கால்களில் உள்ள பெலவீனம், வேதனை நீங்கி நலமாய் நடக்க, பணி செய்ய ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி செலுத்துகிறேன். கடந்த நாட்களில் நீர் எனக்குப் பாராட்டின கிருபை, இரக்கங்களுக்காக ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். அன்பின் இயேசு கிறிஸ்துவே, என் கால்களில்/ என் கணவரின் கால்களில்/ என் மனைவியின் கால்களில்/ என் பிள்ளையின் கால்களில்/ என் தாயின் கால்களில்/ என் தகப்பனாரின் கால்களில் உள்ள வேதனை நீங்க உம் சமுகத்தில் என்னைத் தாழ்த்தி ஜெபிக்கிறேன். நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும் என்று உமது வல்லமையையும், அதிகாரத்தையும் அறிவேன். என்னுடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, என்னுடைய நோய்களைச் சிலுவையில் சுமந்தவரே, எனக்கு இரங்கும். உம்முடைய பாதத்தில் கொண்டு வரப்பட்ட சப்பானிகளை, குருடர்களை, ஊமையர்களை, ஊனர்களை சொஸ்தமாக்கின கர்த்தாவே, எனக்கு இரங்கும். என் கால்களின்/ என் கணவரின் கால்களின்/ என் மனைவியின் கால்களின்/ என் பிள்ளையின் கால்களின்/ என் தாயின் கால்களின்/ என் தகப்பனாரின் கால்களின் வேதனை நீங்கி சுகமடைய, பெலனடையச் செய்யும். குருடர் பார்வை யடைகிறார்கள், சப்பானிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப் படுகிறது என்று யோவானுக்கு அறிவியுங்கள் என்று சொன்ன அன்பின் தேவனே, என் ஜெபத்தைக் கேட்டு அதிசயம் செய்வீராக. 'அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி என்னுடைய உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்துகிறார்' என்று அன்று தாவீது சொன்னது போல நானும் சாட்சி சொல்ல என்னைப் பெலப்படுத்தும். இனிவரும் காலங்களில் நீர் பாராட்டின தயவை, அன்பை நினைந்து உமக்குப் பிரியமானதைச் செய்ய என்னை ஒப்புக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, இன்றே உமது வல்லமை வெளிப்பட உதவிசெய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.