"...இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்."

                                                                                                                                                                          யோவான் 20:19

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்து மிகவும் கலங்கி இருந்தார்கள். இவர்கள் பூட்டியிருந்த அறைக்குள்ளாக உலக மனிதர்களைப் போல பயந்து ஒளிந்து கொண்டிருந்தார்கள். பூட்டியிருந்த அறையின் மத்தியில் இயேசு நடுவே நின்றார். உங்களுக்குச் சமாதானம் என்று கூறினார். நம்முடைய வாழ்க்கையில் எதிர்பாராத நேரங்களிலே ஏற்படுகிற பல பிரச்சனைகள், சூழ்நிலையைப் பார்த்து சோர்ந்து போகிறோம். உள்ளத்தில் கலங்குகிறோம். ஐயோ, எனக்கு ஏன் இந்தப் பிரச்சனை என்று உள்ளத்தில் உள்ள விசுவாசமே அவிசுவாசமாய் மாறத்தக்கதான சந்தேகங்கள் எழும்புகிறது. சீஷர்களை அவர் நேசித்ததோடு, அவர்களுக்கு நன்கு போதித்து வந்திருந்தார். அவர்களோடு அவர் இருந்தபடியால், தம்முடைய தியாக செயலுக்குப் பின்பு, அவர்கள் சாட்சியாக இருப்பார்கள் என்று எதிர்நோக்கியிருந்தார். மற்றும் பலவிதமான காரியங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் செய்வார்கள் என்பதை நினைவுப்படுத்தி உயிர்த்தெழுந்ததை நம்ப அவர்கள் மத்தியிலே தோன்றினார். இயேசு கிறிஸ்துவை பாடுகளுக்குட்படுத்தி பரியாசம் செய்து, மேலங்கியை உரிந்துகொண்டு சிவப்பான அங்கியை உடுத்தி, முள்ளினால் செய்த கிரீடத்தை வைத்து 'இராஜாவே வாழ்க' என்று வாழ்த்தி பரியாசம் செய்தவர்களையும், முகத்தில் துப்பின காரியத்தையும், கோலினால் தலையில் அடித்த காரியத்தையும் கண்டும் கேட்டும் அறிந்திருந்தபடியால், வேதனையோடு என்ன ஆகுமோ என்று தவித்துக் கொண்டிருந்தார்கள். உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியிலே தோன்றி, தாம் அவர்களைத் தெரிந்து கொண்ட நோக்கத்தை நிறைவேற்றவும், மிகுந்த விசுவாசமுள்ளவர்களாய் தேவப்பணியைச் செய்ய வேண்டும் என்றும் தாம் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தவர், அவர்களைச் சந்திக்கும்படியாக நடுவே தோன்றினார்.

இந்த வார்த்தைகளை வாசிக்கிற சகோதரனே, சகோதரியே, இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு இராஜாவாக இருப்பார் என்று நம்பின அவர்களுக்கு அதிருப்தியாயிருந்ததுபோல, நீங்கள் நம்பின காரியங்களில் தோல்வியும், துக்கமும் தோன்றி உள்ளதோ? நான் என்ன செய்வேன் என்று எதிர்பாராத மரணத்தினாலும், பாடுகளினாலும் தவித்துக் கொண்டிருக்கிறீர்களா? தாம் உயிரோடு எழுந்ததை உறுதிப்படுத்தும்படி தம்மைச் சீஷர்களுக்கு வெளிப் படுத்தின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் மகிமையான காரியங்களை உங்களிலும் உங்கள் பிள்ளைகளிலும், உங்கள் எல்லைகளிலும் நடப்பித்து மெய் சமாதானத்தை நிறைவாகப் பெருகச் செய்வார். இந்த அன்பின் தேவன் நம் நடுவில் எப்படிப்பட்டவராய் இருக்கிறார் என்று ஆராய்ந்து, அவரையே ஆராதிப்போமானால் நம் வாழ்வில் மேன்மையான காரியங்களை நாம் பெற்றுக்கொள்ள இயலும்.

 

I. இயேசு கிறிஸ்து நம் நடுவில் எப்படிப்பட்டவராய் இருக்கிறார்?

1) பெரியவராய் இருக்கிறார்

"சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்." ஏசாயா 12:6

அவர் எவைகளில் எல்லாம் பெரியவர் என்று வேதம் சொல்வதை நாம் பார்ப்போம்.

i) உலகத்தில் இருக்கிறவனிலும் பெரியவர்

“...உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்." 1யோவான் 4:4  

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று சொன்ன ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் இருக்கிறவனைக் காட்டிலும் உங்களோடு இருக்கிறவர் பெரியவராய் இருக்கிறார். இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று யோவான் 14:30ல் சொன்னவர் அவனையும், அவனுடைய அதிகாரங்களையும், துரைத்தனங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி அவைகளின்மேல் வெற்றி சிறந்த இயேசு கிறிஸ்து, நம்மையும் தம் வெற்றியினால் அலங்கரிப்பார். இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாய் இருக்கிற பிதாவை நாம் என்றும் ஸ்தோத்தரிக்க கடமைப் பட்டிருக்கிறோம். அதிசயங்களைச் செய்தவர், பிசாசின் தலையை நசுக்குவதற்கு உதவி செய்ய வல்லவராகிய இயேசு கிறிஸ்து நம் நடுவில் பெரியவராய் இருக்கிறார். அவருடைய பெரிதான காரியங்களினாலே நாம் என்றும் இன்றும் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் சந்துருவின் சகல தந்திரங்களையும் மேற்கொண்டு சம்பூரண நல்வாழ்வு வாழ வழி தோன்றிவிடும். இந்தப் பரிசுத்தமான தேவன் உலத்திருக்கிறவனைக் காட்டிலும் பெரியவராய் உங்களோடு இருந்து பெரிய காரியங்களைச் செய்வார்.

ii) ஆலோசனையில் பெரியவர்

"யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்" எரேமியா 32:19

இன்று நாம் செய்யக்கூடிய எல்லாக் காரியங்களும் நலமாய் இருக்க நன்கு யோசித்து செயல்படவேண்டும். ஆலோசனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோசனையில் பெரியவராய் நம்மோடு இருக்கிறார். செயலில் வல்லமையான அவர் நம் நடுவே இருந்து வல்லமையான காரியங்களைச் செய்ய நம்மை வழி நடத்துவார்.

அருமையான சகோதரனே/ சகோதரியே, யோசனையின்றி நான் இதைச் செய்துவிட்டேனே என்று எதைக் குறித்தாவது கலங்கிக் கொண்டிருக்கிறாயா?உன் வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனைகளிலும் பெரியவராய் இருக்கிற இயேசு கிறிஸ்து ஆறுதலான வார்த்தைகளைச் சொல்வதோடு, உன்னைத் திடப்படுத்தி, தைரியப்படுத்தி, நீ இழந்துபோனவைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வழி செய்வார். தாவீது தன் மனைவி பிள்ளைகளை, தன் உடைமைகளை இழந்தும், அவனோடு இருந்தவர்களின் மனைவி பிள்ளைகள் எல்லாவற்றையும் இழந்தபடியினால் மிகவும் நெருக்கப்பட்டு அழுதான். அவனோடு இருந்தவர்களும் மனக்கிலேசத்தினாலே அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொன்னார்கள். தாவீதோ தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். எல்லாவற்றையும் ஒன்றும் குறைவுபடாமல் திரும்பப் பெற்றுக்கொண்டான். இன்று நீங்களும் யோசனையில் பெரியவராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் உங்கள் வாழ்க்கையிலே இழந்த சுகத்தை, சமாதானத்தை, சந்தோஷத்தை, சகல நல் ஆசீர்வாதங்களையும் திரும்பப் பெற்று நல்வாழ்வு வாழ வழிநடத்துவார்.

iii) சாலொமோனிலும் பெரியவர்

"...இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்." மத்தேயு 12:42

சாலொமோன் என்று சொன்னாலே அவனது ஞானத்தையும், அவர் கர்த்தரிடத்தில் அன்பு கூர்ந்த காரியத்தையும் நினைவு கூருகிறோம். சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்ததோடு தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளையின்படி நடந்தவன். பலிகள் செலுத்துவதில் குறைவுபடாத அவனுக்கு இரவு சொப்பனத்தில் கர்த்தர் தரிசனமாகி, நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று கேட்கத் தக்கதாக நிறைந்த நல்வாழ்வு உடையவனாய் இருந்தான். சாலொமோனுடைய விண்ணப்பம் தேவனுடைய பார்வைக்கு உகந்ததாய் இருந்தது. சத்துருக்களின்மேல் ஜெயம் வேண்டும், உலகத்தின் சம்பத்து வேண்டும், என் ஆயுசு நாட்கள் பெருக வேண்டும் என்று உலக மனிதர்களைப் போல கேளாதபடி, நீ விரும்புகிறது என்ன என்று கர்த்தர் கேட்ட போது, ஞானம் தனக்கு வேண்டும் என்று வேண்டினான். அவனுடைய விண்ணப்பத்தின்படி சாலொமோனுக்குத் தேவன் ஞானத்தையும் அவன் கேட்காத மிகுந்த செல்வத்தையும் சம்பூரணமாய் தந்தார். ஞானத்தில் குறைவுடைய யாவருக்கும் தம்மிடத்தில் விசுவாசம் கொண்டு கேட்கிற யாவருக்கும் சம்பூரணமாய் தரக்கூடிய தேவன், சாலொமோனையும் பெரியவனாக மாற்றினார்.

இதை வாசிக்கிற அருமையான தேவப்பிள்ளையே, உன் நடுவே பெரியவராய் இருக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன்னை எல்லாவற்றிலும் பெரியவனாக்க விரும்புகிறார். இந்தக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவனால் நமக்கு ஞானமும், நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். இவர் கேட்கிற உங்களை ஞானத்தினால் நிறைத்து, அடிமையான தானியேலை மேன்மைப்படுத்தினவர், உன்னைப் பெரியவனாக்குவார். பரிசுத்தத்தைக் காத்துக்கொண்ட யோசேப்பை பெரியவனாக்கினவர் உன்னைப் பெரியவனாக்குவார். தேவ வார்த்தையின்படி கீழ்ப்படிந்த ஈசாக்கை விருத்தியடையச் செய்து மிகவும் பெரியவனாக்கின அவர், இன்று உன்னையும் உன் பிள்ளைகளையும் ஆசீர்வாதத்தினால் பெருகச் செய்து உன்னை மேன்மைப்படுத்துவார்.

iv) யோனாவிலும் பெரியவர்

"...இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்." மத்தேயு 12:41

யோனா என்றாலே பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களின் பட்டியலிலே யோனாவின் ஊழியம் பெரிதாய் இருக்கிறது. இயேசு கிறிஸ்து தனி மனிதனின் (personal evangelism) வாழ்க்கையிலே சமாதான சுவிசேஷத்தைக் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள் 4000, 5000 (mass evangelism) என்று கூடின மக்கள் மத்தியிலும் சமாதான சுவிசேஷத்தை அறிவித்தார். இன்னும் அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் அவரிடத்தில் வந்த மக்களுக்கு தம்மையும் தம் வார்த்தைகளையும் விசுவாசிக்க செய்தார். அன்று யோனா செய்த ஊழியத்தைவிட பெரிய ஊழியக்காரராய் இருக்கிறார். யோனா ஒரு பட்டணத்தாரையே தங்கள் பொல்லாத வழியைவிட்டு கர்த்தரிடத்தில் திரும்பச் செய்தான் என்பதை நாம் அறிவோம். கர்த்தரின் எச்சரிப்பின் செய்தியை, பூரணமாய் தெரிவித்து ஜனங்களைத் தேவனிடத்தில் திரும்பச் செய்தவன் யோனா. இந்த யோனாவைக் காட்டிலும் நேற்றும் இன்றும் மாறாதவராய் இருக்கிற இயேசு கிறிஸ்து, உலகத்தையே தம் பக்கம் திருப்புவதற்கு விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்குத் தேவ அன்பினால் அனுப்பப்பட்டவர். இவர் நம் மத்தியில் பெரியவராய் இருக்கிறார்.

இந்த வார்த்தைகளை வாசிக்கிற, தேவ ஊழியத்தைச் செய்கிற சகோதரனே/சகோதரியே, உன்னை யோனாவிலும் பெரியவனாக்கக் கூடிய வல்லவர் இன்று உன் மத்தியில் இருக்கிறார். எங்கு அற்பமாய் எண்ணப்பட்டு, தள்ளப்பட்டு, வேதனையோடு கலங்கி கண்ணீரோடு எனக்கென்று யாரும் இல்லையே, எதுவம் இல்லையே என்று புலம்புகிற உன்னையும் உன் ஊழியத்தையும் பெரிதாக்கும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தவராய் உன் நடுவில் இருக்கிறார். கலங்காதே, திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் செய்வேன் என்றவர் இன்றும் ஜீவிக்கிறார். உன்னோடு வழக்காடினவர்களை, உன்னோடு போராடின வர்களைத் தேடியும் காணாதிருப்பாய் என்று சொன்ன அன்பின் தேவன் உன் மத்தியில் பெரியவராய் இருந்து உன்னைக் கொண்டு அரிய பெரிய காரியங்களைச் செய்து உன்னை ஆசீர்வதிப்பார்.       

2) உன் நடுவில் இருந்து உன்னைச் சேதமின்றி காக்கிறவராய் இருக்கிறார்

"அதற்கு அவன்: இதோ நாலு பேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவப்புத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்." தானியேல் 3:25

தேவனை ஆராதித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அடிமைகளாக ராஜாவின் அரண்மனையிலே பணியாற்றுவதற்கு கொண்டு வரப்பட்டவர்கள். நேபுகாத்நேச்சாராகிய ராஜா 60 முழு உயரமும் ஆறு முழு அகலமுமான ஒரு பொற்சிலையை பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்தில் இருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். தேசத்தில் உள்ள தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதி பதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதி சாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும் நாடுகளில் உள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைப்பித்தான். சிலைக்கு எதிராய் நின்ற அத்தனை மக்களும் கேட்கும்படியாய் கட்டியக்காரன் உரத்த சத்தமாய் ராஜா நிறுத்தின சிலைக்கு முன்பாக கீழே தாழ விழுந்து பணிந்து கொள்ள வேண்டும் என்றும் கீதவாத்தியத்தின் சத்தத்தைக் கேட்கும் போது நீங்கள் தாழ விழுந்து பணிந்து கொள்ளக்கடவீர்கள். எவனாவது பணிந்து கொள்ளாமல் போனால் அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவே போடப்படுவான் என்றான். கல்தேயரில் சிலர் ராஜாவிடத்தில் வந்து நீர் கட்டளையிட்ட காரியங்களை விசாரிக்கும்படி, நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்கிற யூதரான மனுஷர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய கட்டளை களுக்குக் கீழ்ப்படியாதபடி, உம்முடைய தேவர்களை ஆராதிக்க வில்லை. நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளவும் இல்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

இன்று போட்டியினாலும் பொறாமையினாலும் உயர் அதிகாரிகளிடத்தில் உங்களைக் குற்றப்படுத்திக் கொண்டிருக்கிற மக்களுக்கு மத்தியிலே, உங்களை நிந்திக்கிற மக்கள் மத்தியிலே நித்திய ஜீவனைத் தந்து நல்வாழ்வு தருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, உங்களில் ஒரு சேதமும் இன்றி கண்மணிபோல் காக்க வல்லவராய் இருக்கிறார். குற்றப்படுத்தப்பட்ட மக்கள் அழைக்கப்பட்டனர். ராஜா ஏன் சிலையை வணங்கவில்லை, பணிந்து கொள்ளவில்லை என்று ஆராதனை செய்யாதது மெய்தானா? இப்பொழுதும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். கீதவாத்திய சத்தம் கேட்கும் போது நீங்கள் தாழவிழுந்து பணிந்து கொள்ளாவிடில், அக்கினி சூளையில் போடப் படுவீர்கள். பணிந்து கொண்டால் நல்லது என்று கூறினான். உங்களை என் கைக்குத் தப்புவிக்கப் போகிற தேவன் யார்? என்ற கேள்வியைக் கேட்ட ராஜாவிற்கு இந்தக் கேள்விக்கு நாங்கள் உத்தரவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். உம்முடைய சூளையின் அக்கினிக்கும், அவர் தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். அவர் எங்களை தப்புவிக்கா விட்டாலும் நீர் நிறுத்தின பொற்சிலைக்கு முன்பாக நாங்கள் பணிந்து கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த மூன்று வாலிபர்களுக் குள்ளாக ஒரு மனது இருந்தது. கிறிஸ்தவ வாழ்க்கை என்று சொன்னாலே நமக்குள் ஒற்றுமை வேண்டும். சங்கீதம் 133:1 ல் 'இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையையும் எத்தனை இன்பமுமானது?' என்று தாவீதுபாடின சங்கீதத்தில் காண முடிகிறது. அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார் என்பது மனதில் இருக்க வேண்டிய ஒரு முக்கிய வேதப்பகுதியாகும். எரிகிற அக்கினி சூளையைக் குறித்து பயப்படவில்லை. என்றைக்கு நாம் 'நீஎன்னுடையவன் ' என்று கர்த்தர் சொல்லத்தக்கதாக நம் பழைய பாவ வாழ்க்கை புதியதாக பரிசுத்தமாக மாற்றப்படும் போது, நாம் கிறிஸ்துவுக்கே சொந்தமாக மாறி பாதுகாக்கவும் ஆசீர்வதிக்கப்படவும் தகுதியடைகிறோம். அப்பொழுது ஏசாயா 43 ல் உள்ளது போல தம்முடையவர்களை அக்கினிக்கும், தண்ணீருக்கும் விலக்கி, சேதமின்றி காத்து ஆசீர்வதிக்கிறவர் இன்றும் ஜீவிக்கிறார்.  அக்கினி சூளையானது 7 மடங்காக உயர்த்தப்பட்டது. 3 வாலிபர்களையும்  கட்டி அக்கினி சூளை நடுவே எறிந்தவர்கள் எரிந்து அழிந்து போனார்கள். ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து அவனைக் கனப்படுத்துவேன் என்ற அன்பின் தேவன் இன்றைக்கு நம்மத்தியிலே ஜீவிக்கிறார். கட்டுகளுடன் அக்கினியில் எறியப்பட்டவர்கள் கட்டவிழ்க்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். அன்பின் ஆண்டவராகிய தேவக் குமாரராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் நடுவே வந்தார். அக்கினியின் தன்மை ஒன்றும் இல்லாமல் போனது. சூளையின் நடுவே அவரோடு உலாவினார். இதனைக்  கண்ட ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து தன் மந்திரிமார்களை நோக்கி 3 புருஷர்களை அல்லவா கட்டுண்டவர்களாக அக்கினியிலே எறிந்தோம் என்றவுடன் ஆம் ராஜாவே என்று மந்திரிகளும் மறு உத்தரவு தந்தார்கள்.

இதோ நாலு பேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன் என்று சொல்லி, நாலாம் ஆளின் சாயல் தேவ புத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். நேபுகாத்நேச்சார் அக்கினி சூளையின் வாயில் அருகே வந்து உன்னதமானவருடைய தாசராகிய நீங்கள் அக்கினி சூளையின் வெளியே வாருங்கள் என்றான். அக்கினியின் நடுவில் இருந்து வெளியே வந்தபோது அந்த புருஷர்களின் சரீரங்கள் மேல் அக்கினி பெலன் செய்யாமலும் தலைமயிர் கருகாமலும் சால்வைகள் சேதப்படாமலும் அக்கினியின் மணம் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

அருமையான தேவ ஜனமே, கர்த்தர் நம் நடுவில் இருக்கும் போது அக்கினி உன்னைச் சேதபடுத்தாது. உன்னைச் சேதமின்றி கண்மணியைப் போல காக்கும் தேவன் இன்றும் நம் மத்தியில் ஜீவிக்கிறார்.

3)அக்கினி மதிலாய் இருக்கிறார்

"நான்  அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." சகரியா 2:5

தேவனுடைய மகிமை நம்மைப் பிரகாசிக்கக்கூடிய ஆற்றல் உடையது. மகிமைக்குப் பாத்திரராகிய இயேசு கிறிஸ்து நம்மையும் மகிமைப் படுத்துகிறவராய் இருக்கிறார். நான் உன்னை உருவாக்கினேன், நான் உன் பாவத்தை கார் மேகத்தைப் போலவும் அகற்றி விட்டேன் என்றவர் இன்றும் ஜீவிக்கிறார். நம்முடைய தேவன் மகிமையாய் வெற்றி சிறந்தார் என்று மிரியாம் அன்று மீட்கப்பட்ட இஸ்ரவேலரை நோக்கிப் பாடுங்கள் என்று சொன்னதைப் பார்க்கிறோம். உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக. உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக என்று 2 சாமுவேல் 7:26 ல் பார்க்கிறோம். நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உமக்குத் தந்தேன் என்று 1 ராஜாக்கள் 3 ல் சாலொமோனைப் பார்த்து சொன்னதைப் பார்க்கிறோம். ஜாதிகளுக்குள்ளே அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அதிசயங்களையும் விவரித்து சொல்லுங்கள் என்று 1 நாளாகமம் 16:24 ல் பார்க்கிறோம். கனமும், மகிமையும் அவர் சமுகத்தில் இருக்கிறது. வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. ஜனங்களின் வம்சங்களே கர்த்தருக்கு மகிமையும், வல்லமையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். கர்த்தருக்கு அவர் நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டு வந்து அவர் சந்நிதியில் பிரவேசியுங்கள். நீர் அசைக்கப்படாத நல் வாழ்வை எங்களுக்குத் தந்து எங்கள் இருதயத்தைப் பூரிக்கச் செய்கிறீர். என் மகிமை களிகூர்ந்தது, என் மாம்சம் நம்பிக்கையோடு தங்கியிருக்கும் என்று சங்கீதம் 16:9 ல் பார்க்க முடிகிறது. வானங்கள் அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறதைப் பார்க்கிறோம். 

நாம் எப்படி இன்று கர்த்தரை மகிமைப்படுத்தமுடியும்?

i) விடுதலையினால் கர்த்தரை மகிமைப்படுத்துவோம் 

"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீஎன்னை மகிமைப் படுத்துவாய்." சங்கீதம் 50:15

இன்று தேவன் மகிமைப்படும் படியாக நம்முடைய வாழ்க்கையின் போராட்டங்களில் நமக்கு விடுதலை தருகிறார். 'குமாரன் விடுதலை யாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்', சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் எல்லாருடைய வாழ்க்கையில் உண்டாகும் எல்லா மரண பயத்திற்கும் விலக்கி விடுவித்து காக்கிறவராய் இருக்கிறார். பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கிற தேவன் நம்மை தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கி நம்மை அலங்கரித்து ஆசீர்வதிப்பார்.

ii) முதற்பலனைக் கொடுப்பதினால் மகிமைப்படுவார்

"உன்பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு." நீதிமொழிகள் 3:9

நாம் எல்லா நாட்களிலும் கர்த்தருக்கு முதற்கனியை அவருக்குக் கொடுக்க வேண்டும். அதினால் அவர் மகிமைப்படுவார். எனது வாழ்வில் என்று அவருக்கென்று முதலிடம் கொடுக்க ஆரம்பித்தேனோ அன்று முதல் நான் செய்த காரியங்களினால் அவருடைய நாமம் மகிமைப்பட்டது. என்னென்ன காரியங்களைக் கொடுக்கிறோமோ, அதன் மூலமாக அவருடைய நாமம் மகிமைப்படுவதோடு பிரதிபலனாக அதினாலே நம்மை ஆசீர்வதிப்பார். கர்த்தர் நமக்குக் சூரியனும் கேடகமுமானவர். கிருபையையும் மகிமையையும் அருளுவார். உத்தமமாய் நடக்கிற வர்களுக்கு நன்மையை வழங்காதிரார். 'வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் ; அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும் .'சங் 112:9 ன்படி கொடுக்கிற காரியத்தில் முதலிடம் கொடுத்து ஆசீர்வதிக்கப்படுவோமாக.

iii) ஸ்தோத்திர பலியிடுகிறவன் தேவனை மகிமைப் படுத்துகிறான்

"ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப் படுத்துகிறான்; தன்வழியைச் செவ்வைப் படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன்..." சங்கீதம் 50:23

அவரை நாம் மகிமைப்படுத்தும்போது அவர் நம் நடுவிலே மகிமையாய் இருப்பதினால் அவருடைய அக்கினி நமக்கு பாதுகாவலாய் மாறிவிடும். அக்கினி மதில் இருப்பதினால் சாத்தான் நம்மை சேதப்படுத்த முடியாது. யோபின் வாழ்கையிலே தேவனுடைய வேலி இருந்தது. அவன் வீட்டைச் சுற்றியிருந்த வேலி, அவனுக்கு உண்டானவைகளைச் சுற்றியிருந்த வேலி, அவன் சம்பத்து பெருகுவதற்கும், ஆசீர்வதிக்கப்படுவதற்கும் காரணமாய் இருந்தது. சத்துரு அவனைச் சேதப்படுத்தவில்லை. நாம் கர்த்தரை மகிமைப்படுத்துவோம், அவரின் அக்கினியின் பாதுகாவலை இன்று முதல் பெற்று வாழ்வோமாக.

II கர்த்தர் நம் நடுவில் வர என்ன செய்ய வேண்டும்?

1) அவரை அழைக்க வேண்டும்

"இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் ." யோவான் 2:2

 இயேசு கிறிஸ்துவும் சீஷர்களும் திருமணத்திற்கு அழைக்கப் பட்டிருந்த படியால், திருமண வீட்டில் இயேசு இருந்தார். அவர் நம் நடுவில் இருந்தாலும் குறைகள் வரும் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவரே நம் குறைகளை நிறைவாக்குவார். அழைப்பதோடு ஆலோசனைக்கு அணுகி என்றும் குறையின்றி மேன்மையும் மகிழ்ச்சியும் அடைவோம்.

2) இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கூட வேண்டும்

"...இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்." மத்தேயு 18:20

அவருடைய நாமத்தில் நாம் கூடும் போது, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்கிறார். வீடுகளிலும், சபைகளிலும், சங்கங்களிலும் நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கூடும்போது, நம் மத்தியிலே இருந்து நம்மை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். சீஷர்கள் ஒருமனதோடு கூடின இடத்திலே அவர் பிரசன்னராய் இருந்தார். பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தினால் நிறைத்தார். ஆவியின் வரங்களினால் அலங்கரித்தார். கணவன் மனைவியாக, பிள்ளைகளாக, தாய்மார்களாக, சகோதரிகளாக, வாலிபர்களாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கூடும்போது அவரின் பிரசன்னம் நம் மத்தியில் கடந்து வரும். பிரசன்னதினாலே மகிழ்ச்சியும் நன்மையையும் மேன்மையும் பெருகும்.

3) அவர் சத்தம் கேட்டு இருதயக் கதவைத் திறக்க வேண்டும்

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத்திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." வெளி 3:20

தேவனுடைய சத்தத்தைக் கேட்க இருதயக் கதவைத் திறக்க வேண்டும். கர்த்தருடைய சத்தம் மிகுதியான வல்லமையுடையது. அந்த சத்தம் பெண்மான்களை ஈணும்படி செய்கிறது. நாம் அவரின் ஆடுகளாய் இயேசு கிறிஸ்துவை மேய்ப்பராய் ஏற்று பின்பற்றுவோமானால், அவரை விட்டு விலகாதிருப்போம், சத்தத்தைக் கேட்டுஅதின்படி செய்யும்போது, அவருடைய ஜனமாய் மாறுகிறோம். அவர் நமக்குத் தேவனாய் இருப்பார் என்று எரேமியா 11:3ல் பார்க்கிறோம். நாம் சுத்திகரிக்கப்படும்போது, அவரின் சத்தத்தைக் கேட்கும் பாக்கியசாலிகளாய் இருக்கிறோம். ஏசாயா 6:6,7 ன் படி பலிபீடத்தில் இருந்த நெருப்புத்தழல் உதடுகளைத் தொட்ட படியினால் அக்கிரமம் நீங்கி பாவம் நிவர்த்தியானது. இது நடைபெற்றவுடனே ஏசாயா தீர்க்கதரிசியானவன் கர்த்தரின் சத்தத்தை கேட்கக்கூடிய பாக்யசாலியானான். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்கும் பாக்கியசாலிகளாய் மாறி, இதயக் கதவைத் திறப்போம். அவர் என்றும் நம் நடுவில் இருந்து குறைவின்றி கலங்காது சமாதானமாய் சம்பூரணசுகம், பெலன் அடையச் செய்வார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபேனசர்பால்