செய்தி

"கர்த்தர்தாமே உமக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பர்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்."      

உபாகமம் 31:8

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

உனக்கு முன்னே போவேன் என்று சொன்ன கர்த்தர், உனக்கு முன்னே போவது மாத்திரமல்ல, உன்னோடுகூட இருக்கிறவராக, விலகாதிருக்கிற வராக, உன்னைக் கைவிடாது ஆதரிக்கிறவராக இருக்கிறார்.

I. கர்த்தர் நமக்கு முன்பாகப் போகும்போது என்னென்ன செய்கிறார்?

1. அவர் உன்னோடு இருப்பார்

கர்த்தர் உன்னோடு இருக்கும்போது பலவிதமான நன்மைகளை, ஆசீர்வாதங்களை நீ அடைவாய்.

அ) ஒரு குறைவும் ஏற்படாது

"உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்." உபாகமம் 2:7

இஸ்ரவேல் ஜனங்களோடு கர்த்தர் 40 வருஷமாய் இருந்தார். கர்த்தர் அவர்களோடு இருந்தபடியினாலே நினைத்துப் பார்க்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள். ஒரு குறைவும் உண்டாகவில்லை. கர்த்தர் நமக்கு ஒரு நன்மையும் குறைவுபடாத வாழ்க்கையைத் தருகிறார். இன்று நம்முடைய தேவன் உலகத்தின் முடிவுபரியந்தம் நம்மோடு இருக்கிறார். (மத்.28:20) இஸ்ரவேல் ஜனங்களோடு அவர் இருந்த படியினாலே குறைவுபடாத அவர்களுடைய வாழ்வில், அவர்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய் போகவில்லை. இன்று நாம் உடுத்துகின்ற உடுப்புகள் கொஞ்சம் காலங்கள் ஆனதும் இது என்ன பல்லைக் காட்டுகிறது என்று சொல்லும் வண்ணமாக பழைய துணியைப் போல மாறி விடுகிறது. எத்தனை உடுப்புகள் அவர்கள் வைத்திருந்தார்களோ என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றும் பழையதாய் போகவில்லை என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுடைய கால் வீங்கவும் இல்லை. நடந்து திருந்த அவர்களுடைய கால்கள் சுகமுள்ளதாகவே இருந்தது. கர்த்தர் நம்மோடு இருப்பாரென்றால் சுகத்தில், பெலத்தில் குறைவுபடாத வாழ்க்கை உண்டாகும். அவர்களை மன்னாவினால் போஷித்து உணவு குறைவு இல்லாததாயும், வஸ்திரம் பழையதாய் போய் கவலைப்படாத நல் வாழ்க்கையைத் தந்தார். கர்த்தர் நம்மோடிருக்கும் போது குறைவுபடாத நல் வாழ்க்கையைத் தருகிறார். 

ஆ) பராக்கிரம சாலியாய் இருப்பாய்

"கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்; ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்." எரேமியா 20:11

கர்த்தர் தம்முடைய ஆவியினாலே நம்மை பராக்கிரமசாலியாய் மாற்றுகிறார். மீகா 3:8ல் தீர்க்கதரிசியானவன், கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப் பட்டிருக்கிறேன் என்று கூறுவதைப் பார்க்கிறோம். யோசுவா 17:17ல் '...நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு…' என பார்க்கிறோம். கர்த்தருடைய தூதனானவர், கிதியோனைப் பார்த்து, பராக்கிரமசாலியே, கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்று கூறினார். அவன் சத்துருக்களின் மீது எளிதாய் வெற்றி சிறந்தான். கர்த்தர் நம்மோடு இருக்கும் போது, பராக்கிரமசாலிகளாய் மாறுகிறோம். இவ்விதமாய் பராக்கிர சாலிகளாய் இருக்கும்போது, விரோதமாய் எழும்புகிற மக்கள் நொறுக்கப் படுவார்கள், வெட்கப்படுவார்கள். இப்படி நம்முடைய தேவன் நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதிக்கிறவராயும், சத்துருக்களின் மத்தியிலே மேன்மைப்படுத்துகிறவராயும் இருக்கிறார்.

இ) மேன்மைப்படுத்துவார்

"...நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்." யோசுவா 3:7

உன்னை வாலாக்காது தலையாக்குவேன் என்று சொன்னவர், நீ கீழாகாமல் மேலாவாய் என்று சொன்ன தேவன் உன்னோடு இருந்து நீ செல்லும் எல்லா இடங்களிலும் உன்னை மேன்மைப்படுத்துகிறவராய் இருக்கிறார். இன்று ஒருவேளை நீ அற்பமாக எண்ணப்பட்டு அலட்சியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். கூட்டு குடும்பமாய் இருக்கிறோம், என் கணவர் வீட்டார் என்னை அற்பமாய் நடத்துவதோடு, அலட்சியமாய் நடத்தப்பட்டு ஆகாரமும், உடுத்த நல்ல உடையும் இல்லாத கேவலமான நிலையில் என்னை நடத்தி வருகிறார்கள், இந்த நிலை எப்போது மாறும் என்று கண்ணீரோடு காத்திருக்கிற தேவப் பிள்ளையே, கர்த்தர் இன்று உன்னோடு வரும்போது, உன்னைப் பார்க்கிற எல்லாருக்கும் முன்பாக உன்னை மேன்மைப் படுத்துவார். இது உன்னால் உண்டாகும் காரியம் அல்ல, உன் செய்கையினால் உண்டாகும் புகழ்ச்சியும் அல்ல. தேவனுடைய கிருபையின் பிரசன்னத்தினால் இந்த மேன்மையைப் பெறுவாய். இந்த உலகத்தார் முன்பு நீ அற்பமாய் எண்ணப்பட்டு பல குறைவுகளினாலே கவலையோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம். உன்னை அறிந்தவர், உன்னோடு இருக்கிறவர், அதிசயங்களைச் செய்கிறவராய் இருக்கிறார். உலகத்தில் இருக்கிறவனைக் காட்டிலும் உன்னோடு இருக்கிறவர் பெரியவராய் இருந்து என்றும் எந்நாளும் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா இடங்களிலும் உன்னை மேன்மைப்படுத்துவார்.

2. அவர் உன்னை விட்டு விலக மாட்டார்

அ) பண ஆசை இல்லாதிருக்க வேண்டும்

"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை..." எபி. 13:5

இன்று பண ஆசை எல்லாத் தீமைக்கும் நேராய்  இருந்து நமது வாழ்க்கையை நாசப்படுத்தி விடுகிறது. உலகத்தின் மீது அன்பு கூர்ந்து பலவிதமான ஆசை இச்சைகளுக்கு அடிமையானவர்கள், தங்களின் மேன்மையை இழந்து போனதை நாம் அறிகிறோம். சிம்சோன் தெரிந்து கொள்ளப்பட்டவனாய் இருந்து பரிசுத்த ஆவியானவர் அருளின பெலத்தினாலே, பெரிய பலத்த காரியங்களைச் செய்தான். நசரேயனாய் இருக்க வேண்டியவன், நசரேய வாழ்வினை விட்டு, விரதத்தை விட்டு விலகி, வேசிகளிடம் சென்று, தேவன் நியமித்த, விரும்பிய தூய வாழ்வை இழந்த போது, அவனோடு இருந்த கர்த்தர் அவனை விட்டு விலகினார். ஆகவே இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே தேவன் நம்மோடு இருக்க நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆ) ஆலயத்தைக் கட்டி முடிக்கும்வரை விலகமாட்டார்

"...நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்." 1நாளாகமம் 28:20

தேவன் ஒரு உன்னதமான பணியைச் சாலமோனுக்குக் கொடுத்தார். தாவீது தேவனுக்கு ஆலயத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்று ஆவலுடையவனாய் இருந்தான். ஆனால் கர்த்தரோ அவனை ஆலயம் கட்ட அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவன் குமாரன் கட்டி முடிப்பான் என்று கர்த்தரின் வார்த்தை அறிவிக்கப்பட்டபடியால், தாவீது சாலொமோனைப் பார்த்து, இந்த ஆலயம் கட்டும் பணியைச் செய்து முடிக்கும்வரை கர்த்தர் உன்னோடு இருப்பார் என்று சொன்னார். சொன்னபடியே கர்த்தர் அவனோடு இருந்து அந்தப்பணி முடித்துத்தீரும் மட்டும் அவனை சகல ஞானத்தினாலும் செல்வத்தினாலும் சிறப்படையச் செய்தார்.

இ) ஜனங்களை நடத்திச் செல்வதற்கு யோசுவாவோடு இருந்தார்

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்"யோசுவா 1:5, 6

மீட்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் வணங்காக் கழுத்துடையவர்கள் என்று யோசுவா அறிவார். மோசேக்கு பின்னாக ஜனங்களை வழி நடத்த, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட யோசுவா, எவ்வாறு என்னால் இவர்களை வழி நடத்த முடியும் என்று வேதனை நிறைந்த நிலை வந்தபோது, கர்த்தருடைய வார்த்தை மோசேயினால் சொல்லப்பட்டு தேற்றப்பட்டதைப் பார்க்கிறோம். மோசேயோடு இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன் என்று சொன்னவர், விலகாதிருப்பேன் என்று வாக்கருளினபடியே அவனோடு இருந்து தன் காரியங்களைச் செய்து முடிக்க உதவிச் செய்தார்.

யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களுடைய இடங்களை பங்கு பிரித்துக் கொடுத்தான். கர்த்தர் அவனோடிருந்தபடியால், இதை நேர்த்தியாய் செய்து முடித்தான்.    

3. கைவிட மாட்டார்

அ) தேடுகிறவர்களைக் கைவிட மாட்டார்

"கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்." சங்கீதம் 9:10

நம்மோடு இருப்பேன் என்று சொன்னவர், நமக்கு முன்னே செல்பவர், நம்மைக் கைவிடாதிருக்கிறார். இந்த உலக வாழ்க்கையிலே கைவிடப்பட்ட குடும்பங்களை, பெற்றோர்களை, பிள்ளைகளை நாம் பார்க்கிறோம். ஆனால் நம்மோடு இருக்கிற அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் கைவிடாது அரவணைக்கிறவராய் இருக்கிறார். நாம் அவரை முழு மனதோடு தேடுகிற மக்களாய் மாறுவோமானால், நம்மைக் கைவிடாத தேவன், அதிசயமாய் ஆதரித்து நடத்துவார். அநேக நேரங்களில் நாம் அவரை முழுமனதோடு தேடாதபடியினால் பல குறைகளுக்கும், பல பாடுகளுக்கும் ஆளாகிறோம். கர்த்தரை நாம் தேடுவோமானால் அவருடைய வார்த்தையின் வழியாய் காரியங்களைச் செய்கிற மக்களாய் மாற வேண்டும். அதனால் மெய்யான சமாதானம், சந்தோஷம், அன்பின் ஐக்கியம் உண்டாகிறது.

தேடாதிருப்பதால் அவருடைய அன்பை அறியாது பிரிவினைகளுக்கும் போராட்டங்களுக்கும் இடம் கொடுத்து விடுகிறோம். உண்மையாய்த் தேடுகிறவர்களுக்கு கர்த்தர் சமீபயிருக்கிறார். இன்று நாம் முழு மனதோடு கர்த்தரைத் தேடி கைவிடப்படாதிருப்போமாக.

ஆ) ஜெபிக்கிறவர்களைக் கைவிடமாட்டார்

"சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்." ஏசாயா 41:17

இன்று நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான குறைவுகளினாலே கலங்கி என்ன செய்வதென்று சோர்ந்துபோகிறோம். நேற்றும் இன்றும் மாறாத இயேசு கிறிஸ்து, தம்மை நோக்கி வேண்டுகிற மக்களுக்கு அதிசயமானதைச் செய்து நம்மைக் கைவிடமாட்டார்.

ஒருமுறை ஒரு நாட்டில் படகில் பயணம் செய்தபோது, மொழி தெரியாத எங்களிடத்திலே உள்ள கைக்கடிகாரத்தையும் பணத்தையும் பறிக்க சில வாலிபர்கள் நெருங்கினார்கள். என்னோடு இருந்த சகோதரர்கள் அவர்கள் தவறாய்ச் சொன்ன வார்த்தைகளை எல்லாம் கேட்டுக்கொண்டு, கர்த்தரைத் துதித்தார்கள். நானோ எங்களுக்கு இறங்கும் என்று வேண்டுதல் செய்தேன். ஜெபத்தைக் கேட்கிற தேவன் அற்புதம் செய்தார். அவர்கள் எல்லாரும் இருந்த இடங்களிலேயே பின்னிட்டு விழுந்தார்கள். நாங்கள் பயணம் செய்த போர்ட் கரை சேரும்வரை எழுந்திருக்க வில்லை. நெருக்கத்தில் கூப்பிடுகிற ஒவ்வொருவரையும் அவர் அதிசயமாய் ஜெபத்தைக் கேட்டு, கைவிடாதிருக்கிறார். 

இ) பரிசுத்தவான்களைக் கைவிடுகிறதில்லை

"...அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்" சங்கீதம் 37:28

இன்று பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்பது தேவசித்தமாயும், தேவ விருப்பமாயும் இருக்கிறது. பரிசுத்தம் இல்லாது வாழ்கின்ற வாழ்க்கையிலே நாம் நன்மைகளைப் பெற முடியாது தடையாகி விடுகிறது. பரிசுத்தவான்களை நேசிக்கிற தேவன், ஒவ்வொரு பெரிய சிறிய காரியத்திலும் கண்ணின்மணிபோல் காத்து, அவர்களோடிருந்து, அவர்களை ஆசீர்வதிக்கின்றவராய் இருக்கிறார். ஒருவன் தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளும்போது, கர்த்தரால் விரும்பத்தக்க ஒரு பாத்திரமாய் மாறி விடுகிறான். அவனது வாழ்க்கை கர்த்தரால் பயன் படுத்தக்கூடியதாய் மாறுகிறது.

இவ்விதமாய் கர்த்தர் நமக்கு முன் சென்று நம்மோடு இருந்து, நம்மை விட்டு விலகாது காத்து கைவிடாது ஆசீர்வதிக்கிறார்.

II. கர்த்தர் முன் செல்வதால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1. தடைகளை நீக்கி விடுவார்

"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." மீகா 2:13

இன்று மனிதன் பலவிதமான காரியங்களைச் செய்யும்போது, அதில் தடைகளும் குறைகளும் உண்டாகும்போது, சோர்வடைந்து, அதினால் அதை விட்டு விடுகிறான். பெரிய கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது.

ஒரு ஆசிரியர் வீட்டைக் கட்டுவதற்காக எல்லாக் காரியங்களையும் செய்தார். Plan approval வாங்கியிருந்தார். ஆனால் திடீரென்று அஸ்திபாரம் போட்டபின்பு தடை வந்தது. அந்த இடத்தின் ஒரு பதியிலே மின்சாரக் கம்பி போகிற காரணத்தைக் காட்டி Electricity Board மக்கள் கோர்ட்டில் வழக்கைத் தொடர்ந்தனர். அத்துடன் வீடு கட்டுமான பணி நிறுத்தப்பட கோர்ட் உத்தரவிட்டது. அவரது இறுதி நாள் வரை அந்தத் தடை நீங்கவில்லை. இன்னும் அது கட்டி முடிக்கப் படவில்லை. இவ்வாறு பல காரியங்களை நாம் முயற்சித்து துவங்கின கடை, தொழில், வியாபாரம், திருமணம், குழந்தைப்பேறு, வேலை - இது போன்ற காரியங்களில் தடைகள் மிகுதியாய் இருப்பதைப் பார்க்கிறோம். தடைகளைப் பிசாசு கொண்டு வருகிறான். 1தெசலோ. 2:18ல் சாத்தானோ தடை செய்தான் என்று பவுல் சொல்வதைப் பார்க்கிறோம்.

 இன்னும் சிறு பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டுமென்று பெற்றோர்கள் கொண்டு வந்தபோது, சீஷர்கள் அதட்டினார்கள். இயேசு கிறிஸ்துவோ சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு தடை பண்ணாதிருங்கள் என்று சொன்னதை மத். 19:14ல் பார்க்கிறோம். சீஷர்களைப் போல கிறிஸ்துவுக்குள்ளாய் வாழ்வதற்கு, அவரிடம் வருவதற்கு அநேகர் தடை செய்கிறார்கள். இவர்களது கொள்கைகளும், செயல்களும் மாறுபாடானது என்பதை நாம் அறிவோம். இவர்களைப் போல உள்ள தீய மக்களின் மூலமாய் தடைசெய்யப்படுகிறது. இன்னும் சிலர் நியாய சாஸ்திரிகளைப் போல தாங்களும் பிரவேசியாதபடி, மற்றவர்களையும் பிரவேசிக்க விடாதபடி தடை செய்து கொண்டிருக்கிறார்கள் என லூக்கா 11:52ல் பார்க்கிறோம்.

இன்னும் சில வேளைகளிலே பரிசுத்த ஆவியானவரே தடைசெய்து நம்மை நடத்துகிறார். பவுலும் சீலாவும் ஆசியாவிலே கர்த்தருடைய வார்த்தையைச் சொல்லாதிருக்க, தேவ ஆவியானவர் அவர்களைத் தடை செய்தார் என்று அப்.16:8ல் பார்க்கிறோம். இவ்வாறு தடைகள் உண்டாகிற வாழ்வில், நாம் எப்பொழுதும் கர்த்தரை முன் வைத்துக்கொள்ள உள்ளத்தில் தீர்மானம் செய்து, செயல்படும்போது, கர்த்தாதி கர்த்தர் நம்முடைய தடைகளை நீக்கிவிடுவார்.

இன்று தடையினால் சோர்ந்து போயிருக்கிற சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையிலே இன்று கர்த்தரை உங்களுக்கு முன்னே வைத்துக் கொள்ளுங்கள். அவர் அதிசயமாய் நடத்தி, உங்கள் தடைகள் யாவையும் நீக்கி, ஆசீர்வதிப்பார். திருமண காரியத்தின் தடையானாலும், வேலை கிடைப்பதற்குரிய காரியமானலும், விசா கிடைப்பதற்குரிய காரியமானாலும், குழந்தை கிடைப்பதற்குரிய காரியமானாலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். தடைகள் நீங்கி மகிழ்ச்சியும் மேன்மையும் உண்டாகும்.

2. கோணலானவைகளைச் செவ்வையாக்குவார்

"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." ஏசாயா 45:2

இந்த உலக வாழ்க்கையிலே அநீதியான காரியங்களும், வேதனையான காரியங்களும் உண்டு. பிலி. 2:15ல் கோணலும் மாறுபடுமான சந்ததியின் நடுவே என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். இன்று அநேகர் தாங்களே கோணலாக்கிக் கொள்கிறதைப் பார்க்கிறோம். நியாயத்தை அருவருத்து செம்மையானதை எல்லாம் கோணலாக்கி, சீயோனை இரத்தப் பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபின் பிள்ளைகள் உண்டு. இவர்கள் நலமல்லாத வழியிலே சென்று தங்கள் வாழ்க்கையை கோணலாக்கிக் கெடுத்துக் கொண்டதோடு, மற்றவர்களின் வாழ்க்கையையும் கோணலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைப்போல 'சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.' என ஏசாயா 59:8ல் பார்க்கிறோம். நம்முடைய தேவனோ நமக்கு முன்னே சென்று கோணலானதைச் செவ்வை யாக்குகிறவர். சங். 18:31ல் கர்த்தரையல்லாமல் தேவன் யார்? என்று தாவீது சாட்சியிட்டபோது, என்னைப் பெலத்தால் இடைகட்டி என் வழிகளைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே என்று சொல்வதைப் பார்க்கிறோம். நமக்குள் உள்ள கோணலான காரியங்களைக் கர்த்தர் அறிவார். ஆகவே, கர்த்தருடைய நடத்துதலுக்கு விடும்போது, நம்மை அர்ப்பணிக்கும்போது, தாபரிக்கும் ஊருக்குப் போய்ச் சேர நம்முடைய தேவன் செம்மையான வழியில் நடத்துவார் என்று சங். 107:7ல் பார்க்கிறோம். நம்முடைய தேவன் நித்தமும் நடத்துகிறவர். அவருடைய நடத்துதலினாலே சமாதானமும் மிகுதியான சந்தோஷமும் உண்டாகும்.

கர்த்தருடைய ஆவியானவர் பவுலையும் சீலாவையும் நடத்தினார். அவர்கள் ஆசியாவிலே கர்த்தருடைய வார்த்தையைச் சொல்லாதபடி தடைசெய்யப்பட்டு மெக்கத்தொனியா தேசத்து நாடுகளின் உண்டான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து சிலகாலம் தங்கி கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய ஆற்றின் அருகே வழக்கமாய் ஜெபம் பண்ணுகிற இடத்திலே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தர்கள். கர்த்தர் உணவுக்கும் உறைவிடத்துக்கும் இடம் உண்டாக்கினார். லீதியாள் என்ற சகோதரியின் உள்ளத்தைக் கர்த்தர் திறந்தார். அவளுடைய வீட்டில் தங்கி, கர்த்தருடைய நாமத்தை மகிமைப் படுத்தினார்கள். ஏசாயா 42:16ல் 'குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலை செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்' என்றுச் சொன்ன கர்த்தரின் வார்த்தைகளைப் பார்க்க முடிகிறது.

நம்முடைய வாழ்வில் கர்த்தரின் வார்த்தை நம்மைப் போதிக்கிறது. 'என் மகனே, கேள், என வார்த்தைகளை ஏற்றுக்கொள், அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.' என நீதி. 4:10,11ல் பார்க்கிறோம்.

இன்று நம்முடைய கோணலான பாதையைச் செவ்வையாக்கும் தேவன் செவ்வையாக்கி நடத்துவாராக.

3. அக்கினி முன்சென்று சத்துருக்களை அழிக்கிறது.

"அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது." சங்கீதம் 97:3

நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே என எபி. 12:29ல் பார்க்கிறோம். இந்த அக்கினியின் தேவன் பரலோகத்திலே காப்பாற்றுவதற்கென சிருஷ்டித்த கேருபீன், நெறி தவறி கெட்டுப் போனபோது, தன்னைக் கெடுத்துக்கொண்டபோது, அவனது தீய செயல்களை அழிக்க அக்கினியை பரலோகத்திலே உண்டாக்கினார் என எசேக். 28:18ல் பார்க்கிறோம். இந்த அக்கினியை இயேசு கிறிஸ்து பூலோகத்திலே கொண்டு வந்தார் என்று லூக்கா 12:49ல் பார்க்கிறோம். இந்த அக்கினியானது நம்மைச் சுற்றி பாதுகாவலாக இருந்தது என்று சகரியா 2:5ல் பார்க்க முடிகிறது. இந்த அக்கினியானது சுத்தமாக்கக்கூடியது என ஏசாயா 4:3ல் புரிகிறது. அத்துடன் இந்த அக்கினி முன்சென்று சுற்றிலும் இருக்கிற சத்துருக்களை சுட்டெரிக்கிறது. பலவிதமான செயல்களையுடையவர்கள் நமக்கு விரோதமாக எழும்பி நம் அழிவைக் காண வேண்டுமென்று விரும்பி, பல தந்திரமான காரியங்களைச் செய்கிறார்கள். இவ்விதமாய் கண்களுக்குத் தெரிந்த, தெரியாத வான மண்டலங்களில் பொல்லாத ஆவிகளின் செயல்களை இந்த அக்கினி எரிந்து போகச் செய்கிறது. ஆகவே கர்த்தரின் வல்லமையாகிய இந்த அக்கினி சத்துருவின் செய்கைகளைச் சுட்டெரிக்கிறது.

4. நமக்கு முன்பாகச் சென்று நித்திய ஜீவனைத் தருகிறார்.

"நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை." யோவான் 10:28

கர்த்தர் நமக்கு மேய்ப்பராய் இருந்து முன் செல்லுகிறவராய் இருக்கிறார். இயேசு கிறிஸ்துவை நம் மேய்ப்பராய் ஏற்றுக்கொண்டு வாழும் போது, எல்லாத் தடைகளையும் நீக்கி கோணலான காரியங்களைச் செவ்வையாக்கி, வாழ்க்கையின் பாதையில் உள்ள எல்லாத் தடைகள், குறைகளை மாற்றி, அவர் வழி நடக்கச் செய்கிறார். இவ்விதமாய் நடக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனைத் தருகிறார். அவரது கரத்திலிருந்து ஒருவனையும் ஒருபோதும் பறிக்கமுடியாத நல்வாழ்வினைத் தருகிறார்.

இன்றைக்கு நாம் இயேசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பராக ஏற்றுக் கொள்வதோடு அவருக்குப் பின் செல்ல நம்மை ஒப்புக்கொடுப்போம் என்றால் இந்த மேன்மையான பாக்கியத்தை அடைவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ.C.எபனேசர் பால்.