"...நான் உங்களைத் தங்குவேன்..."

                                                                                                                                      ஏசாயா 46:4

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

             கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன்.

             இம்மட்டும் கர்த்தர் தமது மாறாத வார்த்தையினாலும், கிருபையினாலும் நம்மை நேர்த்தியாய் நடத்துகிறார். ஒவ்வொருவரையும் தாயின் வயிற்றில் உற்பத்தியானது முதல் தாங்கி வருகிற அன்பின் தேவன், உங்கள் முதிர் வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன் என்று ஏசாயா 46:3, 4 ல் வாக்கு கொடுத்திருக்கிறார். இன்று சிலர் குளியலறையில் வழுக்கி விழுவதினால் காயமடைகிறார்கள். எலும்பு முறிகிறது. இன்னும் சிலர் தலையில் அடிபட்டு ஜீவன் இழந்து போகிறார்கள். இன்றைக்கு தேவன் நம் எல்லாக் காரியங்களிலும் நான் உங்களைத் தாங்குவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

             திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை கட்டும் போது அதில் கட்டட பார்வையாளராக தற்காலிகமாக பணியாற்றினேன். அந்த தொழிற்சாலையின் முக்கியமான பிரதான கம்பெனி ஷெட் -ஐ போட்டு முடித்தார்கள். ஆனால் அது சில தினங்களிலேயே முற்றும் கீழே விழுந்து விட்டது. அதை மீண்டும் எடுத்து கட்டினார்கள். இப்பொழுது கூடுதலாக தூண்களை நிறுத்தி, கீழே விழாது தாங்கி, ஸ்திரப்படுத்தி கட்டி முடித்தார்கள். இதைப் போல மனிதரின் வாழ்வில் கீழே விழும் சந்தர்ப்பங்கள் தோன்றுகிறது. சிலர் ஆவிக்குரிய வாழ்வில் விழுந்து போகிறார்கள். இவ்வாறு விழுகிறவர்களைக் கர்த்தர் தாங்கி நடத்துகிறவராக இருக்கிறார். சில குடும்பங்களில் பிள்ளை தாயின் வயிற்றில் தோன்றுகிறது. ஆனால் திடீர் என கர்ப்பம் கலைந்து விடுகிறது. இந்த நாளில் கர்த்தர் நம்மை தாயின் வயிற்றில் உருவானது முதல் முதிர் வயது வரைக்கும் தாங்குவேன் என்று திட்டமாக கூறியிருக்கிறார். இன்று பல காரியங்களில், பல காரணத்தால் விழுந்து போகிறவர்களைக் குறித்து கேள்விப்படுகிறோம்.

I. கர்த்தர் யாரைத் தாங்குகிறார்

1. விழுகிறவர்களைத் தாங்குகிறார்.

"கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கி விடுகிறார்." சங்கீதம் 145:14

             இன்று அநேகர் விழுவதைப் பார்க்கிறோம். சிலர் முதிர்வயதில் வயதான காலத்தில் குளியலறையில் விழுந்து விட்டார்கள் என்று சொல்லுவதை நாம் பலர் வாழ்வில் கேட்டிருக்கிறோம். இவ்வாறு விழுகிறவர்கள் சில காயங்களுடன் பிழைத்துக் கொள்கிறார்கள். சிலர் விழுந்தவுடனே இறந்தும் போகிறார்கள் சிலர் விழுந்தவுடனே இறந்தும் போகிறார்கள். இவைகள் எதிர்பாராத விதத்தில் நடக்கின்றன.

ஏன் விழுகிறார்கள்?

அ) பிசாசினால்

             யூதாஸ் காரியயோத், இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவனாவான். இவனுக்குள் சாத்தான் புகுந்தான் என்று லூக்கா 22:3ல் பார்க்கிறோம். அவன் இயேசு கிறிஸ்துவைக் காட்டி கொடுக்கும் வகையைக் குறித்து ஆலோசனை பண்ணினான். இயேசு கிறிஸ்துவுடன் இருந்தவன், பிசாசின் ஆளுகைக்கு ஆளானபோது, இயேசுவுக்கு விரோதமானவர்களிடம் சென்றான். அவர்களும் அவனுக்குப் பணம் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால் அவனுடைய முடிவு பரிதாபமாக இருந்தது. காட்டிக் கொடுப்பதற்கு முப்பது வெள்ளிக்காசை வாங்கிய அவன், அதை தேவாலயத்தில் எறிந்துவிட்டு நான்றுகொண்டு செத்தான். அநீதத்தின் கூலியினால் அவன் 'தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று' என்று அப். 1:18ல் நாம் பார்க்க முடிகிறது. லூக்கா 9:42ல் ஆவிபிடித்த அந்த இளைஞன் இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வரப்பட்டபோது, அந்த ஆவி அவனைக் கீழே தள்ளி அலைக்கழித்தது என்று பார்க்கிறோம். பிசாசினால் விழுகிறோம்.

ஆ) பெருமையினால் விழுந்து போகிறார்கள்

"சிலர் இரத்தங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்." சங்கீதம் 20:7

"அவர்கள் முறித்து விழுந்தார்கள்..." சங்கீதம் 20:8

             இன்று அநேகர் பல காரியங்களில் பெருமை பாராட்டி அதினால் விழுந்து போகிறார்கள். தோல்வியும், துக்கமுமடைகின்றார்கள். பெருமையுள்ள வர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். சிலர் பதவி, படிப்பு, அந்தஸ்து, அழகு, தங்களின் நிறம், இவைகளினால் பெருமை கொள்கிறார்கள். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட தூதன் லூசிபர் ஆவான். இவனை தேவன் அழகுள்ளவனாக, ஞானமுள்ளவனாக சிருஷ்டித்தார். அவன் தனது அழகினாலும், மினுக்கினாலும் தன்னைக் கெடுத்துக் கொண்டான். அவனுக்குள் காணப்பட்ட பெருமையினால், கர்த்தர் அவனை ஆகாதவனென்று தள்ளிவிட்டார். தாழ்மையான இவ்வுலகில் வந்த இயேசு கிறிஸ்து, தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார், உயர்த்துகிறார்.

             வெளிநாடு ஒன்றில் ஊழியம் செய்ய ஊழியர் ஒருவரை அழைத்திருந்தார்கள். அந்த ஊழியர் மிக நேர்த்தியாக உடுத்தி விமானப் பயணம் முடித்து, தன்னை அழைக்க அந்தச் சபையின் போதகர் வருவார் என்று காத்திருந்தார். போதகர், வாகனம் நன்கு ஓட்டும் ஒரு வயதான சகோதரியைத் தங்கும் இடத்திற்கு அழைத்து வர அனுப்பியிருந்தார். இந்த ஊழியருக்குத் தன்னை அழைக்க போதகர் வரவில்லை. இந்தக் குடு குடு பாட்டியை அனுப்பி வைத்திருக்கிறாரே என்று எண்ணிக் கொண்டார். கைக் கொடுக்க அந்த வயதான சகோதரி கையை நீட்டிய போது, இவரும் கை கொடுக்க கையை நீட்டினார். இவரின் கை அந்த வயதான சகோதரியின் கையைத் தொட்டவுடன் இவர் தூக்கி வீசியெறியப்பட்டார். அந்த வயதான சகோதரிக்குள் அபிஷேகம் நிறைந்திருந்தது. அந்த ஊழியரின் பெருமை அவரைக் கீழே விழத் தள்ளியது.

             நன்றாய் விளையாடக்கூடிய சில விளையாட்டு வீரர்கள் எளிதாய் தோல்வியினால் விழுந்து போகிறார்கள். அவர்களின் விளையாடும் திறமை ஒன்றுமில்லாததாக மாறி விடுகிறது. நான் பணி செய்யும் போது கடைசி ஆண்டிலே, எனது பள்ளி கால்பந்தாட்ட குழுவினர், பள்ளிகளுக்கிடையில் நடைபெறும் போட்டியில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். எதிராக விளையாட இருந்த பள்ளியில், தமிழ் நாட்டில் நன்றாக பள்ளியில் விளையாடும் மாணவர்களைத் தேர்வுசெய்து, sports hostel- ல் சேர்ந்து அவர்களுக்கென்று பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. திருச்சி sports hostel கால்பந்தாட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த hostel-ல் உள்ள மாணவர்கள் அருகில் இருந்த ஒரே பள்ளியில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். விளையாட்டுப் போட்டி துவங்கும் முன் அந்த பயிற்சியாளர் ஆறு கோலுக்கு மேலாக அடிக்காதீர்கள் என்று என் காதில் விழும்படியாக சத்தமாக விளையாடும் மாணவர்களிடம் கூறினார்கள். ஆனால் அன்றைய தினத்தில் எனது பள்ளி மாணவர்கள் சிறந்து விளையாடி, 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்கள். பெருமையினால் தோல்வியும் துக்கமும் ஏற்பட்டது.

இ) அக்கிரமத்தினால் விழுகிறார்கள்

"...உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். " ஓசியா 14:1

             இன்று பலவிதங்களிலே அக்கிரம செயல்களைத் துணிகரமாகச் செய்கிற மக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. சிலருடைய பேச்சி அக்கிரமம் நிறைந்ததாக இருக்கும். யார் என்னைக் கேட்பது, தடுப்பது என்று வாழ்கிற மக்கள் அதிகம். பெருமை போன்ற தன்மையுடன் இவர்களின் செயல்கள் இருக்கும் இவர்களுடைய உள்ளத்தில் கர்த்தர் என்ன செய்வார் என்ற எண்ணமே இருக்கும். இவர்கள் மற்றவர்களை அற்பமாக எண்ணி அவர்கள் இடத்தை, உடைமைகளைத் தந்திரமாய் எடுத்துக் கொள்வார்கள். தங்களின் வாகனங்களை தாங்கள் விரும்பின இடத்தில் நிறுத்தி தங்களின் காரியத்தைச் செய்து முடித்து பின்தான் வாகனத்தை எடுப்பார்கள். அவர்களின் எண்ணங்களும், செயல்களும் தேசத்தின் சட்ட ஒழுங்குகளை மதியாததாய் இருக்கும். இவர்களில் இருக்கும் பெருமையினால் அதிகாரிகளையும், மற்றவர்களையும் பல விதமான தீய, கெட்ட வார்த்தைகளினால் தூஷிப்பார்கள். இவர்களுடைய கண்கள் கொழுப்பாய் எடுப்பாய் பார்க்கும்.

             நம்முடைய வாழ்வில் அக்கிரம் சிந்தை இருந்தால், கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்க மாட்டார். ஆதி. 6:5 'மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகிற்று' என்றபடி இன்று பெருகியிருக்கிறது. கர்த்தர் அக்கிரமத்தை வெறுக்கிறார். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து போம். எப்படி இவனைக் கெடுக்கலாம் என்று, தங்கள் படுக்கையில் யோசித்து, அக்கிரமம் செய்கிறவர்கள் அதிகரித்து விட்டனர். இந்த அக்கிரமக்காரர் தங்கள் சுய நீதியின்படி நடப்பார்கள். இவ்விதமாக அக்கிரமச் செய்கை யினால், மதுபானம் பண்ணி மற்றவர்களுக்கு இடறலை உண்டாக்குகிறவர்கள் விழுந்து போவார்கள். தாங்கள் அக்கிரமம் செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியாதபடி, இப்பிரபஞ்சத்தின் அதிபதி அவர்களின் மனக் கண்களைக் குருடாக்கிவிடுகிறான். இவர்களுடைய அக்கிரமம் என்று நிறைவாகிறதோ அன்று கர்த்தர் அவர்களின் அக்கிரமத்திற்குத் தக்க தண்டனையைக் கட்டளையிடுவார். சகலமும் ஒன்றுமில்லாததாக அவர்களின் வாழ்வு, குடும்பம் தொழில் மாறிவிடும். இவ்விதமாக அக்கிரமத்தினால் விழுந்த இவர்களுக்கு உதவி செய்பவர்களும் விழுந்து போவார்கள்.

இ) பின்மாற்ற வாழ்வில் விழுந்து போகிறார்கள்

'...ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்." அப்போஸ்தலர் 20:9

              இன்று அநேகர் மிகுந்த உற்சாகத்துடன் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்து மேன்மையடைய ஆவலாய் செயல்புரிகிறார்கள். கிறிஸ்துவ வாழ்வில், ஆவிக்குரிய வாழ்வில் ஒவ்வொரு நாளும் மிகுந்த உற்சாகமாக உயர வேண்டும், இந்த வளர்ச்சியைத் தடுக்க, கெடுக்க உலகத்தின் காரியங்கள் நம் வாழ்வில் சோதனையாக வந்து விடுகிறது. இரவில் பவுல் நடத்திய கூட்டத்தில் அந்த 3ம் மெத்தையில் அவன் சொல்லுவதைக் கேட்க ஒரு தவறான இடத்தைத் தெரிந்து கொண்ட வாலிபன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். ஜன்னலில் உட்காருவ தென்பது ஒரு புறம் உலகத்தைப் பார்ப்பதும், மறுபுறத்தில் கர்த்தரின் ஜீவ வார்த்தையைக் கேட்பதும், தியானிப்பதாகும். இவ்விதமாக வாழும் அநேக கிறிஸ்துவ மக்கள் உண்டு. என்று கர்த்தரின் வார்த்தையைக் கேட்பதை விட்டு உலகத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோமோ, அன்றே சாத்தான் தன் தந்திரமான செயலை நமக்குள் நடத்துவான். இந்த வாலிபனுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. இன்று ஆலயங்களில் ஆராதனையில் பங்கு பெருகிறவர்கள், உற்சாகமாய் பாடுவார்கள், ஆடுவார்கள். ஆனால் செய்தி நேரத்திலோ நன்றாய் தூங்குவார்கள். பிரசங்கியார் சொல்லுகிற வார்த்தைகள், நன்றாக தாலாட்டுப் போல் இருந்து விடும். இந்த கனநித்திரையின் ஆவி தந்திரமாய், ஜீவ வார்த்தைகள் நமக்குள் செல்லாதபடி தடை செய்கிறது. இவர்கள் வாழ்வில் ஜெப நேரம், வேதத்தைத் தியானிக்கும் காரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். இவர்கள் மனதில் டி.வி, போன் - னில் உலக செய்தி என்று ஜெபிப்பதை விட்டு விட்டு, இதற்கு நேரத்தை செலவிடுகிறார்கள். வீணான விதத்தில் தங்கள் நேரத்தை செலவிட ஆரம்பித்து விடுவார்கள். முன்பு அவர்களில் இருந்த உற்சாக ஆவி மறைந்து இந்தப் போராட்டமான நிலை ஏற்பட்டு விடும். அத்துடன் குறை பேசுகிற காரியங்கள், குற்றப்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் பெருகிவிடும். துதியும் ஸ்தோத்திரமும் நிறைந்திருந்த வாயில் தேவசாயலாய் சிருஷ்டிக்கப்பட்ட மனிதரை தவறாக பேசவைத்து பின் மாற்றம் அடையச் செய்துவிடுகிறது. இதனால் ஆவிக்குரிய வாழ்வில் விழுந்து போகிறார்கள்.

             தன் வீட்டில் இராவிருந்து பண்ணினபோது மரியாள் விலையேறப் பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். அந்த வீடு முழுவதும் அந்த தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. இதனைக் கண்ட யூதாஸ்காரியோத்து, இந்தத் தைலத்தை முந்நூறு பணத்திற்கு விற்று தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்று குறைபேசினான். இவனுடைய தவறான செய்கையினால், பேச்சினால் சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அவனுடைய இருதயம் கிறிஸ்துவுக்கு விரோதமாக மாறியது. இயேசு கிறிஸ்துவைக் காட்டி கொடுத்தான். அத்துடன் தவறான தீர்மானம் செய்து நாண்டு கொண்டு செத்தான். அவனது முடிவுக்குக் காரணம் பின் மாற்றமாகும். இந்த ஆவிக்குரிய மாற்றம் நம்மை கீழே விழச் செய்து விடும்.

2. சறுக்குகிறது என்று சொல்லும் போது தாங்குகிறார்

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும் போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது." சங்கீதம் 94:18

             இன்று அநேக நேரங்களில் சறுக்கிகீழே விழுந்து காயப்பட்டுவிட்டார் என்று சொல்லுகிற சம்பவங்களை நாம் நிறைவாகக் கேள்விப்படுகிறோம். என் கால்களில் போதுமான பெலன் இருக்கிறது. நான் ஒன்றும் சறுக்க மாட்டேன் என்று சொல்ல இயலாது. 'யானைக்கும் அடி சறுக்கும்' என்று சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு இருக்கிறோம்.

            ஒரு முறை snow விழுந்த ஒரு பகுதிக்கு ஊழியம் செய்ய சென்றேன்.  அந்த வீட்டாருடன் காரில் ஒரு இடத்திற்குச் செல்ல, வீட்டுக்கு வெளியே வந்தேன். சற்று வெயில் அடித்தது. இனி அந்தப் பனி ஒன்றுமில்லாததாகிவிடும்  என்று எண்ணினேன். வீட்டுக்கு வெளியே வந்தேன்.  பனி ஒன்றும் இல்லை என்று காலை வைத்தேன்.  வெயிலில் அந்தப் பனி அந்த இடத்தில் ஐசாக மாறி இருந்தது. ஆகவே கீழே விழத்தக்கதாய் என் கால் சறுக்கியது. இயேசுவே என்று சத்தம் போட்டேன்.  அருகில் இருந்த சுவரைப் பிடித்து நிற்க கர்த்தர் கிருபை செய்தார்.

            பேதுருவானவன்,  இயேசு கிறிஸ்துவின் அனுமதியைப் பெற்று கடல் நீர் மீது நடக்க ஆரம்பித்தான்.  அவனது விசுவாசம் பெரிதாக இருந்தது.  கொந்தளிப்பு நிறைந்த கடல் நீர் மீது ஆச்சர்யமான விதத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின் வல்லமையால் அற்புதமாக நடந்தான்.  படகில் இருந்த அவனின் சகோதரனும்,  உடன் இருந்த சீஷர்களும் ஆச்சர்யப் படும் படியாக அந்தக் காரியம் நடைப் பெற்றது.  இப்படி இயேசுவை நோக்கி நடந்தவன், எழும்பின பலத்தக்காற்றைக் கண்டான்.  அவனது பிரச்சனையை அவன் பார்த்தபடியால் அவனது பெரிய விசுவாசம் அற்பமாக மாறியது.  கர்த்தரின் வார்த்தையில் இருந்த வல்லமையை சந்தேகித்தப்படியால் அற்புதமாய் நடந்தவன்,  சறுக்கிவிழுவதைப் போல் கடலில் அமிழ ஆரம்பித்தான். அந்த நேரத்தில் ஆண்டவரே என்னை ரட்சியும் என்று கூப்பிட்டபடியால், கர்த்தரின் உதவியைப் பெற்றான்.  இயேசு கிறிஸ்து தமது வல்லமையான கரத்தை நீட்டி அவனைப் பிடித்தார்.  அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 

            அன்பின் அழைப்பைப்பெற்று இம்மட்டும் விசுவாசத்தின் ஊழியத்தை செய்து வருகிற சகோதரனே, கலங்காதே.  கர்த்தர் உன்னை அழைத்த நாளில் சொன்ன வாக்குத்தத்தமான வார்த்தைகளை விட்டு விடாதே.  உன் ஊழியத்தில், குடும்பத்தில், சரீரத்தில் உண்டான நோயை,  பிரச்சனையைப் பாராது,  உன் அனைத்து காரியங்களையும் இயேசுவிடம் தெரிவி.  அவரை நோக்கி கூப்பிடுகிற ஒவ்வொருவருக்கும்,  ஏற்ற ஒத்தாசையை அருளி,  விழுந்துவிடாதபடி,  தம் அளவற்ற கிருபையால் தாங்குவார்.  நாம் நிர்மூலமாகத்திருப்பது அவருடைய கிருபையே.

            இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்று இருக்கிறோம்.  இன்னும் அது நிறைவாகிக்கொண்டே அனுதினமும் இருக்கிறது.  இந்தக் கிருபையினால் நம்மைத் தாங்குகிற அன்பின் தேவன்,  அதைத் தொடரச் செய்கிறார்.  'நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்'  என்று சங்கீதம் 23 ல் தாவீது சொன்ன படி,  கிருபையினால் காக்கப்பட,  தாங்கப்பட நம்மை முற்றும் அவர் பாதத்தில் அர்பணிப்போமாக.

3.  விழித்துக் கொண்டவர்களைத் தாங்குகிறார்

"நான் படுத்து நித்திரைசெய்தேன்;  விழித்துக்கொண்டேன்;   கர்த்தர் என்னைத்தாங்குகிறார்."  சங்கீதம் 3:5

            நாம் ஆவிக்குள்ளான வாழ்வில் விழித்திருக்க வேண்டும்.  இன்று இவ்வாறு விழித்திருக்காதபடியால் பலவிதமான தவறான காரியங்களைச் செய்கிறோம்.  கர்த்தரின் நாமம் தூஷிக்கப்படுகிறது.  மீடியாக்களும்,  கிறிஸ்தவர்கள் செய்யும் சிறிய தவறான காரியத்தையும் பெரிதுபடுத்தி,  வேதனைப்படுத்துகிறார்கள்.  அதினால் இயேசு கிறிஸ்து என்றதும் முதலாவது உங்கள் மக்களுக்குச் சொல்லுங்கள் என்று அற்பமாக கூறுகிறார்கள்.  இந்த நிலை ஏன் உண்டாகிறது?  நாம் விழித்திராத படியால்தானே.

விழித்திராவிட்டால் என்ன நடக்கும்?

அ) விழித்திராவிட்டால் சத்துரு களைகளை விதைப்பான்

"மனுஷர் நித்திரப்பண்ணுகையில் அவனுடைய சத்துருவந்து,  கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்." மத்தேயு  13:25

            இன்று கர்த்தரின் சத்திய வார்த்தைகளைப் பலவிதங்களில் தவறான விளக்கத்தைத் தெரிவித்து,  வசனத்தைக் கேட்கிறவர்கள் உள்ளத்தில் குழப்பத்தை அடைகிறார்கள்.

            இன்று இவ்வாறு பலவிதமான களைகள் விதைக்கப்படுவதால்,  இயேசு கிறிஸ்துவின் அன்பின் பண்புக்கு மாறாக பலவிதமான தவறான போதனைகள் பெருகியிருக்கிறது.  போட்டி,  பொறாமை,  பதவி ஆசை இவைகளால் பல சபைகளில் சண்டைகளும்,  போராட்டங்களும் தோன்றியுள்ளது.  சமாதானத்தைக் கெடுக்கும் அநேகக் காரியங்கள் தோன்றியுள்ளது.  நாம் விழித்திராவிட்டால் நம் இருதயத்தில் களைகள் விதைக்கப்படும் . 

ஆ) விழித்திராவிட்டால் சத்துரு நம்மை விழுங்கிவிடுவான்

"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்,  உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடி சுற்றித்திரிகிறான்."  1 பேதுரு  5:8

            நாம் இன்று ஆவிக்குள்ளான வாழ்வில் விழித்திராவிட்டால்,பிசாசானவன் எளிதாக நம்மை சிறைப்படுத்திவிடுவான்.  நம்முடைய சுதந்தரத்தை இழந்து அவனின் அடிமைத்தனத்தினால் தீதானவைகளைச் செய்து அழிவையும் ஆக்கினையும் அடைவோம்.

            ஒருமுறை ஒரு வாலிபன் ஒருவன் தான் தங்கி படிக்கிற இடத்தில் எனக்கு ஒரு அரைவேண்டும் என்று தன் விண்ணப குறிப்பைக் கொடுத்தான்.  நான் தூங்கும் நேரத்தில் எனது சோப்பு,  டூத்பேஸ்ட்எடுத்து விடுகிறார்கள்.  ஒருமுறை நான் தூங்கினபோது என் முகத்தில் கருப்பு மையினால் பூசிவிட்டுச் சென்று விட்டார்கள் என்றான். சரீரத்தின் தூக்கம் இந்த கேடு பாடுகளை மனிதர்கள் செய்ய வழி செய்கிறது.  ஆவியின் தூக்கம் பிசாசானவன் நம்மை சிறைப் படுத்தி வேதனையுண்டாக்க செய்துவிடும்.  ஆகவே நாம் விழித்திருக்க வேண்டும்.

ஏன் விழித்திருக்க வேண்டும்?

அ) வருகை எப்பொழுது வரும் என்று அறியாதபடியால் தவறு செய்யாதிருக்க

" உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்" மத்தேயு  24:42

            கடைசி காலத்தில் இன்று வருவார், இங்கு வருவார் என்று ஜனங்களைத் திசைத் திருப்பிகொண்டிருக்கிற மக்கள்,  ஊழியக்காரர்கள்,  சபைகள் இன்று நிறைந்திருக்கிறார்கள்.  U.S.A. ல் வானொலியில் நற்செய்திக் கூறிக் கொண்டிருந்த ஊழியர்,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்தத் தேதியில் வர இருக்கிறார் என்று  U.S.A.  எங்கும் ஒளிப்பரப்பி விட்டார்கள்.  இதனால் சிலர் தங்களின் வேலையை விட்டார்கள்.  தொழிலை மூடினார்கள்.  தவறான தீர்மானம் செய்தனர்.  அந்த நாளில் ஒன்றும் நடைபெறவில்லை.

            இன்னொரு சபை ஊழியர் இந்த நாளில் இயேசு கிறிஸ்து இந்த கடற்கரையில் வர இருக்கிறார் என்று சபையார் எல்லாரையும் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார் .  அந்த நேரத்தில் ஒன்றும் நடைபெறாத போது,   கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வந்துவிட்டார்.  நாம் கைவிடப்பட்டு விட்டோம் என்று கூறி அன்றே அனைத்து சபையாரும் தற்கொலை செய்து கொண்டார்கள்.  நாம் விழித்திருந்தால் வஞ்சிக்கப்படமாட்டோம்.

ஆ )சோதனைக்குட் படாதிருக்க விழித்திருக்கவேண்டும்

"நீங்கள் சோதனைக்குட் படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்,  ஆவி உற்சாகமுள்ளதுதான்,  மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். "மாற்கு  14:38

            பலவிதமான சோதனைகளைப் பிசாசானவன் நம் வாழ்வில் நாம் இடறி விழும்படி கொண்டுவருகிறான்.  இவ்வாறு வரும் சோதனைகளை மேற்கொள்ள விழித்திருக்கவேண்டும்.  கிறித்தவ வாழ்வில் தேவனுடைய வார்த்தைகளை மீற இந்த சோதனைகள் வரும்.  இவைகள் நம் இச்சையினால் உண்டாகிறது.  இவ்வாறு வரும் சோதனையில் நாம் விழிதிராவிட்டால் நம் வாழ்க்கை, தடம் புரண்ட வாகனத்தைப் போலாகிவிடும்.

            நம் வாழ்வில் வாங்குவதில்,  சாப்பிடுவதில்,  நம் காரியங்களைச் செய்வதில்,  பேசுவதிலெல்லாம் சோதனை வரும்.  ஆனால் விழித்திருந்து ஜெபிக்கும்போது,  கர்த்தருடைய ஆவியானவர் சோதனையை மேற்கொள்ள நமக்கு உதவிச் செய்வார்.  நாம் ஜெபவீரராய் இருப்போமானால் நமக்கு வரும் எல்லா சோதனைகளையும் எளிதாய்  மேற்கொண்டுவிடுவோம்.

இ) பிரகாசிக்கப்பட விழித்திருக்க வேண்டும்

"ஆதலால்,  தூங்குகிற நீ விழித்து,  மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லி யிருக்கிறார்."  எபேசியர்  5:14

            இன்று கிறிஸ்து நம்மை பிரகாசிக்கச்செய்கிறவர்.  அவரை நோக்கிப் பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள் .  தூங்குகிற நிலையில் இருந்து நாம் எழுந்திருக்க வேண்டும்.  மரித்தோரைவிட்டு என்று சொல்லியிருக்கிறது.  அது பாவ வாழ்க்கையை விட்டு,  பாவத்தைச் செய்கிற மக்களின் ஐக்கியத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும்.  பாவத்தின் சம்பளம் மரணமாகும்.  பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்று தெளிவாக நமக்கு வேதம் வலியுறுத்துகிறது.  இன்று இதை நாம் கர்த்தருக்காகச் செய்யும் போது,  நமது வாழ்வில் கிறிஸ்துவின் ஒளிவீசவும்,  நம் வாழ்வில் இழந்து போன நன்மை மேன்மைகளைப் பெற்று நல்வாழ்வு வாழமுடியும்.

4)  சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுடையவர்களைத் தாங்குவார்

"சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன்பாக்கியவான்; தீங்கு நாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்."

"கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்;  அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர் ."

"படுக்கையின் மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிபோடுவீர்." சங்கீதம்  41:1,2,3

            இன்று  சிறுமைப்பட்டவர்கள் பூமியில் நிறைந்திருக்கிறார்கள்.  இவர்கள் மற்றவர்களால் நிந்திக்கப்படுவார்கள்.  தங்களின் சகல நலமான நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் இழந்தவர்கள்.  சிம்சோன், கர்த்தரின் ஆவியினால் மிகுந்த பெலம் நிறைந்தவனாக இருந்தான்.  அவன் மிகுந்த பலசாலியாக இருந்தபடியால், பெலிஸ்தர்களால் அவனை மேற்கொள்ள முடியவில்லை.  இந்த சிம்சோன் சோரேக் ஆற்றங்கரையில் இருந்த தெலீலாள் என்ற ஸ்திரீயோடே ஸ்நேகமாயிருந்தான்.  பழகின இவள் சிம்சோனின் பலம் எங்கு எதிலிருக்கிறது என்று அறிய அவனுடன் பேசினாள். அவனும் தனக்கு பலம் எவ்விதமாய் எதில் இருக்கிறது என்றும், எப்பொழுது அது நீங்கும் என்ற தேவனின் இரகசியத்தையும் அவளுக்குத் தெரிவித்தான். என் தாயின் கர்ப்பத்தில் பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனானவன். என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம் என்று கூறினான்.  சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம்.  வழிகாட்டியை நம்பவேண்டாம்,  உன் மடியிலே படுத்துக் கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு என்ற மீகா 7:5 ன் வாசகத்தை அறியாது தன் பலத்தின் ரகசியத்தைத் தெரிவித்த படியால், அதை இழந்தான் சிறுமைப் படுத்தப் பட்டான்.

            இன்னும் கர்த்தரின் சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையும் உண்டு.   இன்று தேவன் நம்மை பல காரியங்களில் பலவிதமான சிட்சைகளால் சீர்படுத்துகிறார்.   இவ்விதமாய் நாம் சிட்சிக்கப்படும்போது,   சிறுமைப்பட்டு சோர்ந்தும் போகிறோம்.  இதனை புலம்பல்  3:1  தெளிவாய் நாம் பார்க்க முடிகிறது.  இன்னும் நம் வாழ்வில் அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப் படுகிறோம் என்று சங்கீதம்  106:3  ல் பார்க்கிறோம்.  இத்துடன் நமக்கு மேய்ப்பன் இல்லாததினால் சிறுமைப்படுத்தப்படுகிறோம் என்று சகரியா  10:2ல் பார்க்கிறோம்.  இவ்வாறு சிறுமைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறவர்களாக அவர்களைக் குறித்து கரிசனையுடன் நன்மையான காரியங்களை நாம் உதவியாகச் செய்யும்போது, கர்த்தர் நம்மை தாங்கி நடத்துவார்.

5. கர்த்தர் நம்மோடு இருக்கும் போது நம்மை தாங்குவார்

"நீ பயப்படாதே,  நான் உன்னுடனே இருக்கிறேன்;  திகையாதே,  நான் உன் தேவன்;  நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்;  என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்."ஏசாயா 41:10

            இந்த உலக வாழ்வில் நம் பெற்றோர்கள், உறவினர்கள், மனைவி பேரப்பிள்ளைகள் சில காலங்கள் நம்முடன் வாழ்வார்கள்.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னுடனே சதாகாலங்களும், சகல சூழ்நிலைகளிலும் சகல இடத்திலும் நம்முடன் இருக்கிறவராக இருக்கிறார்.   இந்த அன்பின் தேவன் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று மத்தேயு 28:20 ல் சொல்லியிருக்கிறார்.

            ஆகவே இன்று கானாவூர் கலியாணத்திற்கு அழைத்ததுபோல் நம்முடன் இருக்க அழைப்போம்.  'நாம் பரிசுத்தர் ஆகையால் பரிசுத்தராயிருங்கள்' என்று எழுதியிருக்கிறபடி இன்றே இப்பொழுதே நம் பாவங்கள் சுத்திகரிக்கப் பட அவருடைய இரத்தத்தால் கழுவப்பட,  நம்மை அற்பணிப்போமாக.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C . எபனேசர்பால்