"...இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்."

செப்பனியா 3:15

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

வெளிநாட்டில், அரசியலில் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தார். ஒரு சிறந்த அழகான பட்டணத்திற்கு மேயராக பணியாற்றியவர். அடிக்கடி வாகன விபத்தில் சிக்கியவர். ஒரு போதகருடன் அந்த வீட்டுக்குச் சென்று ஜெபித்த பொழுது, சுமார் ஒருமணிநேரம் ஒரே இடத்தில் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார். ஒருவராலும் அவரைப் பிடித்து நிறுத்த முடியவில்லை. அவர் வீடு அழகமான வீடு. குதித்துக் களைப்படைந்து கீழே விழுந்தார். சிறிது நேரம் கழிந்து எழுந்தார். கர்த்தருக்குப் பயந்து ஒவ்வொரு ஞாயிறுதோறும் தவறாது ஆலயம் செல்லும் பண்புடைய குடும்பம். பிள்ளைகள் நற்பண்புகளுடன் இசைக்கருவிகளை வாசித்து, கர்த்தரைத் துதித்து, வேதம் வாசிக்கும் வழக்கமுடையவர்கள். அந்தச் சகோதரர் நன்கு தெளிவடைந்தபின்பு, அவருக்கு நடந்த அநேக கார் விபத்துக்களைக் கூறினார். பின்பு அவரிடம் அவர் குதித்த இடத்தைச் சுட்டிக் காட்டி, இந்த இடத்தில் என்ன புதைத்தீர்கள் என்றவுடன், என் வீட்டின் பாதுகாவலுக்காக சில பொருட்களை வாங்கி வந்து புதைத்தேன். என்றார். இதை புதைத்துவிட்டால் எந்தத் தீய சக்தியும், தீங்கான காரியமும் வராது என்று சொன்னபடியால் இதைத் தவறாக செய்து விட்டேன் என்றார்.

"இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்" என்ற ஏசாயா 12:6ன் வார்த்தையை அறியாது, உலக மனிதரின் வார்த்தையை நம்பி, தவறான, தீட்டான காரியங்களை வீடுகளில், கடைகளில், தொழிற்சாலைகளில் புதைத்தும், மூலைகளில் கட்டியும் வைத்துவிடுகிறார்கள். "இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்" என்ற சகரியா 2:10ன் வார்த்தையைப் புரியாதவர்களாயிருக்கிறார்கள். கர்த்தர் நம் எல்லையில் நிறைவான ஆசீர்வாதமானக் காரியத்தைச் செய்வார்.

1. இனித் தீங்கைத் காணாதிருப்பாய்

"...இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்." செப்பனியா 3:15

தீங்கானக் காரியங்கள், செய்திகள் நம் உள்ளத்தை உடைத்துவிடுகிறது. ஒருமுறை ஒரு போதகரின் மறைவின் செய்தி, அவர் மனைவியின் காதில் விழுந்தவுடன் அவர்கள் உடனே மரித்துப் போனார்கள். தீதான செய்தி துக்கத்தை, வேதனையை உண்டாக்குகிறது. சிலர் வாழ்வில் மரணத்தையே விளைவித்து விடுகிறது. "யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்…" என்று வேண்டின ஜெபத்தை 1 நாளா. 4:10ல் பார்க்கிறோம். சற்றும் நினையாத எதிர்பாராத வேதனையின் செய்தியை நாம் கேள்விப்படும்போது அதனைத் தீங்கின் காரியங்கள், செய்திகள் என்று எண்ணுகிறோம், சொல்லுகிறோம். கர்த்தரின் உதவியைப் பெறுவதற்கு அவரை நோக்கிப் பார்க்கிற மக்களில் கர்த்தரின் வல்லமை வெளிப்படும். அதில் ஒரு முக்கியமான செயல் "எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பது" ஆகும்.

ஒரு முறை ஒரு கூட்டத்தில் அநேகர் சாட்சி கூறினார்கள். அதில் ஒரு போதகரின் சாட்சி என்னை அதிகமாகத் தொட்டது. சுனாமியில் ஊரிலிருந்த கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் கட்டிடங்களும் கடலில் கொண்டு செல்லப்பட்டு விட்டது. மீதி எஞ்சிய கட்டிடம் அந்தப் போதகரின் ஆலயமாகும். அந்தப் போதகர் தன் பிள்ளைகளுடன் மிகுதியான கண்ணீருடன் கர்த்தரின் சமுகத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தார். சுனாமியின் அலை ஆலயத்தின் ஒரு பகுதியில் மோதியவுடன் அது ஆலயத்தின் கூரையைத் தாண்டிச் சென்றுவிட்டது. உடனே அந்த இடத்திலிருந்து வெளியேறக் கர்த்தர் உதவிசெய்தார். எந்தத் தீங்கும் அவருக்கும் பிள்ளைகளுக்கும் நடைபெறவில்லை. என்று கர்த்தர் உன் நடுவில் இருக்க இடம் கொடுக்கிறாயோ அன்று முதல் தீங்கு உன்னை அணுகாது கர்த்தர் காப்பார்.

2. கர்த்தர் உன் நடுவில் இருக்கும்போது, உன்னை வேலியடைத்துக் காப்பார்.

"நான் அதற்குச் சுற்றிலும் அக்கினிமதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." சகரியா 2:5

கர்த்தர் நம் நடுவில் இருக்கும்போது உன்னத பாதுகாவலைத் தருவார். அந்நாட்களில் ஒரு பட்டணத்திற்குப் பாதுகாவலாக மதில் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவைக் கடந்து செல்லமுடியாது இருந்தது. அதின் அலங்கம் இடிந்து விழுந்தவுடன் அந்தப் பட்டணத்திற்குள் இஸ்ரவேல் மக்கள் சென்று, அவர்களை மேற் கொண்டார்கள். அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்தார்கள். கர்த்தர் உன் எல்லையில் இருப்பார் என்றால் உன்னைச் சுற்றி வேலி அடைத்துவிடுவார். சாத்தானால் உன் எல்லைக்குள் வரவே முடியாது.

கர்த்தர் யோபுவைச் சுற்றி வெளியடைத்திருந்தார். கெடுத்து நிக்கிரகம் பண்ணும் பிசாசானவன் அவனைத் தொட முடியவில்லை. அவன் வீட்டைச் சுற்றி வெளியடைத்திருந்ததினால் அவன் எல்லைகளில் பிரவேசிக்க முடியாமல் போனது. யோபுவின் காரியங்களும் ஜெயமாய் மாறியது. அவன் சம்பத்து தேசத்தில் பெருகிற்று என்று யோபு 1:9,10ல் பார்க்கிறோம். உன்னைக் கண்ணின் மணிபோல் காக்கும் வல்லமையும், அதிகாரமும் இந்த அன்பின் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கே உண்டு. அவரைத் தவிர வேறு ஒருவராலும் இயற்கை, பிசாசு, வியாதி, மனிதருடைய தந்திரங்கள் போன்ற அனைத்துக் காரியங்களிலிருந்தும் நம்மைக் காக்க முடியாது.

எலிசா என்ற தேவ மனிதனுக்கு விரோதமாக ஒரு சேனையை சீரியா ராஜா அனுப்பினான். எலிசாவின் வேலைக்காரன் ராணுவமும், குதிரைகளும், இரத்தங்களும் அந்தப் பட்டணத்தைச் சுற்றியிருப்பதைக் கண்டு பயந்து, தன் எஜமானிடம் சென்று, 'ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்' என்றான். எலிசா, பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்' என்று கூறினான். அவன் மனக்கண்களைக் கர்த்தர் திறக்க ஜெபித்தான் தேவஊழியன். கண்கள் திறந்தபோது 'எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரத்தங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.' அன்பு சகோதரனே, சகோதரியே எலிசாவைச் சுற்றி அக்கினி மயமான இரத்தங்களை, குதிரைகளைச் சூழ்ந்து இருக்கச் செய்த கர்த்தர், உன் எல்லைகளுக்கு அக்கினி  மதிலாயிருந்து, அதின் இருந்து உன்னைக் காப்பார்.

இந்த வேலியை என்று நீ இலக்கிறாயோ அன்று உன் வாழ்வில் கேடான காரியம் நடைபெறும். உன் மேன்மையை உன் ஆசீர்வாதத்தை இழந்து போவாய். நீ மிதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு லூக்கா 10:19ல் கொடுத்துள்ள அதிகாரத்தை இழந்து நாம் மிதிக்கப்படும் நிலை உண்டாகும். முள் போன்ற காரியங்கள் தோன்றி விடும்.

அன்பின் தேவன் உன் மூலம் மகிமைப்பட இன்று உன் செய்கைகளைச் சீர்ப்படுத்து. அவர் மகிமைப்படும் போது,  உன் எல்லைகளில் அக்கினி மயமான பாதுகாவலைத் தந்திடுவார். எந்த விதமான வேதனையும் ஒருக்காலமும் உட்பிரவேசிக்கவே முடியாது.

3. கர்த்தர் உன்நடுவில் இருக்கும்போது உன் குறைகளை நீங்குவார்.

"எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்." யோவான் 2:10

இயேசுகிறிஸ்து செய்த முதலாவது அற்புதமானது, குறை தீர்க்கிறதாய் இருந்தது. இன்று மனிதன் பலவிதமான குறைவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். சிலர் துக்கத்தினால் மனம் உடைந்து வேதனையடைகிறார்கள்.

அண்மையில் இந்து பிள்ளைகளுடைய ஒரு தாயார், தன் வாழ்வில் உள்ள குறைகளைச் சந்திப்பதற்கு ஒருவரும் இல்லையே என்று கலங்கி துக்கப்பட்டாள். தன்னைப் பார்ப்பதற்கும், தன் குறை நீக்கப்படுவதற்கும் வழியில்லை என்ற காரணத்தால், மாடியில் இருந்து கீழே பாய்ந்து, தன் ஜீவனை இழந்துபோனாள். இன்று குரைகளினால் வரும் கஷ்டங்கள், பலவிதமான தவறான தீர்மானங்களை எடுக்கச் செய்து விடுகிறது.

இன்று குறைகள் உன் சரீரத்தில் இருக்கலாம், உன் குறைகள் ஆவியின் தன்மைகளாய் இருக்கலாம், ஒருவேளை ஞானத்துக்கடுத்த காரியமாய் இருக்கலாம். எந்தக் குறைவையும் தீர்க்க வல்லவர் இயேசுகிறிஸ்து. இன்று அவர் உன் வாழ்வில் எல்லையில் இருக்கும்போது உன் குறைவை ஆச்சரியமாய்த் தீர்ப்பார், மாற்றுவார். உன் திருமண வாழ்வில் உள்ள குறையைத் தீர்ப்பார். அன்பின் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உன்  பிள்ளையில் உள்ள குறைவைத் தீர்ப்பார். உன் வாழ்வில் உள்ள எல்லாக் குறைவையும் தீர்த்து, தேவ சமாதானத்தைத் தருவார்.

4. கர்த்தர் உன் நடுவில் இருக்கும்போது இரட்சிப்பார்.

"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்;..." செப்பனியா 3:17

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கம் நம்மை இரட்சிப்பதாகும். இரட்சிப்பு என்று சொன்னாலே, அது பூரண சமாதானம், சுகம் போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.

எரிகோ என்ற பட்டணத்தில் ஆயக்காரருக்குத் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். இவன் செய்த தொழிலினால் அதிமாக பாவம் செய்தவன். ஊரார் அவனைப் பாவியான மனுஷன் என்று அழைத்தார்கள். இந்த சகேயுவுக்கு ஒரு வாஞ்சை உண்டானது. இயேசுகிறிஸ்து எப்படிப்பட்டவர் என்று காண விரும்பினான். ஆனால் சரீரம் மிக குள்ளமானதாய் இருந்தது. இயேசுகிறிஸ்துவை எப்படி அந்தக் கூட்டத்தில் சென்று  காணமுடியும் என்று நினைத்து, ஒரு வழி செய்தான்.

இயேசுகிறிஸ்து செல்லும் வழியில் முன்னாக சென்றான். சாலையில் ஓரத்தில் இருந்த காட்டாத்தி மரத்தின்மேல் ஏறினான். அவன் ஏறியிருந்த இடம் வந்தபோது, இயேசுகிறிஸ்து அண்ணாந்து பார்த்து சகேயுவே, சீக்கிரமாய் இறங்கிவா என்று அவன் பெயரைச் சொல்லி அழைத்தார். இன்று உன்னுடனே, உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார்.  சீக்கிரமாய் இயேசுகிறிஸ்துவைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவர் பிரசன்னத்தால் இந்த சகேயு மாற்றமடைந்தான். தான் செய்துவந்த பாவத்தை நினைத்தான். அந்த லஞ்சம் வாங்கும் பாவத்தை ஒவ்வொன்றாக அறிக்கை செய்தான். எந்த மனிதன் தன் பாவங்களை மறைக்காது அறிக்கை செய்து விட்டு விடுகிறானோ அவன் தேவனிடத்தில் இரக்கம் பெறுவான். இந்த சகேயு  அறிக்கை செய்தபோது, இயேசுகிறிஸ்து இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்று சொன்னார்.

இன்று இயேசுகிறிஸ்து உன் எல்லைகளில் இருக்கும் போது, நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.

5. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் நடுவில் இருக்கும்போது உன் தோல்வி ஜெயமாக மாறும்.

"அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்." லூக்கா 5:6

மனிதன் பலவிதமான தோல்வியினால் தவிக்கிறான், கலங்குகிறான். வாழ்வில் உண்டாகும் தோல்வியினால் சிலர் வாழ எனக்கு வழியில்லை என்று தங்களையே மாய்த்துக் கொள்கிறார்கள். சிலர் தோல்வியினை தாங்கமுடியாது தாங்கள் வசிக்கும் இடத்தையே விட்டுவிட்டு போய்விடுகிறார்கள். சிலர் மனமுடைந்து தனிமையில் நாட்களைச் செலவிட ஆரம்பித்து விடுகிறார்கள். திருமண வாழ்வில் தோல்வி, தான் விரும்பிய மகனை/மகளை திருமணம் செய்து கொள்ள எடுக்கிற முயற்சியில் தோல்வி, வியாபாரம், தொழில் என்று பல காரியங்களில் தோல்வியினால் துக்கமடைகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அன்பு சகோதரனே, சகோதரியே என் வாழ்வில் உண்டான தோல்வியினால் வெளியே தலைகாட்ட இயலாதென்று உள்ளத்தில் வேதனையுடன் வாழ்கிறாயா? நீ அடைந்த தோல்வியினால் என்ன செய்வதென்று தவிக்கிறாயா? உன் வாழ்வில் ஏற்பட்ட எல்லா தோல்வியியையும் ஜெயமாக மாற்ற வல்லவர் இயேசுகிறிஸ்து என்பதை நன்கு அறிந்து அவரைப் பற்றிக்கொள்ள, அவர் வழி நடக்க இன்றே இடம்கொடு.

இயேசு கிறிஸ்து ஒரு நாளிலே கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் அவரிடம் வசனத்தைக் கேட்க வந்தார்கள். அந்தச் சமயத்தில் கடற்கரையிலே  இருந்த இரண்டு படகுகளில் ஒன்றில் ஏறினார். இயேசு கிறிஸ்து நம் நடுவில் இருக்கும்போது திட்டமான, தெளிவான ஆலோசனைகளைத் தருவார்.  பேதுரு உடனே ஐயரே, இரா முழுவதும் முயற்சித்தோம், ஒன்றும் அகப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படி வலையைப் போடுகிறேன் என்று வலையைப் போட்டான். அவன் வலையில் திரளான மீன்கள் சிக்கியது. அவனுடைய தோல்வி ஜெயமாக மாறியது.

இன்று இயேசுகிறிஸ்து உன் நடுவில் இருக்கும்போது உனக்கு போதுமான பலவிதமான ஆலோசனைகளைத் தருவார். என்று இந்த வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறோமோ, அந்த நாளில் நிறைந்த ஜெயத்தைப் பெறுவோம். வாழ்வில் துக்கம் நிறைந்து கலங்கும் தேவப்பிள்ளையே, இன்றே கர்த்தரின் பிரசன்னம் உன்னருகே கடந்துவர இடம் கொடுப்பாயானால், உன் வாழ்வில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். எந்த விதமான தீங்கையும் காணாதிருக்கத்தக்க நல்ல வாழ்வைப் பெறுவாய். உன் எல்லைகளில் அவ அக்கினி மதிலாயிருப்பார். உன் வாழ்வில் உள்ள அத்தனை குறைவையும் நீக்கி உனக்கு மகிழ்ச்சி உண்டாக்குவார். உன் வீட்டிற்கு இரட்சிப்பு உண்டாகும். அத்துடன் உன் தோல்வி ஜெயமாகும். இந்த அன்பும், வல்லமையும் நிறைந்த ஆண்டவர் நம் மத்தியில் இருக்க நாம் எவ்விதமான வாழ்வை வாழ வேண்டும் என்று அறிந்து செயல்படும்போது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் நடுவில் இருந்து அதிசயம் செய்வார்.

இயேசு கிறிஸ்து நம் நடுவில் இருக்க நாம் எவ்விதமாய் வாழ வேண்டும்?

1. சத்துருக்கள் விலக்கப்பட வேண்டும்.

"கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துக்களை விலக்கினார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்." செப்பனியா 3:15

இன்று அநேகரின் வாழ்வில் பலவிதமான சத்துருக்கள் இருக்கிறார்கள். என்று உன் வாழ்வில் கர்த்தர் சத்துருக்கள் செய்கைகளை அழித்து, அவைகளை அகற்றுகிறாரோ அன்று அற்புதமாய் உன் வாழ்வில் அவர் சமுகம் கடந்து வரும். அவர் உன் நடுவே இருந்து பெரிய காரியங்களைச் செய்வார்.

ஒருமுறை புதிதாய் கட்டி முடித்த தங்கள் வீட்டில் வாசம்பண்ண, அந்த வீட்டைக் கட்டிய குடும்பத்தார் சென்று தங்கினார்கள். இரவில் தங்கி எந்தக் காரியத்தையும் செய்ய முடியாமல் இருந்தது. சில தினங்களில் எல்லையெங்கும் இரத்தத்துளிகள் இருந்தது. வீட்டையே விற்று விட்டு வேறு எங்கேயாவது செல்ல யோசனையாக அந்தக் குடும்பத்தினர் இருந்தார்கள். ஒரு ஊழியரை அந்த வீட்டார் அழைத்து ஜெபித்த போது, கர்த்தரின் ஆவியானவர் காரியங்களை அறிவித்தார். அந்தக் குடும்பத்தார் ஜெபித்தார்கள். யார் இந்தக் காரியத்தைச் செய்தார்களோ, அவர்கள் அண்ட் இடத்தை விட்டுவிட்டுச் சென்றனர். அதன்பின்பு அங்குக் காணப்பட்ட தீய செயல்கள் அகன்று போனது. சமாதானமும், சந்தோஷமும் அடைந்தார்கள். கர்த்தரின் பிரசன்னத்தினால் சந்தோஷம் நிறைந்தது. கர்த்தர் நம் சத்துருக்களை அகற்றி, நம்முடன் வாசம் பண்ண வருகிறார்.

2. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழைக்க வேண்டும்.

"இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்." யோவான் 2:2

நாம் நம் வாழ்வில், நம் மத்தியில் வருவதற்கு இயேசு கிறிஸ்துவை அழைக்க வேண்டும். நாம் ஒரு உலகமனிதரை அழைக்க வேண்டும் என்று திட்டமிடும்போது அவர்கள் தங்க வேண்டிய இடத்தை, நாம் சரியாக சுத்தப்படுத்தி செயல்படுகிறோம். அதைப்போல நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அழைக்க வேண்டுமானால் நமது எல்லைகளை தூய்மையாக்க வேண்டும். 'நான் பரிசுத்தர்' என்று சொன்ன இயேசுகிறிஸ்து பரிசுத்தகத்தை விரும்புகிறவர். நாம் பரிசுத்தமாய் இருப்பது அவருடைய சித்தம். பிசாசானவன் நாம் அழைக்காமல், நம் எல்லைகளில் வந்து கேடுகளையும், பாடுகளையும் செய்கிறவனாக இருக்கிறான். நம்மை செய்யும் இயேசுகிறிஸ்துவை நாம் அழைக்கும்போது நம் மத்தியில் வந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

3. மாற்றம் அடைந்தவராக மாறும்போது நம் மத்தியில் வருகிறார்.

"நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள்..." யோவேல் 2:27

இஸ்ரவேல் என்பவன் தன வாழ்வில் மாற்றம் அடைந்தவன். அவன் யாக்கோபு என்ற பெயரையுடையவன். தன் சகோதரன் அடைய வேண்டிய ஆசீர்வாதத்தைத்தான், தான் மூத்த மகள் என்று கூறி ஏமாற்றியவன். தன் சேஷ்ட புத்திர பாகத்தை அற்பமான கூழைக் கொடுத்து பெற்றவன். இப்படிப்பட்ட யாக்கோபு, தன் வாழ்வில் கர்த்தரின் தூதனுடன் போராடினான். கர்த்தரின் தூதன் அவன் பெயரைக் கேட்டபொழுது உண்மையான பெயரைக் கூறினான். இனி யாக்கோபு எண்ணப்படாமல் இஸ்ரவேல் எனப்படும் என்று கூறினான். இவ்விதமாய் மாற்றம் அடைந்தவன் தான் இஸ்ரவேல். இந்த இஸ்ரவேலை ஆசீர்வதிக்கப் பிரியமான தேவன், அவன் நடுவில் வாசம் பண்ணுவேன் என்று கூறியுள்ளதைப் பார்க்கிறோம்.

4. கர்த்தருடைய பிள்ளைகளாய் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கூடும்போது அவர்கள் மத்தியில் இருக்கிறார்.

"இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்." மத்தேயு 18:20

இன்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாம் கூடும் போது அவர் நம் மத்தியிலே இருக்கிறார். பலவித காரணத்துடன் கூடுகிறவர்கள் கூட்டம் மிகுதி. ஆனால் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கூடும்போது அதிசயமாய் நம் மத்தியில் வந்து காரியங்களைச் செய்வார்.

5. கர்த்தருக்குப் பிரியமாய் நடக்கும்போது நம் நடுவில் வருவார்.

"பென்யமீனைக்குறித்து; கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்." உபாகமம் 33:12

இன்று நம்முடைய செய்கைகளும், சிந்தைகளும் கர்த்தருக்குப் பிரியமானதாய் மாறும்போது, அவர் நம் எல்லைகளுக்குள்ளே வாசம்பண்ண கடந்து வருவார். இன்று கர்த்தரைத் துதிப்பது, கொடுப்பது, தானியேலைப் போல ஜேப்பிப்பது இப்படி அவருக்குப் பிரியமானத்தைச் செய்யும்போது கர்த்தர் நம் நடுவில் வாசமாயிருந்து நமக்குப் பெரிய காரியங்களைச் செய்வார்.

இன்றுமுதல் நாம் நம் சத்துருக்கள் அகற்றப்பட்டவர்களாய், கர்த்தரை அழைத்து, மாற்றமடைந்த மனிதனாக மாறி, கர்த்தரின் நாமத்தினால் கூடுகிற பிள்ளைகளாய் இருந்து, கர்த்தருக்குப் பிரியமான காரியங்களை நாம் செய்யும்போது கர்த்தர் நம் மத்தியில் இருந்து என்றும் நம்மை நல் ஆசீர்வாதங்களினால் முடிசூட்டுவார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்