செய்தி

“...திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

                                                                          ஏசாயா 41:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

     மனிதனின் வாழ்க்கையிலே திகைக்கக்கூடிய பலவிதமான காரியங்கள் தோன்றுவதைப் பார்க்கிறோம். இக்காரியங்கள் அதிர்ச்சியைக் கொண்டு வருகிறது. நாம் எதிர்பாராத காரியங்கள் பலநேரங்களில் தோன்றி நம்மை திகைக்க வைக்கிறது. இதனால் உள்ளம் உடைந்து, வேதனை அடைகிற மக்கள் ஏராளம். சிலர் என்ன செய்வதன்று அறியாது, தவறான தீர்மானங்களை எடுத்து, தங்களை மாய்த்துக் கொள்ளுகிறார்கள். இவ்விதமான திகைக்க கூடிய நிலைகள் பல காரணங்களினால் வருகிறது.

I. மனிதன் திகைக்கக்கூடிய காரியங்கள் ஏன் வருகிறது?

1. கர்த்தரின் கட்டளைகளை அசட்டை செய்வதால் வருகிறது.

“கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பர்.” உபாகமம் 28:28

     கர்த்தருடைய கட்டளைகளை அசட்டை செய்து, அவற்றிற்குக் கீழ்ப் படியாதபடியால் இத்திகைக்கின்ற காரியங்கள் நமக்கு நேரிடுகின்றது. கர்த்தர் சில காரியங்களை எச்சரித்துச் சொல்லுகிறார்; சில காரியங்களை ஆலோசனையாகச் சொல்லுகிறார். சில காரியங்களை ஆறுதலாக சொல்லுகிறார். சில காரியங்களை ஆசீர்வாதமாக சொல்லுகிறார். அநேகர் இதை ஏற்றுக் கொள்வது கிடையாது. தாங்களே ஞானிகள் என்று எண்ணு கிறார்கள். எனவே தங்களுடைய மனவிருப்பதின் படி செய்து, தோல்வியும் துக்கமும் அடைந்து, திகைத்துக் கலங்குகிறார்கள்.

     ஒருமுறை ஒரு சகோதரர் தனக்கு நன்றாய்த் தெரியும் என்று ஒரு தொழிலை ஆரம்பித்தார். தான் இதைக்குறித்து நன்றாய்ப் படித்தவர், அனுபவம் உண்டு என்று எண்ணி தொழிலை ஆரம்பித்தார். கர்த்தருடைய சித்தம் இது அல்ல என்று அறிவிக்கப்பட்டும், அதை ஏற்றுக்கொள்ளாது பல இலட்சம் ரூபாய்களை செலவிட்டு இத்தொழிலை துவங்கினர். ஆரம்பத்தில் சில காலம் நன்றாய் நடைபெற்றது. ஆனால் திடீரென்று வியாபாரம் குறைவுபட்டு, நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. அச்சூழ்நிலையிலும், கர்த்தரின் வார்த்தைக்கு மாறாக செயல்பட்டார். ஒருநாளில் தொழிலை தொடர்ந்து நடத்தமுடியாதபடி, அதை மூடக்கூடிய நிலை வந்தது. அவருடைய மனநிலையும் பாதிக்கப்பட்டது. திகைத்துப் போய் தனிமையை விரும்பு கிறவராய் மாறினார். யாரையும் பார்த்துப் பேச மனதில்லாதவராக மாறினார்.

     அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய ஆலோசனைகளும், கட்டளைகளும், நியமங்களும் வாழ்க்கையில் பின் பற்றக்கூடிய அவசியமானவைகள். இந்த ஜீவ வார்த்தைகளை விட்டு விட்டால், திகைப்பும், பாடுகளும் உண்டாகும்.

2. பாவத்தினால் திகைப்பு உண்டாகிறது.

"அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள்." தானியேல் 5:9

     பெல்ஷாத்சார் என்னும் ராஜா ஒரு பெரிய விருந்து செய்தான். அவனுடைய பிரபுக்களும் மனைவிகளும், வைப்பாட்டிகளும் திராட்சரசம் குடித்தார்கள். அவர்கள் குடித்து கொண்டாடுவதற்கு எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளி பாத்திரங்களைக் கொண்டு வரும்படி ராஜா கட்டளையிட்டான். அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட பரிசுத்தமான பாத்திரங்களில் குடித்துக் கொண்டிருக்கிற வேளையிலே மனுஷ கைவிரல் தோன்றி சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று. இதைக் கண்ட அவனுடைய முகம் வேறுபட்டது. அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப் பண்ணிற்று. அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது. அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்களை வாசிப்பதற்கும், அதன் அர்த்தத்தை அறிவிப்பதற்கும் ராஜ்யத்திலுள்ள ஜோசியரையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைத்து வரும்படி உரத்த சத்தமாய்க் கூறினான்.

     அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருக்கென்று, கர்த்தருடைய பணிக்கென்று, கர்த்தருடைய ஊழியத்திற்கென்று, பிரதிஷ்டை பண்ணப் பட்ட எதையாகிலும் சுயபிரயோஜனத்திற்காக பயன் படுத்துவோமானால் தேவ கோபாக்கினை தோன்றி திகைப்பினாலும், பாடுகளினாலும் வேதனை அடையும் நிலை உண்டாகும்.

     ஒருமுறை ஒரு ஆலயத்தைச் சார்த்த ஊழியர் தங்கும் வீட்டில், அவ்வூழியர் மரித்தபின்பு, அவருடைய குடும்பம் வீட்டைக் காலிசெய்யாமல் தங்கி இருந்தனர். அவ்வீட்டில் ஒரு மிகப்பெரிய தோட்டம் இருந்தது. அதில் விளையும் விளைச்சல் அதிக வருமானம் கொடுத்தது. கர்த்தருடைய ஆலோசனையாக அவ்வீட்டைக் காலிசெய்யச் சொன்னபோதும், எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அதன் முடிவு திகைக்கத்தக்கதான நிகழ்ச்சிகள் மகளின் திருமண வாழ்வில் ஏற்பட்டது. திருமணமான அந்த நாளிலேயே கணவனும், மனைவியும் பிரிந்தனர். கர்த்தருக்கென்று, பரிசுத்தமாக்கப் பட்ட எந்த நிலங்களையோ, சொத்துக்களையோ, பொருட்களையோ நாம் சொந்தகாரியங்களைக்குப் பயன்படுத்தினால், திகைக்கத்தக்கதான வேதனைகள் ஏற்படும்.

3. யுத்தத்தில் எதிர்பாராத நிகழ்ச்சியினால் திகைப்பு

"...பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து," நியாயாதிபதிகள் 20:41

     இஸ்ரவேலர் பென்யமீனரோடு யுத்தம் செய்தார்கள். பரதேசியான ஒரு லேவியனுடைய மனைவியை பென்யமீன் அவலட்சணமாக நடத்தியதால் அவள் மரித்தாள்.  இதன் காரணமாக இந்த யுத்தம் நடைபெற்றது. இதில் இரண்டு முறை இஸ்ரவேலர் தோல்வி அடைந்தனர். ஆனால் மீண்டுமாய் யுத்தம் நடைபெற்றபோது, இஸ்ரவேலர் பட்டணத்திற்கு வெளியே பதிவிடை வைத்தார்கள். எனவே இஸ்ரவேலர் யுத்தத்திலே பின்வாங்கின போது, பென்யமீனர் முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல அவர்கள் நமக்கு முன்பாக முறியடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும், கொல்லவும் தொடங்கினார்கள். ஆனால் பதிவிருந்தவர்கள் கிபியாவின்மேல் பாய்ந்து, பட்டணத்தில் இருக்கிறவர் களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள். பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணினார்கள். பென்யமீன் மனுஷர் தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்தார்கள்.

        நம்முடைய வாழ்க்கையிலும் நம் எதிர்பாராத காரியங்கள் நடைபெறும் போது, திகைத்து தடுமாறுகிறோம். பகையின் காரணமாக ஒருவரை யொருவர் கொலை செய்வதற்குக் காத்திருந்தனர். அதில் ஒருவர் ஒரு சிறிய பாதை வழியாய் சென்று, ஆலயத்திற்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அவருடைய எதிரிகளோ அவருக்கு எதிராக வந்து, வாகனத்தைத் திரும்பிச் செல்ல முடியாதபடி ஒரு காரியத்தை உண்டு பண்ணி, அவரைத் திகைக்க வைத்தனர். திகைப்பு உண்டானபோது, என்ன செய்வதென்று அறியாது கலங்கினார். இவ்வாறு திகைத்துக் கொண்டிருந்தபோது பரிதாபமாய் கொல்லப்பட்டார்.

4. கர்த்தரின் சத்தம் திகைப்பை உண்டாக்குகிறது

"...சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப் படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமா யிருக்கிறீர் என்றான்..." அப்போஸ்தலர் 9:4-6  

     முதன் முறையாக கர்த்தரின் சத்தத்தைக் கேட்ட சவுல், கலக்கமும் திகிலும் அடைந்தான். கர்த்தரின் பிரசன்னம் அவனைச் சந்தித்ததைப் பார்க்கிறோம். கர்த்தரின் வெளிச்சம் வீசியதோடு அவருடைய சத்தத்தையும் கேட்டான். ‘சவுலே, சவுலே’ என்று அவனைப் பேர்சொல்லி அழைக்கும் சத்தத்தைக் கேட்டான். அவன் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றபோது, அவனுக்கு நடுக்கமும், திகைப்பும் உண்டானது. பராக்கிரமம் செய்யும் கர்த்தருடைய சத்தம் வல்லமை உடையது. இந்த வல்லமையான சத்தம் சவுலின் காதில் விழுந்தபோது, அவனைத் திகைக்கச் செய்ததோடு மாற்றத்தையும் உண்டாக்கியது. 

     இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாயும், அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு விரோதமாயும் எழுந்த இந்த சவுல், கர்த்தரின் சத்தத்தின் வல்லமையினால் அவரை ஆண்டவராக ஏற்றுக் கொண்டான். அவருடைய சித்தத்தின்படி நடப்பதற்கு தன்னை அர்ப்பணித்தான். அருமையான தேவ ஜனமே, கர்த்தரின் வெளிச்சம், கர்த்தரின் சத்தம் மனிதர்களைத் திகைக்க வைப்ப தோடு மனிதர்களைக் கர்த்தருக்குள் நடத்தும் வல்லமையுடையதாய் இருக்கிறது.

     வாழ்க்கையில் வேறுவழியில்லை, படித்து முடித்தும் வேலையில்லை என்ற பாடுகளோடு வாழ்ந்த வாலிப மகள், ‘இனி மரணம் தான் என்னுடைய முடிவு’ என்று எண்ணி தற்கொலை செய்யத் திட்டமிட்டாள். தன் தாய்க்கு இனி பாரமாயிராதபடி இருக்க வேண்டுமென்று தற்கொலைக்கு முயற்சி செய்த போது, வீட்டிற்கு வந்த வேதவசனம் அடங்கிய புத்தகத்தின் வார்த்தை அந்த மகளைத் தொட்டது. ‘கலங்காதே, திகையாதே’ என்ற அந்த வார்த்தை அவளுடைய வாழ்க்கையில் ஒரு புது திருப்பத்தை உண்டாக்கியது. தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டாள். ஆச்சரியமான விதத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. குடும்பத்திற்கு ஆதரவாக மாறினாள். நிந்தையை உண்டாக்க வேண்டிய மகள், குடும்பத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தாள்.

5. புதிய பொறுப்பைப் பெற்றதால் திகைப்பு

"...திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." யோசுவா 1:9

     நூனின் குமாரனாகிய யோசுவா மோசேக்கு மிகுந்த உதவியாக இருந்தான். மோசேயின் சொற்படி சகலத்தையும் நேர்த்தியாய் செய்தான். உடன் படிக்கைப் பெட்டியின் கூடாரத்தை விட்டு விலகாதிருந்த  ஒரு வாலிபன். மோசேயின் வார்த்தையின்படி அமலேக்கியரோடு யுத்தம் செய்தவன். மோசே வேவு பார்ப்பதற்கு அனுப்பிய போது, உண்மையான தகவலைக் கொண்டு வந்தவன். இப்படிப்பட்ட பண்புடைய யோசுவாவும், காலேபும் மாத்திரமே எகிப்தை விட்டுப் புறப்பட்டவர்களில் கானான் தேசத்தில் பிரவேசித்தவர்கள்.

      இஸ்ரவேல் மக்களின் எல்லா பொல்லாப்புகளையும் மீறுதல்களையும் அறிந்தவன். அவர்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள் என்பதையும் அறிந்தவன். எதிலும் குறைவு ஏற்பட்டால் போராடும் சுபாவமுடைய மக்கள் என்பதை அறிந்தவன். மோசேக்குப் பின்பாக தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டபோது, நான் இந்த ஜனங்களை எப்படி நடத்துவேன் என்று கலங்கித் திகைத்தான். ஆனால் கர்த்தர் அவனைத் தேற்றி, நேர்த்தியாய் நடத்தினார். இந்த யோசுவா நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப் போம் என்று தீர்மானம் செய்து, குடும்பமாக ஆசீர்வதிக்கப்பட்டவன்.

      கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்று ஒரு புதிய மேலான பொறுப்பை நீங்கள் கர்த்தரின் கிருபையால் பெற்றிருக்கலாம். நான் இந்த மேலான பொறுப்பை எவ்விதம் செய்து முடிப்பேன் என்று கலங்கித் திகைத்துக் கொண்டிருக்கலாம். அன்றைக்கு யோசுவாவைத் திகையாதே என்று தேற்றிய கர்த்தர், இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் நேற்றும் இன்றும் மாறாதவர். மேலான பொறுப்புகளெல்லாம், அவருடைய தயவினாலே அவருடைய பிள்ளைகளுக்குப் பரத்திலிருந்து அருளப்படுகிறது. அதை நன்றாய், நேர்த்தியாய் செய்வதற்குரிய ஞானத்தை, பெலத்தை, சுகத்தை அவரே தருகிறார். அவருடைய வழி நடத்துதலினாலே பிழையின்றி, குறை யின்றி, ஒருவரும் ஒரு குற்றமும் சாட்டமுடியாதபடி உங்களை நடத்தி மேன்மைப்படுத்துவார். அவர் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்து முடிப்பார். நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்ற வாக்குறுதியை முற்றும் முடிய நிறை வேற்றுவார்.

      திகையாத நல்வாழ்வைத் தருகிறவர், இன்றைக்கு நம் வாழ்க்கையில் அவ்விதமாய் செய்து, நம்மை ஆசீர்வதிப்பார். இந்த வார்த்தைகளெல்லாம் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து அழைத்துவந்த ஆபிரகாமின் சந்ததியான விசுவாச மார்க்கத்தாருக்கு உரியது. எப்படிப்பட்ட நிலையிலிருந்தாலும் நம்மை எடுத்து, அழைத்து, ‘நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை’ என்று வாக்களித் திருக்கிறரர்.

II. எவைகளிலிருந்து நம்மை எடுத்திருக்கிறார்?

1. மரண வாசலிலிருந்து நம்மைத் தூக்கி எடுத்திருக்கிறார்.

"மரணவாசல்களிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே..."சங்கீதம் 9:13

     அநேகருடைய வாழ்க்கையில் தங்கள் ஜீவன் எடுபடுகிற மரண அவஸ்தை யிலிருந்து அவர்களைக் குணமாக்கி, அவர்களைத் தம்முடைய பணிக்கென்று தேவன் பயன்படுத்துகிறார்.

      அண்மையில் ஒரு சகோதரனைச் சந்தித்தேன். கேன்சர் நாலாவது நிலை அடைந்து மரணம் நேரிடும் என்ற காலக்கட்டத்தில் இருந்தார். மருத்துவர் அவருக்கு நாட்களைக் குறித்து விட்டார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் நம்பிக்கையை இழந்தனர். சவப்பெட்டியைக் கூட ஆயத்தப் படுத்தும் ஆலோசனையும் இருந்தது. கர்த்தரோ அவருக்கு இரங்கி, அவரைச் சுகப்படுத்தினார். நம்முடைய பெலவீனங்களை ஏற்று, நம்முடைய நோய் களைச் சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்து, தம்முடைய மாறாத வார்த்தை யினாலும் வல்லமையினாலும் அவருக்கு புது ஜீவன் கொடுத்தார். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்ற வார்த்தையின்படி குணமாக்கினவர் அவரை அழைத்து நடத்துகிறரர்.

2. உளையான சேற்றிலிருந்தது தூக்கி விடுகிறார்

"பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கி யெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி," சங்கீதம் 40:2

      பாவ சேற்றில் உழன்று கொண்டிருக்கிற நம்மைத் தூக்கியெடுத்து, நிறுத்த அவர் உண்மையுள்ள தேவனாக இருக்கிறார். அழிவின் குழிகளுக்கு நம்மை விலக்கிக் காக்கிற தேவன், நம்மைத் தூக்கியெடுப்பது மாத்திரமல்ல மீண்டும் சேற்றில் விழுந்து விடாதிருக்க நம்மைக் கன்மலையின் மேல் நிறுத்துகிறார். ஒருவருடைய வாழ்க்கை கன்மலையாகிய இயேசுவின் மேல் கட்டப்படும்போது, எந்தவிதமான புயலும், வெள்ளமும் மோதினாலும், உறுதியான அசையாத நல்வாழ்வு அடைகிறார்கள். இவ்விதமாய் நம் தேவன் பாவசெற்றிலிருந்து நம்மைத் தூக்கியெடுத்து, கண்மணிபோல் நம்மைக் காத்து, நமக்கு புதுவாழ்வைத் தருகிறார். பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயிற்று என்ற உயர் நிலையை அடைகிறோம்.

3. ஜலப்பிரவாகத்திலிருந்து தூக்கிவிடுகிறார்

"உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத் திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்." சங்கீதம் 18:16

     பலருடைய வாழ்க்கை பலவிதமான ஜலப்பிரவாகத்தில் சிக்கி இருப்பதைப் பார்க்கிறோம். ஜலப்பிரவாகம் என்றாலே சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் நீராக இருக்கிறது. மனிதனின் வாழ்க்கையில் உண்டாகும் நெருக்குகிற பிரச்சனைகளை இது குறிக்கிறது. கடன் தொல்லைகள், பிள்ளைகளின் பிரச்சனைகள், சரீர சுகத்துக்குரியவைகள், தங்கித் தாபரிக்க இடம் இல்லாத நிலைகள், குடும்பங்களில் ஏற்படும் பிளவுகள், பலவிதமான வழக்குகள், தோல்விகள் போன்றவைகளால் அலசடிப்பட்டு வேதனைப்படுகிற கலங்குகிற வாழ்க்கை. இப்படிப்பட்ட நிலையிலிருந்து கர்த்தர் ஒருவரே நம்மைத் தூக்கியெடுக்க முடியும்.

     இன்று அநேகருடைய வாழ்க்கையிலே சொல்லப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது வேறுசில பிரச்சனைகள் இருக்கலாம். தாவீதுடைய வாழ்க்கையிலிருந்த எல்லா நெருக்கத்தையும் நீக்கி, விசாலத்திலே கொண்டு வந்த தேவன், உங்களின் வாழ்க்கையில் சூழ்ந்திருக்கிற சகல பிரச்சனை களையும் நீக்கி, உங்களைத் தூக்கி எடுப்பார். ஒருபோதும் கைவிடாத தேவன் மரண வாசல்களிருந்தும், உளையான சேற்றிலிருந்தும் எடுத்து, நீ என் தாசன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொல்லி இருக்கிறார். அத்துடன் அவர் நம்மை அழைத்துமிருக்கிறார்.

     வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்று அழைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய மன பாரங்களையும், பாவ பாரங்களையும் நீக்கி நமக்குள் புதுவாழ்வைத் தருகிற வராக இருக்கிறார். இன்று இரவும் பகலும் தூங்க இயலாதபடி மனபாரத் தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, அவர் உன்னை அழைக்கிறார். இனி செவிகொடுத்து, அவரிடம் வருவாயானால் செய்வேன், தருவேன் என்று அவர் உனக்குச் சொன்ன காரியங்களைச் செய்வர்.

     தாகமுள்ளவன் எவனும் என்னிடத்தில் வரக்கடவன் என்று அழைத்தவர் இன்று பெரிய காரியங்களைச் செய்து உன் தாகத்தைத் தீர்த்து உன்னை ஆசீர்வதிப்பார்.

     அன்றைக்குப் பேதுருவை மனுஷரைப் பிடிக்கும்படிக்கு அழைத்தவர் அவரை அப்படியே பயன்படுத்தினார். தமக்குப் பின்னாக தம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற அவரைப் பயன்படுத்தினார். மோசேயை அழைத் தவர் அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும், பலத்த செய்கையி னாலுல் தமது ஜனங்களை எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து மீட்டார்.

         அத்தோடு மாத்திரமல்ல அழைத்தவர் தெரிந்து கொண்டார். இன்று அநேகரைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்து கொண்டிருக்கிறார். சங்கீதம் 4:3லே, "பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்..." என்று வாசிக்கிறோம். பக்தி என்பது அன்பின் செய்கையும், பரிசுத்தமும் நிறைந்த நல் வாழ்க்கையாகும். இந்த வாழ்க்கையை நாம் பெற்று அவரால் தெரிந்து கொள்ளப்பட நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

     அன்று சவுலை விசேஷித்த நோக்கத்தோடு சந்தித்தார். புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காகத் தெரிந்து கொண்ட பாத்திரம் என்கிறார்.

     ‘நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்... நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.’ யோவான் 15:16ல் பார்க்கிறோம். அருமையான சகோதரனே, சகோதரியே, ஏசாயா 5-ல் சொல்ல ப்பட்ட படி நேர்த்தியான கனிகளைத் தரும்படி உன்னை செழிப்பான சிறப்பான இடத்திலே வைத்திருக்கிறார். உனக்குப் பாதுகாவலைத் தந்து, உன் எல்லைகளிலுள்ள எல்லாக் குறைகளையும் நீக்கி, நல்ல கனிகளைத் தரும்படி நீர்ப்பாய்ச்சி உன்னைப் பராமரித்து வருகிறார். நல்ல கனி நிறைந்த வாழ்க்கை உன்னிடத்தில் இருக்கும்போது அவர் உன்னை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

     "அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்து கொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்." மாற்கு 3:14, 15. அவர்கள் மூலம் தம்முடைய நாமம் பிரஸ்தாபப்படுத்தப் படவும், அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும், அவருடைய வசனம் உறுதிப்படுத்தப்படவும் இயேசு அவர்களைத் தெரிந்து கொண்டார். நாமும் அவரைப் பின்பற்றி, அவருடைய சீஷர்களாய் மாறி அவரால் பயன்படுத்தப் படுவதற்கும், எந்த நற்கிரியைகளையும் செய்வதற்கும் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்களாக மாற நம்மை அர்ப்பணிப்போமாக.

     இவ்வாறு எடுத்து, அழைத்து, தெரிந்து கொண்ட நம்மில் புதிய மாற்றங்களையும், மேன்மைகளையும் உண்டாக்க விரும்புகிறார்.

1. பலப்படுத்துகிறார்.

"...நான் உன்னைப் பலப்படுத்தி..." ஏசாயா 41:10

     எல்லாவற்றையும் செய்ய நமக்குப் பெலன் தேவை. பிலிப்பியர் 4:13 ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ என்ற வார்த்தையின் படி எல்லாவற்றையும் செய்ய திராணியுள்ளவர்களாய் மாறுகிறோம். நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்திலே தேவன் அளவில்லாத பெலத்தைத் தந்து, அனுதினமும் நம்மை நடத்துகிறார்.

      அவருக்குக் காத்திருக்கும்போது, நம்முடைய சரீரத்திலே பெலன் தந்து, ஓடினாலும் களைப்படையாத வாழ்க்கையைத் தருகிறார். சரீர சுகமும் பெலனும் நமக்கு அவசியமாயிருக்கிறது. காண்டாமிருகத்துக்கொத்த பெலத்தைத் தருவேன்என்று சொன்னவர் தமது மக்களுக்குப் பெலத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்.    

     ஆத்துமாவிலும் பெலன் தருகிற தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, நம்மை தைரியப்படுத்தி நடத்துகிறார். ஆத்துமாவிலே பெலன் வரும்பொழு தெல்லாம் நாம் தைரியமடைந்து, எல்லாவற்றிலும் கலங்காதிருந்து திடமாய் இருக்க கர்த்தர் உதவி செய்கிறார்.

     பரிசுத்த ஆவியானவர் மூலமாய் ஆவியில் பெலன் கொண்டு, கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ வைக்கிறார். கர்த்தருடைய ஆவியானவர் எப்பொழுதெல்லாம் சிம்சோனில் இறங்கினாரோ அப்பொழுதெல்லாம் சத்துருக்களை நொறுக்கிப் போட்டான். நாம் கூட கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்பட இடம் கொடுப்போம். கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வோம்.

2. சகாயம் பண்ணுகிறார்

"...உனக்குச் சகாயம் பண்ணுவேன் ..." ஏசாயா 41:10

     அநேகர் உதவியற்ற நிலையில் வேதனையோடு வாழ்கிறார்கள். தங்களு டைய பயணங்களில் தங்களுடைய உடைமைகளைத் தூக்கி வைப்பதற்கு, எடுப்பதற்கு உதவி நாடுகிறார்கள். பணத்தைக் கொடுத்து கூட சிலர் உதவி பெறுகிறார்கள். ஆனால் மனுஷருடைய உதவி விருதா. கர்த்தரோ நமக்குச் சகாயம் செய்து நம்முடைய குறைவுகளிலே இக்கட்டுகளிலே நமக்கு உதவி செய்கிறார்.

     கல்லறையின் கல்லை யார் புரட்டுவார்கள் என்று கலங்கிய மரியாளும் ஆச்சரியமடையத்தக்கதாக அக்கல் புரட்டப்பட்டிருந்தது. என்னால் மறக்கப் படுவதில்லை என்று சொல்லிய தேவன் எல்லா நிலைகளிலும் நமக்கு உதவி செய்கிறார். தாவீதைப் போல நாமும் ஒத்தாசை வரும் பர்வதமாகிய கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம்.

3. நம்மைத் தாங்குகிறார்

"...என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ஏசாயா 41:10

     விழுகிற யாவரையும் தாங்குகிற தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மைத் தாங்கி நம்மை நேர்த்தியாய் நடத்துகிறார். எபிரெயர் 1:3ன் படி தம்முடைய வசனங்களினாலே நம்மைத் தாங்குகிய தேவன் ஜீவிக்கிறார். அவருடைய வார்த்தைகளை நாம் தியானிக்க, தியானிக்க அவைகளினால் நாம் தாங்கப்பட்டு அழிவுக்கு விலக்கிக் காக்கப் படுகிறோம். ‘என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது,  கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.’ சங்கீதம் 94:18ன்படி அவரிடம் நம்முடைய பிரச்சனை களைக் கூறும்போது, அவர் தம்முடைய கிருபையினாலே நம்மைத் தாங்குகிறார். மாறாத கிருபையுடைய தேவன் தமது கிருபையைத் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு அருளியிருக்கிறார். இக் கிருபையினாலே நாம் நிர்மூலமாகாததிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் அவருடைய கிருபை புதிதாயிருக்கிறது.

     இதை வாசிக்கும் அருமையான தேவப்பிள்ளையே, புதிய கிருபையை அருளும் இயேசு கிறிஸ்துவை உன் ஆண்டவராக, மேய்ப்பராக ஏற்றுக் கொள்வாயானால், நன்மையும் கிருபையும் என்றும் உன்னைத் தொடரும். திகையாதே, நான் உன் தேவன் என்று சொன்னவர் உனக்குள் அற்புதங் களையும் அதிசயங்களையும் செய்து, உன்னைப் பெலப்படுத்தி உனக்குச் சகாயம் செய்து, தமது ஆணிப்பாய்ந்த கரத்தினாலே தாங்கி, உன்னை வற்றாத நீரூற்றைப் போலாக்குவார்.உன்னிலிருந்து புறப்படுகிற ஜீவஊற்று உன் குடும்பத்தாருக்கும் நீ வாழும் எல்லைகளிலுள்ள மக்களுக்கும் ஏன் உலகத்தாருக்கும் தாகம் தீர்க்கிறதாய் மாறிவிடும்

   கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.   

கிறிஸ்துவின் பணியில்,

சகோ. C.எபனேசர் பால்.