"...நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி

           உனக்குச் சகாயம் பண்ணுவேன்…"

                                                                                                  ஏசாயா 41:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

இன்று மனிதனுடைய வாழ்க்கையிலே மிகவும் அவசியமானது அவனுக்குள் உண்டான பெலனாம். பெலனும், பராக்கிரமமும் அனுதின காரியங்களைச் செய்வதற்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. வீட்டில் நமது கடமைகளைச் செய்ய, நம்முடைய வேலை ஸ்தலத்தில் வேலைகளை நன்கு செய்ய நமக்குப் பெலன் அவசியமாக இருக்கிறது. சத்துருக்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்பதற்கு பெலன் தேவையாக இருக்கிறது. இந்தப்  பெலத்தை நமக்குள் பெருகச் செய்தவர் இன்றைக்கு ஜீவிக்கிறவராக இருக்கிறார். நான் உன்னைப் பெலப்படுத்துவேன் என்று சொன்னவர் நம்மை பெலப்படுத்தும் போது நாம் போராடி ஜெபிப்பதற்கு, கர்த்தரின் வழி நடப்பதற்கு கர்த்தரின் நாமத்தை உயர்த்துவதற்கு உதவி செய்கிறார். பிலிப்பியர் 4:13ல் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுன்டு என்று பார்க்கிறோம். இந்த உன்னதமான தேவனுடைய பெலன் நமக்குள் உண்டாகும் போது எந்த பிரச்சனையினாலும் கலங்காது காரியங்களைச் செய்ய முடியும்.

I. எவைகளில் நமக்குப் பெலன் தேவை?

1) சரீரத்தில் பெலன் தேவை

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்." ஏசாயா 40:31

நம்முடைய வாழ்க்கையிலே இழந்துபோன பெலத்தையும், சரீரத்தில் புதுப்பெலத்தையும் பெற்றுக் கொள்ள நாம் அவர் சமுகத்தில் காத்திருக்க வேண்டும். இந்தப்பெலன் இருக்கும் போது நாம் ஓடினாலும், நடந்தாலும் களைப்படையாத வாழ்வைப் பெற்றுக் கொள்வோம். 'உன் தேவனாகிய கர்த்தரை நிறைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப் படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறது போல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்கு கொடுக்கிறவர்.' உபாகமம் 8:18 ன்படி சரீர பெலன் இருக்கும் போதுதான் ஐசுவரியத்தைச் சம்பாதிக்க முடியும். அனுதின வாழ்க்கையிலே நாம் தொழிலைச் செய்வதற்கு வேண்டிய பெலத்தைத் தருகிற தேவன், இந்த ஆண்டிலே நமக்கு நிறைவாய்த் தந்து ஆசீர்வதிப்பார். இதற்கு அவர் பாதத்தில், சமுகத்தில் காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அநேகர் தங்கள் சரீரத்தில் உள்ள பெலவீனங்கள் மாறுவதற்கு பலவிதமான வழிகளில் முயற்சி செய்து வருவதைப் பார்க்கின்றோம். காலையில் எழுந்தவுடன் திறந்த வெளியிலே சென்று நடப்பது, பல உடற்பயிற்சிகள் செய்வது இன்று பெருகி வருவதைப் பார்க்கிறோம். இந்தப் பெலன் இருக்கும் பொது தான், நாம் நடந்து செல்ல, வாகனங்களில் ஏறிச் செல்ல, அனுதின காரியங்களைத் தடை தாமதமின்றி செய்ய இயலும். சிலருடைய வாழ்க்கையில் பெலன் குறையும் போதுதான், பலவித தவறான காரியங்களைச் செய்ய கற்றுக் கொள்வார்கள். பெலன் இல்லாதபடியினாலே என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று சரி செய்ய முடியாதபடி அப்படியே விட்டு விடுவார்கள்.

ஒருமுறை ஒரு குடும்பத்தார் ஜெபிக்க வந்தார்கள். அந்த சகோதரியோ மிகுதியான பெலவீனத்தில் கலங்கி இருந்தார்கள். எங்களுக்கு குழந்தை இல்லை. நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரியத்தில் வீணான சண்டைகள் எங்களுக்குள் வருகிறது என்றார்கள். அந்தச் சகோதரி என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். நமக்கு பெலன் கொடுக்கிறவர் கர்த்தர். நான் உன்னைப் பெலப்படுத்தி, உனக்குச் சகாயம் பண்ணுவேன் என்று சொன்ன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் காரியங்களை மேன்மையாக்குவார் என்றுச் சொல்லி, அனுப்பி வைத்தேன். அவரை அதிகமாக தேடுங்கள். அவர் பெலனைக் கொடுத்து உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் வாஞ்சைகளை நிறைவேற்றுவார் என்று ஆலோசனைக் கூறி அனுப்பி வைத்தேன். அவர்கள் உண்மையாய்க் கர்த்தரைத் தேடி பெலனடைந்தார்கள். ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க கர்த்தர் உதவி செய்தார். இந்தச் சரீர பெலனானது உங்கள் குடும்ப வாழ்க்கையில் பெரிய மாறுதல்களையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

2) ஆவியில் பெலன் தேவை

"பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகாளயிருப்பீர்கள் என்றார்." அப்போஸ்தலர் 1:8

ஆவியின் பெலனானது மிக ஆசீர்வாதமான காரியம். இந்த ஆவியின் பெலன் இல்லாதபடியினாலே சிறிய காரியங்களிலும் மிகுதியாக கவலைப்படுகிறோம். இந்த ஆவியின் பெலக்குறைவினாலே பலவிதமான காரியங்களை யூகித்து உள்ளத்தில் சோர்வடைகிறோம். ஆவியின் பெலன் குறைவாய் இருப்பதனால் மனநோய் உண்டாகிறது யாரெல்லாம் இந்த ஆவியின் பெலத்தில் நிறைகிறார்களோ அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சாட்சியிடுவார்கள். அப். 1:8ல் இயேசு கிறிஸ்து சீஷர்களுக்குச் சொன்ன ஆலோசனைப்படி அவர்கள் எருசலேமில் காத்திருந்த போது, ஆவியினால் நிறைந்தார்கள். ஆகவே இந்த ஆவியின் பெலனை கர்த்தர் தமது கிருபையினாலே நமக்குப் பெருகச் செய்கிறார்.

3) ஆத்துமாவிலே பெலன் தேவை

"நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்."சங்கீதம் 138:3  

                ஆத்துமாவிலே இன்று பெலன் தேவையாயிருக்கிறது. ஆத்துமாவில் பெலன் இல்லையென்றால் பயம் நிறைந்த வாழ்க்கை உருவாகிவிடும். சின்னக் காரியத்திலும் பயப்படுகிற மக்கள் ஏராளம். யாருடைய வாழ்க்கையில் கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு பெலன் தருகிறாரோ அவர்கள் பயம் நீங்கி எல்லாக் காரியங்களையும் நலமாய் செய்யக் கூடிய மக்களாய் மாறிவிடுவார்கள். ஆத்துமாவில் உண்டாகிற பெலனானது நமக்குள் மிகுந்த தைரியத்தை உண்டாக்குகிறது. இன்று அநேகர் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற தடைகள், தோல்விகள், துக்கங்கள் இவைகளைத் தாங்கக்கூடாதபடி, ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஒரு முறை ஒரு சகோதரன் எனக்குச் சமாதானம் இல்லை, சந்தோஷம் இல்லை. இரவிலே எனக்குத் தூக்கம் இல்லை என்று தனது குறைகளைப் பலவிதமான முறைகளில் சொல்லிக் கொண்டே இருந்தார். அவர்களுடைய உள்ளத்தில் இனி நான் வாழ்வதில் பிரயோஜனம் இல்லை. சாவதே மேல் என்று சொல்லி ஒரு தீர்மானத்தையும் செய்திருந்தார். கர்த்தர் அவரை நேசித்து அவருடைய வாழ்க்கையில் நடைபெறக்கூடிய நன்மையான காரியங்களையும், முன்பு நடைபெற்ற காரியங்களையும் வெளிப்படுத்தி சொன்ன போது, அவர் தைரியமடைந்தார். அன்றே அவருடைய தவறான தீர்மானத்தை விட்டு விட்டு என்ன வந்தாலும் கர்த்தருக்காக ஜீவிப்பேன் என்று புதிய தீர்மானத்தோடு வாழ ஆரம்பித்தார். உன் வாழ்க்கையின் கடைசி எல்லைகளில் இருந்து உன்னை அழைத்து வந்தவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார். பயத்தை எல்லாம் நீக்கி விட்டு, அவர் உன் தேவன் என்று நீ ஏற்றுக் கொள்ளும் போது, ஒரு பெரிய திருப்பத்தை உன் வாழ்வில் உருவாகச் செய்வார். இந்த ஆத்துமாவிலே உண்டாகிற பெலன் உன் வாழ்வில் உருவாகும் தோல்வி, துக்கம், போராட்டம் இவைகளை நீக்கிவிட்டு, தைரியத்துடன் புது வாழ்வு வாழ வைக்கும்.

என் வாழ்வில் பிசாசின் தொல்லையால் பாதிப்படைந்து இரவில் பயந்து கலங்கி கொண்டிருந்தேன். ஒரு உருவம் என் கண்களுக்கு முன்பாகத் தோன்றி, என்னை அங்கேயிருந்து வெளியேற்றி விட்டாய், இப்போது நான் எங்கே போவேன் என்னு கேட்கும் சத்தம் என் உள்ளத்தில் சோர்வையும், சரீரத்தில் நடுக்கத்தையும் உண்டாக்கி விடும். இதை நான் என்ன செய்வது என்று தெரியாது மிகுதியான தவித்துக் கொண்டிருந்தேன். இந்த சம்பவங்களினால் ஒவ்வொரு இரவிலும் இரவு 12 மணி நேரத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனை தீர்க்க என்ன செய்வது என்று யோசித்தேன். சங்கீதம் 34:4 ல் 'நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து,  என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார்' என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அத்துடன் புதிய தீர்மானம் ஒன்றை செய்தேன். இந்த தீர்மானத்தின்படி இரவு 11 மணியிலிருந்தே வேதத்தைத் தியானிக்கவும், துதிகளையும், ஜெபங்களையும் ஏறெடுக்கவும் ஆரம்பித்தேன். அத்துடன் பகல் நேரத்திலே அவர் செய்த நன்மைகளை நினைத்து, துதித்து ஜெபிக்க ஆரம்பித்தபோது, என் பாவங்களை உணர்ந்து, இயேசு கிறிஸ்துவை நோக்கி மன்னியும் என்று மன்றாட ஆரம்பித்தேன். அந்தக்ஷணமே என் ஜெபத்திற்குப் பதில் தந்த கர்த்தர் பாவத்தை மன்னித்து என் ஆத்துமாவிலே பெலன் தந்து பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகம் பண்ணினார். அன்றே என் வாழ்வில் திடப்படுத்தப் பட்டேன். பயமும் மனப் போராட்டமும் நீங்கியது. கர்த்தருடைய பிள்ளைகளுக்காக, ஊழியர்களுக்காக ஜெபிக்கத் தக்கதான உள்ளத்தை உருவாக்கினார். எவ்விதமான தீங்கின் ஆவிகளாய் இருந்தாலும், பயப்படாது ஜெபிக்கக்கூடிய தைரியம் ஏற்பட்டது.

அருமையான சகோதரனே/சகோதரியே, நம்முடைய தேவன், நம் ஜெபங்களைக் கேட்கிறவராய் இருக்கிறார். அத்துடன் அதற்கேற்ற வழிகளையும் திறந்து தந்து நாம் எந்தக் காரணத்தினாலும், எந்தக் காரியத்திலும் கலங்காது வாழ வழி செய்வார்.

II. எப்பொழுது நாம் பெலனை இழக்கிறோம்?

1. "...என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்து போயிற்று." சங்கீதம் 31:10

மனிதன் தான் செய்கிற அக்கிரமத்தினாலே அவனது பெலத்தை இழக்கிறான். பெலனானது மிகவும் மேன்மையானது. பெலன் இருக்கும் போது குறைவுப்பாடத நல்ல வாழ்வை வாழ முடியும். மோசே அநித்தியமான பாவ சந்தோசத்தை விட்டு விலகி, கர்த்தருடைய பிள்ளைகளுக்காக வாழ, அவர்கள் விடுவிக்கப்பட வாஞ்சித்தான். கர்த்தர் அவனோடு பேசி எகிப்து ராஜாவிடத்தில் இருந்து இஸ்ரவேல் மக்களை விடுவித்து வழி நடத்தினான் அவன் மரிக்கும்போது அவன் கண்கள் இருள் அடையவில்லை. அவனது 120 வது வயதிலே ஒரு பெலனும் குறையாது மரித்தான் என்று உபாகமம் 34:7ல் பார்க்கிறோம். ஆனால் அக்கிரமம் செய்யும் போது நமக்கு அருளப்பட்ட நல்ல நல்ல பெலனை இழந்து விடுகிறோம்.

ஒரு அருமையான கால்பந்தாட்ட வீரனை அறிவேன். அவனுடைய விளையாட்டுத் திறமை அநேகரை வியக்கத்தக்கதாய் அமைந்திருந்தது. அவனது ஓட்டமும் வேகமாயிருந்தது. இந்தப் பெலத்தோடு இருந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார். அவனின் மேன்மையான அந்த பெலனானது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. ஓட்டத்தின் வேகமும் குறைந்தது. அவனது விளையாட்டுத் திறமையும் ஒன்றுமில்லாததாய் மாறியது. அவனின் வாழ்க்கையானது எல்லாவற்றையும் இழந்து, வேதனையுடன் வாழவேண்டிய போராட்டமான வாழ்க்கையாய் மாறிவிட்டது.

இந்த வார்த்தைகளை வாசிக்கிற சகோதரனே, சகோதரியே, இருக்கிற பெலத்தோடே போ என்று சொல்லி, வெற்றி அருளுகிற ஆண்டவருடைய சமுகத்திலே அக்கிரம செயலுக்கு இடம் கொடாதபடி தேவன் நியமித்த நியமனங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து செயல்பட்டால், பெலனை இழந்து போகாதபடி காக்கப்படுவோம்.

2. முதிர்வயதினால் பெலனை இழக்கிறோம்

"முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்." சங்கீதம் 71:9

வாழ்க்கையிலே நாம் முதிர்வயதை அடையும்போது நமது சரீரத்தின் முதுமையினாலே பெலன் குன்றிப் போகிறோம். வாலிபப் பருவத்தில் ஓடி ஆடினவர்களும் கோல் ஊன்றி நடக்கிறதைப்  பார்க்க முடிகிறது. நமக்குள்ளும் வயதாகும்போது மாடிப்படிகள் ஏறுவது, சற்று தூரம் நடப்பது சிரமமாக மாறுவதைப் பார்க்கிறோம். இதைப்போல் பெலவீனத்தின் ஆவியினால் தாக்கப்படும்போது பெலவீனமடைவதோடு, பெலத்தை இழந்து கலங்குகிற மக்களாய் மாறி விடுகிறோம்.

3. ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போவதால் பெலன் இழக்கிறோம்

"ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது." நீதிமொழிகள் 24:10

இன்று வாழ்க்கையிலே பலவிதமான பிரச்சனைகள் எழும்பும் போது, நம் மனதிலே சோர்ந்து போகிறோம். இவ்விதமான சோர்வு நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்திலே பெலத்தைப் பறித்து விடுகிறது. இவ்விதமாய் பெலனை இழக்கிறவர்கள் பைத்தியக்காரரைப் போல் என்ன செய்கிறோம், எதைச் செய்கிறோம் என்று அறியாது தடுமாறி, தவித்து அலைந்து திரிகிறார்கள். இன்று நாம் கர்த்தரையே முன் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சனைகளை நம் உள்ளத்தில் வைத்து கவலை கொள்ளும்போது, மனச்சோர்வும், இரவிலே தூங்க முடியாதபடி பலவிதமான போராட்டங்களுக்கும் ஆளாகி விடுகிறோம். இந்த உலகத்திலிருக்கிறவனிலும் நம்மோடு இருக்கிறவர் பெரியவர். நாம் சந்திக்கிற பிரச்சனைகளைக் காட்டிலும், கர்த்தாதி கர்த்தர் பெரியவர். ஆகவே அவரையே நாம் முன் வைத்து நம் ஓட்டத்தை ஓடும்போது எந்தப் போராட்டமும், எந்தச் சோர்வும் நம் வாழ்வில் தேவனால் பெற்றிருக்கும் பெலத்தைப் பறிக்க முடியாது. சிலர் தங்களது வாழ்க்கையிலே பிரச்சனைகளை நோக்கிப் பார்ப்பதால், என்ன செய்வது என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.

4.கர்த்தர் அருளும் பலத்தின் ரகசியத்தைப் பாதுகாக்காதபடியால் பெலத்தை இழக்கிறோம்.

"தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்துமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்." நியாயாதிபதிகள் 16:17

கர்த்தர் தம்முடைய அநாதி தீர்மானத்தின்படி குழந்தையில்லாத மனோவாவுக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்து அவனை வளர்ப்பதற்குரிய முறைகளையும், தேவதூதனால் அறிந்தான். அவன் நசரேயனாக இருக்க வேண்டும். அவனது தலையின் முடி எந்தக் கத்தியினாலும் சிரைக்கப்படக்கூடாது என்று கர்த்தர் அவனை நடத்தினார். அவனது வாழ்க்கையிலே மிகுதியான ஆவியின் பெலத்தை அருளி, பெலிஸ்தரைக் கலங்கப்பண்ணினான். இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரிக்க அழைக்கப்பட்டிருந்த இந்த சிம்சோன், தேவன் விரும்பாத விபச்சார பாவங்களுக்கு உட்பட்டான். நசரேயனாய் இருக்க வேண்டிய சிம்சோன், தன் மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வேசியைக் கண்டு அவளிடத்தில் சென்றான். பின்பு தெலிலாள் என்ற பெண்ணுடனும் பழக ஆரம்பித்தான். பெலிஸ்தர் அந்த மகளை தங்கள் வழியில் நடத்தி, நாங்கள் இத்தனை வெள்ளிகாசைத் தருவோம், சிம்சோனின் பெலன் எதினால் என்று அறியும்படி அவளிடத்தில் கூறினார்கள். அவளும் அதற்கு இசைந்து தந்திரமாய் செயல்பட ஆரம்பித்தாள். அதனால் அவள் சிம்சோனை வஞ்சகமாக உன் பெலத்தின் ரகசியம் என்ன என்று கேட்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் அவனை அவள் கேட்டுத் துக்கப்படுத்தினாள். சிம்சோனோ மீகா 7:5ல் "சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக் கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு." என்பதை அறியாதபடி தன் இருதயத்தில் உள்ள எல்லாவற்றையும் அவனும் கூறினான். அவள் பெலிஸ்தருக்குச் சொன்னதோடு, அவனது தலையின் முடிகளைச் சிரைக்கும்படி செய்தாள். சிம்சோன் தன் பெலத்தை இழந்துபோனதை அறியாதபடி பெலிஸ்தர் வந்தபோது எழுந்தான். ஆனால் பெலிஸ்தரோ அவனைப் பிடித்து, அவன் கண்ணைப் பிடுங்கி, அவனது கைகளில் விலங்குகளைப் போட்டார்கள். அத்துடன் அவனை மாவரைக்கும் வேலையைச் செய்ய வைத்தார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையில் கர்த்தர் உன்னை அழைத்திருக்கிற அழைப்புக்குக் கவனமாய் பாத்திரராய் நடக்க வேண்டும். எந்த இடத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று வழி நடத்தின பகுதியில் அவர் சொன்னபடியே செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு நம்முடைய சுய நீதியினால், தேவன் கொடுத்த தரிசனத்தை இழந்துபோகாது காத்துக்கொள்ள வேண்டும்.

III. உன்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்து யாரைப் பெலத்தினால் நிரைப்பார்?

1. யார் மனந்திரும்பி அமரிக்கையோடு நம்பிக்கையோடு இருக்கிறார்களோ அவர்களைப் பெலப்படுத்துவார்

"நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்..." ஏசாயா 30:15

நாம் பெலனடைய வேண்டுமானால் பாவங்களை விட்டு நாம் திரும்பவேண்டும். மனம்திரும்பினவர்களாய், அவர்மீது நம்பிக்கைக் கொண்டார்களாய் நாம் ஜீவிக்க அவர் சமுகத்தில் நம்மைத் தாழ்த்தும் போது, நமக்குள் அவர் பெலனை அருளுகிறவராய் இருக்கிறார். கர்த்தரையல்லாமல் வேறொரு கன்மலை இல்லையென்று நம்புகிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பெலத்தால் இடைகட்டி, வழிகளைத் தெரிவித்து, மான்கால்களைப் போல மாற்றி உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிற தேவன் நேற்றும் இன்றும் மாறாதவராய் இருக்கிறார். இந்த மகிமையின் தேவன் நமக்குள் அருளும் பெலனானது நம்மை சகல நாட்களிலும் நல் ஆசீர்வாதத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பிவிடும்.

 ஒருமுறை ஒரு வயதான சகோதரர் இயேசு கிறிஸ்துவைத் தன் தெய்வமாக ஏற்றுக்கொள்ளாதவராக கடினப்பட்ட உள்ளத்தோடு, பெலவீனத்தோடு போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறி, மந்திரும்புதலைக் குறித்து, அவர்மீது நம்பிக்கை வைப்பது குறித்து கூறியபோது, அவர் ஏற்றுக்கொண்டார். தன் பெலவீனத்தில் இனி நான் வாழ இயலாது, என் பெலவீனம் பெருகிவிட்டது என்று  கலங்கின அவருடைய வாழ்க்கையில் மனந்திரும்பி கர்த்தரை நம்பினபடியினால், அவரின் பெலவீனம் நீங்கியது, பெலன் பெருகினது. உள்ளத்தில் சமாதானமும் சந்தோஷமும் அடைந்தார். சில காலங்கள் கழித்து அவருக்குள் தேவ சமாதானம் பெருகியிருந்தபடியால் எதைக் குறித்தும் கலங்காது, தேவனுடைய அன்பை உணரவும், அவருடைய மகிமையைக் காணவும் கர்த்தர் கிருபை செய்தார்.

2. மகிழ்ச்சியாயிருப்பது பெலன்

"...கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்." நெகேமியா 8:10

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை மிகுதியான சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கையாகும். இன்று அநேகர் கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் துக்கமும், துயரமும் நிறைந்த வாழ்க்கை என்று எண்ணுகிறார்கள். கிறித்துவுக்குள்ளான வாழ்க்கையானது எரேமியா 15:16ன்படி "உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது" என்பதாகும். நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தருடைய வார்த்தைகள் கிடைக்கும்போது, நமக்குள் மிகுந்த சந்தோஷமும், மனதில் மகிழ்ச்சியும் உண்டாகிவிடும். மனிதர்களுடைய வாழ்க்கையிலே மனமகிழ்ச்சியானது நல்ல ஒளஷதமாகும். மனதில் உண்டாகும் மகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தந்து அவனை மேன்மையாக்கும்.

வார்த்தையினால் உண்டாகிற மகிழ்ச்சியோடு நீதிமான்களுடைய நம்பிக்கை மகிழ்ச்சியாகும். கர்த்தர் தம்முடைய தூய இரத்தத்தை நமக்காய் சிந்தி, அதினால் நம்மை நீதிமானாக மாற்றி அவருக்குள் வாழ்கிற வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க உதவி செய்கிறார். நீதி செய்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இந்த மேலான மகிழ்ச்சி நிறைந்திருப்பதை நாம் காண முடியும். ஆபிரகாமைப் போல விசுவாசத்தினால் நீதிமானாக மாற்றப்பட்டவர்களும் உண்டு. இன்று முதல் நம் தேவன் விரும்புகிற எதிர்பார்க்கிற நீதியின் பாதையில் செல்வதோடு நீதியான காரியங்களைச் செய்கிற மனிதனாய் நம்மை மாற்றிக் கொள்ளுவோம்.

இன்று மனிதன் மகிழ்ச்சியோடு தேவனை ஆராதிக்க வேண்டும். தாவீது சங்கீதம் 122:1ல் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் என்று சொன்னபோது, அது அவனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது. கர்த்தர் தம்முடைய வல்லமையான கரத்தினாலே தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குத் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும் என்ற சங்கீதம் 53:6ன் படி நமக்குள் மகிழ்ச்சி பெருகுவதைக் காண முடியும். மேலும் சாந்தகுணம் உள்ளவர்களாய் வாழ்ந்து பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால், மனமகிழ்ச்சியாயிருக்க நம்மை ஒப்புக்கொடுப்போம், ஆசீர்வதிக்கப்படுவோம்.

3.தமது ஜனங்களைப் பெலப்படுத்துவார்

“கர்த்தர் தமது ஜனங்களைப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்." சங்கீதம் 29:11

இன்று நாம் கர்த்தருடைய ஜனமாய் மாறுவதற்கு நம்மை முற்றிலுமாய் ஒப்புக்கொடுக்க வேண்டும். 'என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.' எரேமியா 11:3ன்படி நம் தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறதோடு மாத்திரமல்ல, அவர் சொன்னபடி செய்ய நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, அவருடைய ஜனமாய் மாறுவோம். கர்த்தரோடு நாம் உடன்படிக்கை செய்து வாழும்போது, 'நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்' லேவி. 26:12ன் படி அவரின் ஜனங்களாய் மாறி விடுவோம். அத்துடன் கர்த்தருடைய கட்டளைகளை எல்லாம் கைக்கொண்டால் நாம் அவருக்குச் சொந்த ஜனமாயிருப்போம்.

இன்றைக்கு நம்மை ஆராய்ந்து பார்ப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்பித்த, போதித்த சகல சத்தியத்தின் பாதையில் நாம் நடப்பதற்கு இந்த நாளில் நம்மை ஒப்புக்கொடுப்போம். அவர் நம்முடைய தேவனாயிருப்பார். நாம் அவர் ஜனமாயிருப்போம்.

4. பரிசுத்த ஆவியின் நிறைவினால் பெலனடைகிறோம்

"பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாத்தவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக." ரோமர் 15:13

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் எல்லாரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெருகிறதற்குப் பாக்கியசாலிகளாய் இருக்கிறோம். கிறிஸ்துவுக்கு முன் சில பரிசுத்தவான்களுக்கு மாத்திரமே பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டது. அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து தீர்க்கதரிசனமாக அநேக காரியங்களை ஜனங்களுக்கு உணர்த்தினார்கள், வழி நடத்தினார்கள். சிலருடைய வாழ்க்கையில் எச்சரிப்பையும் கொடுத்தார்கள். இயேசு கிறிஸ்து வந்தபோது, நாம் எல்லாரும் பரிசுத்த ஆவி பெற்றுக்கொள்ளும்படியாக பிதாவை வேண்டிக்கொண்டார். அதனால் நமக்குப் பெரிதான சிலாக்கியம் உண்டாயிருக்கிறது. இந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் பலவித காரியங்களைச் செய்தார். பாவங்களை, நீதியை, உலகத்தை, நியாயத்தீர்ப்பைக் குறித்து கண்டித்து உணர்த்துகிறார். நமக்குள் வரும் பரிசுத்த ஆவியானவர் நம்மை விடுவிக்கிறவராய் இருக்கிறார். அத்துடன் பரிசுத்த ஆவியானவர் சகலவித சத்தியத்தையும் போதிக்கிறார். அத்துடன் பரிசுத்த ஆவியானவர் உன்னதமான பெலனைத் தந்து இவ்வுலகத்தில் கறைதிறையற்றவர்களாய் வாழ நம்மை ஆசீர்வதிக்கிறார்.

நான், உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் என்று சொன்ன வாக்குமாறாத தேவன், நம் ஆவி, ஆத்துமா, சரீரத்தைப் பெலப்படுத்தி, சகலவிதங்களிலும் உதவி செய்து, இந்த ஆண்டு முழுவதும் உங்களைக் கண்மணிபோல் காத்து ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.