"...நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன்..."

 சங்கீதம் 12:5

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன். ஒருமுறை ஆலயப் போதகரும், அவர் மகனும் ஜெபிப்பதற்கு வந்தார்கள். போதகரின் இடுப்பில் இருந்து உள்ளங்கால் வரை தேன்கூடுபோல் கொப்பளங்களும் கட்டிகளும் இருந்தது. அவருடைய மகனுக்கோ கழுத்திலிருந்து உள்ளங்கால்வரை கொப்பளங்களும்,கட்டிகளும், இருந்தது. உட்காரவோ, படுக்கவோ முடியாத மிகுந்த வேதனையான நிலை. இது திடீர் என எனக்கும் மகனுக்கும் வந்துவிட்டது. பல மருத்துவர் கொடுத்த மருந்துகளும், ஊசியும் இதுவரை எந்த மாற்றத்தையும், சுகத்தையும் தரவில்லை. ஆகையால் உங்களிடம் ஜெபிக்க வந்தேன் என்று கூறினார்கள். ஐந்து வயது சிறுவன் தாங்கமுடியாத வேதனையுடன் அழுதுகொண்டே இருந்தான். தூக்கம் கண்களில் நிறைய இருந்தது. எப்படி படுப்பது என்ற போராட்டம்.

ஜெபித்துவிட்டு உங்கள் பகுதியில் உள்ள ஆலயத்திற்குச் சொந்தமான நிலத்தை எனக்குக்  கிரயத்திற்குக் கொடுங்கள் என்று கேட்டாரா? என்றபோது ஆம் என்றார்கள். அத்துடன்  இது கர்த்தரின் ஆலயத்திற்குப் பாத்தியமானது. இதை வாங்க வேண்டும் என்று மீண்டும் என்னிடம் வரவேண்டாம். அதை நான் இருக்கும்வரை உம்மால் வாங்கமுடியாது என்று கூறி அனுப்பிவிட்டேன் என்றார். அவரின் தீங்கின் செயலால் நீங்கள் இந்த இடத்தைவிட்டு விரைவாய் செல்லவேண்டும் என்று உங்களுக்கு எதிராக செயல்பட்ட ஒரு தந்திரமாக இருக்கிறது. நாம் இதற்காக ஜெபிப்போம் என்று ஜெபம் செய்தோம். அவர்களும் தங்கள் பகுதிக்கு சென்றார்கள். எவ்விதமாய் திடீர் என வேதனை  வந்ததோ, அதே விதமாய் திடீர் என பருக்களும், புண்களும் சுகமடைந்து நீங்கின. இதைச் செய்த மனிதனோ மூன்றே மாதத்தில் மரித்துப்போனார்.

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் ஆயுதம் வாய்க்காதேபோம் என்ற வாக்கின்படி, கர்த்தாதி கர்த்தர் தமது வல்லமையை வெளிப்படப் பண்ணி சுகமளித்தார். தீய நோக்கத்துடன் உனக்கு விரோதமாக செய்யப்படும் சூனியங்கள் வாய்க்காதேபோம். எரேமியா 20:11 ன் படி கர்த்தர் அவர்களின் சூனியங்கள் வாய்க்காது போகச் செய்வார். வெட்கப்படுவார்கள். மறக்கப்படாத நித்திய இலச்சை அடைவார்கள். எனக்கும் என் குடும்பத்துக்கும் சூனியம் செய்திருக்கிறார்களே என்று கலங்காதே. உலகத்திலிருக்கிறவரிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவரே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். அவர்களை நீங்கள் தேடியும் காணத்திருப்பீர்கள். அன்பு சகோதரனே, சகோதரியே, கலங்காதே, கர்த்தர் உனக்குப் பலத்த அரணாயிருப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்