செய்தி

"தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது." 1யோவான் 4:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன்.

கிறிஸ்து பிறப்பு பண்டிகை என்றாலே மகிழ்ச்சியும், பூரிப்பும் உள்ளத்தில் உண்டாகிறது.பற்பல சுவையான உணவுகளும், மனதை மகிழ்விக்கும் புதிதான வண்ண ஆடைகளும், அலங்காரமும் ஆயத்தமாகும் காலம். உள்ளம் மகிழ்ந்து பரவசப்படும் கீதங்கள் எங்கும் தொனிக்கும். வெகுமானங்களும், வாழ்த்துக்களும் பறிமாறப்படும் காலம். பரத்தின் ஆசீர்வாதத்திற்காக வாழும் தேவப் பிள்ளைகளில் மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகும்படி தேவன் கிறிஸ்துவின் பிறப்பின் மூலம் தமது அன்பை வெளிப்படுத்தினார். கண்ணீருடன் வாழும் சகோதரனே, சகோதரியே, தாயின் கருவிலே விசித்திர விநோதமாக உன்னை உருவாக்கிய அன்பின் தேவன், நீ கண்ணீரோடு, கலக்கத்தோடு, காரிருள் நிறைந்த வாழ்வு வாழ அல்ல, சமாதானமும், சந்தோஷமும் நிறைந்த நல்ல வாழ்க்கை வாழ்வதற்காக தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார்.

I.இயேசு கிறிஸ்து எதற்காக இவ்வுலகில் வெளிப்பட்டார்?

1.பாவங்களை நிவிர்த்தியாக்கும் பலியாக வெளிப்பட்டார்.

"...அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினத்தினாலே அன்பு உண்டாயிருக்கிறது." 1 யோவான் 4:10

அன்பின் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வெளிப்பட்டதின் நோக்கம் பாவிகளாகிய நம்மை இரட்சிப்பதற்காக. மனுஷருடைய வாழ்க்கையிலே பாவம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும், உணர்ந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருப்பது பாவமாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலே பாவமானது கீழ்ப்படியாமையினாலே வருகிறது. ஆதி மனிதன் தேவனுடைய வார்த்தைகளை அசட்டை செய்து, புசிக்க வேண்டாம் என்ற கனியைப் பறித்து புசித்தப்படியினாலே, தேவனுக்கும் அவனுக்கும் உள்ள உறவை இழந்து, தேவ பிரசன்னத்தை இழந்து, பாடுகளுக்கும், சாபங்களுக்கும், சாவுக்கும் அவன் ஆளானதை நாம் அறிவோம். நம்முடைய  வாழ்க்கையிலும் அப்படித்தான், நாம் கீழ்ப்படியாமையினால் அநேக பாவங்களைக் செய்து தேவனை துக்கப்படுத்துகிற மக்களாயிருக்கிறோம்.    கீழ்ப்படிதலினாலே நாம் பாவத்தை மேற்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவினுடைய அன்பிற்கு பாத்திரமாக நாம் மாறும்போது, அவரை நேசிக்கிற மக்களாய் மாறும்போது, கீழ்ப்படிகின்ற அந்த பண்பு நமக்குள் வருகிறது. நாம் கர்த்தருடைய அன்பின் பிரசன்னத்தினாலும், அவருடைய கிருபையினாலும் பாவத்தைச் செய்யாதபடி ஓய்ந்து விடுகிறோம். தேவனுடைய நியாயப்பிரமாணங்களை மீறுவது பாவமாக இருக்கிறது. 'பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்' 1யோவான் 3:4ல் பார்க்கிறோம். கிறிஸ்துவுக்கு பிரியமாக ஜீவிக்க வேண்டுமானால் நியாயப் பிரமாணங்களைக் கைக்கொள்ள வேண்டும். நியாயப் பிரமாணத்தினாலே நீதிமானாக மாறுவதில்லை என்று சொன்னாலும், நியாயப்பிரமாண வார்த்தைகள் நாம் கர்த்தருக்குள் நடத்தப்படுவதற்கு, கர்த்தருக்குள் வாழ்வதற்கு உதவி செய்கிறதாக இருக்கிறது. இரண்டாவதாக மீறுதலினாலே பாவஞ்செய்கிறோம். அநேக காரியங்களை தேவனுடைய வார்த்தைக்கு மாறாக செய்வதினாலே, தேவனுடைய ஆசீர்வாதங்களை இழந்து, தேவனுடன் உள்ள தொடர்பை இழந்து தவித்துக் கொண்டிருக்கிற மக்களாய் இருக்கிறோம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலே பாவத்திற்கு எதிர்த்து நிற்கத்தக்கதாய் கீழ்ப்படிய வேண்டும். அதோடு தேவனுடைய சமுகத்திலே எப்பொழுதும் அவருக்கு ஏற்றவைகளைச் செய்வதற்கு, அவருடைய பிரமாணத்தின்படி வாழ்வதற்கு நம்மை அற்பணிக்க வேண்டும்.    மூன்றாவதாக அநீதியெல்லாம் பாவம் என்று 'அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு' என்று 1யோவான் 5:17ல் பார்க்கிறோம். சில குடும்பங்களில் அநீதியான காரியங்களைச் செய்வதற்கு பெற்றோர்களே காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம். சில குடும்பங்களில் சில பிள்ளைகளை நேசித்து, அவர்களுக்கு நலமானதைக் கொடுத்து, சில பிள்ளைகளுக்கு ஒன்றையும் கொடுக்காதபடி காரியங்களைச் செய்கிற பெற்றோர்களும் உண்டு. ஆனால் வேதம் நீதி, நியாயங்களைச் செய்கிற மக்களாய் மாறவேண்டும் என்று சொல்கிறது. நம்முடைய நீதி தேவனுக்கு ஏற்றதாய் இருக்க வேண்டும். நீதியின் காரியங்களைச் செய்வதற்கு நம்முடைய உள்ளம், எண்ணம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். தேவனுடைய நீதி நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு நாம் நீதிமான்களாக மாற வேண்டும். தேவனுடைய சமுகத்திலே நீதிமான்களாக மாற விசுவாசம் தேவை. அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக மாறுகிறோம். இப்படியாக நாம் மாற்றப்படும் போது, தேவனுடைய வல்லமையினாலே பாவத்திற்கு விலகி வாழ்கிற மக்களாய் மாறிவிடுகிறோம்.  இன்னும் பாவமானது இச்சைகளினாலே வருகிறது. பலவிதமான மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, இவைகளின் நிமித்தமாய் நாம் பாவங்களைச் செய்கிற மக்களாயிருக்கிறோம். 'ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டா னவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.' என 1யோவான் 2:16ல் பார்க்கிறோம். பாவமானது வருவதற்கு காரணமாக இச்சை இருக்கிறது. இச்சையானது பலவிதமான கேடுபாடுகளை விளைவிக்கிறது. இச்சையானது இருப்பதினாலே யுத்தங்களும் சண்டைகளும் உண்டாகிறது என யாக்கோபு 4:1ல் பார்க்கிறோம். இச்சையானது ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்கிற ஒரு காரியமாய் இருக்கிறது. இந்த இச்சையினாலே பல தவறுகளை நாம் துணிகரமாக செய்து விடுகிறோம். வேதத்திலே நாம் தாவீதைக் குறித்து பார்க்கிறோம். தாவீதைக் குறித்து கர்த்தர் என் இருதயத்துக்கு ஏற்றவன் என்று சொன்னார். ஆனால் தாவீதோ தவறு செய்வதைப் பார்க்கிறோம். 2சாமு. 11:1,2,3 வாக்கியங்களிலே வாசிக்கும்போது, தாவீது யுத்தத்திற்கு செல்லாதபடி ஸ்நானம் பண்ணுகிற ஒரு பெண்ணைப் பார்த்தான். அதினிமித்தமாய் மாம்சத்தின் இச்சைகளுக்கு இடம் கொடுத்து, தவறான காரியத்தைத் துணிகரமாய்ச் செய்தான். அதோடு மாத்திரமல்ல அவளுடைய கணவனை கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டி அதை நிறைவேற்றுகிறதைப் பார்க்கிறோம்.  அவளுடைய கணவன் மரித்துப் போன படியினால் அவளைத் தனக்கு மனைவியாக ஏற்றுக்கொண்டான். அதனுடைய விளைவு என்ன? சாபமும், பிறந்த பிள்ளை சாகிற நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். இப்படி பாவமானது பலவிதமான காரணங்களினாலே வருகிறது. 'பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்' என யாக். 1:15ல் பார்க்கிறோம். தாவீதினுடைய வாழ்க்கையிலே இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பித்தது. அதனால் நியாயப்பிரமாணத்திலே பிறனுடைய வீட்டையாவது, பொருளையாவது, ஆட்டையாவது யாதொன்றாகிலும் இச்சியா திருப்பாயாக என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். இவ்விதமான காரியங்களிலே பாவத்தைச் செய்த நம்மை இரட்சிக்கும் படியாக, கிருபாதார பலியாக இயேசு கிறிஸ்து தம்மையே சிலுவையில் நமக்காக ஒப்புக்கொடுத்தார். இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லப்பட்ட வார்த்தையின் படி மரித்துப்போனவர்களாகிய நம்மை, அவர் உயிர்ப்பித்து ஒரு முழுமையான வாழ்க்கையைத் தருவதற்கு உண்மையுள்ளவராய் இருக்கிறபடியினால், நாம் துதிகளினாலும் ஸ்தோத்திரங்களினாலும் நிறைந்து தேவனை போற்றுவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

2. பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கு குமாரன் வெளிப்பார்.    

"...பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்." 1 யோவான் 3:8

பிசாசானவன் ஆதிமுதல் நமக்கு விரோதமாய் போர் செய்து கொண்டிருக்கிறான். பிசாசினுடைய ஒவ்வொரு செயலினாலும் மனிதனுடைய வாழ்க்கையிலே பாதிப்புகள் உண்டு. மோசம் போக்கக் கூடிய தீய சக்திகளுடைய தந்திரமான செயல்களை அழித்து, நம்மை விடுதலையாக்க வேண்டும், நாம் வேதனை நீங்கி நலமாய் வாழ வேண்டும், சுகமாய் வாழ வேண்டும், எல்லாவற்றிலும் ஜெயமாய் வாழ வேண்டும் என்று தேவன் நம்மீது வைத்த அன்பினாலே இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தின் அதிபதியினுடைய தந்திரங்களை அழிக்கும்படியாக, அவனுடைய செயல்களை நீர்மூலமாக்கும் படியாக உலகத்திற்கு அனுப்பினார்.  இந்த வார்த்தைகளை வாசிக்கிற, தியானிக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, பிசாசினுடைய செயல்களை ஆதிமுதல் அறிந்திருக்கிறோம். அவனுடைய தந்திரமான செயல் என்னவென்றால், தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவை முறிக்க வேண்டும் என்று பொய்யான காரியங்களைச் சொல்லி நம்மை பாவம் செய்வதற்கு தூண்டுகிறவனாக, தந்திரமாய் நடத்துகிறவனாய் இருக்கிறான். இவ்விதமான பொய்யின் கிரியைகளை அழித்து நமக்குள் விடுதலைத் தருகிறவர் தான் இயேசு கிறிஸ்து. அவர் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கம் பொய்யான காரியங்களை நாம் நம்பி ஏமாற்றம் அடையாதபடி தேவனுடைய வல்லமையினாலே நாம் சுகமடைந்தவர்களாய் ஜீவிக்க வேண்டும் என்பதற்காக தான். இரண்டாவதாக 18 ஆண்டுகளாய் கூனியாய் இருந்த ஒரு சகோதரியைப் பார்க்கிறோம். அவளுடைய வாழ்க்கையிலே பெலவீனத்தின் ஆவியானது வேதனையான வாழ்க்கைக்குள்ளாய் நடத்தியதை பார்க்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து அந்த நாளில் ஆலயத்திலே அந்த மகளைக் கண்டு, அழைத்து அந்த மகள் மீது கைகளை வைத்தபோது, முதுகு குறுகினது மாறி நிமிர்ந்து தேவனைத் துதித்தாள் என்று பார்க்கிறோம். இன்று அநேகருடைய வாழ்க்கையிலே முதுகு பாதிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அநேக தேவப் பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே இப்படி முதுகு குறுகிப்போன நிலையில் இருப்பதைக் காணலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவோ எதினால் அந்தக் காரியம் வந்தது என்று அறிந்திருக்கிறார். அது பிசாசினால் வந்திருக்குமானால் அதை முற்றிலுமாய் குணமாக்கி ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். இன்னுமாய் நம்முடைய கண்களைக் குருடாக்குவது இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசினுடைய தந்திரமான செயல். ஆவிக்குள்ளான வாழ்க்கையிலே கண்களைக் குருடாக்குவது. '...இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைத் குருடாக்கினான்' என 2 கொரி. 4:4ல் பார்க்கிறோம்.  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இந்த வார்த்தைகளைத் தியானிக்கிற அருமையான தேவப் பிள்ளையே, பிசாசினுடைய தந்திரமான செயல்களில் மற்றோன்று நம்முடைய ஞானக்கண்களைக் குருடாக்குவது. நாம் வாசிக்கிற அல்லது தியானிக்கிற வேத பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியாதபடி நம்முடைய உள்ளத்தின் எண்ணங்கள், சிந்தைகளையெல்லாம் சிதறடிக்க வைக்கிற ஒரு செயல். ஆகவே இன்று ஒரு தீர்மானத்தோடு தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது, எவ்விதமாய் நம்மை நடத்துகிறார் என்று அறிவதற்கு நாம் ஆவலோடு வாஞ்சசையோடு இந்த வார்த்தைகளை தியானிப்போமானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையிலே பிசாசினுடைய கிரியைகளையெல்லாம் அழித்து நமக்கு ஒரு விடுதலைத் தந்து மகிழ்ச்சியோடு கர்த்தருக்குள் வளருவதற்கு நம்மை நடத்துகிறவராய் இருக்கிறார். இன்னுமாய் பிசாசானவன் மனிதனுக்குள் பாவத்தினால் வருகிறான். அதோடு வாழ்க்கையை அழித்து விடுகிறான். யோவான் 10:10ல் 'திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்'என பார்க்கிறோம்.  நம்முடைய வாழ்க்கை அழிந்து விடவேண்டும் என்று பிசாசு நமக்கு விரோதமாய் போராடுகிறான். யூதாஸ்காரியோத்து என்ற சீஷனுக்குள்ளாக பிசாசு நுழைந்தான் என்று லூக்கா 22:3ல்  பார்க்கிறோம். அவன் சீஷனாயிருக்க வேண்டியவன், அப்போஸ் தலர்களில் ஒருவனாய் இருந்து செயல்படவேண்டிய தூதன். பணப்பையை வைத்திருந்த அவன் திருட்டுத்தனமாய் காரியங்களைச் செய்த படியினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து, அவன் திருடனாய் இருக்கிறான் என்று சொன்னார். அப்படிப்பட்ட பாவச் செயல் இருந்தபடியினாலே அவனுக்குள் பிசாசு நுழைந்தது. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, பாவம் இருக்குமானால் அவர்களுக்குள்ளாய் பிசாசு நுழைவது எளிதாய் இருக்கிறது. அவனுக்குள் நுழைந்த படியினாலே இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்ததோடு மாத்திரமல்ல அவன் நான்றுகொண்டு செத்தான் என்று பார்க்கிறோம். அவனுடைய முடிவானது பரிதாபமாய் மாறியது. பிசாசின் கிரியைகளை அழித்து, குணமாக்கி நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று தேவன் நம்மேல் வைத்த அன்பினாலே இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தினார், இந்த உலகத்திற்கு அனுப்பினார். இன்று பிசாசினுடைய பிடியிலே சிக்கி தவிக்கிற மக்களுடைய வாழ்க்கையிலே, புத்தி தெளிவில்லாதவர்களுடைய வாழ்க்கையிலே அதிசயமாய் அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்கு விலக்கிக் காக்கிற அன்பின் செயலைப் பார்க்க முடிகிறது. லூக்கா 8:27ல் லேகியோன் வஸ்திரம் தரியாதவனாக, அவன் வீட்டில் தங்காதவனாக, கல்லறைத் தோட்டத்தில் தங்குகிறவனாக இருந்தான் என்று பார்க்கிறோம். அவன் இயேசு கிறிஸ்துவிடத்தில் வந்து, எனக்கும் உமக்கும் என்ன என்று கேட்பத்தைப் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து அந்த பிசாசுகளின் பிடியிலிருந்து அவனை விடுவித்தார். தீய ஆவிகள் அவனிலிருந்து வெளியேற்றப்பட்ட படியினால் அவன் புத்தி தெளிந்தவனாக, இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டான் என்று பார்க்க முடிகிறது. ஆகவே இன்று பிசாசின் கிரியைகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அதை அழித்து நமக்குள் ஒரு சுக வாழ்க்கையை, சந்தோஷ வாழ்க்கையைத் தருவதற்கு தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அது மூலமாய் தேவ அன்பு வெளிப்பட்டது.

3. கண்ணீர் துடைக்கும் தேவனாக வெளிப்பட்டார்.

"அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்துதமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிடுவார்கர்த்தரே இதைச் சொன்னார்." ஏசாயா 25:8

இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே கண்ணீர் நிறைந்த வாழ்க்கையைப் பார்க்கிறோம். இந்த கண்ணீர் நிறைந்த வாழ்க்கையின் நிமித்தமாய் கலங்கி வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அன்னாளைப் பார்க்கும்போது, குழந்தை இல்லாத குறைவினாலே நிந்திக்கப்பட்ட, கண்ணீர் நிறைந்த ஒரு வாழ்க்கையாக இருந்தது. வாழ்க்கையிலே செல்வக் குறைவுகள், சுகக் குறைவுகள், பொருளாதாரக் குறைவுகள், இப்படி பலவிதமான குறைவு நிறைந்த வாழ்க்கையினாலே கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளம். ஆனால் இயேசு கிறிஸ்துவோ இந்த உலகத்தில் அனுப்பப் பட்டதின் நோக்கமோ, கண்ணீரைத் துடைப்பதற்கு. குறைவுகளை யெல்லாம் மாற்றி நம்முடைய வாழ்க்கையிலே அற்புதமான காரியங்களைச் செய்கிற தேவன். நாம் இயேசு கிறிஸ்துவை தேடுவதற்கு இடம் கொடுக்கும் போது, ஒரு நன்மையும் குறைவுபடாதபடி நல்ல வாழ்க்கையைத் தருகிற தேவன். சங்கீதம் 34:10ல் '...கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.' என்று பார்க்கிறோம். இன்றைக்கு நம்முடைய குறைவுகளை நீக்குவதோடு, கவலைகளையும் கண்ணீரையும் துடைத்து, நமக்குள் ஒரு மகிழ்ச்சியின் வாழ்க்கையைத் தருகிறவர் இயேசு கிறிஸ்து. அருமையான சகோதரனே, சகோதரியே, வாழ்க்கையிலே குறைவினாலே கண்ணீரோடு இருக்கிறாயா? வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? உன் கண்ணீரைக் காண்கிற தேவன், கண்ணீரைத் துடைப்பதற்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். யாருமே எனக்கு இல்லையே, என் கண்ணீரை யார் துடைப்பார்கள் என்று ஏங்கியிருக்கிற உனக்கு உதவி செய்ய உண்மையுள்ளவராக இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே நமக்காக வெளிப்பட்டார். அதோடு வியாதியினாலே, மரண நோயினாலே பாடுபடும்போது, கண்ணீர் சிந்துகிறோம். ஏசாயா 38ம் அதிகாரத்திலே உன்னுடைய வாழ்க்கையிலே உண்டான வியாதி மரணத்தை விளைவிக்கப் போகிறது. உன் வீட்டின் காரியங்களை ஒழுங்கு செய் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக எசேக்கியா ராஜாவுக்கு சொல்லப்பட்ட பொழுது, எசேக்கியா ராஜா மிகவும் கண்ணீரோடு அழுகிறான். ஐயா, என் வியாதியிலே என் வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிலை வந்தபோது, அவன் உள்ளத்தில் துக்கம் அடைந்து, நான் எவ்வளவு உத்தமமாய் உமக்கு முன்பாய் நடந்தேன் என்று அறிவீரே , என்னை நினைந்தருளும் என்று கலங்கி கண்ணீர் சிந்தினான். தேவன் அவனைப் பார்த்து உன் கண்ணீரைக் கண்டேன், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று சொன்னார். எசேக்கியாவுக்கு 15 ஆண்டுகள் கூட்டிக்கொடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கிற தேவன், இன்று நமக்குள்ளும் அற்புதங்களைச் செய்கிறவராய், நமக்குள் சுகவாழ்வு தருகிற அன்பு நிறைந்த தேவனாயிருக்கிறார். ஒருவேளை மரணத்தினாலே, நமக்கு அருமையான மக்கள் மரித்துப் போனதின் நிமித்தமாக கண்ணீரோடு இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவோ நம்மைத் தேற்றுகிற தேவன், நம்முடைய வாழ்க்கையை மாற்றுகிற தேவன், கண்ணீரைத் துடைத்து, உள்ளத்தின் எல்லா உடைந்த நிலைகளையும் மாற்றி ஆறுதல்படுத்துகிற, ஆசீர்வதிக்கிற தேவனாய் இருக்கிறபடியினால், இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை மகிழ்ச்சியாய் கொண்டாடுகிற மக்களாய் இருக்கிறோம்.

4. சமாதானத்தை தருவதற்கு வெளிப்பட்டார்.

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது..." ஏசாயா 53:5

மனிதனுடைய வாழ்க்கையிலே சமாதானமானது மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது. இந்த சமாதானத்தை இயேசு கிறிஸ்து நமக்கு உண்மையாய்த் தருகிற தேவனாயிருக்கிறார். அவருடைய சமாதானமானது முழுமையானது, பூரணமானதாய் இருக்கிறபடியால், நாம் எல்லாக் காலங்களிலும் அந்த சமாதானத்தின் நிமித்தமாய் மகிழ்ச்சியோடு மேன்மையோடு வாழ முடிகிறது. அருமையான தேவ ஜனமே, என்னுடைய சமாதானத்தையே வைத்துப் போகிறேன் என்று சொன்னவர் இன்று நம் மத்தியில் ஜீவிக்கிறவராக இருக்கிறார். அவர் மாறாத மகிமை நிறைந்த தேவனாய், உயிர்த்தெழுந்த ஆண்டவராய், நம் மத்தியில் அசைவாடுகிற தேவனாய் இருக்கிறார். அவர் அருளுகிற சமாதானத்தினாலே நம்முடைய வாழ்க்கையின் எல்லைகளின் சந்தோஷம் வந்துவிடும். இன்றைக்கு அநேகருடைய குடும்பங்களிலே பிள்ளைகளின் நிமித்தமாய் சமாதானத்தை இழந்திருக்கிறார்கள். ஏசாயா 54:13ல் 'உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாயிருக்கும்.' என்று தேவன் சொன்ன வார்த்தைகளைப் பார்க்கிறோம், ஆகவே பிள்ளைகளின் மூலமாய் சமாதானத்தை நமக்குள் உண்டாக்கி, நம்மை ஆசீர்வதிக்கிற தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினதின் நோக்கமே சமாதான பிரபுவாக, இழந்து போன சமாதானத்தை பெற்றுக்கொள்ளும்படியாக என்று அறிந்து புரிந்து கொள்ள முடிகிறது. இன்னுமாய் அவர் வேதனைகளை நீக்கி சமாதானத்தைத் தருகிற தேவன். பன்னிரண்டு ஆண்டுகள் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ வேதனையோடு இருந்ததைப் பார்க்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் வஸ்திரத்தை அந்த மகள் விசுவாசத்தோடு தொட்டபோது, அற்புத சுகத்தைப் பெற்றுக் கொண்டாள். யார் என்னைத் தொட்டது என்று இயேசு கிறிஸ்து கேட்ட போது, அவர் பாதத்தில் விழுந்து நடந்ததை எல்லாம் சொன்னபின்பு, '...மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.' மாற்கு 5:34ன் படி சமாதானத்தோடு போ என்று சொன்னார். வேதனையை நீக்கி சமாதானம் நிறைந்த வாழ்க்கையைத் தருகிறவர் இயேசு கிறிஸ்து. இந்த உலகத்தில் வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மை, அவர் சமாதானத்துக்குள் நடத்துகிற தேவனாய் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலைகளிலே சமாதானத்தைக் கொடுத்து, சந்தோஷத்தைக் கொடுத்து, ஆசீர்வதிக்கிற தேவன், ஜீவிக்கிறவராய் இருக்கிறார்.

5. அக்கினியைப் போடுவதற்காக இயேசு கிறிஸ்து வெளிப்பட்டார்

"பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்." லூக்கா 12:49

இன்றைக்கு அக்கினியானது நமக்குள் பற்றி எரிய வேண்டும். இந்த அக்கினி என்றால் என்ன ? அக்கினி என்றால் தேவனுடைய வல்லமையைக் குறிக்கிறது. இந்த அக்கினியானது பரலோகத்திலே தேவனால் உருவாக்கப்பட்டது என்று எசேக். 28:17,18ல் பார்க்கிறோம். லூசிபருடைய செயலினாலே தேவன் அவன் மீது கோபம் கொண்டு, அவனுடைய எல்லாவிதமான துர்க்கிரியைகளையும் அழிப்பதற்காக இந்த அக்கினியை பரலோகத்திலே உண்டாக்கினார். பரலோகத்தில் உண்டாக்கின அக்கினியை, பூலோகத்திலே பிசாசின் செயல்களை அழிப்பதற்கு, சாம்பலாக்குவதற்கு தேவன், குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அதை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அருமையான தேவ ஜனமே, இந்த அக்கினியின் அபிஷேகமானது, மனிதனுடைய வாழ்க்கையிலே அவனுக்கு விரோதமாய் எழும்புகிற பொல்லாத ஆவியின் கிரியைகளை எல்லாம் அழித்துப் போடுகிறதாய் இருக்கிறது. பொறாமையினாலே சூனியத்தின் மூலமாய் வருகிற எல்லா எதிர்ப்புகளையும் அழித்து நமக்குள் ஒரு சுக வாழ்க்கையை அருளிச் செய்வது தான் இந்த அக்கினியின் வல்லமையாய் இருக்கிறது. ஆகவே இந்த அக்கினியைப் போட வந்த இயேசு கிறிஸ்து, அது நமக்குள்ளாய் பற்றி எரிய வேண்டும் என்று விரும்புகிறவராய் இருக்கிறார். யோவான்ஸ்நானன், மத்தேயு 3:11ல் '...நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான்பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்' என்று பார்க்கிறோம். சகரியா 2:5ல்  'நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் ...' என்ற தேவனுடைய வார்த்தைகள் இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு அக்கினி மதிலாயிருக்கிறார். இந்த உன்னத பாதுகாவலைத் தந்து அனுதின வாழ்க்கையிலே நாம் ஆசீர்வதிக்கப் படவும், இந்த அக்கினியின் வல்லமையினாலே நிறைந்தவர்களாய் மாறும்போது, பிசாசின் கிரியைகள் அளிக்கப்படுவதற்கு நாம் அவருடைய கரத்தில் ஒரு கருவியாய் மாறவும் அவர் அனுக்கிரகம் பண்ணுகிற தேவனாய் இருக்கிறபடியினால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையானது நமக்கு ஒரு விசேஷித்த, ஆசீர்வாதமான பண்டிகையாய் இருக்கிறபடியினால் நாம் தேவனுக்குத் துதிகளைச் செலுத்துவோமாக.

                     கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                               கிறிஸ்துவின் பணியில்,
                                சகோ.C.எபனேசர் பால்.