழுவதும்
ஆசீர்வாதமாய்  இருக்கத்தக்கதான  ஒரு மேன்மையான வாழ்க்கையைத் தருவதற்காகத்தான் 'தாகமுள்ளவன்  என்னிடத்தில் வரக்கடவன் '
என்று அன்பினால் அழைக்கிறவராய்  இருக்கிறார்.

தாகமானது  ஏன் வருகிறது ?

1.தாகமானது சாபத்தினால் வருகிறது

"சகலமும்  குறைவுபட்டு , பட்டினியோடும் தாகத்தோடும்  நிர்வாணத்தோடும்  கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும்
சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும்,
இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின் மேல் போடுவார்கள்."  உபாகமம் 28:48

 

தாகமானது சாபத்தினால் வருகிறது. "இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் 
கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்கு செவிகொடாதேபோவாயாகில் ,இப்பொழுது சொல்லப்படும்
சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப்  பலிக்கும் ." என்று  உபா 28:15 ல்  பார்க்கிறோம்.  ஆகவே அவர் சத்தத்திற்கு செவிகொடுக்க வேண்டும்.

கர்த்தருடைய சத்தத்தை அலட்சியப்படுத்தி வாழ்வதினாலே சாபம் பெருகி வேதனையோடு வாழ்கிற நிலையை பார்க்கிறோம். அநேக நேரங்களில்
தேவனுடைய ஜனங்களின் ஆலோசனைக்கு, தேவனுடைய ஊழியரின் ஆலோசனைக்கு செவி கொடுப்பது கிடையாது.தேவன்
நமக்கு நல்  ஆலோசனைகளை தருகிறார். அதனால் பலவிதமான காரியங்களுக்கு தப்பிக்கொள்கிறோம். ஆனால் அதை
அசட்டைச் செய்து வாழ்வதினாலே பலவிதமான வேதனைக்குரிய காரியங்கள் நடந்து நம்மைத் துக்கப்படுத்துகிறது.
ஐயோ, நான் என் போதகருடைய வார்த்தைகளைக் கேட்கவில்லையே என்று மிகவும் கலங்குகிற மக்களும் உண்டு.
அவர்களுடைய வாழ்க்கையிலே சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டும்  அதற்கு முக்கியத்துவம் தராதபடி மாம்சத்தின்
இச்சைகளுக்கும், ஜீவனத்தின் இச்சைகளுக்கும் , ஜீவனத்தின் பெருமைக்கும்,கண்களின் இச்சைகளுக்கும் அடிமையாவதினாலே
வேதனை அடைகிற மக்களாய் இருக்கிறார்கள். கர்த்தருடைய  வார்தையைக்  கேளாதபடி சாபத்திற்குள்ளாகிறபடியினால்   தாகம்  வருகிறது.

2.பொல்லாப்பானதைச் செய்து பிரியமில்லாததைத் தெரிந்துகொள்ளும் போது தாகம்

"...என் பார்வைக்குப்   பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமில்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்;
இதோ,
என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்... "  ஏசாயா  65:12,13

பொல்லாப்பானதைச் செய்து பிரியமில்லாததைத் தெரிந்துகொள்ளுகிறபடியினாலே, இந்த தாகமானது நமக்குள்ளாய் அனுமதிக்கப்படுகிறது.
நம்முடைய செய்கைகளெல்லாம்  எப்படி இருக்கிறது? தேவனுக்கு பிரியமானதைச்  செய்து கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் வாழ்கிறோமா?
அவருக்கு பிரியமில்லாததைத் தெரிந்து கொண்டு பொல்லாப்பானதைச்  செய்து கொண்டிருப்போமானால் வாழ்க்கையிலே என்றுமே
 தாகத்தோடு தவிக்கிற ஒரு வேதனைக்குரிய வாழ்க்கைதான் என்றும் உருவாகும். அநேகருடைய வாழ்க்கையிலே பணத்தின் மேல் ஒரு தாகம்.
இப்படி பலவிதமான தாகம் நிறைவாய் இருக்கிறபடியினாலே ஏன் வாழ வேண்டும் என்று தவறான தீர்மானங்களுக்கு அடிமையாகிறார்கள்.
இந்த வார்த்தைகளைத் தியானிக்கும் போது, நம்மை ஆராய்ந்து பொல்லாப்பானதைச் செய்து , தேவனுக்குப் பிரியமில்லாததைச்
செய்து கொண்டிருக்கிறேனோ என்று ஆராய்ந்து அறிந்து நம்மை சீர்படுத்துவோமானால் நிச்சயமாக நம்முடைய தாகத்தை அவர் தீர்ப்பார். மகிழ்ச்சியும் மேன்மையும்  உண்டாகும்.

3.வனாந்தர  வாழ்க்கையிலே தாகம்.

 " அவர்கள்  தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய் , பசியாகவும்,
தாகமாகவும்,
ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள் "சங்கீதம் 107:4,5

        வனாந்தர வாழ்க்கையிலே தாகமானது  உண்டாகிறது. வனாந்தர வாழ்க்கை என்றாலே கைவிடப்பட்ட நிலமை.  
திசை தெரியாத ஒரு வாழ்க்கை .நான் எங்கே போகிறேன்? என் வாழ்க்கை எவ்விதமாய் முடியும்? என் வாழ்க்கையினுடைய
நித்திய காலத்தை எங்கு செலவிடப்போகிறேன் என்று உணரமுடியாதபடி,புரிந்து கொள்ள முடியாதபடி வாழ்க்கை  வாழ்ந்து கொண்டிருக்கிற நிலமை.
அநேகர் தவறான முடிவு எடுக்கிறார்கள்.அவர்களுடைய எண்ணங்கள், சிந்தைகள் நிறைவேறவில்லையே என்று தவிக்கிற ஓரு  வாழ்க்கை .

             ஆகார் , சாராயின் அடிமைப்பெண். கர்த்தரோ அவள் மூலமாய் ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுத்தார் .  
ஓரு நாளிலே அந்த மகனோடு ஆகார் அனுப்பப்பட்டதைப்  பார்க்கிறோம். ஆபிரகாம் அந்த ஆகாரை அழைத்து, மகனையும் ஒப்புக்கொடுத்து,
ஒரு துருத்தியில் தண்ணீரையும் கொடுத்து அனுப்பிவிட்டபொழுது, அவள் பெயர்செபா வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள் .
இன்று அநேகருடைய வாழ்க்கையும் அப்படிதான் இருக்கிறது.மனிதரால் கைவிடப்பட்ட நிலமை.நம்மை நேசிக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோ
ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டார்.தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று சொன்னவர், இன்றைக்கும் ஜீவிக்கிறவராய் இருக்கிறார்.

4.கர்த்தரிடத்தில் திரும்பாமற்போனதினால்

" இரண்டு மூன்று பட்டணங்களின்  மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் 
அலைந்தும்
தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை ; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்." ஆமோஸ் 4:8

            நம்முடைய வாழ்க்கையில் பாவங்களை விட்டு, மீறுதல்களை விட்டு, அவரிடத்தில் திரும்புவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
அநேகர் பலவிதமான காரியங்களில் உள்ள குறைவுகளினால், நிறைவான தாகம், மற்றும் தேவைகளோடு இருக்கிறார்கள்.
நாம் சர்வ வல்லமையுடைய, சர்வ அதிகாரம் உடைய தேவனைத் தேடுவதற்கு மனதில்லாதிருக்கிறர்கள்.
அவரைத் தேடுவதற்குப் பதிலாக சிலர் சபிக்கிறார்கள், சிலர் ஏன் இப்படிப்பட்ட காரியத்தை ஆண்டவர் செய்கிறார் என்று குற்றப்படுத்துகிறதைப் பார்க்கிறோம்.
உலக வாழ்க்கை இன்று அப்படித்தான்  இருக்கிறது. அவரை அறியாதபடியினாலே பலவிதமான காரியங்களைச்  சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்  ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்து தாகத்தைத்  தீர்ப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறார். தாகத்தைத்  தீர்ப்பதற்காக ,
அவர் கல்வாரிச் சிலுவையிலே தன்னுடைய இரத்தைத்தையெல்லாம் சிந்தினார்.தாகமூண்டவராய்  சிலுவையிலே தாகமாயிருக்கிறேன்
என்று கதறினார்.உங்களையும் என்னையும் நித்திய இராஜ்யத்திற்குக் கொண்டுச்செல்ல  வேண்டும் என்ற தாகத்தோடு இருந்தபடியினாலே
சிலுவை பரியந்தம் அவருடைய தாகமானது நிறைந்திருந்தது. ஆகவே இன்று நம்முடைய வாழ்க்கையிலே தாகம் தீர்க்கப்படுவதற்கு ஒரு வழியுண்டு.
அந்த வழியைத்  தெரிந்துக்கொள்வோமானால் தாகமானது  முற்றிலுமாய் தீர்ந்துவிடும்.

5.ஊழியத்தின் பாடுகளின் நிமித்தமாய் தாகம்.

            "பிரயாசத்திலும் , வருத்தத்திலும் , அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும் ,
அநேகமுறை உபவாசங்களிலும் , குளிரிலும் , நிர்வாணத்திலும்  இருந்தேன்."  2கொரி11:27

         ஊழியத்தின்  பாதையிலே பவுல்  அடைந்த தாகத்தைத்  தெரிவித்திருக்கிறார். இன்றைக்கு நம்முடைய தாகத்தைத் 
தீர்ப்பதற்கு இயேசு கிறிஸ்து அழைக்கிறார். இந்த அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் வரும் போது, நம்மிடத்திலுள்ள
எல்லாக் காரியங்களிலும் தாகம் தீர்க்கிறவராயிருக்கிறார்.

II தாகம் எப்பொழுது தீரும் ?

1. விசுவாசிக்கும் போது தாகம் தீரும்.

"...என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான் ."யோவான் 6:35.

        தாகம் தீர்க்கப்பட விசுவாசம் நமக்கு  வேண்டும். விசுவாசிக்கிறவனுடைய தாகத்தைத்  தீர்த்து அவர்  அவர்களை  
ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். விசுவாசமானது மிகவும் முக்கியமானது . விசுவாசமில்லாமல் தேவனை நாம் பிரியப்படுத்த இயலாது.
 நம்முடைய விசுவாசத்தின் அளவுக்குத்  தக்கதாக தாகத்தைத்  தீர்க்கிறார். தாகமானது பிள்ளையினுடைய வியாதி சுகமாக வேண்டும்,
போராட்டம் நீங்கி பிள்ளையின் திருமணம் நடைபெற வேண்டும், பிள்ளைக்குக்  குழந்தை இல்லையே என்ற தாகமாக இருக்கலாம்.
ஆனால்  விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது, உன்னுடைய விசுவாசம் பெரிது என்று சொன்னவர், உன்னுடைய பெரிய
விசுவாசத்தைக் கண்டு தாகத்தை முழுமையாகத் தீர்க்கிறவராயிருக்கிறார்.'விசுவாசித்தவளே பாக்கியவதி ' என்று சொன்னதுபோல
நாம் விசுவாசிக்கும் போது, அற்புதத்தைச் செய்கிறார். நான் விசுவாசிக்கிறவர் இன்னாரென்று அறிந்திருக்கிறேன் என்று சொல்கிற
மக்களாய் இன்று முதல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போம், தாகம் தீர்க்கப்படுவோம்.

 

2.கர்த்தரால் நடத்தப்படும் போது தாகம் தீரும்  

"அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை ; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை;
அவர்களுக்கு இரங்குகிறவர்  அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய் விடுவார் ." ஏசாயா 49:10

        நமக்கு இரங்குகிற  தேவன் ஒருவர் இருக்கிறார். இரக்கத்தில் ஐசுவரியமுடைய அன்பின் ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்து, நம்மை
நித்தமும் நடத்தக்கூடிய ஆண்டவராக இருக்கிறார். ஒருவேளை நேற்று நடத்தினரே , இன்று நடத்துவாரா  என்று சந்தேகப்படவேண்டாம்.
நாம் இந்த உலகத்திலுள்ள குருடரைப் போல, பாதை தெரியாத மக்களாய்  இருக்கலாம். ஏசாயா 42:16ல் குருடரை அவர்கள் அறியாத பாதையிலே
நடத்துகிற தேவன் என்று பார்க்கிறோம். நம்முடைய கரங்களைப்  பிடித்து நடத்துகிற தேவன் இன்றும்  ஜீவிக்கிறவராயிருக்கிறார் .
நம்மை  முடிவுப்பரியந்தம்  நடத்தி, நித்தியமான இராஜ்யத்திலே  கொண்டு சேர்க்கக்கூடிய  ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்துவால்
நடத்தப்படுவதற்க்கு இடம் கொடுக்க வேண்டும். அவரை ஏற்றுக்கொள்வதோடு, அவரால் நடத்தப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கும்போது,
அவர் நம்மை முற்றிலுமாய் நடத்தி நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியினாலும், மெய் சமாதானத்தினாலும் நிரப்பி , தாகத்தைத் தீர்க்கிறவராயிருக்கிறார்.

3. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவருடைய  வாழ்க்கையில் தாகத்தைத் தீர்க்கிறார்.

" உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில்  உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய
கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துக்கொண்ட  யெஷுரனே  , பயப்படாதே." 
" தாகமுள்ளவன்மேல்
தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின் மேல்
என் ஆவியையும், உன் சந்தனத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." ஏசாயா 44:2,3

          தேவன் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய நம்முடைய தாகத்தைத்  தீர்க்கிறவர். உன் தாகம் ஆவிக்குரிய தாகமாக,
ஆவியின் வரங்களைக் குறித்து தாகமாக, ஊழியத்தின் தாகமாக இருக்கலாம்.தாகம் எதுவாயிருந்தாலும் தாகத்தைத்  தீர்த்து நமக்கு
சந்தோஷத்தை , சம்பூரண ஆசீர்வாதங்களை நிறைவாகப் பெருகச் செய்கிறவர் இன்றும் ஜீவிக்கிறார். நம்முடைய தாகத்தைத் தீர்க்கிறதற்கு
உண்மையுள்ளவராயிருக்கிறார். அவரால் தெரிந்துக் கொள்ளப்பட்ட  ஜனமாய், சந்ததியாய்  மாற, அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்டவன்
என்று சொல்லத்தக்கதான வாழ்வை அடைய நம்மை ஒப்புக் கொடுப்போம். கர்த்தர் நம் தாகத்தைத் தீர்ப்பார்.     

4.மனக்கண் திறக்கப்படும் போது நம் தாகம் தீர்க்கப்படும்.

"தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்;அப்பொழுது  அவள் ஒரு தண்ணீர்த் துரவைக்  கண்டு,போய் ,
துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்குக்  குடிக்கக் கொடுத்தாள் ."ஆதியாகமம் 21:19

      ஆகாருடைய வாழ்க்கையிலே ஒரு போராட்டமான நிலமை . தண்ணீர் தீர்ந்து விட்டது, தன் மகனுக்குத் தண்ணீர்த் தேவை. எங்குமே
கிடைக்காத ஒரு சூழ்நிலை. அந்த சூழ்நிலையிலே ஆகாருடைய கண்களைத் திறந்த பொழுது, ஆகார்  இருக்கிற அந்த வனாந்தரத்திலேயே
ஒரு நீர்த்துறவைக்  காணவும் , தாகம் தீர்க்கப்படுவதற்குத் தண்ணீர் எடுக்கவும், கர்த்தர் உதவி செய்தார். கண்களைத் திறக்கும் போதுதாகத்தைத்  தீர்க்கிறார் .
கண்கள் திறக்கப்படும்பொழுது   பல ஆசீர்வாதங்கள் உண்டு. நமக்குக்  கொடுக்கப்படுகிற பாதுகாவலை அறிந்து கொள்ள முடியும். கண்கள் திறக்கப்படும் போது,
வேதத்தின் மகத்துவங்களைப்  பார்க்க முடியும்.

5. ஆவியின் ஞானஸ்நானத்தினால் தாகத்தைத்  தீர்க்கிறார்.

 "...ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு,எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே
தாகந்தீர்க்கப்பட்டோம் ." 1கொரி .12:13

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவியினாலே நம்மை ஸ்நானம் பண்ணுகிறவர். யோவான்  ஸ்நானகன், மத்தேயு 3:11ல் ' ஆவியினாலும் ,
அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் ' என்று சொல்வதைப்  பார்க்கிறோம். நமக்குள் சுத்திகரிப்பின் நல்வாழ்வைத் தருகிறார்.
ஆகவே அவருக்குள்ளாய் இந்த ஞானஸ்நானத்தைப் பெறும்பொழுது , நம்முடைய தாகமானது  தீர்க்கப்படுகிறது. நமக்காக பலியான இயேசு கிறிஸ்துவின்
சரீரத்திற்குள்ளாக நாம் ஒரே ஆவியினாலே ஞானஸ்நானத்தைப்  பெரும்பொழுது , நம்முடைய தாகத்தைத்  தீர்த்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.
ஆகவே அவருடைய சத்தத்திற்குச் செவிக்கொடுத்தவர்களாய் இருப்போமானால் , உங்களுடைய தாகம் எப்படிப்பட்டதாய்  இருந்தாலும் , அதை தீர்த்து ஆசீர்வதிக்கிறார்.

                                                                                             கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

                                                                                                                                                                                     கிறிஸ்துவின்   பணியில் ,

                                                                                                                                                                                       சகோ   சி . எபனேசர் பால் .