"...நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." ஏசாயா 43:19.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

        கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

         இந்த நாளிலே அநேகருடைய வாழ்க்கை பலவிதமான பாடுகள், வேதனைகள், போராட்டங்கள் நிறைந்து இருப்பதைப் பார்க்கிறோம். இவ்விதமாய் வாழ்கிற மக்கள், என் வாழ்க்கையானது பாழானது என்றும், வனாந்தரத்தைப் போல வேதனை நிறைந்தது என்றும் சொல்லுகிற காரியங்களை நாம் காண்கிறோம்,கேட்கிறோம்.

1. வனாந்தரம் என்றால் என்ன?

1. வனாந்தரம் என்றால் திசை தெரியாத ஒரு நிலைமை.

"... பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்." ஆதி 21:14

       அநேகருடைய வாழ்க்கையிலே என் வாழ்க்கை என்னவாகும், என் எதிர்காலத்தின் காரியங்கள் இருளாயிருக்கிறது என்றுச் சொல்லி பல விதமான போராட்டத்தோடு வாழ்கிறார்கள். நான் என்ன செய்கிறேன், எதற்காக வாழ்கிறேன் என்று உணர்ந்து கொள்ள முடியாதபடி, அறிந்து கொள்ள முடியாத ஒரு வேதனை நிறைந்த வாழ்க்கைத்தான் இந்த வனாந்தரத்தின் ஒரு பகுதியாய் இருக்கிறது. இவர்கள் செல்லுகின்ற இடம் இன்னதென்று தெரியாது. 1யோவான் 2:11ன்படி குருடாக்கப்பட்ட மனிதனைப் போல, தான் போகும் இடம் இன்னதென்று அறியாதவனாய் இருக்கிறான் என்பதுபோல திசைக்கெட்டுப் போன ஒரு வாழ்க்கை. இந்த வனாந்தர வாழ்க்கையிலே பலவிதமான குறைவுகள், தேவைகள் மிகுதியாய் இருக்கிறது.

2. தண்ணீர் கிடையாத இடம்

"...மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்."

யாத். 15:22

       தண்ணீர் கிடையாதபடி தவித்த நிலையைப் பார்க்கிறோம். மனிதனுடைய வாழ்க்கையிலே தண்ணீரானது மிகவும் முக்கியமான தேவையான ஒரு பானமாயிருக்கிறது.தண்ணீர் இல்லாதபடி ஜனங்கள் பல பட்டணங்களிலே, கிராமங்களிலே கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம். அந்தத் தண்ணீரானது மனிதனுடைய ஜீவனைக் காக்கக் கூடியது. தண்ணீர் இல்லாதபடியினாலே தவித்து, மாண்டு போகிற மக்கள் ஏராளம் உண்டு. பல ஆடுகள், மாடுகள் தண்ணீர் பற்றாக் குறையினாலே மரித்துப் போகிறதைப் பார்க்க முடிகிறது.

       தண்ணீரில்லாத நிலையானது, வேதனை நிறைந்தது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே தாகம் தீர்க்கிற தண்ணீர் இல்லாததினாலே, நம்முடைய தாகத்தைத் தீர்க்கக் கூடிய ஜீவத் தண்ணீர் இல்லாதபடியினாலே நாம் மிகுதியாய் தவித்துக் கொண்டிருக்கிறோம். தடுமாறிக் கொண்டு இருக்கிறோம். இவ்விதமான ஒரு வாழ்க்கை நிலை தான் வனாந்தரத்தின் நிலைமை.

3. அப்பமும் தண்ணீரும் இல்லாத ஒரு இடம்

 "...நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை தண்ணீரும் இல்லை..." எண்: 21:5

            இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே ஆகாரம் இல்லாதபடி வேதனையோடு வாழ்கிற ஒரு நிலை. சில நாட்களுக்கு முன்பாக ஒரு வேதனையான காரியம் நடைபெற்றது. தமிழ் நாட்டினுடைய முதலமைச்சர்  மரித்தப்படியினாலே, அன்று இரவு ஏதாவது உணவு வாங்கலாம் என்று இராமுழுவதும் அங்குமிங்கும் அலைந்து திரிந்துப் பார்த்தோம். எந்த பொருளும் உண்பதற்கு இல்லாத ஒரு நிலைமை இருந்தது. இதைப்போல மனிதனுடைய வாழ்க்கையிலே ஒரு வேளை மாத்திரமல்ல, சகல நேரங்களிலும் அப்பம் இல்லாதபடி தவிக்கிற ஒரு நிலைமை. இந்த வனாந்தர வாழ்க்கையிலே தங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவையான ஆகாரமும் தண்ணீரும் கிடையாதபடி அவதிப்படுகிற நிலை ஏற்படுகிறது.

 

4. வனாந்தரத்தில் பெருங்காற்று காணப்படும்.

"வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க..." யோபு 1:19

            அதோடு மாத்திரமல்ல, இந்த வனாந்தரத்திலே எழும்புகிற ஒரு பெரும் காற்று மனிதனுடைய வீடுகளை அப்படியே பறக்கச் செய்து விடுகிறது. பெருங்காற்று வீசினப்படியினாலே யோபுவின் பிள்ளைகள் அனைவரும் மரித்துப் போனார்கள் என்று பார்க்கிறோம். ஆகவே வனாந்தரம் என்றுச் சொல்லப்படுவது தண்ணீர் இல்லாத ஒரு இடம். திசை தெரியாத ஒரு இடம். அப்பம் கிடையாத  ஒரு இடம். பெருங்காற்று வீசுகிற ஒரு இடமாக இருக்கிறது.

2. வனாந்தர வாழ்க்கை யாருக்கு உண்டாகிறது?

1. கைவிடப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு

"ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்." ஆதி 21:14

        ஆபிரகாம் அதிகாலையிலே ஆகாரை அவளுடைய பிள்ளையோடு அனுப்பின நிலையைப் பார்க்கிறோம். அதன் நிமித்தமாய் அவள் பெயர்செபா வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள் என்று பார்க்கிறோம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அநேகருடைய வாழ்க்கையிலே கைவிடப்பட்ட நிலையைப் பார்க்கிறோம். மனிதர்கள் கைவிடுவதினாலே பலவிதமான பாடுகள், வேதனைகளைஅனுபவிக்கிறார்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட அநேக பெற்றோர்கள் கலங்கித் தவிக்கிறார்கள்.

       அண்மையிலே செய்தித்தாளிலே ஒரு செய்தியை நான் பார்த்தேன். அநேக பிள்ளைகளை உடைய ஒரு தாயார் கணவன் மரித்தப் பின்பு, அந்தக் குடும்பத்தைச் சார்ந்த பெண்பிள்ளையும், ஆண்பிள்ளைகளும் அந்த தாயாரை சேர்த்துக் கொள்ளாதபடியினாலே மிகுந்த மனத்துக்கத்தினாலே நிறைந்து, மூன்றாம் மாடியில் இருந்து குதித்து, தன் ஜீவனை விட்டாள். அவள் எழுதி வைத்த தற்கொலை கடிதத்திலே என்னுடைய வாழ்க்கையிலே ஆதரவற்ற ஒரு நிலைமை. கைவிடப்பட்ட ஒரு நிலைமை. என்னை விசாரிப்பதற்கும் எண்ணில் அன்பு கூர்ந்து என் நிலைகளை உணர்த்துக் கொள்வதற்கும் ஒருவரும் இல்லை. என் வாழ்க்கையை நான் முடித்துக் கொள்கிறேன் என்று எழுதியிருந்தாள். இன்று மனிதனால் கைவிடப்படுகின்ற மக்கள் உண்டு. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தகப்பன் வீட்டிற்குச் செல்ல முடியாதபடி தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். கைவிடப்பட்ட நிலைமையின் நிமித்தமாக கண்ணீரோடு வாழ்கிற மக்கள் வனாந்தரத்தைப் போல வேதனையான நிலைகளில் காணப்படுகிறார்கள். 

இன்றைக்கு கைவிடப்பட்டு வனாந்தரத்தைப் போல் வாழுகின்ற உங்களுடைய வாழ்க்கையிலே ஒரு வழியை உண்டு பண்ணுகிற அன்பு நிறைந்த தேவன் இருக்கிறார். மனிதர்களால் கைவிடப்பட்டு இருக்கலாம். ஆனால் என்றுமே கைவிடாத தேவன் நமக்கு இருக்கிறார். தம்மைத் தேடுகிறவர்களைக் கைவிடாத தேவன் என்று தாவீது சங்கீதம் 9:10-ல் சொல்லிருப்பதைப் பார்க்கிறோம். நான் குருடரை வழிநடத்தி எல்லா நிலைகளிலும் அவர்களைக் கைவிடாதிருப்பேன் என்று ஏசாயா 42:16-ல் பார்க்கிறோம். அந்த அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும்  என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவரது வல்லமையான செயலினாலே, உன்னுடைய வியாதியிலும், பெலவீனத்திலும், உன்னுடைய குறைவிலும், உன்னுடைய பண கஷ்டத்திலும், இதுவரை வேதனை அடைந்த உன்னைக் கைவிடாதபடி காக்கிற தேவனாயிருக்கிறார். கைவிடப்பட்டதின் நிமித்தமாக உண்டான வனாந்தர வாழ்க்கையிலே, உன்னை நீதியின் பாதையில் நடத்துகிற தேவன் இருக்கிறார். நன்மையான காரியங்களைப் பெற்றுக் கொள்ளுகிற வழியிலே உன்னை நடத்துகிற தேவனாய் இருக்கிறார். அந்த அன்பு நிறைந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன் வனாந்தரத்தைக் காண்கிறவராயும், மாற்றுகிறவராயும், வனாந்தரத்திலே வழியை உண்டாக்குகிற தேவனுமாய் இருக்கிறார். ஆகவே கலங்காதே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வனாந்தரத்திலே உங்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி இருப்பதைக் காண்பீர்கள்.

2. அடிமைத்தனத்திற்கு  உட்பட்டவர்களுக்கு

"... ஆபிரகாம் சாராயை நோக்கி; இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளை கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்." ஆதியாகமம் 16:6

        சாராய் தன்னுடைய அடிமைப் பெண்ணாகிய ஆகாரைக் கடினமாய் நடத்தின படியால், அவள் சாராயை விட்டு ஓடின ஒரு நிகழ்ச்சியைக் காண முடிகிறது. என் பிரச்சனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ள வேண்டும், என் போராட்டமான வாழ்க்கையிலே நான் என்ன செய்ய முடியும் என்றுச் சொல்லி தன் வீட்டை விட்டு வெளியேறின நிலையைப் பார்க்கிறோம். இன்றைக்கு அநேகருடைய குடும்பத்திலே கஷ்டம். பெற்றோருடைய தொல்லையினால் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடுகிறதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையானது பாடுகள் நிறைந்ததாய் மாறுவதோடு தவிக்கின்ற வாழ்க்கையாக, தாகம் தீர்க்க முடியாதபடி தடுமாறுகிற வாழ்க்கையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

       ஒரு முறை நான் ஒரு சகோதரனைச் சந்தித்தேன். என் வீட்டிற்கு நான் திரும்பிச் செல்ல முடியாது. என் வாழ்க்கையிலே இரண்டு நிலை தான். ஒன்று எங்காவது நான் இருந்து எதாவது, யாருக்காவது வேலை செய்து பிழைக்க வேண்டும், இல்லையென்று சொன்னால் தற்கொலை தான் என்றுச் சொல்லி அவருடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட சூழ்நிலையின் நிமித்தமாய், பாடுகளின் நிமித்தமாய், வேதனையோடு கூறினார். இவ்விதமாய் வாழுகிற மக்கள் ஏராளமாய் உண்டு. என் வாழ்க்கையில் இன்றைக்கு என்ன செய்வது,பிரச்சனையில் இருந்து தப்ப முடியாதபடி தவிக்கிறேன் என்று கலங்குகிற மக்களின் வாழ்க்கையானது வனாந்தரத்தின் வாழ்க்கையாக இருக்கிறது.

 

3. பிசாசின் போராட்டங்களில் சிக்குண்டவர்களுக்கு

  "... அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப் பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்." லூக்கா 8:29

 

      இவ்வுலகத்தின் அதிபதியான பிசாசானவன் பலவிதமான போராட்டங்களை நமக்குள் கொண்டு வருவதோடு, நம்முடைய வாழ்க்கையை வனாந்தரத்துக்குள் கொண்டு செல்லுகிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையானது பிசாசினால் பீடிக்கப்படும் என்றால், நாம் பிசாசின் காரியங்களுக்கு அடிமையாக இருப்போமானால், வாழ்க்கையானது இவ்விதமாய் வேதனை நிறைந்ததாய் மாறுகிறது. ஒரு விசை நம்மை ஆராய்ந்து அறிந்து நாம் நம்மை சரிசெய்துக் கொள்ள வேண்டும். லேகியோன் பிசாசினால் பாதிக்கப்பட்டவன் வஸ்திரமில்லாதவனாய், வீட்டில் தங்காதவனாய் இருந்தான். வனாந்தரத்திற்குத் துரத்தப்பட்டவன் போல நம்முடைய வாழ்க்கையும் மாறிவிடும். ஆகவே பிசாசினாலே வனாந்தர வாழ்க்கை நமக்கு உண்டாகுகிறது.

      இன்றைக்கு நம்முடைய வாழ்க்கை எவ்விதமாய் இருக்கிறது? அநேகர் வனாந்தர நிலையின் நிமித்தமாய் கலங்குகிறார்கள், தங்களையே மாய்த்துக் கொள்ளுகிற மக்களும் உண்டு. வனாந்தர வாழ்க்கையின் நிமித்தமாய் பாடுகளைத் தாங்க முடியாதபடி துக்கத்தினால் வேதனையோடு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளுகிறதைப் பார்க்க முடிகிறது.

4. கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களுக்கு வனாந்தர வாழ்க்கை

"நீங்கள் அவரை விட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்..." எண்ணாகமம் 32:15

       கர்த்தரை விட்டுப் பின்வாங்கும் போது, கர்த்தருடைய கோபத்தின் தன்மையானது பல நேரங்களிலே மனிதர்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. பெலவீனத்தைக் கொண்டு வருவதோடு, அவனால் ஒன்றும் செய்ய இயலாதவனாய் ஒரு வேதனைக்குரிய  நிலையில் தள்ளப் படுவதைப் பார்க்கிறோம். பின் மாற்றமானது மனிதனுடைய வாழ்க்கையிலே தோல்விகளைக் கொண்டு வருவதோடு, மனிதருடைய வாழ்க்கையிலே பலவிதமான துக்கங்களைப் பெருகச் செய்கிறது. பின்மாற்றமானது மனிதனுடைய வாழ்க்கையிலே இருண்ட நிலையை உருவாக்குகிறது.

       வனாந்தரத்தினுடைய வாழ்க்கையானது மிகுதியான துக்கத்தையும் துயரத்தையும் கொண்டுவரக்கூடியதாய் இருக்கிறது. இந்த உலக வாழ்க்கையிலே புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்கிற நமக்கு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறார். வனாந்தரத்திலே நமக்கு ஒரு வழியை உருவாக்கினபடியினால்,உன்னுடைய கண்ணீருக்கு ஒரு முற்றுப்புள்ளியாக, உன்னுடைய வாழ்க்கையிலே உண்டான இல்லாமையின்  காரியங்களுக்கு முற்றுப்புள்ளியாக, அவர் அற்புதமாக உன் நிலைகளை மாற்றி, வனாந்தரத்தில் வழியுண்டாக்குகிற தேவனாயிருக்கிறார்.

5. சோதிக்கப்படுகிறவர்களுக்கு வனாந்திர வாழ்க்கை

"அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்." மத்தேயு 4:1

                      சோதிக்கப்படுகிற நேரத்திலே நாம் முழுமையாய்  பெலனடைந்தவர்களாய் மாறுவதற்காக, நம்முடைய நன்மைக்காக , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் வனாந்திரத்திற்குள் வழி    நடத்தப்படுகிறோம். இயேசு கிறிஸ்து முழுமையாக ஸ்தானம் பெற்று கரையேறினபோது, தேவ ஆவியானவர் அவரை வனாந்தரத்திலே நடத்தினார் என்று மத்தேயு 4:1ல் பார்க்கிறோம். தேவ ஆவியானவர் மூலமாய் நாம் சோதனைகளுக்குட்பட்டு அவைகளை ஜெயிப்பதற்கு, அதன் மூலமாய் ஆசிர்வதிக்கப்படுவதற்கு, இவைகளை நமக்கு அருளுகிற தேவனாயிருக்கிறார்.

                       சோதனை என்பது வாழ்க்கையிலே முன்னேறுவதற்கு, ஆவிக்குள்ளான வாழ்க்கையில் வளர்வதற்கு ஏற்ற செய்யலாயிருக்கிறது. யாரை கர்த்தர் நேசிக்கிறாரோ அவர்களைச் சிட்சிக்கிறார். பலவிதமான சோதனைகளிலே அவர்களை உறுதிப்படுத்துகிறார். யோசேப்பினுடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது தேவன் அவனுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். எல்லாருடைய அரிக்கட்டுகளும் யோசேப்பின் அரிக்கட்டை வணங்குகிற காரியத்தைச் சொன்னதின் நிமித்தமாய் பகையும் எரிச்சலும் உண்டானது. அதினிமித்தமாய் பலவிதமான சோதனையின் காலத்தைச் சந்தித்ததைப் பார்க்கிறோம். பாடுகள் நிறைந்த வாழ்க்கையைப் போல் இருந்தாலும், அந்த சோதனையின் காலத்திலே கர்த்தருடைய கரம் அவனுக்கு அனுகூலமாயிருந்தது. அனுதினமும் ஒரு பாவச் செயலுக்கு உட்பட வேண்டும் என்று சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அந்த சோதனையை மேற்கொள்ளக்கூடியவனாய் கர்த்தருக்குப் பயந்து இப்படிப்பட்ட பாவத்தைச் செய்வது எப்படி என்று அதற்கு விலகி ஓடினான். தன் பரிசுத்தத்தைக் காத்துக்க கொண்ட மனிதனாய் இருந்தப்படியினாலே, அந்தச் சோதனைக் காலம் முடிந்த பின்பு, தேவன் தந்த வாக்குத்தத்தமானது நிறைவேறியது. நமக்கு உண்டாகும் சோதனையை முழுமையாய் மேற்கொள்ளும்போது, அன்பினால் நிறைந்திருக்கும் தேவன் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணின மேலான ஆசீர்வாதங்களை அருளுகிற தேவனாயிருக்கிறார்.

                                 இயேசு கிறிஸ்து வனாந்தரத்திலே சோதிக்கப்பட்டது போல உன்னுடைய குறைவின் வாழ்க்கையிலே, உன்னுடைய வாழ்க்கையின் போராட்டத்திலே, பலவிதமான சோதனைகள் தோன்றும். ஆனால் அந்த சோதனைகளிலே நாம் ஜெயிக்கிற மக்களாய்  இருக்க வேண்டும். சிலருடைய வாழ்க்கையிலே குறைவினால் சோதனை, சிலருடைய வாழ்க்கையிலே வேலையில்லாதபடியினால் சோதனை, சில குடும்பங்களில்  பிரிந்திருக்கிறபடியினாலே  சோதனை. இவ்விதமாய் பல நிலைகளிலே பலருக்குச் சோதனை வருவதை பார்க்கிறோம். ஆனால் இந்தச் சோதனைகள் எல்லாம் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு பெரிய மேன்மையைத் தரக்கூடிய ஒரு வழியை உண்டாக்குகிறது. பழையவைகள் ஒழியவும், எல்லாம் புதிதாக்கப்படுகிற ஒரு பூரணமான புதிய சிருஷ்டியாய் மாற்றப்படுவதற்கு   நம்மை மேன்மைப்படுத்திக்கூடிய ஒரு வழியாய்  இருக்கிறப்படியினாலே சோதனைகளைச் சகித்து, கர்த்தரில் அன்புகூருகிற மக்களாய் இருக்கும்போது, வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை நமக்கு அருளுகிற தேவனாய் இருக்கிறார்.

 

III. வனாந்தரத்திலே எவ்விதமாய் வழியை உண்டுபண்ணுவார்?

1. தெரிந்து கொள்ளுதலினால்

"நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும்  உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துக்கொண்டு" உபாகமம்  30:19

                                   தேவன், நமக்கு மோசேயின் மூலமாய் தெரிந்துக்கொள்ளுதலைக் குறித்துச் சொல்லிருப்பதைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலே சாப வழியையும் ஆசீர்வாத வழியையும் தேவன் நமக்கு முன்பாக வைத்திருக்கிறார். நாம் தெரிந்து கொள்ளுகிற வழியானது மிகவும் முக்கியம். நம்முடைய வாழ்க்கையிலே தெரிந்து கொள்ளுகிற சிலாக்கியமானது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய மனம் போல இந்த உலகத்தின் வழியிலே நடப்போம் என்று சொன்னால் சாபத்தையும் பலவிதமான வேதனையான காரியங்களையும் நமக்கு மாத்திரம் அல்ல சந்ததிக்கும் சேர்த்து வைக்கிற மக்களாய் நாம் மாறிவிடுவோம். இன்றைக்கு நம்முடைய வழியைச் செவ்வையாக்குகிற தேவன் இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் வனாந்திர பாதையிலே அவர் நமக்குத் தெரிந்துக் கொள்ளுகிற சிலாக்கியத்தைக் கொடுத்தப்படியினால், செம்மையான பாதையிலே செல்வதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்விதமாய் தெரிந்து கொள்வோம் என்றால்  நன்மையினாலும் கிருபையினாலும் நாம் முடிசூட்டப்படுவோம். அநேகர் இந்த ஜீவ வழியைத் தெரிந்து கொளுவதற்குப் பதிலாக அநித்தியமான சந்தோஷத்தைத் தேடி நாடி, பலவிதமான பாவ சிற்றின்பங்களுக்கு அடிமையாகி சாபத்தையும் பலவிதமான வேதனையான முடிவையும் சந்திக்கிறார்கள்.

                 அருமையான ஒரு மகனை நான் அறிவேன். அவர் திடகாத்திரமான சரீரத்தோடு நலமான படிப்பைப் படித்து நல்ல ஒரு அரசாங்க உத்தியோகத்தில் பணியாற்றுகிறவராய் இருந்தார். அவருடைய வாழ்க்கையிலே குடிப்பழக்கமானது சிற்றின்பமாய் காணப்பட்டது. அதற்கு அடிமையாய் மாறினார். திருமணம் ஆகியும் குழந்தை இல்லாத ஒரு வேதனையான வாழ்க்கை. அவருடைய வாழ்க்கையானது ஓய்வு பெறுவதற்கு முன்னதாக முடிந்து போனது. அவருடைய குடும்பமானது ஒன்றுமில்லாததாய் மாறியது. அவருடைய மனைவியானவள் பரிதபிக்கப்பட்ட ஒரு மகளாய்  மாறினாள். இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே தேவனுடைய கிருபையை வீணடிக்கிறார்கள். அவர்கள் தவறான பாதையிலே செல்வதற்குத் தங்கள் சரீரத்தை,உள்ளத்தை, எண்ணத்தைக் கொடுப்பதினால் தேவ ஆசிர்வாதத்தை இழந்து, சாபத்தின் மக்களாய் மாறுகிறதைப் பார்க்கிறோம்.

 

2. முன் சென்று வழியை உண்டாக்குகிறார்.

 

"நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." ஏசாயா  45:2

             நம்முடைய வாழ்க்கையிலே அவர் நமக்கு முன்னே சென்று எல்லா கோணலானவைகளையும் செவ்வையாக்கி நமக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறார். அநேகக் காரியங்கள் குறைவாய் வேதனையாய்க் காணப்படலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவோ நம்முடைய வனாந்தரத்திலே வழியை உண்டுபண்ணுகிற, நம்மை வழிநடத்துகிற, நமக்கு முன்செல்லுகிற தேவனாயிருக்கிறார். யார் யார் வாழ்க்கையிலே தங்கள் பிரச்சனைகளை அல்ல; இயேசு கிறிஸ்துவையே முன் வைத்துக்கொள்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலே வனாந்தரத்திலே வழியை உண்டுபண்ணுகிறதைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலே உள்ள எல்லா வனாந்தரங்களும்  மாறுவதற்கு அவர் வழியை ஏற்படுத்தியதற்காக நாம் தேவனைத் துதிக்க வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையிலே பல தடைகள் வரலாம், கஷ்டங்கள் வரலாம். யார் யார் கர்த்தரை முன் வைக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலே அவர் அவர்களுக்கு முன் செல்கிறவராய் இருக்கிறார். மீகா 2:13ல் கர்த்தர் நமக்கு முன்சென்று எல்லாவிதமான தடைகளையும் நீக்குகிற தேவன் என்று பார்க்கிறோம்.

            நம்முடைய தேவன் அனுதினமும் நம்மை வழி நடத்துகிற தேவன். நாம் அறியாத பாதையில் சென்றாலும் அதையெல்லாம் செம்மையாய் மாற்றி, நாம் சிறப்படையத்தக்கதான மேலான பாக்கியத்தைத் தருகிற தேவன். ஆகவே இன்றைக்கு என் வாழ்க்கை வனாந்தரமாய் இருக்கிறதே நான் திசை தெரியாதபடி தவித்துக்கொண்டிக்கிறேன், என்ன செய்வேன் என்று கலங்கி கொண்டிருக்கிற வேளையிலே, அவர் நமக்கு முன்னே சென்று கோணலானவைகளைச் செவ்வையாக்குகிற தேவனாயிருக்கிறார்.

3. அக்கினியை அனுப்பி, சத்துருக்களை அகற்றி, தடைகளை நீக்கி வழியை உண்டாக்குகிறார்.

"அக்கினி அவருக்கு முன் சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது." சங்கீதம் 97:3

                  இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையானது சத்துருக்களின் செய்கைகளினாலே வனாந்தரத்தைப் போல மாறியிருக்கிறது. காரியங்கள் நடைபெறவில்லை, திருமணம் நடைபெறவில்லை, பிள்ளைக்குத் திருமணமாகவில்லை, மகனுக்கு வேலை கிடைக்கவில்லை, மகள் படிப்பதற்குறிய நல்ல இடம் பள்ளியிலே, கல்லூரியிலே கிடைக்கவில்லை என்று அநேக காரியங்களினாலே நாம் கலங்கியிருக்கிறோம். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய காரியங்களை நாம் ஆராய வேண்டும். நாம் முன்னேற முடியாதபடி பிசாசானவன் பலவிதமான நிலைகளிலே செயல்படுகிறான். நமக்கு விரோதமாய்  எழும்பியிருக்கிற  மக்கள் நம்மை முன்னேற விடாதபடி கர்த்தருடைய வழியில் செல்லமுடியாதபடி  தடை செய்கிறார்கள். ஆனால் என்றைக்கு நாம் கர்த்தரை முன் வைக்கிறோமோ அன்றைக்கே அவர் நமக்காக எல்லாவற்றையும் செய்து  முடிக்கிற தேவனாயிருக்கிறார். நமக்கு முன்பாக சுற்றிலும் இருக்கிற சத்துருக்களை நிர்முலமாக்கி, நம்முடைய எல்லா காரியங்களையும் சீர் செய்து, வழியை உண்டாக்கி, இந்த ஆண்டிலே நாம் நினையாத மேலான ஆசீர்வாதங்களை நம்மிலும் பிள்ளைகளிலும் சந்நிதியிலும் பெற்றுக்கொள்ளும்படியான வழியை உண்டாக்கினபடியால் நாம் கர்த்தரை துதிக்க வேண்டும், போற்றவேண்டும்.

4. இயேசு கிறிஸ்துவே வழியாய் இருக்கிறார்.

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

                      இயேசு கிறிஸ்து நமக்கு வழியாயிருக்கிறார். நாம் அவரை கவனித்துப் பார்க்க வேண்டும். நானே வழி, சத்தியம் என்று சொன்னபடியினாலே இந்த வழியாய் நாம் மெய்யான ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நமக்கு சகலவிதமான கிருபைகளையும்,சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறார். இந்த வழியாய் யாரெல்லாம் நடக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தைப் போல காணப்படலாம். கசந்த நிலைகள் போல காணப்படலாம். ஆனால் அந்த வழியிலே நடக்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அதிசயமாய் ஆசிர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

                       இரண்டு விதமான வழிகளைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறினார். கேட்டுக்குச் செல்கிற வழி விசாலமாயிருக்கிறது. ஆனால் கர்த்தருடைய வழியிலே நடப்பது என்று சொன்னால் அது இடுக்கமான வாசல். அந்த இடுக்கமான வாசல் வழியாய் நாம் பிரவேசிக்க வேண்டும். நானே வழி என்று சொன்ன இயேசுவின் வழியானது   ஜீவனுக்குப் போகிற ஒரு வாசலாய் இருக்கிறது. அது இடுக்கமும் அந்த வழியானது  நெருக்கமுமாய் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்று மத்தேயு 7:14ல் பார்க்கிறோம். இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள் என்று இயேசு கிறிஸ்து தெளிவாய்ப் போதித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் கேட்டுக்குப் போகிற வழியோ விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிப்பவர்கள் அநேகர் என்று மத்தேயு 7:13ல் பார்க்க முடிகிறது.

                      இந்த உலகத்திலே நாம் அவருடைய சிலுவையைச் சுமப்பதற்கு நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும். மோசே ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டதை வேதத்திலே பார்க்கிறோம். இந்த அநித்தியமான பாவ சந்தோஷங்களை  அனுபவிப்பதைக் காட்டிலும் தேவனுடைய ஜனங்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்து கொண்டான். என்று எபி 11:25ல் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவின் வழியானது உலகத்தினுடைய அநித்தியமான பாவ சந்தோஷத்தை வெறுக்கிற ஒரு வாழ்க்கையாகும். அவர் இன்றைக்கு வனாந்தரத்திலே வழியை உண்டு பண்ணுகிற தேவன். 1பேதுரு 2:21ம் வாக்கியத்திலே இந்த உலகத்திலே இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு மாதிரியை வைத்திருக்கிறார். நாம் செல்லவேண்டிய பாதைக்கு அடிச்சுவடுகளை, வைத்திருக்கிறபடியினாலே  , அந்த அடிச்சுவடுகளின்படி நடப்பதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அந்த அடிச்சுவடுகளை,  மாதிரியைப் பின்பற்றும்போது, நாம் எல்லாவிதங்களிலும் தேவனுடைய மகிமையான ஆசிர்வாதத்தைப் பெறுக்கொள்ளவும், தாகம் தீர்க்கப்படவும் நம்முடைய வாழ்க்கை  முழுமையாய் மாறிவிடும்.

                      புதிய ஆண்டில் பிரவேசிக்கச் செய்த தேவன், கடந்த காலத்தில் நாம் பாடுகளையும், வேதனைகளையும் அடைந்த வனாந்தர வாழ்வினை மாற்றுகிறவராயிருக்கிறார். அவருடைய அன்பின் வழியிலே நாம் செல்ல நம்மை ஓப்புக்கொடுப்போமானால், நம் வனாந்தரம் நீங்குவதோடு, ஒரு வழியும் உண்டாயிருக்கும்.

 

                           கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

  

                                                                                                                                                                                                                           கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                                                                                                                                                                        சகோ. C. எபினேசர் பால்.