செய்தி

"அதினாலே நாம் தைரியங்கொண்டு; கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்..."

எபிரெயர் 13:6

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று எனக்கு யாராவது சகாயம் செய்ய மாட்டார்களா? என்ற கேள்வியுடன் உதவிபெற எதிர்ப்பார்த்திருக்கும் மக்கள் ஏராளம். சகாயம் என்றால் சலுகை பெறுவதாகும். எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் அதிகாலையில் கடற்கரைக்குச் சென்று மீன் வாங்கும் பழக்க முடையவராய் இருக்கிறார். ஏன் அதிகாலையில் சென்று வாங்க வேண்டும் என்று கேள்வி கேட்டபோது, சகாயவிலையில் மீன்களை அந்த நேரத்தில் வாங்க முடியும். சின்ன ஆதாயத்திற்காக அதிகாலை சென்று பணிகளைச் செய்கிற சகோதரனே, உன் வாழ்வில் முழுமையான, மேன்மையான, பூரணமான சலுகைதரும் கர்த்தரை அதிகாலையில் தேடுகிறீர்களா?

ஒரு வங்கியில் ஒரு குடும்பத்தார், தங்கள் நகைகளை அடகுவைத்து, பல லட்சங்களை கடனாக வாங்கியிருந்தார்கள். அவர்கள் அந்த நகையைத் திருப்பவும் திரும்பப் பெறவும் முடியாத நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் அந்தக் குடும்பத்தார், அந்த வாங்கி அதிகாரியைச் சந்தித்தபோது, அவர் கடன் வாங்கிய தொகைக்கு பாதிக்கு மேலாக வட்டி கட்டச் சொல்லிவிட்டார். அந்த வீட்டார் அவரை அதிகமாக நெருங்கிக் கேட்டபோது, ஒரு பெரிய சகாயம் அவர்களுக்குச் செய்தார். அசல் தொகையுடன் 10 சதவீதம் வட்டியாகச் செலுத்தச் சொன்னார். அவர்களின் உள்ளம் பூரித்தது. கடன் பாரம் குறைந்தது. அந்த வங்கி அதிகாரியைவிட நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து சலுகையும், சகாயமும் செய்கிறவர்.

ஒருமுறை வெளிநாட்டு சகோதரர் ஒருவர் அதிகமான நாட்கள் இந்தியாவிலே தங்கிவிட்டார் (over stey). மீண்டும் செல்வதற்கு 'Q' பகுதி போலீஸ் அனுமதியுடன் தான் விமானப்பயணம் செய்ய முடியும். ஆகவே அந்த சகோதரரை 'Q' branch போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன். நமக்கு இந்த அலுவலகத்தில் யாரும் தெரியாதே என்ற எண்ணத்துடன் இருந்த எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமான காரியத்தைக் கர்த்தர் அந்த இடத்தில் செய்தார். ஒரு சகோதரர் முக்கிய பகுதி பணியை அவ்வலுவலகத்தில் செய்து கொண்டிருந்தவர், உடன் என்னிடம் வந்து தன்  வாழ்த்துதலையும், மரியாதையையும் செலுத்தி இருக்கையில் இருவரையும் அமரச் செய்யதார். அத்துடன் டீ குடிக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு, அதை வாங்கிவரச் சொன்னார். என்ன என்று கேட்டு அவரிடம் எங்கள் பிரச்சனையைக் கூறியவுடன் அதற்குரிய அனுமதி விண்ணப்பப்படிவம் எல்லாவற்றையும் வாங்கி பூர்த்திசெய்து அதில் கையொப்பமிட மாத்திரம் கூறினார். இரண்டு தினம் கழித்து வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று இன்முகத்துடன் எங்களை அனுப்பி விட்டார். பயந்து கலங்கிச் சென்ற வெளிநாட்டவருக்கு சகாயம் பெற்றபடியால் மிகுந்த தைரியமும் சந்தோஷமும் உண்டானது. பயணமும் நேர்த்தியாய் அமைந்தது.

I. யாருக்கு சகாயம் கிடையாமற் போகிறது?

1. தவறான மனிதர்களின் மேலும், தவறானவைகளின் மேலும் நம்பிக்கை வைப்பதால் சகாயம் கிடையாமற்போகிறது.

"எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்து போவார்கள்." ஏசாயா 31:3

இன்று அநேகர் சகாயம் செய்கிற கர்த்தரை நோக்காமலும், தேடாமலும், தேவன் விரும்பாத இடத்திற்குச் சென்று சகாயம் நாடுவதால் விழுந்து அழிந்து போகிறார்கள். ஒருமுறை ஒரு குடும்பத்தார் வாலிப மகனின் வயிற்றில் உண்டான வேதனையினால் ஜெபிக்கக் கொண்டு வந்தார்கள். அந்த வாலிபனின் வயிறு ஒரு பெரிய பானையைப் போல் இருந்தது. அவனின் கை கால்கள் சூம்பி இருந்தது. இந்த நிலையில் அவனை விடுதலை முகாமிலேயே தங்க வைத்து ஜெபிக்க ஆரம்பித்தோம். சில தினங்களிலேயே சுகம் அடைந்து வீடும் சென்று விட்டான். ஆகவே சில நாட்கள் கழித்து அவன் வசிக்கும் வீட்டுக்குச் சென்றேன். அவனோ அதிர்ஷ்டமும், பாதுகாவலும் தரும் மோதிரத்தைப் பணம் கொடுத்து தங்களின் வீட்டில் வைத்துக் கொண்டான். கர்த்தர் திட்டமாய் வெளிப்படுத்தினதால், அறையிலிருக்கிற அந்த மோதிரத்தை எடுத்து வாருங்கள் என்றபோது, தயங்கி, எடுத்து வந்தார்கள். இம்மட்டும் உதவி செய்த கர்த்தரை மறந்து பணத்தைக் கொடுத்து இதை ஏன் வாங்கி வைத்தீர்கள் என்று கூறிவிட்டு ஒரு ஜெபத்தைச் செய்து விட்டு கர்த்தரைத் தேடுங்கள், நம்புங்கள் என்று கூறி வந்தோம். சில நாட்களிலேயே குடும்பச் சண்டையினால் அந்த வாலிபன், தன் இனத்தாரைக் கொன்று விட்டான். அதினால் அவர்கள் வழக்கில்லாதிருக்க வீட்டையே அந்தக் குடும்பத்தினருக்கு எழுதிக் கொடுத்தார்கள். எதிர்பாராதவிதமாக அந்த வாலிபனும் சில தினங்களிலேயே மரித்துப்போனான். உலகப் பிரகாரமான மக்களின் வார்த்தைக்கு இடம் கொடுத்து, கர்த்தராகிய இயேசுவை நோக்காமல், தவறான மனிதர்களின் உதவியைத் தேடினபடியால் இழப்பும் மரணமும் உண்டானது.

2. தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி ஆலோசனையை அசட்டை செய்தபடியால் சகாயரின்றி விழுந்தார்கள்

"தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,

அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.

அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள்." சங்கீதம் 107:10,11,12

இன்று அநேகர் கர்த்தருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாது, அதை அசட்டை செய்கிறார்கள். எப்பொழுதும் பிள்ளைகளுக்கு சகாயம் செய்ய விரும்பி கர்த்தரின் சகாயத்தை இழந்து, அழிந்து போகிறார்கள். கர்த்தருடைய வார்த்தையில் வல்லமையிருக்கிறது. யோவான் 6:63ல் ஜீவனும் ஆவியும் நிறைந்தவைகள் என்று பார்க்கிறோம். இந்த வார்த்தைகளை அனுப்பி குணமாக்குகிறார், அழிவுக்குத் தப்புவிக்கிறார். இந்த வசனத்தை ஏற்றுக் கொள்ளாதபடி அசட்டை செய்து வாழும்போது விழுந்துபோகிறோம்.

ஒருமுறை உங்கள் கணவரின் ஆயுசு நாட்கள் நீடித்திருப்பதற்காக உங்கள் கணவருடன் அதிகமாக ஜெபியுங்கள் என்றேன். கணவர் அநேக ஊழியங்களில் உற்சாகமாய் பங்கேற்றார். ஆனால் அவர் மிகுந்த ஆவலுடன் தன் மனைவியை ஜெபிக்க அழைத்தபோது, உங்களுக்கு வேலையே கிடையாதா? என்று கேட்டு, கோபப்பட்டு விட்டு, டிவியில் பல மணிநேரம் சினிமா சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கர்த்தருடைய ஆலோசனையையும், வார்த்தையையும் அசட்டை செய்த சகோதரியின் கணவர் திடீரென மரித்துப்போனார்கள். அந்த சகோதரியோ, ஐயோ,நான் நினையாத கேடான காரியம் நடைபெற்றுவிட்டதே என்று கலங்கி கண்ணீர் விட்டார்கள். கர்த்தரின் சகாயத்தை இழந்து வேதனை அடைந்தார்கள்.

அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய ஆலோசனைகளை அசட்டை செய்யாதே, அவரின் வார்த்தையின்படி செய்யும் போது கர்த்தர் மிகுந்த சகாயம் செய்து உன்னைக் காத்து ஆசீர்வதிப்பார்.

3. கர்த்தரின் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாதபடியால் சகாயம் இழந்து போகிறார்கள்

"அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்." நீதிமொழிகள் 29:1

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் நேசிக்கிற தம் மக்களை கடிந்து கொள்கிறார். சூம்பின கையையுடைய மனிதன் ஜெப ஆலயத்தில் இருந்தான். அது ஓய்வு நாள். இயேசு கிறிஸ்துவின் மேல் குற்றம் சுமத்தும் பொருட்டு அங்கிருந்தவர்கள் நோக்கமாயிருந்தார்கள். ஓய்வு நாளில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ அளிப்பதோ எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது இயேசு கிறிஸ்து அவர்கள் இருதய கடினத்தினிமித்தம் விசனப்பட்டு, கோபப்பட்டார். அந்த சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி, உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டி அற்புத சுகத்தைப் பெற்றுக் கொண்டான்.

சிலர் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாதபடியால் தவறான தீதான காரியங்கள் நடைப்பெறுகிறது. தாம் நேசிக்கிற மனுஷனை கர்த்தர் சிட்சித்து தம் பக்கமாக சேர்த்துக் கொள்ளுகிறார்.

ஒருமுறை ஒரு ரயில்வே கிராசிங்கில் வாகனம் செல்ல தடையாக கதவு அடைக்கப்பட்டிருந்தது. ஒருவர் சைக்கிளில் ரயில் பாதையைக் கடந்து செல்ல, பூட்டிய கதவில் இருந்த இடைவெளியில் நுழைந்தார். அந்தக் கதவைப் பூட்டிய மனிதர், ரயில் வருகிறது என்று கடினமாய்ச் சொல்லி கடிந்து கொண்டார். நான் யார் தெரியுமா என்று கேட்டுவிட்டு ரயில் வரும் பாதையில் ரயில்வேயில் வேலை செய்கிறவன் என்று கூறினார். அந்த நேரத்தில் நினையாத விதத்தில் அவர் மீது மோதியது அவரது சரீரம் கூட்டிச் சேர்க்கப்பட்டது. எச்சரிப்பை, கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளாதவர் வாழ்வில், சகாயமின்றி சடிதியில் விழுந்து அழிந்து போகிறார்கள்.

4. தேவனுடைய ஊழியர்களை அற்பமாய் எண்ணுவதால் சகாயமில்லாமற் போகிறார்கள்

"ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளை பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று."         2 நாளாகாமம் 36:16

ஒருமுறை ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் நடந்த கூட்டத்திற்குப் பின்பு ஒரு சகோதரி தன் வீட்டுக்கு ஜெபிக்கக் கேட்டுக்கொண்டார்கள். அந்த வீட்டிற்குச் சென்றேன், ஜெபித்தேன். அத்துடன் உங்கள் வீட்டு சுவருக்குள் பாம்பு ஒன்று முட்டையிட்டு அடைக் காத்துக்கொண்டிருக்கிறது, சற்று கவனமாய் இருங்கள் என்று கூறியபோது, இந்த வீடு மண் சுவரல்ல, சிமென்டால் கட்டப்பட்டு எல்லா இடங்களிலும் இடைவெளியில்லாது நன்றாய் பூசப்பட்டு இருக்கிறது. தினமும் காலை மாலை பெருக்கிச் சுத்தம் செய்கிறோம், எப்படி சுவரில் பாம்பு இருக்கமுடியும் என்று நம்பிக்கையற்ற விதத்தில் சலிப்புடன் கூறினார்கள். கர்த்தாவே, அந்தப் பாம்பின் செயலைக் கடிந்து கொள்கிறேன். அதன் வாய் வீட்டில் யாரையும் தொடாதபடி கட்டிப்போடும் என்று ஜெபித்து வெளியேறினேன்.

சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். மழை பெய்தபின் சுவரில் ஒருபுறம் ஒரு சிறிய விரிசல் உண்டாகிவிட்டது. எனவே அதைச் சரி செய்வதற்காக கட்டடம் கட்டும் ஒரு நபரை அழைத்து வந்தேன். அந்த இடத்தைச் சற்று தட்டி சரியாய்ப் பூச ஆரம்பித்தார். பாம்பின் சீரும் சத்தத்தைக் கேட்டுவிட்டார். கடப்பாறையைக் கொண்டு மிகுந்த கவனமாய் அந்த இடத்தை இடித்தபோது, அந்தப் பாம்பு மூர்க்கத்துடன் வெளிப்பட்டதாம். ஆனால் அந்தக் கொத்தனார் கடப்பாறையைக் கொண்டு அடித்துக் கொன்று விட்டார். மேல் சுவரை  

சற்று இடித்தபோது உள்ளே அதன் முட்டைகள் இருந்தன என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இன்று அநேக காரியங்களில் ஊழியர்களின் வார்த்தைகளை அசட்டை செய்வதால் கர்த்தரின் சகாயமின்றி பாடுகளை அனுபவிக்கிறார்கள்.

ஒருமுறை ஒரு சகோதரர் அவர் வீட்டை பெரிதாக்கி கட்ட ஆலோசனை கேட்டபோது, வேண்டாம் எனக் கர்த்தரின் ஆலோசனையைக் கூறிய போது, சிரித்தார். பல லட்சம் ரூபாய் செலவழித்துக் கட்டிமுடித்தார். ஆனால் என்ன நடைபெற்றது என்றால், சாலை விஸ்தரிப்பில் அவரின் வீடு முழுவதும் இடிக்கப்பட்டு போய் விட்டது. அதிகாரிகளின் கண்களில் சகாயம் கிடைக்க எவ்வளவோ முயற்சித்தும், தோல்வியும், துக்கமும், நஷ்டமும் அடைந்தார்.

II. இன்று யாருக்கு சகாயம் கிடைக்கும் ?

1. கர்த்தரை நம்பினவர்கள் சகாயமடைவார்கள்

"கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்." சங்கீதம் 28:7

இன்று நம்முடைய நம்பிக்கை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது இருக்க இடம் கொடுக்க வேண்டும். பலவிதமான நம்பிக்கை உடையவர்களாய் தங்களின் வாழ்நாட்களை செலவிட்டு வருகிறார்கள். நம் நம்பிக்கையின் செயலினால் கர்த்தரின் கரத்தில் சகாயமடைகிறோம். இந்த நம்பிக்கை குறைவதால் சந்தேகம், அவிசுவாசம் நம் வாழ்வில் வந்து விடுகிறது.

எரேமியா 17:7ல் உள்ளதுபோல கர்த்தரை நம்பி வாழ்வதற்கு நாம் இடம் கொடுக்கும்போது, பல ஆசீர்வாதங்கள் உண்டாகும். நீ என்னை நம்பினபடியால் நிச்சயமாய் உன்னை விடுவிப்பேன் என்ற கர்த்தாதி கர்த்தர் ஜீவிக்கிறார். இன்று பலவிதமான காரியங்களில் நமக்கு விடுதலை தேவை. இந்த விடுதலையைக் குமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருளுகிறார். அவரில் உள்ள நம்பிக்கை நிறைவாக நம் வாழ்வில் விடுதலையும், சுகமும் சமாதானமும், சந்தோஷமும் உண்டாகிவிடும். கர்த்தரை நம்பியிருக்கிறவனைக் கிருபை சூழ்ந்து கொள்கிறது. கர்த்தரை நம்பினவர்களைக் கைவிடாது காத்து நடத்துகிற தேவனாயிருக்கிறார்.

நம்பிக்கை துரோகம் நிறைந்த உலகில் பலவிதமான நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். ஒருமுறை தங்கள் தாய் இறந்துபோனபடியால் இரண்டு சகோதரிகள் கவலையுடன் அவர்களின் சடலத்திற்கு முன்பாக கலங்கி கொண்டு இருந்தார்கள். அவ்வேளையில் அவர்களின் ஒரே சகோதரர் அம்மாவின் அடக்கத்திற்காக செய்யவேண்டிய காரியங்கள் என்று சொல்லி அவர்களின் முழு சொத்தையும் தன் பெயரில் எழுதி வாங்கிகொண்டார்கள். நம்பிக்கை துரோகிகளாக மாத்திரம் அல்ல மிகுந்த தந்திரசாலிகளும், சந்தர்ப்பவாதிகளுமாய் இருக்கிறார்கள்.

இவ்விதமான கேடுபாடுகள் நிறைந்த உலகில் உன் நம்பிக்கையைக் கர்த்தர் மேல் வைப்பாயானால் சகாயம் செய்யும் கர்த்தர் அற்புதமான விதத்தில் உனக்கு உதவி செய்வார். உன் நம்பிக்கை வீண் போகாது. கர்த்தரை நம்பி நன்மை செய்யும்போது சகலவிதமான நல் ஆசீர்வாதங்களையும் சுதந்தரிப்போம். இன்றைக்கு மனிதரின் நம்பிக்கையானது எண்ணிக்கையின் மேலும், நிறத்தின் மேலும், பொருட்கள் மீதும் நிறைந்து இருக்கிறது. அதனால் கேடானதும், பாடுகளும் உண்டாகிவிடுகிறது.

ஒரு சகோதரர் தன் வீட்டை வாஸ்தின்படி சரிசெய்ய வேண்டும் என்று ஒரு பகுதி நிலத்தை விற்றார். மற்றோரு பகுதியை சில மாறுதல்கள் செய்தார். தன் வீட்டைச் சரியான வாஸ்தின்படிக்கு செய்துவிட்டேன், இனி ஆசீர்வாதங்கள் உண்டாகும் என நினைத்தார், எதிர்பார்த்தார். அவரின் மூத்த மகள் ஒரு வியாதியினால் மரித்துப்போனாள். இந்த வாஸ்தை சரி செய்த பகுதியை வாங்கியவரும் நினையாத நேரத்தில் இருதய நோயால் மரித்துப்போனார். தவறான நம்பிக்கையினால் சகாயமின்றி சடுதியாய் நாசமடைந்தார்கள். இன்று நாம் கர்த்தர்மேல் முழு நம்பிக்கை வைக்கும்போது, சகாயம் செய்யும் வல்ல தேவன் உன்னை அதிசயங்களைச் காணச்செய்வார்.

2.சகாயம் பெற கர்த்தரைத் தேடவேண்டும்.

"அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரைத் தேட வந்தார்கள்." 2 நாளாகமம் 20:4.

இன்று நாம் உலகத்தில் பலவிதமான காரியங்களைத் தேடி அலைகிறோம். இவைகள் கிடைத்தால் நான் ஆசீர்வாதமாய் வாழ்வேன் என்று சொல்லி உலகப்பிரகாரமான மக்களைத் தேடித்திரிகிறார்கள். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசு கிறிஸ்துவின் வாசகத்தின்படி அவரைத்தேடுவதற்குப் பதிலாக உண்டாக்கப்பட்டவைகளை உணராதபடி தேடி பல நஷ்டங்களையும், கஷ்டங்களையும் அடைகிறார்கள். நாம் முழுமனதுடன் அவரைத்தேடும்போது தென்படுவார் என்ற வார்த்தையை விசுவாசியாதபடி, தவறு செய்து வாழ்வில் தடுமாறுகிறோம்.

கர்த்தரைத் தேடுகிற மக்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்ற சங்கீதம் 34:10ன் வார்த்தை எவ்வளவு உண்மையானது. ஒருமுறை ஒரு ஊருக்குப் பயணம் செய்ய வேண்டும், வீட்டிற்குக் கொஞ்சம் பணமும் கொடுத்துச்செல்லவேண்டுய நிர்ப்பந்தமான நிலை. கடன் வாங்கக் கூடாது என்ற தீர்மானம் ஒரு பக்கம். ஆகவே சகாயம் செய்யும் கர்த்தரின் சமுகம் தேடி அமர்ந்திருந்தேன். அப்பொழுது வெளிநாட்டிற்குச் சென்று வந்தபோது சிலர் கவரில் கொடுத்த பணத்தை எடுத்துவிட்டு, கவரில் இருந்த விலாசத்தை நன்றி கடிதம் எழுத பத்திரமாக வைத்திருந்ததை நினைவுபடுத்தினார். நான் உடனே அந்தக் கவர்களை எடுத்து சோதிக்க ஆரம்பித்தேன். ஆச்சரியமாய் எனக்குத் தேவையான பணத்திற்கு மேலாக அதில் இருந்த பணம் எடுக்காமல் இருந்ததைக் காணமுடிந்தது. கர்த்தரை அன்று தேடின யோசபாத் தன் வாழ்வில் எதிர்பாராத சகாயம் பெற்றார். சத்துருக்களை நிர்மூலமாக்கினார் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது.

கர்த்தரைத் தேடும்போது அவர் கைவிடமாட்டார், நம் காரியங்களை வாய்க்கச்செய்வார். இன்று என் பெண்பிள்ளைக்கு வரன் தேடுகிறேன், என் மகனுக்கு நல்ல கல்லூரியில் இடம் தேடுகிறேன், நல்ல வேலையைத் தேடுகிறேன், வீடுகட்ட இடத்தைத் தேடுகிறேன் என்று பல காரியங்களைப் பல விதங்களில் தேடிக்கொண்டிருக்கிற தேவப்பிள்ளையே கர்த்தரை முழு மனதுடன் தேடுங்கள். சகாயம் செய்யும் தேவாதி தேவன் உங்கள் பாதையில் உள்ள தடைகளை நீக்கி அற்புதம் செய்வதைக் காண்பீர்கள்.

ஒருமுறை ஆலயம் சென்று வீடு திரும்பிய சகோதரி தான் கையில் அணிந்திருந்த பிரேஸ்லட் காணவில்லை என்று கலங்கி தன் கணவரிடம் கூற, தேடிச் சென்ற இருவரும் திரும்ப ஆலயத்திற்கு வந்தார்கள். சகாயம் செய்யும் கர்த்தாதி கர்த்தர் ஆலயவாசலில் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவரின் முன்பாக பிரேஸ்லட் கீழே கிடைப்பதைக் காணச்செய்தார். அவனுக்கு முன்பாக கீழே கிடந்த அந்த தங்க நகையை அவன் காண முடியாதபடி செய்தார். கர்த்தரின் சகாயம் செய்யும் செயல் நமது ஞானத்திற்கு அறிவுக்கும் எட்டாததாய் இருக்கிறது. அவரது அன்பின் ஒவ்வொரு செயலினாலும் நாம் கலங்காது வாழ வழி செய்வார். அன்று யோசபாத்துக்கு விரோதமாக வந்த மூன்று விதமான மக்களையும் கர்த்தர் ஒருவருக்கொருவர் விரோதமாக எழும்பச்செய்து யூதா ராஜாவிற்குச் சகாயம் செய்தார். வெற்றியடைந்தனர்.

இன்று கர்த்தரிடம் சகாயம் பெற முழுமனதோடும், முழு பெலத்தோடும், முழு ஆத்துமாவோடும் தேடுவோமாக. அவரின் வல்ல பெரும் கரத்தினால் ஆசீர்வதிக்கப்படுவோம்.

3. இஸ்ரவேலுக்கு சகாயம் செய்கிறார்.

"இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." ஓசியா 13:9.

என்னிடத்தில் சகாயம் உண்டு என்ற கர்த்தர் இஸ்ரவேலரை நேசித்தார். தங்களுக்கு எல்லாம் நிறைவாகியது, திருப்தி நிறைந்த வாழ்வு வந்தது என்றவுடன் அவர்களின் இருதயம் மேட்டிமையாயிற்று. அதனால் என்னை மறந்தார்கள் என்று ஓசியா 13:6 ல் பார்க்கமுடிகிறது. மனிதரின் உள்ளம் என்றுமே எளிதாய் மேட்டிமையாகிவிடுகிறது. கர்த்தர் செய்த நன்மைகளுக்காக அவரிடம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களுக்காக துதி ஸ்தோத்திரங்களை செலுத்தாதபடி, உணர்வடையாதபடி இருளடைந்த இருதயத்துடன் வாழ்கிறார்கள். "அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்ய தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்" நெகேமியா 9:28 ல் பார்க்கிறோம்.

இன்று ஒருவேளை இந்த இஸ்ரவேலரைப்போல வழித்தப்பி பின்மாற்றம் அடைந்து வேதனையுடன் வாழும் சகோதர, சகோதரியே உன்னை நேசிக்கிற கர்த்தர் உனக்குச் சகாயம் செய்ய விரும்புகிறார். "இஸ்ரவேலே நீ உனக்கு கேடுண்டாக்கிக்கொண்டாய், ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு" என்ற கர்த்தர் ஜீவிக்கிறார். யார் இந்த இஸ்ரவேல் யாக்கோபாக சிருஷ்டிக்கப்பட்டவன். கர்த்தர் இஸ்ரவேலாக உருவாக்கினார் என்பதை அறிவோம். யாக்கோபு என்றால் அவனது தவறான பண்புகளும் செய்கைகளும் தான் நம் கண்களுக்கு முன்பாக வருகிறது. சகோதர பாசம், அன்பு இல்லாதவன். பசியாயிருந்த சகோதரனுக்குத் தான் வைத்திருந்த ஆகாரத்தை இலவசமாய்க் கொடுக்க மனதில்லாதவன். கண் தெரியாத தகப்பனை நான் தான் ஏசா என்று பொய்யைக் கூறி ஏமாற்றியவன். ஆனால் தன் வாழ்வில் உண்டான நெருக்கத்தில் பயந்து கலங்கினவன். கர்த்தரின் தூதனோடே போராடினவன், என்னை ஆசீர்வதித்தாலொழிய விட மாட்டேன் என்றவனின் வாழ்வை மாற்றி, உள்ளத்தை மாற்றி, அவன் பெயரையும் மாற்றி இஸ்ரவேல் என்று அழைத்தார். இந்த இஸ்ரவேல் கர்த்தருக்குப் பிரியமானவனான். அவனை ஆசீர்வதிப்பதே எனக்குப் பிரியம் என்று கூறியவர். நீ என்னுடையவன் என்று சொன்னவர், பின்மாற்றம் அடைந்து வாழ்ந்தவனுக்கு ஆலோசனையாக, ஆறுதலாக, ஆசீர்வாதமாக 'ஆனால் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு' என்றார். இன்று நாம் உண்மையான இஸ்ரவேலாக மாற்றப்பட நம்மை கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்தால் நாமும் சகாயம் பெருவோம்.

4) திக்கற்றப்பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே

"அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே." சங்கீதம் 10:14

கர்த்தர் திக்கற்ற பிள்ளைகளின் மீது கரிசனையுடையவர். அவர்களுக்கு ஒருவரும் இல்லை, ஒன்றும் இல்லை என்று அவர்களுக்கு அநீதி செய்கிறவர்களைக் குற்றப்படுத்துகிற தேவன் நம் கர்த்தர். திக்கற்ற பிள்ளைகளின் நியாயத்திற்காக உன் வாயைத் திற என்று நீதி. 31:8ல் பார்க்கிறோம். திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல், அவர்களின் ஜெபத்தை அங்கீகரிப்பார். திக்கற்றவனுக்கு நீதி செய்யுங்கள் என சங். 82:3ல் பார்க்கிறோம். அன்பு நிறைந்த தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாயிருந்து ஆதரிக்கிறார். திக்கற்றவர்களாய்ப் போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன் என்ற கர்த்தர் மாறாதவர்.

'நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்' என்று இயேசு கிறிஸ்து தமது சீஷர்களைத் தேற்றினார். தன்னுடைய மரணநேரம் வந்து விட்டது என்று அறிந்தவர். 'திக்கற்றவர்களாக விடேன்' என்று சீஷரின் உள்ளங்களைத் தேற்றினார்.

அத்துடன் பக்தி நிறைந்தவன் எவ்விதமாய் இருக்க வேண்டும் என்று 'திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.' யாக். 1:27ல் பார்க்கிறோம். இன்று நாம் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பது தேவசித்தம். அத்துடன் பிள்ளைகளின் குறைவுகளில் உதவி செய்யவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். '...உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும் விதவையையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்' என்று உபா. 14:29ல் பார்க்கிறோம்.

இவ்விதமாய் திக்கற்று கலங்கி கண்ணீருடன் வாழும் பிள்ளைகளைக் குறித்து கவலைப்படும் நம் தேவன், அவர்களுக்கு அனுதினமும் சகாயம் செய்து ஆதரித்து ஆசீர்வதிப்பார். இன்று திக்கற்ற பிள்ளைகளின் உடைமைகளைத் தந்திரமாய் சூறையாடுகிற மக்கள் பெருகியிருக்கும் காலத்தில், கர்த்தரின் செயலை அறியாது சாபத்தையும் அழிவையும் தேடித் கொள்கிறார்கள்.

ஆகாப் என்ற ராஜா, தன் அரமனைக்கு அருகில் இருந்த நாபோத்தின் திராட்சத் தோட்டத்தைத் தனக்கு எடுத்துக் கொள்ள விரும்பினான். நாபோத்திடம் அதைத்தர வேண்டும் என்று கேட்டான். என் பிதாக்கள் சுதந்தரமாகக் கொடுத்த இந்த திராட்சத் தோட்டத்தைக் கொடேன் என்று கூறியதால், ஆகாப் ராஜா வருத்தப்பட்டான். அவன் மனைவியாகிய யேசபேல் பொய் சாட்சிகளை ஏற்படுத்தி, நாபோத்தைக் கல்லெறிந்து கொன்றாள். ஆகாப் தனக்கென்று திராட்சத் தோட்டத்தை எடுத்து கொள்ள சென்ற இடத்தில், எலியா தீர்க்கதரிசி அவனைச் சந்தித்து, 'நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்தில் உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்' என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொன்னதை நாம் அறிவோம். அவ்வாறே நடைபெற்றது.

திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயம் செய்யும் கர்த்தர் இன்று அவர்களுக்காக யுத்தம் பண்ணுவார்.

அன்பின் தேவப்பிள்ளையே, கர்த்தர் அருளும் சகாயம் உங்கள் வாழ்க்கையில் எதுவும் அணுகாது உன்னைக் காக்கும். அத்துடன் சகாயம் மாற்றத்தை உண்டாக்கும். சங். 30:11ன் படி புலம்பல் ஆனந்தக் களிப்பாய் மாறும். அத்துடன் சங். 28:7 ல் உள்ளது போல் மனமகிழ்ச்சி உண்டாகும். அத்துடன் சங். 46:5ன்படி அசையாத நிலை உருவாகிவிடும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ.C. எபினேசர் பால்.