சிந்தி செயல்படு

"கர்த்தாவேஉம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லைஆதலால்உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்."

சங்கீதம் 9:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு பகுதி ஊழியத்தைச் செய்ய ஆயத்தமானேன். இந்த தேதியில் அங்கு வருவேன் என்று ஊழியத்தில் உதவும் சகோதரருக்கு அறிவித்திருந்தேன். அந்நாட்களில் இந்தக்காலம் போல தகவல் அனுப்பக் கூடிய வசதி இல்லை. ஆனால் திடீரென்று தேவ ஆவியானவர் விமான பயணச்சீட்டை இரண்டு நாள் முன்னதாகச் செய்து பயணம் செய்ய வழிநடத்தினார். என்னை விமான நிலையத்தில் சந்தித்து அழைத்து செல்பவருக்கு இந்த மாற்றத்தைத் தெரிவிக்க முடியவில்லை. அவர் இருக்கும் இடத்தில் இருந்து விமான நிலையம் வந்து சேர குறைந்த பட்சம் 4 மணி நேரமாவது ஆகும். என்றும் எவைகளிலும் நம்மைக் கைவிடாது நேர்த்தியாய் நடத்தும் கர்த்தர், அவர் உள்ளத்தில், நான் வரும் நாளை உணர்த்த, என்னைச் சந்திக்க விமானநிலையம் வரச் செய்தார். எந்தத் தாமதமும், குறைவும், தடையுமின்றி ஊழியத்தைச் செய்ய முடிந்தது. இந்த புதிய ஆண்டில் பிரவேசித்திருக்கிற நாம் இந்த ஆண்டில் என்னென்ன காரியங்கள் நடைபெறுமோ என்று கலங்கி இருக்கலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்தப் புதிய ஆண்டில் கிருபையாய் பிரவேசிக்கச் செய்தவர், நம்மைக் கைவிடாது நடத்துவார். குறைவின்றி சகலமும் சீராய் நடைபெறும். என்னென்ன காரியங்கள் நம் குடும்பத்தில், நம்மில் நடைபெற வேண்டும் என்று எதிர் பார்த்திருக்கிறோமோ, அவைகள் நேர்த்தியாய் நடைபெற கர்த்தர் இந்த ஆண்டிலே உதவிச்செய்வார். உன் துக்க நாட்கள் முடித்து போம் என்ற கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கி வழி நடத்துவார். உன் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்றவர், அப்படியே உன்னை ஆசீர்வதிப்பார். நீ கலங்கவோ துக்கப்படவோ வேண்டியதில்லை. அவர் எல்லைகளைச் சமாதானமுள்ளதாக்கி, உச்சிதமான கோதுமையினால் உங்களைத் திருப்தியாக்குவேன் என்ற கர்த்தர், எல்லாக் காரியங்களிலும் உன்னைத் திருப்தியாக்கி ஆசீர்வதிப்பார். நீ எதிர்பார்க்கும் நல்ல முடிவை உனக்கும் உன் சந்ததிக்கும் தந்து, உன்னை மகிழ்விப்பார். கலங்காதே, திகையாதே என்றவர், உன்னை பூரணப் பெலத்தினால் இடைக்கட்டி, அதிசயமாய் நடத்துவார். நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஜெயம் கொள்வாய்.  

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்