சிந்தி செயல்படு

"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? ..."

2கொரிந்தியர் 6:16

கிறித்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு முறை இலங்கை 'ராசகலை' என்ற டீ எஸ்டேட்டில் நற்செய்தி கூட்டம் நடைபெற்றது. எஸ்டேட் ஆபிசில் வேலை செய்த சகோ. செல்வதுரை அவர்கள் அக்கூட்டங்களை நடத்த உதவினார்கள். கூட்டம் முடிந்தவுடன் முன் வந்த மக்களுக்கு ஜெபித்தோம். இரவு வெகு நேரமாயிற்று. அந்தச் சகோதரர் தன் வீட்டுக்கு ஜெபிக்க வேண்டும் என்றார். சரி என்று அவர் வீடு சென்றேன். அந்தச்  சகோதரர் என்னுடைய 9 வயது மகனுக்கு சுகமில்லை. ஜெபிக்க வேண்டும் என்றார்கள். என்ன நோய் என்றேன். சரீரம் முழுவதும் புண்கள். பல மருத்துவரிடம் சென்றுவிட்டேன். சுகமாகவில்லை. என்னிடத்தில் இருந்த அவ்வளவு பணத்தையும் செலவழித்துவிட்டேன். இனி ஆண்டவரின் சித்தம் நடைபெறட்டும் என்று அவரிடம் ஒப்புவித்து விட்டேன் என்றார்கள். அந்த 9 வயது மகனை ஒரு பாயில் போர்வையினால் போத்தி படுக்க வைத்திருந்தார்கள். நானும் மிகுந்த ஊக்கத்துடன் சுகமடைய ஜெபித்தேன். அச்சமயத்தில் ஒரு தீய ஆவி அந்த வீட்டின் முன் வாசலில் நின்று கொண்டு, இந்த வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தமுண்டு. இந்த வீட்டை விட்டு நான் போகமாட்டேன் என்று கூறியது. இந்த வீட்டின் பூ எனக்கு வருகிறது என்றது. ஜெபத்தை நிறுத்திவிட்டு உங்கள் வீட்டில் பூச்செடி இருக்கிறதா? என்று கேட்டேன். ஆம் இருக்கிறது. பூச்செடி வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. வீட்டு காம்பவுண்டு சுவருக்குப் பதில் நல்ல பூச்செடியைத் தான் வைத்திருக்கிறேன் என்றார்கள். இந்தச் செடியில் வரும் பூவை என்ன செய்கிறீர்கள் என்றேன். காலையிலே இப்பக்கமாய் வருகிறவர்கள் அப்பூக்களைப் பறித்து இங்கு அருகில் உள்ள ஆலயத்தில் கொண்டுபோய் பூசைக்குப் போட்டுவிடுவார்கள் என்றார்கள். அப்பொழுது அவரிடம் உங்க உழைப்புக்கு பலனாக காசு வாங்கி விற்றுவிட்டால் நலம். இல்லை என்றால் அந்த இடத்தில் உள்ள தீங்கின் ஆவிக்கும் உங்களுக்கும் தொடர்பாகி விடும் என்றேன். என்ன செய்வது என்றார்கள். பூவை யாரும் பறித்துச் செல்லாது காத்துக் கொள்ளுங்கள், முடியாவிட்டால் செடிகளை வெட்டி அகற்றி விடுங்கள் என்றேன். காலையிலே அச்செடிகளை வெட்டி அகற்றி விட்டார். அந்த 9 வயது மகனின் புண்கள் மூன்று நாளைக்குள் முற்றும் சுகமாகி விட்டது. அருமையான சகோதரனே, சகோதரியே, உனக்குரிய தோட்டத்தில் உள்ள அல்லது உன்னிடத்தில் உள்ள எந்த பழத்தை, பூவை, இலையை, காய்கறிகளை மற்ற பூசை போன்ற காரியங்களுக்குக் கொடுக்காதீர்கள். அவசியம் ஏற்பட்டால் விற்றுவிடுங்கள். அதினால் சத்துரு உங்களையோ, வீட்டாரையோ தொடமுடியாது கர்த்தர் காப்பார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்