கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துகிறேன். புதிய ஆண்டைக் காணச் செய்த தேவனுக்குத் துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுப்போம்.

இன்றைக்கு நாம் நன்மையான காரியங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த நன்மைகள் சரீரத்துக்கு ஏற்றதாய் இருக்கிறது. படிக்கட்டில் ஏறும்போது வயதானவர், பெலவீனமானவர் தடுமாறுகிறவர்களுக்கு உதவி செய்வது ஒரு நன்மையான காரியமாகும். பேருந்தில் அல்லது ரெயிலில் இடம் நெருக்கடி நேரத்தில் உட்காருவதற்கு இடம் தருவது ஒரு நன்மையான காரியம். இதைப் போல வானத்தையும் பூமியையையும் உண்டாக்கிற தேவன், சர்வத்தையும் ஆண்டு நடத்துகிறவர் நமக்கு அனுதினமும் ஒவ்வொரு சிறிய பெரிய காரியங்களிலும் நன்மையானவைகளை அருளுகிறவராய் இருக்கிறார். அளவில்லாத நன்மைகளைத் தருகிற தேவன் நேற்றும் இன்றும் மாறாதவராயிருக்கிறார். இந்த நன்மைகள் அனைத்தும் நமக்கு ஈவாக, கிருபையாக அருளப்பட்டு வருகிறது. நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. (யாக்.1:17)

மேலும் இந்த நன்மைகள் அற்பமாயுமல்ல, சொற்பமாயுமல்ல, பூரணமாக திருப்தியடையத்தக்கதாக தருகிறார். கர்த்தர் பலவிதமான உபகாரங்களைச் செய்து, ஆத்துமா கர்த்தரை ஸ்தோத்தரிப்பதற்கு, தகுதிபடச் செய்கிறார். அக்கிரமங்களையெல்லாம் சுமந்து தீர்த்தவர், நோய்களைத் தன் தழும்புகளால் குணமாக்குகிறவர் இன்றும் ஜீவிக்கிறவராய் இருக்கிறார். எண்ணிக்கைக்கு அடங்காத நன்மைகளைச் செய்கிற அன்பின் தேவன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்கிறவராய் இருக்கிறார். அழிந்து போக வேண்டிய சில காரியங்களை என் வாழ்க்கையில் எண்ணுவதுண்டு. 

1983ம் ஆண்டு ஒரு நாள் என் ஸ்கூட்டர், பிரேக் பிடியாதபடியினால் முன் சென்ற லாரி டயரிலே மோதும்படி செய்து தப்பிக்கொள்ள முயற்சித்த போது, எதிர்பாராத காரியங்கள் நடைபெற்றது. மோதிய ஸ்கூட்டர் அதே வேகத்தில் திரும்பி வந்து விட்டது. கீழே விழவும் நேரிட்டது. அந்நேரம் ஒரு காரின் முன் சக்கரம் என் தலை முடியின் மேல் ஏறிச் சென்றது. என் சரீரம் செத்தழிய வேண்டிய அந்த நாளில் கர்த்தர் அழிவின் குழிகளுக்கு என்னை விலக்கினார். இவ்விதமாய் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்கிற தேவன், கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டி இருக்கிறார். இவ்விதமாய் பலவிதமான நன்மைகளைச் செய்து, நன்மைகளினால் நம் வாயைத் திருப்தியாக்குகிற தேவன், கழுகுக்கு சமானமாய் நம் வயதைத் திரும்ப பெலத்தால், சுகத்தால் இடை கட்டுகிறார். அவருடைய ஜனமாய் வாழ்கிற நம் ஒவ்வொருவரையும் அவர் அளிக்கும் நன்மையினால் திருப்தியாக்குகிறார்.

இன்னும் அவர் வருஷத்தை நன்மையால் முடிசூட்டி நம் பாதைகளைச் சிறப்பும் செழிப்பும் அடையச் செய்கிறார். சகலமும் பரிபூரணம் அடையவும், சகலத்தையும் ஆசீர்வாதமாய் மாற்றுகிறார். நன்மையினாலும் கிருபையினால் முடிசூட்டுகிற கர்த்தாதி கர்த்தரை நமது வாழ்வில் நம் மேய்ப்பராக ஏற்றுக் கொள்ளும்போது, இந்த நன்மை, கிருபை தொடருகிறதாய் இருக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் பலவிதமான நன்மைகளை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்.

I.தேவன் உண்டுபண்ணி வைத்த நன்மைகள்

1. மனிதனால் உண்டான நன்மை

"தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன்.

நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை." 1 சாமுவேல் 24:17, 18

என்னைக் கொன்றுபோட சவுல் ராஜாவாகிய நீர் உம்முடைய மருமகன் என்றும், யுத்தத்தில் வெற்றி பெற்றுத்தந்த வீரன் என்றும் எண்ணாது, என்னைக் கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்ற கோபத்தோடு 3000 மனுஷரைக் கூட்டிக்கொண்டு எனக்கு எதிரே வந்த உம்மை நான் கேபியிலே கொன்று போட தருணத்தைக் கர்த்தர் உருவாக்கிய போதும், கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட உம்மை நான் கொன்று போடாமல், அடையாளமாய் இருப்பதற்கு ஒரு சால்வையின் தொங்கலை அறுத்தேன் என்பதை நீர் அறிந்து, நான் உமக்கு எதிராளி அல்ல என்று தாவீது கூறினபோது, சவுல் தாவீதைப் பார்த்து நீ எனக்கு நன்மை செய்தாய் என்று கூறி தன் தவறை உணர ஆரம்பித்தான். தீமையை நன்மையினாலே வெல்லு என்ற வார்த்தையின்படி, தாவீது தனது நற்பண்பை நன்மை செய்து சவுலின் குறைவை வெளிப்படுத்தினார்.

2. தேசத்தின் நன்மை

"நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்." ஏசாயா 1:19

தேசத்தின் நன்மையைப் பெற வேண்டுமானால், கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு அதைச் செய்கிற மக்களாய் மாற வேண்டும். தேசத்தின் பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது ஈசாக்கு எகிப்து தேசத்திற்குச் செல்ல தீர்மானம் செய்தான். ஆனால் கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, நான் உனக்குச் சொல்லும் தேசத்தில் குடியிரு என்றார். அத்துடன் நான் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்றும் கூறினபடியால், கர்த்தர் சொன்ன தேசத்தில் இருந்து விட்டான். அந்த தேசத்திலே ஈசாக்கு விதைவிதைத்த போது, நூறு மடங்கு பலன் அடைந்தான். கர்த்தர் தம்முடைய ஆவியானரை ஊற்றும்போது, வனாந்தரங்கள் செழிப்பாகும். அவருடைய ஜனமாகிய நாம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கச் செய்வார்.

ஆகவே இன்று அவர் சொல்கிற தேசத்திலே குடியிருக்கவும், அவர் சொல்கிற பிரகாரம் நம்முடைய பண்புகளையும் வழக்கங்களையும் செம்மையாக்கிக் கொள்ளும்போது, குறைவில்லாத நிறைந்த வாழ்க்கையும், செழிப்பும், ஜெயமும் நிறைந்த நல்ல வாழ்க்கையையும் அவரின் நன்மையால் நாம் அடைவோம்.

3. ஆலயத்தின் நன்மை

"உம்முடைய பிரகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்." சங்கீதம் 65:4

இன்று அநேகர் ஆலயத்திலே ஆராதிக்க கூடி வருகிறதைப் பார்க்கிறோம். தேவனை ஆராதிக்கச் செல்கிற நம்மை, ஆராதனையில் உள்ள சகல நல் ஆசீர்வாதங்களையும் தந்து நிறைவாக ஆசீர்வதிக்கிறார். நாம் ஆலயத்துக்குச் செல்லும்போது, அவர் தமது வழிகளை நமக்குப் போதிக்கிறார். நாமும் அவர் பாதையில் நடக்க நம்மை அர்ப்பணிக்க எதுகரமாயிருக்கிறது. ஆலயத்தில் போதிக்கப்படுகிற வசனங்கள் நமக்கு எச்சரிப்பையும், நம்மை மாற்றுகிறதாயும், நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.   

ஒரு ஆலயத்திலே போதகரையும், செய்தி கொடுத்த ஊழியரையும் அடிக்க வேண்டும் என்ற உள்ளத்தோடு, நோக்கத்தோடு இருந்தவரை, கர்த்தரின் வார்த்தைகள் தொட்டு, அவரை மாற்றியது. அவர் ஊழியரை அணுகியபோது, உன் மனைவி தற்கொலை செய்ய இருக்கிறாள், வீட்டுக்கு ஓடு என்று சொன்ன வார்த்தையின்படி வீட்டிற்குச் சென்ற போது, கழுத்தில் மாட்டிய கயிரோடு இருந்த மனைவியைக் காப்பாற்ற முடிந்தது. தேவன் தம்முடைய பிள்ளைகளை தம்முடைய கூடார மறைவிலே ஒளித்து வைத்து காப்பாற்றுகிறார். தாவீது தீங்கு நாளில் அவர் என்னைக் கூடார மறைவிலே ஒளித்து வைத்து என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவரர் என்று சொல்வதைப் பார்க்கிறோம். 'கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.' என சங். 92:13ல் பார்க்கிறோம். 

பிள்ளையில்லாத குறைவினாலே கண்ணீரும் நிந்தையும் நிறைந்த அன்னாள், தேவ ஆலயத்திலே கண்ணீரோடு ஜெபித்த பொருத்தனையின் ஜெபத்தைக் கேட்டு, பிள்ளையில்லாத குறைவை நீக்கி, துக்கத்தை சந்தோஷாமாக மாற்றினார். லூக்கா 13ம் அதிகாரத்தில் ஆலயத்தில் கண்ட 18 ஆண்டுகளாக கூனியாய் இருந்த மகளைப் பெலவீனத்தினின்று விடுதலையாக்கி, நிமிர்ந்து தேவனைத் துதிக்க, மகிமைப்படுத்த கர்த்தர் கிருபை செய்தார். இன்னும் பல நன்மைகள் உண்டு. நாம் ஆலய ஆராதனையில் ஒருமனதோடு பங்குபெறும்போது, ஆலயத்தின் நன்மையால் நன்மை நிறைவாக்குகிறார்.        

II. கர்த்தர் அருளும் நன்மை

1. காப்பாற்றும் நன்மை

"உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்." சங்கீதம் 31:19, 20

போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த வாழ்க்கையிலே நமக்கு விரோதமாய் உருவாகும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்று சொன்னவர், எல்லாவிதமான தந்திரமான செயலுக்கும் விலக்கிக் காக்கிறார். சங். 64ல் உள்ளபடி சாபகரமான வார்த்தைகளைக் கொண்டு நினையாத அழிவு வருவதற்காக தீயக் காரியங்களைச் செய்கிறார்கள். யார் இதைக் காண்பார் என்று தங்கள் உள்ளத்தில் எண்ணம் கொண்டு தங்களது அநீதியின் கிரியைகளை நடப்பிக்கிறார்கள். கர்த்தர் இதைக் காண்பார் என்று அறிவில்லாதிருக்கிறார்கள். எதை விதைக்கிறார்களோ அதையே அறுப்பார்கள் என்று உணராதிருக்கிறார்கள்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்த சகோதரிகள் ஜெபிக்க வந்தார்கள். எங்கு தன் உடைமைகளை மற்ற சகோதரி ஏமாற்றி எடுத்து விடுவாளோ என்ற எண்ணத்தில், தாம் சொன்னபடியே சகோதரி கேட்க வேண்டும் என்று தந்திரமான காரியங்களைச் செய்து, சூனியத்திற்காக சாப்பிடக் கொடுத்த கை விஷத்தினால் பாதிக்கப்பட்டு ஜெபிக்க வந்தார்கள். இந்தப் பாடுகள் வரும் என்று அறியவில்லை என்று சூனியத்தைச் செய்த சகோதரி வருந்தினார்கள். கேடு வரும் என்று அறிவில்லாமல் செய்கிறவர்களும் உண்டு. வாரிசு இல்லாமல் போக வேண்டும் என்று திருமண காரியங்களிலே சூனியங்களைச் செய்தபடியால் குழந்தையில்லாது தவிக்கிற குடும்பங்கள் உண்டு. பொருளாசை மிகுதியினால் இக்காரியங்களைச் செய்கிறவர்கள் உண்டு. இப்படி பலவிதமான தவறான, குறுகிய நோக்கத்தோடு, தந்திரமான தீய நோக்கத்தோடு செய்கிறவர்களுடைய கிரியைகளை அழித்து அவைகள் சேதப் படுத்தாதபடி நம்மைக் காப்பாற்றி ஆசீர்வதிக்கிறார்.

2. தேவைகளை அருளும் நன்மை

"அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை." எரேமியா 31:12

இந்த உலக வாழ்க்கையிலே நமது தேவைகள் அதிகரித்து வருவதை அறிவோம். இதைச் சந்திப்பதற்கு மிகுதியாக பாடுபடுகிறோம். குறைவுபடும் போது கடன் வாங்கி சமாளிக்கிறோம். குறைவோடு, பாடுகளோடு பலவிதமான மன சஞ்சலத்தோடு, கவலையோடு வாழ்கிறோம். ஏன் எனக்கு இந்தக் கஷ்டம்? ஏன் எனக்கு இந்தப்பாடு என்று கண்ணீர் சிந்துகிற மக்கள் ஏராளம் உண்டு. அடிப்படை தேவையே எனக்கு இல்லை, உடுத்த உடையும், உண்ண ஆகாரமும் தங்கித் தாபரிப்பதற்கு இடமும் இல்லையே என்று ஏங்குகிற மக்கள் ஏராளம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தர் நம்மைச் செழிப்பும் சிறப்பும் உள்ளவர்களாய் மாற்ற விரும்புகிறார். அநேக நேரங்களிலே குறைவுகளின் மிகுதியால் ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணி தற்கொலை செய்கிற மக்களும் உண்டு. நன்மைகளை அருளும் கர்த்தர் இன்றைக்கு ஜீவிக்கிறார். அவர் அருளும் நன்மைகள் நம் சரீர செழிப்புக்கும், ஆவியின் சிறப்புக்கும் சமாதானத்துக்கடுத்ததுமாய் இருக்கிறது. அவர் அருளும் நன்மைகளில் ஒன்று கோதுமை. கோதுமை என்பது தேவனின் வார்த்தைகளைக் குறிக்கிறது. அந்த வார்த்தைக்கு ஆவியும் ஜீவனும் இருக்கிறது. இந்த வார்த்தையின்படியே அதிசயங்களைச் செய்கிறார். இந்த மாறாத மகத்துவ வார்த்தையான கோதுமை, நம்மைத் தேற்றுகிறதாக, உடைந்த உள்ளத்தை மாற்றுகிறதாக, வாழ்க்கையில் நம்பிக்கையின் நிச்சயத்தை உருவாக்குகிறதாய் இருக்கிறது. இந்த ஆலோசனையின் வார்த்தைகள் ஆறுதலின் வார்த்தைகளாய், ஆச்சரியமான வார்த்தைகளாய் இருக்கிறது.

எண்ணெய் என்பது ஆவிக்குள்ளான வாழ்க்கையில் வளர, மேன்மையடையச் செய்கிற ஆசீர்வாதமான ஒரு காரியம். இந்த அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்கிற சிலாக்கியத்தை இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் பெற்றுக் கொள்கிறோம். இந்தப் பரிசுத்த ஆவி நமக்குள் வரும்போது, பூரண விடுதலை உண்டாகிறது. நாம் அவரால் வழி நடத்தப் படுகிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சாட்சியாகவும் மாற்றுகிறார். சத்துருக்களுக்கு மத்தியிலே நம்மை உயர்த்துகிறவராய் இருக்கிறார்.  

திராட்ச ரசம் என்பது ஆவியின் வரங்களின் காரியங்களைக் குறிக்கிறது. இந்த ஆவியின் வரங்களினாலே நாம் கர்த்தருக்குள் புது பெலன் அடைந்து, கர்த்தரின் கிருபைகளோடு ஊழியங்களைச் செய்ய, உழைக்க, சாட்சியாய் நிற்க அருள் புரிகிறார். ஆட்டுக்குட்டிகளும், கன்றுக்குட்டிகளும் இம்மைக்குரிய ஆசீர்வாதங்கள். உங்களுடைய கரத்திலுள்ளவைகளை ஆசீர்வதித்து, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களினாலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும், உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்பி விடுவார்.

3. சுகம் அளிக்கும் நன்மை

"நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்." அப்போஸ்தலர் 10:38

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். அவர் செய்த நன்மைகளிலே பிசாசின் பிடியில் சிக்கி வேதனையும், பாடுகளையும் அனுபவித்த மக்களை விடுவிக்கிறவராய் சுற்றித்திரிந்தார். இன்றைக்கு அநேகர் பிசாசினால் பாதிக்கப்பட்டு பாடுகளோடு வேதனையோடு வாழ்கிறார்கள்.

ஒருமுறை திருமணத்தன்று பிசாசினால் பாதிக்கப்பட்டு யாராலும் அடக்க முடியாதபடியினால் ஒரு அறையிலே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஒரு மனிதனுக்காக ஜெபிக்க அழைக்கப்பட்டிருந்தேன். அந்த மகனுக்காக விசேஷமாக ஜெபித்த நேரத்தில், விரோதமாக போராடின எல்லா சூனியத்தின் ஆவியையும் கர்த்தர் அழித்துப்போட்டார். அவன் தெளிந்த புத்தியுள்ளவனாய் மாறினான். இன்று அவரைக் கொண்டு கட்டுகளினால் உண்டாகும் நோய்களைக் கர்த்தர் குணமாக்குகிறார். லேகியோன் பிசாசினுடைய வாழ்க்கையிலே தான் என்ன செய்கிறேன் என்று தெரியாத நிலையைக் கர்த்தர் மாற்றி அவனைக் குணமாக்கினதைப் பார்க்கிறோம். அவன் தெளிந்த புத்தியுள்ளவனாய் மாறி இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சியாய் மாறினான். குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்ற வார்த்தையின்படி ஆவியிலே சுகமடைகிறோம். சரீரத்திலும் ஆரோக்கியம் அடைகிறோம்.

4. சகலவற்றையும் நன்மையாக முடியச் செய்கிறார்.

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு எதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ரோமர் 8:38

ஒரு காரியத்தின் முடிவு தான் முக்கியமானது. நீங்கள் எதிர்ப்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் வைத்திருக்கும் நினைவுகள் நன்மைக்கேதுவானவைகள் என்று சொன்னவர், நமக்கிருக்கிற எல்லா சூழ்நிலையிலும் நமக்குச் சாதகமாகச் செய்து நன்மையாய் முடியச் செய்வார்.

யோசேப்பு செய்யாத குற்றத்தினால் தண்டிக்கப்பட்டு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டான். நன்மையாய் முடியச் செய்த தேவன், யோசேப்பு ஆசீர்வதிக்கப்படுவதற்கு வழிகளை உண்டாக்கினார். பார்வோன் சொப்பனம் கண்டபோது, அர்த்தத்தோடு யோசேப்பினால் சொல்லப்பட்ட ஆலோசனையை ஏற்று யோசேப்பையே அந்த ஸ்தானத்திலே உயர்த்தினதைப் பார்க்கிறோம். அத்துடன் யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து ஆதி. 50:20லே நீங்கள் தீமை செய்ய நினைத்தீர்கள். கர்த்தர் அதை நன்மையாக முடியச்செய்தார் என்று கூறுவதைப் பார்க்கிறோம். நன்மையாய் முடியச் செய்கிற தேவன் இன்றைக்கும் நம் மத்தியில் ஜீவிக்கிறபடியினாலே நாம் கலங்க வேண்டாம். நான் உபத்திரவப் பட்டது நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொண்டேன் என்று சொல்வது போல, நம் வாழ்வில் உண்டான எல்லாப் பிரச்சனைகளையும் நன்மையாய் முடியச் செய்வார். கர்த்தரே இதைச் செய்கிறவராய் இருக்கிறார். இவ்விதமாய் நன்மைகளை அருளி ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

III. நன்மைகளைப் பெற்றுக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

1.கர்த்தரைத் தேட வேண்டும்.

"சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது." சங்கீதம் 34:10

இன்று மனிதன் பலவிதமான தொழிலை, பலவிதமான காரியங்களைச் செய்து ஆதாயத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற அனுதினமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறான். நாம் கர்த்தரைத் தேடும்போது அவர் அதிசயமாய் வழி நடத்தி ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். யார் யார் முழுமனதோடு அவரைத் தேடுகிறார்களோ அவர்களுக்குப் பதில் செய்கிறார். உண்மையாய்த் தேடுகிறவர்களுக்கு அவர் அற்புதங்களைச் செய்கிறவராய் இருக்கிறார்.

அற்புத சுகத்தை ஏற்றுக்கொள்ளாத மனதுடைய நான், என் வியாதிப்படுக்கையில் அவரை முழுமனதோடு உண்மையாய்த் தேடின போது, அற்புத சுகத்தைப் பெற்றேன். இருளில் இருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்து அவர் புண்ணியங்களை அறிவிக்க தேவன் என்னையும் தெரிந்து கொண்டார். இது எப்போது நடைபெற்றதென்றால் அவரை முழுமனதோடு தேடினபோது. இன்று அவர் அருளுகிற நன்மை சரீரத்திற்கு, ஆவிக்கு, உலகத்திற்கு, நாம் வாழும் எல்லாக் காரியத்திற்கும் மேலானதாய் இருக்கிறது. இந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ள கர்த்தரை நித்தமும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் தேட வேண்டும். முதன்மையாயும் தேட வேண்டும். இவ்வாறு தேடும்போது நன்மைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் மேன்மையாய் ஜீவிக்க முடியும். 

2. நன்மைகளைப் பெற ஜெபிக்க வேண்டும்.

"...பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டுக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?" மத்தேயு 7:11

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் வார்த்தைப்படி நம் பரம தகப்பனின் சமுகத்தை நோக்கி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கும்போது ஒவ்வொரு காரியத்திற்கும் அவர் பதில் தருகிறார். 'ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்' சங். 65:2. என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப் பார்த்து எனக்குச் செவிகொடுத்தருளும் என்ற ஜெபத்திற்கு பதில் வந்தபடியால் கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் என்று தாவீது சொல்வதை சங். 13:3-6ல் பார்க்கிறோம். 'இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்' யோவான் 6:24ன் வார்த்தை நிறைவேறும்படி சந்தோஷம் தருவார். சாலமோன் ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும் என்று கேட்டபோது, ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாக இருந்தபடியால், அவனுக்கு ஞானமுள்ள இருதயத்தையும், ஐசுவரியத்தையும் அருளினார். உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் என்ற சங்.22:24ன்படி கேட்கிற யாவரும் நன்மையான காரியங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இவ்வாறு ஜெபத்தின் மூலமாய் தேவ சமுகத்திலே உள்ள மிகுதியான ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக் கொள்கிறோம்.

3. செம்மையாய் நடக்கிறவர்களுக்கு நம்மை செய்வார் 

"...செம்மையாய் நடக்கிறவர்களுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" மீகா 2:7

செம்மையாய் நடக்கிற மக்களைக் கர்த்தர் நேசிக்கிறவராய் இருக்கிறார். '...துதி செய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.' சங். 33:1. ஆகவே துதி செய்கிற காரியம் உள்ளத்தின் ஆழத்தில் இருக்க வேண்டும். துதியும் ஸ்தோத்திரமும் கர்த்தருக்குப் பிரியமான காரியம். 'என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளில் நான் கர்த்தரைத் துதிப்பேன்.' சங். 26:12ல் பார்க்கிறோம். இந்த செம்மையான இருதயத்தையுடைய ஒவ்வொருவரும் மேன்மை பாராட்டுவார்கள். செம்மையான இருதயத்தாருக்கு மகிழ்ச்சி விதைக்கப்பட்டிருக்கிறது. செம்மையான வம்சத்தைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். இருளில் வெளிச்சம் உதிக்கும்.செம்மையானவர்கள் தேவனுடைய சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள். செம்மையானவர்களின் ஜெபமும் கர்த்தருக்குப் பிரியமானது. இவ்விதமாய் செம்மையானவர்களை விரும்புகிற தேவன், அவர்களுக்கு வார்த்தைகளை அருளி நன்மை செய்கிறார். எரே. 32:40ல் அவர்களுக்கு நன்மை செய்யும்படி நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணின தேவன், அவர்கள் மேல் சந்தோஷமாய் இருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நாட்டுவேன் என்ற வார்த்தையின்படி நன்மை செய்கிறவராய் இருக்கிறார். வழியை செம்மையாக்குகிறவர், இருதயத்தைச் செம்மையாக்குகிறவர், நம்மை வழி நடத்தி, கோணலான காரியங்களை நம் வாழ்வில் செம்மையாக்கி ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

4.மனம்திரும்பி கர்த்தரின் சத்தத்திற்கு செவிகொடுக்கும்போது நன்மை

"நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.

அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உமக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்." உபாகமம் 30:8, 9

மனதை கர்த்தரிடம் திருப்புகிற செயலானது மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது. அநித்தியமான பொருட்களை, சந்தோஷத்தை நாடித் தேடினவர்களாய், உலகத்தாராய் மாறி கலங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கர்த்தரின் ஜனமாக இருக்க அவருக்குச் செவிகொடுத்து, அவர் வழி நடக்க இடம்கொடுக்கும்போது, கர்த்தர் அன்று முதல் நம்மை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். சகரியா 9:12லே 'நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்' என்று சொன்னவர் வாக்குமாறாத தேவனாய் இருக்கிறார். காருண்யத்தினால் உன்னை இழுத்துக்கொள்கிறேன் என்று சொன்ன கர்த்தர் மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பார். அவர்களுக்கு நன்மையுண்டாக என் கண்களை அவர்கள் மேல் வைத்து, அவர்களை இந்தத் தேசத்திற்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களை இடிக்க மாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்க மாட்டேன் என்றவர் அதிசயமாய் நடத்துவார், நன்மைகளினால் முடிசூட்டுவார்.

'...நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்…" என்று சொன்ன எரே. 15:19ன்படி நன்மையைத் தரும் தேவன், நன்மையினால் முடிசூட்டுகிறவர், நன்மையும் கிருபையும் தொடரச் செய்கிறவர் இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பதோடு இந்த ஆண்டு முழுவதும் அவர் மூலமாய் அருளப்படும் சகல நன்மைகளினால் நிறைந்திருக்க கிருபைசெய்வராக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                     கிறிஸ்துவின் பணியில்,

                                                                                                                                                                                                                     சகோ. C. எபனேசர் பால்.