செய்தி

"உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்."

மத்தேயு 9:2

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

இன்று மனிதனுடைய வாழ்வில் பாவம் என்றால் அது வாழ்வின் ஒரு பகுதி என்ற எண்ணம் வந்து விட்டது. பாவமில்லாது இவ்வுலகில் வாழ இயலாது என்ற சிந்தை வந்துவிட்டது. யார் யோக்கியன்? யார் பரிசுத்தன் என்ற கேள்வியுடன் அல்ல; இதைச் சொல்வோரைக் கோமாளியாக எண்ணுகிற இக்காலத்தில் பாவம் நீங்கி, பாவமின்றி ஒரு வழியைத் தான் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்து, வாழ்ந்து காட்டியிருக்கிறார். பாவத்தினால் அநேக வேதனைகளும், பாடுகளும், சாபங்களும் உண்டு என்பதை அறியாது கண்ணீரும் கவலையுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களும் தனி மனிதர்களும் ஏராளம் உண்டு.

பாவத்தின் தீமைகள் மிகுதியானது, இதனால் மனிதன் தான் அடைய/வாழ வேண்டிய சுக வாழ்வை இழந்து, சமாதானத்தை இழந்து கேவலமான வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறான். பாவத்தினால் ஆதியில் இருந்த தீமைகள் மனிதனின் நல் வாழ்வைக் கெடுப்பதுடன், அவன் சந்ததியில் வேதனை பெருகிவருவதை இன்று பார்க்க முடிகிறது. ஏன் எனக்கு இந்தப் பாடு, வியாதி, கஷ்டம், நஷ்டம், தோல்வி, துக்கம் என்று புலம்புகிற மக்களின் தொகை மிகுதி.

I. பாவத்தினால் வந்த, வரும் தீமைகள்

1. ஆதி மனிதனின் பாவமும் தேவ உறவை இழந்த வேதனையும்

"...நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்." ஆதியாகமம் 2:17

இந்த வார்த்தைகளை அறிந்திருந்த மனிதன், சர்ப்பத்தின் வார்த்தைகளைக் கேட்டு தேவனின் வார்த்தையை மீறினான். அதினால் மனுக்குலத்திற்கு வேதனையும், பூமி சபிக்கப்பட்டும் போனது. பூமியில் முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும் என்ற வேதனையான காரியம் மீறுதலின் பாவத்தினால் உண்டானது. இதினால் தேவசாயலால் உண்டாக்கப்பட்ட ஆதிமனிதனின் வாழ்வில் தேவன் கொடுத்திருந்த அதிகாரத்தை இழந்தான். சகலவற்றையும் ஆண்டுகொள்ள வேண்டியவன், ஆளப்படும் நிலைக்கு மாறினான். தேவ சாயலான மனிதன் தேவ வஸ்திரத்தின் ஒளியை இழந்தான். இருண்ட வாழ்வு உண்டானது. ஒளியை வஸ்திரமாய்த் தரித்திருந்த சாயலை இழந்து நிர்வாணியாக மாறினான். அத்துடன் தேவ சமுகத்தில் வாழ்ந்த அவன் அந்த மேன்மையை இழந்து, ஏதேன் தோட்டத்தைவிட்டு துரத்தப்பட்டான், தாகமின்றி துயரமின்றி வாழ்ந்தவன், சகல நல் ஆசீர்வாதங்களையும் இழந்து பாடுபடவும், கடினமாக வாழ்வை வாழவும் வேண்டிய நிலை உருவானது.

பாவமானது உனக்கும், உன்னை உண்டாக்கிய அன்பின் தேவனுக்கும் பிரிவினையை உண்டாக்கி சகலவிதமான சந்தோஷம், சம்பூரண நல் வாழ்வைக் கெடுத்துப் போட்டது. இன்று நம் வாழ்வில் தேவ உறவை இழந்து தவிக்கிற மக்களாக ஜீவிக்கிறோம். கஷ்டத்தின் மத்தியில், பாடுகளும் துக்கமும் நிறைந்து கசந்துபோன வாழ்வை வாழ வேண்டிய போராட்ட நிலை உருவாகிவிட்டது. யார் எனக்கு உதவி செய்வார்கள், யார் எனக்காக காரியங்களைச் செய்வார், யாரிடம் எனது மன கொந்தளிப்பை இறக்கி வைக்கலாம் என்ற கசந்த வாழ்வை உருவாக்கி விட்டது.

தேவ உறவை இழந்தபடியால் பயம், தனிமை, வெறுமை-இதைப் போன்ற சொல்லமுடியாத போராட்ட சூழ்நிலையில் வாழ வேண்டிய துயரமும், துக்கமும் நிறைந்து விட்டது.

2. பாவத்தினால் குடும்பத்தின் அழிவு

"அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்

அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி," யோசுவா 7:24, 25

யோசுவா 6:18ல் இந்த எரிகோ பட்டணத்தில் உள்ளவைகள் சாபத்தீடானவைகள் என்று எச்சரித்திருந்தார். யோசுவா எரிகோவை வென்றபின் ஆயி பட்டணத்தார் முன்பாக முறிந்தோடினார்கள். கலங்கின யோசுவாவுக்குப் பதில் வந்தது சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது என்று. கடைசியில் விசாரித்தபோது, சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். யோசுவா விசாரித்தபோது, 'நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்' என்று தான் செய்த காரியங்களைத் தெரிவித்தான். கொள்ளையில் நேர்த்தியான பாபிலோன் சால்வையையும், 200 வெள்ளி சேக்கலையும், 50 சேக்கல் நிறையான பொன்பாளத்தையும் நான் கண்டு அவைகளை இச்சித்து எடுத்துக் கொண்டேன் என்றான். அதில் அவனும் அவன் குடும்பமும், குமாரர், குமாரத்திகள், மாடுகள், கழுதைகளையும், ஆடுகளையும் ஆகோர் பள்ளத்தாக்கில் நிறுத்தி கல்லெறிந்து, அக்கினியில் சுட்டெரித்து பெரிய கற்குவியலை குவித்தார்கள். பாவம் குடும்பத்தின் அழிவைக் கொண்டு வரும்.

3. பாவம் உன் பெலன், சுகவாழ்வைக் கெடுக்கும்

"...என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை."

"நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்."

"என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை."சங்கீதம் 38:3,7,8

அன்பின் சகோதரனே, பாவமானது நமது சுகத்தை முழுமையாகக் கெடுத்து விடுகிறது. இன்று வியாதிகள் ஏன் வருகிறது என்று ஆராயும்போது, பாவமானது ஒரு காரியமாக இருக்கிறது.

ஒருமுறை எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் ஜெபிக்க வந்தார்கள். படித்தவர்கள், கல்லூரியிலே விரிவுரையாளராக பணியாற்றுகிறவர்கள். அவர்களில் வியாதி அதிக துக்கப்படுத்தியது. இதனால் என் ஜீவியக்காலம் எவ்வளவு நாளோ என்று வேதனை அடைந்தார்கள். அவர்கள் தங்கள் சந்ததியைக் குறித்த வாஞ்சை எண்ணம் இல்லாதிருந்தார்கள். உன் பாவ வாழ்வு சந்ததியின்றி கசப்பான வாழ்வாக மாற்றி விடும்.

அருமையான சகோதரனே, சகோதரியே, பாவ இச்சைகளுக்கு நாம் இடம் கொடுத்தால், வேதனையான நோய்களினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை பரிதாபமாக மாறிவிடும். ஒரு நல்ல பலசாலியான ஒரு வாலிபனை நான் அறிவேன். அவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். அவனின் பெலன் ஒழிந்தது. '...திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்...' என்ற ஓசியா 7:5ன் படி அவன் வியாதிப்பட்டான். அவன் வாழ்க்கை இளம் வயதிலேயே முடிந்து விட்டது. பாவத்திற்கு அடிமையாகும் போது, அவற்றை விட முடியாது, அதினால் தீமைக்கு பலியாகிறவர்கள் ஏராளம்.

4. பாவம் உன் மேன்மையை இழக்கச் செய்யும்

“பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.” நியாயாதிபதிகள் 16:21

சிம்சோன் கர்த்தருடைய வாக்குத்தத்தமான மகன். மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் பிறந்தவன். கர்த்தருடைய தூதனானவர் மலடியாய் இருந்த அந்த ஸ்திரீக்குப் தோன்றி, 'நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்குக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.' என்று கூறினான்.

இவ்விதமாக நசரேயனாக இருக்க வேண்டிய சிம்சோன் நியா. 16:1ல் 'வேசியைக் கண்டு அவளிடத்தில் போனான்' என்று பார்க்கிறோம். அதோடு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்றவளுடன் சிநேகமாயிருந்தான். பணத்துக்காக சிம்சோனின் பலம் எதில் என்று அறிந்து அவனைக்கட்ட திட்டமிட்ட பெண்ணின் வலையில் நசரேய விரதத்தை மீறிப் பாவம் செய்து விழுந்தான். பெலிஸ்தர் அவனைப் பிடிக்கும்படி அவனை அவள் மடியில் நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிர் ஏழுஜடைகளையும் சிரைப்பித்து, அவனை சிறுமைப்படுத்தத் தொடங்கினான். அவன் பலம் அவனது பாவ வாழ்வினால் அவனை விட்டு நீங்கிற்று. பெலிஸ்தர் அவனைப் பிடித்து அவன் கண்களைப் பிடுங்கி அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய் அவனுக்கு இரண்டு வெண்கல விலங்கு போட்டுச் சிறைச் சாலையிலே மாவரைத்துக் கொண்டிருக்க வைத்தார்கள்.

பாவ சிற்றின்பத்தைக் தேடின சிம்சோன் தேவ பிரசன்னத்தை இழந்தான். தேவன் அருளிய மிகுந்த மகா பலத்தை இழந்தான், அவனது பார்வையை இழந்தான். சிறைப்பட்டு போனதுடன், சத்துருக்களுக்கு பணி செய்கிறவனாக மாறினான். பெலிஸ்தியரின் தெய்வங்களைப் புகழ்வதற்குக் காரணமானான். அவர்களுக்கு விளையாட்டுக் காட்டும் மனிதனாக மாறினான். பாவம் உன் மேன்மையான வாழ்வைப் பறித்து, நாசப்படுத்தி விடும்.

5. பாவம் சாபத்தையும், மரணத்தையும் விளைவிக்கும்

"இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்." 2சாமுவேல் 12:10

"இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்." 2சாமு. 12:14

தாவீது தேவனுடைய பார்வைக்குப் பிரியமானவனாக இருந்தான். அவனைக் குறித்து அப். 13:22ல் '...ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக் குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்'. இவ்விதமான சாட்சி பெற்ற தாவீது தன் வாழ்வில் கண்களின் இச்சைக்கு இடம் கொடுத்தான். ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள். தான் தேவனால் ராஜாவாக உயர்த்தப் பட்டிருந்தபடியால், அவளைத் தன் எல்லைக்கு வரச் சொல்லி தன் மாம்ச இச்சைகளை நிறைவேற்றினான். யாருக்கும் தெரியாத நிலையில் உண்மையான தன் சேவகனை யுத்தத்தில் தந்திரமாய்க் கொன்றான். அத்துடன் அவன் மனைவியை தனக்கு எடுத்துக் கொண்டான். சங். 94:9ல் உள்ளது போல காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? என்பதை மறந்து போனான். கர்த்தர் அவனது தவறான செயலை, உணர வைத்து அவன் சந்ததியில் சாபமும், பிறந்த பிள்ளை சாகவும் செய்தார்.

இன்று கர்த்தருக்குப் பிரியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று தவறான காரியங்களைச் செய்வோம் என்றால், சாபமும், மரணமும் நம் எல்லையில் உண்டாகி விடும்.

அன்பு சகோதரனே, சகோதரியே, கர்த்தருக்குப் பிரியமில்லாத பாவ வாழ்க்கை நீ வாழ்வாய் என்றால், இன்றே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து மனந்திரும்பு. உன் சந்ததியில் நீ நினையாத சாபத்தையும், மரணத்தையும் சேர்த்துவையாது உன்னை இன்றே மாற்றி அமைத்துக் கொள். எதை விதைக்கிறாயோ அதையே நீ அறுக்க வேண்டும். நீ உன் பெற்றோருக்கு துரோகம் செய்வாய் என்றால், உன் பிள்ளைகளும் அவ்வாறே நடந்து உன்னைத் துக்கப்படுத்துவார்கள். அதின் வேதனை கொடியதாய் இருக்கும். வாழ்க்கை சஞ்சலமும் துயரமுமாக மாறி விடும். இன்றே நாம் பாவத்திற்கு அடிமை ஆகாதபடி கர்த்தருக்குச் சொந்தமாக நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

II. என்னென்ன காரியங்கள் நாம் செய்யாதிருப்பதால் பாவங்கள் ஏற்படுகிறது?

1.நன்மை செய்ய திராணியிருக்கும்போது, செய்யாதிருப்பது பாவம்

"ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்." யாக்கோபு 4:17

அநேக நேரங்களில் இந்த பாவத்தினால் நாம் பாதிக்கப்படுகிறோம். சில சமயங்களில் உள்ளதைப் பகிர்ந்து கொடுப்பதில் குறைவுபடுகிறோம். தன்னயம் நம்மை ஆட்கொள்ளுவதினால் எனக்கு, என்னுடைய என்று சொல்லி மற்றவர்களை எண்ணாது போய்விடுகிறோம்.

ஒருமுறை ஒரு நிகழ்ச்சி ஒருவர் கூறினார். ரயில் பயணத்தில் ஒரு compartment-ன் ஒரு பகுதியில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். ஒரு வயதான சகோதரி சில பைகளுடன், கூடையுடன் ஏறி அமர்ந்தார்களாம். அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தபோது, ஒருவர் நீங்கள் இறங்கிவிட்டு, பின் கூடையையும் பையையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம். அடுத்தவர் கூடையை முதலாவது போட்டுவிட்டு, இறங்கி, பையை எடுத்துக்கொண்டு இறங்குங்கள் என்று கூறினாராம். ஆனால் ஒன்றும் பேசாத ஒருவர், அந்த சகோதரி இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தபோது, அந்த சகோதரி இறங்கியபின், அந்த சகோதரியின் கூடையையும், பையையும் எடுத்துக் கொடுத்தாராம். இவ்விதமாய்ச் செய்வதே நன்மை செய்கிறதாய் இருக்கிறது.

இந்த இடம் எங்கே இருக்கிறது என்று ஒருவர் நம்மிடம் கேட்டால் நாம் என்ன செய்கிறோம்? அவர்களுக்கு ஏற்ற உதவிகள் நாம் நலமாய்ச் செய்யும் போது, நன்மை செய்கிறவர்களாய் இருக்கிறோம்.

2. மற்றவர்களுக்காக ஜெபியாதிருந்தால் பாவம்

"நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்." 1 சாமுவேல் 12:23

இன்று நம்முடைய ஜெப நேரங்களில் நம்முடைய குடும்பத்துக்காக, பிள்ளைகளுக்காக நான் செய்யும் தொழில், வியாபாரம், வேலைக்காக ஜெபிக்கிறோம். ஆனால் சாமுவேல் தீர்க்கதரிசியானவர், கர்த்தரின் ஜனங்களுக்காக ஜெபம் செய்யாவிடில் பாவம் என்பதைக் கூறுவதைப் பார்க்கிறோம். நாம் கூட இந்தக் காரியங்களில் இனி பாவஞ்செய்யாதபடி மற்றவர்களுக்காக ஜெபிப்போம். இந்த ஜெப வாழ்க்கை அதிக ஆசீர்வாதமானது.

நாம் அமைதியாக கலகமில்லாத வாழ்க்கை வாழ ராஜாக்களுக்காக, உயர் அதிகாரிகளுக்காக ஜெபிக்க வேண்டும் என்று 1 தீமோ. 2:2ல் பார்க்கிறோம். அப்படி நாம் செய்யும் போது, அமைதலுள்ள வாழ்க்கை வாழ கர்த்தர் கிருபை புரிவார். பேதுருவுக்காக சபையார் ஊக்கமாக ஜெபித்தார்கள். கர்த்தர் பேதுருவைச் சிறைச்சாலையிலிருந்து வெளியே கொண்டு வந்தார். யோபு தன் நண்பர்களுக்காக ஜெபித்தபோது, கர்த்தர் அவனது சிறையிருப்பைத் திருப்பினார். நாம் இன்று மற்றவர்களுக்காய், தேசத்திற்காக, அநேகர் இரட்சிக்கப் படுவதற்காக ஜெபிக்க ஜெபிக்கக் கர்த்தர் மகிமையானக் காரியங்களைக் செய்வார்.

ஒரு இரவிலே திடீரென ஒருவருடைய முகத்தைக் காண்பித்து ஜெபிக்க நடத்தினார். சில நாளிலேயே அந்த நபரைக் கர்த்தர் சந்திக்கக் கிருபை செய்தார். அந்தக் குடும்பத்தினரிடம் உங்கள் தகப்பனார் ஒருஇரவு இருதய வேதனையினால் துடித்தார். மூன்று மணிநேரம் ஜெபிக்கக் கர்த்தர் நடத்தினார் என்றபோது, அந்த மாதிரி என் தகப்பனார் கூறவில்லையே என்று மருத்துவரான மூத்த மகன் கூறினார். ஆனால் அவர் தகப்பனாரை அனுகி, brother இப்படிச் சொல்லுகிறாரே என்றவுடன் ஆம் என்று கண்ணீர் சிந்தினார். அதினால் நீங்கள் எத்தனை முறை இங்கு வந்தாலும் என் பிள்ளைகளுடன் இணைந்து ஊழியங்களைச் செய்யுங்கள் என்று அன்பாகக் கூறினார்கள்.

மற்றவர்களுக்காய் ஜெபியாவிட்டால் பாவம் என்பதை அறிந்து இன்று முதல் ஜெபிப்போமாக.

3) பொருத்தனையை நிறைவேற்றாதிருப்பது பாவமாகும்

"நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்." உபாகமம் 23:21

இன்று நம்முடைய வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் பலவிதமான பொருத்தனைகளைச் செய்கிறோம். நமக்கு நல்ல உத்திரவு வந்தவுடன் கொஞ்சக்காலம் மிகக் கவனமாக அந்தப் பொருத்தனைகளை நிறைவேற்றி கர்த்தருக்குள் மகிழுகிறோம். காலம் செல்ல செல்ல எல்லாவற்றையும் குறைத்து விடுகிறோம். அல்லது விட்டு விடுகிறோம். அவ்வாறு நாம் செய்தால் அது பாவமாகும். இதினால் நாம் ஒருவேளை மீண்டும் பாதிப்படையலாம், நஷ்டமடையலாம். தேவனுக்கு முன்பாக செய்த பொருத்தனையை நாம் முழுமனதுடன் நிறைவேற்ற வேண்டும்.

III.பாவங்கள் நீங்கி நல்வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்?

1.பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும்

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" நீதி. 28:13

நாம் செய்த பாவங்களை நாம் அறிவோம். பிறப்பிலிருந்தே நாம் பாவத்துக்கு ஆளாய் இருக்கிறோம். தாவீது தன் வாழ்வில் பாவத்தை செய்தபோது, நாத்தான் தீர்க்கதரிசியால் உணர்த்தப்பட்டு அறிந்து கலங்கி தன் பாவத்தை அறிக்கை செய்தான். இதனை சங். 51ல் பார்க்க முடிகிறது. என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்ற வாசகத்தினால், பிறப்பில் இருந்தே நான் ஒரு பாவி என்று சொல்வதை அறியமுடிகிறது. இந்தப் பாவ சுபாவத்தை விட்டுவிட நாம் கர்த்தராகிய இயேசுவிடம் உண்மையை அறிக்கை செய்ய வேண்டும். அத்துடன் அதை செய்யாது இருக்க வேண்டும் என்பது முக்கியமான காரியம் ஆகும். இதை நிறை வேற்றினால், நம் பாவங்களை உண்மையாய் அறிக்கை செய்தால், 1 யோவான் 1:9ன் படி நம் பாவத்தை மன்னித்து புதிய வாழ்வை உருவாக்குவார்.

3.மனம்திரும்பவேண்டும்

"அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனம்திரும்ப வேண்டும்மென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்." அப்போஸ்தலர் 17:30

நாம் அறியாத காலங்களில் தெய்வம் எது என்று அறியாதபடி பல காரியங்களைச் செய்து வந்தோம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதற்குரிய தண்டனையைத் தரவில்லை. நாம் அது தவறு என்று உணர்கிறோமோ அன்றே மனம்திரும்ப வேண்டும். மனம்திரும்புதல் என்றால் மனதில் திருப்பம் அடைவது பழைய வாழ்வில் அறியாது, உணராது, புரியாத காரியங்கள் தவறு என்று குற்றம் என்று உணர்ந்து இனி அவைகளுக்கு இடம் கொடாது வாழ்வதற்கு நம்மை முழுமையாக மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். உன் மனது மாற்றம் அடைய வேண்டும். கிறிஸ்துவின் மாதிரியின்படி அவர் உபதேசித்த நல்வாழ்வு வாழ நம்மை முற்றும் அர்ப்பணிப்பதாகும். பழையவைகள் எல்லாம் ஒழிந்தது. எல்லாம் புதிதானது என்ற புதிய வாழ்க்கையை நாம் வாழ வழி செய்வதாகும்.

3. இயேசுவின் இரத்தத்தை நம்புவதும் கழுவப்படுவதும்

"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1:7

இன்று நம் பாவங்கள் மன்னிக்கப்பட இரத்தம் அவசியமாய் இருக்கிறது என்று எபி. 9:22 சொல்கிறது. இயேசு கிறிஸ்து தமது மாசற்ற இரத்தத்தை நமக்காக சிலுவையிலே சிந்தினார். முள்முடியில் இருந்து வந்த இரத்தம், கைகளின் காயத்தில் இருந்து வழிந்த இரத்தம், வாரினால் அடிக்கப்பட்ட காயங்களின் இரத்தம் நம்முடைய பாவங்கள் முற்றும் கழுவுவதற்காகத்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தம் எப்படி இன்று நம்மைக் கழுவ முடியும் என்று எண்ணினேன். அவரின் இரத்தம் எனக்குள் தோன்றிய என் பாவங்கள் அடங்கிய அந்த சுருளில் ஒரு சொட்டு விழுந்த உடனேயே வெண்மையாக மரியாதையை என் உள்ளத்தில் கண்டபோது கதறி அழுது என் பாவத்திற்காக நீர் அடிக்கப்பட்டீர் என என்னையே அர்ப்பணித்தேன். அந்த ஜெபவேளை முடிந்தபோது என் பாவம் நீங்கியதால் உண்டான இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிற்று. இந்த சந்தோஷம் என்றும் நம் உள்ளத்தில் இருந்து நம்மை நீதியின் பாதையில் நடத்துகிறதாய் இருக்கிறது. அவர் சிந்திய இரத்தத்தால் மழுங்கிப் போன மனசாட்சி உயிர்ப்பிக்கப்பட்டு அவருக்குப் பணி செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகிறது.

4. மற்றவர் குற்றங்களை மன்னிப்பதனால்

"எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்." மத்தேயு 6:12

இன்று நாம் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் நாம் நலமாய் செய்வதாக நினைத்து மற்றவர்களைக் குற்றப்படுத்துகிறோம். இதனால் நான் பெரியவன் என்று மற்றவர் அறிய பெருமையாய்ச் செயல்படுகிறோம். நம் பாவங்கள், நம் தப்பிதங்கள், மன்னிக்கப்படுமானால் மற்றவர் குற்றங்களை நாம் மன்னிக்கவேண்டும். இப்படி நாம் மற்றவர் குற்றங்களை மன்னிக்கும் போது, பரமபிதா நம் குற்றங்களை மன்னிப்பார். இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய நேரத்தில் பிதாவே இவர்கள் குற்றங்களை மன்னியும் என்று நமக்கு மாதிரியை வைத்துள்ளார். இதை நம் வாழ்வில் நிறைவேற்றும்போது சமாதான வாழ்வு நம் எல்லைகளில் உருவாகிவிடும். ஒருவர் குற்றங்களை ஒருவர் மன்னித்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவோம். பாவம் நீங்கி நல்வாழ்வு மலரும்.

5.கிறிஸ்துவின் அன்பினால் நிறையும் போது பாவம் நீங்கும்

"எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்." 1 பேதுரு 4:8

இன்று பாவம் நீங்கிய நல்வாழ்வு வாழ நாம் கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கவேண்டும். அன்பானது திரளான பாவங்களை மூடும். இந்த அன்பைப் பெற கல்வாரியில் நமக்காகப்பாடுபட்ட, இயேசு கிறிஸ்துவை நினைக்கவேண்டும். இந்த அன்பு பூரணப்படும்போது வழிதப்பி கெட்டுப்போகிற பாவியான மனிதர்கள் பாவ மரணத்தினின்று இரட்சிக்கப்பட்டு திரளான பாவங்ளை மூடுகிற பாக்கியமடைகிறார்கள்.

தாவீது சங்கீதம் 32ல் எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான் என்றும், எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான் என்றும் கூறியுள்ளார்.

அன்பு சகோதரனே, எந்த பாவியையும் புறம்பே தள்ளாத இயேசுகிறிஸ்து, உன் அக்கிரமங்களை மன்னித்து உன் நோய்களெல்லாம் குணமாக்கி ஆசீர்வதிக்க விரும்புகிறார். இதற்காகவே நம் நோய்களைக் கல்வாரி சிலுவையில் சுமந்தார் நம் பாவங்களைச் சிலுவையில் சுமந்தார். அவருடைய தழும்புகளினால் குணமாகிறோம்.

இன்று இந்த ஆலோசனையை ஏற்று நடக்க ஆயத்தமா? சிலுவையில் சிந்திய இரத்தத்தை நம்பி ஏற்றுக்கொள்ள ஆயத்தமா? ஏற்றுக்கொள்ளுங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உங்கள் ஆவி, ஆத்மா, சரீரம், சுகம் பெலனடையும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.