ஜெபம்

   பெலன் குன்றிய முதியவர்களுக்காகவும்,
   பெலவீனமுள்ளவர்களுக்காகவும் ஒரு ஜெபம்

      அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன். கடந்த நாளில் என் ஜெபத்தைக் கேட்டு அற்புதமான விதத்தில் எனக்கு சுகம் கொடுத்தீர். அதற்காக உமக்கு கோடாகோடி துதிகளையும், ஸ்தோத்திரங் களையும் செலுத்துகிறேன். கர்த்தாவே, உமது செவிகள் என் ஜெப மன்றாட்டிற்கு திறந்திருப்பதாக. நான் என் பெலவீனத்தில் விழுந்து அழிந்து விடாதபடி எனக்கு இன்று உதவிச் செய்யும். ஜெபத்தைக் கேட்கும் அன்பின் தேவனே, உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கிற என் ஜெபத்திற்கு பதில் தாரும். என்னை உமது கல்வாரி அன்பினால் நிரப்பும். என் உதடும், என் வாயும் உம்மையே புகழட்டும். சில சமயங்களில் என் பெலவீனங்களை எண்ணும்போது, இன்னும் எத்தனை நாட்களோ என்ற எண்ணமும் கவலையும் தோன்றுகிறது. என்னுடைய உள்ளத்தில் என் மகன்/மகள் திருமணம் நடைபெறுமா, அதைக் காண்பேனா என்று ஏங்குகிறேன். சில சமயம் கர்த்தாவே, என் பிள்ளைகளின் பிள்ளைகளைப் பார்ப்பேனோ என்ற தவிப்பும் உள்ளத்தில் வருகிறது. ‘பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்’ என்ற கர்த்தாவே, எனக்கு இரங்கும். இன்று எதையுமே என்னால் செய்ய முடியாது தடுமாறுகிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் நடக்கவோ, படுக்கையை விட்டு எழும்பவோ முடியவில்லை. என் உடைந்த/பெலவீனமான எலும்பினால் வேதனையடைகிறேன். ‘வேதனை நீங்கி சுகமாயிரு’ என்ற கர்த்தாவே, இன்றைக்கு எனக்கு இரங்கும். ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ என்ற வாக்கை நிறைவேற்றும். சில சமயம் என் இளவயதின் காரியங்களை எண்ணி, என் பெலத்தை இழந்து விட்டேனே என்ற மனதின் துக்கம் என்னைப் பாடுபடுத்துகிறது. என் பெலவீனத்தினால் என் மகன்/மகள், என் மனைவி /என் கணவர் இன்னும் என்னை நேசிக்கிறவர் வேதனையும் துக்கமும் அடைவதைப் பார்க்கும்போது நான் மிகுதியாய் சோர்வடைகிறேன். ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்’ என்று சொன்ன கர்த்தாவே, எனக்கு இரங்கி உமது இரட்சிப்பின் சந்தோஷத்தினால், உம்முடைய பிரசன்னதினால் உண்டாகும் சந்தோஷத்தையும் இன்றே எனக்குள் அருளிச்செய்து என்னை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.