செய்தி

"...என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்..."

1 சாமுவேல் 2:30

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

இன்று மனிதன், மக்கள் புகழ வேண்டும், மக்களால் மிகுதியான கனத்தைப் பெற வேண்டும் என்று தங்களின் போலியான, மாயையான தியாகத் தன்மையைச் சொல்லிக் கொண்டும், தந்திரமாய் செய்து கொண்டும் இருப்பதைப் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாதிருந்தும் தாங்கள்  எல்லாம் நிறைந்தவர்கள் போல் தங்களைச் சமுதாயத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதை ஒவ்வொரு நாளும் நாம் பார்க்க முடிகிறது. தாங்கள் மிக நல்லவர்கள் போல் தங்களின் திட்டங்களை செய்கைகளை அறிவித்து அலைந்து திரிகிற மக்களைப் பார்க்கிறோம். 'உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது' (மத். 6:3) என்ற வார்த்தைக்கு இடமில்லாத செய்கைகளை இன்று பார்க்க முடிகிறது. நான் தான், என்னால் என்ற சொல்லின் மேன்மையை நாடுகிற மக்கள் திருச்சபையிலும், ஆலயங்களிலும், சமுதாயத்திலும் இன்று பெருகி அநேகரை ஏமாற்றி வருகிறதைப் பார்க்கிறோம். அன்றியும் நம்முடைய ஜெபம் மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம். மேலும் நாம் எதற்கு ஜெபிக்கிறோம் என்று நன்று கர்த்தரால் நடத்தப்பட்டால் மெய்யான ஆசீர்வாதமும், மேன்மையுமாய் இருக்கும். 'என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து,அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.' என்று சொன்னவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். இன்று நம்முடைய செயல்கள், வார்த்தைகள் கர்த்தருக்கு கனத்தையும், புகழையும் கொண்டு வருகிறதா? அப்படியில்லை என்றால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படும்.

நாம் கர்த்தரின் வேதத்தின்படி, யாரைக் கனம்பண்ண வேண்டியதோ அவர்களைக் கனம் பண்ணுகிறவர்களாய் இருக்க வேண்டும். கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள் என்ற வேத வார்த்தையை மறவாதிருக்க வேண்டும். 'எல்லாரையும் கனம் பண்ணுங்கள்...ராஜாவைக் கனம்பண்ணுங்கள்' என்ற 1 பேதுரு 2:17ன் படி நாம் கர்த்தரின் வாரத்தையை கைக் கொண்டு செயல்பட்டால், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

I. நாம் எப்படி கர்த்தரைக் கனம்பண்ண முடியும்?

1. முதற்பலனினால் கனம்பண்ண வேண்டும்.

"உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு." நீதிமொழிகள் 3:9

இன்று கர்த்தரைக் கனம்பண்ணுகிற காரியத்தில் ஒன்று கர்த்தருக்குக் கொடுப்பதாகும். அநேக நேரத்தில் என் பொருளாலும் முதற்பலனாலும் கர்த்தரை கனம்பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்பவர்கள், அது சரியாய்ச் செலவிடப்படவில்லை, அதை தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று குறை கூறுகிறார்கள். வேத வார்த்தையின்படி நாம் கொடுப்பதால் கர்த்தரைக் கனம் பண்ணுகிறோம். அதற்குரிய மக்கள் அதை எப்படிச் செலவிடுகிறார்கள் என்பதை நாம் விசாரிக்க, தெரிந்து துக்கப்பட வேண்டியதில்லை. தவறாய் செலவிட்டால் சாபமும், நலமாய்ச் செலவிட்டால் ஆசீர்வாதமும் உண்டாகும்.

ஏலியின் மக்கள் அருவருப்பான பாவங்களை தேவாலயத்திற்கு வந்த மக்களுடன் செய்தார்கள். பலியிட வந்தவர்களிடம், ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சியைக் கொடு, அவித்ததை உன் கையில் வாங்குகிறதில்லை என்று சொல்லி பலியிட வந்தவர்களின் உள்ளத்தில் கசப்பை உண்டாக்கினார்கள். இன்று செய்ய வேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்து விடட்டும், பிற்பாடு உன் மன விருப்பத்தின்படி எடுத்துக் கொள் என்று சொன்னாலும், அவன் அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக் கொள்ளுவேன் என்று கூறினதைக் கர்த்தர் கேட்டார், கண்டார். அவர்களின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது. மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள். இதினால் கர்த்தர் தமது தீர்க்கதரிசியை அனுப்பி தான் அவர்களுக்கு செய்யயிருப்பதை தெரிவித்தார். தெய்வ பயம் இல்லாதபடி துணிகரமான பாவங்களைச் செய்து கர்த்தரின் நாமத்தை கனவீனப்படுத்தினார்கள். சாபகரமான காரியங்களை அவர்களுக்குச் சொல்லியும் மாற்றமில்லாத நிலையினால், கர்த்தர் சொன்னபடியே அவர்களுடைய சந்ததி சாபத்தைப் பெற்றது.

அருமையான சகோதரனே, சகோதரியே, உங்கள் பொருளாலும், முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். அவைகளைப் பயன்படுத்துகிறவர்களின் செயலைக் கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார். அதின் மேன்மைகள் அல்லது  அதின் சாபங்கள் அவர்களுக்குரியது . ஏலியின் பிள்ளைகள் கர்த்தரைக் கனம் பண்ணாதபடியினால், சாபத்தை, அழிவைத் தேடிக் கொண்டார்கள்.

இன்று நம் பொருளாலும், முதற்பலனாலும் கர்த்தரை கனம்பண்ணுவோம்.

2.தரித்திரனுக்குத் தயை செய்கிறவன் கர்த்தரைக் கனம்பண்ணுகிறான்

"தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்." நீதிமொழிகள் 14:31   

இன்று தேவனால் உண்டாக்கப்பட்ட மனிதர்களின் கஷ்டங்களைக் கண்டும், தெரிந்திருந்தும் கரிசனையற்றவர்களாய் நம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம்மை உண்டாக்கின கர்த்தர் இன்றும் ஜீவிக்கிறார். விசித்திர விரோதமாய் தாயின் வயிற்றில் உருவாக்கின கர்த்தர் நம்மை நேசித்து நலமான வாழ்வைத் தந்திருக்கிறார். அதில் கர்த்தருக்காக நான் என்னத்தைச் செய்திருக்கிறேன் என ஆராய்ந்தால், நாம் எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இரக்கமும் தயையையும் செய்கிறவர்களாய் மாறிவிடுவோம். 'ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.' (நீதி. 19:17). இன்று நம் ஈகை செய்கைகளைப் பெரிதாய் விளம்பரப்படுத்தி, மேன்மையை மக்களிடம் பெற காரியங்களைச் செய்கிறோம். கொடுங்கள், கொடுக்கப்படும் என்ற அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி, ஏழை, எளியவர்களுக்குத் தயை செய்யும்போது ஆசீர்வதிப்பார்.

ஒருமுறை ஒரு விதவையான சகோதரி தன் மகள் ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்க வேண்டும் என்று ஜெபிக்கச் சொன்னார்கள். ஜெபித்தோம். ஜெபத்தைக் கேட்கிற தேவன், அவர்களின் கண்ணீரைக் கண்டார். அதைத் துடைக்கும் வண்ணமாய் அவர்கள் ஊர் அருகேயே உள்ள பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைத்தது. அந்தச் செய்தியைத் திரும்ப என்னிடம் வந்து கூறினார்கள். மிகுந்த சந்தோஷம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட முயற்சித்தேன். ஆனால் அந்த சகோதரியோ இன்னும் ஓர் ஜெபக்குறிப்பைக் கொடுத்தார்கள். நான்கு தினத்திற்கு முன்னால் ரூ.400/- பீஸ் செலுத்த வேண்டும், ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். என் உள்ளத்தில் அன்று 'ஜெபதொனி' பத்திரிக்கையை தபால் மூலம் அனுப்புவதற்கு ரூ.4000/- தேவை, எல்லாரும் தேவையில் தான் வாழுகிறோம் என்று எண்ணினேன். ஜெபத்தை ஏறெடுத்த போது, உன்னிடல் உள்ள ரூ.400/- ஐ அந்தச் சகோதரிக்கு கொடு என்று கர்த்தர் கூறினார். நானோ எனக்கு இன்னும் தேவை இருக்கிறதே என்று உள்ளத்தில் எண்ணி, பணத்தை அந்தச் சகோதரிக்கு கொடுக்கத் தாமதித்தேன். மீண்டும் உள்ளத்தில் கர்த்தர் அந்தப் பணத்தைக் கொடுக்க உணர்த்தினபோது, கர்த்தாவே, இந்த பணம், இந்த ஜெபதொனி பத்திரிகை இவையெல்லாம் உம்முடையது, இந்தப் பத்திரிக்கை அனுப்பப்பட போதுமான பணம் நீரே தருகிறவர். நான் யார் தடுப்பதற்கு என்று, அந்தப் பணத்தை அந்த விதவைச் சகோதரிக்குக் கொடுத்து விட்டேன். அந்த சகோதரியோ எதிர்பாராத விதத்தில் கிடைத்த பணத்தால் மிகுந்த சந்தோஷத்துடன் ஸ்தோத்திரம் கூறிப் புறப்பட்டார்கள். இதற்குள் ஸ்டாம்ப் வாங்க வேண்டிய அலுவலக சகோதரர் என்னிடம் வந்து பணம் கேட்டபோது, இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டேன். ரூ.3600/- தேவையானது இப்பொழுது ரூ.4000/- ஆக உயர்ந்து மாறின நிலை. அச்சமயம் ஒரு சகோதரர், என்னுடன் ஊழியத்தில் உள்ளவர். என் மனைவி நேற்றே காணிக்கைக் கொடுத்தார்கள். கொடுக்க மறந்து விட்டேன் என்றார். அவர்களின் மனைவி டாக்டராக இருந்தார்கள். தன் ஆஸ்பத்திரிக்கு இன்று பிள்ளைபேற்றுக்கு வருகிறவரின் பணத்தைக் காணிக்கையாக ஜெபதொனி ஊழியத்திற்குத் தரவேண்டும் என்று எண்ணியிருந்த படியால் அதைக் கொடுத்தார்கள் என்று அந்த சகோதரர் தன் மணிபர்சை திறந்தார்கள். சரி brother, சீக்கிரமாய் அந்த ரூ.4000/- ஐ கொடுங்கள் என்றேன். அவர் உடனே அழுது விட்டார். இதைக் கூட கர்த்தர் அறிந்து அறிவிப்பாரா என்றார். இல்லை brother, என்று என் தேவை ரூ.4000/- ஆகும். அதைத் தான் சொன்னேன் என்றேன். அவர் சரியாக தன் மனைவி கொடுத்த அந்த ரூ.4000/- ஐ காணிக்கையாக கொடுத்தார். அந்நாளில் ஜெபத்தொனி பத்திரிக்கை அனுப்ப அது போதுமானதாய் இருந்தது. அன்று இரவு என் தனி ஜெபவேளையில் யார் என்றே தெரியாத விதவைக்குக் கொடுத்த பீஸ் தொகையை பத்து மடங்காகத் திருப்பிக் கொடுத்தாரே கர்த்தர் என்று எண்ணினேன். இதைப் பெற எனக்கு என்ன தகுதி என்று கர்த்தரின் அன்பை, கிருபையை உணர்ந்து கண்ணீருடன் துதியையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுத்தேன்.

 

கர்த்தரின் வார்த்தையின்படி, அவரால் உண்டாக்கப் பட்டவர்களின் தரித்திரத்தில் உதவிச் செய்யும்போது, அவர் நாமத்தை நாம் கனம் பண்ணுகிறோம். அதினால் நாமும் நன்மையையும், ஆசீர்வாதத்தையும் அடைவோம்.

3. பலியினால் கர்த்தரை கனம்பண்ண வேண்டும்

"உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னை கனம்பண்ணவுமில்லை..." ஏசாயா 43:23

இன்று பலி என்றவுடன் நாம் வேறு விதமான சிந்தையடைகிறோம். இயேசு கிறிஸ்து தம்மையே பழுதற்ற பலியாக சிலுவையிலே ஒப்புக் கொடுத்தபடியால், வேறு எந்தவிதமான பலியும் தேவனுக்குத் தேவையில்லை. ஆனால் நம்முடைய உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை நாம் அவருக்குச் செலுத்த வேண்டும். எபி. 13:15ல் 'ஆகையால் அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்' என பார்க்கிறோம். இது தேவனை கனப்படுத்துகிற செயலாகும். உலகத்தார் ஒருவர் நமக்கு ஒரு உதவிச் செய்வார் என்றால் நன்றி என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறுகிறோம் அல்லவா. அதுபோல கர்த்தர் நமக்கென்று செய்து முடித்துள்ள ஒவ்வொரு காரியத்தையும் நாம் நினைத்து நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இந்த நன்றி நிறைந்த உள்ளத்துடன் நம் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை கிறிஸ்துவுக்கு செலுத்தும்போது, அது அவருக்குப் பிரியமானதாகும். இதனை சங்கீதம் 69:30,31ல் பார்க்கிறோம். மேலும் ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபம், தேவ சமாதானத்தை நம் இருதயங்களில் பெருகச் செய்து விடும்.

நாம் ஸ்தோத்திரபலியிட்டு ஆபத்துக் காலத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, நம் பிரச்சனையில் நமக்கு விடுதலை உண்டாகும். நாம் தேவனை மகிமைப்படுத்துவோம். நம்முடைய தேவனை புகழ்கிற இந்த மேன்மையானச் செயல் நமக்கு பல ஆசீர்வாதங்களை உண்டாக்கும்.

நான் வியாதிப்பட்டு C.M.C. Vellore ஆஸ்பத்திரியில் 22 நாட்கள் இருந்தேன். அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியபோது, இரவு நேர தூக்கத்திற்கு தூக்க மாத்திரை கொடுத்தார்கள். ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு மாத்திரை நீங்கள் சாப்பிட வேண்டும் என்று தந்தார்கள். என் உள்ளத்தில் இது தேவையில்லை, கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார் என்ற சங். 127:3ன்படி நமக்கு மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும் என்று உணர்ந்து, ஸ்தோத்திரம் கூறிக் கொண்டேயிருப்பேன். நல்ல நித்திரையைப் பெற்று அனுபவித்தேன். ஸ்தோத்திர பலி தேவனை மகிமைப்படுத்துகிற ஒரு செயலாகும்.

இன்னும் கர்த்தருக்கு ஏற்ற ஒரு காரியம் நம் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதாகும். எதற்குக் கீழ்ப்படியும்படியாக உங்களை அடிமைகளாக ஒப்புக் கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்படிகிற அடிமைகளாயிருக்கிறோம். கர்த்தருடைய ஆலயமாக நம் சரீரத்தை கர்த்தருக்கு ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்போது, நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து மகிமைப்படுவார். நாம் அவரைக் கனப்படுத்துகிற செயலாக அது அமைகிறது.

கனம் பண்ணுகிறவர்களை கனம்பண்ணுவேன் என்ற வாக்கின்படி கர்த்தர் யாரை கனம்பண்ணுவார் என்று அறிந்து தெரிந்து செயல்பட்டால் நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாகவும், மேன்மையாகவும், மிகுந்த சந்தோஷத்துடன் வாழ வழியாகிவிடும். இவ்வுலகில் அற்பமாக எண்ணப்பட்டு குறைவோடு, வேதனையோடு வாழும் சகோதரனே, சகோதரியே, நம்மை உண்டாக்கினவர், சர்வ வல்லவர். சிங்காசனத்தில் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் மகிமை உண்டாவதாக என ஆர்ப்பரித்த தூதர்கள், தேவனைத் தொழுது கொண்டு, 'எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக' என்று மேன்மைப்படுத்தும் காரியத்தை வெளி. 7:12ல் பார்க்கிறோம். கனத்துக்குரியவர் தம்முடையவர்களை கனப்படுத்துகிறார்.

II.அவர் யாரை கனப்படுத்துவார்?

1. தமக்கு அருமையானவர்களைக் கனப்படுத்துவார்.

"நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்குஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்." ஏசாயா 43:4

இன்று யார் கர்த்தாதி கர்த்தருக்கு முன்பாக அருமையானவர்கள்? 2 பேதுரு 1:1ல் அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்கள் என்று சொல்லியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த அருமையான விசுவாசத்தைப் பெற்றும், செயல்படுத்தியும், தரித்தும் நாம் வாழும்போது, அருமையானவர்களாய் மாறிவிடுகிறோம். ' விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது,' விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாது காரியம். 'தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும், விசுவாசிக்க வேண்டும்.'

இன்று நம்முடைய நம்பிக்கையின் நிச்சயம், கர்த்தராகிய இயேசுவின் மேல் இருக்கும் என்றால், அதிசயமான காரியங்களை நாம் பெற்று அனுபவிக்க முடியும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய விசுவாசத்தைக் காண்கிறார். அதன் அளவைக் கண்டு ஏற்ற அற்புதங்களைச் செய்கிறார். அவர் நமக்குள் விசுவாசத்தை துவக்குகிறவராயிருக்கிறார். இந்த விசுவாசம் நமக்குள் பெருக பெருக அவர் நம்மை கனத்துக்குரியவர்களாய் மாற்றுகிறார்.

ஒருமுறை ஒரு கடைத் தெருவில் தீ பற்றிவிட்டது. ஒவ்வொரு கடையாக எரிந்து சாம்பலாகிக் கொண்டே இருந்தது. இவர்களின் கடை தான் அடுத்து தீப்பிடித்து எரிய வேண்டும். ஆனால் எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் என்று கூறினதுடன் 'கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்' என்ற வாக்கியத்தை முழுமையாக நம்பினார். அதுவரை பாதகமான வீசிய காற்று எதிர் திசையாக மாறியதால், எந்த தீ சேதமும் அடையாது காக்கப்பட்டார்.

மேலும் நான் தேவனுக்கு முன்பாக அருமையானவர்களாக மாற தம்முடைய வாக்குத்தத்தங்களின் மூலமாக கிரியைச் செய்கிறார். கர்த்தருடைய மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை 2 பேதுரு 1:4ல் பார்க்க முடிகிறது. இந்த உண்மையான வாக்குத்தத்தங்களை நாம் உறுதியாக பற்றி வாழும்போது, கர்த்தரின் பார்வையிலே நாம் அருமையானவர்களாக மாறி விடுகிறோம்.

அருமையான விசுவாசத்தினாலும், வாக்குத்தத்தங்களினாலும் கர்த்தருக்கு முன்பாக நாம் அருமையானவர்களாகி, கனத்தைச் சுதந்தரித்துக் கொள்கிறோம்.

2. வாஞ்சையாயிருக்கிறவர்களை கனப்படுத்துவார்

"அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்." சங்கீதம் 91:14,15

இன்று யார் யார் கர்த்தரிடம் வாஞ்சையாயிருக்கிறார்களோ, கர்த்தர் அவர்களை விடுதலையாக்குகிறார். விடுதலையுடன் கர்த்தரின் நாமத்தை நாம் அறிந்திருக்கும்போது உன்னதமான பாதுகாவல் தந்து ஆசீர்வதிக்கிறார். இந்த நிலையில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர்கள் ஜெபத்தைக் கேட்டு, மறுஉத்தரவு அருளி அற்புதம் செய்கிறார். அத்துடன் அவனோடிருந்து, தப்புவித்து கனப்படுத்துவேன் என்று கூறியும் இருக்கிறார். இந்த அன்பின் தேவன் தம்முடையவர்களை இவ்விதமாய் கனப்படுத்தி ஆசீர்வதிக்கிறார். அத்துடன் நீடித்த நாட்களினால் திருப்தியாக்குகிறார்.

ஒருமுறை ஒரு tax அதிகாரியை இவர் லஞ்சம் கேட்டார் என்று பொய்யாய் குற்றம் சாட்டினார்கள். குற்றம் சாட்டினவர்கள் இரண்டு லாரியில் அரிசிமூட்டைகளை பக்கத்து மாநிலத்திற்கு எந்த அனுமதியும் இல்லாது கடத்திச் செல்ல முயற்சித்தவர்கள். இவர்கள் சொன்ன பிராதினாலே அவரும் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டார். அந்தச் சகோதரர் கர்த்தர் எனக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார் என்று பல இடங்களில் ஊழியங்களைச் செய்தார்கள். விசாரனையின் போது அனுமதி இல்லாது சென்ற லாரிகள் என்று கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தன்னை கர்த்தருக்கு அர்ப்பணித்த அவரோ மீண்டும் பணியில் சேரவும் ஒரு உயர்வடையவும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

அன்பின் சகோதரனே, சகோதரியே, உன்னை விடுவிக்கும் கர்த்தர் ஜீவிக்கிறார். அவர் நாமத்தை அறிந்திருக்கிற உங்களுக்கு உன்னத பாதுகாவலைத் தந்து, கனப்படுத்தி ஆசீர்வதிப்பார்.

3. தாழ்மையுள்ளவர்களைக் கர்த்தர் கனப்படுத்துவார்

"...மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்." நீதிமொழிகள் 29:23

இன்று மனத் தாழ்மையுள்ளவர்களாய் ஜீவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அநேகர் தங்கள் படிப்பு, மிகுதியான வருமானம், செல்வம், சிறப்பினால் பெருமையோடே பேசுகிறதைப் பார்க்கிறோம். பெருமைக்காக வாகனங்களை வாங்குகிற மக்கள் ஏராளம். சிலர் மற்றவர் புகழ வேண்டும் என்று மித மிஞ்சி தங்க நகைகளையும் உடைகளையும், உடுத்துகிறார்கள். ஒருமுறை ஒரு ஊழியத்தின்போது, போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்பி கேட்டார்கள். நானும் சரி என்று கூறி அந்த போட்டோவிற்காக நாற்காலியில் அமர்ந்திருந்தேன். கனவனும் மனைவியின் இந்தப்பக்கம் ஒருவரும், அந்தப்பக்கம் ஒருவருமாக அமர்ந்தனர். சில தினங்கள் கழித்து அந்த வீட்டார் நான் அவர்களுடன் எடுத்த போட்டோவை அனுப்பினார்கள். அதைப் பார்த்தபோது ஆச்சரியமடைந்தேன். தங்களின் எட்டு விரல்களிலும் மாட்டியிருந்த மோதிரத்தைக் காண்பிக்கும் வண்ணமாக கையை வைத்திருந்தார்கள். பெருமையுள்ளவர்ளுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்பதை அறியாது இவ்விதமான காரியங்களைச் செய்கிறார்கள். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

ஒருஆண்டில் தமிழ்நாடு அரசாங்கம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், சிறந்த பயிற்சி தரவும் sports hostel  - ஐ ஆரம்பித்தார்கள். தமிழ்நாட்டில் படிக்கும் எல்லா மாணவர்களிலும் நன்கு விளையாடும் மாணவர்களை  தெரிந்தெடுத்து, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமையகம் இருக்கும் ஊரில், ஒவ்வொரு விளையாட்டிற்கு ஏற்ற பயிற்சி கொடுக்க ஒழுங்கு செய்தார்கள். திருச்சியில் கால்பந்தாட்ட வீரர்களை ஒன்றாக சேர்த்து பயிற்சி கொடுத்தார்கள். இந்த மாணவர்களுக்கு 8ம் வகுப்பில் இருந்தே பயிற்சி கொடுத்து கொண்டேயிருந்தார்கள். ஆனால் நான் பயிற்சி கொடுத்த பள்ளி தொடர்ந்து வெற்றி பெற்றே வந்தார்கள். 11ம், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த ஆண்டு இறுதிப் போட்டியானது எங்கள் பள்ளிக்கும், கால் பந்தாட்டத்தில் சிறந்து விளையாடுபவர்களை தெரிந்து எடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்கிய அணிக்கும் இடையே இருந்தது. முந்தின ஆண்டுகளில் வெற்றிப் பெற்ற எனது பள்ளியை 6 கோல்களுக்கு மேலாக அடிக்க விடாதீர்கள் என என் காதுகள் கேட்ட அந்த பயிற்சியாளர் கூறி, அந்த மாணவர்களை விளையாட்டு திடலுக்கு அனுப்பி வைத்தார். எனது பள்ளி மாணவர்களுக்கு சில அறிவுரை கூறி, என்றும் எப்பொழுதும் செய்யும் ஒரு ஜெபத்தைக் கூறி விளையாடும் மாணவர்களை, விளையாட்டு மைதானத்திற்கு அனுப்பி வைத்தேன். அந்த ஆண்டு தான் எனது பள்ளி மாணவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்த இறுதி ஆண்டு. ஊழியத்திற்காக வேலையை ராஜினாமா செய்த ஆண்டு ஆகும். ஆனால் அந்த போட்டியில் எனது பள்ளி மாணவர்களோ, தெரிந்து நன்கு பயிற்சி, ஆகாரம் கொடுக்கப்பட்ட அணிக்கு எதிராக 2 கோல் அடித்து வெற்றி பெற்றனர். பெருமையாய் காதில் விழ பேசின பயிற்ச்சியாளரின் பெருமைக்கு தேவன் எதிர்த்து நின்றார். "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." யாக்கோபு 4:10. ன் வார்த்தை நிறைவேறும்.

"...மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்." பிலிப்பியர் 2:3ன் படி நாம் வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். தாழ்மையின் கோலத்தில் வந்த இயேசு கிறிஸ்து நமக்குள் மனத்தாழ்மை இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். "...இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்." மீகா 6:8. ல் பார்க்கிறோம். "...மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்." செப்பனியா 2:3 ல் சொல்லப்பட்டதை மனதில் வைத்து தேடவேண்டும். "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." லூக்கா 1:52. என்று மரியாள் பாடினதைப் பார்க்கிறோம்.

அன்பு சகோதரனே, மனத்தாழ்மையாய் நீங்கள் வாழும்போது கர்த்தர் உங்களை உயர்த்துவார். அத்துடன் உங்களை கனப்படுத்துவார்.

4). நம்மை சுத்திகரித்துக்கொள்ளும்போது கனமடைவோம்

"ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டது மான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்." 2தீமோத்தேயு 2:21.

இந்த உலக வாழ்க்கையில் சிலர் கனவீனத்திற்கும் சிலர் கனத்திற்கும் உரியவர்களாய் வாழ்கிறார்கள். ஏன் இந்த கனவீனம் என்றால் பல பாவ பழக்கவழக்கத்தினால் உண்டாகிறது. நான் வசித்தபகுதியில் ஒரு நீதிபதியிருந்தார். தெருவில் அந்நாட்களில் அவர் ஒருவர்தான் கார் வைத்திருந்தார். நன்றாய் மேன்மையாய் வாழ்ந்து கொண்டு இருந்தவர் திடீர் என குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவர் தெருவிலேயே இரவு நேரத்தில் குடித்து விழுந்து கிடப்பார். ஜனங்கள் அந்த குடும்பத்தாருக்காகப் பரிதாபப்பட்டார்கள். அவருக்கு இருந்த மேன்மை, கனம் இல்லாமற்போயிற்று.

ஒருவன் கனத்தைப் பெற விரும்பினால் தன்னை முற்றிலும் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். வெளியரங்கமாய் நல் செயலுடன், நல் வார்த்தையுடன் காணப்படுவார்கள். ஆனால் அவர்களின் உள்ளமோ அருவருப்பான சிந்தையினால் நிறைந்திருப்பார்கள். இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த காலத்தில் இவ்விதமான மக்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்று கூறினார்.

இன்று நம் வாழ்வு எப்படியிருக்கிறது? சுத்தமாக்கப்பட்ட பாத்திரமாய் இருக்கிறோமோ அல்லது இயேசு கிறிஸ்து சொன்னதுபோல, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா? விடமுடியாத தவறான பாவம் உன்னை ஆண்டு கொண்டிருக்கிறா? மறைவான பாவங்களுக்கு அடிமையாயிருக்கிறாயா? பாவமான காரியங்களைக் காண உன் கண் அதிகமாய்த் துடித்துக்கொண்டு இருக்கிறதா? நீ சுத்தமாக்கப்பட்ட பாத்திரமாய் மாறுவாயானால் கனத்துக்குரிய பாத்திரமாய் மாறிவிடுவாய். இயேசு கிறிஸ்து வேதபாரகரையும், பரிசேயரையும் அதிகமாக கண்டித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினார். மாயக்காரர் என்று அவர்களைக் கூறினார். போஜனப்பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது என்று கூறினதை மத். 23:25ல் பார்க்கிறோம். 

ஒருவன் இவைகளை விட்டு தன்னை சுத்திகரித்துக் கொண்டால் என்று 2 தீமோ. 2:21ல் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து நம்மை சுத்திகரிப்பதற்காக தம்முடைய இரத்தத்தை சிலுவையிலே சிந்தினார். அவர் சிந்திய இரத்தம் நம் பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரிக்கும். இன்று கல்வாரியில் நமக்காக சிந்திய இரத்தத்தினால் கழுவப்பட நம்மை ஒப்புக் கொடுத்தால், நம் பாவங்களை மன்னித்து தூய வாழ்வைத் தருவார்.

யோவான் 17:17 ல் சத்திய வசனத்தினால் நம் உள்ளத்தை எண்ணத்தை, சிந்தையை பரிசுத்தப்படுத்தி நம் தேவனுக்குப் பிரியமான, பிரயோஜனமான பாத்திரமாக மாற்ற விரும்புகிறார். மேலும் இயேசு கிறிஸ்து, பிதாவை வேண்டி நமக்கு பரிசுத்த ஆவியைப் பெற்று தந்திருக்கிறார். இந்தப் பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தமாக்குகிறார் என 1 பேதுரு 1:2ல் பார்க்கிறோம்.

இவ்வாறு பரிசுத்தமாகும்போது, தேவனுக்குப் பிரயோஜனமான பாத்திரமாக மாறுவதுடன், கனத்துக்குரிய பாத்திரமாகிறோம்.

5) ஊழியம் செய்யும்போது கனமடைவோம்

"ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்." யோவான் 12:26

நாம் ஊழியம் செய்வோம் என்றால் பிதா கனப்படுத்துவார் என்று பார்க்க முடிகிறது. இயேசு கிறிஸ்துவுக்காக நம்மால் இயன்ற காரியத்தைச் செய்தால் அவரே நம் தலையை உயர்த்துகிறார், கனப்படுத்துகிறார்.

ஒரு சகோதரர் ஆசிரியர் பயிற்சி பெற்றவர், ஆலயத்தில் செக்ஸ்டனாக பணியாற்றினார். ஆசிரியராக பணியாற்ற appointment order கொடுக்கப்பட்டது. ஆனால் கர்த்தருக்கு ஊழியம் செய்ய விரும்புகிறேன் என்று கூறி அந்த வேளையில் அவர் சேர வில்லை. கர்த்தர் சொன்னபடியே இன்று கனப்படுத்தியிருக்கிறார். அவர் வேதாகமக் கல்லூரி ஊழியமும், மிஷனரிகள் அனுப்பி ஊழியங்களைச் செய்வதையும் பார்த்த போது மெய்யாகவே கர்த்தர் தம்முடைய ஊழியங்களைச் செய்கிறவர்களைக் கனப்படுத்துகிறார் என்று தெரிகிறது. அக்கினி ஜீவாலைகளாக மாற்றுவதுதான் தம் கரத்தில் அவர்களை எடுத்து பயன்படுத்துகிறார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, கர்த்தருக்காக ஊழியத்தை நீங்கள் செய்யும்போது, பிதா உங்களைக் கனப்படுத்துவதுடன் மேன்மையும், மகிழ்ச்சியும் அடைவீர்கள்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ.C. எபினேசர் பால்.