"...திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..." யோசுவா 1:9

தேவ சமாதானம், சந்தோஷம் நிறைவாயிருக்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபவேளைக்காய் நன்றி கூறுகிறேன். நீர் என் மீது வைத்த கிருபையினால் இந்தப் புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கச் செய்தீர். இவ்வாண்டிலே கர்த்தாவே, புதிதான ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்க எனக்குக் கிருபை செய்யும். என்னில் நீர் தந்த சமாதானம், என் குடும்பத்தில் தந்த சமாதானம், என் வேலை ஸ்தலத்தில் தந்த சமாதானம், என் எல்லையில் தந்துள்ள சமாதானத்துக்காய் ஸ்தோத்திரம். இந்த சமாதானத்தை நான் இழந்து விடாதபடி துர்ச்செய்திகளையும், போராட்டத்தின் காரியங்களையும் கேளாதபடியும், காணாதபடியும் இருக்கச் செய்யும். கர்த்தாவே, நான் ஒரு பரிசுத்தவானும் /பரிசுத்தவாட்டியும் அல்ல. ஆனால் சமாதான பிரபுவாகிய நீர் எனக்குள் ஈவாகக் கொடுத்த இந்தச் சமாதானத்தை நான் இழந்து போய் விடாதபடி எனக்கு உதவிசெய்யும். சிற்சில நேரங்களில் இந்தச் சமாதானத்தைக் கெடுக்கக் கூடிய வேதனைக்குரிய காரியங்களை, செய்திகளை நான் கேட்கும்போது, எங்கு என்னைத் துக்கப்படுத்தி, துயரப்படுத்தி சமாதானத்தை இழக்கச் செய்து விடுமோ என்று கவலைப்படுகிறேன். கர்த்தாவே, நீர் என்னைக் காத்து, இந்தச் சமாதானம் என்னை விட்டு நீங்காதிருக்கச் செய்யும். என் ஜனங்கள் சமாதான தாபரங்களில் ஜீவிப்பார்கள் என்று சொன்ன கர்த்தாவே, அவ்வாறே நாங்கள் ஜீவிக்க எனக்கு உதவிசெய்யும். எனக்குள் நீர் ஈந்த அந்த இரட்சிப்பின் சந்தோஷம் நிறைவாய் பெருகட்டும், கர்த்தாவே. நீர் ஒருவரே என் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, நான் துயரப்பட்ட நாளிலே ஆறுதல் அருளினீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். என் துக்கங்களை எல்லாம் கல்வாரிச் சிலுவையில் எனக்காக சுமந்து தீர்த்த இயேசுவே, நான் தோல்வியினாலோ, இழப்பினாலோ, தடையினாலோ, தாமதத்தினாலோ சோர்ந்து போய் துக்கமடையாதபடி என் காரியங்களைப் பொறுப்பேற்றுக்கொள்ளும். நீர் எனக்காக யுத்தம் பண்ணி, சத்துருவினால் வரும் பயன்கள், பாடுகள் யாவற்றையும் நிர்மூலமாக்கி நான் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க எனக்கு உதவி செய்யும். நீர் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தந்து என்னை ஆசீர்வதிப்பீரென்று உம்மைத் துதிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.