"அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி,

உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்."

                                                                                                                                       சங்கீதம் 147:14

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று மனிதன் வசிப்பதற்கென்று இடத்தை வாங்குகிறான். அதிலே ஒரு வீட்டைக்கட்டி அதில் சுகமாய் வாழ்வதற்கு முழு மனதோடு செயல்படுகிறான். அந்த வீட்டிற்கு நான்குபுற எல்லைகளைப் பார்க்கிறோம். இந்த எல்லைகளுக்குள் தன் வீட்டில் சுகமாய்த் தங்கி தாபரிக்க எல்லா விதமான பாடுகளையும் படுகிறான். அவன் வசிக்கும் எல்லை அந்த ஊர் ஆகிறது. எங்கே வசிக்கிறீர்கள் என்று கேட்டால், இந்தப் பட்டணத்திலே, இந்த ஊரிலே நான் வசிக்கிறேன் என்று தான் வசிக்கும் எல்லையைக் குறிப்பிடுகிறான். இன்றைக்கு தேவன் நம் எல்லாரையும் ஒரே இரத்தத்தாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும்  குறித்திருக்கிறார். தேவன் ஆபிராமைப் பார்த்து 'நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்கிறார்.' ஆதி. 13:17ன் படி வாக்களித்து அந்த எல்லையை அவன் சந்ததியாருக்கு அருளினார்.

தேவன் இவ்விதமாய் நாம் வசிக்கும் காலம், வசிக்கப்போகிற இடம், நாம் எந்த இடத்திலே பூமியிலே அலைந்து திரிந்து வாழ்வோம் என்று முன்பதாக அதை ஏற்படுத்தி, ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். அத்துடன் அவருடைய திட்டத்தின்படியே அந்த எல்லைகளில் நாம் சென்று வாழவும் வழி திறப்பார்.

மனிதர்களுக்கு எவ்விதமாக எல்லைகளை நியமித்து ஆசீர்வதிக்கிறாரோ அவ்வாறே சகலவற்றிற்கும் எல்லைகளை ஏற்படுத்தியிருக்கிறார். 'பூமி ஒரு போதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின் மேல் தண்ணீர்கள் நின்றது. அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத் தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.' சங்கீதம் 104:5-8ல் பார்க்கிறோம். இவ்வாறு நீர் நிறைந்த இடம்தான் கடலாக சமுத்திரமாக மாறியது. சங். 104:9ல் 'அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.' எனப் பார்க்கிறோம். தேவன் பூமியின் எல்லைகளை யெல்லாம் திட்டம் பண்ணி சகலவற்றையும் மனிதர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார். அவர் அதோடு மாத்திரமல்ல பூமியின் எல்லையெங்குமுள்ள வர்களே, என்னை நோக்கிப் பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொன்ன தேவன் இன்றைக்கு மாறாதவராய் ஜீவிக்கிறார். "...அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந் தொடங்கி மறுசமுத்திரம் வரைக்கும், நதித்தொடங்கிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்." சகரியா 9:10. இப்படி சமாதானம் கூறும் தேவன் நமது எல்லைகளிலே நிறைவான ஆசீர்வாதங்களைத் தருகிறவராய் இருக்கிறார்.

1. எல்லைகளை விஸ்தாரமாக்குகிறார்

"நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்..." யாத்திராகமம் 34:24

உன் எல்லைகளை விஸ்தாரமாக்குகிற தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறார். 'உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்…' என ஏசாயா 54:2,3ல் பார்க்கிறோம். விஸ்தாரமாக்கும் தேவன் உன் கூடாரத்தின் எல்லைகளை விஸ்தாரமாக்குவார். 'பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப் போகிற பிள்ளைகள்; இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது...' ஏசாயா 49:20ன் படி உன் குடும்பத்தைப் பெருகச் செய்வார். '...நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார்...' ஆதி. 26:22ன் படி இடம் உண்டாக்குவார். '...இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்' லேவி.19:25ன் படி உங்கள் கைகளின் பலனைப் பெருகச் செய்வார். உன் கையின் பிரயாசங்களை ஆசீர்வதித்து வர வர விருத்தியடைந்து மகா பெரியவனாக்குகிற தேவன் மாறாதவராயிருக்கிறார். 'தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்; கர்த்தர் அவனோடுகூட இருந்தார்.' என்று 1 நாளா.11:9ல் பார்க்கிறோம்.

யாபேஸ் என்பவன் பிறக்கும் போதே தாய்க்குத் துக்கத்தைக் கொண்டு வந்த மனிதன். அவனுடைய உள்ளத்தில் தீங்கு அணுகாதபடி தன் எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்று விரும்பி வேண்டுதல் செய்த பொழுது, அந்தப் படியே கர்த்தர் அவன் எல்லைகள் விரிவடைய தக்கதாக காரியங்களைக் கட்டளையிட்டார். இன்றைக்கு என் தொழில் விருத்தியடைய வேண்டும் என்று கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருக்கும் சகோதரனே/ சகோதரியே, உன் வேண்டுதல்களைக் கேட்கும் தேவன் உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவார். என் தொழில் பெருக வேண்டும், பல பகுதிகளிலே வியாபாரமானது தொடங்கப் படவேண்டும் என்று விரும்புகிற, வேண்டுகிற தேவப் பிள்ளையே, உன் ஜெபத்திற்கு பதில் கிடைப்பதைக் காண்பாய். என் குடும்பம் விருத்தியடைய வேண்டும் என வாஞ்சிக்கிற அருமையான சகோதரியே, உன் வாஞ்சை நிறைவேறுகிறதைத் துரிதமாய்க் காண்பாய் என்று சொல்லுகிறபடியினால் கர்த்தரைத் துதிக்கிறேன்.

2. சத்துரு நம் எல்லைகளை மிதிக்கும் போது அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்

"இவர்கள் அசீரிய தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும் போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும் போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்." மீகா 5:6

இன்று சத்துருவாகிய பிசாசானவன் பலவிதங்களிலும் பல ரூபங்களிலும் நமக்கு விரோதமாய் வருவதுண்டு. 1பேதுரு 5:8ல் 'உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.' என பார்க்கிறோம். அவ்விதமான நேரங்களில் அவனுடைய தந்திரங்களுக்கும், தாக்குதலுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைத் தப்புவிக்கிற தேவனாயிருக்கிறார். அவனுடைய வலைகளிலே நமது கால்கள் சிக்கிக்கொள்ளாதபடி தப்புவிக்கிற தேவனாயிருக்கிறார். அனுதினமும் நம் பரிசுத்த வாழ்க்கையை, நம்முடைய சமாதான வாழ்க்கையை, சந்தோஷ வாழ்க்கையைக் கெடுப்பதற்கு தந்திரமாய் நம்மோடு யுத்தம் பண்ணுகிறவனாய் இருக்கிறான்.

ஒருமுறை ஒரு குரும்பத்தாருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை இல்லை. கணவனும் மனைவியும் கர்த்தருடைய பிள்ளைகள். சத்துருவாகிய பிசாசானவன் அந்தக் குடும்பத்திற்கு விரோதமாய் சர்ப்ப ரூபத்தில் போராடிக் கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் கரு தரித்து சில தினங்களிலேயே கனவில் பாம்பின் உருவம் தோன்றி, கரு சிதைந்து அவர்கள் சந்தோஷத்தை அழித்து விடும். சில நேரங்களில் 3 மாதம் அல்லது 4 மாதம் கழித்து கரு சிதைவு ஏற்பட்டு சமாதானத்தை இழந்தார்கள். என்றைக்கு இது சத்துருவுடைய செயல் என்று  அறிந்து உணர்ந்து, அதற்கென்று தங்களைத் தாழ்த்தி ஜெபிக்க ஆரம்பித்தார்களோ, அன்றே அதே மாதத்தில் கரு தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க கர்த்தர் உதவிசெய்தார். மருத்துவ ரீதியாக பல காரியங்கள் குறைவாய்ச் சொல்லப்பட்டாலும், கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார்.

அருமையான சகோதரனே, சகோதரியே, உன் எல்லைகளில் சத்துருவானவன் தந்திரமாய் செயல்படும்போது, சமாதானக் குறைவு ஏற்பட்டு கலக்கமும், கவலையும் ஏற்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று முதல் மேய்ப்பராக மாறுவார் என்றால், சமாதானக் காரணராகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்வில், நம் குடும்பத்தில், நம் எல்லைகளில் சமாதானத்துக்கடுத்த அநேக ஆசீர்வாதங்களைப் பெருகச் செய்து நம்மை ஆசீர்வதிப்பார். இன்று சத்துருவானவன் பல ரூபங்களில் வருவான். சிலருடைய வாழ்க்கையில் மிருக ரூபங்களிலும், செத்துப் போன மனிதர்களின் உருவங்களிலும் தோன்றி அவர்கள் வாழ்க்கையை நாசப்படுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து உன் மேய்ப்பராய் இருக்கும் போது, உன் சத்துருக்களுக்கு மத்தியிலே உன்னைக் கனப்படுத்தும்படி புதிய அபிஷேகத்தைலத்தினால் நிறைத்து, உன் வேதனை நீங்கச் செய்து உன்னை ஆசீர்வதிப்பார். உன்னைத் தப்புவித்து தயவாய் நடத்தக்கூடிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இன்று உன்னை மேய்ப்பதற்கு இடம் கொடுப்பாயா? அவர் நல்ல மேய்ப்பராக இந்தப் பூமியிலே தோன்றி, தன் ஜீவனை நமக்காக சிலுவையிலே கொடுத்தார். அவர் மந்தையில் உள்ள ஆடாய் நீ மாறுவாயானால் உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதங்களும் வாய்க்காதே போம்.

இன்னும் இந்த சத்துருவாகிய பிசாசானவன் சில பொல்லாத மனிதர்கள் மூலமாக நமக்கு விரோதமாய் எழும்பி யுத்தம் செய்வதைக் காணமுடியும். இந்தப் பொல்லாத உருவங்கள் சில செத்துப்போன மனிதர்களுடைய படங்களின் மூலமாய் நமக்கு விரோதமாய் எழும்புகிறதைப் பார்க்க முடியும். ஏசாயா 26:14ல் 'அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்...' என்ற சத்தியத்தை அறியாதபடியினாலே, குடும்பத்தில் இறந்து போனவர்கள் எனக்காக வேண்டுதல் செய்வார்கள், எனக்காக இவ்விதமான காரியத்தைச் செய்வார்கள் என்று சொல்லி ஏமாற்றி, நம்மைத் தந்திரமாய்த் தாக்குகிறது. பிரசங்கி 9:6ல் 'அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும் அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.' என்ற சத்திய வசனத்தை அறியாதபடியால், செத்தவர்களை வணங்குகிறார்கள். பெரிய படங்களை வைத்து, மாலைகளைப் போட்டு, பூக்களைப் போட்டு, ஊதுபத்தி கொழுத்தி ஆராதனை செய்கிறவர்களாய் இருக்கிறோம். இவர்களுடைய வாழ்க்கையில் அது தந்திரமாய்ச் செயல்பட்டு அந்த செத்தவர்களின் உருவங்களிலே வந்து கெடுதியை, கொடூர வியாதிகளை, போராட்டங்களை உண்டாக்கி, பிள்ளையற்றவர்களாயும் மாற்றி நம் வாழ்க்கை பாதித்து விடுகிறது.

ஒருமுறை ஒரு குடும்பத்தாருடைய மகள் என் தாயாருக்கு Ovary-ல் கேன்சர் என்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மாலையில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாய் அந்த கேன்சர் நோயின் பகுதிகள் அகற்றப்பட இருக்கிறது என்று ஜெபிக்க அழைத்துச் சென்றார்கள். அந்த மகளைச் சற்று வெளியே இருக்கும்படி சொல்லிவிட்டு அந்தச் சகோதரிக்குச் சத்தியத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். உங்களுக்கு இது நோய் அல்ல, பிசாசின் தாக்குதல். கர்த்தர் இந்த நாளிலே இந்தத் தாக்குதலிலிருந்து உங்களைத் தப்புவிக்க விரும்புகிறார் என்று கூறினேன். அந்தச் சகோதரி மிகுந்த ஆவலோடும் கருத்தோடும் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனமாய்க் கேட்டார்கள். சகோதரியே, செத்துப்போன உங்கள் கணவரை அடிக்கடி நினைக்கிறீர்கள். அதனால் அவருடைய உருவம் உங்கள் கண்களிலும், உங்கள் நினைவுகளிலும் வந்துகொண்டே இருக்கிறது. மேலும் நீங்கள் படுத்துத்தூங்கும்போது, உங்கள் செத்துப்போன கணவருடைய உருவத்தில் உங்கள் கணவரைப் போல அந்த உருவத்துடன் உறவு கொள்ளுகிறீர்கள். இதனால் இந்த வியாதி வந்துள்ளது. இன்று இயேசு கிறிஸ்துவிடம் அந்தப் பாவத்தை அறிக்கை செய்து இரக்கம் பெற உங்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொன்னவுடன் மிகுந்த கண்ணீரோடு நான் ஏமாந்து விட்டேனே என்று கலங்கி தன்னை முற்றிலும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து ஜெபித்தார்கள். அன்று மாலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்காக ஆயத்தப்படுத்தின நேரத்தில் உங்களில் கேன்சர் கட்டிகள் எதுவும் இல்லையே என்று அறுவை சிகிச்சைக்குரியவைகளைச் சற்று நாட்கள் கழித்துப் பார்ப்போம் என்று தள்ளி வைத்தனர். அதற்குப்பிறகு அவர்களில் அந்த நோயின் அறிகுறியே இல்லாது போயிற்று. செத்த உருவங்களில் சத்துரு உன் எல்லைகளில் வந்து கொடூரமான விதங்களில் மோதியடிக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானவராய் இருந்து (ஏசாயா 25:4) எல்லாவிதமான கொள்ளை நோய்க்கும் பயப்படாதிருக்கத்தக்கதாக அவர் உனக்காக யுத்தம்பண்ணி ஒன்றும் உன்னை அணுகாது காத்து தப்புவிப்பார்.

இன்னும் சிலருடைய வாழ்க்கையில் சிறிய ஜீவஜந்துக்கள் உருவில் வந்து நமக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறான். ஒருமுறை ஒரு ஊழியருடைய மனைவிக்காக ஜெபிக்க அழைக்கப்பட்டேன். அவர் நெல்லைப்பகுதியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குடல்களிலே கேன்சர் தோன்றி உள்ளது என்று மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்காக சென்னையில் அவருடைய சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டிடியூட்டில் அவரைப் பரிசோதனை செய்தார்கள். குடலின் சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலமாய் நீக்குவதற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தச் சகோதரிக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்மீது வைத்த அன்பினாலே ஒரு காரியத்தை வெளிப்படுத்தினார். ஓசியா 7:1ல் உள்ளது போல் வெளிப்படுத்தி, நம் சிறையிருப்பைத் திருப்புகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அற்புதத்தைச் செய்யும்படியாக அதைத் செய்தார். அந்த மகளுக்காக ஜெபிக்கிற ஜெப நேரத்தில், எலியின் உருவத்தில் அந்த மகளின் குடல்களில் கெடுத்துக் கொண்டிருக்கிற பொல்லாத ஆவியே நீ வெளியேறு என்று சொன்னவுடன், அந்தச் சகோதரி மிகுதியாக சத்தமிட்டார்கள். ஜெபவேளை முடிந்தபின்பு நேற்றைய தினம் என் கனவில் ஒரு எலியானது என் குடல்களைக் கெடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நீங்கள் அதைக் கூறினபோது என்னையறியாது நான் ஓலமிட்டு விட்டேன் என்று சொன்னார்கள். மருத்துவர் பரிசோதனை செய்தார்கள். அவர்களில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.

இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையிலே இயேசு கிறிஸ்துவை உன் ஆண்டவராக, இரட்சகராக, மேய்ப்பராக ஏற்றுக் கொள்வாயானால் உன் வேதனை நீங்கி சுகவாழ்வைப் பெறுவாய். உனக்கு விரோதமாய் உன் எல்லைகளில் எந்த உருவங்களில் தோன்றினாலும், கண்மணிபோல் உன்னை எல்லாத் தீங்குக்கும் தப்புவிப்பார். அவரே உன்னதமானவர். அவருக்கு ஒப்பானவர் யாருமில்லை.

3. எல்லைகளில் வாசமாயிருந்து காப்பாற்றுவார்

"பென்யமீனைக் குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்." உபாகமம் 33:12

அன்பின் தேவனாகிய இயேசு கிறிஸ்து உன் வாழ்க்கையிலே உன் எல்லைகளுக்குள்ளாக வாசமாயிருந்து உன்னைக் காப்பாற்றுவார். மனிதன் இன்றைக்கு உலக மனிதர்களுக்குப் பிரியமாய் இருக்க வகை தேடுகிறான். வாலிப பருவத்தில் இந்த மகன்/ இந்த மகள் எனக்கு பிரியமாயிருக்கிறது என உள்ளத்தில் எண்ணி அவனை/அவளை அடைவதற்கு மிகுதியாக முயற்சிக்கிறதைப் பார்க்கிறோம். இதற்காக தன் நேரத்தையெல்லாம் செலவிடுகிற மக்கள் ஏராளம். எப்பொழுது கல்லூரி முடிந்து, வேலை முடித்து வெளியே வருவாள், நாம் சந்தித்துப் பேசுவோம் என நன்கு உடுத்தி, பலவிதமான வாசனைத் திரவியங்களைப் பூசி, அழகான சிகை அலங்காரத்தைச் செய்து நாடுகிறதைப் பார்க்கிறோம். அவள் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டாளா, பேச மாட்டாளா என்று எண்ணுகிற மக்கள் உண்டு. இவன் எனக்குப் பிரியமாயிருக்கிறான், என் உள்ளத்தில் இவரை நேசிக்கிறேன், எனக்கு கணவராவதற்கு என்ன வழி என்று சிந்தித்து செயல்படுகிற மக்கள் உண்டு. சிலர் வாட்சப் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். பிரியமானவன்/பிரியமானவள் என்று உலகத்தார்க்கு முக்கியத்துவம் கொடுத்து தேடுகிற மக்கள் ஏராளம்.

அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருக்குப் பிரியமான ஒரு மகனாக, மகளாக நீ மாறுவாயானால் உன்னை நேசிக்கிற தேவன், உன்னில் அன்புகூர்ந்து தன்னையே தியாகமாய் அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து எல்லாவித இக்கட்டுகளிலும், எல்லாவித போராட்டங்களிலும் உன்னைக் காத்து, உன்னோடே வாசம் பண்ணுகிறவராய் இருக்கிறார். அடிமையாகக் கொண்டு வரப்பட்ட தானியேல் தன் சரீரத்தைத் தீட்டுப் படுத்தாதபடி 'உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.' 1 பேதுரு 1:15ன் படி காத்து நடக்க ஆரம்பித்தான். அவனில் கர்த்தர் பிரியமாயிருந்தார். தானி. 9:23ல் 'நீ மிகவும் பிரியமானவன்' என்று சொல்லி அவனுக்குள் விசேஷித்த ஆவியின் அபிஷேகத்தையும் ஞானத்தையும் அருளி, அவனை ஆசீர்வதித்தார். அத்தேசத்து மக்கள் அடிமையாக வந்த இவன் நம்மை ஆளுகை செய்வதா என்று அவனுக்கு எதிராக தந்திரமாய் செயல்பட்டார்கள். தேவன் அருளிய ஞானத்தினால், தரிசனங்களையும், சொப்பனங்களையும், எழுத்துக்களையும் அறிந்து அதின் அர்த்தத்தைக் கூறுகிற கிருபை பெற்றவனாய் திகழ்ந்தான். ஆவியின் ஒன்பது கனிகளில் ஒன்றாகிய இச்சையடக்கமானது அவனைப் பெரியவனாக மாற்றினதோடு சிங்கக்கெபியில் போட்டபோது, அவனைக் காப்பாற்றினார். அந்த ராஜா மகிழும்படியான ஒரு நிகழ்ச்சியை தானி. 6:22,23ல் பார்க்கிறோம். சிங்கக் கெபியிலே போடப்பட்ட தானியேல் தேவனுக்கேற்ற பிரியமானவனாய், சாட்சியுடையவனாய் இருந்தபடியினால், அவனைக் கண்மணிபோல் காப்பாற்றினார். சிங்கத்தின் சீறலுக்கும் கொடூரமான செயலுக்கும் அவன் ஆவி ஆத்துமா சரீரத்தை முழுமையாக காப்பாற்றினவர், சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். அவனை ராஜா சிங்கக் கெபியிலிருந்து தூக்கியெடுத்து, நம் சத்துரு ஒழிந்தான் என்று எண்ணின அவனுக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து தந்திரமாய் செயல்பட்ட அனைத்து மக்களையும், குடும்பங்களையும், பிள்ளைகளையும் சிங்கக் கெபியில் போட ராஜா கட்டளையிட்டதை அறிவோம். சிங்கக் கெபியின் அடித்தளத்திற்குச் செல்லு முன்பாக சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து எலும்புகளையெல்லாம் நொறுக்கிப் போட்டது.

அருமையான தேவப்பிள்ளையே, கிறிஸ்துவுக்கு பிரியமாய் வாழ உன்னை ஒப்புக் கொடுப்பாயானால், உனக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா ஆயுதங்களையும், எல்லா உபாய தந்திரங்களையும் நிர்முலமாக்கி, உன்னைக் காப்பாற்றி ஆசீர்வதிப்பார். இன்று கர்த்தருக்குப் பிரியமான துதி, பரிசுத்தம், உத்தமம் கர்த்தருக்குப் பிரியமான செயல்களாய் இருக்கிற படியினால் பிரியமாய் நடந்து, காப்பாற்றப்பட்டு, நித்திய நரக ஆக்கினைக்குக் காப்பாற்றப்பட்டு அவரோடு வாசம் பண்ண ஒப்புக் கொடுப்போம்.

4. எல்லைகளைச் சமாதானமுள்ளதாக்குகிறார்

"அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி..." சங்கீதம் 147:14

நம்முடைய தேவன் நம்முடைய எல்லைகளைச் சமாதானமுள்ளதாக்கி நம்மை ஆசீர்வதிக்கிறவர். 'சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.' மத்.5:9ன் படி சமாதானத்தினால் நம் எல்லைகளை நிரப்புகிறவர். சமாதான பிரபுவாய் இந்த உலகத்திற்கு வந்தவர், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன் (யோவான் 14:27) என்று சொன்னவர், சமாதானத்தை நம் உள்ளத்தில், நம் இல்லத்தில், நம் எல்லைகளில் பெருகச் செய்கிறவராயிருக் கிறார். சமாதானம் இல்லாதபடி வாழ்ந்து கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, இயேசு கிறிஸ்து உன்னை அழைத்து, மெய்யான சமாதானத்தை உன் எல்லைகளிலும், உன் பிள்ளைகளிலும் நிறைவாய்ப் பெருகச் செய்ய விரும்புகிறார். இன்று அநேகருடைய வாழ்க்கையில் இந்த சமாதானம் இல்லாதபடி சந்தோஷத்தை இழந்து, கலங்கி கவலையுடனும் கண்ணீருடனும் வாழ்கிறார்கள். கணவர் மனைவிக்கு நடுவாக சமாதானம் இல்லாதபடி பிரிந்து வாழ்கிற குடும்பங்கள் அநேகம் உண்டு. சமாதானத்தை உங்கள் எல்லைகளிலும் நிறைவாகப் பெருகச் செய்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார். இந்தச் சமாதானத்தை இலவசமாய்த் தருகிற இயேசு கிறிஸ்துவிடம் வருவாயா? என் குடும்பத்தில் சமாதானம் இல்லை, கடன் தொல்லை மிகுதி, நெருக்கங்கள் மிகுதி, யார் எனக்கு சமாதானம் தருவார் என்று எண்ணியும் சொல்லிக்கொண்டும் சாராயக் கடையை நோக்கிச் செல்கிற சகோதரனே, தவறான சிற்றின்பங்களினாலே சமாதானம் உண்டு என்று ஏமாந்து போய் வேதனையோடு வாழ்கிற உனக்கு இன்று இயேசு கிறிஸ்து சமாதானத்தைக் கொடுத்து, உன் எல்லைகளிலே உன்னை சந்தோஷத்தோடு வாழ வைக்க விரும்புகிறார்.

யார் சமாதானம் பெறுவார்கள்?

i) விடுதலை உண்டாகும் போது சமாதானம் உண்டாகும்

"...இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையிலே இராதபடிக்கு விடுவித்துக் கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது." 1 சாமுவேல் 7:14

இன்று பல காரியங்களிலே நமக்கு விடுதலை தேவை. பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் இலட்சம் என்று கடன் வாங்கி, கடன் கொடுத்தவனுக்கு அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளம். நீதி. 22:7ல் '...கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.' என்று பார்க்கிறோம் சத்திய வேதம் நமக்குத் தருகிற ஆலோசனை உபா. 15:6ல் 'நீ அநேகம் ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்காதிருப்பாய்' என்ற வார்த்தையை அறியாது உணராது, அனுதின வாழ்க்கையிலே கடன் வாங்கி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வசனத்தை முழுமையாக கைக்கொள்ளும்போது, கடன் வாங்காத சூழ்நிலை உண்டாகிறது. பிசாசானவன் தேவனுடைய வார்த்தைகளை மீற வேண்டும் என்று தந்திரமான விதங்களில் நம்மைக் கடன் வாங்கச் செய்கிறான். ஏழைகள் வட்டிக்கு கடன் வாங்கி அடிமையாய் வாழ்கிறார்கள். நடுத்தர வருவாய் உள்ள மக்கள் தவணைமுறை என்ற திட்டத்தின் கீழாய் கடன்காரர்களாய் மாறுகிறார்கள். செல்வந்தர்கள் கிரடிட் கார்டு என்று சொல்லி அதனால் கடன் வாங்குகிற நிலையைப் பார்க்கிறோம். நாம் கடன் வாங்கும்போது, கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கவில்லை என்று சாட்சி சொல்வதாய் இருக்கிறது. இதைப் போல் பயம், பாவம், பிசாசு, வியாதிகளுக்கு அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று சத்தியத்தை அறிவீர்களானால், அவர் உங்களை முற்றிலுமாய் விடுதலை யாக்கி, அந்த விடுதலையினால் உங்கள் வாழ்வில் சமாதானம் பெருகச் செய்வார்.

ii) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உறுதியாய் நம்பும்போது பூரண சமாதானம் உண்டாகும்

"உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனத்தையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ஏசாயா 26:3

இன்று நம் மனதில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமையாக நம்புவதற்குத் தீர்மானம் செய்ய வேண்டும். உலகத்தில் உண்டாக்கப் பட்டவைகளின்மேல் நம்பிக்கை வைத்து பாடுகளையும், வேதனைகளையும் அடைந்து கொண்டிருக்கிற மக்கள் மிகுதி. இன்று நாம் ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவை மீது முழுமனதுடன் நம்பும்போது, நமக்கு சமாதானம் தந்து நம்மை எந்நாளும் காப்பாற்றுகிறவராய் இருக்கிறார். தானி. 3ம் அதிகாரத்தில் 3 வாலிபர்களும் கர்த்தரையே நம்பி, ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதபடியால் கர்த்தர் அவர்கள் நடுவில் வந்து, அவர்களைக் காத்துக் கொண்டார். சமாதானமும், சந்தோஷமும், ஆசீர்வாதமும் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைந்து பெருகிற்று.

iii)வேதத்தை நேசிக்கும்போது சமாதானம் உண்டாகும்

"உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு..." சங்கீதம் 119:165

இன்று நம் உள்ளத்தில் வேத வசனங்கள் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது தான் பாவம் செய்யாதபடி காக்கப்படுவோம். சங். 119:11ல் 'நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.' எனப் பார்க்கிறோம். பரிசுத்த ஆவியினால் தேவ மனிதர்களால் அருளப்பட்டிருக்கிற இந்த ஆவியும் ஜீவனும் நிறைந்த வார்த்தைகள் அனுதின வாழ்வில், நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. 1 பேதுரு 1:23ல் 'அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.' என்பதை நாம் அறிந்து வேத வசனத்தை நேசிக்கிறவர்களாக மாற வேண்டும். இந்த வார்த்தையில் பிரியமாயிருந்து அதை அதிகமாய் தியானிக்கும்போது, நாம் செய்கிற எல்லாக் காரியங்களையும் வாய்க்கச் செய்வார். இந்த வார்த்தைகள் நம்மை அழிவுக்குத் தப்புவித்து நம்மை குணமாக்கும் ஆற்றல் உடையது. இந்த வார்த்தையை நேசிப்போம். சமாதானமடைவோம். பரத்திலிருந்து நமக்கு அருளப்படுகிற ஞானம் உண்மையான சமாதானத்தை நமக்குள் பெருகச் செய்து விடுகிறது. நற்கனிகளினால் நிறைந்த இந்த உன்னதத்தின் ஞானம் ஆவியின் கனிகளினால் உண்டாகும் ஞானத்தையும், சமாதானத்தையும் உள்ளடக்கியதாய் இருக்கிறது. இந்த ஞானமானது இரக்கத்தையும் மெய்யான நீதியையும் நமக்குள் உண்டாக்குகிறது. நீதியின் கிரியைகள் சமாதானம் என்று ஏசாயா 32:17ல் பார்க்கிறோம். இன்று யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிற தேவனுடைய சமுகத்தில் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள மிகுந்த விசுவாசத்தோடு வேண்டுதல் செய்வோமாக.

மேலும்  அவர் ஜனமாய் மாறுவதற்கு இன்று நம்மை ஒப்புக் கொடுப்போம். 'என் ஜனம் சமாதான தாபரங்களிலும் நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.' ஏசாயா 32:18 படி வாழ்வதற்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். என் சத்தத்தைக் கேட்டு நான் உங்களுக்கு கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களைச் செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன் என்ற வார்த்தைக்கு செவிகொடுத்து அவர் ஜனமாய் மாறுவோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே, 'நம்முடைய மீறுதல்களினி மித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.' என்றபடி இயேசு கிறிஸ்து மூலமாய் நம் எல்லைகளில் சமாதானம் பெற்று ஆசீர்வதிக்கப்படுவோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்