செய்தி

"...பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்..."

ஆதியாகமம் 50:21

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

இன்று மனிதனுடைய தேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகிற நிலையைப் பார்க்கிறோம். அண்மையில் ஒரு தேவ ஊழியருடைய சபையிலே ஆராதனை முடித்து வந்த மக்களுக்கு ஜெபித்தபின், அங்கிருந்த போதகர் வீட்டிலே நேர்த்தியான சாப்பாடு கொடுத்தார்கள். அவர் களுடைய வீட்டிலே love birds அதிகமாக இருந்தது. திருமண மாகி சென்று விட்ட மகளுக்குப் பிரியமான love birds-ஐ நான் வளர்த்தும் அதைப் போஷித்தும் பராமரித்தும் வருகிறேன். இவ்வாறு பராமரிப்பதினாலே அவைகள் குறைவுபடாதபடி அவைகள் நிறைந்து பெருகுகிறது என்று கூறினார்.

நம்முடைய தேவன் தாயின் கருவிலே நம்மைக் கண்டவர். நம்முடைய வாழ்க்கையில் அனுதினமும் அவருடைய அற்புதமான செயல் நடைபெறுகிறது. அவருடைய பிள்ளைகளாகிய நம்மை மிகுதியான கரிசனை யோடு நமது தேவைகளைச் சந்தித்து, போஷித்து பராமரிக் கிறவராய் இருக்கிறார். இந்த அன்பின் பராமரிப்பின் செயலினாலே சுகமாய், சந்தோஷமாய் இவ்வுலகில் நல்வாழ்க்கை நடத்த முடிகிறது.

I. ஏன் பராமரிக்கப்பட வேண்டும்?

1. வறுமை வராதபடி பராமரிக்கிறார்.

"உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்..." ஆதியாகமம் 45:11

அருமையான யோசேப்பு கலங்கியிருந்த தன் சகோதரரைப் பார்த்து, இந்த ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி அவர்களைத் தேற்றின நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். யோசேப்பு தாம் கண்ட சொப்பனத்தை சகோதரருக்குத் தெரிவித்தபோது, அவன்மேல் பொறாமையும், கோபமும் ஏற்பட்டது. 17 வயதாய் இருந்த அவன், தன் தகப்பனாகிய யாக்கோபுக்குப் பிரியமாய் இருந்தான். ஆடுகளை மேய்க்கிற சகோதரருடைய க்ஷேமத்தை விசாரித்து மறுசெய்தி கொண்டு வா என்று யோசேப்பை, அவன் தகப்பனாகிய யாக்கோபு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சகோதரரிடம் அனுப்பினான். சுக நலன் விசாரிக்கச் சென்ற யோசேப்பை தூரத்தில் வரக்கண்டவுடன் அவனைக் கொலை செய்யும்படி சதி யோசனைப் பண்ணினார்கள். அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டார்கள். கர்த்தர் கிருபையாய் அவர்களின் சதி யோசனைகளுக்கு இடம் கொடுக்கவில்லை.

'துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகை தேடுகிறான்.' என்று சங். 37:32ல் பார்க்கிறோம்.  'கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை' என்ற வார்த்தையின் படி கர்த்தர் யோசேப்பைக் காத்தார். குழியில் போட்ட சகோதரர்கள் குழியிலிருந்தே அவனை எடுக்கத்தக்கதாக கர்த்தர் கிரியைச் செய்தார். அத்துடன் எகிப்தை நோக்கிச் சென்ற இஸ்மவேலர் கையில் 20 வெள்ளிக்காசுக்கு யோசேப்பை அடிமையாக விற்றுப்போட்டார்கள். தகப்பனிடத்திலே அவன் உடுத்தியிருந்த பல வர்ணமான அங்கியை கண்டெடுத்தோம் என்று பொய்யைக் கூறி தகப்பனின் உள்ளத்தை உடைத்தார்கள். எகிப்துக்கு கொண்டுச் செல்லப்பட்ட யோசேப்பை போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கி தன் வீட்டில் பணி செய்ய அமர்த்தினான். கர்த்தர் யோசேப்போடே இருத்தபடியால் அவன் காரியசித்தியுள்ளவனானான். யோசேப்பு காரிய சித்தியுள்ளவனாய் இருந்தபடியால் அவன் எஜமான் அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரனைக் காரனுமாக்கி தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். யோசேப்பினிமித்தம் அந்த வீட்டை ஆசீர்வதித்தார்.  

யோசேப்பு அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவனாய் இருந்தான். எகிப்தியனின் மனைவி அவன் மேல் கண்போட்டு தவறான காரியத்திற்கு இணங்கும்படி தினமும் யோசேப்போடு காரியங்களைப் பேசினாள். ஆனால் யோசேப்போ, பொல்லாத காரியத்திற்கு உடன்படாதபடி தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி என தன் சரீரத்தையும் உண்மையாய்க் காத்துக் கொண்டான். ஒரு நாளில் பலவந்தப்படுத்தின அந்தப் பெண்ணின் நிமித்தமாய் வஸ்திரத்தை விட்டு வெளியே ஓடினான். பொய்யான குற்றச்சாட்டினால் ராஜா சிறைச் சாலையிலே வைக்க ஆணையிட்டான். சிறைச்சாலையிலும் பானபாத்திரக்காரரின் தலைவனுடைய சொப்பனத்திற்கு அர்த்தத்தைக் கர்த்தரின் கிருபையால் கூறி நீ உயர்ந்திருக்கும் போது, என்னைக் குறித்து ராஜாவிடம் கூறு என்று சொல்லி அவனுடைய உதவியைக் கேட்டான். கர்த்தர் அருளிய சொப்பனத்தில் அர்த்தத்தின்படியே அவன் உயர்த்தப்பட்டான். மீண்டும் பார்வோனின் கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். ஆனால் கர்த்தரோ யோசேப்பை உயர்த்தும்படியாக 13 1/2 ஆண்டுகளின் பாடுகளுக்குப் பின்னர் அவனை சிறைச்சாலையிலிருந்து அரண்மனைக்கு கொண்டுபோகச் செய்தார். சொப்பனம் கண்டு கலங்கிய பார்வோனுக்கு எகிப்து தேசம் எங்கும் வரக்கூடிய செழிப்பும் பஞ்சமும் வருகிறதை விவரித்துக் கூறி ஏற்ற ஆலோசனையையும் அருளினான். பார்வோன் அவனை ஏற்றவனாகக் கண்டு தன் ஸ்தானத்திற்கு அடுத்த நிலையிலே அவனை உயர்த்தி மேன்மைப்படுத்தினான். கிறிஸ்துவின் பண்புகள் நிறைந்த தன் தகப்பனையும் தன் சகோதரரின் குடும்பங்களையும் அழைத்து வரச்சொல்லி, பஞ்சக்காலத்திலே வறுமை வராதபடி பராமரிப்பேன் என்று அழைத்தான்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, யோசேப்பின் வாழ்வில் தனக்கு துரோகம் செய்த சகோதரரை வெறுத்து, கடிந்து பழி வாங்காமல், அவர்களை நேசித்து, அவன் உயர்ந்த நிலையில் இருந்தபடியால் வறுமை வராதபடி பராமரிப்பேன் என்ற அன்பின் பணியைப் பார்க்க முடிகிறது.

2. குறையில்லாத வாழ்வுக்காக நம்மை பராமரிக்கிறார்.

"இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப்  பராமரித்துவந்தீர்" நெகேமியா 9:21

குறைவில்லாத நல் வாழ்க்கை வாழ கர்த்தர் நம்மைப் பராமரிக்கிறார். இன்று குறைவோடு கண்ணீரோடு வாழ்கிற மக்கள் ஏராளம். நாம் அவரை முழுமனதோடு, முழுபெலத்தோடு, முழு ஆத்துமாவோடு தேடும்போது  குறைவில்லாத நல் வாழ்க்கையைத் தருகிற தேவன் ஜீவிக்கிறவராய் இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் தாம் சொன்னபடியே தம்முடைய ஜனங்களுக்கு இரக்கம் செய்து எந்தக் குறைவும் வராதபடி அவர்களை நிறைவாக்குகிறார். இன்று வேலை செய்கிறேன், சம்பளம் பத்தவில்லை, தேவைகளைச் சந்திக்க முடியவில்லை, நல்ல வீடு இல்லை, நல்ல சுகம் இல்லை என்று பலவிதமான குறைவுகளுடன் கண்ணீருடன் வாழ்கிற மக்கள் ஏராளம். பராமரிக்கும் கிறிஸ்து நமக்கு தயை செய்யும் போது, எவ்விதக் குறைவும் இல்லாதபடி கலங்கிக் கண்ணீர் சிந்தாதபடி காத்து, குறைவில்லாது நடத்துகிறார்.

ஒரு முறை மனநிலை சரியில்லாத ஒரு மகளை நீங்கள் வைத்து பார்த்து போஷித்து பராமரிக்க முடியுமா? என்று கேட்டார்கள். பிள்ளையின் பெற்றோர் மரித்திருந்த படியால், எங்கு வளர்ப்பது, யாரிடம் கொடுப்பது என குடும்பத்தார் கலங்கினார்கள். இன்று அநேகருடைய வாழ்வில் இந்நிலை உண்டு. ஆனால் கர்த்தரோ நம்மை முழுமனதோடு ஏற்று எல்லாச் சூழ்நிலையிலும் நேர்த்தியாய் நடத்துகிறவராய் இருக்கிறார். கர்த்தர் நம்மை நேசிக்கிறவராய் இருக்கிற படியால், அவர் நம்மைப் பராமரித்து குறையின்றி வாழ வைக்கிறார்.

3. தாகம் தீர்ப்பதற்கு பராமரிக்கிறார்

"...தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.

தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்." 1இராஜாக்கள் 17:6-9 

தேவ சமுகத்திலே நிற்கிற மனிதனாகிய எலியா, இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன் என்ற கர்த்தரின் வார்த்தைகளை ஆகாப் இராஜாவிடம் சொன்னதை நாம் அறிவோம். எலியாவின் வார்த்தையின்படி மழையும் இல்லை, பனியும் இல்லாதேபோயிற்று. போஷிக்கும் தேவன் எலியாவை பஞ்சக் காலத்திலே பராமரித்த காரியத்தைப் பார்க்கிறோம். போஷிப்பது தேவைகள் சந்திக்கிற காரியமாகும். ஆற்றங்கரையிலே படுத்துத் தங்கி நாட்களை செலவிட்ட காலங்களை மாற்றும்படியாக, ஒரு விதவையின் வீட்டிலே தங்கவும், உண்ண ஆகாரமும் உறங்க நல்ல இடத்தையும் கொடுத்து பராமரிக்கிறார்.

நமது வாழ்க்கையிலும் கர்த்தரால் உயரும்போது, தேவன் நல்ல ஸ்தலத்தை, நல்ல ஆகாரத்தைக் கொடுத்து பராமரிக்கிறார். நான் ஒரு ஊழியரை அறிவேன். ஓலை மேய்ந்த கூரை வீட்டிலே தங்கி வாழ்ந்தவர்கள். அந்த வீட்டின் மூத்த மகன் கர்த்தருக்கென்று வாழ அவர் சமுகத்திலே நின்று ஜெபிக்கிற ஒரு மகனாய் மாறினபோது, கர்த்தர் அவரையும் அவருடைய பிள்ளைகள் அனைவரையும் எல்லா நிலையிலும் மேன்மையாக்கினார். ஒரு காலத்தில் சின்ன வாடகை வீட்டிற்கு செல்ல அவரை உயர்த்தினார். தங்கி தாபரிக்கிறதற்குச் சொந்த வீட்டைக் கொடுத்து அவரை நன்கு பராமரித்தார். சமுதாயத்திலே நலன் குறைந்த வாழ்வையல்ல, அவருக்குள்ளாய் வளரும்போது, வாழும் போது, நம்மைப் போஷித்துப் பராமரித்து ஆசீர்வதிக்கிறார். 

4. நெருக்கத்தின் காலத்தில் கர்த்தரின் தீர்க்கதரிசி களைப் பராமரிக்கிறார்

"யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்." 1இராஜாக்கள் 18:4   

ஒபதியா கர்த்தருக்குப் பயந்தவனும், ஆகாபின் இராஜ்யத்திலே விசாரிப்புக் காரனுமாயிருந்தான். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளை சங்கரிக்கும்போது, ஒபதியா இரண்டு கெபிகளிலே ஐம்பது ஐம்பது பேராக வைத்து அவர்களைப் பராமரித்து வந்தான். ஆகாப் இராஜா இந்த ஒபதியாவைக் கூப்பிட்டு எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் மிருக ஜீவன்களைக் காப்பாற்றுவதற்குப் புல் அகப்படுமா என்று பார்க்கச் சொன்னான். ஒபதியா தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றான். வழியில் எலியாவைக் கண்ட அவன், நீர் எலியா அல்லவா என்று கேட்டதற்கு, இதோ எலியா வந்திருக்கிறேன் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்று கூறினான். நான் சென்றவுடன் கர்த்தருடைய ஆவியானவர் உன்னை எங்கேயாவது கொண்டு சென்றால், ஆகாப் என்னைக் கொன்று போடுவானே என்று பயந்து தாம் பராமரித்த செய்தியைக் கூறினான். எலியா என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சொன்ன போது, ஆகாபிடம் எலியா வந்திருக்கிறான் என்று கூறினான். இப்படியாக கர்த்தருக்குப் பயந்த உயர் பதவியில் இருந்த ஒபதியாவின் மூலம் 100 கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் பராமரிக்கப் பட்டதைப் பார்க்கிறோம்.   

 

 

II. யார் பராமரிக்கப்படுவார்கள்?

1. கர்த்தரால் ஞானம் பெற்றவர்களின் ஆட்சியில் பராமரிக்கப்படுவார்கள்

"ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும் வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியக்காரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷ முழுவதும் பராமரித்துவந்தார்கள்." 1இராஜாக்கள் 4:7

சாலொமோனுடைய ஆட்சி ஒரு சிறந்த அரசாட்சியாய் இருந்தது. ஜனங்களின் பிரச்சனைகளை நீதியாய் நியாயந்தீர்க்க தேவனுடைய ஞானத்தை நிறைவாய்ப் பெற்றிருந்தான். அவன் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து தன் தகப்பனாகிய தாவீதைப் போல தேவ கட்டளையின்படி நடந்த படியால், கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது, ஜனங்களை விசாரிப்பதற்கு ஞானத்தைக் கேட்ட காரியம், தேவ சமுகத்திலே உகந்த விண்ணப்பமாக எண்ணப்பட்டதோடு, ஞானத்தையும் மிகுந்த ஐசுவரியத்தையும் அருளினார். அந்த ஞானத்தினால் ராஜ்ய அமைப்பில் பராமரிக்கவும் அநேக மணியக்காரர்களை நியமித்தான். அவர்களை வைத்து வருஷம் முழுவதும் தேசம் எங்கும் ஜனங்கள் நேர்த்தியாய் பராமரிக்கப்பட்டார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ஞானம் நிறைந்த அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் நம் தேசத்தை ஆளும் போது, ஜனங்கள் குறைவின்றி பராமரிக்கப்படுவதைக் காண முடியும். நீதித்துறையிலே நீதியாக சகலமும் நடந்தேறின படியால் நல் ஆட்சி உருவானது. ஜனங்கள் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாயிருந்தார்கள்.   

2. தேவனால் வழி நடத்தப்படுகிறவர்களை பராமரிக்கிறார்

"அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்." 1இராஜாக்கள் 17:8, 9

தேவனால் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு அதன்படி செய்கிற தேவ மனிதனாய் எலியா வாழ்ந்தான். கர்த்தருடைய சத்தம் இன்று நம்முடைய காதுகளில் தொனிக்கவும், அந்த சத்தத்தின்படி செய்கிற உள்ளமும் உணர்வும், வாஞ்சையும் வேண்டும். என்று நாம் அவர் சத்தத்தைக் கேட்கிறோமோ அன்று தான் நாம் அவரைப் பின்பற்றுகிற ஆடுகளாய் மாறுவோம்.

இன்று அநேகர் தங்களுக்குச் சாதகமாக வார்த்தைகளைக் கேட்கிறார்கள். மற்றவைகளை விட்டு விடுகிறார்கள். அநேகர் திருவசனத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அதன்படி செய்ய மனதில்லாதவர்களாய் இருக்கிறபடியால் அவர்களின் வாழ்க்கையில் தோல்விகளும் துக்கங்களும் குறைவுகளும் உண்டாகிறது. வேதத்திலே ஏசாயா தீர்க்கதரிசியானவன், கர்த்தருடைய பலிபீடத்தின் அக்கினியினால் சுத்திகரிக்கப்பட்ட போது, சத்தத்தைக் கேட்கிறவனாய் மாறினான். சின்ன சாமுவேல், கர்த்தரின் ஊழியனாகிய ஏலியின் மூலமாய் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்ற வார்த்தையினால் கர்த்தரின் சத்தத்தைக் கேட்கிறவாய் மாறினான்.

ஒரு முறை வெளிநாடு ஒன்றில் பாலங்களுக்கு வேண்டிய beem-களைச் செய்த ஒரு கம்பெனியின் உரிமையாளரிடம், கர்த்தருடைய ஆவியானவர், லாபகரமாக செயல்பட்ட கம்பெனியை விற்றுவிடக் கூறினார். கர்த்தருடைய வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் அந்தக் கம்பெனியை அவர் விற்றுவிட்டார். விற்ற சில மாதங்களிலேயே பண மதிப்பானது குறைவடைந்தது. அவர் நஷ்டமடையாது அவருடைய எல்லாக் கடன்களை அடைத்து மீதமுள்ள தொகையினால் குடும்பம் நடத்தினார். நெருக்கம் நேரிட்ட காலத்திலும், கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த படியால், அவருடைய குடும்பம் நன்கு பராமரிக்கப்பட்டது.

 அன்பு சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பது மாத்திரமல்ல, அதை முழுமையாய் நிறைவேற்றும் பொழுது நன்கு பராமரிக்கப்படுவோம்.

3. கர்த்தரால் விடுவித்து வழிநடத்தப்படுகிறவர்களை பராமரிக்கிறார்

"இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை." நெகேமியா 9:21

நம்முடைய தேவன் விடுவிக்கிறவராய் இருக்கிறார். நீ என்னை நம்பினபடியால் உன்னை நிச்சயமாய் விடுவிப்பேன் என்று சொன்ன சர்வ வல்லமையுள்ள தேவன், நம்முடைய நம்பிக்கைக்கு ஏற்றபடி வாழ்க்கையில் ஏற்படுகிற அனைத்து பிரச்சனையிலிருந்து நம்மை விடுவித்து, போஷித்து நம்மைப் பராமரிக்கிறார். என் வீட்டிலே இவர்தான் சம்பாதிக்கிறார், இன்று இவர் வியாதிப்பட்டு விட்டாரே என்று வருந்தும் தேவப் பிள்ளையே, குமாரனாகிய இயேசு கிறிஸ்து மெய்யான விடுதலையைத் தருகிறார். சரீர போராட்டமாக இருக்கலாம், ஆவியின் போராட்டமாக இருக்கலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் சகல நோய்களையும் சுமந்து தீர்த்த இயேசு கிறித்து, நோய்களைக் குணமாக்கி, விடுதலையாக்கி வழி நடத்த வல்லவராயிருக்கிறார். அவர் வழி நடத்தும் விதம் பூரணமாக சுகத்தை, சந்தோஷத்தை நமக்குள் பெருகச் செய்யும். ஏசாயா 30:21ல் வழி விலகுகிற மக்களை பார்த்து இதிலே நடவுங்கள் என்று சொல்கிற சத்தத்தைக் கேட்டு நீங்கள் நடப்பீர்களானால், நல் வாழ்வு பெற்று, அவரின் நீதியின் கரத்தினால் தாங்கப்பட்டு பராமரிக்கப் படுவீர்கள். ஏசாயா 42:16ல் 'குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.' என்று சொன்னவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை தமது வல்லமையான செயலினாலே மீட்டு பகலிலே மேக ஸ்தம்பமாகவும், இரவிலே அக்கினி ஸ்தம்பமாகவும் சென்று வழி நடத்தினார். அவர்கள் வஸ்திரங்கள் பழமையாக வில்லை. கால்கள் வீங்கவும் இல்லை.  தேவதூதர்களுக்குரிய மன்னாவினால் போஷித்தர். கன்மலையைப் பிளந்து தாகத்தைத் தீர்க்கும்படி ஊற்றுகளைத் திறந்தார். இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலங்களிலும் நம்மை மரணப்பரியந்தம் நடத்துவர், பராமரிப்பார்.

4. ஏழைகளைப் பராமரிக்கிறார்

"உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்." சங்கீதம் 68:10

நம்முடைய தேவன் ஏழைகளை பராமரிக்கிற தேவன். ஏழைகளை மறவாத தேவன். ஏழைகள் பாழாக்கப் பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினி மித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப் பண்ணுவேன் (சங். 12:5) என்ற கர்த்தர் இன்றும் மாறாதவர். இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தர் என்ற சங். 34:6ன் படி இன்றும் அதிசயங்களைச் செய்கிறவராய் இருக்கிறார். ஏழையின் பிள்ளைகளை இரட்சிக்கிற தேவன், தாம் சொன்னபடியே செய்கிறவராய் இருக்கிறார். ஏழைகளை அப்பத்தினாலே திருப்தியாக்குவேன் என்று சொன்னவர் வாக்கு மாறாதவர். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான், அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பர் என்ற வார்த்தையின் படி அவர் திரும்பத் தருகிறவராய் இருக்கிறார். ஏழைக்கு பெலனானவர் கர்த்தர். மனம் மாறின சகேயு, தன் ஆஸ்தியின் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன் என்று இயேசு கிறிஸ்துவின் சமுகத்தில் சொன்னதைப் பார்க்கிறோம். இவ்விதமாய் ஏழைகளைக் குறித்து கரிசனையுடைய தேவன், ஏழைகளை பராமரிக்கிறவராய் இருக்கிறார்.

ஒரு முறை ஒரு ஊழியக்காரர் தன்னிடத்தில் ஒன்றுமில்லையே என்று கலங்கி அவரின் குடும்ப பராமரிப்புக்கும் ஊழியத்தின் செலவீனங்களுக்காகவும் தவித்துக் கொண்டிருந்தார். பராமரிக்கும் தேவன் என்று பறைசாற்றும் இவருக்கு தேவை மிகுதியினால் யாரிடத்தில் என்ன உதவி பெற முடியும் என்று உள்ளத்தில் எண்ணம் கொண்டு கலங்கினார். என்னை இதுவரை போஷித்தவர் இனியும் நடத்த மாட்டாரா? என்று தனது ஊழியத்தின் பாதையிலே சென்று விட்டார். ஒரு தேவ ஊழியருடைய மகளின் திருமணத்திற்குக் கொடுத்த உதவித் தொகையானது பல ஆண்டுகள் கழித்து ஆச்சரியமாய் அந்நாளிலே கொடுக்கப்பட்டதால், ஊழியருடைய எல்லாத் தேவைகளையும் சந்தித்தார், போஷித்தார், பராமரித்தார். ஏழை என்று எண்ணி தள்ளாமல் ஆதரிக்கும், ஆசீர்வதிக்கும் தேவன் இன்றும் அற்புதங்களைச் செய்து ஆதரிப்பார், ஆசீர்வதிப்பார்.

5. மனம் சஞ்சலம் நிறைந்த உத்தமனைப் பராமரிக்கிறார்

"எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது." யோபு 10:12

உத்தமன் என்று கர்த்தரால் நற்சான்றிதழ் பெற்றவன் யோபு. அவனது வாழ்க்கையில் செல்வத்தை இழந்தான், பிள்ளைகளை இழந்தான், சுகத்தை இழந்தான். மனைவியிடம் இருந்து நல்ல உறவை இழந்து நிந்தையான வார்த்தைகளைக் கேட்டவன் தான் இந்த யோபு. பிரச்சனை பெருகின போதும், வேதனை நிறைந்த போதும், தன் வாயினால் பாவம் செய்யாது தன்னைக் காத்துக் கொண்டவன் யோபு. பிசாசானவன் எப்படியாவது யோபுவை கர்த்தருக்கு விரோதமாக செயல்பட வைக்க முயற்சித்தான். பிசாசினால் உண்டான பருக்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை வரை அவரை வாட்டியது. அவன் நிலை அறிந்த நண்பர்கள் தீங்கான வார்த்தைகளினால் அவனைத் துக்கப்படுத்தினார்கள். கர்த்தர் எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல் தயையும் எனக்குப் பாராட்டினார். உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது என்று தன் வேதனையின் மத்தியில் பராமரிக்கிற தேவனின் செயலைக் கூறினதைப் பார்க்கிறோம்.

இன்றைக்கு நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறவருமாயிருக்கிறார். உன் தேவைகளை அறிந்தவர், வேதனைகளைக் கண்டவர், உன்னை ஒருபோதும் கைவிடாது காக்கிறவராய் இருக்கிறார். ஏழை என்று உன்னை ஒருபோதும் தள்ள மாட்டார். எனக்கு ஒருவரும் இல்லையே என்று உள்ளத்தில் ஏக்கத்தோடு வாழ்கிற சகோதரனே, சகோதரியே, உன்னை நேசிக்கிறார். இயேசு கிறிஸ்து உன்னைக் காத்து, உன்னைப் போஷித்து பராமரிப்பதற்கு உண்மை உள்ளவரா யிருக்கிறார். அனாதை என்றும் எனக்கு உதவி செய்வதற்கு ஒருவரும் இல்லையே என்றும் ஏங்குகிற உன்னை அறிந்திருக்கிற அன்பின் இயேசு கிறிஸ்து, இன்றுமுதல் உன்னை நித்தம் நடத்தி, உன்னை ஆசீர்வதிக்க வல்லவராய் இருக்கிறார். எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கிற அன்பின் தேவன், உன் தேவைகளைச் சந்திப்பார். உன்னைப் போஷிப்பார், உன்னை நிறைவாய்த் திருப்தியாக்குவார். என் கணவரால் கைவிடப் பட்டிருக்கிறேனே, என்னை நேசித்தவர் என்னை ஏமாற்றி விட்டாரே, இனி தற்கொலை தான் என்று என்னும் சகோதரனே, சகோதரியே, உன்னை நேசித்த இயேசு கிறிஸ்து ஒருபோதும் கைவிடுகிற தேவன் அல்ல. என்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை என்ற இயேசு கிறிஸ்து, உன் பாடுகளையெல்லாம் சிலுவையிலே சுமந்து தீர்த்து விட்டார். அவரை நேசிக்கவும், அவரை தொழுதுகொள்ளவும் இன்று இடம் கொடுப்பீர் என்றால் சகலவற்றையும் புதிதாக்குகிறேன் என்று சொன்னவர், என்ன செய்வேன் என்று கலங்குகிற உன்னை ஆசீர்வதித்து நித்தமும் நடத்துவார். அவரிடம் வந்தவர்களைக் கைவிடமாட்டார், எல்லாவற்றையும் சம்பூரணப்படுத்தி பராமரிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறித்துவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.