"...என்னைக் குணமாக்கும் கர்த்தாவே..."

                                                                                                                                        சங்கீதம் 6:2

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தாவே இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நாம் ஆரோக்கியமான நல்ல வாழ்வு வாழ விரும்புகிறோம். இந்த மேலான ஆசீர்வாதமான வாழ்வைப் பெற்றுக் கொள்ள பலவிதமான diet, exercise எல்லாம் கற்று அறிந்து கைக்கொள்கிறோம். இவைகளை மிகுந்த கவனமாக அனுதினமும் பின்பற்றுகிறோம். 'சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது' என்ற 1தீமோ. 4:8ஐ உணராது நம் முயற்சிகளுக்கு மிக முக்கியத்தைத் தருகிறோம்.

நம் தேவனின் அன்பு செயல்களில் ஒன்று நம்மை குணமாக்குவதாகும். குணப்படுத்தும் ஆற்றலும் வல்லமையும் மிகுந்த ஆசீர்வாதமானது. இந்த குணமாக்கும் வல்லமை மனிதர்களை மாத்திரம் அல்ல, எல்லாவற்றையும் குணமாக்கும் ஆற்றலுடையது. தண்ணீர், தாபர விருட்சங்கள், காற்று, மண் போன்றவைகளும் குணமாகும். யாத்.15:22,23ல் விடுதலையான இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூன்று நாள் தண்ணீர் கிடையாமல் வனாந்திரத்தில் வழியாய் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கிடைத்தது. ஆனால் அது கசப்பாயிருந்தது. அதைக் குடிக்க கூடாதிருந்தது. வாழ்க்கையில் விடுதலையடைந்த எனக்கு இன்று பலவிதமான பிரச்சனைகள் வருகிறதே என்று கலங்கும் தேவப்பிள்ளையே, சோர்ந்து போகாதே. தண்ணீர் இல்லாத நிலை மாறி, தண்ணீர் கிடைத்ததே என்ற நிலையில் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியாத கசப்பாயிருந்தது. ஆனால் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது, கர்த்தர் ஒரு மரத்தைக் காண்பித்தார். அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், கசந்த நீர் மதுரமான தண்ணீராயிற்று. தண்ணீர் குணமானது. இன்று என் வாழ்வு மிகுந்த கசப்பாயிருக்கிறதே, நான் என்ன செய்வேன் என்று கலங்கிக் கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, சிலுவைமரத்தின் மேன்மையை இன்று உன் வாழ்வில் சிந்தித்து உணர்வாயானால் உன் கசந்த வாழ்வு மதுரமாக மாறிவிடும். உன் வனாந்திரமும், தாகமும் மாறி மகிழ்ச்சியும் மேன்மையுமடைவாய். உன் வனாந்திர வாழ்வை அறிந்தவர், உன் தாகத்தைத் தெரிந்தவர், தமது குணமாக்கும் வல்லமையால் மாற்றுவார், குணமாக்குவார்.

I. எவைகள் குணமாகும்?

1.காயத்தைக் குணமாக்குவார்

"கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே..." ஏசாயா 30:26

கர்த்தர் நம் காயங்களைக் குணமாக்குவார். நம்முடைய காயம் சரீரத்திலோ அல்லது இருதயத்திலோ இருக்கலாம். ஆனால் அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றே குணமாக்கி விடுவார். ஒருமுறை பூனா பகுதியில் ஊழியம் செய்து கொண்டிருந்தேன். சகோ. நோயல் என்றவர் என்னுடன் கூட்டங்களுக்கு வந்தார்கள். அவர்தான் கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள். அந்நாட்களில் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து அப்பகுதி ஊழியங்களைச் செய்து வந்தேன். ஒருநாள் இரவு கூட்டம் முடித்து, அவர் வசித்து வந்த 'பிம்பரி' என்ற பகுதிக்கு அவரின் M 80 என்ற வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். நள்ளிரவு நேரம் திடீரென்று வாகனத்தின் சக்கரத்தில் பஞ்சர் ஏற்பட்டு பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. சரி, இந்த வாகனத்தை என்னுடன்பணி செய்யும் நண்பர் வீடு இங்கே இருக்கிறது, அங்கே விட்டுவிட்டு, ஆட்டோ ரிக் ஷாவில் அந்த வீடு போகலாம் என்றார்கள். சரி என்று கூறி அவர் வீட்டுக்கு வாகனத்தைத் தள்ளிச் சென்றோம். கதவைத் திறந்த அவர் இன்முகத்துடன் வீட்டிற்குள் வரவழைத்தார். என்னை அவர் கிறிஸ்தவ சாமியார் என்று எண்ணி ஒரு புகைப்படத்தை எடுத்தார். ஏன் என்றால் இந்த நோயால் சகோதரர் தான் வேலைப்பார்த்த பேக்டரியில் தொழிலாளர் யூனியனில் செகரெட்டரியாக இருந்தார். அவரை வீட்டில் ஏற்றவர் யூனியனில் பொருளாளராக இருந்தார். இந்த சகோ. நோயல் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட படியால், தொழிலாளர் சங்கத்தின் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அத்துடன் அதிகமாக ஜெபத்திலும் வேத தியானத்திலும் நேரத்தை செலவிட்டார். ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தவர்களின் ஒருவர் தான் இந்த நண்பர். அவர் டீ குடியுங்கள் என்று டீ கொடுத்தார்கள். அந்த வேளையில் இயேசு கிறிஸ்து எல்லாரையும் குணமாக்குவாரா? என்று ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார். யார் யார் இயேசு கிறிஸ்துவை முழு இருதயத்துடன் நம்பி வேண்டுகிறார்களோ அவர்களில் அற்புதம் இன்று செய்வார் என்றேன். வைராக்கிய இந்து குடும்பத்தார். அவரின் இளைய மகளில் தோன்றிய கால் ஆணி, பெரிய காயமாக மாறிவிட்டது. மருத்துவரின் சிகிச்சை சுகமளிக்கவில்லை. மேலும் மருத்துவர் அந்த மகளின் கால், கணுக்கால் வரை வெட்டி எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்ததால் இதை என்னிடம் விசாரித்தார். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பினால், அவர் குணமாக்குவார் என்றேன். அவரை நம்புகிறோம் என்று கூறினார். அவருக்காக ஜெபித்தேன். சில தரிசனங்களைக் கண்டு ஜெபத்தை நிறுத்திவிட்டு, என்ன நீங்களும் இன்னும் ஒருவரும் இரவில் தீப்பந்தத்தை வைத்து குடிசைகளுக்கு தீ வைக்கிறீர்களே என்ன என்று கேட்டேன். அவர் கலங்கியவராக என் ஊரில் குடிசையில் வாழ்ந்த சிலரின் குடிசைகளைக் கொழுத்துவது எங்களின் வழக்கமாக இருந்தது என்றார். இது தவறல்லவா என்றேன். ஆம் என்றார். இயேசுவிடம் மன்னிப்பு கேட்க கூறினேன். அதை உள்ளம் உணர்ந்து கூறியபோது, ஜெபத்தைத் தொடர்ந்து முடித்தேன். மூன்றாம் நாளிலேயே அந்த மகளின் காயம் ஆறியது.

நிந்தையான, தூஷணமான வார்த்தையினாலே தவறாக குற்றப் படுத்திய வார்த்தையினாலே உள்ளத்தின் ஆழத்தில் ஏற்பட்ட காயத்தையும் இன்றே குணமாக்கி ஆற்றி உங்களை சுகத்தினாலும் சமாதானத்தினாலும், சந்தோசத்தினாலும் சம்பூரணமாக கிறிஸ்து ஆசீர்வதிப்பார்.

2. நோய்களைக் குணமாக்குவார்

"அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்." லூக்கா 7:21

நம்முடைய சரீரத்திலே ஏற்படுகிற சகல நோய்களையும் இயேசு கிறிஸ்து குணமாக்க வல்லவராக இருக்கிறார். மத். 8:17ல் 'அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்…" என்ற வாக்கின்படி நமக்குள் தோன்றுகிற எல்லா நோய்களையும் குணமாக்கி, சுகவாழ்வை மலரச் செய்கிறார். இன்று உங்கள் சரீரத்தில் ஏற்பட்ட நோய்கள் பாவத்தினால் ஏற்பட்டதாக இருந்தாலும், பிசாசினால் உண்டாயிருந்தாலும், சாபத்தினால் உண்டாயிருந்தாலும், தேவ மகிமைக்கென்று ஏற்பட்டிருந்தாலும், இயற்கையின் சூழ்நிலைகளினால் உண்டாயிருந்தாலும், சகல நோய்களையும் கல்வாரியில் சுமந்தவர் உங்கள் நோயைக் குணமாக்கி உங்களை ஆசீர்வதிப்பார்.

இன்று என் நோய் இவ்வளவு நாளாயிற்றே, நான் சுகமடையவில்லையே, என் நோய் குணமாகவில்லையே என்று கலங்குகிறீர்களா? உங்கள் நோய்களைக் குணமாக்கி, ஆசீர்வதிக்கிறவர், உங்களைப் பெலப்படுத்து கிறவர் உங்கள் கண்ணீரின் நிமித்தமாய் உங்கள் ஜெபத்தினால், துதியினால் உங்கள் அருகே கடந்து வந்திருக்கிறார். உங்கள் பாவங்கள் தடையாய் இராதபடி அறிக்கை செய்து அதை விட்டுவிடுங்கள், அவர் உங்கள் நோய்களை குணமாக்கி, பூரண சுகத்தால் இன்றே இப்பொழுதே இடைகட்டுவார்.

3. சீர்கேடுகளைக் குணமாக்குவார்

"சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்: உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்..." எரேமியா 3:22

சீரும் சிறப்புமாய் வாழ வேண்டிய நாம் சில கேடானவைகளைச் செய்து நமது மேன்மையை, நன்மைகளை, சீரானவைகளை இழந்து போய் இருக்கிறோம். தேவ பக்திக்கு ஏதுவாய் முயற்சி செய்ய வேண்டிய நாம் சீர்கேடான கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக் கதைகளுக்கு இடம் கொடுத்துவிடுகிறோம். பவுல் 1 தீமோ. 4:7ல் இவைகளுக்கு விலகியிரு என்று ஆலோசனைக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். கள்ளப் போதகர்களுடைய சீர்கேடான பேச்சுகளுக்கு இடம் கொடாதபடி விலக வேண்டும். இருதயத்தின் நிறைவினாலே வாய் பேசும். நாம் எதைப் பேசுகிறோமோ அதுவே நம்முடைய செய்கைகளாக மாறிவிடும்.

இன்று மனிதன் முறைகேடான மதிகேடான காரியத்தைச் செய்கிற செய்தியை அனுதினமும் செய்தித்தாளிலே காண முடிகிறது. இந்தக் கேடான காரியங்களைச் செய்வதில் மிகுந்த ஆர்வமும், பலவிதமான பொருட்களையும் செலவழிக்கிறார்கள். சில தேவ ஊழியர்கள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களைத் தரிசித்தோம் என்று சொல்லி நம் சிறையிருப்பைத் திருப்புவதற்குப் பதிலாக பாவங்களை, அக்கிரமங்களை எடுத்துக் காட்டாதபடி மோசம் போக்குகிறார்கள். சிலருடைய வாழ்க்கையிலே முறைகேடான இச்சைகளுக்கு அடிமையாகி அந்த வழி மகிழ்ச்சியானது, இன்பமானது என்று தங்கள் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகக் கேடானது ஒன்றும் நடைபெறாதபடி 'இனி பாவம் செய்யாதே' என்ற ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள மனதில்லாதிருக்கிறார்கள். தேவனை அறியும் அறிவை பற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக் கொடுத்தார் என்று ரோமர் 1:28ல் பார்க்கிறோம். இன்று இந்த சீர்கெட்டுப்போன வாழ்க்கையை அவர் குணமாக்குகிறவராய் இருக்கிறார்.

ஒருமுறை ஒரு சகோதரன் என் சிந்தை சீர்கெட்டுப் போய்விட்டது. எதையுமே சரியாக என்னால் சிந்திக்க முடியவில்லை. என் சிந்தையில் உண்டாகிற அந்த பாவ இச்சை என் சரீரத்தில் இச்சைகளைத் தூண்டி தவறானவைகளைத் தெரிந்தும், துணிகரமாய்ச் செய்ய வைக்கிறது. எனக்கு இதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்டார். திருமணமாகி மனைவி, பிள்ளைகளுடன் உள்ள அவருடைய வாழ்க்கையிலே கர்த்தர் மனதிறங்கி அற்புதத்தைச் செய்தார். கர்த்தரின் பாதத்தில் தாழ்த்தின அவர் கர்த்தரின் ஆவியானவர் அவரின் எண்ணங்களையும் சிந்தைகளையும் சீர்ப்படுத்தினபடியால் மகிழ்ச்சியும் மேன்மையும் அடைந்தார்.

4. ஆவியை குணமாக்குகிறார்

"அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து ஆரோக்கிய மடைந்தார்கள்." லூக்கா 6:18

நம் வாழ்வில் நமது தவறான தீதான செய்கைகளுக்குப் பின்னால் தீங்கின் ஆவியின் செயல்கள் நிறைவாக இருப்பதைக் காண உணர முடிகிறது. நம்முடைய சீரான ஆவி முறிந்து இந்தச் சீர்கேடான ஆவியின் செயல்கள், உணர்வுகள் உள்ளத்திலும், எண்ணத்திலும் சிந்தையிலும், செய்கையிலும் பெருகி விடுகிறது. இது நீதி. 12:25ல் இருதயத்திலுள்ள கவலை என்று குறிக்கப்பட்டிருக்கிறது. நீதி. 15:13ல் இருதயத்தின் துக்கம் என்றும், ஏசாயா 65:14ல் மனநோவினாலே அலறி ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள் என்றும், சங். 38:8ல் என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன் என்றும் பார்க்கிறோம். இப்படியாக தீய ஆவிகளினால் பயத்தையும், பெலவீனத்தையும், சோர்வையும், சஞ்சலத்தையும், கசப்பையும் பெருகச் செய்து விடுகிறது. சிலர் தீய ஆவியின் தாக்குதலினால் ஆவியின் சுகத்தை இழந்து, தவறான விதத்தில் நேரத்தை செலவிடுகிறார் கள். பலர் பலவிதமான பகற்கனவுகளைத் தனியாக அமர்ந்து கண்டு கொண்டே இருப்பார்கள். இவர்களின் பின்னணியில் இருந்து செயல்படுகிற அந்த ஆவியின் தன்மையின்படி அவர்களின் பகல்கனவு அமைந்திருக்கும்

ஒருமுறை கூட்டம் முடிவில் வாலிப சகோதரன் ஒருவர் ஜெபிக்க வந்தார். நீங்கள் தனியே அமர்ந்து எதையாவது சிந்திப்பீர்களா! என்று கேட்டேன். அவர் ஆமாம் என்றார். உடனே அவன் கண்ட பகற்கனவை தேவ ஆவியானவர் வெளிப்படுத்தினார். வெள்ளைநிற fullsize shirt போட்டு விலையேறப் பெற்ற மோட்டார் சைக்கிளில் கைகளில் மோதிரத்தை அணிந்து விரைவாக ஓட்டுவதைப் போல கனவு காண்கிறீர்களே என்று கூறியபோது, தன் மனநிலைகளை உணர  ஆரம்பித்தார். இவை அனைத்தும் பெருமைக்கும் அருவறுப்பானவைகளுக்கும் நம் மனதைக் கெடுக்கிற காரியமாயிருக்கிறது. தேவனைத் துதிக்க இடம் கொடாது இந்தப் போராட்டமான காரியங்கள் நம் வாழ்க்கையில் நல்ல நேரத்தை வீணடித்து விடுகிறது. ஆகவே நாம் விழித்திருக்க வேண்டும். தெளிந்த புத்தியுள்ளவர் களாய் இருக்க வேண்டும். லேகியான் பிசாசினால் பாதிக்கப்பட்டவன் வஸ்திரம் தரித்து புத்தி தெளிந்தவனாய் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்தான் என்று லூக்கா 8:35ல் பார்க்கிறோம். இளையகுமாரன் தன் பிரச்சனைகள் பெரிதாகி, குறைவினால் கஷ்டப்பட்ட நேரத்தில், தன் மனதின் விருப்பம் நிறைவேறாத வேளையில்,  தன் பசி ஆற்றிக் கொள்ள வழியில்லாத நேரத்தில் அவனது புத்தி தெளிந்தது. என் தகப்பனுடைய வீட்டிலே வேலை செய்கிற அத்தனை பேருக்கும் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறதே என்று உணர்வடைந்து தன் தகப்பனிடம் திரும்புவதற்கு ஏற்ற தீர்மானத்தைச் செய்தான். மனிதரினின்று தள்ளப்பட்டு புல்லை மேய்ந்த நேபுகாத்நேச்சார் வானத்தை அன்னாந்து பார்த்தபோது புத்தி தெளிவடைந்தான். உன்னதமானவருடைய மகத்துவத்தை உணர்ந்து அவரிடம் திரும்பினதோடு புகழ ஆரம்பித்தான். இழந்த மேன்மையைத் திரும்பப் பெற்று மகிழ்ந்து வாழ்ந்தான்.   

அருமையான தேவப்பிள்ளையே, உன்னைக் கெடுத்து வாதித்துக் கொண்டிருக்கிற பொல்லாத ஆவியின் கிரியைகளைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அழித்து உன்னை விடுவிக்கிறார். இந்த விடுதலையானது நம் ஆவியின் வாழ்வில் குணமடைகிற மேன்மையானதாய் இருக்கிறது. இயேசு கிறிஸ்து அப். 10:38ல் அசுத்த ஆவிகளினால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கி இப்பூமியில் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார்.

3. ஆத்துமாவில் குணமடைதல்

"...என் ஆத்துமாவைக் குணமாக்கும்..."சங்கீதம் 41:4

ஆத்துமநேசராகிய இயேசு கிறிஸ்து, நித்தியம் நித்தியமாய் வாழப் போகிற ஆத்துமாவை மீட்கிறார், ஆசீர்வதிக்கிறார். பாவம் செய்கிற மனிதனுடைய ஆத்துமா சாகும் என்று எசேக். 18:4ல் பார்க்கிறோம். தேவனுடைய வசனம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது. வேதத்தைப் பார்க்கும் போது, சங். 19:7ல் 'கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது...'. ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல என்று நீதி. 19:2ல் பார்க்கிறோம். உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் என உபா. 4:19 அறிவிக்கிறது. நாம் முழு ஆத்துமாவோடு கர்த்தரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவோம், ஆத்துமமீட்பு மிகவும் மிகவும் அருமையாய் இருக்கிறது. அது ஒருபோதும் முடியாது என சங்.49:9ல் பார்க்கிறோம். நம்முடைய தேவன் நம்மை நித்தமும் நடத்தி, மகா வறட்சியான காலத்திலும் நம்மைத் திருப்தியாக்குகிற தேவன். நம்முடைய தேவன் நம் ஆத்துமாவிலே பெலன் தந்து நம்மைத் தைரியப் படுத்துகிற தேவன். இந்த ஆத்துமா கிறிஸ்துவுக்குள் பெலனடையும்போது நாம் தைரியம் அடைந்து, எல்லா சூழ்நிலைகளிலும் இயேசு கிறிஸ்துவையே உயர்த்தி துதித்து, பிரஸ்தாபிக்க முடியும். இன்று கர்த்தரோ பெலன் இழந்திருக்கிற ஆத்துமாவை குணமாக்கி ஆசீர்வதிக்கிறார்.

II. நாம் குணமாக்கப்படும்போது அடையும் ஆசீர்வாதங்கள்

1. குணமாக்கி அழிவுக்கு விலக்கி தப்புவிக்கிறார்

"அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்." சங்கீதம் 107:20

நாம் நினையாத நேரத்தில் அழிவு தோன்றுகிறது. பிசாசின் தந்திரமான செயலில் ஒன்று நம்மை அழிப்பதாகும் (யோவான் 10:10). என்று நாம் குணமக்குப்படுகிறோமோ அன்று கிறிஸ்துவின்மேல் உள்ள நம்பிக்கையிலே வளருகின்ற வாழ்க்கை ஆரம்பமாகிறது. அவருடைய சட்டத் திட்டமாகிய இந்த வார்த்தை பாவத்திற்கு அடிமையாயிருந்த நம்மைத் திருப்பி, கிறிஸ்துவுக்கு அடிமையாய் மாற்றுகிறது. நம்மை அழிவின் குழிகளுக்கு விலக்கிக் காக்கிறார். அன்பின் தேவனுடைய செயலானது அவருடைய வசனத்தினாலே நம்மைக் குணமாக்கும் போது நடைபெறுகிறது.

2. குணமாக்கி ஆறுதல் அளிப்பார்

"அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்." ஏசாயா 57:18

நாம் குணமாக்கப்படும் போது, கர்த்தர் நம்மை நடத்தி நாம் துக்கப்படும்போது ஆறுதல் அளிக்கிறார். இன்று ஆறுதலற்றிருக்கிற மக்கள் ஏராளம். துக்கத்தினால் சோர்ந்து போய் சில தவறான தீர்மானங்களைச் செய்து விடுகிறார்கள். இன்று தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்கள் நிமித்தமாய், தோல்வியின் காரணமாய், தங்களின் பொருளாதார பற்றாக்குறைவிளால் சரீரத்தில் பெலவீனம் அடைந்து இனி என்ன செய்வது என்று கலக்கமும் துக்கமும் அடைந்திருக்கிற அனைத்து மக்களையும் குணமாக்குகிறார். கர்த்தர் நம்மைக் குணமாக்குவதினால் இளையகுமாரன் தன் தகப்பனோடு திரும்ப சேர்ந்ததுபோல, பிரிந்த குடும்பங்களில் உள்ளவர்கள் குணமாக்கப்படும்போது மீண்டும் இணைந்து சந்தோஷமாய் சமாதானமாய் வாழ்வார்கள்.

3. குணமடையும்போது பிள்ளைபெறும் பாக்கியம் அடைகிறார்கள்

"ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலெக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்." ஆதியாகமம் 20:18

அபிமெலெக் குடும்பத்தார் வாழ்க்கையில் குழந்தையில்லாத நிர்ப்பந்த நிலை இருந்தது. ஆபிரகாம் அவர்களுக்காக ஜெபித்தான். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு அவர்களைக் குணமாக்கி, அதனால் பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூடிய சிலாக்கியம் கொடுத்தார். குணமாகும் போது பிள்ளை பெறும் பாக்கியத்தை அடைகிறோம். இன்று அநேகருடைய குடும்பங்களிலே குழந்தை இல்லாதபடி கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்ட சராசரங்களை உருவாக்கின தேவன், ஆதாம் ஏவாளைப் பார்த்து நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார். இன்று நாம் குணமடையும் போது, நம்முடைய ஆவி, ஆத்தும, சரீரம் சுகமடைவதால் சந்ததியின் ஆசீர்வாதங்களைக் காணத்தக்கதான சிலாக்கியம் அடைகிறோம். ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுத்த கர்த்தர், அவனது முதிர்வயதிலும் அவனைக் கைவிடாது, அந்த வாக்குத்தத்ததை நிறை வேற்றினார். தேவன் தம்முடைய வார்த்தையின்படி நம்மை குணமாக்கி பிள்ளைப்பேற்றுத் தந்து சந்ததியைக் காண கிருபைச்செய்வார்.

4. குணமாக்கி, சமாதானத்தை, சத்தியத்தை வெளிப்படுத்துவார்       

"இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்." எரேமியா 33:6

குணமாக்கும் தேவன், நம்மைக் குணமாக்கி சத்தியத்தையும் சமாதானத்தையும் வெளிப்படுத்துவார். இந்த சமாதானமும் சத்தியமும் நமது குணமாக்கப்பட்ட வாழ்க்கையில் நிறைவாய் பெருகிவிடும். சமாதானமானது தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில், பிள்ளைகளின் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் அவசியமாய் இருக்கிறது. என்று நாம் குணமாக்கப்படுகிறோமோ, அன்று அதை சமாதான பிரபுவாகிய இயேசு கிறிஸ்து அருளிச் செய்து சமாதானத்தின் வழியிலே நடத்துகிறார். சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கச் செய்வார்.  சத்தியத்தை நாம் அறியும்போது, சத்தியம் நம்மை விடுதலையாக்கும். அந்த சத்தியத்தை அறிவதினாலே நித்திய ஜீவனை அடைவதற்கு நம்மைத் தகுதிப்படுத்துகிறார். சத்தியபரனாகிய இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன்.

III. யாரை குணமாக்குவார்?

1. கண்ணீரோடு ஜெபிக்கிவர்களைக் குணமாக்குகிறார்

"...உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்..." 2 இராஜாக்கள் 20:5

எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்டு மரணத்திற்குச் சமீபமானான். கர்த்தர், ஏசாயா தீர்க்கதரிசியை அவனிடத்தில் அனுப்பி உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்கு செய், நீர் பிழைக்க மாட்டீர் என்ற செய்தியைச் சொல்லச் சொன்னார். இந்த ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தையைக் கேட்ட எசேக்கியா ராஜா மிகுந்த கண்ணீரோடு, கர்த்தாவே, உனக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்ததை நினைத்தருளும் என்று விண்ணப்பம் செய்தான். கர்த்தர் விண்ணப்பித்ததைக் கேட்டு 'நான் உன்னை குணமாக்குவேன்' என்ற வாக்கு அருளி கொடூர வியாதியின் மரணப் பிடியிலிருந்து அவனைக் குணமாக்கி 15 ஆண்டுகள் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார்.

இந்த வார்த்தைகளை வாசிக்கும் அருமையான தேவப் பிள்ளையே, உன் ஆயுசு நாட்களை நீடித்துத்தருகிற தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார். நோய்களைச் சுமந்தவர், உன் கொடூரமான நோயைக் குணமாக்கி எல்லாராலும் கைவிடப்பட்ட உன் வாழ்வை நீடித்த நாட்களினால் திருப்தியாக்குகிறவராய் இருக்கிறார். இயேசு கிறிஸ்துவே உன்னை குணமாக்குகிற தேவன். 

2. இயேசு கிறிஸ்துவிடம் வந்தவர்கள் குணமானார்கள்

"அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்." மத்தேயு 9:2

இன்று நாம் கிறிஸ்துவிடம் வர நம்மை ஒப்புக் கொடுக்கும் போது, அவர் நம்மைக் குணமாக்குகிறார். கிறிஸ்துவிடம் வருவதென்றால் பழைய வாழ்க்கையின் சகல மீறுதலின் காரியங்களையும் விட்டு அவரிடம் திரும்புவதாகும். பாவ பழக்கங்களை விட்டு திருந்தி இயேசுவிடம் திரும்பும் போது, அவர் நம்மை முற்றும் குணமாக்கி ஆசீர்வதிக்கிறார்.

இன்று அருமையான சகோதரனே, சகோதரியே, உன் ஆவி, ஆத்துமா, சரீரத்தை குணமாக்கும் கர்த்தரிடம் வருவதற்கு இடம் கொடுப்பாயானால், உன் சீர்கேடுகளை நீக்கி உன்னைச் சுத்தவானாக மாற்றி அவர் வழியில் உன்னை நடத்துவார், ஆசீர்வதிப்பார்.

3. யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்படுகிறதோ அவர்களைக் குணமாக்குகிறார்.

"அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி" சங்கீதம் 103:3

இன்று அநேகருடைய வாழ்க்கையிலே பாவங்களும் மீறுதல்களும் அக்கிரமங்களும் கர்த்தரின் சுகமளிக்கும் வல்லமை வெளிப்படுவதற்கு தடையாக இருக்கிறது. அக்கிரமமானது கர்த்தருக்கும் நமக்கும் பிரிவினை உண்டாக்குகிற தடுப்பு சுவராயிருக்கிறது. நம்மை அதிகமாய் நேசிக்கிற அன்பின் தேவன், நம்முடைய பாவங்களை, மீறுதல்களை, அக்கிரமங்களை எல்லாம் சிலுவையிலே சுமந்து தீர்த்துவிட்டார். இரத்தம் சிந்துதல் இல்லாதபடி பாவ மன்னிப்பு இல்லை என்பதை நாம் அறிவோம். நம் பாவங்களை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வை, சுகவாழ்வை, சந்தோஷமான நல்வாழ்வைத் தருவதற்காக அடிக்கப்பட்டார், நொறுக்கப்பட்டார்.

இந்த வார்த்தைகளை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே, பாவமறியாதவர், பாவம் செய்யாதவர், பாவத்தை வெறுப்பவர், பாவியை நேசிக்கிறவர், நம் பாவங்களை மன்னிப்பதற்கு உண்மையுள்ள வராய் இருக்கிறார். நாம் உண்மையாய் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும்போது, அவர் அதிசயங்களைச் செய்வதற்கு தயவு பெறுத்தவராய் இருக்கிறார். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். ஆனால் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ தேவனுடைய இரக்கத்தைப் பெற்று சுகவாழ்வைச் சுதந்தரிக்க முடியும். உன்னையும் என்னையும் அழைக்கிற ஆண்டவர், என்னிடத்தில் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னவரிடம் இன்று வருவோமென்றால், அவர் தமது மாறாத வார்த்தையினால் நம்மைக் குணமாக்கி ஆசீர்வதிப்பார். நமக்காக கல்வாரி சிலுவையில் காயப்பட்ட இயேசு கிறிஸ்து, தமது தழும்புகளினால் நம்மைக் குணமாக்குகிறாராய் இருக்கிறார். இந்த அன்பின் செயலை நமக்காக சிலுவையில் செய்து முடித்தார். அவரால் நாம் அக்கிரமங்கள் நீங்கி குணமடைவோமாக.

4. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

"இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்." சங்கீதம் 147:3

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் காண்கிறவராய் இருக்கிறார். மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ நம் இருதயத்தைக் காண்கிறவராய் இருக்கிறார். இருதயத்தின் நினைவுகளையும் விருப்பங்களையும் அறிந்த தேவன், நம்முடைய நொறுங்கின இருதயத்தைக் காண்கிற தேவனாயிருக்கிறார். என்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்ன தேவன், நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தைப் புறக்கணியாதவர். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். உன் வாழ்க்கையில் உண்டான வேதனையான காரியங்களினால், நோயினால் ஐயோ, நான் என்ன செய்வேன், இந்தப் பூமியிலே நான் வாழ விரும்புகிறேன், இன்று எல்லாராலும் கைவிடப்பட்டேனே, என் நோயின் தன்மை என்னை ஆளுகை செய்கிறதே, என் ஜீவன் எடுபடுமோ என்று அங்கலாய்க்கிற இருதயம் நொறுங்குண்டு கலங்குகிற சகோதரனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை நேசிக்கிறவர், உன்னை ஆதரிக்கிறவர், உன்னைக் கைவிடாதவர், உன்னைக் கண்மணிபோல் காக்கிறவர், இன்றே இப்பொழுதே உன்னை குணமாக்க விரும்புகிறார். அவரிடம் வர, அவர் சமுகத்தில் அர்ப்பணிக்க உன்னை இடம் கொடுப்பாயா!

அர்ப்பணிப்போம், ஆசீர்வதிக்கப்படுவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்