இம்மட்டும் கிருபையாக நடத்தின கர்த்தருக்கு துதி ஸ்தோத்திர ஜெபம்

அன்பின் தேவனே, இம்மட்டும் என்னை நடத்தின தயவுக்காக ஸ்தோத்திரம். கடந்து வந்த பாதையை நான் நினைக்கும்போது, உமது அன்பின் செயலை உணருகிறேன். என் வாழ்வில் வருட ஆரம்ப முதல் முடிவு வரை நீர் செய்த உதவிக்காக, நன்மைக்காக நன்றி சொல்லுகிறேன். என்னமாக இந்த ஆண்டு இருக்குமோ என்ற எண்ணம் வந்தபோது, கலங்கினேன். ஆனால் என்னைக் கைவிடாது காத்து வந்த அன்பின் செயலுக்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். நினையாத பாடுகள்/பலவீனம்/பணப்பிரச்சனை/மரணம் என் குடும்பத்தில் வந்த போதும், நீர் என்னை நேர்த்தியாய் நடத்தினீர், தாங்கினீர், அதற்காக ஸ்தோத்திரம். எண்ணிமுடியாத அதிசயங்களை நீர் எனக்குச் செய்தீரே, அதற்காக என் உள்ளத்தில் இருந்து உமக்கு நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்கிறேன். நீர் பாராட்டின கிருபை எவ்வளவு பெரியது. எங்கு நான் விழுந்து நொறுங்கி விடுவேனோ என்ற நேரத்தில் என்னைத் தாங்கினீரே, அதற்காக கோடாகோடி ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். எத்தனையோ முறை இயற்கையின் சீற்றம் என் எல்லைகளில் வந்தது. ஆனாலும் நீர் கைவிடாது எனக்கு கோட்டையும் அரணுமாய் இருந்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே நீர் எனக்கு ஜீவனைத் தந்ததுமல்லாமல், தயவையும் பாராட்டினீரே, அதற்காக ஸ்தோத்திரம். உம்முடைய பராமரிப்பு இம்மட்டும் என் ஆவியைக் காப்பாற்றினது. நான் என் பிள்ளைகளின் வாழ்வின் குறை நீங்க உம்மை நோக்கி மன்றாடினபோது, என் ஜெபத்தைக் கேட்டீரே, அதற்காக ஸ்தோத்திரம். நீர் மகனின்/மகளின் திருமணத்தைச் செய்து முடித்தபடியால் ஸ்தோத்திரம். நீர் என் மகனுக்கு/மகளுக்கு நல்ல வேலையைக் கொடுத்தபடியால் உம்மைத் துதிக்கிறேன். என் பிள்ளைகள் உம்மோடு நெருங்கி வாழ கிருபைச் செய்தபடியால் உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, கிருபையாக இரங்கி பிள்ளைகளின் பிள்ளைகளைக் கடந்த நாட்களில் காணச்செய்த தயவுக்காக ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவே, கடந்த நாட்களில் நீர் என் பயணங்களில் எனக்குத் துணையும் பாதுகாவலுமாய் இருந்த படியால் உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே நீர் அன்பு பாராட்டி எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் என் துதிகளையும் ஸ்தோத்திரங் களையும் ஏறெடுக்கிறேன். தொடர்ந்து ஆசீர்வதியும், வழிநடத்தும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.