தடைகள் நீங்கின வாழ்வு வாழ ஒரு ஜெபம்

                           அன்பின் தேவனே இந்த நல்லஜெப நேரத்திற்காக உம்மைத் துக்கிறேன். இந்த ஆண்டில் என்னைப் பிரவேசிக்கச் செய்து, முதல் மாதத்தையும் முடிக்க செய்த தயவுக்காக ஸ்தோத்தரிக்கிறேன். அன்பின் தேவனே, கடந்த காலங்களில், என்னுடைய சிறிய விண்ணப்பத்தையும் நீர் கேட்டு எனக்கு பதில் தந்து, ஆசீர்வதித்தபடியால் உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். பல காலமாய் என் வாழ்வில் தொடர்ந்த போராட்டங்களை நீர் அகற்றி இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தப்படியால் உம்மைத் துக்கிறேன். துதிக்குப் பாத்திரமான தேவனே, எனக்கு இரங்கும். என் கணவரின்/மனைவியின் வாழ்வில் உள்ள பெலவீனங்களை முற்றும் நீக்கி, சுக வாழ்வை மலரச் செய்யும். கர்த்தாவே, சிற்சில நேரத்தில் தோன்றுகிற கோபத்தை நீங்கச் செய்து என் எல்லையில் சமாதானத்தைத் தாரும். இயேசு கிறிஸ்துவே, என் மகளுக்காக/என் மகனுக்காக உம்முடைய பாதத்தில் என்னைத் தாழ்த்தி ஜெபிக்கிறேன். இந்த வயதிலேயே பலவிதமான தவறான பழக்கங்களைக் கற்றுக் கொண்டு வாழ்கிற பண்புகளைச் சீர்ப்படுத்தி அவர்களைச் சிறப்படையச் செய்யும். இயேசு கிறிஸ்துவே, உம்முடைய கண்களில் அவர்களுக்குத் தயவு கிடைக்கும்படிச் செய்யும். காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வகை செய்யும். கர்த்தாவே, என் வேலையில் உள்ள எல்லா போராட்டங்களையும் நீக்கிப் போடும். இயேசு கிறிஸ்துவே, சமாதானப் பிரபுவே, என் வேலை ஸ்தலத்தில் சமாதானம் தந்து ஆசீர்வதியும். என் உள்ளத்தில் தோன்றி மறைகிற பயங்கள், சந்தேகங்கள் முற்றிலும் நீங்கச் செய்யும். உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ எனக்கு உதவி செய்யும். சீக்கிரம் மெய் சமாதானம், சந்தோஷம் என் எல்லையில் பெருகும்படிச் செய்யும். கர்த்தாவே, என் பிள்ளைகளின் படிப்பு/வேலை/திருமணக் காரியங்களை நீர் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக நான் கலங்காது, கவலைக் கொள்ளாது காத்துக் கொள்ளும். உம் அன்பின் பிரசன்னம் என் எல்லைகளில் நிறைவாகப் பெருகி, மெய் சமாதான வாழ்வை என் குடும்பத்தில் பெருக கட்டளையிடும். எஞ்சிய மாதங்களில் மிகுதியாக உம் ஆசீர்வாதத்துடன், சுகத்துடன், பெலத்துடன் உமக்கு சாட்சியாக நல்வாழ்வு வாழ எனக்கு உதவி செய்யும் இயேசு கிறிஸ்துவே. நீர் அதைச் செய்வீர் என்று உம்மை ஸ்தோத்தரிக்கிறேன், துதிக்கிறேன். என் ஜெபம் கேளும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.