செய்தி

"...என்னை நினைத்தருளும்."

நெகேமியா 13:14

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

மனிதனுடைய வாழ்க்கையிலே பலவிதமான கோணங்களில் ஒருவரையொருவர் நினைக்கக்கூடிய சூழ்நிலைகளைப் பார்க்கிறோம். திருமணமாவதற்கு முன்பாக கணவன் மனைவியுமாக மாற இருப்பவர்கள் அடிக்கடி ஒருவரையொருவர் நினைத்து, எந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருப்பார், எந்த நேரத்தில் எதைச் செய்து கொண்டிருப்பாள் என்று அடிக்கடி உள்ளத்தில் எண்ணுகிற எண்ணங்களை, தொலைபேசி அல்லது உலகத்தினுடைய பலவிதமான விஞ்ஞான அறிவினால் உண்டாக்கப்பட்ட தொடர்பு கொள்ளக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்துவதையும் பார்க்கிறோம். இதன் அடிப்படையில் இருப்பது அவர்களுக்குள்ளாய் தோன்றின அன்பு. அதைப் போலவே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். நம்மை நினைக்கிற தேவனாய் இருக்கிறார். அவர் நம்மை நினைப்பதற்கு அடிப்படையாய் இருப்பது அன்பு தான். நம்மைத் தாயின் கருவிலிருந்து உருவாக்கின அவர், அதுமுதல் உம்முடைய கண்கள் கண்டது என்று சொன்னதுபோல, நம்மைக் காண்கிற தேவன், நம்முடைய வாழ்க்கையிலே எல்லாம் சரியாய் இருக்க வேண்டும், சீராய் நடைபெற வேண்டும் என்று நம்மைக் காண்கிற, நினைக்கிற தேவனாய் இருக்கிறார். அப்படி அவர் நம்மை நினைப்பதினாலே ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். அவருடைய நினைவுகளுக்கும் நம்முடைய நினைவுகளுக்கும் மிகுதியான வித்தியாசம் உண்டு. ஏசாயா 55:8ல் "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்." என்று பார்க்கிறோம். அவருடைய நினைவுகளெல்லாம், "பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளை பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறதோ." என்று சொல்லியிருக்கிறதைப் பார்க்கிறோம். ஆகவே நம்மைக் காட்டிலும் உயர்ந்த நினைவுகள் உடையவர். மிகுதியான அன்பினாலே நம்மை நினைவுகூருகிற தேவன். நம்முடைய தேவன் நம்மைக் குறித்து அறிந்திருக்கிறார். தாவீது சங்கீதம் 103:14ல் 'நாம் மண்ணென்று நினைவு கூருகிறார்' என்று கூறுகிறார். மண்ணுக்கு ஒப்பான நம்மையும் அவர் நினைவுகூர்ந்து நம்முடைய வாழ்க்கையை அவர் ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். அதினிமித்தமாய் அநேக நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளுகிறோம். அவர் நினைக்கும் போது என்னென்ன ஆசீர்வாதங்கள் நமக்கு உண்டு என்பதை நாம் ஆராய்ந்து அவர் நினைப்பதற்கு நாம் எப்படி வாழ வேண்டும் என்று இச்செய்தியின் மூலம் ஆராய்வோம்.

I. கர்த்தர் நம்மை நினைக்கும் போது வரும் ஆசீர்வாதங்கள்

1. கர்த்தர் நம்மை நினைக்கும் போது குறைவுகளை நீக்கி நிறைவாக்குகிறார்.

"சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்..." 1சாமுவேல் 1:11

நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான போராட்டங்கள் இருக்கலாம். குறைவுகள் இருக்கலாம். ஆனால் இந்தப் போராட்டத்தின் மத்தியிலே நம்முடைய குறைவுகளை நீக்கி, நம்மை மேன்மையாக்குகிறவர் நம்முடைய தேவன். வேதத்தில் அன்னாளைப் பார்க்கிறோம். அன்னாளுக்கு குழந்தையில்லாததால் மிகுதியாய் நிந்திக்கப்பட்டாள். பலவிதமான வேதனைக்குரிய நிலைகள் வந்தது. அன்னாள் தேவனுடைய சமுகத்தில் வரும் போதெல்லாம் கலங்கி கண்ணீர் சிந்துவாள். சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள். அவள் தேவனுடைய ஆலயத்துக்கு வருகிறவள், காணிக்கை கொடுக்கிறவள். ஆனால் ஆலயத்துக்கு வருகிற இந்த அன்னாளுக்கோ குழந்தையில்லாத குறைவு. ஒரு காரியத்தை இந்த மகள் செய்தாள். கர்த்தருடைய ஆலயத்தில் தன் இருதயத்தை ஊற்றினாள். தன்னுடைய வேதனையினாலே, நிந்தனைகளினாலே தன்னுடைய போராட்டத்தினாலே கலங்கின அந்த மகள், தேவ சமுகத்திலே, பொருத்தனையோடு தன் காரியங்களைக் கூறினாள். அவள் மனங்கசந்து அழுது, தேவனுடைய சமுகத்திலே விண்ணப்பம் செய்தாள். என் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து என்னை நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன், அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள். யோசித்துப் பாருங்கள், குழந்தையில்லாத நிலையில், குழந்தை பிறந்தால், கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கிற ஒரு பொருத்தனையின் வேண்டுதலைச் செய்தாள்.  நம்முடைய தேவன் ஆசீர்வதிக்கிற தேவன். நம்மை நினைவுகூருகிற தேவன். நம்முடைய வாழ்க்கையில் அவர் நம்மை நினைவுகூரும் போதெல்லாம், அற்புதமான காரியங்களைச் செய்வார். அன்னாள் பொருத்தனையோடு வேண்டின காரியத்தைக் கர்த்தர் கேட்டு, மகளுடைய துக்கத்தையெல்லாம், அவளுடைய உள்ளத்திலிருந்து அகற்றினார். '...கர்த்தர் அவளை நினைந்தருளினார். சில நாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.' என்று 1 சாமு.1:19,20ல் பார்க்கிறோம். சாமுவேலுடைய வாழ்க்கையானது ஒரு பொருத்தனையின் ஜெபத்தின் மூலமாய் தோன்றியது. அநேகருடைய வாழ்க்கையிலே குழந்தை இல்லை என்றால், உலகரீதியாக மருத்துவரை அணுகி பலவிதமான சோதனை செய்வதைப் பார்க்கிறோம். ஆனால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தர் அதிசயமானவைகளைச் செய்வதற்கு உண்மையுள்ளவர். ஜெபத்தைக் கேட்கிறவர், ஜெபத்தைக் கேட்டு இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைத்து, அருள் செய்கிற தேவனாயிருக்கிறார். ஆகவே குழந்தை இல்லாதபடி கண்ணீரோடு, நிந்தையோடு வாழ்ந்த அன்னாள், நல்ல ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கத் தக்கதாக, அந்த மகன் தேவனுக்கென்று ஆலயத்திலே பணிபுரிவதற்கென்று, கர்த்தர் அவனை அருளினார் என்று பார்க்க முடிகிறது. குறை தீர்க்கும் தேவன் நினைப்பதினாலே நம் குறை நிவர்த்தியாகிறது.

2. கர்த்தர் நம்மை நினைக்கும்போது நோய்களைக் குணமாக்குகிறார்.

"ஆ, கர்த்தாவே, நான் உனக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்." ஏசாயா 38:3

அநேக நேரங்களில் நமக்குள் தோன்றுகிற பெலவீனங்கள் மிகுதியாய் உண்டு. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான பெலவீனத்திற்குப் பின்னாக சில தீங்கின் ஆவிகள் இருப்பதைப் பார்க்க முடியும். இவ்விதமான ஆவிகளின் மத்தியில், பொல்லாதவர்களின் கூட்டத்தில், அநீதி நிறைந்த உலக மக்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம், இவைகளுக்குத் தப்பிக் கொள்ள வேண்டுமானால், கர்த்தரால் நினைக்கப்பட்டவர்களாய் மாற வேண்டும். எசேக்கியா ராஜாவுக்கு கர்த்தர் ஒரு செய்தியைத் தருகிறார். நீ அதிக நாட்கள் வாழப் போவதில்லை, உனக்குத் தோன்றியிருக்கிற வியாதியிலே நீ மரித்துப் போக இருக்கிறாய் என்று சொன்னவுடனே, எசேக்கியா ராஜா, மனமுடைந்து தேவனை நோக்கி, ஆ, கர்த்தாவே, உமக்கு முன்பாக மனஉத்தமமாய் நடந்தேனே, என்னுடைய எல்லாவிதமான காரியங்களையும் நீர் அறிந்திருக்கிறீர், எனக்கு ஒருகாரியத்தைச் செய்யவே வேண்டும் என்று கேட்டு, வேண்டிக் கொண்டதைப் பார்க்கிறோம். அவன் வேண்டின அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்பதோடு மாத்திரமல்ல, ஜெபிக்கிற காரியத்திலே அற்புதங்களைச் செய்கிற தேவன். ஏசாயா 38:5ல் அவர் செய்த அற்புதத்தைக் காண முடிகிறது. உடனே ஏசாயா தீர்க்கதரிசி பதில் சொல்ல வருகிறார். 'உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன்' என்று சொன்ன கர்த்தர் உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.' என்றவர், மரணப்படுக்கையில் இருந்த மனிதனுக்கு ஒரு புது வாழ்வைத் தருகிறார். கர்த்தர் அவனை நினைந்தபடியினாலே ஒரு புதிதான பூரணமான வாழ்க்கையைப் பெற்றுக் கொள்கிறான். அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தரை நீ தேடுவதற்கும் அவரால் நினைக்கப்படுவதற்கும் உன்னை நீ ஒப்புக் கொடுப்பாயானால் உன் பெலவீனங்களை நீக்கி, உன் நோய்களைக் குணமாக்குவார்.

3. கர்த்தர் நம்மை நினைக்கும்போது, இழந்து போன பெலத்தை, இழந்து போன சந்தோஷத்தைத் தருகிறார்.

"அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி..." நியாயாதி. 16:28

இதில் சிம்சோன் என்ற மனிதன் தேவ சமுகத்தை நோக்கி வேண்டுதல் செய்வதைப் பார்க்கிறோம். என்னை ஒருவிசை நினைத்தருளும் என்று அவன் மிகுந்த விசுவாசத்தோடு, நம்பிக்கையின் நிச்சயத்தோடு வேண்டினதைப் பார்க்க முடிகிறது. சிம்சோன் ஒரு பெலசாலியாயிருந்தவன், அவனுக்குள் தேவ ஆவியானவர் இறங்கினபோதெல்லாம் அவன் பயங்கரமான விதத்திலே சத்துருக்களை மடங்கடித்து நிர்மூலமாக்கின ஒரு மனிதன். கர்த்தரால் அற்புதமாய் அதிசயமாய் உலகத்திலே வந்த ஒரு மனிதன். அவனுடைய வாழ்க்கையிலே ஒரு போராட்டமான நிலைமை வந்தது. சிம்சோனானவன் ஒரு வேசியைத் தேடிச் செல்கிறான். 'பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கு ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.' என்று நியாயாதி. 16:1ல் பார்க்கிறோம். நசரேய விரதத்தில் இருக்க வேண்டியவன், பரிசுத்தமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளாதபடி, மாம்சத்தின் இச்சைகளுக்கு அடிமையானவனாய் மாறினான். இந்த வார்த்தைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, உன்னுடைய வாழ்க்கையிலும், தேவனுடைய நாமத்திற்கு விரோதமாய், தேவனுடைய நாமத்திற்கு பலவிதமான துன்பங்களைக் கொண்டுவரும்படியாக உன் காரியங்கள் இருக்குமேயானால், கர்த்தர் கொடுத்த சகலவிதமான ஆசீர்வாதங்களையும் இழந்து போவாய். இந்த சிம்சோன் மீண்டுமாய் தெலீலாள் எனப்பட்ட ஸ்திரீயோடே பழகினான். அவளோ மகா தந்திரசாலியாய் இருந்து சிம்சோனுடைய பெலத்தை அறிந்து, அதை அகற்ற வேண்டும். அதனால் வரக்கூடிய ஆதாயத்தை அடையவேண்டுமென்று தவறான, தீதான உள்ளம் உடையவளாய் அவனோடு பழகினாள். அவன் எதைச் சொல்லக் கூடாதோ, அதைத் தெரிவித்தபொழுது, தன்னுடைய பெலத்தின் இரகசியத்தைச் சொன்ன போது, அவனுடைய ஏழு சடைகளையும் அகற்றி, அவனைப் பெலவீனமாய் மாற்றினாள். கர்த்தருடைய பிரசன்னம் அவனை விட்டுவிலகிற்று. அவனுடைய வாழ்க்கை பரிதாபமாய் மாறினது. அதினிமித்தமாய் கர்த்தர் அவனது வாழ்க்கையில் இருந்து விலகினதையும் அறியாதபடி, அவனது வாழ்க்கை பாடுகளுள்ளதாய் மாறியது. சத்துருக்களாகிய பெலிஸ்தர் வருகிறார்கள் என்று சொன்னபோது, அவன் முன்போல செய்தபோது, பெலனை இழந்து ஒன்றும் செய்ய முடியாதபடி வாழ்க்கை கசப்படைந்ததாக, வேதனையடைந்ததாக மாறியது. பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்தார்கள். அவன் கண்களைப் பிடுங்கினார்கள், வெண்கலச் சங்கிலியை கைகளில் மாட்டினார்கள். மாவரைக்கும் இயந்திரத்தை இயக்குகிறவனாக மாறினான். அவன் சத்துருக்களுக்குச் சேவை செய்கிறவனாய் மாறினான். கர்த்தரின் நாமத்திற்கு மகிமையாக இருக்கவேண்டிய அவனது வாழ்க்கை, சத்துருக்களுக்கு சேவை செய்கிறதாய் மாறிய நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். வேதனை நிறைந்த வாழ்க்கையில் சிறைப்பட்டிருந்த சிம்சோன் சத்துருக்களுக்கு வேடிக்கைக் காண்பிக்கிறவனாய் மாறினான். அவனை வேடிக்கைக்காக ஒரு மண்டபத்தில் நிறுத்தியபோது, கைலாகு கொடுக்கக் கூடிய பிள்ளையாண்டானின் உதவியுடன், மண்டபத்தைத் தாங்கி இருந்த இரு தூண்களையும் பிடிக்கத்தக்கதாக கர்த்தர் அவனுக்கு உதவி செய்தார். அத்துடன் அவன் இழந்து போன பெலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உண்மையான ஜெபத்தை ஏறெடுக்கிறதைப் பார்க்கிறோம். என்னை ஒருவிசை நினைந்தருளும் என்று கேட்டு, முன்போல பெலசாலியாய் மாறின அவன், இரு துண்களையும் இழுத்த பொழுது, அந்த மண்டபம் முழுவதும் இடிந்து விழுந்தது. வேடிக்கைப் பார்க்க வந்த அத்தனை மனிதர்களும் அந்த மண்டபத்தில் அழிந்து மாண்டு போனார்கள். அவனும் மாண்டு போனான். அவன் உயிரோடிருந்த காலத்தில் சத்துருக்களை மேற்கொண்டதைக் காட்டிலும், கடைசி நேரத்தில் கர்த்தர் அவனை நினைத்து பெலத்தைக் கொடுத்த போது, மிகுதியான மக்கள் அழிந்தார்கள். சத்துருக்கள் ஒளிந்து போனார்கள். ஆகவே கர்த்தர் நம்மை நினைக்கும் போது, இழந்து போன எல்லாக் காரியங்களையும் பெற்றுக் கொள்கிறோம். அருமையான சகோதரனே, சகோதரியே, உன்னுடைய வேலையை இன்று இழந்திருக்கலாம். உன் சுகத்தை, பெலத்தை இழந்து போயிருக்கலாம். உன் நல்ல சமாதானத்தை, சந்தோஷத்தை இழந்திருக்கலாம். உன் குடும்பத்தில் நல்ல ஐக்கியத்தை இழந்து போயிருக்கலாம். உன்னுடைய உறவுகளில் எல்லாம் வேதனைகள் நிறைந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் நினைக்கத் தக்கதாக உன் வாழ்க்கை மாறும் போது, கர்த்தர் இழந்து போன எல்லாவற்றையும் திரும்ப உனக்குத் தந்து, உன்னை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். ஆகவே இந்த அருமையான நாளிலே, கர்த்தருடைய சமுகத்திலே நம்மை ஒப்புக் கொடுப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கத் தக்கதாக அவரையே கெஞ்சுவோம். அதிசயத்தைக் காண்போம்.

4. கர்த்தர் நம்மை நினைக்கும்போது, அவர் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதிருப்பார்.

"உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்; உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைபோலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்." யாத்திராகமம் 32:13

மோசேயினிடத்தில் தேவன், இந்த ஜனங்களைப் பார்த்தேன், இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள் என்று கூறி, கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டபடியினாலே, அவர்களை அழித்துப் போடவும், அவர்களுக்குரிய எல்லாவற்றையும் நிர்மூலமாக்கவும் அவர் சித்தங் கொண்டதோடு, நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று மோசேயோடு சொன்னார். இவ்விதமான வார்த்தைகளைக் கேட்ட மோசே, தேவசமுகத்திலே யாத். 32:13ல் உள்ளதுபோல் எங்களை நினைத்தருளும் என்று மிகவும் கெஞ்சி பிரார்த்தித்தான் என்று பார்க்கிறோம். அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்தத் தீங்கைச் செய்யாதபடி பரிதாபங் கொண்டார். அருமையான சகோதரனே, சகோதரியே, தேவனுக்குக் கோபம் மூட்டும் படியாய், பலவிதமான தவறான தீங்கான பாவமான அருவருப்பான காரியங்களை நாம் செய்யும்போது, தேவன் தீங்கான காரியங்களை நமக்கு கட்டளையிடுகிறவராயிருக்கிறார். ஆனால் அங்கு பிரதிநிதியைப் போல தேவனுக்கும் ஜனங்களுக்கும் நடுவாக, மோசேயானவன் தேவ சமுகத்திலே கெஞ்சின போது, கர்த்தர் தீங்கை நினைத்து மனஸ்தாபப்பட்டதோடு, அதைச் செய்யாது மனம் மாறினதைப் பார்க்கிறோம். அருமையான தேவஜனமே, நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிற இயேசுகிறிஸ்து, நாம் பாவம் செய்யாதபடி வாழவேண்டும் என்று வழியை வகுத்தவர், நம்முடைய வாழ்க்கையிலே நாம் செய்த பாவங்கள் வேதனையாய் மாறாதபடி, தண்டனையையும், தீங்கையும் கொண்டுவராதபடி, நமக்காக தேவசமுகத்திலே மன்றாடுகிற தேவனாயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாராபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திர மல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். ஆகவே பிதாவினித்தில் நமக்காக பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். இந்த உன்னதமான செயலை அன்று மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காக செய்ததைப் பார்க்கிறோம். அன்பு நிறைந்த சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையிலே பாவங்கள் மீண்டும் மீண்டுமாய் செய்து, தேவ கோபாக்கினைக்கு ஆளாகி யிருப்பாயானால், தேவ சமுகத்திலே உன்னைத் தாழ்த்தும் போது, கெஞ்சும் போது, உனக்காய்ப் பரிந்து பேசுகிற, பரிதாபங்கொள்கிற இயேசு கிறிஸ்து, பிதாவினிடத்தில் உனக்காக மன்றாடி, மகிழ்ச்சியானவைகளைப் பெற்றுக் தருகிற ஆற்றல் உடையவராயிருக்கிறார். அவர் அருளின ஆவியானவர் நமக்கு ஜெபவேளையிலே உதவி செய்து, நம்முடைய பாவங்களின் நிமித்தமாக வரக்கூடிய ஆக்கினைகளை அகற்றுவதற்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார். ஆகவே இந்த வார்த்தைகளைத் தியானிக்கிற வாசிக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய சமுகத்திலே நமக்காக பரிதபிக்கிற தேவன், நமக்காக வேண்டுகிறவர் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து அவர் சமுகத்தில் நாம் இணைந்து, நம்மைத் தாழ்த்தி ஜெபிக்கிற மக்களாய் மாற வேண்டும். ஒருமுறை ஒரு தேவ ஊழியருடைய உள்ளத்தில் திடீரென்று ஒருவரின் முகத்தைக் காண்பித்து, அவருக்காக ஜெபிக்க வேண்டும் என்று சொன்ன போது, அந்த ஊழியருக்கு ஆச்சரியமாயிருந்தது. அறிமுகமில்லாத அவருக்காக ஜெபித்த போது, கர்த்தர் அதிசயமாய் அவருக்குள் நடைபெற வேண்டிய வேதனையான நோயிலிருந்து அவரைக் குணமாக்கினார்.  தேவ ஊழியர் சில நாட்கள் கழித்து, அவரது குடும்பத்தாரை அணுகி, ஒருநாளிலே இப்படியாய் கஷ்டப்பட்டாரே, கர்த்தர் அவரை எவ்வளவாய் நேசிக்கிறார் என்று கூறியபோது, அவர் ஆச்சரியமடைந்தார். அவருடைய உள்ளத்திலே தாம் அடைந்த வேதனையை நினைத்து, கண்ணீரும் சிந்தினார். மட்டுமல்லாது அவருடைய உள்ளத்தில் பெருமகிழ்ச்சி உண்டானது. அநேக நேரங்களில் அநேக தேவ ஊழியர்களுக்கு இவ்விதமான தரிசனங்களைக் கொடுத்து அவர்கள் ஜெபிப்பதினாலே, கர்த்தர் அவர்களுடைய வாழ்க்கையிலே நடைபெற வேண்டிய வேதனையான காரியங்களைச் செய்யாது, அவர்களைக் கண்ணின் மணிபோல காக்கிற தேவனாய் இருக்கிறார். ஆகவே கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருவரோடொருவர் இணைவது அவசியமான காரியமாக இருக்கிறபடியால், அவர்களோடு இணைந்து வாழ்கிற வாழ்க்கை வேண்டும். சபையின் மக்கள் சபையின் போதகரோடு இணைந்திருக்கத் தக்கதாக தங்களை ஒப்புக் கொடுக்கும் போது, தேவ ஆவியானவர் அவர்களைக் கொண்டு இவ்விதமான காரியங்களைச் செய்கிறவராயிருக்கிறார்.

5. கர்த்தர் நம்மை நினைக்கும் போது, நாம் நித்திய ராஜ்யத்தை அடைவதற்கு தகுதி அடைகிறோம்.

"இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்." லூக்கா 23:42

இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி தன் ஜீவனை விடவேண்டிய அந்த நேரத்தில் ஒரு கள்ளன் அவரைக் குற்றப்படுத்தி பேசினத்தைப் பார்க்கிறோம். நீ தேவனுடைய குமாரனேயானால், நீர் இறங்கி வாரும், எங்களையும் இரட்சியும் என்று மிகவும் கிண்டலாய், பரிகாசமாய் கேட்பதைப் பார்க்கிறோம். ஆனால் அடுத்த கள்ளனோ, நாம் நீதியாய் தண்டிக்கப்பட்டிருக்கிறோம். இவரோ நீதி நிறைந்தவர், அநீதிக்குப் பாத்திரர் அல்ல என்று சொல்லி அவர் பக்கமாய்த் திரும்பி, "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்" என்று வேண்டிக்கொண்டான். கர்த்தர் அதிசயமான விதத்திலே 'நீ இன்றைக்கு என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்' என்று ஒரு வாக்கை அருளினார். அருமையான தேவப்பிள்ளைகளே, கர்த்தர் நம்மை நினைப்பதற்கு நாம் நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, இம்மையிலும் மறுமையிலும் மேன்மையான ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக் கொள்ளுகிற பாக்கியசாலிகளாய் மாறி விடுவோம்.

கர்த்தர் நம்மை நினைப்பதற்கு நாம் என்னை செய்யவேண்டும்?

  1. கர்த்தருக்குப் பயப்படும் பயம் வேண்டும்.

"அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர் களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறார்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது." மல்கியா 3:16

கர்த்தருக்குப் பயப்படுகிற ஒவ்வொரு மனிதர்களுடைய சம்பாஷனை களையும், ஒவ்வொரு காரியங்களையும் அவர் உற்றுக் கேட்கிற தேவனாயிருப்ப தோடு, அவர்களுக்கென்று ஒரு ஞாபக புஸ்தகத்தையும் வைத்திருக்கிறார். கர்த்தரின் பயமானது நமக்குள் இருக்க வேண்டுமானால் தீமையான காரியங்களை நாம் விட்டு விலக வேண்டும். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்று நீதி. 8:13ல் பார்க்கிறோம். கர்த்தருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழும்போது, நிச்சயமாய் அவர் நம்மை எல்லா விதங்களிலும் நினைந்து ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

2. கர்த்தர் நம்மை நினைக்க நாம் ஜெபிக்கிற மக்களாய் மாற வேண்டும்.

"தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்." யாத். 2:24,25

தேவனுடைய சமுகத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் பெருமூச்சோடு தேவனை நோக்கினார்கள். பெருமூச்சு என்பது தேவசமுகத்தில் வேண்டுதல் செய்கிற ஒருஜெப வாழ்க்கை. அநேக நேரங்களில் நாம் இவ்விதமான பெருமூச்சோடு தேவனுடைய சமுகத்தில் செல்வது கிடையாது. ஆவியானவர் மிகுந்த வாக்குக்கடங்காத பெருமூச்சோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்று ரோமர் 8:26ல் பார்க்கிறோம். கிறிஸ்துவுக்குள் ஆவியில் நிறைந்து ஜெபிக்கும் போது, நாமும் பெருமூச்சோடு ஜெபத்தில் ஈடுபடுகிறோம். எந்த சகோதரன்/ சகோதரிக்கு பெருமூச்சோடு ஜெபிக்கிற ஜெபவாழ்க்கை உண்டோ, அவர்களிலே அற்புதமான காரியங்கள் நடைபெறுவதைப் பார்க்க முடியும். ஆகவே நாம் போராடி தேவன் நம்மை நினைக்கத் தக்கதாக ஜெபிப்பதற்கு நம்மை முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலே நாம் அறியாதபடி செய்த பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட்டவர்களாய், தேவசமுகத்திலே கெஞ்சுகிற மக்களாய் இருக்கும்போது, எப்படி மோசேயின் கெஞ்சுதலைக் கேட்டு தீமையான காரியத்தை செய்யாதிருந்தாரோ அதைப்போல நம்மை நினைக்கிற அன்பு நிறைந்த தேவன், நமக்கும் செய்வார். ஆகவே அவர் நம்மை நினைக்க பெருமூச்சோடு ஜெபிக்கிற மக்களாய் இருக்க வேண்டும்.

3. கர்த்தர் நம்மை நினைக்க பக்தியோடு மன்றாடி ஏற்ற தர்மங்களைச் செய்ய வேண்டும்.

"அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது." அப்போஸ்தலர் 10:4

கொர்நேலியு என்று சொல்லப்பட்ட மனிதன், கர்த்தருக்காக வைராக்கியமுள்ள மனிதனாய் தன் எல்லா இனஜன பந்துக்களோடு, தேவனைத் தேடுகிற மனிதனாய் இருந்தான். புறஜாதியார்களைக் கர்த்தர் ஆவியினால் நிரப்பும்படியாக, பேதுருவை அனுப்பினார். அப்பொழுது அவருடைய வழி நடத்துதலின்போது 'தூதன் அவனைச் சந்தித்து உன்னுடைய ஜெபங்கள், உன் தர்மகாரியங்கள், கர்த்தருக்கு நினைப் பூட்டுதலாய் இருந்தபடியினாலே' என்று சொல்வதைப் பார்க்கிறோம். ஆகவே புறஜாதியார் மத்தியிலே பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதற்கு இந்த நினைப்பூட்டுதல் மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. இன்று நம் தேவன் நம்மை நினைக்கத்தக்கதாக வாழ்க்கை மாற நாம் தர்மங்களைச் செய்கிற மக்களாய், கர்த்தருக்கென்று காணிக்கை கொடுக்கிற மக்களாய் வாழ வேண்டும். கொரிந்து பட்டணத்தார் தங்களுடைய தரித்திரத்திலே, தங்களுடைய குறைவிலே, கர்த்தருக்கு மிகுந்த உதாரத்துவமாய் காணிக்கைகளைக் கொடுத்தபடியினால், தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள், நினைக்கப்பட்டார்கள். ஆகவே நாமும் அவ்விதமாய் வாழ்வோம், ஆசீர்வதிக்கப்படுவோம்.

4. கர்த்தர் நம்மை நினைக்க ஆதி அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

"...நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." எரேமியா 2:2

ஆதியிலே நாம் அவரோடு கொண்டிருந்த அன்பை நினைவுகூர்ந்து ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். கர்த்தர் நினைக்கிற வண்ணமாக, அவர் விரும்புகிற வண்ணமாக நம் வாழ்க்கை அமைய வேண்டும். ஆகவே நம்மை முற்றிலுமாய் ஒப்புக்கொடுப்போம். ஆதி அன்பை விட்டு விடாதபடி இருப்போம். வெளி. 2:4,5 ல் ஆதி அன்பை விட்டுவிட்டாய் என்று சொல்லப்படுகிற வார்த்தைகளைப் பார்க்கிறோம். ஆகவே நாம் கவனமாய் இருந்து ஆதி அன்பைக் காத்து வாழும்போது, அவர் நம்மை நினைந்து ஆசீர்வதிக்கிற தேவனாயிருக்கிறபடியினால் கர்த்தருக்கு எப்பொழுதும் துதிகளைச் செலுத்துவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபினேசர் பால்.