அலர்ஜியினால் உண்டான வேதனை நீங்கி சுகமடைய ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக நான் உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். என் வாழ்வில் அடிக்கடி அலர்ஜியினால் உண்டாகும் வேதனையை நீர் அறிவீர். இதையும் நான் புரியாது புலம்பினேன். ஆனால் ஏன் இந்த வேதனை உண்டாகிறது என்று மருத்துவ ரீதியாக அறிந்து கொள்ள தயவு செய்த படியால் உம்மைத் துதிக்கிறேன். இதை உண்டால், சாப்பிட்டால், குடித்தால் என்று புரிந்து இருந்தும், உணராது உண்டும் குடித்தும் வேதனைக்குட்படுகிறேன். இப்பொழுதும் கர்த்தாவே, பலமுறை இந்த வேதனையான பலவீனம் வந்தபோது நீர் எனக்கு இரங்கி அதிசயமாய் அது நீங்க உதவிச் செய்தீர். இதைச் சாப்பிடக்கூடாது, இதைக் குடிக்கக்கூடாது, இந்த இடத்திற்கு வரக்கூடாது என்று நன்கு தெரிந்து இருந்தும், என் நண்பர்களைப்  பிரியப்படுத்த, அவர்கள் வார்தையைக் கேட்டு செய்த இந்த தவற்றை மன்னியும். நான்படுகிற பாடுகளை நீர் அறிவீர். என்னதான் இந்த வேதனை நீங்க மருத்துவம் செய்தாலும், மாத்திரை ஊசி என்று எடுத்தாலும் நீர் ஒருவரே பூரண சுகம் தருபவர். இயேசு கிறிஸ்துவே, என் நோய்களைக் கல்வாரிச் சிலுவையிலே தூக்கிச் சுமந்தவரே, என் பலவீனங்களை ஏற்றவரே, இன்று இப்பொழுதே எனக்கு இரங்கும். இந்த வேதனையினால் நான் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளைச் செய்யமுடியாது தவிக்கிறேன். யார் என்னை விடுவிப்பார்கள் என்று கலங்குகிறேன். யார் எனக்கு உதவிச் செய்வார்கள் என்று உள்ளத்தில் வேதனையுடன் ஏங்குகிறேன். இந்த அலர்ஜியை உண்டாக்கும் பொருட்களை நான் வெறுத்தாலும் அறியாதபடி இதற்கு அடிமையாகிவிடுகிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். உம்முடைய தழும்புகளினால் குணமானீர்கள் என்ற வாக்கின்படி உமது ஆணி பாய்ந்த கரத்தினால் என்னை இந்த ஒருவிசை தொடும். நான் சுகமும் பெலனும் அடைந்து இனி உமக்குப் பயந்து  என்றும் சாட்சியாக வாழ உதவிச் செய்யும். என் ஜெபம் கேட்டு வேதனை நீங்க எனக்கு உதவிச் செய்வீர் என்று உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.