"நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்,
 என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்"

 ஆபகூக் 3:18

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

இன்று மனிதன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். தான் செல்வம் நிறைந்தவனாக இருந்தால், சந்தோஷம் இருக்கும் என்று அயராது உழைக்கிறான். சந்தோஷமாயும், மகிழ்ச்சியாயும் இருக்க குடிக்கிறேன் என்று சிலர் அதற்கு அடிமையாக வாழ்கிறார்கள். இன்னும் சிலர் பலவித சிற்றின்பங்களுக்கு அடிமையாகி, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்லித் திரிகிறார்கள்.

இன்றும் என்றும் சற்றும் குறையாத மகிழ்ச்சியைக் கிறிஸ்துவுக்குள்ளாக மாத்திரமே நாம் பெற்று வாழ முடியும். இந்த மகிழ்ச்சியை எல்லா சூழ்நிலைகளிலும் பெற்று வாழ முடியும். இந்த ஆபகூக் தீர்க்கதரிசன புஸ்தகத்தில் 3:17ல் அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் - என்று குறைவைக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

அத்திப்பழம் மனிதனுக்கு நல்ல ஆகாரமாகும். அபிகாயில் இருநூறு அத்திப்பழ அடைகளையும் ஏற்றி தாவீதிடம் வந்தாள் என்று 1சாமு.25:18 ல் பார்க்கிறோம். அத்திப்பழ அடையின் ஒரு துண்டை அந்த எகிப்தியனுக்கு கொடுத்தபோது, அவனுடைய உயிர் திரும்ப வந்தது என்று 1சாமு. 30:12 ல் பார்க்கிறோம். அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து எசேக்கியா ராஜாவின் பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது, அவன் பிழைத்தான் என்று 2ராஜா. 20:7 ல் நாம் வாசிக்கிறோம். இந்தப் புசிப்புக்கும் சுகத்திற்கும் ஏற்ற பழ  மரங்கள் துளிர்விடாமல் போனாலும், இதைப் போல உணவுக்கு மிகப் பிரயோஜனமாக திராட்சச்செடியில் திராட்சப்பழம் இல்லாமல் போனாலும், ஓலிவமரம்  என்றாலே முகத்திற்கு அழகையும், காயங்களை ஆற்றி சுகத்தையும்,  நல்ல செல்வத்தையும் தரும் ஆசீர்வாதம் இல்லாமற்போனாலும், வயல்களில் நல்ல விளைச்சல் இல்லாது கசப்பை உண்டாக்கினாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்று போனாலும், என்பது, செல்வதைக் குறிக்கிறது. அன்று ஆட்டுமந்தையானது செல்வசிறப்பைக் குறிக்கிறது. அது இல்லாமற் போனாலும், தொழுவத்தில் மாடு இல்லாமற் போனாலும் என்பது, வேலைக்கு எந்த ஒத்தாசையும் இல்லாதிருந்தாலும் கலங்காது கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்று கூறியிருப்பதை பார்க்கமுடிகிறது.

அருமையான தேவ ஜனமே, நாம் கர்த்தருக்குள் வாழ்வதினால் பெற்றுக்கொள்ளும் மகிழ்ச்சி மிக முக்கியமானதாயிருக்கிறது.

மகிழ்ச்சி எப்பொழுது நமக்கு உண்டாகும்?

1. சிறையிருப்பைத் திருப்பும்போது உண்டாகிறது

"...கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்."சங்கீதம் 14:7

இன்று மனிதன் பல காரியங்களில் சிறைப்பட்டு மிகவும் வேதனையும் துக்கமும் துயரமும் அடைகிறான். யோபுவின் வாழ்வைப் பார்க்கும்போது, பிசாசினால் தாக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து, வாழ்ந்தான். செல்வத்தை இழந்தான், தன் பிள்ளைகளை இழந்தான். அவனில் தோன்றிய பருக்களால் மிக வேதனை நிறைந்தவனானான். தன்னை அதிகமாக நேசிக்க வேண்டிய மனைவியின் நல்ல வார்த்தைகளை இழந்து தவித்தான். இத்துடன்  அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களின் வார்த்தையில் மனம் உடைந்தவனாக இருந்தான். அந்த வேதனை நிறைந்த நேரத்தில் கர்த்தரின் நடத்துதலால் தன் நண்பர்களுக்காக ஜெபித்தான். கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்.இதனை நாம் யோபு 42:10 ல் பார்க்கிறோம்.

ஒன்றுமே செய்ய முடியாத சிறைப்பட்டவர்களாகிய நம்மை முற்றும் விடுவிக்க விரும்பும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  இன்றும் ஜீவிக்கிறார். நம் சிறையிருப்புக்கு காரணம் என்ன என்று அதை வெளிப்படுத்தி நமக்கு ஆரோக்கியமும், பெலனும் அருளி ஆசிர்வதிக்கும் இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். அவர் மிகுந்த ஆவலுடன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்ப விரும்புகிறார். இதற்காக நம்முடைய பாவங்களை, அக்கிரமத்தை வெளிப்படுத்துகிறார். 'நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்ராயிமீன் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்...' என்று ஒசியா 7:1 ல் பார்க்கிறோம்.

ஒருமுறை பிசாசினால் ஆளுகை செய்யப்பட்ட ஒரு சகோதரியை ஜெபிக்க கொண்டு வந்தார்கள். அவர்களால் இரவிலே தூங்கமுடியவில்லை. சரீரத்திலே சுகமில்லை, ஆவியில் மிகுந்த போராட்டத்துடன் இருந்தார்கள். நம்மை அதிகமா நேசிக்கிற இரட்சகராகிய இயேசு தம் ஆவியானவரின் மூலம் அந்த மகளுக்கு ஏன் இந்த காரியம் என்று தெரிவிதித்தார். கிறிஸ்தவர்களாய் இருந்தும் வேதனை நீங்குவதற்க்காக   ஒரு மனிதனிடம் கொண்டுபோகப்பட்டதைத் தெரிவித்தார். அவனோ அந்த மகளின் தலை முடியை எடுத்து ஒரு மரத்தில் அந்த முடியை  ஆணியில் சுற்றி அடித்ததை வெளிப்படுத்தினார். அந்தச் சகோதரியில் செய்யப்பட்ட காரியம் வெளிப்படுத்தப்பட்டதால், அவர்கள் குடும்பமாக தங்களைத் தாழ்த்தி பாவ அறிக்கை செய்தார்கள். அந்த மகளை சிறைப்படுத்தியிருந்த ஆவி மிகுந்த சத்தமிட்டு வெளியேறியது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்தது. இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் சிறையிருப்பிலிருந்து நம்மை திருப்பி மகிழ்விக்கிறார்.

2.தமது வேதத்தினால் மகிழ்ச்சியாக்குகிறார்

"...உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி" சங்கீதம் 119: 77,174

கர்த்தருடைய வேதம் மிகுதியான மகிழ்ச்சியைத் தரும் நல் வார்த்தைகளை உள்ளடக்கிய தேவ வார்தைகளாகும். இதில் உள்ள வசனங்கள் நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. 'மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல் வார்த்தையோ அதை மகிழ்ச்சியக்கும்.' என்று நீதி 12:25ல் பார்க்கிறோம். சோர்வடைந்த நேரங்களிலும், துக்கம், பாடு, வேதனை நிறைந்த நேரங்களிலும் இந்த ஆவியும் ஜீவனும் நிறைந்த வார்த்தைகளினால் ஆறுதலும், ஆலோசனையும், ஆசிர்வாதமும் அடைகிறோம். இந்த வார்த்தை நம் உடைந்த உள்ளதைத் தேற்றவும், மாற்றவும் கூடியது. இந்த ஜீவ வசனங்களைப் பிடித்துக் கொண்டு வாழ்பவர்கள், சுடர் ஒளியைப் போல பிரகாசிப்பார்கள்.

ஒருமுறை புறமதஸ்தர் ஒருவர் இராணுவத்தில் முக்கியமான நல்ல பதவியை வகித்து வந்தார். இராணுவத்தில் முக்கியமான யுத்த பயிற்சியை பெற வேறு ஒரு நாட்டிற்கு சென்றார். பயிற்சி முடிந்தவுடன் நாடு திரும்பிய அவர் அந்நாட்டில் நடைபெற்றுக்கொண்டு யுத்தக்களத்திற்கு அனுப்பப்பட்டார்.  

அவருடன் அநேக வீரர்களும் சென்றனர். ஆனால் அவர்கள் சென்றவுடனே அவர்களுக்கு விரோதமாக  அனுப்பப்பட்ட குண்டு வெடித்து அனைத்து வீரர்களும் மடிந்து விட்டார்கள். இவரோ அந்தப் பிணக்குவியலின் அடியில் சிக்கிவிட்டார். தன்  உள்ளத்தில் தோன்றின எல்லா தெய்வங்களின் பெயரையும் கூறி வேண்டுதல் செய்த பின்னர் ஒன்றும் நடைபெறாதபடியால் தனக்குள் பயம் வந்துவிட்டது. அச்சமயம் சிறு பிராயத்தில் ஒரு ஆசிரியை சொல்லிக் கொடுத்த ஒரு வேத வசனம் அவருக்கு நியாபகம் வந்தது. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்ற வசனம் நினைவுக்கு வந்தவுடன்  இயேசுவே எனக்கு இரங்கும் என்று சத்தமிட ஆரம்பித்தார். அவர்மேல் இருந்த பிணக்குவியல் ஒரு புறமாய் சரிந்ததால் மூச்சுவிட புதியகாற்று வர ஆரம்பித்தது. மிகுந்த நம்பிக்கையுடன் இந்த ஆலோசனையின் வார்த்தையின்படி அவர் செய்தபோது பிணக்குவியலில் இருந்து வரமுடிந்தது என்ற சாட்சியைக் கூறினார்கள். வாழ்க்கையின் சூழ்நிலைக்கு ஏற்ற அன்பின் ஜீவவார்த்தை நமக்கு ஆறுதலும் தேறுதலும் உண்டாக்குகிறது. வாழ்க்கை வாழ நம்பிக்கைகையூட்டும் இந்த வார்த்தை நம் மனதிற்கு மகிழ்ச்சியைப் பெருகச்செய்கிறது.

3.இரட்சிப்பினால் மகிழ்ச்சி உண்டாகிறது

"என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்" சங்கீதம் 35:9

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிக்க வந்தவர். ஆதிமனிதனாகிய ஆதாம், கர்த்தரின் வார்த்தையை அசட்டை செய்து புசிக்கவேண்டாம் என்று விலக்கின பழத்தை புசித்தபடியால் உண்டான பாவம், மனுக்குலத்தை முற்றிலும் கெட்டுபோகச்செய்தது. தேவசாயலை இழந்து, தேவ உறவை இழந்து பலவிதமான சிகிச்சைகளுக்கும் அடிமையாக மாறினான். அருவருப்பான காரியங்களையும், கேடான காரியங்களையும் செய்து மாம்சத்தின் ஆழிவுக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டான். தேவனோ நம் மீது அன்பு வைத்து பாவ, சாபநோய்களில் இருந்து நம்மை மீட்க இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பினார்.

பாவத்திலிருந்து இரட்சிக்கிறார்

சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரி இயேசு கிறிஸ்து இளைப்பாறிக் கொண்டிருந்த கிணற்றில் தண்ணீர் மொள்ளவந்தாள் என்று யோவான் 4 ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அந்த மகளிடம் இயேசு கிறிஸ்து தண்ணீர் கேட்டார். அந்த ஸ்திரியோ நீர் யூதராயிருக்க சமாரிய ஸ்திரியாகிய என்னிடத்தில் தாகத்துக்கு தா என்று எப்படி கேட்கலாம் என்று தன் பதிலை கூறினாள். இயேசு, அந்த மகளைப்  பார்த்து  உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்று அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய். அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். இவ்விதமாய் பேசினபோது, இயேசு கிறிஸ்து அந்த மகளைப் பார்த்து, நீ போய் உன் புருஷனை அழைத்துக்கொண்டு வா என்றார். அந்த மகளோ எனக்கு புருஷன் இல்லை என்றாள். இயேசு கிறிஸ்து அந்த மகளின் பாவத்தை வெளிப்படுத்தி கூறினார். நீ புருஷன் இல்லை என்று சொல்லுகிறது சரிதான். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். ஆனாலும் இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷனல்ல என்று வெளிப்படுத்தி கூறியபோது தன் வாழ்வில் ஒரு காரியத்தை தீவிரமாய் செய்தாள். குடத்தை வைத்துவிட்டு, நான் செய்த எல்லாவற்றையும் அந்த மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் கிறிஸ்துதான் என்று கூறினதினால் அவரிடம் அந்த ஊரார் வந்தார்கள். அந்த ஊரார் இயேசு கிறிஸ்துவை உலக இரட்சகர் என்று அழைத்தார்கள். பாவத்திலிருந்து இரட்சிக்கிறார். 

பிசாசின் பிடியிலிருந்து இரட்சிக்கிறார்

இன்று பிசாசின் பிடியில் சிக்கியிருக்கின்ற மக்கள் ஏராளம். உலகமனைத்தையும் மோசம் போக்கும், பிசாசு என்றும், சாத்தான் என்றும் சொல்லப்படும் பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் அநேகரைக் கொல்ல, அவர்களில் அழிவைக்கொண்டு கொண்டுவருவதை நாம் பார்க்கமுடிகிறது.

வேதத்தில் லேகியோன் பிசாசினால் பாதிக்கப்பட்டவன் இயேசு கிறிஸ்துவிடம் வந்ததை பார்க்கிறோம். அவன் நிலைமை மிகுந்த பரிதாபமாக இருந்ததை வேதம் தெளிவுபடுத்துகிறது. வஸ்திரமில்லாதவனாக, கல்லறையில் தங்குகிறவனாக தன்னையே காயப்படுத்திக்கொண்டு இருந்தான். அவனை விட்டு பிசாசுகள் நீங்க இயேசு கட்டளையிட்டபோது, அவனில் அற்புத சுகம் உண்டானது. அத்துடன் கிறிஸ்துவுக்கு சாட்சியாக மாறினான், பிசாசின் தொல்லைகளிலிருந்து இயேசு கிறிஸ்து இரட்சிக்கிறார். 

இந்த இரட்சிப்பானது சாபத்திலிருந்தும், நம் வறுமையிலிருந்தும், வியாதியிலிருந்தும் நமக்கு இயேசு கிறிஸ்துவினால் கிடைக்கிறது. இந்த இரட்சிப்பினால் மெய்யான முழுமையான சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகிறது. தாவீது "நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்தில் கொடியேற்றுவோம்…"சங்கீதம் 20:5 என்று இரட்சிப்பினால்  உண்டாகும் மகிழ்ச்சியைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

தாவீது செய்த பாவத்தை உணர்ந்தபோது சங்கீதம் 51 ன் வார்த்தையின்படி  கர்த்தரின் சமுகத்தில் இரக்கம் பெற வேண்டினான். அதில் இரட்சிப்பினால் உணடான சந்தோஷத்தை மகிழ்ச்சியை எனக்குத்தாரும் என்று வேண்டுவதினால், இரட்சிப்பின் மகிழ்ச்சியை நாம் உணர, அறிய முடிகிறது.

4) பரிசுத்த ஓய்வுநாள் பரிசுத்தமாய் அனுசரிக்கும்போது மகிழ்ச்சியுண்டாகும்

"...ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்” ஏசாயா 58:13

"அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்…" ஏசாயா 58:14

இன்று யார் யாரெல்லாம் கர்த்தருடைய ஓய்வுநாளை உண்மையாகவே அதைப் பரிசுத்த நாள் என்று அனுசரித்து தங்கள் காரியங்களைக் கர்த்தருக்குள் செய்யும்போது மெய்யான மகிழ்ச்சியடைவார்கள்.

ஒரு குடும்பத்தாரை நான் அறிவேன். அந்த வீட்டார் ஒவ்வொரு ஓய்வுநாளையும் மிகுந்த கவனமாய் கர்த்தருக்குள் செலவிட்டார்கள். அதின் ஆசீர்வாதம் அவர்களில் நிறைவாக பெருகிற்று. அந்தக் குடும்பத்தின் மக்கள் மேல் பதவிகளைப் பெற்றார்கள். ஊழியங்களைச் செய்தார்கள். இவ்வாறு அவர்கள் ஓய்வுநாளை பரிசுத்த நாளாக அனுசரித்தபடியால் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் மாறினதுடன் மேன்மையாக வாழ கர்த்தர் கிருபை புரிந்தார்.

இன்று நாம் ஞாயிற்று கிழமையை எவ்வாறு செலவிடுகிறோம்? ஆராதனை சென்று வந்தால் போதும் என்று இருக்கிறோமா? ஏதோ கொஞ்ச நேரம் வேதத்தை  வாசித்தால்  போதும் என்று செயல்படுகிறோமா?  கர்த்தரின் நாள் என்று அந்த நாளை செலவிடாவிட்டால் பல தோல்விகளும் துக்கங்களும் உண்டாகிவிடும்.

நான் திருச்சியில் TUCC என்ற கிரிக்கெட் கிளப்பினுடைய செகரட்டரி பொறுப்பு எடுத்தேன். 'A' division -ல்  இருந்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்தேன். ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் பாடகர் குழுவில் இருந்த அநேகருடன், இன்னும் சிலருடன் லீக் மாட்ச் விளையாட சென்றேன். ஏறத்தாழ எல்லா போட்டியிலும் தோல்வி. ஆகவே ‘B’ division-க்குத் தள்ளப்பட்டோம். அந்த ஆண்டிலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றோம். மற்ற எல்லாப் போட்டியிலும் தோல்வி. அடுத்த ஆண்டிலே 'C' division - க்குத் தள்ளப்பட்டோம். அதிலும் தோல்வி. அதிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலையில், கர்த்தரின் கிருபையால், மீண்டும் 'C' division - னில் இருக்க உதவி செய்தார். அப்பொழுது யோசித்தேன், ஞாயிறு ஆராதனையைத் தவிர மற்ற காரியங்களில் ஈடுபட்டதால் தோல்வி என்று உணர்தேன். 

அன்பின் தேவப்பிள்ளையே, உன் வாழ்வு மன மகிழ்ச்சியுள்ளதாய் அமைய ஓய்வு நாளை நீ வேத ஒழுங்கின்படி அனுசரி. ஆராதனையில் பங்குபெறு. உன்னால் இயன்ற ஆலயகாரியங்களில் பங்குபெற்று நீ வாழும்போது, கர்த்தரின் மெய்யான ஆசீர்வாதத்தைப் பெற்று மிகுதியான மகிழ்ச்சியாய் ஜீவிப்பாய்.

5. கர்த்தருக்கென்று ஊழியம் செய்யும்போது மகிழ்ச்சியுண்டாகும்

"இதோ என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியானாலே கெம்பீரிப்பார்கள்..." ஏசாயா 64:14

கிறிஸ்துவுக்காக, அவர் நாமத்துக்காக, அவருடைய ஜனத்துக்காக பணிசெய்வோர் இன்று அதிகம் உண்டு. இவர்கள் தங்களைக் கர்த்தருக்கென்று அர்ப்பணித்தவர்கள். இந்த ஊழியத்தை ஒரு உன்னத நோக்கத்தோடு தேவன் திட்டம் பண்ணினார். 'பரிசுத்தவான்கள் சீர் பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.’

அற்புதத்தைக் கண்டு அனுபவித்த பேதுருவும், அவன் சகோதரனும், அவன் கூட்டாளி யாக்கோபும், யோவானும் ஊழியத்தைச் செய்ய  அழைப்பைப் பெற்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவுக்கு பின் சென்றார்கள். அத்துடன் இயேசு கிறிஸ்துவுடனே  இருந்து தொடர்ந்து ஊழியத்தைச் செய்ய தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.

யார் யார் இன்று ஊழியம் செய்வார்கள்?

i) விடுதலை பெற்றவன் சாட்சியினால் ஊழியம் செய்வான்

"பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். இயேசு அவனை நோக்கி: நீ உன்   வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பி விட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்." லூக்கா 8:38, 39

விடுதலையடைந்த மனிதனின் வாழ்வில் மாற்றம் உண்டானதை நாம் பார்க்கிறோம். வஸ்திரம் தரித்திருந்தான், புத்தி தெளிந்திருந்தான். இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்தான். அத்துடன் அவன் இயேசுவோடு இருக்கவேண்டும் என்ற ஆர்வம் உடையவனானான் என்று பார்க்கிறோம். யார் யார் தங்கள் வாழ்வில் விடுதலை பெறுகிறார்களோ அவர்களின் சாட்சியினால் அநேகர் கிறிஸ்துவுக்குச் சொந்தமாகிறார்கள்.

ஒருமுறை ஒரு குடும்பத்தில் குழந்தையில்லாத நிலை. ஏற்கெனவே ஒரு குழந்தை பிறந்து மரித்துவிட்டது. சோதித்த மருத்துவர், இனி குழந்தையிராது என்று சொல்லிவிட்டார்கள். அந்த கலங்கின நேரத்தில் கர்த்தர் சகோதரியின் வாழ்வில் அற்புதமாய் விடுதலையும் சுகமும் கொடுத்தபடியால், அந்தக் குடும்பத்தார் இனி கர்த்தருக்கென்று வாழ தங்களை அர்ப்பணித்தார்கள். இன்று முழுமையாக கர்த்தருக்காக ஊழியம் செய்கிறார்கள். சாட்சியினால் ஊழியம் செய்கிறார்கள்.

ii) தங்கள் ஆஸ்தியினால் ஊழியம் செய்கிறார்கள்

"ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டு வந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் இவருடனே இருந்தார்கள் "லூக்கா 8:3

 இன்று தங்களுக்கு உண்டான செல்வத்தினால் கர்த்தருக்கென்று அவர் நாமம் பறைசாற்றப்படுவதற்கு பலவிதங்களில் ஊழியம் செய்கிறார்கள். அது ஆச்சரியமாய் இருக்கிறது. இவ்வாறு செய்கிறவர்களினால் அநேக ஊழியங்கள் தாங்கப்படுகிறது. அவர்களின் தேவைகள் சந்திக்கப்படுகிறது. இது ஒரு ஆசீர்வாதமான ஊழியம்.

iii)தெரிந்து கொள்ளப்பட்டவர்களால் நடைபெறும் ஊழியங்கள் 

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" 1பேதுரு 2:9

இருளில் இருந்து நம்மை அழைக்க வந்தவர் இயேசு கிறிஸ்து. மரண இருள், பாவ இருள் சூழ்ந்த இந்த லோகத்தில், நம்மை நேசித்து, இயேசு கிறிஸ்து தம்முடைய ஒளிக்கு அழைத்து, நம்மை அவரின் பரிசுத்தராகவும், ஆசாரியராகவு மாக்கியிருக்கிறார். அவரின் திருப்புண்ணியங்களை நாம் அறிவிக்கும்போது, நாம் ஊழியக்காரராகிவிடுகிறோம்.

சவுலை தேவன் சந்தித்தார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று ஊழியம் செய்வதற்கு அவனை நடத்தும்படிக்கு அனனியா என்ற பெயருள்ள சீஷனுக்கு  தரிசனமாகி, இந்த சவுலுக்காக ஜெபிக்கவும் பார்வையடையவும், பரிசுத்த ஆவியைப் பெறவும் அனுப்பினார். அனனியா  கர்த்தரின் சமுகத்தில், உமது  நாமத்தைத் தொழுது கொள்ளுகிற யாவரையும் கட்டும்படி அதிகாரம் பெற்றிருக்கிறானே  என்று சொன்னபோது, நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான் என்று அவனிடம் கூறினார்.

கர்த்தர் தெரிந்துகொண்டவர்களைப் போரடிப்பதற்குப் புதிய கருவியாக மாற்றிவிடுகிறார்.

 

 

iv) சுத்திகரிக்கப்பட்டவர்கள் ஊழியம் செய்வார்கள்

"ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கபட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்." 2 தீமோத்தேயு 2:21

இன்று யார் யார் தங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்கிறார்களோ, அவர்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பணிக்காக பயன்படுத்துகிறார். அவர்களைக் கனத்துக்குரியவர்களாகவும் மாற்றிவிடுவார். அன்பு சகோதரனே, சகோதரியே, நீ வெறும் பாத்திரமாக,  விரும்பப்படாத பாத்திரமாக அல்லது உடைந்த பாத்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவருக்காக வாழ  உங்களைக்  கனத்துக்குரிய பாத்திரமாக மாற்றி பயன்படுத்துவார். நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் மேய்ப்பராக ஏற்றுக்கொள்ளும்போது, என்றும் நிறைந்து வாழும் பாத்திரமாக மகிழ்ந்து வாழ்வீர்கள்.

v) அன்பினால் நிறைந்தவர்களை %E