"...என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே."

                                                                                                             சங்கீதம் 18:32

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒருமுறை என் மனைவி அமெரிக்காவில் உள்ள என் 2-வது மருமகளோடு தங்கியிருந்தார்கள். நானும் அந்த நாளிலே இந்தியாவிலிருந்து டிசம்பர் மாதம் சற்று முன்னதாகவே புறப்பட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை அங்கு ஒன்றாக கொண்டாட திட்டமிட்டுச் சென்றேன். அமெரிக்கா நாட்டிலே சில பகுதியின் ஊழியங்களை முடித்துவிட்டு, டிசம்பர் 23ம் தேதி காலையில் சிக்காக்கோவில் இருந்து புறப்படுகிற ஒரு விமானத்தில் Phoenix செல்வதற்கு டிக்கெட்டை வாங்கி ஆயத்தமாயிருந்தேன். அந்த 23ம் தேதியில் சிக்காக்கோ விமானநிலையம் வந்து சேர்ந்தேன். காலை புறப்படவேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதம் ஆனது. எங்கும் பனி பெய்து கொண்டிருந்த படியினால், விமானம் இறங்கவோ ஏறவோ முடியாத நிலை இருந்தது. விமான நிலையத்திலோ மிகுந்த கூட்டம். 2 மணி நேரம் கழித்து நான் செல்லவேண்டிய விமானத்தில் ஏறுவதற்கு அதிகாரிகள் அறிவித்தார்கள். உள்ளத்தில் மிகுந்த சந்தோஷத்தோடு விமானத்தில் ஏறி அமர்ந்தேன். ஏறி அமர்ந்த 1 மணி நேரத்திற்குள்ளாக விமானம் முழுவதும் வெளியிலே பனிபெய்து மூடிக்கொண்டது. அதை அகற்றும்படியாக சிவப்பு நிறமான தண்ணீரை அடித்து, விமானத்தின் மேல் இருந்த பனியை நீக்கினார்கள். 1 மணி நேரம் ஆனது. ஆனால் அதே பனி மறுபடியும் பெய்ய ஆரம்பித்தது. விமானத்திலேயே ஏறத்தாழ 9 மணிநேரம் அமர்ந்திருக்கக்கூடிய நிர்ப்பந்த நிலை உருவானது. இந்த நிலையிலே சில காரியங்களைக் கேள்விப்பட்டபோது, எங்கு இந்த விமானத்தின் பயணத்தை ரத்து செய்து விடுவார்களோ என்று கலங்க ஆரம்பித்தேன்.

வாக்கு மாறாத தேவனை நோக்கி கெஞ்சினேன். கிறிஸ்மஸ் பண்டிகை உன் குடும்பத்தோடு தான் கொண்டாடுவாய் என்ற ஆறுதலின் வார்த்தை என்னைத் தேற்றியது. கடைசியாக 9 மணிநேர முடிவில் என்னுடைய விமானம் பறப்பதற்கு runway-க்குச் சென்றது. உள்ளத்தில் சமாதானத்தோடு தேவனைத் துதித்துக் கொண்டிருந்தேன். துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகிற தேவன், ஜெபத்தைக் கேட்டார். விமான நிலையத்தை விட்டு விமானம் கிழம்ப ஆரம்பித்தது. 5 மணிநேர விமான பயணம் இனிதாக முடிய வேண்டும் என்று தேவனைத் துதித்துக் கொண்டிருந்தேன். சிக்காக்கோ பகுதியை விட்டு 1 மணிநேரம் பறந்த பின்பு பனிப்பகுதி நீங்கி வெயில் அடிக்க ஆரம்பித்தது. கர்த்தருடைய பெரிய கிருபையினாலே இரவிலேயே என் மனைவியோடு என் மகனுடைய வீட்டில் தங்க கர்த்தர் கிருபை புரிந்தார். வீட்டிற்குச் சென்று, சிக்காக்கோவில் நிலமை எவ்விதமாய் இருக்கிறது என்று அறிய முற்பட்டபோது, விமான நிலையம் பனியினால் சில தினங்கள் மூடப்பட்டு விட்டது. அப்போதுதான் என் வழியை எவ்விதமாய் செவ்வைப் படுத்தியிருக்கிறார் என்று அறிந்து உணர முடிந்தது.

அருமையான சகோதரனே, சகோதரியே, இன்று நம்முடைய வாழ்க்கையிலே நாம் செல்லவேண்டிய வழிகளிலே பலவிதமான தடைகள், நினையாத போராட்டங்கள் நிறைந்து பெருகி என்ன செய்யலாம் என்று கவலை உண்டாகும். நம்முடைய கன்மலையாகிய கர்த்தரை நம்பி நோக்கிப் பார்க்கும் போது, அவர் தடைகளை நீக்கி எல்லாவிதமான போராட்டத்தின் மத்தியிலும் நம் வழிகளைச் செவ்வையாக்குவார். இந்த ஆண்டிற்குள் பிரவேசித்திருக்கிற நாம், இந்த ஆண்டு எவ்விதமாக இருக்கும், கடந்த ஆண்டைப்போல பலவிதமான பாடுகளும், பெலவீனங்களும் போராட்டங்களும் பெருகி விடுமோ என்று எண்ணாது கர்த்தரையே நம்முன் வைத்து நம் ஓட்டத்தை ஓடுவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.