அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப வேளைக்காக நன்றி கூறுகிறேன். இம்மட்டுமாய் நடத்தி வருகிற அன்பின் செயலுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். உம்முடைய வேதத்தின் மகத்துவங்களை நான் ஆராய்ந்து அறிந்து மிகுந்த சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் உம்முடைய நல்ல நாமத்தை உயர்த்த, அதன் மகத்துவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலோடும், வாஞ்சையோடும் இருக்கிறேன் என்பதை நீர் அறிவீர். ஆனாலும் என் உள்ளத்தில் எனது வாழ்விலும், குடும்ப வாழ்விலும் முன்பு நடைபெற்ற காரியங்களைச் சிந்தித்து கலங்குகிறேன். நான் செய்த காரியங்களில் நான்எடுத்த தீர்மானம் தவறு என்று உணர்ந்து கவலைப்படுகிறேன். இந்தக் கவலை இரவிலே நான் தூங்க முடியாதபடி எனக்குள் போராட்டத்தைத் தருகிறது. நான் விட்டுக் கொடுத்த என் தகப்பனாருடைய சொத்துக்களை என் சகோதரர் குடும்பத்தார் அனுபவிக்க ஆற்றல் இல்லாதவர்களாய், அதை சொற்ப விலைக்கே விற்று அதன் ஆசீர்வாதத்தை இழந்து போனார்கள். இது என் மனநிலையை அதிகமாய் பாதிக்கின்றது. எனக்காக யாராவது ஜெபிக்க மாட்டார்களா என்ற ஏக்கமும் வருகிறது. இதைப்போல என் சிந்தைகளிலும், எண்ணங்களிலும் போராடுகிற காரியங்கள் என் சமாதானத்தைக் கெடுத்து என் நல்ல தூக்க நேரத்தைப் பறித்து, பாடுகளுக்கு என்னை உட்படுத்துகிறது. இன்று நான் துக்கத்தோடு பழையவைகளை சிந்தித்து கொண்டிருக்கிறேன். உம்முடைய வேதத்தைக் கூட தியானிக்க மனதில்லாதிருக்கிறேன். இரவு எப்பொழுது விடியும் என்று ஒவ்வொரு நாளிலும் எண்ணிக் கொண்டு இருக்கிறேன். பகலிலும் என் எண்ணங்கள், சிந்தைகள் பழைய காரியங்களைச் சிந்தித்து போராட்டத்தைப் பெருகச் செய்கிறது. என் குடும்பத்தார் என் அவல நிலையைப் பார்த்து மருத்துவர்களை அணுகி சிகிச்சை தர முயன்றுக் கொண்டிருக்கிறதை நீர் அறிவீர். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். இயேசு கிறிஸ்துவே, நிலைவரமான ஆவியினால் என்னை நிரப்பும். முந்தினவைகளை நினைக்க வேண்டாம். பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். அது இப்பொழுதே தோன்றும் என்று சொன்னவரே, என்னை புதிய சிந்தையாலும், புதிய எண்ணங்களினாலும் நிறைந்திருக்க உதவிசெய்யும். நான் உம்முடைய பிள்ளையாய் ஜீவித்து கிறிஸ்து இயேசுவினுடைய சிந்தையே எனக்குள் இருக்க உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.