"...உன் நம்பிக்கை வீண்போகாது."

                                                                                                                    நீதிமொழிகள் 23:18

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

             கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். 

             நான் திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளத்தில் உடற்பயிற்சி இயக்குனராய் பணி புரிந்தேன். ஆனால் இயேசு கிறிஸ்துவை என் ஆண்டவராக ஏற்றுக் கொண்ட போது, எனக்குள்ளே ஒரு மாற்றம் வந்தது. கிறிஸ்துவின் ஆவிக்குரிய வரங்களும் செயல்பட்டதால், பல ஆசிரியர்கள் தங்களின் பிரச்சனையைக் கூறி ஜெபிக்க கேட்பார்கள். ஒரு ஆசிரியர், எனக்கு திருச்சிக்கு அருகே உள்ள டயசிஸ் பள்ளிக்கு வேலை மாற்றம் வந்து விட்டது, என்று கலங்கி ஜெபிக்க கூறியபோது, போங்கள் ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை மீண்டும் இதே பள்ளிக்கு, இதே ஆண்டில், இந்த மாதத்தில் இந்த தேதியில் திரும்ப கொண்டு வந்து சேர்ப்பார் என்றேன். அந்த ஆசிரியர் புதிய பள்ளிக்குச் சென்றார். ஆனால் என் பள்ளியில் இருந்த இன்னொரு சக கணித ஆசிரியர், அருகில் இருந்த தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக சென்றபடியால், ஒரு கணித ஆசிரியரின் இடம் ஏற்பட்டது. ஆகவே கர்த்தர் சொன்னபடியே அந்த ஆசிரியர் இதே பள்ளிக்கூடத்திற்கு பணிமாற்றம் பெற்றார்.

             இதை பார்த்தும், கேட்டும் இருந்த ஒரு முஸ்லிம் ஆசிரியர், என்னிடம் வந்து என் மனைவிக்கு ஜெபிக்க வேண்டும், என் வீட்டிற்கு வருகிறீர்களா? என்று கேட்டார்கள். எனக்குள்ளாய் இருக்கும் ஆவியானவரும் என்னை வழி நடத்தினார். நான் அவரைப் பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்டேன். என் மனைவிக்கு பிள்ளை பிறந்து உடன் இறந்து விடுகிறது. எனக்கு பிள்ளை இல்லை என்றார். மிகுந்த துக்கத்துடன் கூறினவருக்கு ஒரு ஆலோசனை கூறினேன். நீங்கள் இயேசு கிறிஸ்துவை நம்பி வருகிற ஏழு வாரங்களும் காலையில் எழுந்தவுடன் இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். எனக்கு நல்ல பிள்ளையைத் தாரும். என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னியும் என்று ஒரு வேண்டுதல் செய்யுங்கள். உங்களுக்கு பிள்ளைகள் இருப்பார்கள் என்று கூறி என் வீட்டிற்குச் சென்று விட்டேன். அவருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அருள் புரிந்தார். அதே ஆண்டிலேயே கர்த்தர் நல்ல குழந்தையைக் கொடுத்தார். தொடந்து பிள்ளை பெறவும், சந்ததி பெருகவும் செய்தார். என்று நாம் நம்பிக்கையை கர்த்தர் மேல் வைக்கிறோமோ அன்றே அவர் நம்மை ஆசீர்வதிக்க ஆரம்பித்துவிடுவார்.

             கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

                                                                                                                                                                                               சகோ. C.  எபனேசர் பால்