"...உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக..."

                                                                                                                                                                                மத்தேயு 4:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் எப்படி கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்று அறிந்து செயல்படுவது நல்லது. மனிதர்களுடைய எல்லா விதமான காரியங்களையும் போதனையாய் மாற்றி, மனதின் சிந்தைகளை, எண்ணங்களை அப்படியே ஆராதனையாய் மாற்றுகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அவ்விதமான ஆராதனை அல்ல, தேவனுக்கு ஏற்ற, தேவன் விரும்புகிற ஆராதனைகளை நாம் செய்ய வேண்டும்.

I. எப்படி ஆராதனை செய்யவேண்டும்?

1. மகிழ்ச்சியோடு ஆராதனை செய்ய வேண்டும்.

 "மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்." சங்கீதம் 100:2

         கர்த்தருடைய சமுகத்தில் கர்த்தருடைய பிள்ளைகளாய் நாம் வரும்போது, கர்த்தர் நமக்கு மகிழ்ச்சி யைத் தருகிறார். ஏனெனில் இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே கூடும்போது, நான் அவர்கள் மத்தியில் இருக்கிறேன் என்று சொன்னவருடைய அன்பின் பிரசன்னம் நிறைவதினாலே, நம்முடைய உள்ளமானது மகிழ்ந்திருக்கக் கூடிய தேவ பிரசன்னம் பெருகு கிறது. சங்கீதம் 16:11ல் '...உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.' என்று பார்க்கி றோம். ஆகவே இப்படிப்பட்ட பேரின்பம் நிறைந்த அவருடைய சமுகத்திலே, நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் கூடி வரும் போது, ஒரு பெரிய மகிழ்ச்சி நமக்குள்ளாய் உருவாகிறது. ஆகவே தான் நாம் மகழ்ச்சியோடே ஆராதிக்க வேண்டும். எரேமியா 31:13ன்படி அவருடைய சமுகத்திலே வரும்போது, நம்மைத் தேற்றி, துக்கத்தையெல்லாம் சந்தோஷமாக மாற்றி, சஞ்சல ங்களை நீக்குகிற தேவனுடைய சமுகத்தில் எப்பொழுதுமே நாம் ஆசீர்வதிக்கப்படுகிறவர்களாய் இருக்கிறோம். ஆகவே இந்த வார்த்தைகளை ஆராய்ந்து அறிந்து, அவருடைய சமுகத்தில் எப்பொழுதுமே சந்தோஷத்தோடு வந்து அவரை ஆராதிக்க வேண்டு .ஆராதனை என்று சொல்லும்போது, தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிற காரியம், தேவனைப் புகழுகிற காரியம். தேவனுடைய சமுகத்திலே ஆராதனை என்பது ஒரு பகுதி துதிப்பதாய் இருக்கிறது. ஆகவே துதித்தலோடு அவர் சமுகத்தில் வருவேன் என்று தாவீது சொன்னது போல துதித்தலினாலே உண்டாகிற மகிழ்ச்சியோடு தேவனுக்கு ஆராதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.

2. அந்நிய தேவர்களை விலக்கி ஆராதனை செய்ய வேண்டும்.

"அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்..." நியாயாதிபதிகள் 10:16

      அந்நிய தேவர்கள் என்று சொல்லும்போது, அந்நிய தேவனாயிருக்கக்கூடிய பல காரியங்கள் உண்டு. பிலிப்பியர் 3:19ல் அவர்களுடைய தேவன் வயிறு என்று பார்க்கிறோம். ஆகவே இந்த உலக்கத்துக்குரிய காரியங்களை, நம்முடைய வாழ்க்கைக்குரிய காரியங்களை முன் வைத்து ஆராதிக்கிற ஏராளமான மக்கள் இன்று உண்டு. அருமையான சகோதரனே, சகோதரியே, தேவனை ஆராதிக்கிற முறைமைகளிலே நாம் அந்நிய காரியங்களை விலக்க வேண்டும். அந்நிய காரியங்கள் என்று சொல்லும்போது, பல காரியங்கள் உண்டு. பொருளாசை என்னும் விக்கிரக ஆராதனை என்று கொலோ. 3:5ல் பார்க்கிறோம். மாம்சத்தின் இச்சைகளுக்குரிய, வேசித்தனத்திற்குரிய விக்கிரக ஆராதனை என 1 பேதுரு 4:3ல் பார்க்கிறோம்.  வேதத்தை நாம் பார்க்கும் போது உபாகமம் 4:23ல் '...உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்' என பார்க்கிறோம். யாத். 20:3ல் 'என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.' என பார்க்கிறோம். இந்தப் பூமியில் உள்ளவைகளுக்கு ஒப்பாக யாதொரு விக்கிரகத்தையாவது சொரூபத்தையாவது உண்டாக்க வேண்டாம் என பார்க்கிறோம். விக்கிரகம் என்று பலவிதமான காரியங்களை மனிதர்கள் நம்பி வாழ்கிறதைப் பார்க்கிறோம். இன்று அநேக இடங்களிலே இவ்விதமான உருவச் சிலையை வியாபார ஸ்தலத்தில் வைத்தால் வியாபாரம் வரும் என உருவங்களை வைக்கிற மக்களும் ஏராளம் உண்டு. ஒருமுறை ஒரு கிறிஸ்தவ கடையிலே அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் போல ஒரு காரியத்தை எண்ணி ஒரு சிலையைச் செய்து வைத்திருந்தார்கள். அதற்கு முன்பாக ஊதுபத்தியைக் கொளுத்தி, பூவைப் போட்டிருந்தார்கள். அவர்களுக்குச் சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனதில்லை. இவைகள் எனக்குச் செல்வத்தைத் தரக் கூடியது. உலகத்தின் ஐசுவரியங்களைத் தரக்கூடியது என்றுசொல்லி அதை முக்கியப் படுத்திக் கொண்டு அதையே நம்பி நாடி, காரியங்களைச் செய்கிறவர்களாய் இருந்தார்கள். இவைகளெல்லாம் விக்கிரக ஆராதனைக்கு அடையாளமாய் இருக்கிறது. ஆனால் நம்முடைய வாழ்க்கையிலோ ஆவியாயிருக்கிற தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கிற மக்களாய் நாம் மாற வேண்டும்.  

3. தேவனுக்குப் பிரியமான ஆராதனை

"...அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தேடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபை யைப் பற்றிக்கொள்ளக் கடவோம்." எபிரெயர் 12:28

     தேவன் விரும்புகிற அல்லது தேவனுக்குப் பிரியமான ஆராதனை என்னவென்றால், நாம் அவரைப் பயத்தோடும் பக்தியோடும் ஆராதிப்பது.

பயத்தோடு ஆராதிக்கிற மக்களாய் மாற வேண்டும்.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடு ஆராதனை செய்ய வேண்டும். ஆலய ஆராதனைகளில் பயம் இல்லாதபடியினாலே அநேகர் அங்கும் இங்கும் எழுந்து நடக்கின்ற காரியங்கள், ஆராதனை நேரத்திலே தாகமாயிருக்கிறேன் என்று தண்ணீர் குடிக்கச் செல்கிறவர்கள், ஆராதனை நேரத்தில் மற்றவர் களிடத்தில் தங்களுடைய குடும்பக் காரிய ங்களை, உலகக் காரியங்களை, அலுவலகக் காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுகிற மக்களாய் இருக்கிற அநேகரைப் பார்க்கிறோம். தேவனுடைய ஆராதனை என்றாலே மிகுதியான அமைதியோடு, மிகுந்த பயத்தோடு ஆராதிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தேவன் விரும்புகிற தேவனுக்குப் பிரியமான ஆராதனை அதுதான். அண்ட சராசரங்களையும் உருவாக்கின தேவன். அவர் அவ்வளவு பெரிய அதிகாரம் உடைய சர்வ வல்லமையுடைய தேவன். அந்த அன்பு நிறைந்த தேவனுடைய சமுகத்திலே ஏதோ பயமில்லாதபடி, அலட்சியமாய் ஆராதனை செய்வோம் என்றால், அருவருக்கப்படுகிற காரியமாகும்.

பக்தி நிறைந்த ஆராதனை.

"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திர வத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறை படாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." யாக்கோபு 1:27

பக்தி நிறைந்த ஆராதனையைத் தான் தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். பக்தி என்றால் என்ன? பக்தி என்று சொன்னாலே பரிசுத்தமும் அன்பின் செய்கையும் சேர்ந்து காணப்படுவது. பரிசுத்தமான ஒரு வாழ்க்கை, கறைபடாத வாழ்க்கை, பாவ இச்சைகளுக்கு எண்ணங்களுக்கு இடம் கொடாத வாழ்க்கை, திக்கற்றவர்கள் விதவைகள், உபத்திரவப்படுகிற மக்களுக்கு உதவிச் செய்கிற வாழ்க்கை தான் அவருக்கு ஏற்ற பக்தி நிறைந்த வாழ்க்கை. இன்று பக்தி நிறைந்த வாழ்க்கை என்று உதவி செய்யச் சென்று தவறான உறவுக்கு ஆளாகிற அடிமையாகிற மக்களும் ஏராளம் உண்டு. நாம் அப்படிப்பட்ட மக்களாய் இராதபடி, கறைபடாதபடி, மாம்சத்தின் இச்சைகளுக்கு, கண்களின் இச்சைகளுக்கு, ஜீவனத்தின் பெருமைக்கு இடம் கொடாதபடி நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு விளம்பரத்திற்காக நாம் பெரிய உபகாரி என்று எண்ணி இந்த உலகத்தாருக்கு எடுத்துக் காட்டும் படியாக, இவ்விதமாய் செய்கிறோம் என்று சொல்கிற மக்களாய் அல்ல, நாம் மற்றவர்களுக்கு செய்கிற உதவி, நம்முடைய வலது கை செய்கிறதை இடது கை அறியாதிருக்கத்தக்கதாக இருக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்று நம்முடைய வாழ்க்கையிலே இந்த பக்தி நிறைந்த உள்ளத்தோடு தேவனுக்கு ஆராதனை செய்யும் பொழுது, அது கர்த்தருக்குள்ளாக பெரிதான ஆசீர்வாதமான ஒரு ஆராதனை.  

4. புத்தியுள்ள ஆராதனை

"... நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." ரோமர் 12:1

     புத்தியுள்ள ஆராதனையை ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் செய்ய வேண்டும். ஒரு புத்தியுள்ள ஆராதனை என்றால் நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை கிறிஸ்துவுக்காக ஒப்புக் கொடுக்கின்ற, அர்ப்பணிக்கின்ற ஒரு செயல். ஆராதனையில் இது ஒரு முக்கியமான பகுதி. அநேக நேரங்களிலே இந்த புத்தியுள்ள ஆராதனை செய்யாதபடி, உலகத்தாரைப் போல இருக்கிறபடியினாலே தேவனுடைய நாமமானது உயர்த்தப்பட முடியவில்லை. அவருடைய நாமம் பறைசாற்றப்பட முடியவில்லை. இந்த வார்த்தைகளை தியானிக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, நீ புத்தியுள்ள ஆராதனை செய்கிறாயா? தேவன் விரும்புகிற வண்ணமாக உன் ஆராதனை இருக்கிறதா? நாம் தேவனுக்கென்று ஆராதனை செய்கிற மக்களாய் கூடி வரும்போது, எவ்விதமான உள்ளத்தோடு எண்ணத்தோடு, சிந்தனையோடு அவர் சமுகத்திலே அவரை ஆராதிக்கிறவர்களாய் இருக்கிறோம்? ஆராதனை என்றாலே ஏதோ தேவனுடைய பிள்ளைகள் கூடி கும்மாளம் போடுவதல்ல. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் தேவ சமுகத்திலே மிகுந்த பயத்தோடு, மிகுந்த பக்தியோடு அவருடைய பாதத்திலே நம்மை அர்ப்பணித்தவர்களாய், நம்மை ஒப்புக்கொடுத்தவர்களாய் செய்வது தான் தேவன் விரும்புகிற ஆராதனை. அநேக நேரங்களில் தங்கள் சரீரங்களைக் கூட தேவனுடைய சமுகத்திலே தாழ்த்துவதற்கு இடம் இல்லை.  தானியேல் 3ம் அதிகாரத்தில் தேவனுடைய பிள்ளைகளாகிய மூன்று வாலிபரைக் குறித்துப் பார்க்கிறோம். 'அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்த தினால், அவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்' என தானியேல் 3:28ல் பார்க்கிறோம். ஒப்புக்கொடுத்தலின் அனுபவம் நமக்குத் தேவை. நாம் தேவனுடைய சமுகத்திலே தேவனு டைய பிள்ளையாக மாறும்படியாக நம்மை முழுமை யாக ஆவி, ஆத்துமா, சரீரமாய் கர்த்தருக்கு அர்ப்பணிப்பது தான் ஒரு புத்தியுள்ள ஆராதனை. இந்த புத்தியுள்ள ஆராதனை நாம் செய்யும்பொழுதெல் லாம், தேவன் நம்மை அவருக்கு ஏற்ற ஒரு கருவியாக மாற்றுகிறார். அதன் மூலமாக அந்த இடத்திலே ஒரு பெரிய மாறுதலைக் கொண்டுவருகிறவராக இருக்கிறார். அடிக்கடி நாம் அநேக கூட்டங்களிலே பாடல்களை, பாடுவோம். அதில் ஒன்று

  இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன்

  இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன்

  உலகம் என் பின்னே, சிலுவை என் முன்னே – என்று ஒரு பாடலை அழகாக நாம் பாடுகிறோம்.  இந்தியாவிலே அசாம் என்ற பகுதியிலே ஒரு மலைஜாதி மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மத்தியிலே இங்கிலாந்து தேசத்திலே இருந்து அநேக வாலிபர்கள் இயேசு கிறிஸ்துவை அறிவிக்க வந்தார்கள். இவர்கள் எப்பொழுதுமே மனிதர்களை எளிதாக கொன்று குவிக்கும் மக்கள். இவர்களுக்கு மத்தியிலே ஒரு அருமையான ஊழியர் சென்று அந்த மலை ஜாதி மக்களுக்குள் ஒரு குடும்பத்தாரை கிறிஸ்துவுக்குள் நடத்தி விட்டார்கள். அவர்கள் அந்த மலை ஜாதியில் இருந்த அநேகரை கிறிஸ்து வுக்கு நேராக நடந்த ஆரம்பித்தார்கள். இந்தச் செய்தியைக் கேட்ட அந்த மலை ஜாதி மக்களுடைய தலைவர் அவனை அழைத்து, அவரையும், அவரின் மனைவியையும், இரண்டு பிள்ளைகளையும் நீங்கள் இயேசுவை நிராகரித்து விட வேண்டும், இயேசு கிறிஸ்துவை வெறுத்துவிட வேண்டும் என்று எல்லாருக்கும் முன்பாக அவர் கேள்விகளைக் கேட்க, ஆவியிலே உந்தப்பட்டவனாக 'இயேசு எனக்கு முன்னே' என்று சொல்லி, நான் அவரைப் பின்பற்ற தீர்மானித்தேன் என்று அந்தப் பாடலை பாட ஆரம்பித்தார். இவ்விதமாய் பாடலை பாடினபொழுது, அந்தத் தலைவருக்கு கோபம் ஏற்பட்டு, தன்னுடைய அம்பு வீரர் களை அழைத்து அந்த இரண்டு பிள்ளைகளைக் கொல்லும் படியாக கட்டளைக் கொடுத்தான். அம்புகளை எய்தார்கள். அவர்கள் செத்து விழுந்தார்கள். மீண்டுமாய் நீ இயேசு கிறிஸ்துவை மறுதலித்துவிட வேண்டும், வெறுத்துவிட வேண்டும் என்று சொன்ன பொழுது, அவன் மறுபடியும் தான் தீர்மானித்த காரியங்களைச் சொல்லி பாட ஆரம்பித்தான். அவன் அந்தப் பாடலை பாடியபோது, அந்த வில் வீரர்கள் மீண்டுமாய் அவருடைய மனைவி மீது அம்பு எய்து அவளுடைய ஜீவனையும் பறித்தார்கள். கடைசியில் நான் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ இயேசு கிறிஸ்து வை மறுதலித்து விட வேண்டும் என்று சொன்ன பொழுது, அந்தச் சகோதரன் மீண்டுமாய் அதே பாடலைப் பாடியபடியினாலே, அவர் மீதும் அம்பு எய்து கொன்று விட்டார்கள். ஆனால் சில நிமிடங் களிலேயே, இந்த மனிதன் தன் ஜீவனையே ஏன் கொடுக்க வேண்டும்? இந்த இயேசு கிறிஸ்து யார் என்று தன் உள்ளத்தில் உணர ஆரம்பித்த தலைவன் அதே இடத்திலே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லி ஒப்புக்கொடுத்தார். அதின் நிமித்தமாய் அந்த மலை ஜாதி மக்கள் முழுவதும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு மனிதனுடைய வாழ்க்கையானது ஒரு புத்தியுள்ள ஆராதனையாக மாறினபொழுது, அந்த இடத் திலே ஒரு எழுப்புதல் உண்டானது. அந்தப் பகுதியிலே இயேசு கிறிஸ்துவைப் புகழ்கிற காரியம் உண்டானது. அருமையான தேவ ஜனமே, நாம் புத்தியுள்ள ஆராதனை செய்கிறவைகளாய் மாற நம்மை அர்ப் பணிக்கவேண்டும்.

ஆராதனையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1. விடுதலை

"...நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்த ரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்." 1சாமுவேல் 7:3

     தீர்க்கதரிசியாகிய சாமுவேல் அங்கே தன்னி டத்தில் வந்த ஜனங்களைப் பார்த்து தெளிவாய்ச் சொன்ன வார்த்தைகளைப் பார்க்கிறோம். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலே, உங்கள் எல்லைகளிலே உள்ள அந்நிய காரியங்களையெல்லாம் விலக்கி விட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள். அவர்கள் அதைச் செய்ய அர்ப்பணித்தபோது, பெலிஸ்தருடைய கரங்களில் இருந்து கர்த்தர் அவர்களை விடுவித்தார். விடுதலையில்லாதபடி கலங்கி வாழ்கிற மக்கள் ஏராளம் உண்டு. நாம் ஆராதிக்கும்போது, குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்மை விடுவிக்கிறவராக இருக்கிறார். அவர் கொடுக்கிற விடுதையானது பூரணமான, முழுமையான விடுதலை. மரணபயத்தினின்று, இருளின் அதிகாரத்தினின்று விடுதலை தேவை. பலவிதமான பாவ பழக்கவழக்கங்களிலிருந்து, பலவிதமான பாரம்பரிய வழக்கங்களிலிருந்து விடுதலை தேவை. தேவனல்லாதவர்களை போற்றிப் புகழ்கிற ஆராதனையிலிருந்து விடுதலை தேவை. இவைகளிலிருந்து விடுதலையில்லாமல் நாம் அலசடிப்படுகிறோம். என்ன செய்வதென்று நாம் தெரியாதபடி தவித்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் விடுதலைத் தருகிறவர் இயேசு கிறிஸ்து. இந்த இயேசு கிறிஸ்துவைத் தவிர எந்த நாமமும் எந்த சக்தியும் நமக்குள் விடுதலையைத் தவிர முடியாது.  தேவன் கொடுத்திருக்கிற அநேக ஆசீர்வாதங்களை இழந்து, சுதந்தரத்தை இழந்து, சந்தோஷ த்தை இழந்து, நாம் வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுதலையானது மனிதனு டைய வாழ்க்கையிலே சுதந்தரத்தை, சந்தோஷத்தை, சமாதானத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஆசீர்வாதமான காரியமாக இருக்கிறது. தேவனு டைய சமுகத்திலே தேவனுடைய பிள்ளைகளாக உண்மையாக ஆராதிக்கும் போது, அவர் அருளுகிற முதலாவது ஆசீர்வாதம் விடுதலையில் வாழ்க்கையாகும்.   

2. மனதுருகுகிறார்

"அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கி விட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்." நியாயாதிபதிகள் 10:16

நாம் கர்த்தருடைய சமுகத்திலே எல்லவிதமான காரியங் களையும் விலக்கி, அவருக்கு ஆராதனை செய்யும்போது, அவர் செய்கிற அதிசயமான காரியம் என்னவென்றால் நம்மீது மனதுருகுகிறார். எந்தப் பாவியையும் புறம்பே தள்ளேன் என்று சொன்னவர், நம் வாழ்க்கையில் உள்ள பாடுகளை அறிந் திருக்கிற தேவன் அவர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனதுருக்கம் நிறைந்த தேவன். லூக்கா 7:13,14ல் மிகுதியான வேதனையோடு தன் மகன் மரித்துப்போனானே என்று கலங்கியிருந்த விதவையான சகோதரியைப் பார்க்கிறோம். வாழ்க்கையிலே துணையில்லாமல் ஆதரவற்ற ஒரு அனாதையாய் இருந்த அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொன்னதோடு, கண்ணீரைத் துடைக்கும் படியாக ஒரு அற்புதத்தைச் செய்தார். பாடையைச் சுமந்தவர்கள் நின்றார்கள். அவர் பாடையின் கிட்டவந்து பாடையைத் தொட்டார். 'வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன் என்றார்.' உடனே மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார் என்று பார்க்கிறோம். அவர் மனதுருகின படியினாலே ஒரு வாலிபனுடைய வாழ்க்கை மீட்கப்பட்டதோடு, அந்தத் தாயினுடைய உள்ளத்தின் வேதனைகளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாற்றினார். ஆகவே ஆராதனை செய்யும் போது, நம்மீது மனதுருகி, நம்முடைய குடும்பத்தின் பிள்ளைகளுடைய பிரச்சனைகளை நீக்கி, பிள்ளைகளினி மித்தமாய் உடைந்து போன உள்ளத்தின் வேதனைகளை மாற்றி, நமக்குள் அதிசயத்தைச் செய்கிற தேவனாய் இருக்கிறார்.  மத்தேயு 14:14ல் 'இயேசு வந்து திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர் களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.’ மனதுருகுகிற தேவன் வியாதிகளை நீக்குகிறவராய் இருக்கிறார். நாம் தேவனை ஆராதிக்கும்போது, தேவனைப் புகழ்ந்து, போற்றி, அவருடைய நாமத்தை உயர்த்தி, அவர் விரும்புகிற வண்ணமாய் ஆராதனை செய்யும் போது, நம்மீது மனதுருகி, நம்முடைய நோய்களை அற்புதமாய் நீக்குகிறார்.  அருமையான சகோதரனே, சகோதரியே, எனக்கு இந்த வியாதி இருக்கிறதே என்று நீங்கள் கலங்கிக் கொண்டு இருப்பீர்களானால், தேவனுடைய சமுக த்திலே முழுமையாய் அர்ப்பணித்து ஆராதிக்கும் போது, மனதுருகுகிற தேவன் நோய்களை நீக்கி, உங்களுக்குள் ஒரு சுகவாழ்வைத் தருவார்.   ஒரு குஷ்டரோகி இயேசு கிறிஸ்துவிடம் வந்து நான் சுத்தமாக வேண்டும், உமக்குச் சித்தமானால் சுத்தமாக்கும் என்று சொன்னபொழுது, இயேசு மனதுருகி தம்முடைய கையை நீட்டி அவனைத் தொட் டார். இந்த குஷ்டரோகியின் வாழ்க்கையைப் பார்த்தால், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வெறுக்க ப்பட்டு வாழ்கிற ஒரு வாழ்க்கை. மனிதர்கள் குஷ்டரோகிகளைக் கண்டாலே ஒதுங்கி சென்று விடுவார்கள். நாற்றம் எடுத்த சரீரத்தை உடைய அவர்களை எல்லாரும் வெறுப்பார்கள். தனிமையும், வெறுமையும்,வேதனையும் நிறைந்து, பரிதாபமாய் வாழ்கிற வாழ்க்கை தான் குஷ்டரோகியின் நிலைமை. மனதுருக்கத்தினால் தொடக்கூடாத நிலையிலிருந்த அவனைத் தொட்டு சுத்தமாக்கினார். இவ்விதமாய் மனதுருகுகிற காரியங்களை அவர் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது அவர் விரும்புகிற ஆராதனையை நாம் செய்வதாகும்.  

3. வழி நடத்துகிறவராய் இருக்கிறார்.

"அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிற போது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்." அப்போஸ்தலர் 13:2

தேவனுடைய பிள்ளைகள் கர்த்தரை ஆராதித்து, உபவாசித்துக் கொண்டிருந்தபோது, பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்து ஊழியத்திற்காக பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினார். யோசித்துப் பாருங்கள். ஆராதனை செய்யும்போது வழிநடத்துகிற செயலைப் பார்க்கிறோம். அவர்கள் தனியே சென்று ஊழியங்களைச் செய்ய வேண்டும் என்று அவர்களை வழி நடத்து கிறதைப் பார்க்கிறோம். 

    இன்று சிலருடைய வாழ்க்கையிலே தாங்களாகவே பிரிந்து போகிறார்கள். சபையை விட்டு, சபை மக்களை அழைத்துக் கொண்டு பிரிந்து செல்லுகிற மக்களும் உண்டு. ஆனால் கர்த்தர் சிலரைப் பிரித்து காரியங்களைச் செய்கிறார்.  

ஒருமுறை ஒரு ஊழியருடைய வாழ்க்கையிலே தேவ ஆவியானவர் ஆராதனை நேரத்திலே நீ இனி இந்த சபையிலே இராதபடிக்கு நான் சொல்லுகிற வண்ணமாய் ஊழியங்களைச் செய்ய உன்னை ஒப்புக்கொடு என்று கேட்டார். அந்த ஊழியக் காரரும் அதற்கு இசைந்து ஒப்புக் கொடுத்து விட்டார். ஆனால் அந்த ஊழியக்காரருக்கோ தான் ஆராதித்து வந்த அருமையான சபையாரோடும், போதகரோடும் உள்ள உறவை துண்டித்துக் கொள்வதற்கு, பிரிந்துச் செல்வதற்கு விருப்பம் இல்லாததால் ஏன் என்று கேட்டார். அப்பொழுது தேவ ஆவியானவர் அந்த ஊழியரைப் பார்த்து சொன்னார். ஒரு மரமானது அழகாய்க் கனிகளைத் தருகிறது, மென்மையான கனிகளைத் தருகிறது. அந்த மரத்தின் கீழ் விழுகிற அத்தனை மரத்தின் விதைகளும் விழுந்து மரமாக மாற இயலாது. தாய் மரமோ நசுக்கிவிடும். ஆகவே தோட்டக்காரன் நல்ல கிளைகளை அந்த மரத்திலிருந்து வெட்டி எடுத்து, பக்கத்தில் கனிகளை நிறைவாய்த் தரும்படி அந்தக் கிளைகளை வைப்பான். அதைப் போல நானும் செய்கிறேன். அது காய்ந்து போன ஒரு கிளையாக, சபையிலே ஒன்றுக்கும் உதவாத நிலமையில் இருக்குமேயானால் அதை வெட்டி நெருப்பிலே போடப்படுகிற ஒரு நிலைதான் வரும். இவ்விதமாய் தெளிவாய்த் திட்டமாய் சொல்லி பிரித்துவிட்டார் என்று சொன்னார். 

     யோசித்துப்பாருங்கள். தேவ ஆவியானவர் இணைக்கிறார், பிரிக்கிறார். அவருடைய திட்டத்தின் படி செய்யும்போது, ஆசீர்வாதமாயிருக்கிறது. ஆராதனை செய்யும்போது அவர் வழி நடத்துகிற காரியத்தைப் பார்க்க முடிகிறது.

4. வெற்றியினால் அலங்கரிக்கிறார்

"தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபார காலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது." தானியேல் 6:28

     தேவனுடைய சமுகத்திலே இடைவிடாமல் ஆராதிக்கிற மக்களாய் இருக்கும்போது, அவர் நம்மை சேதமின்றி காப்பதோடு, வெற்றியினால் அலங்கரிக்கிறார். தானியேல் தேவனை இடைவிடாமல் ஆராதித்தான். அதினிமித்தமாய் தேவன் அதிசயமான காரியத்தைச் செய்தார். சிங்கங்களின் வாய்களை தேவன் தம்முடைய தூதர்களை அனுப்பி கட்டிப்போட்டார். தானியேலே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்பிவிக்க வல்லவராய் இருந்தாரா என்று கேட்டபோது, ராஜாவே வாழ்க, என்று சொல்லி அவன் இடைவிடாமல் ஆராதித்த தேவனுக்கு முன்பாக குற்றமற்ற வனாயும், ராஜாவுக்கு முன்பாக நீதிகேடு செய்யாத வாழ்க்கையையும் சாட்சியாக தானியேல் பதில் கொடுப்பதைப் பார்க்கிறோம். சேதமின்றி காக்கப்பட்ட தானியேலை ராஜா, மிக சந்தோஷமாக தூக்கிவிடச் சொன்னார். அதினிமித்தமாய் சத்து ருக்கள் அழிந்தார்கள். ஒரு ஜெயம் உள்ள வாழ்க்கை வாழ கர்த்தர் உதவி செய்தார். ஆராதனையின் நிமித்தமாக விடுதலை வருகிறது. மனதுருக்கமுள்ள பாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறோம். அவர் நம்மை வழி நடத்துகிறதைப் பார்க்க முடிகிறது. அதோடு ஒரு ஜெயமுள்ள வாழ்க்கையைத் தருகிறார். ஆகவே நாம் கர்த்தருக்கு ஏற்ற ஆராதனைகளைச் செய்து அவர் மூலமாய் உண்டாக்கப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிக்க நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

                   கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                           கிறிஸ்துவின் பணியில்,

                       சகோ. C. எபனேசர் பால்.