செய்தி

"நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்..."

சங்கீதம் 37:34

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் உயர்த்துகிற அன்பின் தேவனாயிருக்கிறார். இந்த உயர்த்துகிற பெரிதான காரியத்தை இந்த நாளிலே நாம் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அவர் எவ்விதமாய் நம்மை உயர்த்துவார், யாரை உயர்த்துவார் என்று அறிந்து கொள்வதோடு அவர் உயர்த்துகிற காரியங்கள் யார் மேல், எவர் மேல் என்று நான் சுருக்கமாக இந்தச் செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய தேவன் நம்மை உயர்த்துகிற ஆற்றல் உடையவர். அவர் உன்னை உயர்த்துவார் என்று சொன்னால், அது மெய்யாகவே நடைபெறக்கூடியது. நான் எளியவன், நான் மிகவும் எளிமை நிறைந்த குடும்பத்தைச் சார்ந்தவன், நான் அற்பமாய் எண்ணப்பட்டவன், என்னுடைய குடும்பத்தில் ஒருவரும் படித்தது கிடையாது என்று பலவிதமான காரியங்களை எண்ணிக் கொண்டிருக்கலாம். உன்னை உயர்த்துகிறவர் சர்வ அதிகாரமுடையவர், சர்வ வல்லவர். நீங்கள் எதிர்ப்பார்ப்பதற்கு மேலான விதத்திலே, நீங்கள் நினைப்பதற்கு மேலான வழிகளிலே அவர் உங்களை உயர்த்தி, மேன்மைப்படுத்துகிறவர்.

I. யாரை உயர்த்துகிறார்?

1. எளியவர்களை உயர்த்துகிறார்

"...எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்" சங்கீதம் 113:7

எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். இது ஒரு ஆச்சரியமான காரியம். நம்முடைய தேவன் குப்பையிலிருந்து உயர்த்துகிற அன்பு நிறைந்த தேவன்.

ஒருமுறை கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி, ஒரு கூட்டத்திலே ஊழியங்களைச் செய்யும்படி நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த இடத்திலே இன்னொரு தேவ மனிதரும் ஊழியங்களைச் செய்ய வந்திருந்தார். அவருடைய வாழ்க்கையைக் குறித்து நான் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியடைந்துவிட்டேன். எவ்விதமாய்க் கர்த்தர் எவரையும் உயர்த்தக் கூடியவர், எவரையும் பெரிதாய் மாற்றக்கூடியவர் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

அவருடைய தாய், தகப்பனார் ஒரு எளிமையான குடும்பத்தார். ஆரம்ப காலத்திலே அவர்கள் தொழுநோயினால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையிலே ஒரு சமயத்திலே பிச்சை எடுத்த நிலைமை தான். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்புவரை தான் படித்தவன். அவனை ஒரு கிறிஸ்துவ குடும்பத்திற்கு, வீட்டில் வேலை செய்வதற்கு வேலைக்கு விட்டார்கள். அந்தக் குடும்பத்தார் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவனுக்கு போதித்தார்கள். அதினிமித்தமாய் வேதத்தை நேசிக்கிறவனாய் மாறினான். அவனுக்கு வாசிக்க, எழுதத் தெரியும். ஆனால் அவன் கற்றுக்கொண்ட காரியங்கள் மிகுதியானது. அதன் நிமித்தமாக அவன் வாழ்க்கையிலே கர்த்தர் அவனை உயர்த்த ஆரம்பித்தார். அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தார் சிங்கப்பூருக்குச் சென்றார்கள். அவன் அங்கு ஆங்கில மொழியிலும் பேசக் கற்றுக் கொண்டான்.ஆங்கில மொழியிலும் வேதத்தை ஆராய்ந்து அறிவதற்குக் கர்த்தர் அவனுக்கு உதவி செய்தார். அவன் வாழ்க்கையே மாறியது. பல சத்தியங்களைத் தெளிவாய்ப் போதிக்கக்கூடிய ஒரு ஊழியராய் மாறினார். அவர் சிங்கப்பூரிலே ஒரு பெரிதான வேதாகமக் கல்லூரியிலே பேராசிரியராக மாறினார். அதோடு மாத்திரமல்ல, பல நாடுகளுக்குச் சென்று வேதத்தை கல்லூரிகளில் போதிக்கிறவராய் மாறினார்.

 

ஒரு அற்ப குடும்பத்தில் புரிந்தவர். எளிமையான வாழ்க்கை. ஆனால் கர்த்தர் அவரை உயர்த்தினார். குப்பையிலிருந்து உயர்த்துகிற தேவன் இன்றும் ஜீவிக்கிறார். ஐயோ, என் வாழ்க்கை இன்று குப்பையாய் இருக்கிறதே, எல்லாராலும் நான் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறேனே, என் கணவன் என்னை விரும்பவில்லை, என் மனைவி என்னை நேசிக்கவில்லை, என் பெற்றோர் என்னைக் கைவிட்டார்கள், நான் ஒரு பரதேசியைப் போல் இருக்கிறேன் என்று கலங்கிக் கொண்டு இருக்கிறாயா? உன்னை நேசிக்கிற கர்த்தர் இன்றும் ஜீவிக்கிறார். அவர் ஒருபோதும் உன்னைக் கைவிடுகிற தேவன் அல்ல. அவர் எளியவனை, வாழ்க்கையிலே எளிமையான நிலைமையில், அற்பமாய் வாழ்ந்துகொண்டு இருக்கிற உன்னை உயர்த்துவதற்கு உண்மையுள்ள தேவன்.

2. கர்த்தருடைய நாமத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களை உயர்த்துகிறார்

"நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்." தானியேல் 3:17

கர்த்தருடைய நாமத்தின்மேல் யாருக்கெல்லாம் முழுமையான நம்பிக்கை இருக்கிறதோ அவர்களை அவர் உயர்த்துகிற தேவன். இங்கு மூன்று வாலிபர்களுடைய ஒருமனதையும் நம்பிக்கையையும் பார்க்கிறோம். இந்த மூன்று வாலிபர்களும் அந்தத் தேசத்தின் ராஜாவுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாதபடி, உலகத்தாரால் உண்டாக்கப்பட்ட சிலையை வணங்குவதற்கு இடம் கொடுக்கவில்லை. அவர்கள், 'நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்' என்று ராஜாவுக்குப் பதில் சொன்னார்கள். அந்த நம்பிக்கையைக் குறித்து தெளிவாய்ப் பேசின போது, அந்த ராஜாவுக்கு மிகுதியான கோபம். அவனுடைய கோபத்தினிமித்தமாய் எரிகிற அக்கினிச் சூளையை ஏழு மடங்கு சூடாக்கினான். என்ன நடந்தது? அந்த மூன்று வாலிபர்களையும் கட்டி, அக்கினிச் சூளைக்குள்ளாக போடப்பட்டார்கள். மூன்று வாலிபர்களையும் தூக்கிக் கொண்டுபோன பலவான்களெல்லாம் அக்கினியிலே கருகிச் செத்தார்கள். அந்த மூன்று வாலிபர்களும் அக்கினிச் சூளையில் மிகுந்த மகிழ்ச்சியோடு, தேவப் பிரசன்னத்தோடு உலாவி வந்தார்கள். அக்கினியானது அவர்கள் மேல் பெலன்கொள்ள முடியவில்லை.

ராஜாவுக்குப் புரியவில்லை, மூன்று பேரைத் தானே போடுவித்தோம். இப்போது நான்கு பேர் அக்கினியில் உலாவுகிறார்களே என்று உள்ளத்தில் பயம் கொண்டவனாய் அருகில் வந்து, அவர்களை வெளியே வரும்படி அழைத்தான். அவர்கள் மேல் எந்த சேதமும் இல்லை.

உன் உள்ளத்தில் எப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கிறது? மரணம் நேரிட்டாலும் பரவாயில்லை, அவரே, என் நம்பிக்கை, அவரே எனக்கு எல்லாம் என்கிற நம்பிக்கையுடையவர்களைக் கர்த்தர் விடுவித்தார், உயர்த்தினார்.

3. தங்களைத் தாழ்த்துகிறவர்களை உயர்த்துகிறார்

"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." யாக்கோபு 4:10

தங்களைத் தாழ்த்துகிறவர்களைக் கர்த்தர் உயர்த்துகிறார். அநேக நேரங்களில், தாழ்மைக்குப் பதிலாக பெருமை பாராட்டுகிற மக்கள் மிகுதியாயுண்டு. ஒருமுறை வெளிநாட்டு ஊழியம் ஒன்றில் மிகுந்த கட்டாயப்படுத்தி, நீங்கள் ஒரு போட்டோ எங்கள் குடும்பத்தோடு எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தக் குடும்பத்தாரோடு நான் போட்டோ எடுத்துக் கொண்டேன். போட்டோ எடுத்த பிறகு அந்தக் குடும்பத்தார், அந்த நாளிலே எடுத்த போட்டோவை எனக்கு அனுப்பி வைத்தார்கள். அதைப்  பார்த்த போது, கணவனும், மனைவியும் தங்கள் விரல்களிலே மாட்டியிருக்கிற மோதிரங்கள் நன்றாய்த் தெரியும்படியாக தங்கள் கைகளை வைத்திருந்ததைக் கண்டேன், ஆச்சரியப்பட்டேன். எதற்கு இந்தப் போட்டோ? தங்களுக்கு எல்லா விரல்களிலும் இவ்விதமாய் மோதிரம் அணியப் பட்டிருக்கிறது என்று காட்டுவதற்காகவே? என்னுடைய மகன், ஐந்தாவது விரலிலும் போட்டிருக்கலாம், கர்த்தர் இவர்களுக்கு ஆறு விரல்கள் கொடுத்திருந்தால் அவைகளிலும் போட்டிருக்கலாம் என்று கேலியாகச் சொன்னான். அவர்களுடைய வாழ்க்கையின் நிலையைப் பார்க்கும் போது, தாங்கள் செல்வந்தர், எல்லா விதமான காரியங்களும் இருக்கிறது என்று எண்ணுகிற எண்ணமுடையவர்கள் என்றுதான் அந்தப் போட்டோ பிரதிபலித்தது.

அன்பு சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய சமுகத்திலே நாம் எவ்விதமான மனப்பான்மையோடு இருக்கிறோம்? நான் படித்தவன், என் படிப்பு, என் அழகு, என் அந்தஸ்து என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாயா? "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்." என்று மத்தேயு 23:12 தெளிவாய்ச் சொல்கிறது.

தன்னைத் தாழ்த்துகிறவரை உயர்த்துகிறார். தாழ்மையின் ரூபத்திலே வந்த இயேசு கிறிஸ்து, கழுதையின் மேல் ஏறிச் சென்ற இயேசு கிறிஸ்து, மாறாத மகிமை நிறைந்தவராய் இருக்கிறார். அவர் உயர்த்துகிற ஆற்றலுடையவர். உன்னை உயர்த்துகிற வல்லமையுடைய தேவன், ஒருவேளை நீ வேலை செய்கிற இடத்திலே நீ தாழ்த்தப்பட்டிருக்கலாம். உனக்குத் தகுதியான வேலை தராதபடி தரக் குறைவான வேலையை நீ செய் என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். உன்னுடைய அதிகாரிகள், உனக்கு மேலுள்ள மக்கள் உன்னை அற்பமாய் எண்ணி பேசிக்கொண்டிருக்கிற படியினால் நீ சோர்வோடு இருக்கலாம். உன் உள்ளத்தைப் பார்க்கிற தேவன், உன் நிலைகளை அறிந்த தேவன் இன்றைக்கு உன்னை உயர்த்த வேண்டுமென்று விரும்புகிறார். தாழ்மையின் ரூபத்தில் வந்த இயேசு கிறிஸ்து தாழ்மையுள்ளவர்களை நேசிக்கிறார்.

உன் நிலைகளை அறிந்த தேவன் இன்றைக்கு உன்னை உயர்த்த விரும்புகிறார். 1 சாமுவேல் 2:8ல் அன்னாள் தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறவர் என்று சொல்வதைப் பார்க்கிறோம். அந்தக் கர்த்தாதி கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

4. சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்

கர்த்தர்  சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரை மட்டும் தாழ்த்துகிறார்.” சங்கீதம் 147:6

சாந்தகுணமுள்ளவர்களைத் தேவன் உயர்த்துகிறார். இந்த உலக வாழ்க்கையிலே சாந்தகுணம் மிக முக்கியமானது. ஆவியின் கனிகளிலே ஒன்று தான் இந்த சாந்தகுணம். இந்த சாந்தகுணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களை அவர் மேன்மைப் படுத்துகிறார். சந்தகுணமுள்ளவர்களை நேசிக்கிறவர், அவர்களுடைய வாழ்க்கையிலே பூமியைப் சுதந்தரித்துக் கொள்வதற்கு மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாய் இருக்கத்தக்கதாக அவர்களை உயர்த்துகிறார் என்று சங்கீதம் 37:11-ல் பார்க்கிறோம்.

இந்த ஆவியின் கனிகளினால் நிறைந்த பண்புகள் நமக்குத் தேவை. இன்றைக்கு அநேகர் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன், பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கிறேன் என்று சொல்லுகிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் சொந்தப் பிள்ளைகளைக் கூப்பிடும்போது, நாயே, பேயே என்று கூப்பிடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் அன்பு இல்லை. கிறிஸ்துவின் அன்பு இல்லாத ஒரு ஆவி வஞ்சிக்கிற ஆவி. கிறிஸ்துவின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறேன், அந்நிய பாஷை பேசுகிறேன், தீர்க்கதரிசனம் சொல்லுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். உங்களுக்குள்ளாய் கிறிஸ்துவின் அன்பு, அன்பின் பண்புகளாகிய சாந்தம், இச்சையடக்கம். இவைகள் இல்லை என்று சொன்னால், அது வஞ்சிக்கிற ஆவியின் தந்திரச் செயல். இன்றைக்குப் பூமியிலே அநேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது, நான் ஆவிக்குள்ளாய் வளர்ந்திருக்கிறேன், நான் ஆவிக்குள்ளாய் ஆசீர்வாதங்கள் அடைந்திருக்கிறேன், வரங்களைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அன்பின் பண்புகள் கிடையாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இந்தச் சாந்தகுணம் இல்லையென்று சொன்னால், உங்கள் வாழ்க்கையிலே ஆவியின் கனி இல்லையென்று சொன்னால் நீங்கள் மாய்மாலமான ஒரு கிறிஸ்துவ வாழ்க்கை வாழ்கிறீர்கள். ஆனால் சாந்தகுணம் இருக்குமானால், சாந்தகுணமுள்ளவர்களை அவர் உயர்த்துகிற தேவனாயிருக்கிறார். சாந்தகுணமுள்ளவர்களை அவர் விரும்புகிற தேவன். அவர்களுடைய வாழ்க்கையிலே பலவிதமான ஆசீர்வாதங்களை அனுதினமும் அருளுகிற தேவனாயிருக்கிறார். எளியவனை உயர்த்துகிறவர், விடுதலைப் பெற்றவர்களை உயர்த்துகிற தேவன், தாழ்த்தின மக்களை உயர்த்துகிற தேவன், சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிற தேவன் இன்று ஜீவிக்கிறார்.

I.எவைகள் மீது உயர்த்துகிறார்?

1. கன்மலையின் மீது உயர்த்துகிறார்

"தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய  கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின் மேல்  உயர்த்துவார்." சங்கீதம் 27:5

கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நீ உயர்த்தப்பட்ட ஒரு நல்ல வாழ்க்கை. அவருக்குள்ளாய் உயர்ந்திருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை, அவர்மூலமாய் பெற்றுக்கொண்ட ஒரு வாழ்க்கை. இன்று அநேகருடைய வாழ்க்கையிலே, கர்த்தரால் உயர்த்தப்படுகிற மேலான பாக்கியத்தை விரும்பி நாடுகிறார்கள். ஆனால் அவர்கள் பெறமுடியவில்லை. வேதத்திலே தாவீது அதை அழகாய் "பயங்கரமான குழியிலும், உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின் மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி" என்று சங்கீதம் 40:2- ல் சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.

பயங்கரமான உழையான சேற்றிலிருந்து என்னை அவர் தூக்கியெடுத்தார். தூக்கியெடுத்தவர் கனமழையின் மேல் நிறுத்தினார், என் அடிகளை உறுதிப்படுத்தினார் என்று கூறுவதைப் பார்க்கிறோம். கன்மலை என்று சொன்னாலே, மீண்டுமாய் வழுக்கி, சேற்றில் விழாதபடி உன்னை உறுதியாய் நிறுத்துகிற நிலையான, சீரான வாழ்க்கையாகும். சிறந்த வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்குக் கன்மலையின்மேல் உயர்த்துகிற ஒரு பெரிய பாக்கியம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உழையான சேறு என்று சொன்னால், பாவ வாழ்க்கையாகும். உலகத்தாரால் வெறுக்கப்பட்ட பாவங்களைச் செய்து, தேவன் விரும்பாத காரியங்களைத் துணிகரமாய் அனுதினமும் செய்து, வெறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வாழ்க்கை நீ வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் இன்றைக்கு இந்த உழையான சேற்றிலிருந்து உன்னைத் தூக்கியெடுப்பதாய் இருக்கிறது. அவரது வல்லமையான செயலானது சங்கீதம் 9:13ல் 'மரண வாசல்களிலிருந்து தூக்கியெடுக்கிற தேவன்' என்று சொல்லியிருக்கிறது. சங்கீதம் 18:16ல் 'ஜலப்பிரவாகத்திலிருந்து நம்மைத் தூக்கியெடுக்கிற தேவன்' என்று சொல்லியிருக்கிறது.

தேவன் உன்னைக் கன்மலையின் மேல் நிறுத்துகிறார். அது பெரிதான ஆசீர்வாதம். கன்மலையின் மேல் நிறுத்தப்படுவது என்று சொன்னாலே அவரது பாதுகாவலைப் பெற்றுக் கொள்கின்ற ஒரு பெரிதான நல்ல வாழ்க்கை.  ஏசாயா 33:16ல் 'கன்மலைகளின் அரண்கள் அவனுக்கு அடைக்கலமாகும்' என்று சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். கன்மலையின் அரண்கள், பாதுகாவல் உனக்கு அருளப்படுவது பெரிய பாக்கியம். பாதுகாவலோடு உன்னை உயர்த்தி நிறுத்துகிற வாழ்க்கை. சங்கீதம் 81:16ல் உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்கின தேவன், கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்' என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். கன்மலைத் தேன் என்று சொன்னாலே தேவனுடைய வார்த்தைகள். சங்கீதம் 19ல் தேவனுடைய வார்த்தையைக் குறித்து, அது தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளது மாயிருக்கிறது என்று சொல்லியிருக்கிறது. இந்த வாக்குத்தத்தங்களினாலே, ஆறுதலின் வார்த்தைகளினாலே, ஆசீர்வாதத்தின் காரியங்களினாலே தேற்றுகிற காரியங்களினாலே அவர் உன்னைத் திருப்தியாக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார். ஆகவே, கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குகிற தேவன் இந்தக் கன்மலையின் மேல் உன்னை நிறுத்துவார். தீங்கு உன்னை மேற்கொள்ள முடியாதபடி, உனக்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட எல்லாச் சூனியத்திலிருந்தும், எல்லா மனிதருடைய தந்திரமான செயலிலிருந்தும் உன்னை மூடி மறைத்துக் கொண்டவர், உன்னை ஒழித்துக் காப்பாற்றியவர், இந்தக் கன்மலையின்மேல் உயர்த்துகிற ஆண்டவராயிருக்கிறார்.

2. எல்லா ஜாதியார் மத்தியிலும் உயர்த்துகிறார்

"கர்த்தர் எல்லா ஜாதிகள் மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது." சங்கீதம் 113:4

எல்லா ஜாதிகள் மேலும் உயர்ந்தவர், உன்னை எல்லா ஜாதிகள் மேலும் உயர்த்துவார். நீ அறியாத மக்கள் மூலமாய் போஷிக்கப்படுவாய், பராமரிக்கப்படுவாய். ஏனென்று சொன்னால் அவருடைய வல்லமை அவ்விதமானது. அவருடைய கிருபை, செயல் அப்படிப்பட்டது. அநேக நேரங்களிலே, சில தேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களுடைய மொழியையும், வழிபாடுகளையும் புரிந்துகொள்ள முடியாதிருந்தாலும், கர்த்தருடைய அன்பை ருசிக்கத்தக்கதாக, அவருடைய போஷிப்பை, பராப்பரிப்பை அறியத்தக்கதான கிருபையை கர்த்தர் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே, எந்த தேசத்தாராயிருந்தாலும், எந்த ஜாதியாராயிருந்தாலும் அவர்கள் மேல் உயர்த்துகிற உன்னத தேவன் நமக்கு இருக்கிறார். அவர் உயர்ந்தவர், உங்களையும் உயர்த்துகிறவர். ஆகவே, இப்படிப்பட்ட உயர்வைப் பெற்றுக் கொள்ளத்தக்க பாக்கியசாலிகளாய் இருக்கிறோம். அன்பின் தேவன் இவ்விதமாய் நம்மை உயர்த்தி, மேன்மைப்படுத்தி நம்மை ஆசீர்வதிக்கிறவராய் நம் மத்தியிலே அசைவாடிக்கொண்டிருக்கிறார்.

3. சத்துருக்கள் மத்தியில் உயர்த்துவார்

"இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணுவேன்." சங்கீதம் 27:6

நம்மைச் சுற்றிலுமுள்ள கண்களுக்குத் தெரிந்த, கண்களுக்குத் தெரியாத அத்தனை சத்துருக்கள் மத்தியிலும் நம் தலையை உயர்த்துகிறவர் என்று பார்க்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அநேக நேரங்களிலே, நம்மைச் சுற்றிலும் இருக்கக்கூடிய சத்துருக்களை நாம் அறியாதபடி, புரிந்து கொள்ள முடியாதபடி இருக்கிறோம். இவர்கள் ஏன் எனக்குச் சத்துருவாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிற எண்ணங்களெல்லாம் வரலாம். "அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது." என்று சங்கீதம் 97:3-ல் பார்க்கிறோம்.

சுற்றிலும் இருக்கக்கூடிய சத்துருக்களைச் சுட்டெரிப்பது மாத்திரமல்ல, சத்துருக்களின் மத்தியில் உயர்த்துகிற தேவன். ஆகவே, இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே நம்மைக் கன்மலையின் மேல் உயர்த்துகிற தேவன், எல்லா ஜாதிகள் முன்பாக உயர்த்துகிற தேவன், உன்னைச் சுற்றிலுமுள்ள பொறாமை நிறைந்த சத்துருக்கள் மத்தியிலே உன்னை உயர்த்துகிறவராயிருக்கிறார்.

4. உத்தியோகத்தில் உயர்த்துகிற தேவன்

"மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;" ஆதியாகமம் 40:13

"மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக் காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி," ஆதியாகமம் 40:20

குற்றப்படுத்தப்பட்டு, குறை காணப்பட்டு, தண்டனையாய் சிறைச் சாலையிலே அடைக்கப்பட்டிருந்த யோசேப்புடைய வாழ்க்கையிலே கர்த்தர் ஒரு காரியத்தை வெளிப்படுத்தி, அவனை உயர்த்தினதைப் பார்க்கிறோம். சிறைச்சாலையிலே யோசேப்பினுடைய தாலந்துகள், அவனுடைய ஞானம், அவருடைய கிருபை வரங்கள் வெளிப்படும்படியாக தேவன் ஒரு மனிதனை ராஜாவின் அரமனையிலே வைத்து உயர்த்தினத்தை நாம் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அந்த உயர்த்தப்பட்ட பானபாத்திரக்காரன் ராஜாவிடம் யோசேப்பைக் குறித்துச் சொன்னார்.

இன்றைக்கு அருமையான சகோதரனே, வாழ்க்கையிலே இழந்துபோய் விட்டேன், நான் உயர்த்தப்படவில்லை, என் வேலை ஸ்தலத்திலே எனக்கு எந்த விதமான சம்பள உயர்வும் தரவில்லை, எனக்கு வேலை உயர்வு தரவில்லை, நான் பெறவேண்டிய உயர்வை மற்றவன் பெற்றுவிட்டான், வீணான பலிகளை என்மேல் சுமத்திவிட்டு, அவன் உயர்ந்திருக்கிறான் என்று கலங்கி யிருக்கிறாயா? வாழ்க்கையிலே சோர்ந்து போய் இருக்கிறாயா? மனிதனல்ல, உலகத்தில் உன்னை உயர்த்துகிறவர் இன்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறார்.

5. காத்திருந்து வழியைக் கைக்கொள்கிறவர்களை உயர்த்துகிறார்

"நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய்." சங்கீதம் 37:34

கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும், அவர் வழியைக் கைக்கொள்ள வேண்டும். நானே வழி என்று சொன்னாரே, அவர் வழியில் நடப்பதற்கு இந்த நாளிலே நீ உன்னை அர்ப்பணிப்பாயானால் உன்னை நடத்துகிற தேவன், உன்னை ஆசீர்வதிக்கிற தேவன், உன் தலையை எல்லாருக்கும் மேலாய் உயர்த்துகிறவராயிருக்கிறார். நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளத்தக்கதாக, பூமியிலுள்ள மேன்மையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, நன்மைகளை அனுபவிக்கச் செய்கிறவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனாயிருக்கிறார். இந்த மகிமை நிறைந்த தேவனுடைய வழியைக் கைக்கொள்ள உன்னை ஒப்புக்கொடுப்பாயா? கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்று சொன்னபடியே, நீ பாக்கியவானாய் மாறுவாய், எருசலேமின் வாழ்வைக் காண்பாய், உன் பிள்ளைகளின் வாழ்க்கையையும், பிள்ளைகளின் பிள்ளைகளின் வாழ்க்கையையும் காண்பாய், உனக்கு நன்மையும் கிருபையும் பெருகியிருக்கும்.

அவர் வழி நடப்பது என்று சொன்னால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் மேய்ப்பராய் முழுமனதோடு ஏற்று, நம்பி, அவருக்குப் பின்செல்லுகிற வாழ்க்கை. இன்றைக்கு நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று சொன்னால், அவர் உங்களை ஆசீர்வதிக்கிறவராய், உயர்த்துகிறவராய், உன்னதமான நன்மைகளினால் முடிசூட்டுகிறவராய் இருக்கிறார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.