நெடுங்காலம் பெலவீனத்துடன் வாழ்பவர்களின் விடுதலை சுகத்திற்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே இந்த ஜெப நேரத்திற்காக உமக்கு நன்றி  கூறுகிறேன். என் வாழ்வை உமக்கென்று, அர்ப்பணித்து சாட்சியாக வாழ்ந்து வந்தேன் என்பதை நீர் அறிவீர். என்னால் இயன்ற ஊழியத்தையும் உம்  நாமம் மகிமைக்காக  செய்து வந்தேன். நீர் தந்த கிருபை வரங்களுடன் ஊழியம் செய்தேன். கர்த்தாவே, நீர் அநேகரை என் ஊழியத்தின் பாதையில் சந்தித்தீர். இரட்சித்தீர். கர்த்தாவே, இன்று பெலவீனப்பட்டு, ஒன்றுமே நான் செய்ய முடியாதபடி வீட்டிலேயே அடைப்பட்டு இருக்கின்றேன். இந்த வேதனையானது எவ்வளவு காலம் இன்னும் நீடிக்கும். என் மரணம் வருமுன் நான் சுகமடைந்து, இந்த கட்டுகள் நீங்கி உமக்கு மீண்டும் சாட்சியாக ஊழியம் செய்ய விரும்புகிறேன். கர்த்தாவே, என் இந்த வேதனையான நிலையிலும் நிந்தையான வார்த்தைகளை அநேகர் பேசித் திரிகிறார்கள். நான் எந்தக் காரியங்களிலும் பங்கு பெற முடியாது வீட்டிலேயே அடைப்பட்டு இருக்கின்றேன். 'சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர்' அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்' என்ற சங்கீதம் 9:8ன் படி உம்மையே தஞ்சமாக அடைந்து காத்திருக்கிறேன். வீட்டில் எல்லாரும் இருந்தாலும் நான் அனாதையைப் போல் தனித்து தவித்துக் கொண்டிருக்கிறேன். எப்பொழுது என் சிறையிருப்பு மாறும். உம்மையே நம்பி இருக்கிறேன். சில சமயங்களில் சோர்வடைகிறேன். என்னை, என் நிலைமையைப் புரிந்து கொள்ள யாரும் இல்லை. கர்த்தாவே எனக்கு இரங்கும். என் பாடுகள் நீங்கவும், இந்த வேதனையான நிலை ஏற்பட என்னில் காணப்பட்ட பாவம் மன்னிக்கப்படவும், சாபங்கள் நீங்கவும் செய்யும். இன்று எனக்கு இரங்கும். நான் ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தைகளையே தியானித்து வருவதை நீர் அறிவீர். என் பாடுகள் நீங்கி முன் போல என்னை ஸ்தாபிக்கும்படி எனக்கு இரங்கும் கர்த்தாவே. 'அந்த நாளிலே விழுந்து போன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புக்களை அடைத்து,  அதில் பழுதாய்ப் போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வ நாட்களில் இருந்தது போல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்' என்ற ஆமோஸ் 9:12 ன் வார்த்தை என்னில் நிறைவேறட்டும். கர்த்தாவே எனக்கு இரங்கி என்னை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.