செய்தி

"...அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்."

சங்கீதம் 1:3

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

மனிதன் பலவிதமான காரியங்களைச் செய்து நலமாய் தான்  வாழவேண்டும் என்று விரும்புகிறதைக் காணமுடிகிறது. சிலர் வியாபாரத்தை, தொழிலை இன்னும் பற்பல காரியங்களைச் செய்து வெற்றி நிறைய வேண்டும், ஆதாயம் அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். சிலர் தங்கள் காரியம் வாய்க்காததால் நஷ்டமடைந்து விடுகிறார்கள். சிலர் அடைந்த தோல்வியினால், தாங்கள் வசிக்கும் இடத்தையே விட்டு ஓடிப் போகிறார்கள். இன்று ஒரு வேளை  ஏன் எனக்குத் தோல்வி, நஷ்டம் ஏற்பட்டது? ஏன் காரியங்கள் வாய்க்கவில்லை என்று கலங்கி கண்ணீருடன் வாழ்ந்து கொண்டு இருக்கலாம். நான் இனி என்ன செய்வது? எல்லாவற்றையும் இழந்து விட்டேனே என்று துக்கத்துடன் திரிகிற தேவப்பிள்ளையே, இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, 'அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்' என்று கூறுவதுடன் ஆசீர்வதிக்க விரும்புகிறார்.

உன் காரியங்கள் ஏன் வாய்க்காது போயிற்று? ஏன் எனக்குத் தோல்வி உண்டானது? நான் செய்த எல்லாக் காரியமும் வீணாகி விட்டது என்று கலங்கும் தேவப்பிள்ளையே, உன்னை ஆராய்ந்து பார். உங்கள் வழிகளைச் சிந்தித்து பாருங்கள். 'நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்...' என்று ஆகாய் 1:6ல் சொல்லப்பட்டு இருக்கிறபடி இன்று என் காரியம் முடிந்து விட்டதே என்று தவிக்கும் சகோதரனே, சகோதரியே, கலங்காதே. விவசாயம் என்றாலே, கொஞ்சமாய் விதைத்து, திரளாய் அறுத்துக்கொண்டு வருவதாகும். தான் செய்கிற விவசாயம் தோல்வியாயும், துக்கமாயிருக்கிறது. காரியம் வாய்க்கவில்லை. மேலும் 'கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.' என்று ஆகாய் 1:6 ல் சொல்லப் பட்டு இருக்கிறது போல வட்டிக்கும், மருத்துவத்திற்கும் வீணாகிறது. எதினிமித்தம் இந்த நிலைமை என்று ஆராயும்போது, 'என் வீடு பாழாய்க் கிடக்கிறது' என்று கர்த்தர் உரைக்கிறதைப் பார்க்கிறோம். 'நீங்கள் தேவனுடைய ஆலமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்' என்று 1 கொரி 3:16,17ல் பார்க்கிறோம். இந்த இருதயமாகிய ஆலயம் பாழாய்க் கிடப்பதினால் தோல்வி, துக்கம், கஷ்டம், நஷ்டம் நிறைந்திருக்கிறது. எலியா தனது காரியத்தில் வெற்றிக் கண்டான். இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றபோது, இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல. உன் நம்பிக்கை மாறுபட்டதினால் கலங்கப்பண்ணுகிறாய் என்று கூறினதுடன், நீ நம்பியிருக்கிற பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கூடிவரச் செய்யுங்கள் என்று ஒரு காரியத்தைச் சொன்னான். அக்கினியினால் பதில் அளிக்கும் தெய்வத்தினைப் பின்பற்றுங்கள் என்று கூறி, சகல ஜனங்களையும் கூட்டினான். உடைந்த பலிபீடத்தைச் சரி செய்து, பலியிட்டபோது, கர்த்தரின் பதில் அக்கினியில் வந்தது. அவன் காரியம் வாய்த்தபடியால், சத்ருக்களை வென்றான், அளித்தான். இன்று உன் பலிபீடமாகிய இருதயம் எப்படி இருக்கிறது? பெருமை, பொறாமை, தீயநோக்கம், தீய காரியங்களினால் நிறைந்திருந்தால், அது தகர்க்கப்பட்ட பலிபீடம், அது செம்மையாக  வேண்டும். அப்பொழுது தான் காரியங்கள் வாய்க்க கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

I. ஏன் காரியங்கள் வாய்க்காது போகிறது?

1. கர்த்தர் வெறுக்கும் நம்பிக்கையினால்

" நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது." எரேமியா 2:37

இன்று சிலரின் நம்பிக்கையானது நம்மை உண்டாக்கின தெய்வமாகிய கர்த்தரை விட்டுவிட்டு, உண்டாக்கப்பட்டவைகளின் மீது பூரண நம்பிக்கைக் கொண்டு செயல்படுவதினால் காரியம் வாய்க்காது வேதனை அடைகிறார்கள். அன்பு சகோதரனே, சகோதரியே, உன் நம்பிக்கை யார்மீது, எதன் மீது இருக்கிறது?

ஒரு முறை வியாபாரத்தை செய்கிற சகோதரன் என் வியாபாரம் நலமாக இல்லை. பக்கத்தில் வேறு எந்தக்  கடைகளும் இல்லை. ஆனாலும் என் கடை வியாபாரம் குறைந்திருக்கிறது. கடையை எப்படியாவது நன்றாய் நடத்த வேண்டும் என்று தனக்கு மிஞ்சின விதத்தில் கடனை வாங்கி முதலீடு செய்தார். வியாபாரம் சற்று விரிவடைந்தது. ஆனால் வருவாயின் மிகுதியான பகுதி வட்டிக்கே செலுத்தவேண்டியதாயிற்று. இதனால் மீண்டும் மீண்டும் சரக்குகளை ஈடு செய்யமுடியவில்லை. அக்கம்பக்கத்திலும் கடைகள் கூடிவிட்டது. என்ன செய்வது என்று என் மனம் குழம்பியிருக்கிறது என்றார். அவருக்காக ஜெபித்தபோது, அவரின் குறைவைக் கர்த்தர் வெளிப் படுத்தினார். உன் நம்பிக்கை தவறானதாய் இருக்கிறது. தேவனுக்குப் பிரியமில்லாததாய் இருக்கிறது. அதனால்தான் உன் கையின் பிரயாசத்தில் தோல்வி என்று கூறினேன். உன் பணம் வைக்கிற அந்தக் கல்லாப்பெட்டியில் ஒரு எலுமிச்சம்  பழத்தையும் ஒரு பூவையும் வைத்திருக்கிறாய். இது நன்மையானது, ஆசீர்வாதத்தைத் தரும் என்ற தவறான நம்பிக்கையினால் அவருடைய காரியம் வெற்றியில்லாது முயற்சிகள் வாய்க்காதேபோயிற்று.

இந்த வார்த்தைகளை வாசிக்கிற சகோதரனே, சகோதரியே, உன் நம்பிக்கையைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைப்பாய் என்றால் மாற்றத்தைக் காண்பாய்.  

2.கீழ்ப்படியாமையின் சாபத்தினால்

"குருடன் அந்தகாரத்தினால் தடவித் திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திருவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதே போம்..." உபகமம் 28:29

இன்று கர்த்தருடைய வார்தைக்குக் கீழ்ப்படியாததால் சாபங்கள் தோன்றுகிறது. 'இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில்  இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்' என்று உபா. 28:15ல் பார்க்கிறோம். கீழ்ப்படியாமையின் சாபத்தினால் வருகிற பாடுகள், வேதனைகள், போராட்டங்கள் மிகுதி. அதில் ஒன்று தான் காரியங்கள் வாய்க்காதே போகிற போராட்டமான நிலமை. கர்த்தருடைய கட்டளைகளும் கற்பனைகளும் நம் அனுதின வாழ்க்கைக்கு பிரயோஜனமாய் இருக்கும்படி தேவன் நமக்குக் கொடுத்த காரியங்கள் ஆகும். என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியால் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் என்று சொன்ன தேவன் நம் மத்தியிலே ஜீவிக்கிறார். நாம் செய்கிற காரியங்கள் எல்லாம் அவருடைய காந்திக்கு மறைவானது கிடையாது. இரகசியமான மீறுதலாய் இருந்தாலும், வெளியரங்கமான காரியமாய் இருந்தாலும், கர்த்தர் வெறுக்கிற அந்தக் காரியத்தினால் சாபம் உண்டாகிறது. அந்தச் சாபத்தினால் நம்முடைய முயற்சிகள் வாய்க்காதே போவதோடு நாம் தோல்வியடைகிற துக்கமடைகிற மக்களாய் மாறுகிறோம்.

ஒருமுறை ஒரு குடும்பத்தார் ஜெபிக்க அழைத்தார்கள். 2 ஆண் மக்களுக்கும், 2 பெண் மக்களுக்கும் உள்ள அந்தக் குடும்பத்தில் பலவிதமான சஞ்சலங்கள் நிறைந்திருந்தது. மூத்த மகள் திருமணமாகாமலேயே பணியாற்றி ஓய்வு பெற்று காலங்களைக் கடத்தினார்கள். 2-வது மகளும் திருமணம் ஆகாமல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.  மூத்த ஆண் மகன் திருமணமாகி குழந்தையில்லாதவராய் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்தார். கடைசி மகனுக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த வீடு இடம் போதாதபடியால், தங்களுக்கு இருந்த பெரிய இடத்தின் அருகிலேயே வீட்டைக் கட்ட ஆரம்பித்தார்கள். வீடு கட்ட ஆரம்பித்து கட்டடம் எழும்பி பாதியில் நின்றுவிட்டது. சில ஆண்டுகளும் ஆகிவிட்டது. எல்லா வசதியும் இருந்து வீடு கட்டுகிற காரியம் வாய்க்கவில்லை என்ற மிகுந்த துக்கத்தோடு கேட்டார்கள். அவர்களுக்காக ஜெபித்தபோது, கர்த்தர் வெளிப்படுத்தின சில காரியங்ககளைக் கேட்க ஆரம்பித்தேன். சுமார் 12 வயது நிறைந்த சிறுமி ஒருவர் எப்போதாவது தீயிலே எரிந்து மறித்து போனார்களா? என்று கேட்டேன். அந்த வீட்டின் மூத்த சகோதரர் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நான் 15 வயதாய் இருக்கும்போது, எங்கள் வீட்டில் 12 வயது சிறுமி இருந்தாள். அவளுடைய தாய், தகப்பன் எல்லாரும் மறித்து போய்விட்டார்கள். என் தாயாரின் தாயை பெரியம்மா என்று கூப்பிடுவாள். ஒரு நாளில் அந்த மகள் எரிந்து கொண்டிருக்கிற குடிசையில் அண்ணா என்று என் பெயரைச்  சொல்லி கூப்பிட்டாள். தீ எரிந்து கொண்டிருந்தது. என் தாயின் தாயோ என்னைக்  கிட்டே வராதே என்று விரட்டி விட்டார்கள். அந்த மகளோ மரித்து  போனாள் என்று சொன்னார்கள். உங்கள் தாயின் தாய்க்கு உரிய சொத்துக்களிலே சமபங்கு அடைவதற்குரிய வாரிசாக இருந்தாள். அந்தச் சொத்து முழுவதும் எடுத்துக்கொள்ள தாயின் தாயார், அந்த மகளை எரித்துக் கொன்று விட்டார்கள். இந்தக் கொடூரமான செயலினால் சாபம் உங்கள் குடும்பத்தில் நிறைந்துருக்கிறது. ஆகவே நீங்கள் எந்தக் காரியம் செய்தாலும் காரியங்கள் வாய்க்காதேபோம். எங்கள் குடும்பத்தாரை மன்னியும். சாபத்தை மன்னியும் என்று கேட்கும்படி கூறி அந்த வீட்டை விட்டு புறப்பட்டேன். பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பதாக, கொலை செய்யாதிருப்பாயாக என்ற கற்பனைகளை மீறினதால் கிருபையை இழந்து சாபத்திற்கு உட்பட்டார்கள். காரியம் வாய்க்காதே போயிற்று.

அருமையான சகோதரனே, சகோதரியே, தேவனுடைய வார்த்தைகளை மீறி நீ வாழ்வாய் என்றால் சாபமும் பாடுகளும் நிறைந்து விடும்.

3. தீவினை செய்ய முயற்சித்தவர்கள் காரியம் வாய்க்காது

"அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று." சங்கீதம் 21:11

இன்று நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய தயவு கிடைக்கும்போது நம் வாழ்க்கை ஆசீர்வாதமாயும், அசையாததாயும் மாறிவிடும். சங்கீதம் 21:7 ல் 'ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார். உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார். ' என்று பார்க்கிறோம். நம்முடைய தேவன் நமக்கு தயை செய்கிற தேவன். தேவனுடைய இரக்கமானது நமக்கு அருளப்படும்போது, தயவு கிடைப்பதைப் பார்க்கிறோம். யாக்கோபு தேவரீர் அடியேனுக்குக் காண்பித்த தயவுக்கு நான் எவ்வளவேனும் பாத்திரனல்ல. கோலும்  கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன். இப்பொழுது இரண்டு பரிவாரங்களை உடையவனானேன் என்று சொல்வதைப் பார்க்கிறோம். 'யோசேப்பினிடத்தில் தயவு வைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன்  வீட்டுக்கு விசாரணைக் காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.' என்று ஆதி 39:4 ல் பார்க்கிறோம். 'இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும்போது வெறுமையாய்ப்  போவதில்லை.' யாத் 3:21ல் பார்க்கிறோம். அதன்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயை கிடைக்கும்படி செய்தால் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள். நமக்கு தயவு கிடைக்கும்போது ஆச்சரியமான விதத்தில் நம் காரியங்கள் வாய்க்கும்.  

4. கர்த்தருடைய ஊழியத்தைத் துன்பப்படுத்துகிறவர்களின் காரியம் வாய்க்காது

"கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்; ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள். தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும். " எரேமியா 20:11

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் முடிவுப்பரியந்தம் நம்மோடு இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நம்மைப் பரிசுத்தப்படுத்தி அவரை நம் வாழ்க்கையிலே அழைத்துக்கொள்ளும்போது, உங்களுடன் இருந்து ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். அவர் பயங்கரமான பராக்கிரமசாலியாய் நம்மோடு இருக்கிறார். நமக்கு விரோதமாய் பல வழிகளிலே தடைசெய்து, துன்பப்படுத்துகிறவரைப் பார்க்க முடிகிறது.

  ஒருமுறை நான் ஊழியம் செய்ய சென்ற இடத்தில் ஊழியம் ஒழுங்கு செய்த ஒய்வு பெற்ற ஆசிரியர் முந்தின நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சியைக் கூறினார்கள். அப்பகுதி ஒரு கடற்கரை பகுதி. ஊழியத்தின் போது அந்த ஓய்வு பெற்ற ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும் என்று இருந்தரர்களாம். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மீன் பிடிக்கும் கூடையைக் கொண்டு அவர் தலையில் அடிக்க விரைவாய் சென்றபோது அவர் அணிந்திருந்த கைலியானது தடுக்கி விழுந்து காயமடைந்தார். அதனால் அங்கிருந்த அவரின் பழைய மாணவர்களும் ஆசிரியரைத் தொடாதீர்கள் என்று தடுத்து நிறுத்தியபடியால் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள். கூட்டத்தில் செய்தி கொடுக்க வந்த ஊழியரின் காரின் மீது கல்லெறிந்தபடியால் காரின் கண்ணாடிகள் உடைந்து போயிற்று. அடுத்த நாள் அந்த ஆசிரியரின் வீட்டிற்கு ஒரு சகோதரர் வந்து விருந்தினராக வந்த ஊழியரின் காரில் முதலாவது கல்லை நான்தான் எறிந்தேன். அதற்க்கேற்ற காரியத்தைக் கர்த்தர் முதலாவது எனக்குச் செய்துவிட்டார். அமைதியாய் இருந்த கடலில் நிறுத்தப்பட்டிருந்த என் படகு அப்படியே அமிழ்ந்து போயிற்று. என் படகை வெளியே எடுப்பதற்குச் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகி விடுமே என்று மன்னிப்பு கேட்டு சென்று விட்டார்.

'உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எலும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்திரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.' ஏசாயா 54:17 ல் பார்க்கிறோம்.

கர்த்தரோ பராக்கிரமசாலியாய் நம்மோடு இருக்கும்போது, நம்மைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள். தங்கள் காரியம் வாய்க்காதபடியால் வெட்கப்படுவார்கள்.

இவ்விதமாய் தவறான நம்பிக்கையினாலும், கீழ்ப்படியாமையின் சாபங்களினாலும், கர்த்தர் தயவு செய்ய மக்களுக்கு விரோதமாய் பொல்லாங்கு செய்ய எத்தனம் பண்ணினாலும், தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாய் தவறான தீதான காரியங்களைச் செய்வதாலும் அவர்களின் காரியம் வாய்க்காதே போகிறது. கர்த்தரோ நம்மைப் பார்த்து இன்று சொல்லுகிற ஆறுதலின் ஆசீர்வாதமான வாக்கு 'அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்’ என்பதாகும்.

உங்கள் மகன்/மகள் திருமண காரியமாக முயற்சித்துக் கொண்டிருக்கலாம். வீட்டை வாங்க, வீட்டைக் கட்டும்  காரியமாக இருக்கலாம். வீட்டை விற்க அல்லது விஸ்தீரப்படுத்தம் காரியமாக இருக்கலாம். உங்கள் தொழிலில் விருத்தியடையச் செய்யும் காரியமாக இருக்கலாம். உங்கள் வியாபாரத்தைப் பெருகச் செய்வதாக இருக்கலாம். நீங்கள் எதைச் அதை வாய்க்கச் செய்கிற தேவன் இன்று நம் மத்தியில் ஜீவனுள்ளவராய்  இருக்கிறார்.

II. காரியங்கள் வாய்க்க செய்யவேண்டியதென்ன?

1. கர்த்தரைத் தேட வேண்டும்.

"தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருக்கிற சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்."        2 நாளாகமம் 26:5

16 வயதிலே உசியா இராஜாவாக்கப்பட்டான். தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாய் இருந்த சகரியாவின் நாட்களிலே கர்த்தரைத் தேடினபடியால் கர்த்தர் வாய்க்கச் செய்தார்.' அவன் புறப்பட்டுப்போய் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தியருக்குள்ளும் பட்டங்களைக் கட்டினான்.' (2 நாளா 26:6) 'உசியா எருசலேமிலே  மூலைவாசல் மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான். (2 நாளா.26:9). உசியாவுக்கு 3லட்சத்துக்கு மேற்பட்ட சேனைகள் இருந்தார்கள். கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான். (2 நாளா 26:14) இப்படியாய் அவன் செய்த எல்லாக் காரியங்களும் வாய்த்தது.

அன்பின் தேவப்பிள்ளையே, கர்த்தரைத் தேடும்போது ஒரு நன்மையையும் குறைவுப்படாது காக்கும் தேவன் இன்றும் ஜீவிக்கிறார். இன்று அதிசயமாய் நடத்துவார். கர்த்தரைத் தேடுகிறவர்களுடைய எல்லாப் பயத்தையும் நீக்கி விடுகிறார். இந்த மேலான வாழ்வை நாம் அவரைத் தேடும்போது, பெற்றுக்கொள்கிற பாக்கியசாலிகளாய் இருக்கிறோம்.

ஒருமுறை ஒரு குடும்பத்தார் தங்கள் பிள்ளையின் பெலவீனத்திற்காக ஜெபிக்க வந்தார்கள். அந்த 2 வயது குழந்தையிலே ஒரு போராட்டம். சரியாக மலம் போகாதபடியினால், ஆசனவழியிலே கூரான சோப்புத் துண்டை வைத்து மலம் கழியப்பண்ணுவார்கள். இதைத் தாங்க முடியாத குழந்தை தினமும் அழுதுகொண்டே இருக்கும். இரவிலும் பயம் நிறைந்து கதற ஆரம்பித்துவிடும். அந்தப் பெற்றோர்களுக்கு நீங்கள் இருவரும் இணைந்து ஒரு மனதோடு ஜெபியுங்கள். பிள்ளையிலுள்ள சகல பாடும் நீங்கி சீராகும் என்ற ஆலோசனைக்கு இணங்கினார்கள். குழந்தை தானாக மலம் கழிக்க ஆரம்பித்தது. இரவிலும் எல்லா பயத்துக்கும் நீங்கலாகி  சமாதானத்தோடு தூங்க ஆரம்பித்தது. இன்று பெற்றோராகிய நாம் பிள்ளையின் காரியங்களுக்காக கவலைப்படுகிறோம். ஆனால் கர்த்தரை முழுமனதோடு கணவன் மனைவியுமாக இசைந்து இணைந்து தேடும்போது, அற்புதமாக காரியங்களை வாய்க்கச் செய்வதைப் பார்க்க முடியும்.

2. வேதத்தை தியானிக்கும்போது உன் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்

" இந்த நியாயப்பிரமாணமான புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்வாய் ." யோசுவா 1:8

தேவனுடைய வார்த்தைகள் ஆவியும் ஜீவனும் நிறைந்த வார்த்தைகள். கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படும் வசனம், அது வெறுமையாய்த் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் என்று ஏசாயா 55:11 ல் பார்க்கிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே, தம்முடைய வார்தையைத் தியானிக்கிறவர்களைத் தேவன் நினைவு கூறுகிறவராய், அவர்களை வழிநடத்துகிறவராய் இருக்கிறார். இந்த உலகத்தில் ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டவர்கள் சுடரொளியைப் போல் பிரகாசிக்கிறார்கள். இந்த வார்த்தைகள் ஆலோசனையாக, ஆறுதலாக, தேற்றுகிற வார்த்தைகளாய்  இருக்கிறது. சங்கீதம் 23 ல் உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் என்று ஆசீர்வாத வாக்குறுதிகளினாலும், பாதுகாவலின் வாக்குறுதி களினாலும் தேற்றப்பட்ட சாட்சியைக் கூறியிருக்கிறார். பொல்லாப்பு நேரிடாதிருக்கிற இவைகள் வாக்குறுதியாய் இருக்கிறது. இந்த வசனத்தை அனுப்பி கர்த்தர் நம்மைக் குணமாக்குகிறார். சங்கீதம் 119:11 ல் ' உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்று சொல்வதைப் பார்க்கிறோம். இவ்விதமான ஆசீர்வாதங்களை உள்ளடக்கிய ஜீவ வசனங்களை, நியாயப்பிரமாண புத்தகத்தின் காரியங்களை நாம் தியானிக்கும்போது, கர்த்தர் நம் காரியங்களை வாய்க்கச் செய்வார்.

வேத ஆலோசனையின்படி தன் காரியங்களைச் செய்த ஒருவர் அதை எப்பொழுதும் தியானிக்க ஆரம்பித்தார். ஜெயங்கொண்டார். நாம் இந்த வேதத்தை நேசிப்போம். இரவும் பகலும் தியானிப்போம். நம் காரியங்கள் இன்று முதல் வாய்க்கும்

3.கர்த்தரால் அழைக்கப்பட்டவர்களின் காரியம் வாய்க்கும்

"...நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்." ஏசாயா 48:15

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பலவிதமான காரியங்களுக்கு நம்மை அழைத்திருக்கிறார். அந்த அழைப்பு நம் குறைகளைத் தீர்க்கக்கூடியதாய் இருக்கிறது. மத் 11:28 ல் 'வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் ' என்கிறார். அதைப்போல  நம் தாகத்தைக் தீர்ப்பதற்கு அழைத்துக்கொண்டேயிருக்கிறார் (யோவன் 7:37) தம்முடைய மகிமையினாலும், காருண்யத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்ய வல்லமை தருகிறது. அழைத்தவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே செய்வார். நம்மை அழைத்தவரின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளும்போது ஒருக்காலும் இடறலாகாதபடி உங்கள் வாழ்க்கை அமையும். கர்த்தர் அந்தகாரத்தினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்க நம்மைத் தெரிந்து கொண்டிருக்கிறார். சொந்த ஜனமாக மாற்றியிருக்கிறார். நம்மை பரிசுத்தத்திற்கு அழைத்திருக்கிறார். அழைத்தவர் பரிசுத்தராயிருப்பதனால் நாமும் பரிசுத்தமாய், அவருடைய அழைப்புக்குப் பாத்திரராய் மாற வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டு அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலுக்கு விடுதலை ஆக்க வேண்டும் என்று மோசேயை அழைத்தார். மோசேயானவன் தேவனுடைய சத்தத்தின்படி நடந்து தேவனுடைய ஜனங்களை மீட்டு, கர்த்தரின் கரத்தில் வல்லமையான கருவியாய் செயல்பட்டான்.

அருமையான சகோதரனே, சகோதரியே, நாம் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நம்மை அழைத்திருக்கிறார் என்பதை அறிந்து அவர் அழைப்பை ஏற்று அவர் வலி நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம்.

4. கர்த்தர் உன்னோடு இருக்கும்போது காரியங்கள் வாய்க்கச்செய்வார்

"கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும்..." ஆதியாகமம் 39:23

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்க விரும்புகிறார். அவர் நம்மோடு இருப்பதற்கு நம்மை அப்பணித்தால் நம் காரியங்கள் எல்லாவற்றையும் வாய்க்கச் செய்வார். யோசேப்போடு இருந்தார். இந்த யோசேப்புக்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்று சொப்பனத்தின் மூலம் வெளிப்படுத்தினார். அவனுக்கென்று அறிவிக்கப்பட்ட சொப்பனத்தைச் சகோதரரோடு பகிர்ந்து கொண்டபடியால் பகை உண்டாயிற்று. ஆகவே பாடுகள் பெறுக ஆரம்பித்தது. பாடுகளும் துரோக செய்கைகளும் அவனுடைய வாழ்க்கையில் உண்டானது. பார்வோனுடைய பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போர்த்திப்பார், இந்த யோசேப்பை இஸ்மவேலரிடத்திலிருந்து விலைக்கு வாங்கினான். அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டில் இருந்தான். கர்த்தர் அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும் எஜமான் கண்டு, தன் வீட்டுக்கு விசாரணைக்காரனாக்கி, தன் வீட்டுக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தான்.

அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தர் உன்னோடு இருக்கிறார். என்றும், உன் காரியங்கள் எல்லாம் வாய்க்கின்றது என்றும் மற்றவர்கள் அறியத்தக்கதாக உன் வாழ்க்கை இருக்க வேண்டும். அப்படி இருக்கத்தக்கதாக உன் வாழ்க்கை இருக்குமானால் உன்னை மேன்மைப் படுத்துவார். உன் உத்யோக உயர்வு அடையவும், உனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பை ஒருவரும் பறிக்க முடியாதபடி நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.

இந்த யோசேப்பு கர்த்தருக்கு பயந்து பரிசுத்தமாய் தன்னைக் காத்துக்கொள்ள அர்ப்பணித்த ஒரு மனிதன். பாவ சோதனை ஏற்பட்டது. அவன் கனியற்ற அந்தகார கிரியைகளுக்கு உட்படாமல் தன்னை விலக்கிக் காத்துக்கொண்டவன். சோதனை நேரத்தில் கர்த்தருக்கு விரோதமாக பாவத்தைச் செய்வது எப்படி என்று பாவ சோதனைக்கு விலகி ஓடினவன். இன்று நாமும் கூட பாவ சோதனைக்கு உடன்படாதபடி கர்த்தருக்குப் பயந்து, சோதனைகளுக்கு விலக வேண்டும். விலகி ஓடின யோசேப்பு அநியாயமாய் தண்டிக்கப்பட்டான். சிறைச்சாலையிலே தள்ளப்பட்டான். நான் உன்னைவிட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொன்ன கர்த்தர் அவனோடு இருந்தபடியால், சிறைச்சாலைத் தலைவன் அவனது செயலைக் கண்டு காரியங்களை விசாரிக்கவில்லை.

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் வேலை ஸ்தலத்தில், உன் வீட்டில் நீ வாழ்கிற எல்லைகளில் பலவிதமான விசாரணைகளினால் நெருக்கப்பட்டு கொண்டிருக்கிறாயா? அந்த யோசேப்பைப் போல கர்த்தர் வெறுக்கிற காரியங்களை ஒதுக்கித் தள்ளுவாயாக. சிறைச்சாலை தலைவனைப் போல ஒருவரும் உன்னை விசாரியாதபடி கர்த்தர் கிரியைச் செய்வார். இன்றைக்கு பரிசுத்தமான தேவன் உன்னோடு தங்கி தாபரிப்பதற்கு ஆவி, ஆத்துமா, சரீரத்தை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பாயானால் அவர்  உன்னோடு இருந்து உன்னைக் கண்ணின்மணிபோல் காப்பார். அந்தக் கல்வாரியின் அன்பில் நிறைந்திருக்கும்போது, உன் பாடுகளைச் சுமந்த தேவன், உனக்குள் புதுவாழ்வு உருவாக வழியை உண்டாக்குவார். உண்மையானவர்களை உயர்த்துகிற தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறார். யோசேப்பின் நுகங்களை முறித்து, அவர் அறிவித்தபடியே உயர்த்தினவர் மாறாதவராயிருக்கிறார். அந்த மகிமையின் தேவன் இன்று உன் வாழ்க்கையிலே மகிமையான காரியங்களைச் செய்ய அவர் வழி நடக்கவும், அவரை ஏற்றுக்கொள்ளவும் உன்னை ஒப்புக்கொடுப்பாயா?

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின்பணியில்,

சகோ .C. எபனேசர் பால்.