சிந்தி செயல்படு

"கூப்பிடுகிற எளியவனையும்,
 உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்."

 சங்கீதம் 72:12

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

போதகர் ஒருவர் அவரது வீட்டில் போஜனம் பண்ண அழைத்திருந்தார். அந்த வேளையிலே ஒருவர் பெயரைச் சொல்லி இவரை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். இல்லை என்றேன். நீங்கள் தான் அவருக்கு இயேசுவைக் குறித்து கூறி இன்று சபையில் உற்சாகத்துடன் காணிக்கைத் தருகிறார் என்றார். அப்படியா என்று கேட்டுக்கொண்டேன். பின்னர் அவர் சொன்ன சில காரியங்களைக் கொண்டு இவரா? என்று சொல்லி தெரியும் என்று கூறினேன்.

 நான் அவரை ஒரு சாலையில் சந்தித்தேன். அவருக்காக ஜெபிக்கிற ஒரு ஊழியர் என்னுடன் இருந்தார். இவருக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக் கொண்டார் . உங்கள் வீட்டின் உள் சுவரில் பல படங்களை ஒட்டியிருக்கிறீர்கள். இந்த சினிமா போஸ்டர்களை ஏன் ஒட்டினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் அழுகையின் குரலில் எனக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. நான் பெரிய வீட்டில்தான் வசித்து வந்தேன். என் வாழ்வில் உண்டான தோல்வியினால் என் சொந்த வீட்டை அடைமானத்திற்கு வைத்தேன். இன்று வீட்டை திருப்ப முடியவில்லை.  எந்த வருவாயும் இல்லை. பணமும் இல்லை. இந்த நிலையில் அடைமானத்திற்கு வாங்கினவர் வீட்டில் வசிக்க வந்து விட்டார். வீட்டு காம்பவுண்டு சுவரை ஒட்டி தட்டியடைத்து அதில் 6 பேரும் தங்கி வருகிறோம் என்றார். ஜெபித்துவிட்டு இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார். நீங்கள் நேசித்தால் உங்கள் நிலை மாறிவிடும் என்று கூறினேன். அத்துடன் உங்கள் சபை மிக அருகில் இருக்கிறபடியால் அங்கு ஞாயிறு ஆராதனைக்கு போங்கள் என்று கூறினேன் என்றேன். அதற்குப்பின் நடந்த காரியத்தை போதகர் கூறினார்கள். எனக்கு சினிமா போஸ்டர் ஒட்டியிருக்கிறது என்று இவருக்கு எப்படி தெரியும் என்று சிந்தித்தவர் ஞாயிறு ஆராதனையில் பங்கு பெற்றார். 2 மகனும் 2 மகளும் உடைய அவருக்கு ஒரு மகனுக்கு வெளிநாடு செல்ல வழி திறந்தது. நண்பர் சகல ஏற்பாடுகளையும் செய்ததால் அவன் செலவின்றி வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தான். அவன் மாத மாதம் பல ஆயிரம் தகப்பனாருக்கு அனுப்ப ஆரம்பித்தான்.சில மாதத்திலேயே தன் சகோதரனையும் அந்த நாட்டிற்கு அழைத்து வேலை செய்ய உதவிச்செய்தான். ஞாயிறு ஆராதனைக்கு தகப்பனார் வருவதுடன் தன் தசமபாகத்தையும் தவறாது கொடுத்து வந்தார். இருந்த வீட்டை எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டார். இரண்டு மகள்களுக்கும் அதைப்போல் வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதால் இன்று லட்சமாக காணிக்கை கொடுக்கிறார் என்றார்.

நாம் உண்மையாக கர்த்தரைத் தேடி, கர்த்தருடைய பரிசுத்தநாளை மகிமையுள்ள நாளென்று அனுசரிப்போமானால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்போம். இழந்த யாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.