சரீரத்திலும் ஆவியிலும் போராட்டத்தோடு வாழ்கிற மக்களின் விடுதலைக்காக ஒரு ஜெபம்

                         அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். கடந்த நாட்களில் என் ஜெபத்தைக் கேட்டு மெய்யான விடுதலையைத் தந்து மகிழ்ச்சியினால் முடிசூட்டினீர். இப்போதும் கர்த்தாவே, என் சரீரத்தில் உள்ள வேதனைகளையும் ஆவியிலே போராடுகிற காரியங்களையும் என்னைவிட்டு விலக உதவிச் செய்யும்.  உம்முடைய கண்களுக்கு முன்பாக நான் என்னைத் தாழ்த்தி எனக்கு இரங்க வேண்டும்  என்று கெஞ்சி நிற்கிறேன். இயேசு கிறிஸ்துவே, உம்முடைய அளவற்ற அன்பினால் என்னை முற்றும் முடிய சுகத்தால், பெலத்தால் இடைக்கட்டும். என் வேதனைகள் எப்போது நீங்கும் என்று ஏக்கத்தோடு உமது சமுகத்தில் என்னைத் தாழ்த்தி ஜெபிக்கிறேன். எங்கள் ஜெபங்களைக் கேட்கிற தேவனே, ஒருவிசை எனக்கு இரங்கி என் போராட்டங்கள் மாற உதவிச் செய்யும். சில சமயங்களில் என் சரீரத்தில் ஏற்படுகிற போராட்டங்கள் என்னை மிகுதியாய் துக்கப்படுத்துகிறது. எப்பொழுது சுகம் வரும் என்று ஏக்கத்தோடு இருக்கிறேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். என் ஜீவன் உம்முடைய கையில் இருக்கிறது. எனக்காக கல்வாரி சிலுவையிலே உம்மையே பலியாகக் கொடுத்த இயேசு இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். இன்று எனக்குள் உம்முடைய பரிசுத்த அக்கினி பற்றியெறிய உதவி செய்யும். கர்த்தாவே, எனக்கு விரோதமாக மறைந்து மறைந்து போராடுகிற பொல்லாத ஆவியின் கிரியைகளை அழித்துப் போடும். நீர் ஒருவரே எனக்கு சுகமும், விடுதலையும் பெலனும் தர முடியும். இயேசு கிறிஸ்துவே, என்னை விடுதலையாக்கி  நான்  என்றும்  உமக்குச் சொந்தமாய் ஜீவிக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன். எனக்கு இரங்கும் இயேசு கிறிஸ்துவே. இந்தப் பாடுகளினால் நான் இரவிலும் தனியாக தூங்க முடியாது தவிக்கிறேன். இன்றே என்னை விடுவியும். இயேசு கிறிஸ்துவே, உம்மால் ஆகும் என்று எண்ணி மீண்டுமாய் உம்முடைய சமுகத்திலே கெஞ்சுகிறேன். எனக்குள் அற்புதத்தைச் செய்து என்னை ஒரு சாட்சியாக மாற்றும். நான் என்றும் உம்முடைய அன்பில் நிறைந்திருக்க, உம்மில் நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும், ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.