குடும்பங்களிலும், தனி நபரிலும், தேசங்களிலும் சமாதானம் பெருக ஒரு ஜெபம்.
அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன். போட்டியும், பொறாமையும் நிறைந்த இந்த உலக வாழ்க்கையிலே சமாதானத்தையும் சந்தோஷத்தையும், இழந்து தவிக்கிற மக்கள் பெருகி வருவதை நீர் அறிவீர். இம்மட்டும் என் உள்ளத்திலே நீர் தந்திருக்கிற சமாதானத்திற்காய் ஸ்தோத்திரம். சமாதான பிரபுவாய் இந்த உலகத்திற்கு வந்தவரே, என்னுடைய சமாதானத்தை வைத்து போகிறேன் என்று சொன்னவரே, இன்று என் பிள்ளைகளினால் வருகிற சமாதானக் குறைவு நீங்கி மெய்யான சமாதானம் பெருக, நீர் எனக்கு உதவிச்செய்யும். அவர்கள் உம்மால் போதிக்கப்படவும், உம்முடைய வார்த்தையின்படி செய்வதற்கு ஏற்ற உள்ளம் உடையவர்களாய் மாறவும், அவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மெய் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் நீர் அருள்வீர் என்று விசுவாசித்து உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். திருமணக்காரியங்களிலும், வேலைக் காரியங்களிலும், பெற்றோரைக் கனப்படுத்துகிற காரியங்களிலும், அவர்கள் உமக்கு முன்பாக நலமானவைகளைப் பற்றிக் கொண்டு வாழ நீர் அவர்களுக்கு உதவிச் செய்யும். தடைகளினாலும், தாமதங்களினாலும், அவர்களுடைய வாழ்க்கையில் உண்டாகிற கசப்புகளை அகற்றி, கல்வாரி அன்பினால் நிரப்பப்பட நீர் அவர்களுக்கு உதவிச் செய்யும். கர்த்தாவே, உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குவேன் என்று சொன்னவரே , அந்த வாக்கு என் வாழ்க்கையில் நிறைவேற கிருபைச் செய்யும். என் வேலை ஸ்தலத்திலும், நான் வசிக்கும் பகுதியிலும், நான் ஆராதிக்கிற ஆலயத்திலும் மெய்யான சமாதானத்தை நீர் அருளிச் செய்வீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். என் குடும்ப வாழ்க்கையில் நான் குறைவுபட்டு சமாதானத்தை இழந்து விடாதபடி, காத்தருளும். கர்த்தாவே, நான் வசிக்கும் இந்த தேசத்திலே சமாதானத்திற்குரிய காரியங்கள் குறைவுபட்டுக் கொண்டிருப்பதை நீர் அறிவீர். சபைகளிலும் ஜனத்திற்கு ஜனம் விரோதமாக பெருகி வருகிற இந்த சூழ்நிலையை நீர் அறிவீர். மெய்யான சமாதானத்தை அருளுகிற அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, என் ஜெபத்தைக் கேட்டு தேசத்தில் சமாதானத்தைத் தாரும். நீர் அதைச் செய்வீர் என்று உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.