"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு;

நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்."

                                                                      சங்கீதம் 50:15

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

அண்மையில் இங்கு நடைபெற்ற கூட்டத்தில் குடும்பமாக பங்குபெற ஒரு குடும்பத்தார் வந்தார்கள். கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் தங்களின் 5 மணி நேர வாகன பயணத்திற்கு முன் அடியான் தங்கியிருந்த வீட்டிலே வந்து ஜெபித்துச் செல்ல விரும்பி வந்தார்கள். நான் தங்கியிருந்த வீட்டாரோ தயவாய் சாப்பிட்டுச் செல்லும்படி வலியுறுத்தினார்கள். சரி என்று சொல்லி சாப்பிட்டார்கள். சாப்பிட்டபின் அவர்களின் 11 வயது ஒரே மகள் பாத்ரூம் சென்றாள். பாத்ரூம் சென்று கதவை அடைத்த நேரத்தில் என்றுமே, எப்போதுமே நடைபெறாத நிகழ்ச்சி நடைப்பெற்றது. திடீரென மின்சாரம் நின்றுவிட்டது. இந்த நேரத்தில் பாத்ரூமில் இருந்து மகள் வெளிவர கதவைத் திறந்தாள். ஆனால் அது பூட்டியே இருக்கிறது, திறக்க முடியவில்லை. அந்த வீட்டு சகோதரரோ பல விதத்தில் முயற்சித்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தாயானவள், மகளை அன்பாக தேற்றி, தொலைபேசியின் மூலம் அந்தக் கதவின் படத்தை தன் கையிலிருந்த போன் மூலம் அனுப்பப் கேட்டார்கள். என்ன செய்வது என்ற பதட்ட நிலையில், பிள்ளையின் தகப்பனார் 911ஐ கூப்பிடுவோம் என்றார்கள். சற்று தள்ளி அடுத்த ரூமில் இருந்த நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். சர்வ அதிகாரம் உடையவரே, இந்தக் கதவு உடனே திறக்கப்பட உதவிசெய்யும் என்று உள்ளத்தில் வேண்டினேன். இந்த சூழ்நிலையில் என் மனைவியும் ஜெபியுங்கள் என்று என்னிடம் கூறினாள். மீண்டும் உள்ளத்திலே ஜெபித்த நேரத்தில் கதவின் கைப்பிடியை வெளியில் இருந்து இங்கும் அங்கும் திரும்பின போது கதவு திறந்து விட்டது. அந்த மகள் வெளியே வந்தாள். அவளோ வேர்வையில் நனைந்து விட்டாள். அதே சமயத்தில் மின்சாரமும் திரும்பி வந்தது. பெரிய சந்தோஷமும் விடுதலையும் உண்டானது.

அன்பு சகோதரனே/சகோதரியே, வாழ்க்கையில் கதவுகள் திறக்கும் தேவன் நமக்கு உண்டு. என் ஆசீர்வாதத்தின் கதவு பூட்டியிருக்கிறது என்று கலங்காதே. சிறைச்சாலையில் பூட்டிய கதவின் உள்ளறையில் இருந்த பவுலும், சீலாவும் தேவனைத் துதித்தபோது, அற்புதம் நடைபெற்றதே. சிறைச்சாலை மூலையின் அஸ்திபாரங்கள் அசையவும், துதியின் சத்தத்தை கேட்டவர்களின் கட்டுகள் அவிழவும், சிறைச்சாலையின் கதவுகளும் திறந்ததே என்ற வாதத்தையின்படி நம் நெருக்கத்திலும் கர்த்தரைத் துதிப்போம்.

இன்று நம் வாழ்வில் கர்த்தரின் வார்த்தையின்படி வாழ நம்மை அர்ப்பணிக்கும் போது, திறந்த வாசலை முன்வைக்கும் தேவன் நமக்கு வாசலைத் திறப்பார். உங்கள் ஆசீர்வாத வாசலைத் திறக்கிற தேவன் மாறாதவர். பூட்டிய கதவைத் திறந்து விடுதலை தந்து, நம்மை ஆசீர்வதிப்பார். நாமும் இவ்விதமான சூழ்நிலையில் துதிப்போம். ஜெபிப்போம். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்து மகிழ்விப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.