செய்தி

"...உன்னை மீட்டுக்கொண்டேன்;
உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்."

 ஏசாயா 43:1

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.

சிலர் தங்களுடைய உடமைகளை, வீடுகளை, நகைகளை யாரிடமாவது தங்களுடைய பணத்தேவையினிமித்தமாக அடகு வைப்பது உண்டு. ஏற்ற காலத்தில் பணத்தைக் கொடுத்து அதை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையானால் அதை இழக்க நேரிடும். சில மிருகங்கள் சிறிய ஜெந்துக்களைப் பிடிக்கும்போது, தப்பிக்கொள்ள முடியாதபடி அதற்கு இரையாகி விடுகிறது, அதை மீட்க ஒருவரும் இல்லை.

ஒரு முறை என் அறையில் நான் இருந்த போது, அழகாக வண்டு ஒன்று, அழகான இறக்கையோடு அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த போது, கர்த்தர் எவ்வளவு நேர்த்தியாக அதைப் படைத்திருக்கிறார் என்று எண்ணினேன். அது சுகந்திரமாக அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. நாம் ஆடைகளைச் சுத்தப்படுத்துவது போல அது தன் இறக்கைகளைத் துவைக்கவோ, சுத்தப்படுத்தவோ தேவை இல்லை. அது அவ்வளவு சுதந்திரமாக இருந்ததோடு அங்கும் இங்கும் செல்வதற்கு அதற்குச் சுதந்திரம் இருந்தது. மனிதனை தேவன் படைத்தபோது, எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவனாக சிருஷ்டித்தார். இவைகளைக் காட்டிலும் நாம் விசேஷித்தவர்கள் என்று சொல்லி இருக்கிறதே (லூக்கா 12:24). இதை யோசித்துக் கொண்டிருக்கையில் அவ்வண்டானது, அறையின் ஓரத்திலிருந்த ஒரு சிலந்தி வலையில் சிக்கியது. அது தன் பெலத்தினால் தப்பிக்கொள்ள முயற்சித்தாலும் முடியாமல் போயிற்று. அச்சமயம் சிலந்தி வலையை உண்டாக்கிய சிலந்திப் பூச்சி அதன் அருகே வந்து, அதன் வாயிலிருந்து வந்த திரவத்தின் மூலம் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்ட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவ்வண்டானது சிறிதும் அசைய முடியாமல் போயிற்று. அச்சமயம் சிலந்திப் பூச்சி வண்டின் மிருதுவான பகுதியில் தன் வாயை வைத்து கடித்து, அதன் சதையையும், இரத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டது. அவ்வண்டு எல்லாவற்றையும் தன் சுதந்திரத்தையும் இழந்து, ஜீவனையும் இழந்து, வெறும் கூடாக காற்றில் அசைந்தது.

 

ஆனால் நம்மை நேசிக்கிற அன்பு நிறைந்த தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16).   

"...சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்" ஏசாயா 61:1ல் அவரை அபிஷேகம் பண்ணி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு அனுப்பினார். ஆகவே மனிதன் பாவ வலையில், சாப வலையில், சத்துருவின் வலையில் சிக்கி இருப்பதிலிருந்து விடுவிக்க வல்லவராக இயேசு கிறிஸ்து இருக்கிறார். மனிதன் வண்டுகளைக் காட்டிலும், மிருகங்களைக் காட்டிலும் விசேஷித்தவனாக இருக்கிறான். இவ்விதமாய் மீட்டுக் கொள்ளப்பட்ட வர்களுக்குக் கர்த்தர் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருகிறார். அவர்களுடைய சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம் (ஏசாயா 35:10).

I. உன்னைப் பேர் சொல்லி அழைக்கிறவர்

"...உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்..." ஏசாயா 43:1

நம்முடைய தேவன் தாயின் கர்ப்பத்திலேயே நம் கருவைக் காண்கிறவர். நம் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும் அவருடைய புஸ்தகத்தில் எழுதி வைத்துள்ளார் (சங்.139:16). 'சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினால் தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் முன் குறித்திருக்கிறார்.' (அப். 17:26). 'இருக்கிறவன் எவனும் தோன்றும் முன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்' என்று பிரசங்கி 6:10ல் பார்க்கிறோம். இவ்விதமான சகலவற்றையும் முன்கூட்டியே அறிந்த தேவன் நம்மைப் பேர்சொல்லி அழைக்கிறவராக இருக்கிறார்.

நம்மை என்ன நோக்கத்திற்காக அழைக்கிறார்?

1. இரட்சிப்பதற்காக அழைக்கிறார்.

"இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு; சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா..." லூக்கா 19:5

சகேயு இயேசு கிறிஸ்துவைக் காண வேண்டுமென்று விரும்பினான். ஆனால் அவன் குள்ளனாய் இருந்தான். ஆகவே அவன் இயேசு போகும் வழியில் முன்னாக ஓடி, ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு கிறிஸ்து அந்த இடத்திற்கு வந்தபோது அண்ணாந்து பார்த்து அவனைக் கண்டு, 'சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்' என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனான். பாவியான மனிதனாகிய சகேயு இயேசு கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும் என்று தேடினபடியால் அவன் முயற்சிகளை அங்கிகரித்த இயேசு கிறிஸ்து, அவன் பெயரைச் சொல்லி அழைத்து, அவன் வீட்டிற்குச் சென்றார். அவன் தான் அநியாயமாய் வாங்கின பணத்தைத் திரும்ப கொடுத்து விடுவேன் என்று தன் பாவத்தை உணர்த்து, தீர்மானம் செய்தபோது, இயேசு அவனை நோக்கி, 'இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது' என்றார். சகேயுவை இரட்சிப்பதற்காக அழைத்தார்.

2. புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் கர்த்தருடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக அழைத்தார்.

"...சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்..."அப். 9:4

சவுல் கர்த்தருடைய சீஷரையும், புருஷரையும், ஸ்திரீகளையும் தான் கண்டுபிடித்தால் அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வரும்படி தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குப் பிரதான ஆசாரியரிடத்திலிருந்து நிருபங்களைக் கேட்டு வாங்கினான். பிரயாணமாய்ப் போய் தமஸ்குவுக்குச் சமீபித்த போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனைச் சந்தித்தார். வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்த போது, 'சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்' என்னும் சத்தத்தைக் கேட்டான். 'ஆண்டவரே, நீர் யார்' என்று கேட்டபோது, கர்த்தர், 'நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே' என்றார்.

கர்த்தருடைய பிள்ளைகளை ஒருவன் துன்பப்படுத்தும்போது அது இயேசு கிறிஸ்துவையே துன்பப்படுத்துகிற ஒரு செயலாகும். நடுங்கி திகைத்த இந்த சவுல், 'ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்' என்று தன்னை முற்றிலுமாய் கர்த்தருக்கு அர்ப்பணித்தான். தமஸ்குவிலுள்ள அனனியா என்னும் ஒரு சீஷனோடு கர்த்தர் பேசி, சவுலிடம் அவனை அனுப்பினார். அவனிடம் செல்வதற்குப் பயந்த அனனியாவிடம், 'அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும், என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாய் இருக்கிறான்' என்று கர்த்தர் அனனியாவைத் திடப்படுத்தி சவுலிடம் அனுப்பினார். சவுல் பார்வை அடையும்படிக்கும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் அனனியாவை சவுலிடம் அனுப்பினார். பார்வையை இழந்த சவுல் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவும் கர்த்தர் அனனியாவை வழி நடத்தினார். அவன் மீது கையை வைத்து அனனியா ஜெபித்தபோது, சவுல் பார்வை அடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். அவன் திடன்கொண்டு இயேசுவே கிறிஸ்துவே கிறிஸ்து என்று திருஷ்டாந்தப்படுத்தினான்.

3. தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துவதற்காக கர்த்தர் அழைத்தார்.

"அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்..." 1சாமுவேல் 3:10

சாமுவேல் கர்த்தருடைய சத்தத்தை அறியாதிருந்தபடியால் ஏலியிடம் ஓடினான். இவ்விதமாய் மூன்று முறை கர்த்தர் சாமுவேலை அழைத்தார். மூன்றாவது முறையாக கர்த்தர் சாமுவேலை அழைத்த போது, அவன் ஏலியிடம் ஓடினான். கர்த்தர் பிள்ளையாண்டானை அழைக்கிறார் என்று அறிந்து உணர்ந்த ஏலி கர்த்தரின் சத்தத்திற்கு எவ்விதமாய் பதில் கூறவேண்டும் என்று சாமுவேலுக்குப் போதித்தார். நான்காவது முறையாக 'சாமுவேலே, சாமுவேலே' என்று கர்த்தர் கூப்பிட்டபோது, ஏலி போதித்தபடியே, 'சொல்லும் அடியேன் கேட்கிறேன்' என்று கூறினான்.

ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாய்ச் சொன்ன யாவையும் தொடங்கவும், முடிக்கவும் போகிறேன் என்று கர்த்தர் கூறினார். ஏலி அவன் பிள்ளைகள் செய்த பாவத்தை அறிந்திருந்தும் பிள்ளைகளை அடக்காமல் போன பாவத்தினிமித்தம் ஏலியின் குடும்பத்திற்குச் சாபம் வந்தது. கர்த்தர் தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தன்னை வெளிப்படுத்தினார். தாண் முதல் பெயெர்செபா வரை சாமுவேல் தீர்க்கதரிசி என்று விளங்கியது. இவ்விதமாய் கர்த்தர் சாமுவேலை தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அழைத்தார்.

4. அடிமைத்தனத்திலிருந்த மக்களை விடுவிக்கவும், வழிநடத்தவும் அழைத்தார்.

"அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியில் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்." யாத்திராகமம் 3:4

மோசே எகிப்து தேசத்தில் இருக்கும் போது, தன் ஜனங்களாகிய எபிரெயர் படும் உபத்திரவங்களைக் கண்டு, தன் சுய பெலத்தினாலே அவர்களை விடுவிக்க எண்ணினான். தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, எகிப்தியனை வெட்டி மணலிலே புதைத்துப் போட்டான். இரண்டு எபிரெயர் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது, அநியாயம் செய்தவனை 'உன் தோழனை அடிக்கிறது என்ன?' என்று கேட்டான். 'அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் எங்கள் மேல் உன்னை ஏற்படுத்தினவன் யார்?' என்று கேட்டு, 'நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல என்னையும் கொன்றுபோடப் பார்க்கிறாயா?' என்று கேட்டான். பார்வோனுக்கு இந்தச் செய்தி தெரிந்தபோது, மோசேயைக் கொல்ல வகைதேடினான். மோசே தப்பி ஓடி மீதியான் தேசத்திற்குச் சென்றான்.

மீதியான் தேசத்து ஆசாரியனின் மகள் சிப்போராளைத் தன் மனைவியாகக் கொண்டான். தன் மாமனின் ஆடுகளை வனாந்தரத்தில் மேய்த்தபொழுது, தேவ பர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கே ஒரு முட்செடியின் நடுவிலிருந்த அக்கினியிலிருந்து கர்த்தர் மோசேயுடன் பேசினார். கர்த்தர் எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற நலமும், விசாலமுமான தேசத்தில் கொண்டு போய்ச் சேர்க்கவும் இரங்கினேன் என்று மோசேயிடம் கூறினார். இவ்விதமாய் பார்வோனின் கையிலிருந்து, இஸ்ரவேலரை விடுவித்து, கானான் தேசத்தில் கொண்டு போய் அவர்களைச் சேர்க்கும்படி கர்த்தர் மோசேயை அழைத்தார். அந்த அழைப்புக்குப் பாத்திரமாக அவனை மாற்றினார். கர்த்தர் தம்முடைய வல்லமையை அவன் மூலம் வெளிப்படுத்தினார்.

பத்து வாதைகளை எகிப்து தேசத்தில் வரப்பண்ணி, அற்புதங்களை மோசேயைக் கொண்டு நடத்தினார். விடுதலையாக்கப்பட்ட ஜனங்களை அற்புதமாய் போஷித்து, பகலில் மேகஸ்தம்பத்தினாலும், இரவில் அக்கினி ஸ்தம்பத்தினாலும் வழி நடத்தினார். தம்முடைய ஜனங்களை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து, அதிசயமாய் வழிநடத்தக் கர்த்தர் மோசேயை அழைத்தார்.

இன்றும் கர்த்தர் அநேகரைப் பெயரைச் சொல்லி அழைத்து, அவர்கள் மூலம் தமது திட்டத்தை நிறைவேற்றுகிறார்.

II. நீ என்னுடையவன் என்று கர்த்தர் நம்மைக் குறித்து சொந்தம் பாராட்டுகிறார்.

'...நீ என்னுடையவன்.' ஏசாயா 43:1

நம்முடைய சொந்தக்காரர் ஒருவர் ஒரு உயர்ந்த பதவியிலிருப்பாரா னால், இவர் என்னுடைய உறவினர் என்று மிகுந்த பெருமையுடன் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். மகனோ, மகளோ, இருப்பாரானால் இது என்னுடைய மகன்/ மகள் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களைக் குறித்து சொல்லுகிறோம். இவ்விதமாய் கர்த்தர் 'என்னுடையவன்' என்று அழைக்கும் போது, மற்ற எந்த உறவின் முறைகளைக் காட்டிலும், மிகவும் நெருங்கிய உறவாக இருக்கிறது. இவ்விதமான உறவைக் கொண்டாடுகிற கர்த்தராகிய தேவன் பலவிதங்களிலே நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெருகச் செய்கிறார்.

என்னுடையவன் என்னும் உறவினால் ஏற்படும் நன்மைகள்

1. தண்ணீர்களைக் கடக்கும்போது, கர்த்தரின் பிரசன்னம் நம்முடன் இருக்கும்.

"நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை." ஏசாயா 43:2

மோசேக்குப் பின் இஸ்ரவேலரை யோசுவா வழிநடத்தினான். பிரயாணம் பண்ணின இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியண்டை வந்தார்கள். யோர்தான் அறுப்புக்காலமாய் இருந்தபடியால் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரிலே பட்ட மாத்திரத்தில், மேலேயிருந்து ஓடி வருகிற தண்ணீர் ஓடாமல் குவியலாக நிற்கும் என்று யோசுவா கூறினான். அவ்வாறே பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரின் கால்கள் தண்ணீரில் பட்டபோது, யோர்தானின் தண்ணீர் குவியலாக குவிந்தது. யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் ஆசாரியர்கள் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள். தண்ணீர்களைக் கடந்தபோது, கர்த்தர் அவர்களோடு இருந்தார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையில் நீ சந்திக்கிற போராட்டங்களைக் கண்டு கலங்குகிறாயா? கலங்காதே. தானியேலைச் சிங்கக்கெபியில் போட்டபோது, கர்த்தர் தமது தூதனை அனுப்பினார். அவன் தனிமையாக இல்லை. யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, கர்த்தர் அவனோடு இருந்தார். தேவப்பிள்ளையே, வெள்ளங்கள் ஒரு போதும் உன்னை மேற்கொள்வதில்லை. உன் தேவன் பெரியவர். அவர் உன்னோடு இருப்பார். உன்னைக் கைவிடமாட்டார்.

என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று கர்த்தர் சொன்ன தாவீது சங்கீதம் 69:2லே, 'ஆழமான உளையில்  அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை; நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டு போகிறது' என்று கர்த்தருடைய சமுகத்தில் கூறுவதைப் பார்க்கிறோம். வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகி வருகிறது என்று வசனம் 1-ல் கூறுகிறார். சத்துருவினால் வரும் பிரச்சனைகள், போராட்டங்கள் அவனுக்கு வெள்ளம் போல் இருந்தது. வசனம் 15-ல், 'ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக் கொள்ளாமலும் இருப்பதாக' என்று கர்த்தரிடம் கெஞ்சுவதைப் பார்க்கிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே, சத்துருவினால் வரும் போராட்டங்கள் அமிழத்தக்கதாக பெருகும்போது, நீ கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்ய உன் மனதிலே, ஆத்துமாவிலே தீர்மானம் செய்துகொள். உன் அக்கிரமத்தை மறைக்காமல், பாவங்களை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்து, பாவத்தின் தோஷங்களை நீக்கும்படி கெஞ்சும்போது, ஜலப்பிரவாகங்கள் உன்னை அணுகாதபடி கர்த்தர் உன்னைக் காத்துக் கொள்வார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

தாவீது கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்தான். அவனோடு இருந்த கர்த்தர் அவனை உயரத்திலிருந்து கைநீட்டி, ஜலப்பிரவாகத்திலிருந்து தாவீதைத் தூக்கி விட்டார்.(சங்கீதம் 18:16)

2. சத்துருவின் மீது ஜெயம் தருகிறார்.

"...வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்." ஏசாயா 59:19     

அநேக சத்துருக்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள். சத்துருவினிமித்தமாக பல பாடுகள் நமக்கு வருகிறது. கர்த்தருடைய பிரசன்னம் நம்மோடு இருக்கும்போது, கர்த்தருடைய ஆவியானவர் நமக்காக  சத்துருவுடன் யுத்தம் பண்ணி, ஜெயத்திற்கு அடையாளமாக கொடியேற்றுவார். அநேகருடைய வாழ்க்கையில் கர்த்தர் யுத்தம் பண்ணி வெற்றி தந்தி அவர்களை ஆசீர்வதிக்கிறார். உங்களுக்காக அவர் யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்ற யாத்திராகமம் 14:14ன் படி அவர் நமக்காக யுத்தம் செய்து வெற்றி தருவார். இந்த வெற்றியானது இலவசமானது; அது பூரணமான வெற்றி. உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருப்பேன் என்று சொன்ன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 'என்னுடையவர்' என்று உங்களோடு இருந்து உங்களுக்கு வெற்றி தருவார்.

3. சுட்டெரிக்கும் அக்கினியிலிருந்து தப்புவிப்பார்.

"...நீ அக்கினியில் நடக்கும்போது வேகத்திருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது." ஏசாயா 43:2

நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். ராஜா பண்ணி வைத்த சிலையை வணங்காமல் போனால் எரிகிற அக்கினிச் சூளையில் அவர்களைப் போடுவதாக எச்சரித்தான். தப்பிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமும் கொடுத்தான். அவர்களோ நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார் என்பதோடு இராஜா நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதில்லை என்று உறுதியாக ராஜாவுக்குத் தெரிவித்தார்கள். ராஜா மிகுந்த கோபமடைந்து, ஏழு மடங்கு அக்கினிச் சூளையை அதிகரித்து, இந்த மூன்று வாலிபர்களையும் கட்டி, எரிகிற அக்கினிச் சூளையின் நடுவில் போட்டுவித்தான்.

சூளை மிகுந்த சூடாக்கப்பட்டபடியால் அக்கினி ஜூவாலை அந்த மூன்று வாலிபர்களையும் கொண்டு போன புருஷரைக் கொன்று போட்டது. மூன்று வாலிபரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச் சூளையில் எரியப்படார்கள். ஆனால் நான்கு பேர் விடுதலையோடு அக்கினியின் நடுவே உலாவுகிறதை ராஜா கண்டான். ராஜா அக்கினிச் சூளையின் வாசலுக்கு வந்து, அவர்களை வெளியே வரும்படி அழைத்தான். அக்கினியின் நடுவிலிருந்து மூன்று வாலிபரும் வெளியே வந்தார்கள். அவர்கள் தலைமயிர் கருகவில்லை; சால்வைகள் சேதப்படவில்லை; அக்கினியின் மணம் அவர்களில் வீசவில்லை. கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய தாசரை விடுவித்தார்.

4. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் உண்டு பண்ணுகிறார்.

"... கர்த்தர் இடிமுழுக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று..." யாத்திராகமம் 9:23

"இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலே மாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது." யாத்திராகமம் 9:26

மோசேயைக் கொண்டு எகிப்திலே கர்த்தர் வாதைகளைக் கட்டளையிட்டார். வாதைகள் ஏற்படும்போது பார்வோன் இஸ்ரவேலரை அனுப்பிவிடுவேன் என்று சொல்லுவான், வாதை நின்றவுடன் அவன் இருதயம் கடினமாகும். மறுபடியும் ஜனங்களைப் போகவிடமாட்டான். இவ்விதமாக வேதனைக்குரிய வாதைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டளையிட்டார். இன்று உங்கள் எல்லைகளில் பலவிதமான வாதைகள், போராட்டங்கள் தோன்றலாம். ஆனால் கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் கண்ணின்மணி போல காத்து, எல்லாவிதமான தீங்கான அக்கினிக்கும் உங்களை விலக்கிக் காப்பார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவார்.

III. 'என்னுடையவர்கள்' என்று கர்த்தர் யாரைக் கூறுகிறார்?

கர்த்தர் நம்மைக் குறித்து 'நீ என்னுடையவன்' என்று அழைப்பதற்கு நாம் தகுதியுடையவர்களாய் மாற வேண்டும். இவ்விதமான தகுதியை யார் பெற்றுக்கொள்வார்கள்  என்று பார்ப்போம்.

1. கர்த்தருடைய மந்தையிலுள்ள ஆடுகளாய் மாறவேண்டும்.

"நான் என்னுடையவைகளை அறிந்தும், என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன். ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." யோவான் 10:15

நாம் இயேசு கிறிஸ்துவின் மந்தையில் சேரும்போது, அவருடையவர்களாய் மாறுகிறோம். அப்படிப்பட்டவர்கள் அவரையே முன் வைத்து வாழுகிறார்கள். அத்துடன் ஆடுகள் மேய்ப்பனின் சத்தத்துக்கு செவிகொடுப்பது போல, நாமும் கர்த்தரின் சத்தத்துக்கு செவிகொடுக்கும் போது, அவருடைய மந்தையின் ஆடுகளாய் மாறுகிறோம், அவரைப் பின்பற்ற நம்மை அர்ப்பணிக்கிறோம்.

இன்று 'என்னுடையவர்கள்' என்று கர்த்தரால் அழைக்கப்படுவதற்கு நாம் பாத்திரராய் நடக்க வேண்டும். ஆகவே நாம் கிறிஸ்துவின் மந்தையாகிய சபையில் சேர்ந்து, எல்லாவிதத்திலும் அவரையே பின்பற்ற வேண்டும்.

2. பலியினாலே அவரோடு உடன்படிக்கை பண்ணினவர்கள் அவருடையவர்கள்

"பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்." சங்கீதம் 50:5

பலவிதமான பலிகளைக் குறித்து வேதத்தில் பார்க்கிறோம். எபிரெயர் 13:15ல் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியைக் குறித்துப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட பலியைச் செலுத்துகிற ஒவ்வொரு நபரும் 'என்னுடையவர்கள்' என்று கர்த்தர் அழைக்கும் பாக்கியம் பெறுகிறார்கள். 'அன்றிலும் நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள். இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்' (எபி. 13:16). மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினாலே புதிய உடன்படிக்கையை நமக்காக ஏற்படுத்தி இருக்கிறார். இப்படிப்பட்ட பலிகளினாலும், உடன்படிக்கையினாலும் நாம் அவருடையவர்களாய் மாறுகிறோம்.

3. ஊழியக்காரரை இயேசு கிறிஸ்து 'என்னுடையவர்கள்' என்று சொந்தம் பாராட்டுகிறார்.

"அவர்கள் நான் எகிப்து தேசத்திலிருந்து புறப்படபண்ணின என்னுடைய ஊழியக்காரர்..." லேவியராகமம் 25:42

நாம் கர்த்தருக்காக உத்தமமாய் ஊழியம் செய்யும்போது, 'என்னுடைய ஊழியக்காரர்' என்று அவர் நம்மை அழைக்கிறார். சிறிய ஊழியமாக இருந்தாலும், பெரிய ஊழியமாக இருந்தாலும் அதைக் கர்த்தர் அங்கிகரிக்கிறார். அதற்குப் பிரதிபலனாக நம்மை நேசித்து, 'என்னுடையவன்' என்று சொல்லி உரிமைப்பாராட்டுகிறார். அண்ட சராசரத்தையும் படைத்த தேவாதி தேவன் நம்மை 'என்னுடையவர்கள்' என்று சொல்வது எவ்வளவு பெரிய பாக்கியம்.

அருமையான சகோதரனே, சகோதரியே, நான் அநாதையைப் போல வாழுகிறேனே, எனக்கென்று யாரும் இல்லையே என்று கலங்குகிற உனக்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, 'என்னுடையவன்' என்று உன்னை ஏற்றுக்கொள்வதற்கு ஆவலோடு இருக்கிறார். அவருக்கு ஏற்றக் காரியங்களைச் செய்து, அவருடையவர்களாய் மாறும்போது, அவர் நமக்கு அதற்குரிய ஆசீர்வாதங்களைப் பெருகச் செய்கிறார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபினேசர் பால்.